கதை


‘அந்தக் காலத்தில்
போர்வெல் முதலாளியை
மிகவும் சோதித்தன ஊற்றுகள்.
ஒளிரும் ஆபரணங்களோடு
இயந்திர முனையில்
தன்னையே பொருத்தி
பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார்.
அவர் இறங்க இறங்க
ஊற்றுகளும் பதுங்கின.
விடியலில் மேலே வந்த இயந்திரத்தில்
முதலாளி இல்லை.
மூவாயிரம் ஆண்டுகள் கழித்து
தொல் எச்சமான முதலாளியே
நமக்கு நாட்டார் தெய்வமானார்’
பயண அசதி இல்லாதிருக்க
இப்படியான
கதையொன்றைச்
சொல்லத் தொடங்கினார்
கூட்டத்தின் மூத்த குடி (வயது 40).
சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து வெளியேறிய மக்கள்
சுவர்களில்
வெள்ளைப் பாம்புகளென நெளிந்தோடும்
பிவிசி பைப்புகளுக்குள்
‘ம்’ கொட்டியபடியே
நீர்ச்சொட்டுகளைப்
பொறுக்கப் போகின்றனர்.

– முத்துராசா குமார்
Previous articleசித்திரக்கதை நினைவுகள்
Next articleகு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments