”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“

 


 தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு.  இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அவரது எழுத்தும் அவர் அமைத்துக் கொடுத்த கதாபாத்திரங்களும் தான் இருக்க வேண்டும். அவர் சிருஷ்டித்த ஒவ்வொரு கதா மாந்தர்களும் வலுவானவர்கள் மட்டுமல்ல வலிமையானவர்களும் கூட.

       சரஸ்வதி பூஜையும் அதுவுமாய் எதையாவது படித்துத் தீரவேண்டுமென்று மனசு பரபரக்கின்றது. கீழே ஒரு காகிதம் கிடைத்தாலும் அதையாவது எடுத்து படித்துவிட மாட்டோமாவென்று மனசு அலைவுறுகிறது. இது தி.ஜானகிராமனுக்கு மட்டும்தானா நமக்குத்தான். எனது இளம் பிராயத்தில் அவர் புத்தங்களைத் தேடி அலைந்த நாட்களெல்லாம் இன்னும் பசுமை மாறாமல் இருக்கின்றன. அழிந்துவிடவில்லை. அழியவே அழியாதது அது. அவ்வளவுக்கு நான் அவர் எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டிருந்தேன். பித்த நிலையில் இருந்தேன் என்று சொல்வதுதான் அதிகப் பொருத்தமாயிருக்கும். 

      அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டிய அந்த நாள் முதலாய் அவரது எழுத்துக்கு நான் அடிமையாகவும்  ரஸிகனாகவும் ஆகிப்போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். “ட்ரூ.. ட்ரூ..” வென்ற புறாக்களின் மொழியையும், “ஸ்ஸ்.. ஸ்ஸ்..” என்ற காற்றின் மொழியையும் நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்களை தேடிப்போய் வாங்கி வந்து படிப்பேன். பிடித்தப் பகுதிகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். அன்றைக்கு எனக்கு உணவு தேவையிருக்காது ஏனெனில் அவரது எழுத்துக்களே உணவாகிவிடும். அவர் எழுதிய கதைகள் அவ்வளவும் மெல்லிய சிறகு கொண்டு என் மனதை வருடுவது போலிருக்கும். 

      தி.ஜானகிராமனை இரண்டுமுறை நேரில் சந்தித்திருக்கின்றேன். இந்த எழுபது வயதிலும் அவரது பெண் கதாபாத்திரங்களை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். கதாபாத்திரங்களோடு  காதல் வயப்படமுடியுமா? அதற்கு சாத்தியமிருக்கிறதா? சாத்தியமிருக்கிறது. சாட்சியுமிருக்கிறது சத்தியமான சாட்சி இந்த சி.எம்.முத்துதான். தமிழ் இலக்கிய உலகில் இரண்டு ஆளுமைகள் வெகுஜன வாசகர்களை அடைந்தவர்கள் ஒருவர் ஜெயகாந்தன். இன்னொருவர் தி.ஜானகிராமன்.  இந்த இருவரின் அனிச்சத்திற்கு நானும் கடமைப்பட்டவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

           எனது எழுத்தின்  திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன் என்று தலைப்பு வைப்பதற்கு கொடுத்து வைத்தவன் நானாகத்தான் இருக்க வேண்டும்.  க.நா.சுப்ரமண்யம் அவர்கள் எப்போதும் ஒரு பட்டியல் போடுவார். அந்தப் பட்டியலில் இடம் பெறுவோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த எழுத்தாளர் கூட்டம் உண்டு. ஆனால் தி.ஜா அவர்கள் விமர்சகர் பலத்தை ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. ஆயிரம் விமர்சகர்களின் பலத்தை பத்து வாசகர்களிடம் பெற்றுவிட்ட திராணிக்கும் முன்னால் எழுத்துக் கலைதான் வென்றதே தவிர விமர்சனக்கலை வென்றதே இல்லை. அதே கொள்கையும் கோட்பாடும்தான் எனக்கும். அதைத்தான் தி.ஜாவிடம் நான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் இந்தக் கட்டுரைக்கு எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன் என்று பெயர் வைத்ததும். 

