சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக் கண்டு நான் வாந்தி எடுப்பது போல சைகை செய்வதும், அவள் அதற்குச் சிணுங்குவது போல நடிப்பதும் எங்கள் வேலைப் பளுவிற்கிடையில் எங்களை ஆசுவாசப்படுத்தும் சில கணங்களாக இருந்தன.
அவள் நம்மூர்ப் பெண்களைப் போல மூக்குத்தி போட்டிருந்தாள். அவளது அம்மா ஸ்பெயின் நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர், அப்பா கயானாக்காரர். டெனிஸ் என்றால் ‘ஒயின்களின் கடவுள்’ என்றொரு பொருள் உண்டாம். தற்செயலாகவோ என்னவோ அவள் எங்கள் பல்பொருள் அங்காடியில் ஒயின் மற்றும் கடல் உணவுகளுக்கான பகுதியின் கண்காணிப்பாளராக இருந்தாள்.
‘எங்கள் சந்தையின் ஒயின் விற்பனையைப் பன்மடங்கு அதிகரிக்க வந்த ஒயின் கடவுளே’ என்று அவளை நான் கிண்டல் செய்வேன். பதிலுக்கு அவள், ‘எம் தேசத்தின் மொத்த ஒயின் பாட்டில்களையும் காலி செய்ய இந்திரனின் தேசத்திலிருந்து வந்திருக்கும் சாத்தானே’ என்று சொல்லிக் கண்ணடிப்பாள்.
டெனிஸ் இந்த நிறுவனத்தில் ஐந்து வருடங்களாக வேலையில் இருக்கிறாள். விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்து, இன்று அடுத்த தள மேலாளர் அவள்தான் என்னும் அளவிற்கு வந்திருக்கிறாள். வேலைநேரத்தில் அவள் நடந்து செல்வதை யாரும் பார்க்க முடியாது, எப்போதும் பறந்துகொண்டுதான் இருப்பாள். அவள் வாயும் ஓய்வதேயில்லை. அவள் கண்காணிக்கும் பகுதியில் ஒருவரும் உட்கார்ந்து விட முடியாது. ஓர் இராணுவ அதிகாரியைப் போல மற்றவர்களை விரட்டுவாள்.
டெனிஸுக்கு என்னை விட பத்து வயசாவது அதிகமாக இருக்கும். உயரத்திலும் ஓரடி அதிகமிருப்பாள். வாட்ட சாட்டமாக ஒரு மல்வித்த வீராங்கனை போல இருப்பாள். ஒவ்வொரு முறை அவளை மேல்நோக்கிப் பார்த்துப் பேசும்போதும் என்னையறியாமல் ஒருவித எரிச்சல் வரும். ஆனால், அந்த எரிச்சல் அவளது கண்களைச் சந்திக்கும் வரைதான். நீல நிறக் கண்கள். என்னைத் துளைத்து வெளியேறும் கிண்டல் பார்வை. நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் இடைவேளை எடுப்போம். சொல்லப்போனால் அந்த இடைவேளை வருவதற்காக நான்தான் காத்துக் கொண்டிருப்பேன். இராணுவ அதிகாரி பிம்பத்திலிருந்து ஒரு சுட்டிப்பெண்ணாக மாறி துள்ளிக்குதித்து வருவாள்.
அப்படி ஓர் இடைவேளையின்போது நடந்து நடந்து நாங்கள் மாஹோ கடற்கரைக்கே வந்து விட்டோம். அடிக்கடி வரும் இடம்தான். மாலை நான்கு மணி வாக்கில் வந்தால் இரண்டு, மூன்று விமானங்கள் நம் தலைமீது 30 மீட்டர் உயரத்தில் பறந்து இறங்குவதைப் பார்க்க முடியும். ஒவ்வொரு விமானம் இறங்கும்போதும் டெனிஸ் அதைத் துள்ளிப் பிடிப்பாள்.
“கெவின், சிகரெட் கொடு” என்றாள் டெனிஸ். ஒவ்வொரு முறை அவள் சிகரெட் பிடிக்கும்போதும் முதலில் கண்களை மூடி சிகரெட்டின் நுனி முதல் பஞ்சு வரை முகருவாள். பின், அந்த சிகரெட்டின் முனையைத் திருகிக் கீழே போடுவாள். பின், சிகரெட்டை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தித் தட்டையாக்குவாள். அதன் பின்னரே பற்ற வைப்பாள்.
அன்றும் அப்படியே செய்து சிகரெட்டை வாயில் வைத்து நான் அதைப் பற்ற வைப்பதற்காக முன்னோக்கி வந்தாள். “இரு, நான் கேட்க வேண்டுமென்று நினைத்தேன்..நீ ஏன் எப்போதும் இப்படிச் செய்கிறாய்?”
“எப்படி..எப்படி?” என்று புருவத்தை இரண்டு முறை மேலே தூக்கிக் கேட்டாள்.
