பிரிப்பான்கள்

  • பிரிப்பான்கள்

வழமையாக  சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும்.
அற்புதமான அகலத்தோடு
படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு
கீழே நகரும் போக்குவரத்தையும்
வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி

வழமையாக மருத்துவர்களுக்கு
கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும்
அவை அவர்களுக்கும் வலிகளுக்கும் இடையிலான தூரத்தை
பிடித்து வைத்திருப்பவை.

வழமையாக உறவினர்கள்
மலர்களை வாசல் கதவருகே வைப்பார்கள்
வருங்காலத்தில் மரணிக்கக் கூடியவர்களிடம்
இப்போதே மன்னிப்பை யாசித்தபடி

வழமையாக அலங்காரமின்றி பெண்கள்
முன்னறை பளிங்குத் தரையில் நடப்பார்கள்
அவர்களது மகன்கள்
ஒளி காட்டிகளின் முன்னால் நின்றிருப்பார்கள்
எக்ஸ்ரே அட்டைகளை இறுக்கிப் பிடித்தபடி
அவர்களுடைய பெற்றோருக்கு
இன்னும் காலம் மட்டும் எஞ்சியிருந்தால்
குரூரம் கொஞ்சம் மங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளோடு

வழமையாக எல்லாமே
திரும்பவும் நிகழும்
வார்டுகள் புதிய உடம்புகளால் நிரம்பும்

இந்த எல்லா நெஞ்சாங்கூடுகளையும்
உயிர்ப்பின்றித் தவிக்க விட்டபடி
ஒரு துளைவிழுந்த சுவாசப்பை
உலகின் மொத்த ஆக்சிஜனையும் உறிஞ்சி எடுப்பது போல

 

  • கண்ணாடிகளின் வீடு

நாங்களிருவரும் ஒன்றாகச் செல்வோம்
கேளிக்கைப் பூங்காவுக்கு
நீ உன்னுடைய வாப்பாவின் பேரீச்ச மரத்தை விட உயரமாக உன்னைக் காண்பாய்
நான் உன்னருகில் வளைந்தும் குட்டையாகவும் நின்றிருப்பேன்
சந்தேகமின்றி நாங்கள் அதிகம் சிரிப்போம்
எங்களுக்கிடையில் கருணை பெருக்கெடுக்கும்.

எங்களிருவருக்கும் தெரியும்
கேளிக்கைப் பூங்காக்களுக்கு செல்வதற்கு
மறுக்கப்பட்ட குழந்தைப் பருவங்களை
எங்களுடைய முதுகுகளில் சுமந்திருக்கிறோம் என்பது.


 

-இமான் மெர்ஸல்
தமிழில்: ஷமீலா யூசுப் அலி


ஆசிரியர் குறிப்பு:

இமான் மெர்ஸல்:

இமான் மெர்ஸல் 1966 இல் எகிப்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். கெய்ரோவின் மன்சூறா பல்கலைக்கழக கலாநிதியான இமான் 1985-1988 வரை பின்த் அல் அர்ழ் (பூமியின் மகள்) என்ற சுதந்திரப் பெண்ணிய சஞ்சிகையின் இணை ஆசிரியராக இருந்தவர். மெர்ஸலின் 4 வது கவிதைத் தொகுதியானமாற்றுப் புவியியல்அவரது எழுத்துக்களில் ஒரு புது அத்தியாயம். இடம் பெயரல், அடையாளச் சிக்கல் அனுபவங்கள் பற்றி அவரது கவிதைகளில் ஆராய்கிறார். இமான் இப்போது கனடாவில் தமது கணவருடனும் இரு மகன்களுடனும் வசித்து வருகிறார். அல்பர்டா பல்கலைக் கழகத்தில் அரபு மொழி மற்றும் இலக்கியம் கற்பித்து வருகிறார்.

 

ஷமீலா யூசுப் அலி:

ஷமீலா யூசுப் அலி இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார்.
பெண்கள் சம்பந்தமான மாற்றுக் குரலாகச் செயற்படும் FemAsia Magazine (www.femasiamagazine.com) என்ற இணைய இதழின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சமூகவியலிலும் இதழியலிலும் இரு முதுகலைப்பட்டங்களைப் பெற்றுள்ள ஷமீலா முஸ்லிம் பெண்கள், அடையாளச் சிக்கல், டிஜிட்டல் குழந்தைப் பருவம் போன்ற விடயங்களில் ஆய்வுகளைச் சமர்ப்பித்திருக்கிறார்.
ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் சரளமாக எழுதும் இவருக்கு ஓவியம் வரைவதிலும் மொழிபெயர்ப்பதிலும் அதிக ஈடுபாடு உண்டு.

2 COMMENTS

  1. மருத்துவமனைகளில் வழமையாக நிகழ்பவைதாம். ஆனால் ஒவ்வொரு வழமைக்குப் பின்னாலும் எவ்வளவு வலியும் துயரும் மறைந்திருக்கிறது. பிரிப்பான் மனம் தொட்ட கவிதை.

  2. சிறந்த கவிதை சிறந்த மொழி பெயர்ப்பு, மிகவும் மகிழ்ச்சி /நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.