ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

ன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது… ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது. இருப்பினும் மற்றொரு நிகழ்வு இதை விடச் சுவையானது. இந்தத் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தை எப்படி நினைவு கூர்ந்தேன் எனத் தெரியவில்லை.அன்று  நடந்தது இதுதான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, புது வருடப் பிறப்புக்கு முந்தைய மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் கேளிக்கை விருந்திற்கு என்னையும் விருந்தினராக அழைத்திருந்தார்கள். அந்த விருந்தைத் தருபவர் அனைவராலும் அறியப்பட்டவர், பல பெரும்புள்ளிகளின்  தொடர்புடைய வணிகப் பிரமுகர். அவர் கைவசமுள்ள சில நல்ல வணிகத் திட்டங்களையும் , மற்றும் பல சுவையான விஷயங்களையும் அதன் தொடர்புடைய பெற்றோர்களோடு இயல்பான சூழலில் விவாதிக்கவே குழந்தைகளுக்கான விருந்து என்ற பெயரில் இந்தக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அந்த இடத்தில்  நான் ஒரு சாதாரண ஆள், அவர்கள் குழுவிற்குப் பங்களிக்க என்னிடம் ஏதுமில்லை என்ற காரணத்தால் தன்னிச்சையாக அந்த மாலையைக் கழித்துக் கொண்டிருந்தேன். அங்கு வந்திருந்த இன்னொருவரைக் கவனித்தேன், எந்த வித சமூக அந்தஸ்தோ,தனித் திறமையோ , குடும்பப் பின்னணியோ இல்லாதவராக இருப்பவர் என நான் எண்ணிக் கொண்டேன், அவரும், என்னைப் போலவே ,எந்த நோக்கங்களுமின்றி இந்தக் குடும்ப  விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பார் போலத் தெரிந்தது. கூட்டத்தில் என் கவனத்தை ஈர்த்த முதல் மனிதர் அவர்தான். நெடுநெடுவென்று மெலிந்த கால்களுடன் உயரமாக, கடுகடுப்பான தோற்றத்துடன் இருந்தவர் மிகவும் நாகரீகமாக உடையணிந்து இருந்தார். ஆனால், அந்தக் குடும்பத்தின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு களிப்படையும் மனநிலையில் அவர் இல்லை என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. ஏதேனும் ஒரு மூலையில் ஒதுங்கி நிற்கும் போதெல்லாம் தன் புன்னகையைக் கைவிட்டு, புதர் போன்ற அடர்த்தியான கரும் புருவங்களை நெறித்துக் கொண்டிருந்தார்.  விருந்தளிப்பவரைத் தவிர வேறு யாரையுமே அவர் அறிந்திருக்கவில்லை. மிகவும் அயற்சியுற்றவராகத் தெரிந்த போதிலும் விருந்தை ஆனந்தமாக அனுபவிப்பவர் போல மனந்தளராமல் வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். அந்த மனிதன் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் மிகவும் இக்கட்டான, நலிந்த நிலையில் உள்ள தொழிலை நடத்திக் கொண்டிருப்பவர் என்றும், இந்த விருந்தினரிடம் சுய அறிமுகக் கடிதத்தை எடுத்து வந்திருக்கிறார் என்றும் பிறகு அறிய நேர்ந்தது. ஆனால், அவரைக் குழந்தைகளின் விருந்திற்கு நாகரிகம் கருதி அழைத்திருந்தவருக்கு, இவரைப் பற்றி சற்றும் அக்கறையோ சுவாரஸ்யமோ இருந்ததாகப் புலப்படவில்லை. இவருடன் யாரும் சீட்டு விளையாடவில்லை, விலையுயர்ந்த சிகரெட்டை அவருக்கு அளிக்கவில்லை, மற்றும்  பேச்சு வைத்துக் கொள்ளக் கூட எவரும் முன் வரவில்லை.பறவை பறக்கும் உயரத்தை அதன் சிறகுகளைப் பார்த்தவுடன் அறிந்து கொள்பவர்களைப் போலிருந்தது அவர்கள் செயல். அதனால்,பாவம், எனது மனிதனுக்கு, செய்வதற்கு ஏதுமில்லாத காரணத்தால், கைகளுக்கு வேலை கொடுக்கவாவது தனது மீசையைத் தடவிக்கொண்டே அந்த மாலை முழுவதும் தனித்து அமர்ந்திருக்க நேரிட்டது. அவருடைய மீசை சந்தேகமில்லாமல் அருமையாகத்தான் இருந்தது. ஆனால், ஒரு வித ஆவேச உற்சாகத்துடன் அவர் அதைத் தடவிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் , முதலில் அந்த மீசை மயிர்கள் படைக்கப் பட்டு அதன் பின் அதைத் தடவிக் கொடுக்கும் பொருட்டே அந்த மனிதன் இணைக்கப்பட்டது போலத் தோன்றியது. 

இது போலவே, விருந்தளிப்பவரின் குடும்பக்  கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவரான அவர் தவிர்த்து, மற்றொரு கனவானும் என்னைக் கவர்ந்தார். ஆனால் அவரோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அவர் ஒரு முக்கியப் பிரமுகர். அவர் பெயர் யுலியான் மஸ்டாகோவிச்.அவர் ஒரு மதிப்பிற்குரிய விருந்தினரென்று  முதல் பார்வையிலேயே தெரிந்து கொள்ளலாம், மீசையைத் தடவிக்கொண்டிருக்கும் மனிதருடன் என்ன உறவோ அதற்கு இணையான உறவு முறைதான் இந்த விருந்தாளிக்கும் அவ்விடம் இருந்தது. ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட மரியாதையோ வேறு விதம்.விருந்தளிப்பவரும் அவர் மனைவியும் அவரிடம் மிகப் பணிவான வார்த்தைகளைப் பொழிந்துகொண்டே இருந்தார்கள், அவர் என்ன கேட்டாலும் ஓடி வந்து தந்தனர், மது அருந்துமாறு வலியுறுத்தினார்கள்,புகழ்ந்தார்கள், மற்ற விருந்தினர்களை அழைத்து வந்து அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.ஆனால் அவரை இடத்தை விட்டு நகர்த்தாமல் ,மற்றவர்களிடம் அறிமுகத்திற்கு இட்டுச் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். இது போன்ற இனிமையான ஒரு மாலை எப்போதாவதுதான் வாய்க்கிறது என்று அவரிடம் சொல்லும் போது விருந்தளிப்பவரின் கண்களில் நீர் மல்கியது. அந்த முக்கியப் பிரமுகரின் இருப்பு ஏதோ என்னை அச்சுறுத்துவது போல உணர்ந்ததால், குழந்தைகளைச் சற்று நேரம் ரசித்துக்கொண்டிருந்த பின் அந்த இடத்தை விட்டு அகன்று ,  பசிய மலர்க் கொடிகள் படர்ந்திருந்த, ஆட்களற்றுக் காலியாயிருந்த ஒரு சிறிய முற்றத்தில் அமர்ந்து கொண்டேன். 

அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் மிக மிக இனிமையான சுபாவத்தோடு இருந்தனர். அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொள்ளும் பணிப் பெண்களின் , எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், வளர்ந்த, நாகரீகமானவர்களைப் போல நடந்துகொள்ள மறுத்துவிட்டனர். கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கடைசி இனிப்புப் பரிசுப் பொட்டலத்தைக் கூடப் பிரித்து விட்டனர். அங்கிருந்த விளையாட்டு பொம்மைகளையும் எது எந்த விளையாட்டுக்கு என்று அறிந்துகொள்ளும் முன்பே உடைத்து விட்டதில் வெற்றி கண்டிருந்தனர். முக்கியமாக, அந்தச் சுருட்டை முடி கொண்ட, கருத்த விழிகளுடைய வசீகரம் மிக்க சிறுவன் என்னைத் தன் மரத் துப்பாக்கியால் குறி பார்த்துச் சுட முயன்று கொண்டே இருந்தான். ஆனால் என் கவனம், அவனுடைய சகோதரி மீது பதிந்தது. பதினோரு வயது, அமைதியான, அழகாக,தோற்றமும், சிவந்த நிறமும், மிகப் பெரிய,தீர்க்கமான கனவுகள் வழியும் விழிகளுடன், எழில் மிகுந்த இளங்காதல் தேவதை போல இருந்தாள்.  அந்தச் சிறுவர்கள் ஏதோ ஒரு வகையில் அவளைத் தொல்லை செய்து கொண்டிருந்ததால் அவர்களிடமிருந்து விலகி வந்து நான் அமர்ந்திருந்த அதே காலியான முற்றத்திற்கு வந்து அமர்ந்து கொண்டு தன் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வந்திருந்தவர்கள் அவளுடைய தந்தையைச் சுட்டிக் காட்டி, அவர் ஒரு வசதி படைத்த பெரிய ஒப்பந்தத் தொழிலில் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். அதிலும், அந்தப் பெண்ணின் திருமணத்தில் தர வேண்டிய வரதட்சணைப் பணத்திற்காக இப்போதே முந்நூறாயிரம் ரூபிள்கள் தனியே எடுத்து வைத்திருப்பதாகவும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். கழுத்தைத் திருப்பி இந்த சூழலில் யாரெல்லாம் ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதை நோட்டமிட்ட போது , தலையைச் சாய்த்தவாறு,கைகளை முதுகின் பக்கம் கட்டிக் கொண்டு வம்புப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்த கனவான்களை அதீத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த யுலியான் மீது என் பார்வை பதிந்தது.அதன் பின் அந்த விருந்தை அளித்தவரும் அவர் மனைவியும் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பைக் கொடுப்பதில் காட்டிய பாகுபாட்டின் திறமையை நம்ப முடியாத  ஆச்சரியத்துடன் மெச்சிக் கொண்டேன். தனது பங்கில் ஏற்கெனவே முந்னூறாயிரம் ரூபிள்கள் வைத்திருந்த சிறுமிக்கு விலையுயர்ந்த பொம்மை அன்பளிக்கப்பட்டது.பின் வந்த அன்பளிப்புகள் அந்த மகிழ்ச்சியான குழந்தைகளின் பெற்றோர்களின் பொருளாதாரத் தரத்திற்கேற்ப மதிப்பு குறைந்து கொண்டே வந்தன.இறுதியாக, அனைவரையும் விட பின் தங்கிய வர்க்கத்தைச் சேர்ந்த , மெலிந்த, சருமத்தில் வெளுத்த புள்ளிகளுடைய சிவந்த தலை முடியைக் கொண்ட பத்து வயதுச் சிறுவனுக்கு இயற்கையின் அற்புதங்கள், அர்ப்பணிப்பின் கண்ணீர் போன்ற தலைப்புகள் கொண்ட கதைப் புத்தகங்கள் மட்டும் கிடைத்தன.அவற்றில் சித்திரங்களோ, மலிவான மர அச்சுகளால் பதிக்கப் பட்ட ஓவியங்களோ கூட இல்லை.அந்த வீட்டின் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியிலுள்ள ஏழை விதவைப் பெண்ணின் பயந்த சுபாவமுள்ள, அடக்கி ஒடுக்கி வளர்க்கப் பட்ட மகன் அந்தச் சிறுவன். குட்டையான சட்டையும், மலிவான கால் சராயும் அணிந்திருந்தான். அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிய பிறகு, மற்ற சிறுவர்களைச் சுற்றி நடந்தான். அவர்களுடன் விளையாட மனம் ஏங்கினாலும் துணிவு வரவில்லை. தன்னுடைய தகுதியை  ஏற்கெனவே உணர்ந்தும் புரிந்தும் கொண்டவன் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. குழந்தைகளை அவதானிப்பது எனக்குப் பிரியமான செயல். வாழ்க்கையை நோக்கி அவர்கள் எடுத்து வைக்கும் சுதந்திரமான முதல் அடி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிவந்த முடிப் பையன் , மற்ற சிறுவர்களின் விலையுயர்ந்த பொம்மைகளையும் விளையாட்டுச் சாமான்களையும் பார்த்து மிக ஆர்வம் கொண்டவனானான், குறிப்பாக, அந்த நாடக அரங்கு..அதில் பங்கேற்பதற்காகத் தன் தன்மானத்தையும் தியாகம் செய்யத் தயாராகி விட்டான். அதற்காக,அங்கிருந்த பருமனான ஒரு சிறுவனுக்கு தன் ஆப்பிளைக் கொடுத்தான், அந்த சிறுவனின் சட்டைப் பையிலும், கைக்குட்டையிலும் ஏற்கெனவே திணித்து வைத்திருந்த இனிப்புப் பண்டங்கள் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தன. அந்த நாடக அரங்கு விளையாட்டிலிருந்து தன்னை விரட்டி விடாமலிருக்க மற்றொரு சிறுவனைத் தன் முதுகில் சுமை ஏற்றிக் கொண்டான். இருந்த போதிலும் அந்த ஆணவம் பிடித்த சிறுவன் இவனைக் கீழே தள்ளி விட்டான். கண்காணிப்பாளர் பெண்மணி , அவன் அன்னை ,உடனே வந்து மற்ற சிறுவர்கள் விளையாடும் போது அவன் இடையில் போய் நுழையத் தேவையில்லை என்று சொன்னவுடன்,  சிறுவன் அங்கிருந்து நீங்கி அந்த அழகிய சிறுமி அமர்ந்திருந்த அறைக்குச் சென்றான். அவள் அவனைத் தன்னுடன் அமர்ந்து கொள்ள அனுமதித்தவுடன் , இருவரும் ஆர்வமுடன் அவளுடைய விலையுயர்ந்த பொம்மைக்கு அலங்காரம் செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.  

