ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு


வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர், புராணம் சொல்லும் தொழிலை மேற்கொண்டு பொருளும், வசதியும் பெற்றனர். மாயவரம் சிவராம சாஸ்திரிகள், சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள், தேவங்குடி தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர்கள் அம்மூவர். தியாகராஜ சாஸ்திரிகளின் குமாரர்கள் இருவரில், ஜானகிராமன் இளையவன். சிமிழி சாஸ்திரிகளின் குமாரர்கள் நால்வரில் இரண்டாமவர் “ஆத்ரேயன்”. தஞ்சாவூரில் ஜானகிராமன் தந்தையும், ஆத்ரேயன் தந்தையும் புராணப் பிரசங்கம் செய்து வந்தனர். ஜானகிராமன் ஹைஸ்கூல் படிப்பு தஞ்சையில். காலேஜ் படிப்பு கும்பகோணத்தில். என் தந்தை, ஜானகிராமன் தந்தையாருக்குச் சீடன் போன்றவர். உறவும் உண்டு. ஆனால் 1928லேயே இறந்து போனார். எங்கள் குடும்பம் வறுமை நிறைந்த ஒன்று. பரம்பரைப் புரோஹிதர் குடும்பம். ஆகவே நான் எனது எட்டாவது வயதிலேயே வேதாத்யயனம் செய்வதற்கு அனுப்பப்பட்டேன். “அம்மா வந்தாள்”-இல் வரும் பாடசாலையில்தான் எனது ஆரம்ப காலப்படிப்பு. பிறகு பெங்களூருக்குப் போய்ச் சேர்ந்தேன். பள்ளிப் படிப்பென்றால் இன்னதென்றே தெரியாமல் 1935 முடிய அங்கு கற்று, ஒருவாறு முடித்துக்கொண்டு, முறித்துக்கொண்டு என்று கூடச் சொல்ல வேண்டும், கும்பகோணம் வந்தேன்.

இந்த ஆண்டுகளில் அவ்வப்போது ஜானகிராமனைப் பார்த்ததுண்டு. 1936ல் நான் கும்பகோணம் ராஜாபாடசாலையில் சேர்ந்து “ஓரியண்டல் எண்ட்ரன்ஸ்” பரிக்ஷைக்காகப் படித்தபோது, ஜானகிராமன் காலேஜில் படித்து வந்தான். தனியே ரூமில் இருந்தான். அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் சந்திப்பதுண்டு. எப்படியோ என்னிடம் அவனுக்கு ஒரு ஆழமான அன்பு பிறந்தது. எனக்கு அவன் படிக்கும் ஆங்கில நூல்களைப் பற்றியும் ஆங்கில இலக்கிய விவரங்களும் சொல்வான்.

அவன் படிக்கும் வடமொழிப் புத்தகம் பற்றி என்னைச் சொல்லச் சொல்லிக் கேட்பான். 1937-இல் நான் மதுரை, ராமேசுவரம் தேவஸ்தானப் பாடசாலையில் வித்வான் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். 1940 வரை விடுமுறை நாட்களில் நாங்கள் சந்தித்து இரவு பகல் எந்நேரமும் பேசிக்கொண்டிருப்போம். அவன்தான் நிறையப் பேசுவான். நான் படிக்கும் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றிக் கேட்டறிவான். புதிய தமிழ் இலக்கியம் – சிறுகதை பற்றி வியந்து கூறி என்னையும் படிக்கத் தூண்டுவான். எனக்கு மிகுந்த ஆவல் தோன்றும் வகையில் “மணிக்கொடி” பற்றிக் கூறுவான்.

மணிக்கொடியின் கடைசி வாரிஸான ஸ்ரீ எம்.வி.வி. கும்பகோணம் காலேஜில் இறுதியாண்டு படித்தார் அப்போது. ஓரிரு தடவை நானும் அவனும் எம்.வி.வியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்ததுண்டு. அவரை அப்போது பார்த்ததை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் இன்பமாய் இருக்கிறது. தூய வெள்ளை வேஷ்டி, முழுக்கைச் சட்டை, முகத்தில் அமைதி நிறைந்த, அறிவும், சிந்தனையாழமும் சேர்ந்த கம்பீரமான இளைஞன்.  நல்ல சிவப்பு நிறம். பட்டு நூல்காரர்கள் என்று அந்த நாளில், இப்போது ஸெளராஷ்டிரர்கள் எனப்படும் வர்க்கத்தில் பிறந்தவர். அவர்களில் மிகப் பெரிய பணக்காரர்களான புடவை உற்பத்தியாளர் கோறாபட்டு வியாபாரிகள் ஒருபுறம், நெசவு நெய்யும் தொழிலாளிகளான ஏழைகள் ஒருபுறம். இந்த இரண்டு வகையினரிலும் எல்லோருமே காலேஜ் படிப்பு, ஏன் ஹைஸ்கூல் படிப்புக்கூடப் படிக்காதவர்களே. பணக்காரர்களான மைசூர் குடும்பத்து ஸ்வீகாரப் பிள்ளை, எம்.வி.வி. அந்த நாளில் அந்த வகையிலும் அபூர்வமானவர். ஒரே பிரக்ஞை மயமான வாழ்வில் இருந்தார்.

