மூர்மார்க்கெட்
1639ல் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை ஏறக்குறைய 381 ஆண்டுகளை மெட்ராஸ் பட்டணம் தன் வரலாறாகக் கொண்டுள்ளது. அதற்கு முன்பே நூற்றாண்டு பெருமைகள் கொண்ட ஊர்கள் இங்குண்டு. வியாசர்பாடி, திருவெற்றியூர், மைலாப்பூர் என பல ஆனாலும் நகரமயமாக்கப்பட்டு கடற்கரையோர வியாபார நிலமாக மாறியப் பிறகு தானே மெட்ராஸ் உலக பெருநகரங்களில் ஒன்றானது. மதராசப்பட்டணம் உருவாக மூல பிரதிநிதிகளாக இருப்பவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களில் போர்துக்கீசியர், ப்ரஞ்சுக்காரர்கள், டேனிஸ்காரர்கள், பிரிட்டீஸ்காரர்கள் என பலரும் ஆதாரமாக இருந்தாலும் மதராச பட்டணத்தை உலகறியச் செய்தவர்கள் அதை உலகின் பல நகரங்களுக்கு இணையாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே… அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல செந்நிற கட்டிடங்கள் மட்டுமே அன்றைய காலத்தின் சாட்சிகளாக இன்றும் இருக்கிறது. பல இன்றைய ஆட்சியாளர்களின் அக்கறையின்மையாலும், வளர்ச்சி என்கிற பேரிலும் நாசமடைந்து வருகிறது. சில அழிந்துவிட்டது ஏறக்குறைய 2467 கட்டிடங்கள் அதில் பல 200 ஆண்டுகளை கடந்தது. அப்படியான கட்டிடங்களில் ஒன்றே நம் மூர் மார்க்கெட்.
அன்றைய நாட்களில் பிராட்வேக்கு அருகே ஜார்ஜ் டவுனில் பெரிய கடைத்தெரு இருந்தது. அதை அன்றைய நாட்களில் பறைச்சேரி கடை என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் அங்கு வழக்கமான இறைச்சிகளுடன் மாட்டிறைச்சி கடைகளும் இருந்ததாலும், அன்றைய வெள்ளையர்கள், மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள், தலித்துகள் தங்களுக்கு தேவையான மாட்டிறைச்சியை அங்கே வாங்குவார்கள் என்பதால் கூட இருக்கலாம். ஆனால் பரவலாக இஞ்சி பூண்டு உண்ணாத சுத்த சைவர்களை தவிர எல்லா சமூகத்தாருமே அங்கு பொருட்களை வாங்கினார்கள் என்பது தான் வரலாறு. இப்போதும் ஜார்ஜ் டவுனில் அந்த கடைகள் இருக்கிறது ஆனால் பழைய சொல் உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. என்றாலும் பழைய ஆட்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். 1800களில் இருந்த பட்டணத்து தேவையை பூர்த்தி செய்யுமளவு மிகப்பெரிய இறைச்சி, மசாலைகளின் கடைகள் அங்கிருந்தன பெரும்பாலும் கோழி, வாத்து ,ஆடு, மாடு, பன்றி என எல்லாமும் அங்குக் கிடைக்குமாம்,. 1880களுக்குப் பிறகு அந்த இடம் சுகாதாரமற்று இருப்பதாலும் இட பற்றாகுறையாக இருந்ததாலும் புதியதொரு சுகாதாரமான வணிகவளாகத்துக்குத் திட்டமிட்டு சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு மேற்கே இருந்த முன்பு குஜிலி பஜார் இருந்த இடத்தில் இடம் ஒதுக்கினார்கள். இந்த இட மாற்றத்துக்கு காரணமானவர் சாம்வேல் ஜோஷ்வா லோன் என்கிற முனிசிபல் என்ஜினீயரே, …! பிராட்வேயில் இப்போதும் லோன் ஸ்கொயர் என்கிற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. இப்போது அதை சிறி ராமுலு பூங்கா என்று மாற்றிவிட்டார்கள். இந்தோ சாராசானிக் பாணியில் கட்டப்பட்ட செந்நிற கட்டடம் கருங்கல் வளைவுகளாலான சாளரங்கள், நுழைவாயில் என அழகோ பேரழகு கொண்ட கட்டடம். வேறொரு கட்டடத்தை இதனோடு ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவும் தேவையில்லை. காரணம் சென்னையில் அப்படியான கட்டிடங்கள் ஏராளம் ஒன்றை ஒன்று விஞ்சும் பேரழகு கொண்ட கட்டடக் கலையின் மாண்புகளுடன் மெட்ராஸின் பிரமிக்கத் தகுந்த அடையாளங்களாக இன்றும் இருக்கிறது.