      ’பித்தப்பூ’ நாவலை தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட சமயம் க.நா.சு அவர்கள் தஞ்சைக்கு அடிக்கடி வருவார். அப்பொழுதெல்லாம் தோளோடு தோளாக அவருடன் கூடவே நடந்திருக்கின்றேன். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் நம்மூர் எழுத்தாளர்களை சொற்பமாகவும் சிலாகித்துப் பேசுவார். இதனை இளமைக் காலத்திலேயே  எனது மனம் ஏற்க மறுத்தது.  ஒரு வகையில் க.நா.சு-விற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நேரடியாக வாசகனை வலுவோடு சென்றடையும் எழுத்தை எப்படி அடைவது என்று அவர் பேசிய பேச்சினைப் பட்டியலின் எதிர்த்திசையில் நின்று வாசகனை வலுவோடு சென்றடையும் எழுத்து உத்திக்கு நான்  செய்த தவமிருக்கிறதே அதற்கு தி.ஜானகிராமன் என்று பெயரிடலாம். 

      விமர்சகன் என்பவன் யார்? அவன்  ஆழ்ந்த வாசகன் அவ்வளவே. வாசகன் என்பவன் யார்? ஒரு பிரதிக்குள் மூழ்கும்போது அவன் மனதளவில் மிகப்பெரிய விமர்சகன். அப்படி நான் மூழ்கிய பிரதிகள்தான் தி.ஜானகிராமனின் செம்பருத்தி, மரப்பசு, அம்மா வந்தாள், மோகமுள், சிவப்பு ரிக்‌ஷா, கொட்டுமேளம் இதெல்லாம். 

      உண்மையாக எனது மனதுக்குள் அடிக்கடி ஊடாடி ஊடாடி என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கும் ஒரு சொற்றொடர் உண்மையைத் தவிர உயர்ந்த இலக்கியம் இல்லை என்பதுதான். இந்த உண்மையை என்னுள் விதைத்தவர் தி.ஜானகிராமன். என் முதல் நாவலான ‘நெஞ்சின் நடுவே’யின் தட்டச்சுப் பிரதியை தி.ஜா அவர்களிடம் தஞ்சை ப்ரகாஷோடு சென்று முன்னுரைக்காகக் கொடுத்து விட்டு வந்தேன்.  அதன் பிறகு தஞ்சாவூர் அசோகா லாட்ஜில் வைத்து அந்நாவலின் பிரதான பாத்திரமான ‘வளையாபதி’யைப் பற்றி அவரது சம்பாஷணைகள் இருந்தன. ‘கள்ள உறவு’ , ‘திருட்டு மாங்காய்’ என்றெல்லாம் பேசுவதற்கு அதில் உள்ள நுட்பமான மன சிலாக்கியங்களை உரையாடுவதற்கென்றே இரண்டுபேர் தமிழ் நாட்டில் பிறந்திருக்கின்றார்கள். ஒருவர் தி.ஜானகிராமன், இன்னொருவர் தஞ்சை ப்ரகாஷ். ‘மேட்டுக்குடி பிராமணர் மரபில் மட்டும் இருந்த உறவுச் சிக்கல்களையும் கர்நாடக இசையின் சாஹித்தியங்களையும் பற்றி நான் எழுத்தாக்குகிறேன் என்றால் ‘இந்த முதல் நாவலான நெஞ்சின் நடுவேயில் எழுதியுள்ள சி.எம்.முத்து வேளாண் விவசாயக்குடியின் மரபிலிருந்த உறவுச் சிக்கல்களையும் நாட்டுப்புற இசை மரபுகளின் சாஹித்தியங்களையும்தான் தனது  நாவலில் சித்திரமாக்கியுள்ளார். நான் சில சதுர அடிகளுக்குள்தான் எனது கதாபாத்திரங்களை விரிக்கின்றேன். சோழமண்டல விவசாய பூமிக்குள்ளிருக்கிற கதாபாத்திரங்களை தனது எழுத்துக்குள் கொண்டு வரப்போகிற மூல வித்து இந்த ‘நெஞ்சின் நடுவே’ நாவலில் இருக்கிறது. எனவே தான் என்னைக் காட்டிலும் சி.எம் முத்துவால் தஞ்சை மாவட்ட எழுத்தை நிறைய சொல்லமுடியும்’ என்று தி.ஜா அவர்கள் தஞ்சை ப்ரகாஷிடம் சொன்னார். அந்த இரவுதான் எனது எழுத்தின் திசை தீர்மானகரமானது. 