அந்த நாட்களில் “மணிக்கொடி” கதைகள், தணிகாசலம் என்பவர் எழுதிய “சாவே வா” போன்ற கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. கு.ப.ரா., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் கதைகளையும் படித்துச் சுவைத்தேன். பாரதி நூல்களை எனக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் ஜானகிராமன். அது பெரிய கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டது என்னை. மதுரையில் நான் படித்த பாடசாலை அப்போது சநாதனக்கோட்டை, சிரோமணி வகுப்பு, ஆசிரியர்களைத் தவிர தமிழ் வித்வான்களை உருவாக்கிய தமிழ்ப் பேராசிரியர்கள் கூட வைதீக சிகாமணிகளாய் விளங்கினர். நான் பாரதி நூல்களைப் படித்துக் கூறுவதும், பாடுவதும் பெரிய குற்றமாகிவிட்டது. எனக்கு இரண்டு நாட்களுக்குச் சாப்பாடு (இலவசச் சோறு) கிடையாதென்றும், பாடசாலையில் இருக்கக்கூடாதென்றும், பாரதி நூல்களை உடனே எறிந்துவிட வேண்டும் (நல்லவேளை எரித்துவிடுமாறு கூறவில்லை) என்றும் தண்டனை தரப்பட்டது. ஆனால் பாடசாலை முதல்வர் பகிரங்கமாக என்னைக் கடிந்து கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டார். பாரதியார் நால்கள் பறிக்கப்பட்டன. இந்த முதல்வர் அப்போதே அறுபதை எட்டிக்கொண்டிருந்த முதியவர். பெரிய அறிவாளி. சிந்தனை உள்ளவர். அதற்குப் பிறகு இரண்டு வருஷம் என்னைத் தனியே அழைத்துச் சென்று, சரித்திரம், ஸமூஹஇயல், அரசியல்சூழ்நிலை முதலியவை பற்றிப் போதித்துக் கண் திறந்த நல்லாசிரியர் ஆனார். அவர் பாரதியாரின் இளைய தாயாருக்குச் சகோதரர் சுப்பிரமணிய அய்யர் என்பவர். பாரதியாருடைய கருத்துகள், ஆவேசம் முதலியவற்றை நன்கு அறிந்தவர். ராஜாஜி முதன்மந்திரியானபோது ஆலயப் பிரவேசம் வந்த காலத்தில் எங்கள் பாடசாலை முதல்வர் சீர்திருத்தம் பேசி அதனால் பட்ட கஷ்டங்கள் பல. அந்தக் காலம் எனக்கும் பல இடையூறுகள். ஒரு நல்ல நாவலுக்கான விஷயம். பிழைத்துக்கிடந்தால், 1983-இல் இதை நான் எழுதும் உத்தேசம் உண்டு.

1940-இல், நான் சென்னையில் தமிழாசிரியன் உத்தியோகம் பெற்றுக் குடியேறினேன். ஜானகிராமன் 39இல் அல்லது 40-இல் பி.ஏ. முடித்து வேலை தேடினான். கிடைக்கவில்லை. என்னைவிட ஒன்றரை வருஷம் வயதில் சிறியவன் என்று ஞாபகம். ஜானகிராமனின் தந்தையார் தஞ்சையைவிட்டுக் குடிபெயர்ந்து வலங்கிமான் அருகே கீழவிடையல் என்ற கிராமத்தில் குடியேறினார். அப்போதுதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்கப்போனவன், விரைவில் உதறிவிட்டு, மீணடும் வேலை தேடி அயர்ந்து, எல்.டி. படிக்கச் சென்னைக்கு வந்தான். எல்.டி. முடித்தபின் சென்னையில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தான். அந்த இரண்டு, மூன்று வருஷங்கள் என்னால் என்றுமே மறக்க இயலாதவை. மாம்பலத்தில் ரூமில் சேர்ந்தோம். ஹோட்டல் சாப்பாடு. எனக்கு 25 ரூபாய் சம்பளம். அவனுக்கு 35 அல்லது 40 ரூபாய். அதிருசியான சாப்பாடு அப்போதெல்லாம். 10 ரூபாய்க்கு 60 சாப்பாடுகள். நாங்கள் இருவருமே ருசி பார்த்துச் சாப்பிடுகிறவர்கள். மிகவும் சுகமான நாட்கள், பாட்டு, படிப்பு, சர்ச்சைகள், பழைய இலக்கியம், புது இலக்கியம், ஸம்ஸ்கிருத நாடகங்கள், வாய்விட்டு நடிப்பதைப் போலவே படித்து ரஸிப்பது, நல்ல கோஷ்டி.

எனக்குச் சென்னையில் மாமனார் வீடு உண்டு. ஆனால் மனைவி தீராத நோயாளி. 19 வயதில் கல்யாணம் ஆயிற்று. ஆனால் பிரம்மச்சாரிதான். மலிவான காலம். மிக நன்றாக உடுத்து, உண்டு வாழ்ந்தேன். பெண்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஸம்ஸ்கிருத பண்டிதன் நான். மாம்பலம் பள்ளி 15-16 வயதுள்ள பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளி. என் ஏக்கங்கள் வேதனை விம்மல்கள் யாவும் ஜானகிராமன் உடனிருப்பதால் அறவே என்னைவிட்டு அகன்றன.

ரவீந்திரநாதர் (டாகூர்) இறந்த செய்தி வந்ததும், உடனே பள்ளி முழுவதும் கூடியது. டாகூர் பற்றிப் பேச வேண்டும். ஆங்கிலம் படித்த ஆசிரியைகள் யாருமே முன்வரவில்லை. என் தலையில் அக்ஷதை விழுந்தது. தைரியமாகப் போய் நின்று 45 நிமிஷம் பேசினேன். டாகூரின் சிறுகதைகள், நாவல் சில ஹிந்தியில் படித்திருந்தேன். பாரதியார் மொழிபெயர்த்த கட்டுரைகள் சிலவும் தெரியும். ஜானகிராமனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது.  போலிக் கவிதை என்பான். இது அவனுடைய இங்கிலீஷ் புரபஸர் பழமார்நேரி ஸ்ரீ தாராமய்யரும் பகிர்ந்துகொண்ட அபிப்ராயம். என்னிடம் அவன் கீதாஞ்சலிப் பாடல்கள் சிலவற்றை விவரித்து விமர்ஸனம் செய்ததுண்டு. இதுபோன்ற பலங்களால், அன்று நன்றாகவே பேசிவிட்டேன் போல் இருக்கிறது. அன்றிலிருந்த அந்தப் பள்ளியில் நான் ஒரு “ஹீரோ”. என்னைத் தேடிக்கொண்டு பெண்கள், என் மாணாக்கியர் சிலர் வரத்தொடங்கினார்கள். நான் மிகவும் சங்கடப்படுவேன் அந்த நேரங்களில். ஜானகிராமன் அவர்களுடன் நெருங்கிப் பேசிப் பழகிக் குதுகுதுப்படைவான். அவன் இளமைப் பருவத்திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன். மூன்றாவது புருஷார்த்தத்தில் அவனுக்கு எல்லையில்லா வேகம் உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. என்னைத் தேடி என் ரூமுக்கு வரும் பெண்களில் ஒருத்தி என்னைக் கேட்டு என் திருமண அவலத்தைப் புரிந்துகொண்டவள், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று பச்சையாகச் சொல்லிவிட்டாள். எனக்குத் தைரியமில்லை. வசதிகளும் இல்லை. ஸமூக பயம் வேறு. எடுத்துரைத்து அவளை விலகச் செய்தேன். ஆனால் அவள் அதற்குப் பிறகும் என்னிடம் நேசத்தை மிகுதியாகவே காட்டினாள். ஜானகிராமன் நான் அவளை மணந்து கொள்ளத்தான் வேண்டுமென்றும், என் தாயாரிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் தானே எல்லாம் சொல்லி ஏற்பாடு செய்வதாகவும் ஒற்றைக் காலால் நின்றான். நான் மறுத்துவிட்டேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை. அவன்தான் மிகவும் வருத்தப்பட்டான். நான் மனோவேகங்களை அடக்கி ஒடுக்க நிறையப் படித்தேன். முக்கியமாக அன்றும் இன்றும் நான் ஆர்வத்துடன் படிப்பது உபநிஷத்துக்களே. அதற்குப் பிறகு ரொம்ப நாள் வரை ‘வைதீகம்’, ‘சாமியார்’ என்று என்னை அவன் பரிகாசம் செய்து கொண்டே இருப்பான்.

சென்னையில் எனக்குச் சில சங்கீதக்காரர்களுடன் நட்பு உண்டு. திருவல்லிக்கேணியில் தெருப் பெயர் நினைவில்லை பாண்டுரங்க மடத்துக்குப் பக்கம் ஜி.என்.பி. வீட்டுக்கு எதிரே ஒரு மாடியில் இருந்த ரூம்களில் நான் இருந்தபோது, அங்கே பாலக்காடு ராமச்சந்திரன் என்ற மிருதங்க வித்வான் இருந்தார். அவர் மிருதங்கத்தில் மஹோன்னதமான புகழ் பெறும் வகையில் கிளம்பினாராம். ஆனால், ஏதோ காயத்ரி வேளைக்கு ஆயிரத்தெட்டு, பிறகு ஏதோ தேவிமந்திரம் என்றெல்லாம் செய்து அதனால் பிரமை பிடித்து போல் ஆகிச் சுயநினைவை இழந்து உலகப் பார்வையில் பைத்தியம் ஆகிவிட்டாராம். பேசும் வாயும் இழந்துவிட்டாராம். நான் அவருடன் பழகியபோது அவருக்கு 35-40 வயதிருக்கும். அப்போதும் அவர் அதிகம் பேசுவதில்லை. என்றாலும், அளவுடன் பேசி அளவளாவுவார். அவருக்கு வாய்ப்பாட்டும் நன்றாக லக்ஷண சுத்தமாக வரும். மணக்கால் ஸ்ரீ ரங்கராஜன் அவரிடம் வந்து பாடுவதும் உண்டு. நானும், ஜானகிராமனும் அவரைப் பார்க்கப் போவதுண்டு. அங்கே ஸ்ரீ நீலகண்டன் என்பவரும், வேறு சில சங்கீத டியூஷன் வித்வான்களும் வருவார்கள். நட்பு வளர்ந்தது. ராமச்சந்திரனுக்கு உதவிகள் செய்ய வேண்டும், மீண்டும் அவர் கச்சேரிகளுக்கு வாசிக்கும் அளவு அவரை ஊக்குவிக்க வேண்டும் என்று நானும், ஜானகிராமனும் சேர்ந்து சில கச்சேரிகள் ஏற்பாடு செய்தோம். அது வெற்றி பெறவில்லை.

அப்போதெல்லாம் நானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச் சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான்.

இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு. அவன் தந்தையாருக்கு நல்ல ஸங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே ஒரு அருமையான அபூர்வமான முறை. அதாவது கதையில் வர்ணனை உரையாடல் முதலியவை எல்லாம் அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்ப பல ராகங்களில் வரும். அவர் வாக்கிலிருந்து அந்தக் காலத்துத் தஞ்சாவூர் சுருதிப்பெட்டி தம்பூராவை விடச் சுத்தமாய், அந்தர காந்தாரம் பேசும். ஒரு கட்டை சுருதியில் நாட்டையில் மங்களம் சுலோகம் – பூர்வ கதைச் சுருக்கம், பின்னால் ஒருவர் – அநேகமாக ஜானகிராமனுடைய அண்ணன் அல்லது அவனே மூலசுலோகங்களைச் சிறிதளவு ராகத்துடன் வாசிப்பார்கள். தொடர்ந்து அதே ராகத்தில் – கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில் கதை கூறுவார் தந்தை. அப்பொழுது வீட்டில் ஜானகிராமனுடைய சகோதரிகளுக்கு இசைப்பயிற்சி நடக்கும். இந்த வகையில் வயதுடன் கூடவே வளர்ந்தது அவனுக்கு ஸங்கீதம். பின்னர் கும்பகோணம், குற்றாலம், அய்யம்பேட்டை, சென்னை எல்லா இடங்களிலும் மேலும் மேலும் பயிற்சி செய்தான். பாடுவான். மேடை ஏறிக் கச்சேரி செய்யவில்லையே தவிர, ஒரு வித்துவானுக்குரிய அத்தனை லக்ஷண, லக்ஷய ஞானம் உண்டு அவனுக்கு. கும்பகோணத்திற்குப் பக்கத்தில், எங்கே உத்ஸவம், கச்சேரிகள் போல் நடந்தாலும் நாங்கள் போவோம். திருவிடை மருதூரில் அந்தக் காலத்தில் நல்ல கச்சேரிகள் நடக்கும். நாங்கள் போவோம். திருவிடை மருதூரில் தைப்பூசத்தன்று இரவு 10 மணிக்கு மேல் புஷ்ய மண்டபத்துறையிலிருந்து சுவாமி புறப்பாடு. கோவில் வாசலுக்கு வருவதற்குள் பொழுது புலரச் சிறிது நேரமே மீதியிருக்கும். அன்று தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள எல்லா நாயனக்காரர்களும் வந்து கூடி வாசிப்பார்கள்.

திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிகள் பல்லக்கில் வருவார். காலை 3 மணிக்குப் பிறகு டி.என்.ராஜரத்தினம் வந்து வாசிப்பார். தேன் மழைதான். ஆனால் அந்த இரவில் பெய்யும் பனி மழையும் ரஸிகர்கள் மேலே பொழிந்து நனைக்கும். அந்த நாயனங்களை நாங்கள் இருவரும் சேர்ந்து சில வருஷங்கள் கேட்டிருக்கிறோம். ஒரு தடவை, பொழுது விடியும் வரை ராஜரத்தினம் வாசித்தார். நூற்றுக்கணக்கில் கூட்டம் கேட்டுப் பரவசம் கண்டது. விடிந்ததும் நாங்கள் ஹோட்டலில் இட்லி, சாப்பிட்டுவிட்டு நடந்தோம். அவன் இரவில் கேட்ட ராகங்களைச் சன்னக் குரலில் பாடிக்கொண்டே வந்தான். நடந்தே திருநாகேசுவரம் வரை வந்துவிட்டோம். இதெல்லாம் இத்தனை நீளமாக நான் சொல்லக் காரணம் உண்டு.

ஸ்ரீ வெங்கட்சாமிநாதன் அவர்கள் ஒரு கட்டுரையில் ஸங்கீதக்கலை பற்றி, மிகவும் நுட்பமறிந்தவர் போல் கச்சேரி விமர்சனங்கள் எழுதும் டில்லி ‘சுப்புடு’, தமிழ்நாட்டின் நாடகம் என்ற பைத்தியக்காரத்தனமான பொழுதுபோக்குகளை மிகவும் சுவைத்து விமரிஸனம் செய்வதைப் பற்றி அவரை ஒரு குட்டுக் குட்டிவிட்டு, அதே வேகத்தில் ஜானகிராமனுடைய சங்கீத ரஸனைபற்றியும் ஒருவிதமான ஐயப்பாட்டுடன் அதன் “ஒரிஜினாலிடி” பற்றிய ஸந்தேஹத்துடன் குறிப்பிட்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. “மாடர்ன் ஆர்ட்” பற்றி அவன் கொண்டிருந்த அபிப்ராயத்தைக் குட்டும் தொடர்பில் என்று ஞாபகம். இன்றும் அந்தக் குட்டின் கருத்து எனக்கு விளங்கவில்லை. தயவுசெய்து அவர் அதை விளக்குதல் அவசியம். வெங்கட்சாமிநாதன் ஆழமும், அழுத்தமும் காணும் விமரிசகர். ஆகவே இந்த வேண்டுகோள். நிற்க.

அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது கும்பகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக, குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக் கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவுதான். ஆனால் நான் இறங்கிய இடத்தில் உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவுப் புதையுண்டுவிட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டிவிட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆய்விட்டிருந்தேன். இறந்துவிட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு. சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில் ஈரம், சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்ற போது, நாலைந்துபேர் என்னைச் சூழ்ந்திருந்தனர். ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். அவன் “ஐயோ, ஐயோ” என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்தது என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.

கு.ப.ரா. கும்பகோணத்தில் இருப்பதை அறிந்து, நாங்கள் இருவரும் சென்னையிலிருந்து உத்யோகத்தை விட்டுவிட்டு அவருடன் இருக்க என்றே கும்பகோணம் சென்றோம். இது முதல் கு.ப.ரா. இறந்ததுவரை ஜானகிராமன் தனக்கே உரிய பாணியில் வாசகர் வட்டம் “சிறிது வெளிச்சம்” என்ற புத்தகத்தின் பின்னுரையில் எழுதியிருந்தான். என்னிடம் அது இல்லை. நண்பர்கள் அதை அவசியம் படித்துப் பார்த்தல் வேண்டும்.