பசிய மலர்க் கொடிகள் படர்ந்த அறையின் நடுவே அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்திருந்த நான்  சிவப்பு முடித் தலைச் சிறுவனும், தனது பொம்மையைச் சீராட்டிக் கொண்டிருந்த முந்நூறு ஆயிரம் வரதட்சணையை முடிந்திருக்கும் அழகிய பெண்ணும் பேசிக்கொண்டிருந்த கலகலப்பான அரட்டையைக் கேட்டுக் கொண்டிருந்த போது சட்டென்று யிலியான் மஸ்டாகோவிச் அந்த அறைக்குள் நுழைந்தான். குழந்தைகளுக்கிடையே நிகழ்ந்த சண்டையினால் ஏற்பட்ட குழப்பத்தைச் சாதகமாக்கிக் கொண்டு வரவேற்பறையிலிருந்து நகர்ந்து விட்டான். சில நிமிடங்களுக்கு முன்பு தான்  , பெருஞ்செல்வத்தின் எதிர்காலப் பெண் வாரிசின் தந்தையுடன் மிகவும் பணிவாக அவன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்திருந்தேன். இப்போது விரல்களை ஆட்டி எதையோ கணக்கிட்டுச் சிந்திப்பவன் போலத் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்.

முந்நூறு…முந்நூறு” என்று கிசுகிசுத்தான். “பதினொன்று..பன்னிரெண்டு, பதின்மூன்று ..இப்படியாக மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தான். ”பதினாறு -அதுவும்  ஐந்து வருடங்களில்..!!!” ஒரு வேளை அது நான்கு சதவீதத்திலிருந்தால்,. – ஐந்தைப் பன்னிரெண்டால் பெருக்கினால் அறுபது; ஆமாம், அந்த அறுபதுக்கு.ம்ம்ம், இன்னும் ஐந்து வருடங்களில் அது நானூறு ஆயிரம் ஆகி விடும். ஆமாம்!…ஆனால் அவன் நான்கு சதவீதத்தோடு நிற்பானா? போக்கிரி, எட்டு அல்லது பத்து கிடைக்கும்.ம்ம், ஐந்நூறு ..குறைந்த பட்சம் என்று  வைத்துக் கொள்ளலாம், அது நிச்சயம்..இன்னும் கூடக் கொஞ்சம்.உண்மையில் இன்னும் கூட இருக்கலாம்..ஹ்ம்ம்!, 

தயக்கமும் யோசனையும்  தீர்ந்த பின் ,மூக்கைச் சிந்திக் கொண்டவன், அறையை விட்டு நீங்கிச் செல்லும் தருணத்தில் , சட்டென்று அந்தச் சிறுமியின் மீது பார்வை படிய அப்படியே நின்றான். பூந்தொட்டிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த என்னைப் பார்க்கவில்லை.  அவன் மிகவும் உற்சாகமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. கணித்துக் கொண்டிருந்த கணக்கீடுகளோ அல்லது வேறு எதாவது ஒன்றோ அவன் செயல்திறனை பாதித்ததோ என்னவோ தெரியவில்லை, கைகளைத் தேய்த்துக் கொண்டிருந்தவனுக்கு சரியாக நிற்கக் கூட முடியவில்லை.அந்த உற்சாக மிகுதியில் , அப்படியே குனிந்து அந்த எதிர்கால செல்வந்தப் பெண் வாரிசைத் தெளிவாக நோட்டமிட்டான்.  அப்படியே முன்னால் செல்ல முனைந்தவன், முதலில் சுற்று முற்றும் பார்த்து விட்டு பின் ஏதோ குற்ற உணர்வு கொண்டவன் போல ஓசையின்றி அடி மேல் அடி எடுத்து வைத்து அந்தக் குழந்தைகளை நோக்கி நகர்ந்தான். சிறு புன்னகையுடன் அவள் இருந்த இடத்தை அடைந்தவுடன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். இந்தச் செயலைச் சற்றும் எதிர்பாராத சிறுமி, பீதியடைந்து பதறிச்  சத்தமாகக் குரலெழுப்பினாள். 

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் செல்லப் பெண்ணே? கிசுகிசுப்பான குரலில் கேட்டவன் , அங்குமிங்கும் பார்த்து விட்டு அந்தச் சிறுமியின் கன்னத்தில் தட்டினான். 

“நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம்”

“ஆங், அவனுடனா?” தலைசாய்த்து அந்தச் சிறுவனைப் பார்த்தான் யுலியான் மஸ்டாகோவிச்.”நீ வரவேற்பறைக்குச் சென்று விளையாடலாமே செல்லப் பையனே”

அவனை விழித்துப் பார்த்த சிறுவன் எதுவுமே பேசவில்லை. அவனையே மீண்டும்  பார்த்த யுலியான் , அந்தச் சிறுமியை நோக்கி மேலும் குனிந்தான். 

“அப்புறம், உனக்கு என்ன கிடைத்தது  குட்டிப் பெண்ணே? இந்தப் பொம்மையா?”

“ஆமாம், பொம்மைப் பெண், முகத்தைச் சுருக்கிக் கொண்டே , சற்று வெட்கத்துடன் பதிலளித்தாள்” 

“பொம்மைக் குட்டி,…இந்த பொம்மையை எதைக் கொண்டு செய்கிறார்கள் என்று தெரியுமா? ”

”எனக்குத் தெரியாது”தலையைக் குனிந்து கொண்டே மெல்லிய குரலில் சொன்னாள் சிறுமி

“இது பழைய துணிகளால் ஆனது செல்லம், 

நீ முன்னறைக்குப் போய் உன்னுடைய தோழர்களுடன் விளையாடுவது நல்லது பையனே” சிறுவனை முறைத்துக் கொண்டே சொன்னான் யுலியான் மஸ்டாகோவிச்.  முகத்தைச் சுருக்கிக் கொண்டே சிறுவனும் சிறுமியும் கைகளைப் பற்றிக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பிரிந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை.

“அந்த பொம்மையை ஏன் உனக்குக் கொடுத்தார்கள் என்று உனக்குத் தெரியுமா? “ மிக மிக மிருதுவான தழைந்த தொனியில்  கேட்டான் யுலியான் மஸ்டாகோவிச்

“எனக்குத் தெரியாது”

“ஏனென்றால், எல்லாக் காலத்திலும் நீதான் மிகவும் நல்ல நடத்தை கொண்ட, இனிமையான  சிறுமியாக இருந்திருக்கிறாய்”

அந்த நேரத்தில்தான், எப்போதையும் விட அதிக உற்சாகம் கொண்ட யுலியான் மஸ்டாகோவிச் , தாள முடியாத, உணர்வு மிக்க  கிளர்ச்சியூட்டும் ,காதில் விழ இயலாத சன்னமான குரலில் , அந்தச் சிறுமியிடம் கேட்டே விட்டான்—

“உன் அப்பாவையும் அம்மாவையும் உனக்காகப் பார்க்க வருகையில் என்னிடம் அன்பு காட்டுவாயா, இனிய செல்லப் பெண்ணே?’

இதைச் சொல்லியவாறு, யுலியான் மஸ்டாகோவிச்  மீண்டும் ஒரு முறை அந்த “இனிய ,செல்லப் பெண்ணை” முத்தமிட முயற்சி செய்தான். ஆனால் அழுகையின் விளிம்பிலிருந்த சிறுமியைப் பார்த்ததும், அவளது கைகளைப் பற்றிக் கொண்ட சிவந்த முடிச் சிறுவன் அவளுக்காகச் சுரந்த  இரக்கத்தினால் மெல்லிய குரலில் குறை கூறுவது போலச் சிணுங்கினான்.

“ஓடிப் போ, இங்கிருந்து போய் விடு” வரவேற்பறைக்குப் போ, அங்கிருக்கும் உன் கூட்டாளிப் பையன்களுடன் விளையாடு போ” .

“இல்லை, அவன் போகக்  கூடாது, அவன் போகத் தேவையில்லை, நீங்க போங்க” அவனை விட்டு விடுங்கள், விட்டு விடுங்கள்” சிறுமி இறைஞ்சினாள்.அழுது விடுபவள் போலத் தெரிந்தாள்.

