மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்


1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல். தமிழின் மிகச் சிறந்த நாவல் எதுவும் இல்லை என்றும், சிறந்த நாவல்கள் என்று மூன்று நாவல்களையும், நல்ல நாவல்கள் என பத்து நாவல்களையும், குறிப்பிடத்தக்க நாவல்கள் என்று இன்னும் சிலவற்றையும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த நாவல்கள் பட்டியலில் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும் இடம்பெற்றிருந்தன.

தமிழ் நவீன இலக்கியம் அறிமுகமாகி ஒருசில நாவல்களையே வாசித்திருந்த பருவம். மூன்று நாவல்களில் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலை மட்டுமே, அதன் ஆழத்தை முழுமையாக அப்போது உணராதபோதும், வாசித்திருந்தேன். ‘மோக முள்’ குறித்து கேள்விபட்டிருந்தபோதும் படிக்க வாய்க்கவில்லை. புத்தகங்கள் எளிதில் கிடைக்காத காலம். அரசுப் பொது நூலகங்களில் அந்த நாவலைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்களிடமும் கிடைக்கவில்லை. சி.மோகனின் கட்டுரை வெளியான பிறகு தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். அப்போது திருப்பூரிலிருந்த யூமா வாசுகியின் நெருங்கிய நண்பர் அறிவுச்செல்வன், திருப்பூரிலிருந்த வாடகை நூல் நிலையங்கள் அனைத்திலும் தேடி அலைந்தார். இறுதியாக, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்குப் பின்னால் காமாட்சியம்மன் திருமண மண்டபத்துக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய பெட்டிக்கடை நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தார். உடனடியாக உறுப்பினராகி நாவலை கைப்பற்றினோம்.

பரவசத்துடனும் எதிர்பார்ப்புடனும் வாசித்து முடித்தேன். சற்று வேகமாகவும். அப்போதைய வாசிப்பில் யமுனாவின் முதிர்ந்த அழகும் பாபுவின் லயிப்புமே கண்ணில்பட்டது. நாவலின் பிற அடுக்குகளை உணர்ந்துகொள்ள முடிகிற பக்குவம் இருக்கவில்லை. இந்த நாவலை ஏன் தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று கேள்வி எழுந்தது.

இயக்குநர் ஞான.ராஜசேகரன் 1994-ஆம் ஆண்டு நாவலை படமாக்கினார். திருப்பூர் எஸ்.ஏ.பி தியேட்டரில் வெளியானது. கலை இலக்கிய ஆர்வலரும், ‘நியூ லுக்’ திரைப்பட இயக்கத்தின் நிறுவனருமான வி.டி.சுப்ரமணியம் பெரும் விழாவாக அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் திலகவதியும் ஞான ராஜசேகரனும் கலந்துகொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த நாவலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் காதலையும் தவிப்பையும் தாண்டி வைத்தி, ரங்கண்ணா, ராஜம் என்று சில அழுத்தமான சித்திரங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது.

வெகுஆண்டுகள் கழித்து அலுவலகப் பணிநிமித்தமாக 2008-ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு மாற்றலாகிச் சென்றேன். ஊரும் மனிதர்களும் மொழியும் பிடிபட ஓரிரு வாரங்களானது. தெருக்களும் ஊரின் அமைப்பும் பரிச்சயமானது. நாவலின் நினைவைக் கிளறியது. உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற ஆவல். எழுதப்பட்ட களத்திலிருந்து அதன் கதாபாத்திரங்கள் உலவிய மண்ணிலிருந்து நாவலை வாசிப்பது தனி அனுபவம். இந்த முறை வெகு நிதானமாகவே படித்தேன். காந்தி பார்க்கை, ஆனையடியை, துக்காம்பாளையத் தெருவை, கும்பேச்வரன் கோயிலை, கடலங்குடித் தெருவை, மேட்டுத் தெருவை, மகாமகக் குளத்தை நேரடியாகப் பார்த்து நின்றேன். ஐம்பது ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டிருந்தன. கோர்ட்டுக்குப் போகும் வழியில் கல்லூரிக்கு எதிரில் இருந்த பகுதி முற்றிலும் வேறுமாதிரியிருந்தது. முக்கியமாக காவேரி நாவலில் கண்ட காவேரியாக இருக்கவில்லை. நாவல் இப்போது வேறு அனுபவங்களைத் தந்தது. முந்தைய வாசிப்பில் அவ்வளவாய் கவனத்துக்கு வராத சங்கீதம் இப்போதுதான் என் காதில் விழுந்தது. நாவலின் இன்னொரு அடுக்காக அமைந்திருந்த சங்கீதம், நாவலை வேறொரு கோணத்தில் திருப்பிக் காட்டியது. நாவல் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவுபடத் தொடங்கின.


மோகமுள் நாவல் இளைஞர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்த முதல் காரணம் யமுனா. அடுத்த முக்கியமான காரணம் புகழ்பெற்ற அந்தக் கேள்வி ‘இதுக்குத்தானா?’.

காய்ச்சல்கண்ட பாபுவிடம் திருவல்லிக்கேணி அறையில் முதல்கூடலுக்குப் பிறகு யமுனா கேட்கும் ‘இதுக்குத்தானா’ என்ற இந்தக் கேள்வி மோகமுள் நாவலின் இணைத்தலைப்பு போலவே இன்றளவும் கருதப்படுகிறது.

வாழ்வின் நோக்கங்களை லட்சியங்களை ஆசைகளை அடைய கருவியாக அமைந்திருக்கும் உடலே, அதற்கான தடையாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஒருவனின் பலமாக அமையும் உடலின் பலவீனங்களைக் கடக்கும் உரம்கொண்டவனே சாதனைகளை எட்ட முடியும். அன்றாட வாழ்வின் அத்தனை பாடுகளும் உடல்சார்ந்த தேவைகளைத் தீர்க்கும்பொருட்டே அமைகின்றன. உடலின் பொருட்டான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே உணர்வுகள். மனம் அதன் ஊற்று. எண்ணங்களின் ஊற்றான மனத்தைக் கட்டுப்படுத்துவதன் வழியாக, உடலைக் கட்டுப்படுத்துவதும் உடலைக் கடந்துபோவதும் சாத்தியம். இதற்கென மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உபாயங்களே தியானம், இசை, பக்தி, உபாசனை போன்றவை.

‘உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று’ என்று வரையறுக்கும் தி.ஜானகிராமன், அந்த இரட்டைச் சக்கரங்களை சமன்செய்வதில் உள்ள சாகசங்களை நாவல் முழுக்க விவாதிக்கிறார்.

உடலை கையாளும் வலிமைமிக்க உணர்வான காமத்தின் அசைவுகள் அகவயமானவை. அவற்றின் விளைவுகளை வெளிப்படையாக அறிந்துகொள்வது பலசமயங்களில் இயலாதது. யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் காமத்தை எந்தளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது சாத்தியமில்லை. அகத்தில் உறைந்திருக்கும் காமத்தின் புறவெளிப்பாடுகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எனவேதான், காமத்தின் ஊற்றான உடல் சார்ந்த கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகளை தகர்க்கும்படியான நடவடிக்கைகளை அன்றாடம் மனிதன் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அவை அனைத்தும் உலக வாழ்வின் அங்கங்கள். சராசரி மனிதர்கள் அத்தகைய நடவடிக்கைகளை வாழ்வின் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே வாழ்வனுபவமாக அமைகிறது. ஆனால், ஏதேனும் ஒரு துறையில் உச்சபட்ச சாதனையை நிகழ்த்த விழையும் ஒருவன் அத்தகைய வாழ்வனுபவங்களைக் கடந்து, நடவடிக்கைகளைத் தாண்டி, தன்னை முன்னகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

சங்கீதத்தின் உச்சபட்ச உயரத்தைத் தொடவேண்டும் என்ற இலக்கு பாபுவின் முன்னால் நிறுத்தப்படுகிறது. அவன் விரும்பி ஏற்ற இலக்கு அல்ல. அத்தகைய ஆற்றல் தன்னிடம் இருப்பதையே பல சமயங்களில் அவன் உணர்வதில்லை. அதிலிருந்து கவனம் பிசகும் ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒருவர் அவனை நிறுத்தி திசைதிருப்பி இலக்கை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தொடக்கத்தில் அவனது அப்பா வைத்தியும், கல்லூரியில் பயிலும்போது நண்பன் ராஜமும் அதன் பிறகு ரங்கண்ணாவும் சங்கீதத்தை நோக்கி அவனை வழிநடத்துகிறார்கள். கச்சேரி செய்து புகழ் அடையவேண்டும் என்ற தந்தையின் நோக்கத்துக்கு மாறாக வித்தையை அனுபவித்து ஆழ்ந்து அதை மேலும் மெருகேற்றுவதுதான் முக்கியம் என்று சுட்டிக்காட்டும்போது செல்லவேண்டிய திசை என்பது பாபுவுக்கு விளங்குகிறது. மராத்திய பாடகர்களும் சென்னைவாசத்தின்போது பாலூர் ராமுவும் இசையில் தொடமுயல வேண்டிய இடத்தை நோக்கி அவன் சிந்தனையைத் திருப்புகிறார்கள்.  ஒவ்வொரு நிலையிலும் அதன் திக்குத் தெரியாமல் நிற்கும்போது யாரேனும் ஒருவர் அவனுக்கு வழிகாட்ட வேண்டியுள்ளது.

பாபுவின் இத்தகைய மனநிலை உடலையும் வழிமாறச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தனியறை வாசம் தரும் சுதந்திரம் அத்தகைய அபாயங்களையும் கொண்டது. எனவேதான், இளமைப் பருவத்தில் நிற்கும் பாபுவிடம், அப்பா வைத்தி, நண்பன் ராஜம், குரு ரங்கண்ணா மூவரும் சரீரத் தூய்மையைப் பற்றி, கட்டுப்பாடுகளைப் பற்றித் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.

கடவுளைத் தாயாக உபாசிக்கும் சம்பிரதாயத்தில் சித்திகண்டு அருள் பெற்ற ராஜு கற்றுக்கொடுத்த உபாசனையைப் போதிக்கும் முன்பு வைத்தி அவனிடம் சத்தியம் செய்யச் சொல்கிறார். அவருக்கு அவன் உடலின் தேவைகளைக் கடந்து சங்கீதத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஆசை. வயிற்றுவலி அவரது சங்கீத சாத்தியங்களை முடக்கிப்போடுகிறது. எனவே, தன்னால் சாதிக்க முடியாத ஒன்றை தன் மகனின் மூலமாக எட்டிப் பிடிக்க ஆசைப்படுகிறார். ஒரு தந்தையின் இயல்பு. அவ்வாறான லட்சியத்துக்கு, வெளியே தனியாகத் தங்கியிருக்கும் வாலிப வயதிலிருக்கும் மகனை நாசுக்காக எச்சரிக்கிறார். சிறிய அளவு சந்தேகம் முளைக்கும்போதுகூட அதை அவர் சாதாரணமாக விட்டுவிடுவதில்லை என்பதற்கு அவயத்துடனான புத்தக உறவுக்கு முட்டுக்கட்டைப் போடும் விதத்திலிருந்தே உணர்ந்துகொள்ள முடியும்.

ரங்கண்ணாவும் சங்கீதம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கும் முன்பு, சரீரத் தூய்மையைக் குறித்தே அறிவுறுத்துகிறார். ‘பிராணபலம் வேணும். மனோபலம் ஆத்மபலம் எல்லாம் இருக்கணும். எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா அதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும்டா.’, ‘மனசில எத்தனையோ இருக்கும். மற்ற வித்தைகளுக்கெல்லாமாவது போனாப் போறதுங்கலாம். இதுக்கு கன ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப, ஜாக்கிரதையா இரு.’

புல்லுக்கட்டுக்காரியின் சிரிப்பு தனக்கு கவசம்போல ஆகிவிட்டதை சொல்லும் நண்பன் ராஜம் ‘உனக்கு இதெல்லாம் வேண்டாம்’ என்று அறிவுறுத்துகிறான்.

இவர்கள் மூவரும் வலியுறுத்தும் உடல் தூய்மையைப் பேணுவது வாலிப வயதிலிருக்கும் பாபுவுக்கு பெரும் சவால். யோகமும் தியானமும் தந்தை உபதேசித்த உபாசனையும் அவனுக்கு உதவுகின்றன. யமுனாவைப் பற்றிய எண்ணம் அலைக்கழித்தபோதும் இசையின் மீதான ரங்கண்ணாவின் ஈடுபாடு அவனுக்கு சில தெளிவுகளைத் தருகிறது. சந்தர்ப்பவசமாக தங்கம்மா அவனிடம் வந்து சேர்கிறாள். உடலின் ரகசியத்தைக் காட்டித் தருகிறாள். சூழலும் வாய்ப்பும் அவன் தங்கம்மாவிடமே சிக்கிக் கிடந்திருக்கக்கூடிய சாத்தியங்களைத் கொண்டிருந்தன. ஆனால், அந்த விபத்து அவனுக்கு தன்னை அறிந்துகொள்வதற்கும் தனக்குள் இருக்கும் யமுனா யார் என புரிந்துகொள்வதற்குமான வாய்ப்பாக அமைகிறது. அந்த இரவில் நிகழ்ந்த உறவு அவனுக்கு காமத்தின் ஆற்றலை உணர்த்திவிடுகிறது. மனத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி உடல் தன்னிச்சையாக பெண்ணுடலை அறிந்து அதில் லயித்துவிடும் உயிரியல்பையும் புரியச் செய்கிறது. தங்கம்மாவுடனான அந்த இரவை யமுனாவுக்கு இழைத்த துரோகமாகக் கருதும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தனக்கான ஒரு சோதனை எனவும் இதுபோன்று எந்தவொரு பெண்ணுக்கும் இனி இடமளிக்கக்கூடாது என்ற உறுதியையும் ஏற்படுகிறது. உள்கதவு, வெளிக்கதவு அனைத்தையும் மூடி மதிற்சுவர்களை எழுப்பி அதற்குள் தன்னை மறைத்துக்கொள்கிற அவசியத்தை வலியுறுத்துகிறது. காமத்தின் அலைக்கழிப்பிலிருந்து உடலைக் காப்பாற்றினால் மட்டுமே சங்கீதத்தில் நினைத்த உயரத்தை எட்ட முடியும் என்ற தெளிவு பிறக்கிறது.

யமுனாவிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலையில் பாபு இன்னொரு பெண்ணைத் தேடுவதில்லை. யமுனாவையும் மறக்கவே நினைக்கிறான். அதன் பிறகு கும்பகோணத்திலேயே இருந்த போதும், ரங்கண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னைக்கு வந்தபிறகும்கூட இன்னொரு பெண்ணை அவன் கண்ணால் காண்பதுமில்லை, யோசிப்பதுமில்லை.

தந்தையும் நண்பனும் குருவும் வலியுறுத்திய சரீரத் தூய்மையை அவனால் திடமாக பேணமுடிகிறது. அந்த ஒருநாள் அனுபவத்துக்குப் பிறகு மேலும் அவன் இறுகி உறுதியுடன் உடலைக் கட்டுக்குள் இருத்தமுடிகிறது.

ஆனால், அப்படிப்பட்ட உடல் தூய்மை அவனுக்குத் தெளிவைத் தருவதில்லை. வைத்தியால் கற்றுக்கொடுக்கப்பட்டு ரங்கண்ணாவால் புடம்போடப்பட்ட வித்தையைக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய தீர்மானமில்லாமல் சென்னையில் மனசொப்பாத காரியங்களில் ஈடுபட்டு பிழைத்துக் கிடக்கிறான்.

‘இதுக்குத்தானா?’ என்று யமுனா கேட்கும்போது பாபுவுக்கு பதில் சொல்வதற்கான தெளிவில்லை. அவனது இயல்பும் சுபாவமும் அப்படிப்பட்டது. நாவலின் தொடக்கம் முதலே பாபு தெளிவற்ற, குழப்பமான, தடுமாறும் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். இப்போதும் அவனால் எந்த பதிலும் சொல்ல முடிவதில்லை.

உண்மையில் ‘இதுக்குத்தான்’ என்று உரக்கச் சொல்லியிருக்கவேண்டியவன் பாபுதான். யமுனா அல்ல. ‘இதுக்குத்தான்’ என்ற அந்த பதிலை ஏற்கெனவே ரங்கண்ணா அவனுக்கு வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார், வெகு காலத்துக்கு முன்பே. பாபுவுக்கு அந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வரவில்லை.

பாபுவுக்கு பெண்ணுடலும், அது தரும் சுகமும் புதிதில்லை. தங்கம்மாள் அவனுக்கு அந்த அனுபவத்தைத் தந்துவிட்டாள். அந்த அனுபவம் யமுனாவைத் தவிர இன்னொருத்தியை நினைக்கமுடியாது என்ற தெளிவையும் உறுதியையும் தருகிறது. ‘எல்லையற்ற பேரழகுமிக்க அந்த உடல் எதற்காக? உண்மையாகவே இவள் தொடக் கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச் சுரங்கமான இந்தப் புற அழகிற்குப் பலனே கிடையாதா?’ என்ற கவலையும் காதலும்தான் அவளுக்காகக் காத்திருக்கச் செய்கிறது. தங்கம்மாள் தொட்ட தன் உடலை அதன் பின் எட்டு வருடம் அவனால் பாதுகாத்து வைத்திருக்க முடிகிறது. ஜாதியாலும் வயதாலும் அடக்கப்பட்ட இந்த உணர்வுகள்தான் யமுனாவை வஞ்சிக்கின்றன. அதிலிருந்து அவளை மீட்கவேண்டும் என்பதுதான் அவன் விருப்பம். அந்த விருப்பம்தான் ‘எட்டு வருஷமாக, பத்து வருஷமாக அவனைப் பீடித்திருக்கும் ஜுரம்.’

உயிரின் ஆதார விசை தரும் அனுபவம் காமம். கடக்கும் வரையிலும் அதன் ஆழம் தெரியாது. கடந்தபின்பு இவ்வளவுதானா என்றோ இதற்குத்தானா என்றோ கேட்க முடியும். யமுனாவின் உடலை தான் அடைந்ததன் மூலம் அப்படியொரு அனுபவத்தை அவளைப் பெறச் செய்த மேன்மையை அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை.

‘சன்னாசிமாதிரி என்னத்துக்காக இருக்கணும்? யாருக்காக இருக்கணும்? எல்லாம் இதுக்குத்தான்’ என்று அவர் தொண்டையை இடதுகை கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் தொட்டுக் காண்பிக்கிறார் ரங்கண்ணா. சங்கீதத்துக்காக உடலைக் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்வது முக்கியம் என்ற பொருளில் அவர் ‘இதுக்குத்தான்’ என்று வலியுறுத்திச் சொன்னதையே யமுனாவுக்கும் பாபுவால் பதில்சொல்லியிருக்க முடியும். சங்கீதத்துக்காக மட்டும் அவன் தன் உடலை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவில்லை, யமுனாவுக்காகவும் தான் என்பதை தெளிவுடன் வெளிப்படுத்த அவனுக்குத் தெரியவில்லை.

யமுனாவுக்கு எதிலும் ஆர்வமோ ஆசையோ இல்லை என்று சொன்னபோதும் ‘நான் உன் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டேன் இல்லையா?’ என்ற சந்தேகம் இருந்தபோதும், ‘நீதான் எனக்கு வேணும்’ என்று மீண்டும் உறுதிபடச் சொல்கிற தெளிவு இருந்தவனுக்கு, ‘இதுக்குத்தானா’ என்ற கேள்விக்கு உரிய பதிலை வெளிப்படுத்தத் தெரியவில்லை.  உண்மையில், அந்த அனுபவம் இருவருக்கும் நிறைவைத் தராத ஒன்றாகவே அமைகிறது. அவளைத் தழுவும்போது ‘உயிரற்றப் பதுமையைக் கொஞ்சுவதுபோலத்தான் இருந்தது.’ அந்த அனுபவத்தைப் பற்றி யமுனா எழுதுகிறாள் ‘வெடித்துப்போன பலூன் ரப்பரைப் பொறுக்கி மறுபடியும் கழுத்து உப்ப குழந்தை காற்றை நிரப்பி விளையாடுகிறதே, அதுமாதிரி.’ காலம் கடந்துபோன மனவெறுமையும் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கும்படியான சூழலும் சேர்ந்து இருவரையும் அவ்வாறான ஒரு தடுமாற்றத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் எழுந்த கேள்வி அது. எனவே, பாபு தெளிவில்லாமல் நின்றிருப்பது இயல்புதான்.

வெகு நாட்களுக்கு முன் ரங்கண்ணா தன் குரல்வளையைத் தொட்டுக்காட்டி ‘இதுக்குத்தான்’ என்று உறுதிபடச் சொன்னதையே இப்போதும் ‘இதுக்குத்தான்’ என்று பாபு யமுனாவிடம் உரக்கச் சொல்லியிருக்கமுடியும். நாவலின் இறுதியில் யமுனா எழுப்பும் கேள்விக்கான பதிலை, தி.ஜானகிராமன் ரங்கண்ணாவின் குரலில் இடையிலேயேச் சொல்லிவிட்டார்.


ழுதப்பட்டு அறுபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் ‘மோக முள்’ தன் வசீகரத்தையும் முக்கியத்துவத்தையும் இன்னும் இழக்காமலிருப்பதன் ரகசியத்தையும் தமிழின் முக்கியமான நாவல்களின் வரிசையில் அது தொடர்ந்து இடம் பிடித்திருப்பதற்கான காரணத்தையும் கண்டுணரத் தலைப்படும்போது தி.ஜானகிராமன் எனும் கலைஞனின் வியக்கவைக்கும் ஆளுமையே நம் முன்னால் கம்பீரம் கொள்கிறது.

தி.ஜா. ஒரு நாவலாசிரியராக உருவாக்கியிருக்கும் நுட்பமான பல புனைவுத் தருணங்கள் நாவலின் மேன்மையை உறுதிப்படுத்தியபடியே உள்ளன. ஒரு கோணத்தில் கட்டற்றதுபோலத் தோற்றம் தரும் நாவல் உண்மையில் அவ்வாறில்லை. ஒவ்வொரு அத்தியாயமும் அதன் சம்பவங்களும் மிக நேர்த்தியான வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் மனத் தடுமாற்றங்களையும் தெளிவுகளையும் கதைப்போக்கு மிகக் கச்சிதமாக கவனத்தில் கொண்டிருக்கிறது.

மகத்தான நாவல்கள் அபாரமான முதல்வரியுடனேயே தொடங்குகின்றன. மோக முள் நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே நாவலின் எல்லா திசைகளையும் போக்கையும் சுட்டக்கூடிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயத்தில் வருகிற பெட்டிக்கடை ஆறுமுகம் நாவலின் போக்கைச் சுட்டும் ஒரு கதாபாத்திரம். பாபுவுக்குள் தத்தளிப்பும் குழப்பமும் அங்கிருந்தேத் தொடங்குகின்றன.

‘இவர் மாத்திரம் சங்கீதம் சொல்லிக்கட்டும். இன்னிக்கு காக்கா ஒண்ணோட ஒண்ணு மூக்கைக் குழறுமே அந்தமாதிரி கால் கட்டையிலே நோண்டிண்டு சங்கீத வித்வான்னு தடாலடி அடிக்கிறானே, அவனெல்லாரையும் போற இடம் தெரியாம பண்ணிவிடுவார்” என்ற அவர் வாக்கு நாவலின் இறுதிவரையிலும் வெவ்வேறு குரல்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அதே இடத்தில் அப்பா வைத்தியைப் பற்றிய சாஸ்திரிகளின் பிரமாதமாக புகழ்ந்து பேசுவது தந்தையைப் பற்றிய எண்ணத்தை அவரது விருப்பத்தைப் பற்றி யோசிக்கச் செய்கிறது.

ராஜத்துக்காக காந்தி பூங்காவில் காத்திருக்கும்போது வீணை இசை கேட்கிறது. அதில் லயித்து அமர்ந்திருக்கும் பாபு சொல்கிறான் ‘ஒரு ராகத்துக்கு சொந்தமா ஒரு அழகு, ஒரு தனித்தன்மை இருக்கு’ என்றும் ‘பாடாமலேயே இருக்கலாம். மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்’ என்றும் குறிப்பிடுவதை ராகத்துக்கான அவனுடைய எண்ணம் என்பதைத் தாண்டி யமுனாவைப் பற்றிய உள்ளக்கிடக்கை என்பதும் அதில் மறைந்திருக்கிறது.

கும்பேஸ்வரன் கோயிலுக்குப் போகும் பாபு மங்களாம்பிகாவை தரிசிக்க தாமதமாகும் என்றதும் துக்காம்பாளையத் தெருவுக்குச் செல்கிறான். பதினான்கு வருடங்களுக்குப் பிறகு உள்ளத்தில் வைத்து வழிபடும் யமுனாவைப் பார்க்கிறான்.

நாவலின் மையம் அல்லது மோதல் இங்கிருந்தே உருக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. சங்கீதத்தில் மிக உயரமான இடத்தை அடைவதற்கான திறமை பெற்ற பாபு, சரீரத் தூய்மையைப் பேணி வித்தையில் சாதனையைத் தொடவேண்டும் என்று வலியுறுத்தும் வைத்தி, ராஜம், ரங்கண்ணா ஆகிய மூவர், யமுனாவின் மீதான வழிபாட்டுணர்வும் காமமும் கலந்த உணர்வுநிலை என்ற தெளிவான ஒரு வரைபடத்தை தி.ஜா. உருவாக்கிவிடுகிறார்.


மோகமுள் நாவலில் யமுனாவின் மீதான பாபுவின் உணர்வுநிலைகள் படிப்படியாக அவனுள் திரண்டு உறுதிபெறும் அபாரமான சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்கும் விதமே தி.ஜா.-வின் கலை மேதமைக்குச் சான்று. அதுவே காலங்கள் கடந்தும் நாவல் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான அடிப்படைக் காரணம்.

பதினான்கு வருடங்களுக்குப் பிறகு பாபு யமுனாவை கும்பகோணத்தில் முதன்முதலாக சந்திப்பது முதல் சந்தர்ப்பம்.

பூங்காவிலிருந்து மங்களாம்பிகா கோயிலுக்குச் செல்லும் பாபு தரிசனத்துக்குத் தாமதமாகும் என்று தெரிந்ததும் அவன் துக்காம்பாளையத் தெருவுக்குச் சென்று, பதினான்கு வருடத்துக்குப் பிறகு யமுனாவைச் சந்திக்கிறான். அங்கிருந்து கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்போதுதான் அவனுக்குத் தெரிகிறது, ராஜம் சுலோச்சனாவை நெஞ்சில் வைத்துப் பூஜிப்பதுபோல யமுனாவை தான் மனத்துள் நிறுத்தி வணங்குகிறோம் என்று.

இந்த உணர்வு மேலோங்கி வளர்ந்து பிரார்த்தனை செய்வதற்கு கண்ணை மூடும்போதெல்லாம் அவள் வடிவமே மனத்துள் எழும் அளவுக்கு அவள் மீதான வழிபாட்டுணர்வு தீவிரம் அடைகிறது. அவளுடைய உயர்ந்த பாதங்கள் இதயத்தில் மென்மையாக அடியெடுத்து வந்தமைகின்றன. அவளை நிற்கவைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும் போலிருந்தது. விஜயதசமியன்று அப்பாவிடம் உபாசனையை கேட்டபின் பெண்களை விழுந்து வணங்குகிறான். அப்போது இன்னும் ஒருவரை வணங்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மார்பிற்குள் நீண்டு கூம்பிய நகங்களும் குவியும் விரல்களுமாக இரண்டு பாதங்கள் அடியெடுத்து வைக்கின்றன.

இது வரையிலும் அவளது உடலழகு அவனை ஈரக்கவில்லை. வியப்பையேத் தருகிறது. பாபுவின் இளமை யமுனாவின் உடலின்மீது முதன்முதலாக படநேர்ந்து இதுவரையிலான வழிபாட்டுணர்வில் தடுமாற்றம் ஏற்படும் தருணம் நாவலின் இரண்டாவது முக்கிய சந்தர்ப்பம்.

அப்பா சுப்ரமணிய அய்யரின் மரணச் செய்தி கேட்டு காரில் ஊருக்கு அழைத்துச் செல்லும்போது யமுனாவின் அருகில் உட்கார நேர்கிறது. ‘அழும்போதுகூட இவர்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்று எண்ணுகிறான். ஆனால் அவள்மீது படும்போது அவன் எண்ணம் தடுமாறுகிறது. ‘மனம் கூசிக் குறுகிற்ற. உடல் லேசாக நடுங்கிற்று. அபசாரம் போல தேகம் குன்றிற்று. ஹிருதயத்தில் அவள் முகம் பூஜையைப் பெற்றுக் கொண்டு நிறைந்திருக்கிறது. இவள் சாதாரண ஸ்தீரி அல்ல. மனிதர்களிடத்தில் இல்லாத ஒரு தன்மை இவள் உடலிலும் பேச்சிலும் எண்ணத்திலும் இருந்துகொண்டேதானிருக்கிறது. இவள் மேலே படும்போது ஏதோ தவறிழைப்பது மாதிரி உள்ளம் வெட்டிச் சிலுப்புகிறது.’

