சித்திரக்கதை நினைவுகள்

“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற  அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது.

அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.. லைப்ரரி புத்தகங்கள்.. இதிலேயே காலம் ஓடும். அண்ணன்கள் படித்து துவைத்துபோக மீத நேரங்களில் நான் புரட்ட கிடைக்கும்.

அப்போதுகூட வார..மாத இதழ்களில் வரும் தொடர் சித்திரக்கதைகளே காமிக்ஸ் என்ற ஞாபகம். ஆனால் பெரியவர்கள் பேசிக்கொள்ள….மஞ்சள்பூ மர்மம்… இரும்புக்கை மாயாவி போன்ற சொற்றொடர்கள் ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தும். தூரத்து சகோதரனின் வீட்டு இரும்பு பெட்டியில் கிடைத்த துருக்கியில் ஜானிநீரோ என்ற புத்தகம் சில ஆண்டுகள் என் கையில் படாதபாடுபட்டது.

திடீரென்று ஓர்நாள்… சின்ன அண்ணன் ஒரு புத்தகத்தை கண்ணில் காட்டி மறைத்து விளையாடி பின் கொடுத்துச்சென்றார். அவர் அதை முழுதாய் பாத்திருந்தால் மறைத்தே வைத்திருப்பார். இப்போது நான் செய்வதுபோல. அழகியைத்தேடி… ஜேம்ஸ்பாண்ட்.

வரிசையாக ராணிகாமிக்ஸ் சேர்க்க ஆரம்பித்தேன். எனினும் பக்கத்து வீட்டு நண்பனின் சேகரிப்பை தொடக்கூட முடியவில்லை. அவரிடம் லயன்.. திகில்.. மேத்தா… அப்புறம் 3D காமிக்ஸ் என நூற்றுக்கணக்கில். வீட்டு பெரியவர்களின் சண்டையில் பேசாமலிருந்த காலம்.

அப்போதுதான் அம்மை தாக்கியது. ஒரு வாரம் பள்ளிக்கு லீவ். பக்கத்தில் சில படித்த புத்தகங்களையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருந்தேன். தென்னை ஓலையில் மறைப்பு கட்டிய திண்ணை. அதுதான் எனக்கு இடம். இரண்டு மூன்று நாட்கள் என்னை கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நண்பர் ஏதோ பேசி சமாளித்து அவர்கள் வீட்டு சம்மதத்துடன் அள்ளிக்கொண்டு வந்த புத்தகப் புதையலை அன்பாய் என்னிடம் கொடுத்தார்.

திண்ணையில் பாய்.. தலையணை.. வீட்டில் கொடுத்த பழங்கள்.. பனங்கற்கண்டு.. இனிப்புகள்.. தீனிகள் ஒருபுறம். நண்பர் கொடுத்த முப்பதுக்கும் மேற்பட்ட … இரண்டடி உயரத்துக்கு அடுக்கிவைக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகஙகள் மறுபுறம்.. இந்த சொர்கவாழ்வு வேறெப்போதாவது கிட்டுமா?

காலசக்கரத்தில் எல்லாம் அடித்துக் கொண்டுபோக… ரசனைகள் இலக்கியம்… நாவல்கள்.. என மாறிப்போக.. காமிக்ஸ் மூலம் வளர்த்துக்கொண்ட வரையும் ஆர்வம் மறைந்துபோக… ஒருவாறு சுற்றிக் கொண்டிருக்கும்போது…

சில Facebook பக்கங்களின் மூலம் சித்திரக்கதை வாசகர்கள் உயிர்ப்புடன் இருப்பதை கண்டு.. மிக மகிழ்ந்தேன். Whatsapp குழுக்களும் இயங்குவதாய் கண்டு இணைந்தேன். யோசிக்கும்போது உலக இலக்கியம்.. உலக சினிமாவென கெத்தாக திரிந்தாலும் புத்தக கண்காட்சிகளில் முதல் தேடுதலாய் காமிக்ஸே இருப்பது புரிந்தது.  மொழிபெயர்ப்பு கதைகளை தவிர்த்து வாண்டுமாமா… ஓவியர் செல்லம் போன்றவர்களிர் மேதமை புரியத்தொடங்கியது.

இன்னமும் காமிக்ஸ் என்பது சிறுவர் கதையாடல் என்ற பிரமையிலிருந்து தமிழ் வாசகர்கள் வெளிவராததும் புரியத்தொடங்கியது. உண்மையில் காமிக்ஸ் என்ற வடிவில் அத்தனை இலக்கிய வடிவங்களையும் கொண்டுவர முடியும் என்பதை தற்போது வெளிவரும் இதழ்கள் நிரூபித்து வருகின்றன.

எனக்கு எனது பால்யத்தை மீட்டுக் கொடுத்த குழு நண்பர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக  அவர்களை பென்சில் டிராயிங் ஆக வரைய ஆரம்பித்தேன். (அவங்க முகத்தை வச்சு ட்ரெய்னிங்..ஹிஹி).

கன்னத்தை தடவிப் பார்த்துக்கொண்டேன். இடறிய அம்மைத் தழும்புகளின் ஊடே இரண்டடிக்கு அடுக்கி வைக்கப்பட்ட காமிக்ஸ் கடலுக்குள் குதித்தேன்.


-அப்பு சிவா

9 COMMENTS

    • காமிக்ஸ் வாசிப்பு பலருக்கும் துவங்கிய நினைவுகள் என்றும் மறப்பதில்லை. எங்கள் நினைவுகளையும் தூண்டி விட்டுள்ளீர்கள் அப்பு சிவா அவர்களே… 😀🙏🏼🙏🏼

  1. பசுமையான நினைவுகள் சகோ..பள்ளி பருவத்தில் கை உடைந்து ஒரு மாதம் வீட்டில் இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. அந்த ஓரு மாதமும்
    ராஜ உபச்சாரந்தான்.. சூஸ், பழம்.. என்று நான் இருந்த இடத்துக்கே வந்துவிடும்.. கட்டில் அருகில் என்னுடன் இரும்பு கை மாயாவி, ஜேம்ஸ் பாண்ட், டாக்டர் நோ, முகமூடி மாயாவி..சொர்க்கம் என்றால் அதுதான்..காமிக்ஸ் வாட்அப் குழு இருந்தால் தெரியப்படுத்தவும்.. இதனை பற்றி நினைப்பதே புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் தருகிறது .. ஆழ் மனதை தூண்டியதற்கு.. அன்பு.. நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.