பேரன்பு ஒளிரும் சிற்றகல்


முத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி தி.ஜா.-வின் எழுத்துக்களைப் படிக்கும்பொழுதும் கிடைக்கிறது.

நான் என்னுடைய இருபது வயதில், தி.ஜா.-வை சென்றடைந்தேன். இருபது வயது, தி.ஜா.-வை சென்றடைய மிகச் சரியான வயதாகக் கொள்ளலாம். அல்லது இன்னும் தாமதமாக, இருபத்தைந்து வயதுக்குமேல் கூட தி.ஜா.-வை சென்றடையலாம். அவர் முன்வைக்கும் ஆண் – பெண் மன உலகின் ஆழத்தை அறிய வேண்டுமானால், அந்த வயதின் பக்குவம் தேவைப்படுகிறது. வயதிற்கும் பக்குவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலில், பெரும் உண்மையில்லையெனினும், நம் சமூகத்தில், ஒவ்வொரு கட்டமாகவே வாழ்வின் படிகளைக் கடக்க நாம் வழக்கப்படுத்தப்படுவதால், வயதும் அனுபவத்தோடு பொருத்தப்படுகிறது.

இருபது வயதில் தி.ஜா.-வைப் படித்தபோது, நான் தரையிலிருந்து ஓரடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தேன். பெரும் சுரங்கத்தினை மூடியிருந்த சிறு பாறையை விலக்கி வைத்த வெளிச்சம்போல், அகஉலகத்திற்குள் தி.ஜா.-வின் நாவல்கள் உயிர்பெற்றன. உடலையும் மனசையும் ஓர் அகல் விளக்கைப் போல் அன்பால் எரியச் செய்து, ஓர் ஆணுக்காகவும் பெண்ணுக்காகவும் காத்திருக்கச் செய்யும் ரசவாதத்தை தி.ஜா. வாசகருக்குள் உருவாக்கி விடுவார்.
தி.ஜா.-வின் பெண்களை நெருக்கமாக மீண்டும் அணுகிப் படித்தேன். கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் எல்லாம் வாழ்க்கையில் நுழைந்துவிட்டப் பிறகும், தி.ஜா.-வின் பெண்களைப் படிக்கும்போது மனம் உருகிப் போகிறது. பெண்களைக் கொண்டாடும் ஆண்களை தி.ஜா. விதவிதமாகப் படைத்திருக்கிறார். “என்ன குழந்தை” என்ற விளிப்புடன் மனம் சோர்ந்து உட்கார்ந்திருக்கும் தருணங்களில் அப்பா, சித்தப்பா போன்ற ஆண்கள் அருகே வந்து உட்கார்ந்து தலையைக் கோதிவிட மாட்டார்களா என்ற ஏக்கம் வந்துவிடுகிறது.

“ஜகதுவைக் கல்யாணம் செய்து கொண்டவன் தெய்வத்தைக்கூட சட்டை செய்ய வேண்டியதில்லை. அதன் தயவுக்குக் காத்து நிற்க வேண்டியதில்லை” என்றும், ”மனித நிலையிலிருந்து ஓங்கிச் சுடரும் திருவையா மனைவி என்றழைப்பது?” என்றும் தி.ஜா.-வின் கதாபாத்திரங்கள் சொல்லும்போது, மனைவியின் உயரம் அறிந்த கணவனைக் கண்டெடுத்துவிட முடியாதா என விக்கித்துத் திகைக்க வேண்டியுள்ளது. “நாம் சுதந்திரம் கேட்கறதிலே அர்த்தமில்லை. நம் சொந்த வாழ்க்கையிலே சுதந்திரம்னா என்னன்னு நமக்குத் தெரியாமல் சுதந்திரம் வந்து நாம் என்ன பண்ணப் போறோம்? பொம்மனாட்டிகள் இரைஞ்சு பேசினா நமக்குப் பிடிக்க மாட்டேங்குது. தனியாப் போனாப் பிடிக்க மாட்டேங்குது. நம்மைச் சுற்றி நாலு பக்கமும் பெரிசு பெரிசா சுவரைக் கட்டிக்கிட்டு நாம் சுதந்திரத்துக்கு ஆசைப்பட்றோம்” என அனுசரணையாகப் பேசும் நண்பர்களைத் தேடுகிறது மனம்.

“கடவுள் என்றால் காதலிக்கக் கூடாதா என்ன? கடவுள் எப்போதும் காதலனாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்ணாகவும் இருக்கலாம். தாயாக மட்டும் இருக்க வேண்டாம். கடவுளைத் தாயாக நினைத்துத்தான் பெண்களை நெருங்கமுடியாத தெய்வங்களாக்கிவிட்டார்கள். கடவுளை காதலியாகப் பாவித்துப் பழகியிருந்தால், பெண்ணின் ஹிருதய அழகையெல்லாம் முழுதும் பார்த்திருக்க முடியும்” என்று பெண்ணின் உண்மையான ஆளுமையை தரிசிக்க விரும்பும் ஆணை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது மனசு.

தி.ஜா.-வின் பெண்கள் காமரூபினிகள். அதீத காமத்தைக் கொண்டாடுபவர்கள். கள் குடித்துவிட்டு துஷ்டனை வதம் செய்ய வரும் காளியைப் போன்றவர்கள். கையில் சோற்று குண்டானை எடுத்துக்கொண்டு அன்னமிட வரும் அன்னபூரணிகள். இடையில் நாதம் பெருக்கி புவியைக் குளிரச் செய்யும் சரஸ்வதிகள். அன்பால் பரிபாலிக்கும் பார்வதி தேவிகள். எல்லாம் அம்பாளின் ரூபமாக இருப்பதால்தான் அவரின் பெண்களுக்குத் தலை கலைவதில்லை. வியர்ப்பதில்லை. அம்பாளைப் போல் தம் பெண்களை தி.ஜா. முன்னிறுத்தினாலும், அவர்கள் மிகைக் காதலும், மிகைக் காமமும், மிகைக் கொண்டாட்டமும் கொண்டவர்கள்.

தி.ஜா.-வின் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள். இழுத்துக்கட்டின மாதிரி நேர்த்தியான உடல்வாகு கொண்டவர்கள். அப்பெண்கள் அசாதாரணமான சுத்தமும், நறுமணமும், மென்மையும் கொண்டவர்கள். அவர்களின் தலைகூட அதிகமாகக் கலைவதில்லை. எப்போதும் நறுவிசாக, பட்டுப்போல, சற்று முன் தான் குளித்ததுபோல ஒரு தோற்றம் கொண்டவர்கள். வாழ்வின் எல்லா அவஸ்தைகளுக்கும் நடுவில் சிறு புதுமை, குளுமை அவர்களிடம் உண்டு. கலைவும் குழப்பமும் இல்லாத பிறவிகள். முகம் மாதிரி பளீர் என்று வெள்ளையாகப் பாதம் கொண்டவர்கள். அதே மாதிரி கை. எல்லார் கை கால் மாதிரி இராத கை கால். வாழையிலைக் குறுத்தின் மென்மையும் பொலிவும் வீசும் பாதங்களைக் கொண்ட பெண்கள். வெள்ளையைச் சற்றுக் கூட்டிக் காண்பிக்க இழுத்துக் கட்டினாற் போன்ற தோல். எல்லா சாதாரணங்களையும் அசாதாரணமாக்கிவிடும் கண்கள். கையில் ஒரு வீணையையும், புத்தகங்களையும் கொடுத்தால்? ஒரு தாமரையையும், ருத்ராக்ஷ மாலையையும் கொடுத்தால்? தெய்வத்திற்கும் மனித நிலைக்கும் இடையிலுள்ள அதிமானுஷச் சாயைக் கொண்டவர்கள். அழகான முகம். துயரங்களையே காணக்கூடாத, துயரம் என்ன என்றே அறியத் தேவையில்லாத முகம்.

இப்படியான முக, அக லட்சணங்களுடன் கூடிய பெண்கள் இன்றும் இருக்கிறார்களா? இப்பெண்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், இப்பெண்களைப் பற்றிப் படிக்கும்போது இனம் புரியாத அக எழுச்சியும், பூரிப்பும், உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. துள்ளலை மறைக்கவும் முடியவில்லை.

தி.ஜா.-வின் பெண்கள் துளியும் எதார்த்தமின்றி இருப்பதாகத் தோன்றும். வியர்க்காதப் பெண்களோ, ஆண்களோ இருப்பார்களா? இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? வியர்ப்பதும் கலைந்து போவதும் இயற்கையன்றோ? இயல்பில்லாத ஒன்றிற்காக தி.ஜா. இத்தனை வசீகர வார்த்தைகளைப் பரத்துகிறாரா? என்ற கேள்விகளை எழுப்பினால், நம் இயல்பே அசாதாரணங்களை விரும்புவதுதானே எனத் தோன்றுகிறது. தி.ஜா.-வின் மனமோ முழுக்க அசாதாரணங்களில் தோய்ந்திருக்கிறது. எல்லோருக்கும் இயல்பாக நடப்பதைக்கூட தன்னுடைய கதாபாத்திரங்கள் விசித்திரமாகக் கடக்க வேண்டும் என்ற தீராத் தவிப்பில் இருக்கிறார் தி.ஜா. படைத்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் தி.ஜா.-வே இருக்கிறார். தி.ஜா.-வே பேசுகிறார். அவரைப் போலவே பாத்திரங்கள் உருகுகின்றன. அன்பற்றப் பாத்திரங்கள்கூட ஜிகினாத் தாள் சுற்றப்பட்டுத்தான் இருக்கிறார்கள். பல்லும் பனங்காயுமானப் பெண்களாக இருந்தாலும்கூட தி.ஜா.-வுக்கு முக்கியமானவர்களாகவே தெரிகிறார்கள். நடுவீட்டில் புளியமரம் போல் ஆக்கிரமித்துக் கொண்டு அனல் பரப்பிக் கொண்டிருக்கும் பெண்ணும், தி.ஜா.-வின் பார்வையில் குளுமையாகவே வெளிப்படுகிறாள். யாரையும் வெறுக்காத, யார் மீதும் வெறுப்பை உமிழாத, யாரையும் ஒதுக்கி வைக்கத் தோன்றாத மனநிலையை தி.ஜா.-வின் எழுத்துக்கள் தருகின்றன. வாசிக்க வாசிக்க, மனதின் ஓரத்தில் தைத்துக் கிடக்கும் கோபம், எரிச்சல், இயலாமை, வஞ்சகம், துரோகம் போன்ற முட்கள் ஒவ்வொன்றாக காணாமல் போவதை நன்றாக உணர முடியும்.