“அமரர் கு.ப.ரா.”-வாம். பெரிய கண்றாவி. அவர் அந்த நாட்களில் அடைந்த கஷ்டங்கள், வறுமை, ஏமாற்றங்கள், உரிய மதிப்பைத் தர மறுத்த மறுதலித்த இலக்கிய ஆஷாடபூதிகள் ஆகியவற்றால் அவர் மனம் புண்பட்டு இறந்தார். தகுந்த சத்துணவும், மருந்துகளும் பெற இயலாத வறுமை –  மானம் அவரைக் கொன்றது. ஜானகிராமன், அவர் இறந்தபின் இதைச் சொல்லிச் சொல்லி வருந்துவான். இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. கு.ப.ரா. பற்றி எங்கள் மூலம் முன்பு ஜானகிராமனுடைய தந்தை கேள்விப்பட்டிருந்தார். ஜானகிராமன் அவருடன் பழகுவது தரித்திரத்தைத் தழுவும் முயற்சி என்று அவர் கசந்து கொண்டதுண்டு. கு.ப.ரா. இறந்த பிறகு ஜானகிராமனிடம் நேரிடையாக இதைத் தகப்பனார் கூறத் தொடங்கினார். “கதை எழுதுவது என்றால் கார் வைத்துக் கொண்டிருக்கும் கல்கி மாதிரி ஆகமுயலுதல் வேண்டும். பணமும் இல்லை, புகழும் இல்லை, இதென்ன தரித்திரக் கும்பல்,” என்ற அளவுக்குப் போய்விட்டார் அவர். என்னைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு அம்மாதான் உண்டு. மாதம் முப்பது ரூபாய் சம்பாதிக்கும் நான்தான் வீட்டு எஜமானன். கு.ப.ரா. இறந்தபிறகு, இரவு நேரங்களைப் பெரும்பாலும் ஜானகிராமன் என் வீட்டிலேயே கழிப்பான். காரணம், அவர்கள் குடியிருந்த வீடு சிறியது. நான் இருந்தது தர்ம சத்திரம், வாடகை இல்லாமல் கிடைத்த பிதிரார்ஜிதம், எனக்கு விசாலமான ரேழி.

அப்போது என் வாழ்க்கையில் பெரிய பிரச்சினை கல்யாணம். இரண்டாம் கல்யாணம். மூத்தாள் நோய் வாய்ப்பட்டுக்கிடந்தாள். பெண் இருக்க பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. மேலும் நான் பரம்பரை பரம்பரையாய் ஏழை. இதில் எனக்கு ‘காம்பிளெக்ஸ்’ அறவே என்றும் கிடையாது. யதார்த்த நிலை உணர்வு இது. எனக்கு எப்படியாவது இரண்டாவது தாரம் தேடிப்பிடித்துவிட வேண்டும் என்று ஜானகிராமனுக்குப் பிடிவாதம். என் மனத்தில் அந்த ஆசையைத் தூண்ட அவன் அளித்த தூண்டுதல்கள் மிகவும் அந்தரங்கமானவை. நானும் மனைவியாசை கொள்ளத் தொடங்கியிருந்தேன். மன்னார்குடியில் பெண் பார்ப்பதற்காக அவனுக்கு வேண்டிய ஒரு சாதாரண குடும்பம் ஐந்தாறு பெண்கள் உள்ள விதவைத் தாயார் ஒருத்தி, எனக்கு ஒருத்தியைக் கொடுக்க முன்வந்து பெண் பார்க்கவும் அழைத்தாள். என்னுடைய தாயார் பல ஜோஸ்யர்களிடம் கேட்டு இன்னும் சில மாதங்களில் மூத்தாள் போய்க் கழிந்துவிடுவாள் என்று தெரிந்து காத்திருந்தாள். அப்படியானால் காத்திருப்பதில் என்ன பயன் என்பது ஜானகிராமன், என்ன கதறியும் என் தாயாருக்குச் சம்மதம் இல்லை. நாங்கள் இருவரும் சென்றோம். மன்னார்குடியில் எங்கள் உறவுக்காரர் வீட்டுப் பெண்மணியுடன் பெண் பார்க்கப் போனோம். ஐம்பது ரூபாய் சம்பளம் எனக்கு. மிக விரைவில் கதைகள் எழுதி நிறையச் சம்பாதிக்கப் போகிறான் என்றெல்லாம் கதையளந்தான் ஜானகிராமன். தாயாருக்கு முழுச் சம்மதம். ஆனால் அந்தப் பெண் நான் குடுமி வைத்துக்கொண்டிருந்ததால் என்னை மணக்க மறுத்துவிட்டாள். “சரி நாளைக்கு இவன் ‘கிராப்’ வைத்துக் கொள்வான்” என்றான் ஜானகி. நான் மறுத்துவிட்டேன். ஒரு பெண்ணின் திமிருக்கு நான் பணிந்து போவதா? இந்த விபரம் நண்பர்களுக்குத் தெரிந்துவிட்டது. பின்னால் நான் என் திருமணப் பத்திரிகையைப் புதுமாதிரியாய் நானே அழைப்பதுபோல் போட்டு நண்பர்களுக்கு அனுப்பியபோது ஸ்ரீ ‘சிட்டி’ அவர்கள், “மிக்க மகிழ்ச்சி, வந்து சேருகிறேன். நீ இன்னும் குடுமிதான் வைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டு எழுதினார். (நான் இன்னும் குடுமிதான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.)

ஜானகிராமன் என் இரண்டாவது கல்யாணத்திற்கு வந்திருந்தான். என் அரிய நண்பர் ஸ்ரீ எம்பார் விஜயராகவ பாகவதர் ஹரிகதை. என் சிறிய தகப்பனார் முதலிய வேத சாஸ்திர வித்வான்களின் கூட்டம் – பார்வதி கல்யாணம் கதை. ஒரே ஸங்கீத மயம், வேத சாஸ்திர மயமான நான்கு மணி நேர நிகழ்ச்சி. ஜானகிராமனுடைய கல்யாணத்தின்போதும், சாந்தி கல்யாணத்தின்போதும் நான் செய்த வேடிக்கைகளையெல்லாம் அவனும் செய்தான். மிகவும் கிளுகிளுப்பூட்டினான். என் மனைவிக்குப் பதினேழு வயது. எனக்கு இருபத்தெட்டு. ஜானகிராமன் என் காதில் மிகவும் அவை பயக்க ஓதிக்கொண்டே இருந்தான். மூளியாய்விட்ட என் வாழ்க்கை முழுமை பெற்றதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

