1.ஒரு சந்திப்பு
ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில் போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச் சொல்ல இயலும்.
2.ஒரு கதைக்கான கரு
ஒரு பொறியாளர் பீட்டர்ஸ்பர்க் நகரின் குறுக்கே ஒரு மாபெரும் சுவரை எழுப்ப வேண்டும் என எண்ணினார். அதை எப்படி நிறைவேற்றுவது என்று ஆழ்ந்த சிந்தனையில் திளைத்தவாறே துயிலற்ற இரவைக் கழித்தார். படிப்படியாகப் பொறியாளர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சுவரை எழுப்புவதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது. சுவரை இரவுப் பொழுதில் எழுப்ப வேண்டுமென்றும் மேலும் ஒரே இரவில் ஒட்டுமொத்த சுவரையும் எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்த வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. வேலையாட்கள் வரவழைக்கப்பட்டனர். பொறியாளர் அமைப்பும் வளர்ந்தது. நகர நிர்வாக அதிகாரிகள் ஓரங்கட்டப் பட்டனர். இறுதியாக அச்சுவரைத் தீர்மானிக்க வேண்டிய அந்த இரவு வந்தது. சுவர் எழுப்புதல் பற்றி நால்வர் மட்டும் அறிவர். பொறியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் துல்லியமான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அவரவர்கள் தத்தம் இடத்தில் நிறுத்தப்பட்டனர். மிகத்துல்லியமான செயற்பாட்டின் வாயிலாக ஒரே இரவில் மாபெரும் சுவர் நிர்மாணிக்கப்பட்டது. மறுநாள் பீட்டர்ஸ்பர்க் நகரில் எங்கும் கூச்சல் குழப்பம். அந்த மாபெரும் சுவரை எழுப்பிய பொறியாளர் சோர்வில் ஆழ்ந்தார். அந்தச் சுவரை எதற்குப் பயன்படுத்துவது என்பது பற்றி அவரால் கூட அறிய இயலவில்லை. (1935)
3.சிரிப்பு பற்றிய குறிப்புகள்.
1.நகைச்சுவை நடிகர்களுக்கான அறிவுரை.
சிரிப்பை எந்தத் தருணத்தில் வரவழைக்க வேண்டுமென்பது பற்றி நான் கவனித்து வந்திருக்கிறேன். அரங்கமே சிரிக்க வேண்டுமென்றால் மேடையின் நடுவே நில் யாரேனும் ஒருவர் திடீரென வெடித்துச் சிரிக்கும் வரை அமைதியாக நில். பிறகு மற்றொருவர் தொடர்ந்து சிரிக்கத் துவங்கும் வரையிலும் அதை அரங்கம் முழுவதும் கேட்கும் வரையிலும் சற்றே பொறு. இந்தச் சிரிப்பு உண்மையானதாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தபின் சிரிப்பை ஏற்படுத்தும் தருணத்தை எட்டியாயிற்று. பிறகு நீ உன் நகைச்சுவை நிகழ்வை வெற்றியை நோக்கி நிகழக்கூடும்.
2 .பலவகையான சிரிப்பு
மிதமான சிரிப்பு என்று உண்டு. அரங்கு முழுவதும் சிரித்தாலும் முழு ஒலியை எட்டாது. பலமான சிரிப்பு என்று உண்டு. அரங்கில் ஒரு பகுதி மட்டும் பலத்த ஒலியால் சிரிக்கும். மற்ற பகுதி அமைதியாக இருக்கும். ஏனெனில் சிரிப்பு அப்பகுதியை எட்டவே இயலாது. முதல் வகையான சிரிப்பை வரவழைக்க ஒரு கேளிக்கை நையாண்டி கலைஞனின் வித்தை போதும். ஆனால் இரண்டாவது வகையே ஆகச்சிறந்தது. ஏனெனில் முட்டாள்களுக்குச் சிரிப்பு தேவையற்றது (1933)
4.நான் புழுதியை எழுப்பினேன்.
நான் புழுதியை எழுப்பினேன்.! சிறார்கள் தம் உடைகளைக் கிழித்தவாறே என்னைப் பின் தொடர்ந்தனர். கிழவர்களும் கிழவிகளும் கூரை மேலிருந்து கீழே விழுந்தனர்.நான் சீட்டியடித்தேன்.உறுமினேன். பற்களை நறநறவெனக் கடித்தேன். இரும்புத்துண்டை உரசினால் ஏற்படும் நாராச ஒலி எழுப்பினேன். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து ஓடினர். பயங்கர வேகத்தில் ஓடியபடியே தம் மெலிந்த கால்களை முறித்துக் கொண்டனர். கிழவர்களும் கிழவிகளும் தத்தித் தத்தி என்னை பின் தொடர்ந்தனர். நான் விரைவாக ஓடினேன். அழுக்கடைந்த கூன் விழுந்த நச்சுக் குடைக் காளான்களைப் போன்ற சிறார்கள் என் காலடியில் மாட்டிக் கிடந்தனர். நான் விரைவாக ஓடினேன். வெகு தீவிரமாக ஓடினேன். நிறைய விஷயங்களை எண்ணிக்கொண்டே ஓடி கிழவர்கள் மற்றும் கிழவிகளின் மிருதுவான மென் கூழ் போன்ற கூட்டத்தில் விழப் பார்த்தேன். நான் தாவியவாறே நச்சுக் குடைக் காளான்களில் தலைகளில் சிலவற்றை சடக்கென முறித்தவாறு ஓடினேன். மெலிந்த கிழவிகளின் வயிற்றின் மீது ஓடினேன். அவர்கள் உரத்த ஏப்பம் விட்டனர். “அவர்கள் என்னைச் சோர்வுறச் செய்தார்கள்” – என முணுமுணுத்தபடியே பின் திருப்பி பாராமல் முன்னேறி மேலும் ஓடிக்கொண்டிருந்தேன் மிகத் தூய்மையான மென்மையான சாலையின் மீது ஓடிக்கொண்டிருந்தேன். தெருவிளக்குகள் அவ்வப்போது எனக்கு வழிகாட்டின.
நான் குளியல் அறையை நோக்கி ஓடினேன். குளியலறையின் மாபெரும் கூடம் என்னை வரவேற்றது. இன்ப மூட்டும் அதேவேளை மூச்சை முட்டும் குளியலறையின் நீராவி என் நாசிகளைச் சூழ்ந்தது. என் காதுகளுக்கும் வாய்க்கும் பரவியது. உடைகளைக் களையாமல் உடை மாற்றும் அறை, குழாய்கள், குளியல் தொட்டிகள் , பலகைகள் மற்றும் பேழைகளைக் கடந்து ஓடினேன். வெப்பமான வெண்ணிற மேகம் என்னைச் சூழ்கிறது. மிகச் சன்னமான ஆனால் தொடர்ந்து எழும் ஒலியைக் கேட்கிறேன். நான் அவ்வாறு படுத்தவாறு கிடக்கிறேன். மேலும் அந்த தருணத்தில் ஒரு மாபெரும் இளைப்பாறல் என் இதயத்தை நிறுத்தியது.
5.நீல நிறக் குறிப்பேடு எண் :10
கண்களோ காதுகளோ அற்ற சிவப்பு தலைமுடியுடன் மனிதன் ஒருவன் இருந்தான். மேலும் அவனுக்குத் தலை முடியே இல்லாததால் பெயருக்குச் சிவப்பு தலைமுடி என்று அழைக்கப்பட்டான். அவனால் பேச இயலாது. ஏனெனில் அவனுக்கு வாய் இல்லை. மேலும் அவனுக்கு மூக்கு கூட இல்லை. அவனுக்கு கைகளோ கால்களோ கூட இல்லை அவனுக்கு வயிறும் இல்லை மேலும் பின்புறம் மற்றும் முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகள் ஆகிய எதுவும் இல்லை. அவனிடம் ஒன்றுமில்லை. ஆதலால் நாம் இப்போது யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று அறிய இயலவில்லை. மேலும் அவனைப்பற்றி இனி எதுவும் பேசாதிருத்தல் நலம்.