தி.ஜா.-விற்கு பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் அம்பாளின் நினைவு வருகிறது. அதைவிட அம்பாளின் யாசகனாகவும், அம்பாளைத் துதிக்கும் பக்தனாகவும், அம்பாளின் ஆகிருதியை வியக்கும் காதலனாகவும் உருமாற முடிகிறது. கடவுளைப் போல் உயரத்தில் கொண்டு வைத்தாலும், கடவுளையே மடியில் போட்டுக் கொஞ்சுகிற அடியார் மனசு, தி.ஜா.-வைத் தவிர யாருக்கு வாய்க்கும்? உள்ளுக்குள் மறையும் பெண்களைப் பார்த்து யாரோ விளக்கை எடுத்துக் கொண்டு போய்விட்டது போலிருக்கிறதே என பரிதவிக்க முடியாது.

தி.ஜா.-வின் பெண்கள் காரியம் செய்கிறார் போலவே இருக்காது. ஆனால் நிமிஷமாகச் செய்துவிடுவார்கள், எது சொன்னாலும். சமைத்தாலும் சமைக்கிறார்போலவே இருக்காது. ஒரு பரத்தல், ஒரு கரண்டிச் சத்தம்…பேசப்படாது.

தி.ஜா.வின் பெண்கள் அசாதாராணமானவர்கள். தனித்த குணமுடையவர்கள். அவர்கள் சராசரிப் பெண்களின் இயல்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். தி.ஜா.-வின் ஏழு நாவல்களின் பெண்கள் எல்லோருமே நாம், இன்றும் படைக்கத் தயங்குகிற குண இயல்பு கொண்டவர்கள்.

செம்பருத்தியில் வரும் புவனா  குடும்ப வாழ்வில் கணவனோடு பூரண அன்பு கொண்டு, குடும்பத்தின் ஏற்ற இறக்கங்களைத் திறமையாகச் சமாளித்து, வாழ்வை முழுமையாக்குகிறாள். அவள் எப்பொழுதும் தலையில் சூடிக் கொள்ளும் இரட்டைச் செம்பருத்தி, அவளுடைய குளுமையான குணத்திற்கு குறியீடுபோல், எப்பொழுதுமே வாடிப்போகாமல் தலையில் இருக்கிறது. எதைத் தொட்டாலும் துலங்க வைக்கும் குண இயல்பு கொண்டவள்.

மோகமுள் யமுனா: முப்பத்து இரண்டு வயதான பிறகும், கல்யாணச் சந்தையில், தனக்கான துணையைக் கண்டறிய முடியாமல், தனித்து நிற்கிறாள். தன்னைவிட பனிரெண்டு வயது இளைய, தான் இடுப்பில் தூக்கி வைத்து விளையாடிய, தன்னை கர்ப்பகிரகத்தின் அம்பாளைப் போல் பூஜிக்கிற பாபுவுக்குத் தன்மேல் காதல் என்று தெரிந்தவுடன், அந்த அன்பைக் கடந்து போகப் பார்க்கிறாள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நெருக்கடி சுழல்கள், அவளின் கழுத்தை நெருக்கி மூச்சுத் திணறச் செய்யும் போது, யாருக்கும் பயன்படாமல் போகும் இந்த உடலும் மனசும், தனக்காக ஏங்கி உருகும் பாபுக்குப் பயன்பட்டுவிட்டுப் போகட்டுமே என்ற விரக்தியில் தன்னை பாபுவுக்கு அர்ப்பணிக்கிறாள்.

மரப்பசு அம்மணி அம்மாள்: இளம் பெண்ணான அவளுக்கு, அம்மணி அம்மாள் என்ற பெயர் வயதான தோற்றத்தைத் தருகிறது. அம்மணி அம்மாளின் ஒரே இலக்கு, உலகத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒரு கணமாவது மனைவியாக இருந்துவிட வேண்டும். ஆண்கள் எல்லோரையும், உடல் சேர கட்டியணைத்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவைத் தொடுவதைப் போல், கை குலுக்க வேண்டும். துயரப்படும் ஆண்களைப் பார்த்தவுடன் மடியில் கிடத்தித் தடவிக்கொடுக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் தொடாத வரையில், சரியாகப் பார்க்காதது போலவே இருக்கிறது அவளுக்கு. நண்பர்கள், அறிமுகமுள்ளவர், அறிமுகமற்றவர், திடீரென்று எதிர்ப்படுபவர் எல்லோரிடமும் உறவு கொள்ள வேண்டும். நாற்பது வயது நெருங்குவதற்குள் அவள் உறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை முன்னூறைத் தாண்டுகிறது. தீர்மானிக்கப்பட்ட உறவுகளை மீற வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமின்றி, தனக்கு என்ன தேவை என்பதை உடலின் வழியாகத் தேடுபவளாக இருக்கிறாள் அம்மணி அம்மாள். சும்மா அலைய வேண்டும் என்பதற்காக அலைகிறவளாக இருக்கிறாள். யாராவது சும்மா அலைவார்களா என்றால், எல்லோரும் காரியமாக அலைந்து கொண்டிருக்கும்போது, நான் ஒருத்தியாவது சும்மா அலைந்தால் நல்லதுதானே என்கிறாள். முன்னூறு பேரோடு படுத்திருந்தாலும், மூவாயிரம் பேரை முத்தமிட்டிருந்தாலும், மிகத் தூய்மையான மனுஷி அம்மணி என நாவலின் கதாபாத்திரம் ஒன்று சொல்கிறது. அம்மணியே தான் “ஒரு கோவில் போல் இருக்கிறேன்” என்கிறாள். மாதா கோவிலுக்குக் கோடி ரூபாய் எழுதி வைத்தாலும், நான் மட்டும்தான் போவேன் என்று சொல்ல முடியாதுதானே. “நான் பொதுமகள், அதே சமயம் பொதுமகளும் இல்லை. என்னை விலைக்கு வாங்கலாம். விலைக்கு வாங்கவும் முடியாது. என்னோடு ஒட்டிக் கொள்ளலாம். அப்படியே நீடிக்கவும் முடியாது” என்கிறாள்.

அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள்:  திருமணமாகி, தன்னுடைய கணவனுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தபிறகு, வேறொரு ஆணின்மேல் விருப்பம் உண்டாகி அவனோடு அடுத்த மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள். வேறொரு ஆணின்மேல் விருப்பம் ஏற்பட்ட பிறகு, தன்னுடைய கணவன் தன்னை நெருங்குவதை விரும்பாமல், அவனிடம் இருந்து விலகி இருக்கிறாள். மருமகள், வளர்ந்த பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்திருக்கும் குடும்பத்தில் அலங்காரத்தம்மாளுக்கு, கணவனைவிட்டு, வேறொரு ஆணிடம் காதல் சாத்தியமாகிறது.

உயிர்த்தேன் செங்கம்மா: ஆறுகட்டி கிராமத்துப் பெண்களிடையே ஒற்றைப் பூ போல் மிளிரும் பெண் செங்கம்மா. நடுத்தர வயது குடும்பத் தலைவி. ஊரே வியக்கும் அழகும், நறுவிசாக ஒரு கல்யாணத்து வேலையைக்கூட ஒருத்தியாகப் பார்க்கக்கூடிய திறமை. மரப்பசு அம்மணி பார்க்கும் ஆண்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறாள். செங்கம்மாவோ, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின் கையையும் பிடித்துக் கொண்டு பேசுகிறாள். மனிதர்களிடத்தில், உயிர்களிடம் அன்பைக் கொட்டுவதையே ஒரு விரதமாகப் பயிற்சியாகக் கொண்ட ஆன்மா. பிரியத்தை எப்படியெல்லாம் காட்டலாம் என்று தவித்துத் திணறிக் கடைசியில், கையையாவது பிடித்துக் கொள்வோம் என்று ஒடுங்கி நிறைவது போலிருப்பாள். அவளின் விஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ள இயலாத கணவன். ஆனால், தன்னிடம் ஏதோ பொக்கிஷம் இருக்கிறது என்பது புரிந்தாற்போல், பணிந்து நடந்து கொள்ளும் பக்த மனநிலை. அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் அம்பாளின் அனுக்கிரகம், அருள் என்பதாக நினைத்து நிறைவேற்றும் பூவராகவன், அவள்மேல் காதல் கொண்டு, அதில் கருகிப் போகும் பழனிவேல்.

உயிர்த்தேனில் வரும் இன்னொரு பெண் கதாபாத்திரம் அனுசுயா  திருமணம் செய்து கொள்ளாமல், ஆனால், அன்பு செலுத்துவதை வேண்டும் என்றே பிரக்ஞையோடு சாதகம் பண்ணிக் கொண்டிருக்கிறவள். அவளுக்கும் பார்க்கும் எல்லோரையும் கையை குலுக்கியோ, அணைத்துக் கொண்டு வரவேற்பதோதான் இயல்பு. நெருக்கமான நண்பர்களை நெருங்கி அணைக்காமல் அவளால் இருக்க முடியாது. சந்தோஷத்தை அதற்குக் குறைவாக அவளால் காண்பிக்க முடியாது. எத்தனை பேர் இருந்தாலும் அவள் அப்படித்தான் இருப்பாள். அவள் அப்படி கையைப் பிடிக்கும்போதும், நெருங்கி அணைக்கும்போது, கைகளில் இருக்கும் மென்மை, அது ஒரு பெண்ணின் கை, பெண்ணின் அணைப்பு என்று சொன்னாலும், அதைத் தாண்டிய உணர்வுகளுக்குள் செல்லவிடாமல் இருப்பதற்கு, அவள் அணைக்கும் ஆண்களின் கட்டுப்பாடு காரணமல்ல. அவளின் பரிசுத்தமான, கல்மிஷமில்லாத அன்பே அவர்களைக் கட்டிப்போட்டிருக்கும்.

மலர் மஞ்சம் பாலி. பாலாம்பிகை: பிறந்த வினாடியிலேயே, ஒருவனுக்குத் தாயால் நிச்சயிக்கப்படும் பெண். ஏதோ வாழ்வின் அற்புதத்தை செய்ததுபோல், மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை நிச்சயித்துவிட்டு, இறந்து போகும் மனைவியின் வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவே வாழ்க்கையை ஓட்டும் ராமையாவுக்கு, அதுவே கடவுள் செயல். வளர்ந்தபிறகு, கலையும் கல்வியும் கற்றுத் தேர்ந்த பாலியின் மனதிற்குள், நிச்சயிக்கப்பட்டவனும், நண்பனாக வந்தவனும் ஒரே எடைத்தட்டில் நிற்கிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களா என அவள் மனம் தடுமாறுகிறது. எப்படி ஒரு பெண்ணின் மனதில் இரண்டு ஆண்களின்மேல் காதல் வரும் எனக் குழம்புகிறாள். ஒரு கட்டத்தில், தானாக விரும்பிய ஒருவன்மேல் காதல் மீதூற, நிச்சயிக்கப்பட்டவனை மணக்க முனைகிறாள். கடைசியில் மரண நேரத்தின் வாக்குறுதியே வெல்கிறது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதாலும், காப்பாற்ற முடியாததாலும் இருவர் துறவறம் மேற்கொள்கிறார்கள். பாலி, தன் வாழ்க்கைக்குள் புதைந்து போகிறாள்.

தி.ஜா.-வின் நாவல்கள் ஐம்பதுகள் இறுதி தொடங்கி, எழுபதுகளின் இறுதிவரை எழுதப்பட்டவை. அவருடைய கடைசி நாவல் நளபாகம், அவருடைய இறப்புக்குப் பின் 1983ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. தி.ஜா. எழுதிய காலகட்டத்துடன் ஒன்றிப் பார்க்கும்போது, அவருடைய பெண்கள் ஆச்சர்யமானவர்கள்தான். மீறல்களை விரும்பும் பெண்கள். ஆழ்ந்த விருப்பத்தின் வழிகாட்டலில் வாழ விரும்பிய பெண்கள். ஏறக்குறைய இக்கதைகள் எழுதப்பட்டு ஐம்பதாண்டுகளைக் கடந்த பிறகும், அப்பெண்களின் மீறலை உள்வாங்குவது, இன்றைக்குள்ள நவீனப் பெண்ணுக்கு சவாலானதே. சவால் எனக் குறிப்பிடுவது, அதன் வெளிப்படைத்தன்மையை.

இன்றைய வாழ்க்கைச் சூழலில், இப்பெண்களின் மீறலை, இன்றைக்குள்ள பெண்களால் எளிதாகக் கூட கடந்து செல்ல முடியும். ஆனால், அதில் தன் சுயத்தை, உண்மையை காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு கள்ளத்தனம் நிச்சயம் இருக்கும். யாருமறியாமல் எத்தனை தவறுகளையும், தப்புகளையும், குற்றங்களையும் செய்யும் துணிச்சல் கொண்டவர்களாக இன்றைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், தி.ஜா.-வின் கதை மாந்தர்களின் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, எல்லா நடவடிக்கைக்குள்ளும் இயங்கும் சிறு அறம் வியக்கச் செய்கிறது.

அலங்காரத்தம்மாளின் மீறலை அவளின் குடும்பம் அறிந்தே இருக்கிறது. அந்த அம்பாளின் மனம் ஏற்றுக் கொண்ட நபர் வீட்டுக்குள் வரும்போது மருமகள் அடுக்களைக்குள் அடைக்கலமாகிறாள். பிள்ளைகள் முகம் திருப்பிக் கொண்டு, ஒவ்வொரு அறைக்குள் புகுந்து கொள்கிறார்கள். அலங்காரத்தின் கணவன் இருக்கின்ற நேரமாக இருந்தாலும், அவன் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிவிட்டு, காபி வாங்கிக் குடித்துவிட்டுச் செல்கிறான். பெரும்பாலும் அவன் வருகிற நேரம் பிற்பகல் நேரமாக இருக்கிறது. “ஊர்ல எத்தனைப் பேரு இருக்கு, லக்‌ஷ்மி, சரஸ்வதின்னு. பேரைப்பாரு, அலங்காரமாம் அலங்காரம். தேவடியாளுக்கு வைக்கிற மாதிரி” என்று அவளுடைய கணவன் உறுமுகிற ஒரு வரியில், அலங்காரத்தின் ஆளுமை வெளிப்படுகிறது. அவளைக் கட்டுப்படுத்த முடியாத கணவனின் இயலாமை பொங்கி வெளிவருகிறது. அலங்காரத்தம்மாள் தன்னுடைய புது உறவை யாரிடமும் வெளிப்படையாக வார்த்தைகளால் சொல்லவில்லையென்றாலும், தீர்மானமான நடவடிக்கையின்மூலம் நிரூபித்துவிடுகிறாள். அவ்வளவு உறுதியும், துணிச்சலும் அவளுக்கு எதனால் கிடைக்கிறது என்பது ஆச்சர்யமான ஒன்றே.

பொருந்தாக் காதல் என்று தெரிந்தும், மூப்பிற்கும் வறுமைக்கும் இரையாகப் போகும் உடலை, தன்னைப் பூஜிக்கும் பாபுவிற்குக் கொடுக்க முன்வருகிறாள் யமுனா. ஆனால், அவள் அந்த முடிவை எடுத்ததும், பாபுவுடன் தன் வாழ்வைப் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்ததும், அவள் பாபுவின் தந்தைக்குக் கடிதம் எழுதிப் போடுகிறாள். எதையும் மறைக்காமல், தன்னுடைய நிலையை வெளிப்படையாகச் சொல்லி, தங்களின் முடிவை ஏற்று, வீட்டில் உள்ள பிறரையும் ஏற்கச் செய்யும் பொறுப்பை பாபுவின் தந்தையிடம் கொடுக்கிறாள். யமுனாவின் இச்செயல் பாபுவையே அதிரச் செய்கிறது. ஆனால், யமுனாவிற்குத் தன் தந்தை எழுதிய பதில் கடிதம் பார்த்து, அசந்து போகிறான். தன் தந்தையின் பேரன்பை அக்கடிதம் வெளிப்படுத்தினாலும், அவர் யமுனா தன்னிடம் கொடுத்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டவிதம் நெகிழச் செய்வதாக இருந்ததை உணர்கிறான்.