அவள் மீது படுவதே தவறு செய்வது என்கிற அளவுக்கு பின்வாங்கிய உள்ளம், ஊரிலிருந்து திரும்பும்போது எதிர்திசையில் முரண்டு நிற்கிறது. இத்தனைக்கும் அவள் இப்போது அவன் அருகில் இல்லை. நடுவில் பார்வதி பாய் அமர்ந்திருக்கிறாள். நடுவில் பார்வதிபாய் உட்கார்ந்திருக்க ஒருபுறம் யமுனாவும் மறுபுறம் பாபுவும். இப்போது அவன் எண்ணம் வேறுவிதமாக நகர்கிறது. இருவரும் இப்போது அவன் பார்வையில் பெண்கள். அழகான பெண்கள் என்ற எண்ணம் சொற்பநேரத்துக்கு நெஞ்சில் எழுந்து மறைகிறது. மனித மனத்தின் ஆழத்துள் சென்று அங்கிருக்கும் இயல்பான மானுட உணர்வுகளை மேலிழுத்துக் காட்டுகிற தி.ஜாவின் மேதமை இங்கே வியப்பைத் தருகிறது.

பாபுவின் மனவோட்டத்தை தி.ஜா வெளிப்படுத்தும் விதம் அபாரமானது. அருகிலிருப்பவர்களைப் பார்க்கிறான். ‘வாழைக்குருத்துபோல – பறித்து இரண்டு நாளான – அவள் உடல் பக்கத்தில் பொலிந்துகொண்டிருந்தது. அப்பால் இருந்தது புதிய குருத்தாகப் பளபளத்தது.

யமுனாவின் முகத்தையும் கண்ணையும் வனப்பையும் பார்த்தான் பாபு. இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுக முடியாத, தொட முடியாத ஒரு முழுமை, பொலிவு, சந்தனக்கட்டையின் வழவழப்பு, வர்ணம். நீண்ட விரல்கள், நீண்ட கைகள், நீண்ட பாதம்.

உண்மையாகவே இவள் தொடக் கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச் சுரங்கமான இந்தப் புறஅழகிற்குப் பலனே கிடையாதா?

இவளும் ஒரு கணத்தில், ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும். தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள்-ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத்தானே வேண்டும். (243)

மனத்தின் விசித்திரமான இந்தப் போக்கை எண்ணி பாபுவே வெட்கப்படுகிறான்.

பாபு சரேலென்று உலுப்பிக் கொண்டான்.

சை- என்ன அசட்டுக் கற்பனை. நியாயமற்ற கற்பனை. விழித்துக் கொண்டிருக்கும்போதே நம்மை ஏமாற்றி எப்படி இந்த அசட்டுத்தனத்தில் குதித்துத் திளைத்தது மனம். அடங்காதப் பிடாரி.

மனதினாலேயே அவள் கால்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். இதயத்தில் அவற்றை எடுத்து வைத்த மனசிலேயே தலைவணங்கினான்.

இதுவரையிலும் வணங்கத்தகுந்த ஒருத்தியாக நினைத்திருந்த பாபுவின் மனத்தில், அதுவும் தந்தையை இழந்து திரும்பும் இப்படியொரு துயரகரமான சந்தர்ப்பத்தில், இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவந்தது எது?

இருவருக்கும் இருந்த ஒரே ஆதரவான சுப்ரமணிய அய்யர் இப்போது இல்லை, சுந்தரமும் இனி அவர்களுக்கு உதவப் போவதில்லை என்பது பாபுவுக்குத் தெளிவாகப் புலப்பட்டுவிட்ட சமயம் இது. இந்த வேளையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான்தான், தன்னால் மட்டுமே அவர்களுக்கு உதவமுடியும் என்ற நிலையில் அவனது மனத்துக்குள் இப்படியொரு எண்ணம் சட்டென்று மேலெழுகிறது. உடனடியாக மறைகிறது என்றாலும் அந்த எண்ணம் யமுனாவின் மீதான இதுவரையிலுமான அவனது பார்வையை அணுகுமுறையை மாற்றுவதற்கான தொடக்கமாக அமைந்துபோகிறது.  

மூன்றாவது முக்கியமான சந்தர்ப்பம், யமுனாவின் மீதான வழிபாட்டுணர்வு மெல்ல விலகி, அழகிய உடலாக அவளைக் காணும் பாபு தன் விருப்பத்தை அவளிடம் வெளிப்படுத்தும் இடம்.

யமுனாவின் அப்பா இறந்துபோய் ஒருமாதம்தான் ஆகியிருக்கிறது. ரங்கண்ணாவிடம் பாடம் சொல்லத் தொடங்கி சிலநாட்கள்தான் ஆகியுள்ளன. பெரியப்பா மகன் சங்கு திடீரென கும்பகோணம் வருகிறான். பாபுவின் அப்பாவையும் யமுனாவையும் பாட்டப்பா சேர்த்துப் பேசுவதைக் குறித்து ஆவேசத்துடன் சொல்கிறான். அவனை ஊருக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பும் இரவில் தங்கம்மா அறைக்குள் வந்து அவனை ஆட்கொள்கிறாள்.

ஆதரவற்ற பார்வதியையும் யமுனாவையும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணம், யமுனாவின் மீது விழத்தொடங்கும் பழி நிழல்கள், தங்கம்மாவின் தயவால் கண்டுகொள்ளும் தன்ணுணர்வு என்று எல்லா அழுத்தங்களும் சேர்ந்து அவனை நெருக்கி இதுவரையிலும் மனத்துள் பொத்திவைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்தச் செய்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ராஜத்திடமும் அப்போதே சொல்லிவிடுகிறான்.

இந்த அழுத்தங்களின் காரணமாக அவளிடம் தன் மனதை வெளிப்படுத்தும் துணிச்சல் எப்படி வந்தது என்பதை யமுனாவே வெளிப்படுத்துகிறாள். தங்கம்மாவிடம் தன்னை இழந்த நாளன்று மாலையில் ‘உனக்கு நான் துரோகம் செய்துவிட்ட’ தாய் சொல்லும் போது, யமுனா கேட்கிறாள் ‘இப்படியெல்லாம் எங்கிட்ட பேச எப்படித் துணிஞ்சது உனக்கு?’.

இதுவரையிலும் ஆதரவாய் இருந்து வந்த அப்பா சுப்ரமணிய அய்யர் இப்போது இல்லை என்ற எண்ணம் தரும் துணிச்சல்தான் பாபுவை அப்படிப் பேசச் செய்திருக்கிறது என்பதை அவள் உணரவில்லை. அதற்கு முன்பே அப்படியொரு எண்ணம் இருப்பதாகச் சொன்னாலும், அதை வெளிப்படுத்தும் துணிச்சல் இந்த சந்தர்ப்பத்தில்தான் பிறக்கிறது.

சிறப்பான விதத்தில் உருவாக்கப்பட்ட நான்காவது சந்தர்ப்பம், நாவலின் இறுதியில் பாபுவின் மனத்தில் இருந்த வழிபாட்டுணர்வு காமமாகிக் கொதிக்கிற தருணம்.