செந்நிற கட்டடங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் அதில் மூர்மார்க்கெட் தனிரகம். அன்றைய நாட்களில் ஊர்புறங்களில் இருந்து வருபவர்கள் மிக முக்கியமாக பார்க்க விரும்பும் கட்டடங்களில் ஒன்றாக இருந்தது. மூர்மார்கெட் மெட்ராஸ் நகரின் பிரமிக்கத் தகுந்த அடையாளமாக இருந்தது.
செஞ்சதுர அரண்மனைக்கொப்பான கட்டிடம். கட்டிடத்தின் மையத்தில் திறந்தவெளி, அதில் அழகிய நீரூற்றும் அதைச் சுற்றி அசோக மரங்களும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க, உட்கார்ந்து இளைப்பாற கல் திண்ணைகள் இருந்தது. மாடிக்குச் செல்ல கருங்கல் படி அதன் ஒவ்வொரு வளைவிலும் கும்பம் போன்ற அமைப்பு என அழகிய கட்டிடத்தை கண்டிருந்தவர்கள் பாக்கியவான்கள் அவ்வளவே….
உலகின் மகத்தான படைப்பாளிகளின் புத்தகங்கள் எல்லாம் அங்குக் கிடைக்கும் சேக்ஸ்பியர், ஷெல்லீ, கவிதைகளுடன், மைக்கேல்ஏஞ்சுலா ஓவிய புத்தகங்கள், பித்தோவானின் இசை குறிப்புகள், கட்டிடக் கலை புத்தகங்கள், 50 ரூபாயில் ஆரம்பித்து 2 ரூபாய்க்கு பேரம் படியுமாம் .
நகரின் மிகச்சிறந்த பொம்மை கடைகள் அங்கிருந்தது. உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் அங்குப் பொம்மைகள் விற்பனைக்கு வரும்… .குறிப்பாகத் தலையாட்டும் பூனை பொம்மை, கற்பூர கட்டியை ஏற்றியவுடன் தண்ணீரில் படபடத்து ஓடும் இயந்திர படகு.
1930களில் சென்னை வந்த அண்ணல் அம்பேத்கர் அங்குப் பல புத்தகங்களை வாங்கியுள்ளார்.
உலகில் அம்மா அப்பாவைத் தவிர அனைத்தும் கிடைக்குமிடம் என்ற சொல் வழங்க பெற்றதற்கு ஏற்றபடி அங்கு கிடைக்காத ஒன்று இல்லவேயில்லை என்கிற மாதிரி கட்டிடத்துக்கு வெளியேயும் பலவிதமான பொருட்கள் குவிந்து கிடக்கும். புத்தூர் கட்டு போட போகிறவர்கள் இங்கு வந்து பழைய வேட்டிகள் வாங்கிப்போவார்கள். கை கால் இழந்தவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட மர கால் கைகள் கூட அங்கே கிடைக்கும்
உலகின் எந்த மூலையில் அச்சிட்ட ஆங்கில புத்தகமும் அங்கே கிடைக்கும். உலகின் மகத்தான ஓவியர்கள் , இசை மேதைகளின் இசைத் தட்டுகள், பிரபலங்கள் பயன்படுத்தித் தூக்கியெறிந்த கிராம்போன்கள். இன்னும் என்ன என்னவோ…. அதுமட்டுமா அங்குத் தீரன், மற்றும் இந்துநேசன் போன்ற காமரசம் சொட்டும் பாலியல் புத்தகங்களும் அதன் முந்தைய இதழ்களின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்புகளும் கூட கிடைக்கும்.