கு.ப.ரா. இறந்த பிறகு எங்கள் இருவருக்கும் ஒரு சூன்யம் நேர்ந்துவிட்ட மனநிலை. அப்போது சென்னையில் இலக்கிய அன்பர்கள் கூட்டமொன்று ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும். “கொனஷ்டை” என்ற முதிய எழுத்தாளர்கூடக் கலந்து கொண்டார் என்று ஞாபகம். கும்பகோணத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் சென்று எழுத்தாளர்களைச் சந்திக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டோம். சனி, ஞாயிறு லீவு. வெள்ளி மாலை பாஸ்ட் பாஸஞ்சரில் கிளம்புவோம். மிகவும் குறைந்த கட்டணம் – ஐந்து ரூபாய்க்கும் குறைவு. இரண்டு நாளும் அலைந்து திரிந்துவிட்டுத் திரும்புவோம். ஆனால் மனதிற்கு மிகவும் தெம்பும், சந்தோஷமும் ஏற்படும்.

அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டிற்குப் போனோம். முடிந்தால் அங்கே சாப்பிட்டுவிடலாம் என்று உள்ளுக்குள் எண்ணம். மறுநாள் செலவுக்கும், ரயிலுக்கும் போதுமானதாயிருந்த பொருளாதாரப் பிரச்சினை இது. நாங்கள் போகும்போது இரவு 8 மணிக்கு மேலிருக்கும். அவர்கள் வீட்டில் பலகாரம் –  புரட்டாசி சனியோ – முடிந்து எல்லோரும் கூடத்திற்கு வந்துவிட்ட சூழ்நிலை. “ஏம்பா சற்று முன்னாடி வந்திருக்கக் கூடாதோ” என்று யாவும் முடிந்துவிட்ட கதை கூறி, ”ஆமாம் நீங்கள் இருவரும் ஆகாரம் செய்துவிட்டீர்களோ?” என்று கேட்டார். மிகவும் சம்பிரமத்துடன், “அதெல்லாம் ஆய்விட்டது” என்று சமாளித்துக் கொண்டோம். ”ஆச்சா, இல்லையா, நெஜத்தைச் சொல்லுங்க,  மாப்பிள்ளை சமத்து மாதிரி” என்று மாப்பிள்ளை பட்டினி கிடந்த கதையைச் சொல்லிச் சிரித்தார். எங்களுக்கும் சிரிப்பு வந்தது. பிறகு இரவு அவர்கள் வீட்டு ரேழியில் (அப்பர்சாமி கோயில் தெரு) பசி வயிற்றைக் கிள்ளக் கிள்ளக் கிடக்கப் போகிறோமே என்றும் சிரிப்பு. அன்று ஜானகிராமனுக்கு வயிற்றுக்குக் கிடைக்காத குறையைக் காதுக்கு விருந்தூட்டிப் போக்கினார் சுப்பு. தேவடியாள் வீட்டுக் கதைகள்,  செட்டிநாட்டு மைனர் கதைகள் கேட்கவா வேண்டும். பச்சை பச்சையாகப் புட்டுப் புட்டு வைத்தார். மற்றுமொரு வேடிக்கை அவர் எதிரே ஒரு பெரிய கண்ணாடி ஜாடி நிறைய பாதாம் பருப்பு இருந்தது. நிலக்கடலை மாதிரி அதை எடுத்துத் தின்று கொண்டிருந்தார் – சுவைத்து மென்று, அசை போட்டு, எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தார் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இடையில் திருவிடைமருதூர் (பெரம்பூர்) வீருசாமிப்பிள்ளை வந்தார். இருவரும் தனியே சில நிமிஷங்கள் பேசிக் கொண்டனர். அவரை அனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்த சுப்பு. “அவரைத் தெரியுமோன்னோ?” என்றார். “தெரியுமே” என்றோம். “அவரும் நம்ம சகலை – உங்களூர் பாஷையில் ஷட்டகர் – அந்த வகையில்” என்று சிரித்தார். ஸ்ரீமதி சுந்தரிபாய் சுந்தரிபாய் சகோதரி என்று விவரம் புரிந்தது எங்களுக்கும். அன்று இரவு ஒரு மணிவரை மேலே சொன்ன கதாகாலக்ஷேபம். ஜானகிராமனுக்கு ஏற்கனவே அவை ஓரளவுக்கு அத்துபடியான சங்கதிகள். நான் அவர் மேஜையிலிருந்த ஏதோ ஒரு சிறுகதைத் தொகுப்பு – பிச்சமூர்த்தியுடையவை என்று ஞாபகம் – எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். “நம்ம சாஸ்திரிக்கு இதெல்லாம் பிடிக்காதோ!” என்று கிண்டல் செய்தார் சுப்பு. “சாமியார் என்று கூடச் சொல்லலாம்” என்றான் ஜானகிராமன்.

கோயம்புத்தூரில் நடந்த முதல் எழுத்தாளர் மகாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். “வசந்தம்” என்று பத்திரிகை நடத்திய ஆர்.திருஞானம், “ரதி” ஆர்.ஷண்முக சுந்தரம் இருவரும் ஜி.டி.நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் ஆகியோர் ஆதரவுடன் நடத்தியது அது. மிகவும் நல்ல ஏற்பாடுகள். கல்கி தலைமை. எழுத்தாளர் ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து தங்களைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். ஜானகி என்னையும் இழுத்துக்கொண்டு மேடைக்குப் போனான். “நாங்கள் புத்தம் புதிய எழுத்தாளர்கள் –  தமிழ் இலக்கியத்தின் பெர்னாட் ஷாவாக மலரப் போகிறவர்கள்,” என்று தொடங்கினான். ஒரே கை தட்டல். “நாங்கள் எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் ‘ஒரிஜினல்’,’” என்றதும் ஆரவாரம் அதிகம் ஆயிற்று. விஷயம் என்னவென்றால் அப்போது கல்கி, ஸி.என்.அண்ணாத்துரையை பெர்னாட்ஷா என்று எழுதியிருந்தார். புதுமைப்பித்தன், “ரஸமட்டம்” வைத்துக் கல்கி எழுத்தின் மூலங்களைக் காட்டிச் சாடியிருந்தார். ஜானகிராமன் அறிமுக வார்த்தைகள் கல்கியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவர் தன் பேச்சில் இதையே பல தடவை தன் கிறிச்சுக் குரலில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். “ஆமாம் டூமாஸ் (டூமா), ஸ்காட் முதலியவர்கள் எனக்குக் குருநாதர்கள். மனித வாழ்க்கையில் மிகவும் ஒளி மறைவுச் சங்கதிகளான ஆண் பெண் உறவு சங்கதிகளை எழுதுவது பெரிய இலக்கியமாகிவிடுமோ?” என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டார். ஆனால் அவர் பிற்காலத்தில் எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டத் தவறியதே இல்லை. ஜானகிராமனும் பிற்காலத்தில் இதையெல்லாம் “காம்ப்ரமைஸ்” செய்துகொள்ளும் பக்குவம் பெற்றுவிட்டான். ஜானகிராமன் தன் புதிய சீர்த்திருத்தக் கருத்துக்களை, கணவனை இழந்த பெண்களுக்கு முடிகளைதல், சாவுக்குப் பிறகு வரும் சடங்கு, சாப்பாடுகள் ஆசாரம், அனுஷ்டானம், போலியான வைதீகம் முதலியவற்றில் அவனுக்கிருந்த ஆக்ஷேபணைகளை, அவனுடைய தகப்பனார் இருந்தவரை வெளிக்காட்ட முடியாமல் குமுறிக் கொண்டிருந்தான். அவன் குடும்பத்திலும், நெருங்கிய என் குடும்பம் போன்றவற்றிலும் இவை நேர்ந்ததைப் பொறுக்க முடியாமல் அவன் ஆத்திரப்பட்டதுண்டு. அவனுடைய இளைய சகோதரி மூத்த ஸகோதரியின் புருஷரையே மணக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவர்கள் குடும்பத்தில் அது பெரிய குழப்பத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடந்து பொறுமினான் இவன். தந்தையாரிடம் இருந்த மரியாதையால் அடங்கினான். ஆனால் பிற்பாடு அந்த ஸகோதரிகள் இருவருடைய கணவனாய் இருந்தவர் இறந்த பத்தாவது நாள் கழுத்தில் புடவை போடுவது வேண்டாமென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துடிதுடித்தான். புரோஹிதர் வயதானவர் ஒருவரைத் திட்டியும் விட்டான். அப்போது சமாதானம் செய்யப்போன என்னையும் அடித்துவிட்டான்.

அவன் டில்லிக்குப் போனபிறகு நாங்கள் அதிகமாகச் சந்திக்கவில்லை. கடிதத் தொடர்புடன் சரி. அவனுக்கு புட்டபர்த்தி ஈடுபாடும், ஒரு யோகி, விமானமேறி அமெரிக்காவில் யோக வியாபாரம் செய்யும் ஒரு யோகி, ஏதோ பிராணாயாமம் மாதிரிக் கற்பித்தாராம். பிறகு தேவி உபாஸணையில் கூட ஈடுபாடு வந்ததாம். மந்திர தந்திரங்களின் ஈர்ப்பும் நேர்ந்ததாம். இதெல்லாம் ஏன், எப்படி என்று எனக்கு ஏக ஆச்சரியம். கேட்டு அறிவதற்குள் போய்விட்டான். மனிதன் மனமும், அறிவும், உணர்வுகளும் விசித்திரமானவை! புரியாதவை!

ஜானகிராமனுடைய குடும்பம் நன்கு உலகை அறிந்த, பண்பட்ட, அநுபவம் மிக்க குடும்பம். அரட்டை அடிப்பது அவர்களுக்குக் கைவந்த விஷயம். ஒரு தட்டு நிறைய வெற்றிலை, சீவல், வாசனைப் பாக்கு, ஏலக்காய், கிராம்பு முதலியவற்றுடன் உட்கார்ந்தால், இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவனுடைய மூத்த ஸகோதரி பேசாமல் கேட்கும் வகை. அடுத்தவள் எப்போதும் தாம்பூலம் நிறைந்த அழகான சிரிப்பு தவழும் முகம். மிகவும் நயமாகப் பேசுவாள். இளையவள் உலகத்தை மிக நன்றாகப் பார்த்து அறிபவள். மற்றொருவரைப்போலவே பேசி நடித்துச் சிரிக்க வைப்பவள். ஊர், அக்கம் பக்கத்து வம்புகள் –  வதந்திகள் – உண்மை நடப்புகள் யாவும் அடிபடும். பேஷான அரட்டை. அத்தனையும் அவனுடைய நாவல்களுக்குத் தாய்ச் சரக்கு.