      வீட்டுக்கு வந்ததும் ‘மோகமுள்’ நாவலை மீண்டும் ஒருமுறை வாசிக்க ஆரம்பித்தேன். மறுநாள் ப்ரகாஷை சந்திக்கும் போது என் மனதில் பட்டதை சற்று தயக்கத்தோடு ப்ரகாஷிடம் கேட்டேன்.   “மோகமுள் யமுனாவிற்கும் எனது நெஞ்சின் நடுவே வளையாபதிக்கும் கொஞ்சமாச்சு ஒற்றுமையிருக்கிறதா ப்ரகாஷ்?”  ப்ரகாஷ் இந்த கேள்விக்கு சிரிப்போடு ஒரு உண்மையான பதிலைச் சொன்னார்.   “வேற்றுமை என்னய்யா இருக்கு? யமுனா சிவப்பு, வளையாபதி கருப்பு ஒனக்கு வாச்சத நீ எழுதியிருக்கே” என்றார் நக்கலோடு. அன்றைய நாள் முழுக்க ப்ரகாஷோடுதான் இருந்தேன். நல்ல கொட்டுகிற மழையில் ஜி.நாகராஜன் அன்றைக்கு மதுரையிலிருந்து ப்ரகாஷைத்தேடி தஞ்சாவூர் வந்திருந்தார். ஜி.நாகராஜன் வந்து விட்டால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். ப்ரகாஷூக்கு நான் கேட்ட கேள்வி அவரது மண்டைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். “யோவ் முத்து, நீ ஏங்கிட்ட காலையில் கேட்ட கேள்விக்கு என்னால கூட சரியா பதில் சொல்லமுடியில. இந்த மாதிரியான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல கடவுளா பாத்துதான் மதுரையிலேருந்து ‘ஜி.என்’-னை அனுப்பிச்சிருக்கார்” என்றார்.  ஜி.நாகராஜன் அவர்களும் தட்டச்சுப் பிரதியை படித்திருந்தால்  நான் ப்ரகாஷிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டேன்.   ”நாகராஜன், மோகமுள் யமுனாவையும் நெஞ்சின் நடுவே வளையாபதியையும் பற்றி பதில் சொல்லுங்கள்” என்றேன். ஜி.நாகராஜன் கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று பதில் சொன்னார், “திருட்டு மாங்காயப் பத்தி ஜானகி எளுதுனா என்ன? முத்து எளுதுனா என்ன? நா எளுதுனா  என்ன? ஆனானப்பட்ட புதுமைப்பித்தனே எளுதுனா என்ன? அதுக்குன்னு தனி பச்சதான், தனி ருசிதான்”  இதற்கு மேல் பதில் சொல்ல இன்னும் ஒரு ஜி.நாகராஜன் தான் பிறந்து வர வேண்டும். 