11.6.1924-ல் ‘வந்தேமாதரம் ! மகாத்மா காந்திக்கு ஜே !’ என்ற முழக்கங்களுடன் மூர் மார்கெட்டின் அருகிலிருந்து பேரணிகள் கிளம்பும் இடமாகவும் அது இருந்திருக்கிறது. பாரதாஸ்ரம் என்கிற அமைப்பு மூர்மார்கெட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. அன்றைய நாட்களில் தங்க சாலை தெருவில் வசித்து வந்த யமுனா பூரண திலகம்மா என்கிற சுதந்திரப் போராட்ட வீராங்கனை நாட்டு விடுதலையை முன்னிட்டு ஆர்ட்டிகள் சர்கிள் ஒன்றை நிறுவி புரட்சிகர இலக்கியங்களைச் சுற்றுக்கு விட்டாராம். அந்த இயக்கத்தில் ஒருவரான தேவராசன் என்கிற இளைஞர் மூர்மார்கெட்டில் புத்தகம் வாங்க வந்த போது போலிசார் கைது செய்து அவரிடம் துப்பாக்கியிருந்ததாக வழக்குப் பதிந்து அவரோடு சேர்ந்து மேலும் 20 பேரைக் கைது செய்து சிறையில் தள்ளினார்களாம்… அரசியல்காரர்களின் போராட்ட இயங்கு களமாகவும் மூர்மார்கெட் இருந்திருக்கிறது.
1908 ல் பாரதி ,சிவா, இவர்கள் உதவியுடன் மூர் மார்கெட்டுக்கு எதிரில் உள்ள பாதையில் வ உ சி பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார்….அந்த காலகட்டத்தில் சிறைப்படுத்தப்பட்ட வ. உ. சி அவர்கள் ராச துரோக குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற அதை எதிர்த்து 25.7. 1908 ல் மெட்ராஸ் பட்டணத்தில் ஊர்வலமும் மூர்மார்கெட்டில் பொதுக் கூட்டமும் நடந்தது. மூர் மார்கெட்டுக்கு எதிரில் இருந்த இடம் 35 அடி அகலம் 68 அடி நீளம் கொண்ட வளைவு பாதை பொதுக் கூட்டத்துக்கு வசதியாக இருந்தது முக்கிய காரணம். நகரின் பெரிய மனிதர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் செய்தி போய் சேரும் படியான முக்கியமானதொரு இடமாக மூர்மார்கெட் இருந்திருக்கிறது. அதனால் அங்கு அரசியல் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்து கிளாபத் இயக்கத்தின் பல போராட்டங்களை சவுகத்அலி, முகமது அலி சகோதரர்கள் பலமுறை மூர்மார்கெட் வளாகத்தில் நடத்தியுள்ளனர். அதனால் மூர்மார்கெட்டை சவுகத் பஜார் என்றே தேசாபிமானிகளான சுப்ரமணிய சிவாவும், பாரதாஆஸ்ரம தொண்டர்களும் அழைத்த காலம் ஒன்றுண்டு.
மூர்மார்கெட் வணிக வளாகத்தில் 24 எண் கடையில் ஜி.என் செட்டி & சன்ஸ் கடை இயங்கி வந்துள்ளது. இவரின் பெயரில் தி.நகரில் ஒரு சாலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இவர்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மதுவை வாங்கி விற்பவர்கள்.
புகழ் பெற்ற ரெடிமேட் துணிக்கடையான லண்டன் ஸ்டோரின் நான்கு கடைகளும் அங்கே இருந்துள்ளது.
நாடு கெட்டு போனதற்கு அடையாளமான கட்டிடம் என்ற பாடல் பெற்ற அழகிய கட்டிடத்தை கட்டிட பொறியாளர் R.E.எல்லீஸ் வடிவமைக்க , ஏ. சுப்பிரமணியன் என்கிற ஒப்பந்தக்காரரால் கட்டப்பட்டது. அந்த நாட்களில் பல பெருமை மிகு கட்டிடங்களை கட்டிய நம் பெருமாள் என்கிற புகழ்பெற்ற பொறியாளரை மீறி ஏ.சுப்பிரமணியனிடம் கிடைத்ததாலோ என்னவோ அவர் அதை மிக சிறப்பாக கட்டி முடித்திருந்தார். 1898ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1900ல் கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய முனிசிபாலிட்டி தலைவர் லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர் அவர்கள் முயற்சியால் கட்டப்பட்டது. அதனாலே மூர் மார்கெட் என்கிற பெயர் உண்டானது. அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக் அவர்கள் திறந்து வைத்தார். மாகாணத்தின் மொத்த கார்களையும் அங்கே நிறுத்துமளவு பெரிய கார் நிறுத்துமிடத்துடன் கூடிய வளாகம். அவ்வளவு கார்கள் நகரத்தில் மட்டுமல்ல அன்றைய மதராஸ் மாகாணத்திலேயே கிடையாதாம். அந்த நிரந்தர வணிக வளாகத்துக்கு எதிரே தற்காலிக கடைகள் பல உண்டு.