-டேனில் கார்ம்ஸ்
தமிழில்: கணேஷ் ராம்.
ஆசிரியர் குறிப்பு:
டேனில் கார்ம்ஸ்:
டேனில் கார்ம்ஸ் (Daniil Kharms) என்ற புனைப்பெயரில் எழுதிய டேனில் இவானொவிச் யுவசேவ் நவீன இரஷ்ய இலக்கியத்தின் காஃப்கா அல்லது பெக்கெட் என அறியப்படுகிறார். விமர்சகர்கள் இவரின் கலையை ‘அபத்தத்தின் அழகியல்’ என்கின்றனர். கார்ம்ஸ் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரில் 1905 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் பிறந்தார். பேர்ஹேயின் கதைகளில் காணப்படும் புனைவுப் பிரதிகள் போல தன் வரலாற்றைப் பலவித புனைவுகளாக எழுதிப்பார்த்தவர்.
கார்ம்ஸின் இலக்கிய சகா அலெக்ஸாண்டர் வொடன்ஸ்கி 1920களில் பல முற்போக்கு மற்றும் பின் -எதிர்காலவிய(Post futurist) இயக்கங்களை உருவாக்கினார். நாடகாசிரியராகவும் நடிகராகவும் கார்ம்ஸ் பல கலைப் பரிக்ஷார்த்தங்களில் ஈடுப்பட்டார். இரஷ்யக் குழந்தைகள் கதைகளை நிறைய எழுதியுள்ளார்.
டேனில் கார்ம்ஸ் 1930 களில் சிறுகதைகளையும் தத்துவார்ந்த குறிப்புகளையும் எழுதினார். பின் ஸ்டாலினிய கலைஞர்களுக்கு எதிரான வெறுப்பை கார்ம்ஸ் வெகுவாக எதிர்க்கொண்டார். காம்ஸின் கதாநாயகன் சுயமாக சிந்திக்கும் தன்மையற்ற அரைகுறை மனிதன். எது வேண்டுமானலும் நிகழும் தன் முனைப்பற்ற பெளதீக மற்றும் கலாச்சார சடநிலையில் வாழ்பவன். கலை இலக்கிய உலகில் எதிர்புரட்சிக்கர சிந்தனையாளராகவும் டேனில் கார்ம்ஸ் செயல்பட்டார். தன் காலத்தின் அரசியல் மற்றும் வாழ்வியல் சிந்தனைகளுக்கு எதிராக இருந்தாலும் காஃப்காவின் ஜோசப் கே-யை போல ஒரு நாள் அரைகுறை ஆடையுடன் சாதாரண ரப்பர் செருப்புகள் அணிந்திருந்தப் போதும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ச்சியாக அவரது கலை இலக்கிய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். லெனின் க்ராட் சிறைச்சாலையிலுள்ள ஒரு மனநல மருத்துவமனையில் 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேனில் கார்ம்ஸ் இறந்துப்போனார். சிகிச்சையினாலோ அல்லது தொடர் பட்டினியினிலோ அவர் இறந்திருக்கலாம் என்று அனுமானிக்கின்றனர். டேனில் கார்ம்ஸின் முக்கியமான பிரதிகள் 1988 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. கார்ம்ஸின் எழுத்துக்கள் நன்கு வெட்டப்பட்ட கேக்கின் துண்டுகள் போன காணப்பட்டன கார்ம்ஸின் பேனா மொழியின் எல்லைகளுக்குச் சென்று நவீன வாழ்வின் அபத்தங்களை குறுக்கும் நெடுக்குமாக வெட்டிச் செதுக்கி துண்டுகளாக பெயர்த்து எடுக்கும் தன்மையுடையது.
நன்றி: புது எழுத்து.
கே.கணேஷ் ராம் :
அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த சில வருடங்களாக சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த எழுதிய “சுழலும் சக்கரங்கள்” (Sleeping Gears -ரியுனொசுகே அகுதாகவா) சிறுகதைத் தொகுப்பு சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதைப் பெற்றது.