      இப்படி பேசிய பேச்சின் தொடர்ச்சியாகத்தான் ப்ரகாஷ் ‘தஞ்சாவூர் மாவட்ட பாலியல் கதைகள்’ என்று தொகுக்க ஆரம்பித்து விட்டார்.  இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எனது மனசுக்குள் மூண்டு கொண்டிருக்கிற எழுத்து வேள்விக்கு நெருப்புக் கங்குகளை நான் எடுத்துக் கொண்டது தி.ஜானகிராமனிடம்தான்.  கங்குகள்தான் வெவ்வேறு. ஜ்வாலை ஒன்றுதான். என் எழுத்துலக மானசீக குரு தி.ஜா மட்டும்தான். நான் தொடர்ந்து அவரது அம்மா வந்தாளை அடுத்த வாசிப்புக்கு எடுத்துக் கொண்டேன். என்ன மாதிரியான கலைஞன் அவன்! காதலையும் காமத்தையும் ரெட்டை மாட்டு வண்டியில் பூட்டிய பொட்(டி)டு வண்டியை வெகு சாமர்த்தியமாக  ஓட்டிக்கொண்டுபோன மேதை ஜானகிராமன். அதுவும் ரெண்டு உயர்ஜாதி பூரணிமாடுகள். அவரது மனம் முழுவதும்  அவரது கதாபாத்திரங்களிடமே இருந்தது. வாழ்வின் அமைதியும் அழகும் குவிந்திருந்த அந்த கும்பகோணம் என்று சிறு நகரத்தின் தெருக்களில்  தனது கதைகளை விதைத்தபடியிருந்தார். ஆரவாரங்களோ அவசரங்களோ அற்ற அந்தக் கதாபாத்திரங்களை தனது கள்ளக் காதலிகள் போல நேசித்துக் கொண்டிருந்தார். வாழ்க்கைமுறைகள் குறித்து பல்லாயிரம் கேள்விகள் உள்ளுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் போது அவரது அளவிட முடியாத நெடுங்கதைகளின் மையம் அவர் வடிவமைத்த “அந்த” அம்சத்தை விட்டு விலகவேயில்லை. உறவுமுறை புதிர்களை ஜானகிராமன் விடுக்கிறார் என்றால் அவை கடைசிவரை புதிர்கள்தான். அதைவிடுவிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. 

      கள்ளத் தொடர்புகளுக்குள் இவ்வளவு அர்த்த சாட்சிகளை உருவாக்க முடியுமா? உடல் சுகத்துடன் பிரிகிற மனிதர்களுக்குள் இவ்வளவு  விம்மல்கள் இருக்குமா? அந்த விம்மல்தான் தி.ஜானகிராமனின் மொழி, கலை. மோகத்தின் முழு பரிமாணத்தையும் தனது படைப்புக்குள் நிலை கொள்ளச் செய்த அந்த எழுத்து உத்தியை கைக்கொள்ள இன்னும் ஒரு நூற்றாண்டு கழிந்தாலும் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். சம்பிரதயமான பாத்திர அமைப்பிற்குள் ஒரு கதா மாந்தர் கூட அவர் படைப்பிற்குள் சிக்கியதில்லை. சிதறிய மனிதர்களை தன் கலாபூர்வமான கட்டுமானத்திற்குள் சிதறாத சித்திரங்களாக வரைந்து தள்ளியவர் அவர். காதலும் காமமும் ஒரு கிறுக்கலாக அமைந்து பெண்களின் மன ஆழ முரண்களையும் ரகசியங்களையும் ஒரு எழுத்துமுறையாகக் கொள்வதில் பேரானந்தம் கொண்டிருந்தார். கலை என்பது காதலும் காமமும்  இணைந்து பெறப்பட்ட ஒரு வாழ்வுமுறை என்பதற்கான லட்சிய சிருஷ்டிப்புகளே அவர் தமிழ் புனைவு உலகிற்குத் தந்த கொடைகள். என்னுடைய அனுமானத்தில் தி.ஜானகிராமன் விட்டுச் சென்றது புனைகதைகளை மட்டுமல்ல உன்னதங்கள் நிரம்பிய உறவுகளை, உன்னதங்கள் நிரம்பிய இசைகளை, உன்னதங்கள் நிரம்பிய கலைகளை, உன்னதங்களால் வேயப்பட்ட தனது மனோநிலையை கூடத்தான். !


-சி.எம்.முத்து

சி.எம்.முத்து ஓவியம் :  நன்றி ஓவியர் ஜீவா

 

Previous articleபேரன்பு ஒளிரும் சிற்றகல்
Next articleஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.