இன்றைய நள்ளிரவு 3 மணி பிரியாணி கடைகளின் முன்னோடி கடையொன்று மூர் மார்கெட் வளாகத்துக்கு வெளியே இருந்தது. காலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கெல்லாம் தீர்ந்து போகும் சுவையான மாட்டிறைச்சி பிரியாணி ….. மூர் மார்கெட்டுக்கு வடக்குப் புறத்தில் மிகக் குறைந்த விலையில் மிகத் தரமான மாட்டிறைச்சியும் இங்கே கிடைக்கும்.
நகரில் வண்ண மீன் கடைகள் இருந்த ஒரே பகுதி மூர் மார்கெட்தான் 1980கள் வரை , வண்ணப்பறவைகள் கடைகள், வளர்ப்பு விலங்குகள் கடைகள் மட்டுமல்ல நகரில் நடந்த பல கொலைகளுக்குக் கூர்மையான கத்திகளை விற்ற கடைகளும் அங்கே இருந்தன. சென்னையின் லஷ்மிகாந்தன் கொலை வழக்கு மிக பிரபலமானது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தியாகராஜ பாகவதரும் , என்.எஸ் கிருஷ்ணன் அவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள்…கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கொலைகாரன் மூர் மார்கெட் வெளிப்புற கடையொன்றில் வாங்கியிருக்கிறான், கொலை நடந்த இடமும் மூர் மார்கெட்டுக்கு மிக அருகாமையில் தான். கொலை நடந்த வேப்பேரி உள்ளது. (இப்போது நம்மை யாரும் சாட்சிக்கு கூப்பிட போவதில்லை) மெட்ராசின் அடையாளமாக இருந்த அழகிய கம்பீரமான கட்டிடம் மாதிரி வடிவமாக்கப்பட்டு சென்னை புற நகர் ரயில் நிலைய வளாகத்தில் இப்போது வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது.
85 ஆண்டுக் காலம் வாழ்ந்த செந்நிற பேரழகி கண்டவரையெல்லாம் காதலிக்க வைத்தாள் கேடுள்ளம் கொண்ட தீய நெஞ்சோடு அவளை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டார்கள். அவள் எரிந்து நாசமாவதைத் தடுக்க 20 தீயணைப்பு வண்டிகள் காப்பாற்ற 11 மணி நேரம் போராடியது…என்பது வரலாற்று, திட்டமிட்ட படுகொலையைப் பாவனைகளால். காப்பாற்ற முடியல, அந்த இடத்தில் தான் புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டிருக்கிறது . அதற்காக தானே அந்த அழகிய கட்டிடத்தை விழுங்கினார்கள்.
எளிதில் தீக்கிரையாகாத கட்டிடத்தை நாசமாக்கிய குற்றத்தைச் செய்தவர்கள் பின்னாளில் எப்படி நாசமானார்கள் என்பது வரலாற்றின் ரகசியங்களுள் ஒன்று ….எழுதுகிறவனால் மட்டுமே அதை உலகுக்குச் சொல்ல முடியும். ஒரு நாள் சொல்வோம்.
தொடரும்..
-கரன் கார்க்கி
மூர் மார்க்கெட் குறித்த பல செய்திகள் வியப்பளிக்கின்றன. நான் பள்ளியில் படிக்கும்போது மூர் மார்க்கெட் எரிந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது அதன் அருமைபெருமைகள் தெரிந்திருக்கவில்லை. மெட்ராஸ் குறித்த வரலாற்றுத் தொடர் சிறப்பு. பாராட்டுகள்.
நிறைய தகவல்கள் தோழர். கொஞ்சம் படங்கள் இணைத்திருக்கலாம். சென்னையில் இருந்தபோது எனக்கு படிக்க கிடைத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் 💐