மருத்துவரிடம் போய்விட்டு ரிக்க்ஷாவில் வீடு திரும்புகிறார்கள். அகலமாக இல்லாத ரிக்க்ஷா இருவரையும் நன்றாக நெருக்கியிருக்கிறது. எதற்காக நெருக்கியிருக்கிறது? இந்த ஸ்பரிசத்தில் உடல் மட்டும் இல்லை, வேறொன்றும் இருக்கிறது என்று காண்பிக்கவா? அவளை அழைத்துக்கொண்டு நந்தமங்கலத்திற்குக் காரில் போனபோதும் இப்படித்தானே போனாம். ஆனால் அப்போது நாம் நினைத்த விண் மட்டும் இல்லை, மண்ணும் இங்கு இருக்கிறது என்று அவன் உடல் ஒரு அச்சத்தையும் துணிவையும் கொடுத்தது. அதே நெருக்கம் இப்போது ஏன் இந்த எண்ணங்களை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது?

இடம் மாற்றிப் போன நெருக்கம் அன்றிரவு உறவாகப் பரிணமிக்கிறது. இதுவரையிலும் அழுந்திக் கிடந்த முடிச்சு அவிழ்கிறது. கடந்த சில நாட்களாக பாலூர் ராமுவுடனான உரையாடல்களின் வழியாக உள்ளுக்குள் உருப்பெற்ற எண்ணம் மேலெழுகிறது. மங்கள்வாடிக்குச் சென்று சிட்சை பெறலாம் என்ற எண்ணம் தீவிரமடைகிறது. ‘சரீரத்தைக் காப்பாற்றி சங்கீதத்தை வளர்த்தார்கள் என்று சொன்னாய். உடம்பே, பாட்டாக, நாதமாகிவிடவேண்டும்’ என்று யமுனா சொல்கிறாள்.

தொடர்கதை வடிவில் எழுதப்பட்டிருந்தபோதும் அபாரமான இத்தகைய சந்தர்ப்பங்களில் உருப்பெறும் மோதல்களின் வழியாக நாவலை திரண்டெழச் செய்திருப்பது தி.ஜானகிராமனின் கலை மனத்தின் உச்சமே. 


முதல் வாசிப்பிலும் முதிராப் பருவத்திலும் யமுனாவை ஒரு முதிர்கன்னியாக, அழகியாக, தேவதையாக மட்டுமே மனம் அறிந்திருந்தது. ஆனால், தொடர்ச்சியான வாசிப்புகளுக்குப் பிறகு, தமிழ் நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண் கதாபாத்திரங்களில் யமுனா தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பதன் காரணத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது.

யமுனா, உள்ளபடியே பிடிவாதக்காரி. கர்வமிக்கவள். எதற்கும் பணியாதவள். மராட்டிய ராஜவம்சத்தின் கம்பீரம் இயல்பிலேயே அவளது உடலிலும் பார்வையிலும் தோற்றத்திலும் அமைந்து விடுகிறது. அவள் தனக்குத்தானே அரசியாக இருக்கப் பிறந்தவள். அவள் உடலுக்குள் கிடக்கும் உள்ளத்தில் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அறிவும் கனவுகளும் மண்டி அழகின் துடிப்புடன் விரிந்த பிரபஞ்சம் அது. ஆனால், அவளது அழகில் தோல்வி அவளைச் சுற்றி இருளாகக் கவிந்திருக்கிறது. அழகும் இங்கிதமும் நிறைந்த அவள் பாழுங்கிணற்றில் சுவரின் இடுக்கில் பூத்த பூவாகவே இருக்கிறாள். சாதித் தூய்மை அவளை வஞ்சிக்கிறது. அவள் இளமையை உறிஞ்சும் காலத்துக்கு முன் அவளது அழகு நிர்கதியாக நிற்கிறது. மனத்துள் எழுந்த ஆசைகளையும் கனவுகளையும் ராவும் பகலுமாகத் தவித்து நசுக்குகிறாள். மீண்டும் மீண்டும் தலையெடுத்து ஆடுவதைப் பிடித்து நசுக்கிக் காலில் மிதித்துத் தேய்த்துவிடுகிறாள். ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும்போதும் அது தோல்வியில் முடியும்போதும் அவள் வெறித்திருப்பது சூனியத்தையே.

இத்தகைய குணாம்சத்தை கொண்டிருக்கும் யமுனாவை கோயில் யானையின் அருகில் நிறுத்திக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

யமுனாவின் அழகு அவளுக்கு உதவவில்லை எனும்போது தன் பலம் அறியாது சங்கிலியில் கட்டுண்ட யானையாக அவளைக் காண்கிறான் பாபு. யமுனாவின் அழகு அம்மாவுக்கு அடிபணிந்து சுயசாதிக்கு நடுங்கி ஒடுங்கிக் குமைவதற்குத்தானே ஆயிற்று என்ற ஆற்றாமை பெருகிறது. இந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு அவள் ஏன் இஷ்டமான பாதையில் அடிபோடவில்லை? என்று கோபம்கொள்கிறான்.

பார்வதி பாய், யமுனா இருவரையுமே பரம்பரை கௌரவத்தின் சுமை அழுத்துகிறது. சுப்ரமணி அய்யர் இறந்த பிறகு நெல் வருவதில்லை. ஆதரவு கிடையாது. அந்த நிலையிலும் நகைகளை விற்றுச் சாப்பிடத் துணிகிறார்களேயன்றி எந்த வேலையையும் செய்யத் தோன்றுவதில்லை அவர்களுக்கு. நீலுப் பாட்டியை ஒரு எருமை மாட்டை வைத்து பால் விற்று வாழ்க்கையைத் தள்ளுவதைப் பற்றிய யோசனையே எழுவதில்லை. யமுனாவின் அண்ணன் சுந்தரம் சொல்வதுபோல பெரிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு சிறிய வீட்டுக்குச் செல்லமுடியாமல் கௌரவம் அவர்களைத் தடுக்கிறது. ராஜ வம்சத்தின் ரத்தம் அவர்களுக்கு செல்வாக்கை அதிகாரத்தை கௌரவத்தை இழக்க ஒப்புக்கொள்வதில்லை.

பார்வதி பாயின் சகோதரியின் வைத்திய செலவுக்காக இழக்கும்போதும்கூட அதே வீட்டில் வாடகைக் கொடுத்தே வாழ்கிறார்கள். பசி இருவரையும் பிரிக்கிறது. அம்மா ஒரு வீட்டிலும் யமுனா இன்னொரு வீட்டிலுமாக காலம் கழிகிறது. இறுதியல் பசி யமுனாவை சென்னைக்கு விரட்டுகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு ஒவ்வொன்றாக இழக்கநேரும்போதுகூட அவள் கௌரவத்தை மானத்தை இழக்கத் தயாராக இல்லை. கங்காதரம் பிள்ளையின் ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளாதபோது, இயலாமையின் சுமை தாங்காத பார்வதிபாய்க்கும் அவளுக்கும் இடையில் மனத்தாங்கல் எழுகிறது.

வறுமையிலும் தன் சுயமரியாதையை இழக்காத உறுதிகொண்ட யமுனாவின் இந்தத் தோற்றத்தை தி.ஜானகிராமன் காவேரியோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். ‘மின்சார ஒளியின் நெடுவீச்சில் வேகமாக பெருகியோடும் காவேரியைப் பார்க்கும்போதும் அவன் அவளையே நினைக்கிறான். ஓட்டத்திலும் விரைவிலும்கூட ஒரு தனி அடக்கமும் அமைதியும் நிறைந்து நிற்கின்றன. இந்தக் காவேரிக்கு ஒரு மனித உருக் கொடுப்பதென்றால்… யமுனாவின் உயர்ந்த உருவமே ஞாபகத்துக்கு வருகிறது. காவேரியின் எழிலும் வளர்ப்பும் பெரிய மனித இயல்பும் பெருவாழ்வும் திரண்டு நின்ற பெண் வடிவம் அது’ என்று பாபு யோசிக்கும்போது ஒட்டுமொத்த யமுனாவின் வாழ்வும், காவிரி வெள்ளமாகி புரண்டோடுவதை உணர முடிகிறது.