கதவருகே யாரோ வரும் அரவம் கேட்டது. சட்டென்று சுதாரித்து, எச்சரிக்கையுடன் தனது மிடுக்கான தோரணைக்குத் திரும்பினான் யுலியான்.  ஆனால் அந்த சிவந்த முடிப் பையன் அவனை விட எச்சரிக்கை அடைந்தான். அந்தச் சிறுமியை அங்கேயே கைவிட்டவன், சுவரோரம் பதுங்கி, ஊர்ந்து, அந்தக் கூடத்திலிருந்து சாப்பாட்டு அறைக்கு நழுவிச் செல்ல முற்பட்டான். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு யுலியானும் சாப்பாடு பரிமாறும் அறைக்குச் சென்றான். லாப்ஸ்டர் இறால்  போல முகம் சிவந்தவன் தன் செய்கையை எண்ணித் தானே அவமானப் பட்டுக் கொண்டான்.தன்னுடைய மூர்க்கத்தனத்தையும் அவசரத்தையும் நினைத்துத் தன் மீதே எரிச்சல் பட்டான். தான் போட்டு வைத்திருந்த கணக்குகளில் மதி மயங்கி, அதில் ஈர்க்கப்பட்டவன், கண்ணியத்தையும், மிடுக்கையும் மறந்து, அவனது கவனத்தைக் கவர்ந்த பொருளிடம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தச் சிறுமி , அவனுடைய கவனத்துக்கு உரியவளாக  இருக்க முடியாது என்று தெரிந்த பின்னரும், ஒரு சிறு பையனைப் போல நடந்து கொள்ள எண்ணினான்.. அந்த உயர்குடி மனிதனைப் பின் தொடர்ந்து சாப்பாட்டு அறைக்குச் சென்ற போது அங்கு, வெறுப்பிலும், விரக்தியிலும் உந்தப்பட்ட யுலியான் மஸ்டாகோவிச் அந்தச் சிவந்த முடிச் சிறுவனை அச்சுறுத்திக் கொண்டிருந்த விசித்திரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். அவனிடமிருந்து ஒதுங்கிச் சென்று கொண்டிருந்த சிறுவன் தப்பியோட வழி தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

“ஓடிப் போய் விடு, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ ஓடிப் போடா போக்கிரி, போய் உன்னுடைய கூட்டாளிகளுடன் விளையாடு அழுமூஞ்சிப் பயலே.”

அச்சத்தில் நடுங்கிய சிறுவன் செய்வதறியாது அங்கிருந்த மேசைக்கடியில் ஊர்ந்து செல்ல முயன்றான். அவனைத் துன்புறுத்துபவனோ, கடுஞ்சினத்தோடு ,  மென் இழைகளால் நெய்த தன்னுடைய அகலமான கைக்குட்டையை எடுத்து மேசைக்கடியில் சப்தமேதும் எழுப்பாமல் அமைதியாக அமர்ந்திருந்த சிறுவனின் முன் சுழற்றினான்., சற்றே நெடிய உருவம், கட்டுடல், கனத்த கால்கள், தொப்பையுடன் இருந்த யுலியான் மஸ்டாகோவிச்சின் தேகத்தில்  பருமனாவதிற்கான சாயல்கள் தென்பட்டுக் கொண்டிருந்தன.ஒரு மனிதனின் கனத்த உருண்டையான ,தோலுரிக்காத தானிய விதை போல இருந்தான். வியர்த்து, மூச்சு வாங்கி, பயங்கரமாகத் தோற்றமளித்தான். ஒரு வழியாக ,ஏறத்தாழ அவன் உடலைச் சீராக்கிக் கொண்டான்,அதை அடையும் அளவு,அவ்வளவு கொதி மனநிலையிலிருந்தான் அல்லது பொறாமையிலிருந்தான் எனச் சொல்லலாம். நான் மிகப் பலமாகச் சிரித்து விட்டேன். திரும்பிப் பார்த்த யுலியான் தான் அடைந்த அத்தனை அவஸ்தைகளுக்கிடையிலும் திகைப்பில் மூழ்கினான்.அதே வேளையில், எதிர்புறமிருந்த கதவிலிருந்து விருந்து தருபவர் வந்து விட்டார். மேசைக்கடியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்த  சிறுவன் தன் முழங்கைகளையும் கால் முட்டியையும் துடைத்துக் கொண்டான். கையில் பிடித்திருந்த கைக்குட்டையை எடுத்து அவசர அவசரமாக மூக்கின் மீது வைத்துக் கொண்டான் யுலியான் மஸ்டாகோவிச். 

விருந்தளிப்பவரோ எங்கள் மூவரையும் ஒரு விதக் குழப்பத்துடன் பார்த்தார் .ஆனால் வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கண்டவரும் , வாழ்க்கையை மிகவும் நுணுக்கமாகவும் அணுகுபவரான அவர், உடனடியாக தனது விருந்தாளியை நேரடியாகக் கையாளக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.  

“இதோ இந்தச் சிறுவன்தான், சிவந்த முடிப் பையனை நோக்கிக் கை காட்டியவர், இவனுக்காகத்தான் உங்கள் செல்வாக்கைப் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

“அஹ்!, வியந்தான் யுலியான் மஸ்டாகோவிச்.அந்த விசித்திரச்  சூழலிலிருந்து மீளச் சிரமப்பட்டான்.

பணிவாக, வேண்டுகோள் விடுக்கும் தொனியில் கூறினார்.எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் மகன்,.மிகவும் ஏழை,  அரசு வேலையிலிருந்த நேர்மையான ஊழியனின் விதவை, ; அதனால்..அதனால்..யுலியான் மஸ்டாகோவிச், உங்களுக்கு இயலுமென்றால்..

“ஓ ஓ, இல்லையில்லை, அவசரமாக மறுதலித்தான் யுலியான்.  இல்லை, ஃபிலிப் அலெக்ஸிவிச், அது சாத்தியமில்லை,. நான் விசாரித்து விட்டேன்,வேலை ஏதும் காலி இல்லை, அப்படியே இருந்தாலும், இருபதுக்கும் மேற்பட்ட சிபாரிசுகள் உள்ளன..என்னை மன்னித்து விடுங்கள்.. மிக வருத்தப் படுகிறேன்.”

‘ரொம்பவும்  பாவம், அவன்.  மிகவும் அமைதியான, நன்னடத்தை உள்ள பையன்” விருந்துக் காரர் சொல்லிக் கொண்டே இருந்தார்.

“பெரிய போக்கிரிப் பயல், நான் பார்த்தவரை பெரிய போக்கிரிப்பயலாக இருக்கிறான்” உதட்டைச் சுழித்துக் கொண்டே பதிலுரைத்தான் யுலியான் மஸ்டாகோவிச். “இங்கே ஏன் நிற்கிறாய்? இங்கிருந்து போ, உன்னுடைய கூட்டாளிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடு போ, அந்தச் சிறுவனைப் பார்த்துச்  சொன்னான். 

அப்போது தன்னை அடக்க முடியாமல் ஓரக்கண்ணால் என்னை நோட்டமிட்டான். நானும் என்னை அடக்க முடியாமல் அவன் முகத்திற்கெதிரே சிரித்து விட்டேன். உடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட யுலியான் மஸ்டாகோவிச்,, அவன் கேட்பது என் காதுகளில் விழும் எனக் கணித்தே, மெல்லிய குரலில் ,கேட்டான். “யாரந்த விசித்திரமான இளைஞன்?”இருவரும் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டே அறையை விட்டு நகர்ந்தனர். அதன்பின், விருந்தளிப்பவரிடம் ஏதோ சொல்ல அதை நம்ப முடியாதவன் போல யுலியான் தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டே சென்றான்.

நன்றாக மனம் விட்டுச் சிரித்த  பின், வரவேற்பறைக்குச் சென்றேன். அங்கே அந்தப் பெரிய மனிதனைச் சுற்றி விருந்துக்கு வந்திருந்த குடும்பங்களின் அன்னையர் தந்தையர் எனச் சூழ்ந்து நின்றனர். அப்போதுதான் அவனுக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்ட ஒரு பெண்மணியுடன் மிக வாஞ்சையுடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். யுலியான் மஸ்டாகோவிச் சற்று முன் முற்றத்தில்  நாடகம் போட்ட அதே சிறுமியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் அந்தப் பெண்மணி. மனதை ஈர்க்கும் பொலிவுடைய அந்தச் சிறு பெண்ணின் அழகை, திறமையைப் பற்றி மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து புகழுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான். சாமர்த்தியமாக அந்த அன்னையின் மனம் குளிர பேசிக் கொண்டிருந்தான்.அவரோ ஆனந்தக் கண்ணீருடன் அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.   தந்தையின் இதழில் புன்னகை நெளிந்தது. எங்கள் இனிய விருந்தளிப்பவரோ அங்கு நிலவிய முழுத் திருப்தியான சூழலில் களித்திருந்தார். விளையாடும் குழந்தைகள் கூட பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டனர். அந்த சூழலே மரியாதைச் சம்பிரதாயங்களால் திகட்டிப் போனது.அதன் பின் அந்தச் சிறுமியின் அன்னை, யுலியானின் செய்கையால் மனம் நெகிழ்ந்து, மிகவும் பணிவான மொழியில் , அவனது மதிப்பு மிக்க வரவால்  தங்கள் இல்லத்தைப் பெருமைப் படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், யுலியான் மஸ்டாகோவிச் அந்த அழைப்பைப் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்று, அங்கு செல்ல இசைந்ததாகவும், அறிந்தேன். வந்திருந்த விருந்தினர் அனைவரும் மிகவும் ஒழுங்குடனும் பண்புடனும் திசைக்கொருவராகக் கலைந்து செல்கையில், அந்த ஒப்பந்தத் தொழில் முதலாளி, மனைவி, மகள் மற்றும் அதி முக்கியமாக யுலியான் மஸ்டோகோவிச் ஆகியோரைப் பற்றி மிக உயர்வான சொற்களையும் புகழுரைகளையும் பொழிந்து தள்ளினர்.

“அந்தக் கனவானுக்குத் திருமணமாகி விட்டதா?”  யுலியான் மஸ்டாகோவிச் அருகில் நெருக்கமாக நின்றிருந்தவரிடம் விசாரிக்கையில் என்  குரல் சற்று உரத்துக் கேட்டுவிட்டது. என் மீது ஒரு வன்மத்துடன், ஆராய்வது போலப் பார்வையைச் செலுத்தினான்.

”இல்லை” உடன் நின்றவர் பதில் சொன்னார். அவருக்கு நான் வேண்டுமென்றே ஏற்படுத்திய தர்மசங்கடத்தால் மனதார எரிச்சலுற்றார், 


எதோ ஒரு தேவாலயத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தேன். வண்டியில் சென்று கொண்டிருந்த மக்களின் கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்தேன். ஒரு திருமணத்தைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு  வாயில் புறம் சென்று மணமகனைப் பார்த்தேன். நெடிய தோற்றம், ஊட்டமானவன், சிறிது தொப்பையுடன் இருந்தான். மிக ஆடம்பரமான ஆடைகள் அணிந்திருந்தான். அங்குமிங்கும் மிடுக்காக அலைந்து கொண்டு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். மணமகள் வருகிறாள் என்னும் செய்தி ஒரு வழியாகக் காதில் விழுந்தது. கூட்டத்தில் நசுங்கி முன்னேறிச் சென்று, அந்த அற்புதமான அழகியைக் கண்டேன். பருவத்தின் தலைவாசலில் அப்போதுதான் எட்டியிருப்பாள் போல இருந்தாள் ஆனால் முகம் வெளுத்து, அதி தீவிர சோகத்திலிருந்தாள். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். சிவந்த கண்களைப் பார்த்த போது, இப்போதுதான் அழுது ஓய்ந்திருக்கிறாள் என்று தோன்றியது.முகத்தின் ஒவ்வொரு அம்சமும்  அவளது அழகிற்கு ஏதோ ஒரு வித கண்ணியத்தையும், தீவிரத்தையும் தந்தது. ஆயினும் அந்த இறுக்கம், கண்ணியம், மற்றும் துயரத்தையும் ஊடுருவி அவள் குழந்தைமையின் வெகுளித்தனம் மிளிர்ந்தது.விவரிக்கவியலாததொரு கபடமற்ற தன்மை, நெகிழ்வு,இளம்பிராயம் யாவும் ஓசையின்றி கருணைக்காக யாசித்துக் கொண்டிருந்தன,,

அவளுக்கு பதினாறு வயதுதான் ஆகிறது என்று அங்கிருந்தோர்  பேசிக் கொண்டனர். மணமகனைக் கவனமாகப் பார்த்த போது, அவன் யுலியான் மஸ்டாகோவிச் தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். கடந்த ஐந்து வருடங்களாக அவனை நான் பார்க்கவில்லை. இப்போது அந்தப் பெண்ணை நான் பார்த்தேன். கடவுளே!!கூட்ட நெரிசலுக்கிடையில் புகுந்து , எவ்வளவு விரைவாகத் தேவாலயத்தை விட்டு நீங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறினேன்.  கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள்: அந்தப் பெண் ஒரு பணக்காரப் பெண் வாரிசு என்றும், அவளுக்கு ஐந்நூறு ஆயிரம் திருமணப் பிணைத் தொகையும்,மற்றும்..பெட்டி நிறையச் செல்வமும் உண்டென்றும்.. .

“லாபகரமான  வியாபாரம்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டே தெருவை நோக்கிச் சென்றேன் .


– ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி

தமிழில் : லதா அருணாச்சலம்


ஆசிரியர் குறிப்பு:

  • ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி

வாசிக்க : விக்கிபீடியா

 


  • லதா அருணாச்சலம்  

கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் . 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.