கும்பகோணத்தில் சுப்பையர் என்பவர் மஹாமகக் குளத் தெரு அருகில் கௌதமேசுவரன் கோயில் தெருவில் இருந்தார். மிருதங்க வித்வான். சங்கீதம் மிக நன்றாகத் தெரியும். பாடாந்தரங்கள் சுத்த கர்னாடகப் பாணி. அப்போதே அவருக்கு வயது அறுபதுக்குமேல். அவருக்கு மகாராஜபுரம் விசுவநாதய்யர் தலைமுறைக்கு முன் தலைமுறைச் சங்கீதம் பற்றி நிறையத் தெரியும். அவர் ஜானகிக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்தார். சில மிகப் பழைய கீர்த்தனைகள், தியாகராஜ கீர்த்தனைகளை – பழைய சங்கதிகள் – பல்லவிக்கு இத்தனை – அநுபல்லவிக்கு இத்தனை என்று கணக்குப் பிசகாமல் சொல்லி வைப்பார். அவர் சங்கீதக்காரர்களுக்கே உரிய வக்கிரமும், பேச்சுவார்த்தைகளும் நிறைந்தவர். பழைய காலத்து விஷயங்களை உப்பு மிளகாய் மஸாலா சேர்த்துச் சொல்லுவார். அவருடைய சங்கீதத்தைவிட இந்த அரட்டை ஜானகிராமனுக்கு மிகவும் பிடித்தது, உதவிற்று.

“அம்மா வந்தாள்” நாவலில் வரும் பாடசாலை – அதை ஏற்படுத்திய அம்மாள் – அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி முற்றும் கற்றதும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் இந்த மூலங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. அந்த நாவலைப் படித்து அவனுடைய தமையனார் மிகவும் வருத்தப்பட்டார். எனக்கும் அதைப் படிக்கும்போது வருத்தம்தான். (ஒருமுறை நான் உயர்திரு. கி.வா.ஜ.வுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜானகிராமனுக்கு ஏன் ஸாஹித்ய அகாடமி அங்கீகாரம் இல்லை என்று கேட்டு விவாதித்தேன். “எல்லாருமே ‘Bad taste’ என்று கூறினார்கள்” என்றார்.) “அம்மா வந்தாள்” என்னுள் ஏற்படுத்திய உணர்வும் இத்தகையதே. அந்த நாவலைப் பற்றியும், அவன் தமையனார் அடைந்த வருத்தத்தைப் பற்றியும், புனிதமான ஒரு பாடசாலை, வேதாத்யயனம், தர்மம் செய்த ஓர் அம்மாள் போன்ற விஷயங்களை அவன் தூய்மை கெடுத்துவிட்டான் என்ற என் கருத்தையும் அவனுக்குக் கடிதம் எழுதினேன். கோபமாகப் பதில் எழுதினான். ஆனால் அவன் எழுதிய ஒரு வாக்கியம், உண்மையிலேயே அவனுடைய குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது. “நான் ஒரு பாசாண்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்,” என்பதே அந்த வாக்கியம். பிறகு பலகாலம் கழித்து ‘மரப்பசு’ வந்தது. அண்ணாக்காரர் அதைப் படிக்கவே மறுத்துவிட்டார். பிறகு படித்துப் புரிந்தும் புரியாமலும் கண்டபடி பேசி துயருற்றார். நான் அதிர்ந்து போனேன். அதைப் படித்து அம்மணி என்ற பாத்திரம், இன்னும் நூறு வருஷங்கள் ஆன பிறகும் அந்தச் சுழலில் குடும்பத்தில் அதுவும் கும்பகோணத்தில் அருகில் உள்ள கிராமத் தொடர்பில் பிறக்கவே முடியாது என்று கடுமையாக விமர்சித்து எழுதினேன். பதிலே எழுதவில்லை. அவன் பிறகு திடீரென்று அவன் குடும்பத்தில் நேர்ந்த ஒரு எதிர்பாராத விளைவுக்குப் பிறகு எழுதினான். ஏதோ ஒரு ஹிந்திப்படத்தைத் தன் மாப்பிள்ளையோடு பார்த்ததாகவும், அண்ணா, நான் போன்ற போலிகள் அதைப் பார்த்துத் திருந்த வேண்டும் என்றும் எழுதினான். திருந்தினேனோ இல்லையோ? இன்று இந்த 1982-இன் முடிவில் என் குடும்பத்திலும் அதுபோல ஏதாவது நடந்துவிட்டால் – நான் டெல்லியில் இல்லை. பெரிய புகழோ, உத்தியோகமோ இல்லை, காலம் எனக்குப் பாடம் போதிக்காமலும் இல்லை. (எனக்கு வயதான படித்த மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு நிற்கிறார்கள். இருவரும் உத்தியோகம் ஒருத்தி B.Sc., B.Ed., ஆசிரியை, மற்றொருத்தி B.Sc., ஐ.ஓ.பி.யில் வேலை. அடுத்தவள் B.A – வேலை இல்லை ) – குடிமுழுகிவிடாது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் என் நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் உற்றார் உறவினர்களும் இருக்கும் சூழ்நிலை அத்தகைய நிலையை ஸர்வஸாதாரணமாகக் கொள்ளவிடாதுதான். அப்புறம் சமாளித்துக் கொள்கிறோம். அது வேறு. அதற்காகச் செத்துவிடவா முடியும்? இதுதான் ஜானகிராமனுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கம். அவன் பதில் சொல்லவில்லை. போய்விட்டான். வேறு ஏதோ எழுதிய போது “என் மரப்பசு என்னைப் பெற்று உருவாக்கிய சமுதாயத்திற்குத் தண்டனை,” என்று எழுதினான். இதன் பொருளும் எனக்கு விளங்கவில்லை. என் நண்பன் மட்டுமா, ஜானகி, என் உறுப்புகளுக்குள் ஒன்றாயிருந்தவன்.


– கரிச்சான் குஞ்சு

  • குறிப்பு “யாத்ரா” இதழ் 40 – 41-இல் கரிச்சான் குஞ்சு எழுதிய கட்டுரை
  • நன்றி :   கட்டுரை உதவி – கவிஞர் ரவிசுப்பிரமணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.