இறுதியில், பாபுவிடம் அவள் பணிவதுகூட நன்றியுணர்வின் காரணமாகவே, காதலினால் அல்ல. இளமையில் கிடைக்காத ஒன்று நாற்பது வயதில் உடல் வாடிய நிலையில் கிடைக்கும்போது அவளால் அதை ரசிக்க முடிவதில்லை. பரவசப்பட முடிவதில்லை. உடைந்துபோன பலூனை ஊதும் குழந்தையின் நிலை என்றே சொல்கிறாள். ஆனால் பண்புள்ளவள். தன் துயரத்தை தானே சுமக்கிறாள். ‘சிலுவை உடல்’ என்று சித்தரிப்பது சாலப் பொருத்தம். தி.ஜானகிராமன் நாவலின் வெவ்வேறு இடங்களில் ஜாதிப்பூவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை ஒவ்வொன்றும் யமுனாவின் குணாம்சத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

பூஜைமணம் கொண்ட ஜாதிமல்லி அவள் என்ற எண்ணம். அம்மா அரும்பு அரும்பாக இரவில் தொடுத்து பூஜையறையில் படங்களுக்கெல்லாம் போட்டிருப்பாள். காலையில் அலமாரியைத் திறக்கும்போது குப்பென்று அந்த மணம் சற்று உஷ்ணமாக வீசும். உள்ளே பட்டாபிஷேகத்தில் அமர்ந்த ராமனும் சீதையும் காமாட்சியும் விடும் மூச்சைப்போல – தெய்வீக மணம். இந்தப் பூவை மனிதர்கள் எப்படி மனதோடு சூட்டிக்கொள்கிறார்கள்? தெய்வத்துக்குரிய மணத்தை எப்படித் தலையில் தரிக்கத் துணிகிறார்கள்.

அதே ஜாதிப்பூவைத்தான் தங்கம்மா சூடி வந்து அவனை வீழ்த்துகிறாள். அப்போது ஜாதிப்பூ மனிதத் தலையில்தான் கமழ்ந்தது. உதிர்ந்து கிடக்கும் ஜாதிப்பூவைக் காலால் தள்ளி எடுத்து வீசி எறிகிறான்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் யமுனாவை வாடிய கோலத்தில் கண்டதைக் குறித்து ராஜத்துக்கு எழுதுகிறான். ‘அவள் வாடித்தான் போய்விட்டாள். ஆனால் தலையில் வைத்து வைத்து, உடல் சூடு பட்டு வாடிய வாடல் இல்லை. பூஜை அறையிலிருந்து உதிர்ந்த நிர்மால்யம். மறுநாள் காலை பூஜை அலமாரியைத் திறக்கும்போது உதிரும் வாடல், விளக்குமாற்றாலோ காலாலோ தொட்டுவிட முடியாது.’

நாவல் விரிந்துசெல்லும் ஒவ்வொரு தருணத்திலும் யமுனாவைப் பொருத்திப் பார்த்துவிட முடிகிற அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளார் தி.ஜா. யமுனாவைப் பற்றிய விவரணைகளும் ஒப்புமைகளும் வாசக மனத்துள் வரைந்து காட்டும் பெண்ணுருவம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறானது என்றபோதிலும் அவற்றின் குணாம்சங்களில் வேறுபாடுகள் கிடையாது. காலங்கள் தாண்டியும் இன்னும் தன்னை அதே கம்பீரத்துடனும் மேன்மையுடனும் நிறுத்திக்கொள்ளும்படியான இயல்புகளை யமுனாவிடம் சேர்த்திருப்பதன் காரணமாகவே நாவலும் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்கிறது.


நாவல் இன்றளவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் தி.ஜானகிராமன் உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள். சங்கீதம் கற்றுக்கொள்ள ரங்கண்ணாவிடம் செல்லும்போது அவர் சொல்கிறார் ‘சில்பத்திலே ஞானம்னா மனசில நினைக்கிறதைக் கல்லிலே காண்பிக்கணும்.’

தி.ஜானகிராமன் நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் மனத்தில் கண்டது போலவே சொற்களின் வழியாக எழுத்தில் காட்டியிருக்கிறார். நாவலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிர்ப்புடனும் நினைவில் பதியும் வகையிலான குணாம்சங்களுடனும் வனைந்திருக்கிறார் தி.ஜா. மையக் கதாபாத்திரங்களை செதுக்கிக் காட்ட எடுத்துக்கொண்ட அதே கவனத்துடனும் அக்கறையுடனுமே ஒரேயொரு காட்சியில் வந்து மறையும் சிறு கதாபாத்திரத்திரத்தையும் வடித்துக் காட்டியிருக்கிறார்.

பதின்பருவத்தின் தவிப்புகளையும் தடுமாற்றங்களையும் கொண்ட பாபு உண்மையில் நாவலின் முக்கிய கதாபாத்திரமாக இருந்தபோதும் மங்கலான தோற்றத்துடனே அமைந்திருக்கிறது. நாவலின் பிற மையக் கதாபாத்திரங்களான யமுனா, ரங்கண்ணா, வைத்தி, ராஜம் போன்றவற்றின் வெளிச்சத்திலேயே இருக்க நேர்ந்ததால் அவற்றின் ஒளி பாபுவின் மீதும் சற்றே கூடுதலாக விழுந்திருக்கிறது என்றே யோசிக்க முடிகிறது.

நாவலெங்கிலும் காணக்கிடைக்கும் யமுனாவைக் குறித்த அபாரமான சித்தரிப்புகள் அவளை நம் மனத்தில் உயிரோவியமாக பதியச்செய்வதில் நமக்கு எந்த ஆச்சரியமும் தோன்ற வாய்ப்பில்லை. ஆனால், நாவலின் ஒரே ஒரு காட்சியில், தெருவோரமாய் சத்திரத்தில் ஈரம் சொட்டச் சொட்ட கையில் ஒரு டம்ளருடன் ஒதுங்கி நிற்கும் தையுப் பாட்டியை, ‘ஆறும் முழுக்கும்தான் அதுக்கு ஆறுதல்’ என்ற ஒருசில வரிகளிலேயே ஜீவனுடன் நம் கண்முன் நின்று ஒதுங்குகிறார்.

முதல் அத்தியாயத்தில் யமுனாவின் வீட்டுக்கு பாபு வரும் சந்தர்ப்பத்தில் வெகு இயல்பாக அமைந்துள்ள உரையாடலில் ‘பெரிய கடிகாரம் எங்கே?’ என்று பாபு கேட்க ‘யமுனா அண்ணன் வேணும்னு சொல்லிச்சாம். போன மாசம் இவங்க அப்பாதான் எடுத்துகிட்டுப் போனாங்க’ என்று பதில் சொல்கிறாள் பார்வதிபாய். அதுவரையிலும் நாவலுக்குள் வராத யமுனாவின் அண்ணன் சுந்தரத்தையும் அவனது மனப்போக்கையும் துல்லியமாகக் காட்டிவிடுகிறார் தி.ஜா. அதை உறுதிப்படுத்தும்விதமாக அப்பாவின் சாவுக்குப் போகும்போது இன்னொரு வாக்கியம் ‘பேச்சும் செயலும் அப்பாவைக் கொண்டு அடக்கம் செய்துவிட்டு வந்ததைவிட இடத்தை அடைத்துக் கொண்டிருந்த ஏதோ பழைய சாமானை விற்றுவிட்டது போலவே இருந்தன.’