பாலியும், தன் மனதில் இருந்த இரண்டு ஆண்களில் யாரை வெளியேற்றுவது என்ற மனப் போராட்டத்தைத் தன்னுடைய நடன ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறாள். இருவரையும் ஏற்க இயலாது என்ற சூழலில், தன் தாய் மரணிக்கும் தருவாயில் தனக்கு நிச்சயித்தவனைவிட்டு, தான் விரும்பிய நண்பனை ஏற்க முனைகிறாள். இந்த முடிவை எடுத்தவுடன் அவள் குடும்பத்தில் இருக்கும் எல்லோரிடமும் வெளிப்படுத்துகிறாள். தன் தந்தையைக் கொல்வதற்குச் சமமான செயல் அது என்று தெரிந்தாலும், ஊரிலிருந்து வந்தவுடனே தன் தந்தையிடம் மனதைத் திறந்து சொல்கிறாள். தந்தையின் நெருங்கிய நண்பரிடம் சொல்கிறாள். தன் அத்தையிடம் சொல்லி அழுகிறாள். அடுத்தடுத்து, அவள் மனதுக்கு நெருக்கமான அனைவரிடமும் அவள் உண்மையைச் சொல்ல சொல்ல, நமக்கே பதறுகிறது. “ஏன் இப்படி உண்மையைப் போட்டு உடைக்கிறாள், பொறுமையாகச் சொல்லக்கூடாதா?” என நிலைகொள்ள மறுக்கிறது மனம்.

மரப்பசு அம்மணி அம்மாள் மிகத் துணிச்சலானவள். தன்னைவிட இருபத்தைந்து வயது மூத்த இசைக்கலைஞரிடம் விருப்பம் கொண்டு, அவரின் அபிமானமாக வாழ முடிவெடுத்து, பெருநகரத்துக்குக் குடியேறியவுடன், உண்மை தெரிந்து அவளை வளர்த்தப் பெரியம்மாவுக்குத் தந்தி கொடுத்து வர வைக்கிறாள். பெரியம்மா வந்தவுடன் தான் எடுத்த முடிவை, தேங்காய் உடைப்பதுபோல் உடைத்துச் சொல்லவும், பெரியம்மா அலங்க மலங்க விழித்துக் கொண்டு, அழுகையை மூட்டைக் கட்டிக் கொண்டு, அடுத்த ரயிலுக்கு ஊருக்குப் போய், அவளுடைய பெரியப்பாவை அனுப்புகிறாள். பெரியப்பா வருகிறார். தி.ஜா. உள்ளே நுழையும் பெரியப்பாவின் பார்வையைப் பற்றிச் சொல்கிறார். இருபது, முப்பது ரோஜா இதழ்களை அடுக்கி அழுத்தி வைத்துச் சரக்கென்று ஒரு குண்டூசியைப் பாய்ச்சினால் ஒரு இதழைத் துளைக்க எத்தனை நேரமாயிருக்கும்? பெரியப்பா அத்தனை நேரம் தான் அம்மணியைப் பார்த்தார் என்று. உடனே வேறு பக்கம் தலையை திருப்பிக் கொண்டு விட்டார். இது முழு உபமானம். நொடிக்கு மட்டும் இல்லை. அவர் கண்ணுக்கும்தான். ரோஜாக் குளுமை, கோபம், வேதனை, கடூரம். தான் வளர்த்த மகள், தன் பேச்சைக் கேட்டு, உடனடியாக ஊருக்குத் திரும்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் கிளம்பி வந்து, “இப்போ நீ கட்டிண்டு இருக்க புடவை ரவிக்கையோடு என்னோட கிளம்பணும்” என்கிறார். அப்பொழுதும் அம்மணி அம்மாள் தன் முடிவில் உறுதியாக இருப்பதைப் பார்த்து, கெஞ்சி, கோபப்பட்டு, அடித்து உதைத்துவிட்டு, சாபம் கொடுத்துவிட்டு, இன்னும் உடம்பால் முதிர்ந்தவராக ஊருக்குத் திரும்பிப் போகிறார். அவளை விரும்பித் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்த கோபாலிக்கும் அவளைப் பற்றிய உண்மைகள் தெரிந்தே இருக்கின்றன. அவர் இல்லாத நேரத்தில் அம்மணியின் நண்பர்கள் நிறைய பேர் வந்து செல்வதும், அவள் அடிக்கடி கிளம்பி வாரக்கணக்கில் வெளியூர் செல்வதும் அவருக்குப் பலதைப் புரிய வைக்கின்றன. ஒரு கட்டத்தில் அவரிடமே தன்னுடைய உறவுகளைப் பற்றி அவரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவள் வெளிப்படையாக இருக்கிறாள்.
வெளிப்படைத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக, தி.ஜா. தன்னுடைய பெண்களை தாம் விரும்பியபடி வாழ்வினை எதிர்கொள்ளும் வலுவுள்ளவர்களாகப் படைத்துள்ளார். விருப்பத்தின்படி வாழ்வினை அமைத்துக் கொள்வதுதான் மனிதர்களின் ஆகப் பெரும் சவாலே. அதுவும் பெண்களுக்கு. குடும்ப வாழ்விற்குள் இருக்கும் பெண்களுக்கு, அநேகமாக வெறும் கனவே அது. ஆனால், தி.ஜா. மீறலை பெருவிருப்பமாகக் கொண்ட பெண்களை விதவிதமாகப் படைத்துள்ளார்.

அப்பெண்கள் படைக்கப்பட்டு, ஐம்பதாண்டுகளைக் கடந்த நிலையிலும், அப்பெண்களின் உணர்வெழுச்சிகளை நினைத்துப் பார்க்க பிரமிப்பூட்டுகிறது.

ஒவ்வொரு மீறலுக்கும் ஆழமான காரணங்கள் மனித சமூகத்திற்குத் தேவைப்படும். மனித மனங்களுக்குக் காரணங்கள் தேவைப்படுவதில்லை. அது விருப்பத்தின் பாற்பட்டு இயங்குவது. தி.ஜா.-வின் பெண்கள் பெரிய காரணங்கள் ஏதுமின்றி பெரும் விருப்பத்துடன் மீறலைச் செய்கிறார்கள். அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாளுக்கு, தன்னுடைய கணவனைத் தாண்டி, வேறொரு ஆணைத் தேடிக் கொள்வதற்கான காரணம் எதுவுமே நாவலுக்குள் வரவில்லை. அலங்காரத்தம்மாளின் ஆகிருதையான உடம்பைப் பார்த்து, பெருமிதத்துடன் ஆராதிப்பவராகவே அவளுடைய கணவன் இருக்கிறான். இருவருக்குமான தனிமை நிறைந்த நள்ளிரவு மொட்டை மாடி, அவர்களின் அன்னியோன்யத்திற்குச் சான்றாக நிற்கிறது. மனதின் இந்த அன்னியோன்யம், அலங்காரத்தம்மாளுக்கு எந்த கணத்தில், விலகிப் போகிறது என்பது கேள்விக்குறியே. ஆண் – பெண் உறவில் தொட்டாற்சிணுங்கித்தனம் கொண்ட விலகல் இயல்பே. ஆனாலும் அலங்காரத்தம்மாள் மீறலை விலகிச் செய்கிறாள்.

மரப்பசு அம்மணி அம்மாளுக்குத் தன்னுடைய காரியங்கள் எதற்குமே காரணங்கள் வேண்டியிருப்பதில்லை. அவளே அவளுக்கான சவால்களை முன்னிறுத்திக் கொள்கிறாள். சவால்களை சுவாரசியப்படுத்திக் கொள்ளும் கலையையும் கண்டறிந்து கொள்கிறாள். வெளிநாடு ஒன்றில், தோழி ஒருத்தியுடன், முன்பின் அறிமுகம் இல்லாத சாலையில் நின்று கொண்டு போகும் வரும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைக்கும் அம்மணி அம்மாளை நினைத்து மனம் தூக்கி வாரிப்போடுகிறது. என்ன தேவை அவளுக்கு என்ற கோபம் வருகிறது. 1972-இல் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. பெண் விடுதலைப் பற்றியெல்லாம் மேற்கத்திய நாடுகளில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் உறவுகளற்ற சுதந்திரமான உணர்வில் திளைக்கும் அம்மணி அம்மாளை முன்னிறுத்தியுள்ளார்.

அம்மணி அம்மாள் நடனம் கற்றுக் கொள்கிறாள். நடன நிகழ்ச்சிகளுக்காகப் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறாள். நாவலின் போக்கில் ஆங்காங்குச் சொல்லப்படும் செய்திகள் இவை. கலையின் தேடலில், அறிவுப் பசியில் அவள் அதிக ஆண்களைத் தேடிச் செல்வதாகத் தோற்றம் தந்திருந்தால்கூட, தி.ஜா. தான் படைத்தப் பெண் பாத்திரத்தின் நேர்மையில் இருந்து விலகியிருப்பார். எங்குமே அவளின் கலை மேதமையை முன்னிறுத்தவில்லை. அன்பிற்காக, காமத்திற்காகத் தேடி அலைவது அவளின் அகத்தேடலாக இருக்கிறது என்ற தெளிவில்தான் நாவல் பயணிக்கிறது. அவளுடைய கலைப்பணிக்காக அவள் உடல் பசியை சேர்த்துக் கொண்டாள் என்ற பக்கத்தாளங்கள் எங்குமே காணப்படவில்லை.

மீறல்களை முன்னிலைப்படுத்திய கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவரின் கதாபாத்திரங்கள் மீறல்களில் இருந்து மீண்டு யதார்த்தத்தைப் பார்க்கத் தொடங்குகின்றன. கோபுரத்தின் உச்சியில் காற்று கொண்டு சேர்த்த சருகு, மீண்டும் காற்றுடன் சேர்ந்து கீழே இறங்குவது போன்ற வீழ்தல் அல்ல அது. உயர உயரப் பறந்த ராஜாளிப் பறவை இளைப்பாறுதலுக்காக, கோபுரத்தின் உச்சியில் உட்கார்ந்து அலகு கோதுமே, அவ்விதமான இளைப்பாறுதல்.

தி.ஜா.-வே மீறலுக்கும் மீளலுக்குமான விதியைச் சொல்கிறார். ”புத்திசாலின்னா கட்டறுத்துண்டு ஓட முடியுமா? கும்பேச்வரன் கோயில் ஆனைக்குட்டிக்கு பலமா இல்லே. ஒற்றைச் சங்கிலியிலே கட்டுப்பட்டுத்தானே அவதிப்பட்றது அது?” என்கிறார். தி.ஜா.-வின் வேலையே யானைக்குட்டிகளை கட்டவிழ்த்து விடுவதுதான்.