‘பாக்குவெட்டியிலே வக்கறமாதிரி வச்சண்டிருக்கேன்’ என்று பெரியப்பா பெருமைப்படுகிற, ‘இடுப்பில் நீராவிமாதிரி மல்வேஷ்டி’ கட்டியிருக்கும் சங்கு, பாபுவிடம் புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்லும் ‘அட்டைக்கரி இல்லையென்றாலும் கறுப்பு’ அவயம், ராஜம் நெஞ்சில் வைத்து பூஜிக்கும் சுலோசனா, ‘நெற்றியில் ஒன்றுமில்லாமல் காலில் உருட்டில்லாமல் கை கழுத்தில் ஒன்றுமில்லாமல் ஒரு வெள்ளை ரவிக்கை, கறை தலைப்பில்லாத ஒரு பச்சைப்புடவை’ கட்டிய அக்கா விஜயம், ‘எலுமிச்சை நிறமும், முக்கோணம் வாய்ந்த முகம்’ கொண்ட, படிப்பு வராத ஆனால் வீட்டுக் காரியங்களை நாற்பது வயது அனுபவத்துடன் செய்யும்’ அக்கா மகள் பட்டு, ‘சாமி, மளைக்கின்னு ஒதுங்கினா, இப்படிச் செய்யலாமான்னு’ சிரிக்கும் புல்லுக்கட்டுக்காரி, ‘கட்டையாக தூண் மொத்தத்திற்கு சாரீரம்’ கொண்ட சாம்பன், ஷண்முகம், ‘கிழவி ஒல்லி. பொல்லென்று வெளுத்த தலை. துவாரத்திலிருந்து விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்துகிற பெரிய சிவப்புக் கல் ஓலை. காலிலும் முகத்திலும் மஞ்சள் தேய்த்துக் குளித்த பசுமை படர்ந்த’ ரங்கண்ணாவின் மனைவி, சென்னையில் உடன் பணிபுரியும் சித்திரக்காரர், வீட்டுச் சொந்தக்காரர், ‘உபசாரம் செய்வதில் கைதேர்ந்தவள். அவளுக்கு ஒன்றும் மனது கடிசல் இல்லை’ நீலுப்பாட்டி, மங்கள்வாடியிலிருந்து வந்துபோகும் மராத்திய பாடகர்கள் என்று சின்னஞ்சிறு கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட சொற்பமான வரிகளில் துல்லியமாக செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன.


நாவலின் பெரும்பகுதி இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் காலத்திலேயே அமைந்துள்ளது. குழப்பமும் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும்கூடிய சூழல். இரவில் விளக்குகள் எரிய அனுமதியில்லை. ஒளியற்ற உத்தரவாதமற்ற கலக்கமான இந்தச் சூழல் நாவலின் கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் போராட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.  

குறிப்பாக, வெளிச்சத்தைக் காணமுடியாமல் இருட்டிலேயே முடங்கிக் கிடக்கும் யமுனாவுக்கானது இந்தச் சூழல். தி.ஜா யமுனாவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ஒளியைப் பற்றி வெளிச்சத்தைப் பற்றி எழுதுகிறார். யமுனாவின் ‘அழகின் தோல்வியே இப்படி இருளாகக் கவிந்திருக்கிறது’. எப்போதுமே வெளிச்சம் இல்லாத, ஏதோ ஒரு சூன்யம், ஏதோ ஒரு வறட்சி மனதைப் பிடித்துக்கொள்கிற துக்காம்பாளையத் தெரு. அந்த இருப்பிடமே அவளது ஒளியற்ற வாழ்வுக்கு சாட்சி. விலைமலிவு என்பதைவிட அய்யருக்கு இருட்டில் வந்துபோவது வசதியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் பார்வதியும் யமுனாவும் இறுதிவரையிலும் அந்த பாழிருட்டிலேயேதான் காலம் கழிக்க நேர்கிறது.

உத்தரவாதமற்ற இந்த இருட்டிலேயேதான் பாபுவும் உழன்றிருக்க நேர்கிறது. கல்லூரிப் படிப்புக்காக கும்பகோணத்துக்கு வந்த நாளிலிருந்து ஏற்படும் அலைக்கழிப்பும் தடுமாற்றங்களும் சென்னையிலும் அவனைத் தொடர்கின்றன. அங்கங்கே சில வெளிச்சங்களைக் காணமுடிந்தபோதும் தான் விரும்பும் ஒளி எங்கேயெனத் தெரிந்திருந்த போதும் அதைநோக்கி அவனால் உறுதியாக முன்னேற முடியாமல் முடக்கிப் போடுகிறது இருட்டு.

நாவலின் தொடக்கத்தில் ஒரு வரி, ‘யமுனா உள்ளே மறைந்துவிட்டாள். ஏதோ விளக்கை எடுத்துக்கொண்டு போய்விட்டது போலிருந்தது.’ இந்த ஒற்றை வரியே நாவலின் காலத்துக்கும் சூழலுக்கும் பொருந்தி நிற்கிறது.


ரு நாவல் எழுதப்பட்டு பல வருடங்கள் கழித்தும் சிறிதும் கருக்கழியாமல் மேலும் மேலும் ஆழங்களுடனும் அர்த்தங்களுடனும் துலங்கி எழும்போது அதன் வனப்பும் வசீகரமும் மேலும் கூடும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் முன்பறியாத புதிய ஒரு அனுபவத்தை சாத்தியப்படுத்தும். மோக முள் அவ்வாறான ஒரு செவ்வியல் நாவல். கதையை மட்டுமே கவனத்தில் கொண்டு அணுகிய முதல்வாசிப்பில் நாவல் தந்த அனுபவமும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகான இன்றைய வாசிப்பில் அடைந்திருக்கும் அனுபவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பைத் தருகின்றன. எழுதப்பட்ட நாவலில் சாத்தியங்கள் இருக்கும்போது மட்டுமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும்போது புதிய திறப்புகளை கண்டுணர முடியும். துங்கபத்திரையின் கரையில் வீற்றிருக்கும் ஹம்பியைப் போலத்தான் மோகமுள் நாவலும். ஒவ்வொரு முறை ஹம்பிக்குச் செல்லும்போதும் அதற்கு முன்பு கண்டிராத புதிய கோயில்களோ மண்டபங்களோ புதையுண்ட மண்ணிலிருந்து முளைத்து நிற்கும். தூண்களும் சிற்பங்களும் எடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். மாளிகைச் சுவர்களும் தடாகக் கரைகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அகழ்வாய்வின் ஒவ்வொரு கணமும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் அதிசயம் ஹம்பி. மோக முள், எழுத்தில் வடிக்கப்பட்ட ஹம்பி.


– எம்.கோபாலகிருஷ்ணன்

1 COMMENT

  1. அற்புதமான கட்டுரை. மனமார்ந்த நன்றிகள் எழுதிய ஆசிரியருக்கும், வெளியிட்ட கனலிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.