அன்பில் மேலோங்கிய மாந்தர்களின் சித்திரம் மனதிற்குள் படிந்தபடியே உள்ளது. நாவலை ஆராய்ந்து பார்ப்பதைவிட நாவலுக்குள் வாழ்வது சுகமாக இருக்கிறது. விமர்சகர் நாவலைப் பற்றி ஆராயலாம். இண்டு இடுக்குகளில் நுழைந்து நாவலுக்குள் புதைந்திருக்கும் கோட்பாடுகளின் தாத்பர்யம் கண்டறியலாம். ஆனால், ஒரு வாசகி/ வாசகனால்தான் எழுத்திற்குள் வாழ முடியும். எனக்கு தி.ஜா.-விற்குள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாழ்ந்து பார்க்க மிச்சமிருப்பதாகவே தோன்றுகிறது.
பழங்காலத்து நான்கு கட்டு வீட்டில், குளுகுளுவென்று இருக்கும் கூரைக்குக் கீழே, வழவழப்பானத் தரையில் எதுவுமே விரிக்காமல், பிடித்த மனிதர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது. அவர் கொண்டாடும் பருவங்களைக் கடக்க வேண்டும். அவர் சொல்லும் புள்ளினங்களை அறிந்து கொள்ளவேண்டும். தி.ஜா. சொல்லும் கார்த்திகை, ஐப்பசி மாத நிலவுகளை முழுமையாக ரசிக்கக் கற்றுக் கொண்டாலே போதுமென்றிருக்கிறது. ஓரிடத்தில் எட்டாம் பிறை நிலவைப் பற்றி தி.ஜா. சொல்கிறார்… நிலவு, நீர் கலந்த பசும்பாலைப் போல் விழுந்திருந்தது என்று. நீர் கலந்த பசும்பால்? எத்தனை கணம் இந்த உவமையை யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்? தி.ஜா. எழுதிச் சென்றுள்ள கும்பகோணமும், தஞ்சாவூரும், பாபநாசமும் அதே ரூபத்தில் என்று பார்க்கக் கிடைக்குமோ? அவர் காட்டியுள்ள மனிதர்களை இனி எங்கு பார்க்க முடியும்?  “என்னமோ, பழகறபோது, பேசுற போதெல்லாம் பட்டுச் சால்வையை மேலே போட்டுக்கறாப்பல இருக்கும் எனக்கு. அவ்வளவு உசந்தவன் அவன்” என்று தி.ஜா.-வின் பாத்திரம் ஒன்றுசொல்லும். எனக்கும் தி.ஜா.-வைப் பார்த்து அதையே சொல்லத் தோன்றுகிறது.

’வெள்ளையாக முற்றாமல் சூடு பிடிக்காமல் கொழுந்து வெயில் படர்ந்த காலை’ என்கிறார். கொழுந்து வெயில் என்று சொல்லும் ரசனை வியக்க வைக்கிறது. தினைச்சிட்டுக்களும் வீட்டுக் குருவிகளும் அழகாக்கும் காலை நேரங்களில், கூப்பாடுகள் போடும் வலியன்களை அடையாளம் காண்கிறார்.

தன் நாவல்களுக்குள் இசை வாழ்க்கையை, இசை நுணுக்கங்களை, குப்பிக்குள் கடலை அடைத்துவிடும் மந்திரவாதிபோல் இருக்கிறார். எடுக்கும் ஒவ்வொரு துளியும் ஒரு கடலாக விரிவு கொள்கிறது.

தி.ஜா.-வின் ரசனைகளின் எல்லைக் கோட்டை அடையாளம் கண்டு அதை அடைந்துவிடும் வெறியோடு பயணித்தால்,  தாண்டத் தாண்ட தி.ஜா. கோட்டைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

புனைவிலக்கியங்களை அணுகுவதில் எனக்கு எப்பொழுதுமே ரசனையே அடிப்படை அளவுகோல். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மறைமுகமாக இதுவே அளவுகோலாக இருக்க முடியும். ரசனை மட்டத்தில் மேம்பட்டு இருக்கும் படைப்புகளே வாசககளின் மனத்தில் நிரந்தரமாக சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும். தி.ஜா.-வின் படைப்புகளை விமர்சனம் என்ற பெயரில், பட்டுத்துணியில் உப்புக்காகிதம் போட்டுத் தேய்ப்பதுபோல் தேய்த்திருக்கிறார்கள். எண்ணம் என்னமோ வழவழப்பாக்குவதாக இருந்தாலும் ரத்தம் வரத் தேய்த்திருக்கிறார்கள். ஜாதிப்பூவில் கோயிலின் மணம், பூஜையின் மணம் வீசுவதைப் போல் அவரின் படைப்புக்குள் அசலான வாழ்வின் மனம் வீசிக் கொண்டே இருக்கிறது.

மரணமும் காலமும் எல்லாவற்றையும் புனிதப்படுத்தி விடும். அல்லது மறக்கடித்துவிடும். படைப்பாளிக்கும் இதுவே பொதுவிதி. தி.ஜா. காலத்தின் இரக்கத்தை சம்பாதிக்காமல் இன்னும் கம்பீரமாகவே நிமிர்ந்து நிற்கிறார். ஸ்வாமியைவிட பக்தன் பெரியவன் என்கிறார் தி.ஜா. எழுத்தாளரைவிட வாசகர் பெரியவர் என்று சொல்லலாம். எழுத்தாளர் ஒருமுறை எழுதிவிட்டுச் சென்று விடுகிறார். வாசகர் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் பிரதியை எழுதிக் கொண்டே இருக்கிறார். ’கலையிலே ருசியுள்ளவர்களுக்கு அதனால் பெரிய லாபம் உண்டு. உள்ளே ஒரு தீபம் எரிந்து கொண்டே இருக்கும். அது அகத்தின் அந்தகாரத்தைப் போக்கக்கூடியது’ என்கிறார் தி.ஜா.

சிற்றகலில் ஏற்றி வைக்கப்பட்ட அன்பின் தீபம் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.


– அ.வெண்ணிலா

குறிப்பு : ‘தடம்’ இதழில் வெளியான இக்கட்டுரை கனலி-இன் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக எழுத்தாளரின் அனுமதியுடன்  மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

Previous articleகனலி இணைய இதழ் 10
Next article”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“
Avatar
தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார்.பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.