“அதென்ன, சிகரெட் முனையைப் பிய்த்துப் போடுகிற பழக்கம்? எத்தனையோ மொடாக் குடிகாரர்களுடன் இருந்திருக்கிறேன், யாரும் இப்படிச் செய்வதைப் பார்த்ததில்லையே!”
அவள் லேசாகச் சிரித்தாள். அலைகள் வந்து எங்கள் காலடிகளை நனைத்துச் சென்றுகொண்டிருந்தன.
“அது, கெவின்..என்னை ஆட்கொண்டிருந்த மரியுவானாவிற்கும் எனக்குமான ஆழமான உறவின் நீட்சிதான் இது. அப்போதெல்லாம் மரியுவானா இல்லாமல் நான் ஓர் இரவு கூட உறங்கியதில்லை. இப்போது அதை விட்டுவிட்டாலும் முகர்ந்து பார்த்துப் பிய்த்துப் போடுகிற பழக்கம் விடவில்லை…ஒரு வேளை அப்படிச் செய்வதால்தான் என் மனம் நிறைவடைகிறதோ என்னவோ!”
“சரிதான் டெனிஸ்.மனிதர்களின் பழக்கங்கள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றன…நானும் சில காலம் மரியுவானா புகைத்தேன்…ஒரு நாள் மிகவும் அதிகமாகி பேனிக் அட்டாக் வந்துவிட்டது…அதிலிருந்து வெளிவர நான் பட்ட பாடு..போதும் போதும் என்றாகிவிட்டது.”
“ம்ம்..நீயாவது பரவாயில்லை…நான் ஒரு சைக்கோ மாதிரி ஆகிவிட்டேன்..அப்பா அம்மாவிடம் தாறுமாறாகக் கத்துவது, எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு உடைப்பது…நிறைய ஹேலுசினேஷன்ஸ் வேறு..ஒருநாள் ஒரு கத்தியைத் தூக்கி அப்பா மேல் எறிந்துவிட்டேன்…தேங்க் காட்! அவர் விலகிவிட்டார்…”
இப்போது அவள் வேகமாகப் புகைக்க ஆரம்பித்திருந்தாள், நீண்ட இழுப்புகள். ஆழமாக இழுத்து பெருமூச்சோடு சேர்த்து வெளிவிட்டாள்.
“ஓ..அப்படியென்றால் இந்த தேவதைக்குப் பின்னால் ஒரு பயங்கரமான கதை இருக்கிறதா?” என்று சொல்லிச் சிரித்தேன். அவள் அமைதியாக எதையோ யோசித்தாள்.
“ஆமாம், பிறகு எப்படி விட்டுவிட்டாய்? மிகவும் கடினமில்லையா டெனிஸ்?”
அவள் இன்னும் பேசாமலேயே இருந்தாள்.
“ஏய்..என்ன மௌனம்? உங்களுக்கு இது செட் ஆகவில்லை மேடம்…கமான்..”
“ம்ம்..ஆமாம்…மௌனம் மிகவும் அழகு இல்லையா கெவின்?..ம்ம்ம்..ஏதோ கேட்டாயே! ஆமாம்..சீக்ரெட் சிகரெட் ஸ்டோரி..”
மீண்டும் சிறிது அமைதி. அவளே தொடர்ந்தாள், “எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் கெவின்..இப்போது ஆறு வயது அவளுக்கு..அவள் பிறந்தபிறகுதான் நான் மரியுவானாவை விட்டேன்…”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏய், என்ன? மறுபடியும் உன்னுடைய ஃபிரான்க் விளையாட்டா? சுத்தமாக செட் ஆகவில்லை உனக்கு..” என்று சிரித்து அவள் கையைப் பிடித்து முறுக்கினேன்.
ஆனால், அவள் முகம் தீவிரமாக இருந்தது. “இல்லை கெவின்…” என்றவள் தன் கைப்பையை எடுத்து அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினாள். தேவதை மாதிரி இறக்கை வைத்த நீல நிற ஆடையில் ஒரு பெண் குழந்தை ஒரு வயதானவரின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றது. எனக்கு ஒரே குழப்பம். அவளைப் பற்றி எனக்குள் ஏற்பட்டிருந்த இனிமை, அந்த இனிமையை நீட்டிக்க விரும்பிய என் ஆழ்மன ஆசை…என்ன சொல்கிறாள் இவள்? இந்தப் பெரியவர் யார்? இவளது அப்பாவாக இருக்கும்..அது சரி..அப்படியென்றால் இவளது கணவர்?
“இவர் உன் அப்பாதானே? சரி, எப்போது திருமணம் செய்துகொண்டாய் நீ? என்னிடம் சொல்லவேயில்லை!”
“ம்ம்..ஆமாம்…இது என் அப்பாதான்..ஆனால், எனக்கு திருமணமெல்லாம் ஆகவில்லை…இந்த அழகான காதல் பரிசு மட்டும் எனக்குக் கிடைத்தது.”
“டெனிஸ்..குழப்பாதே..”
“ரிலாக்ஸ் பேபி…நீ பதற்றமாகாதே..என்னை உனக்குப் பிடிக்குமென்பது எனக்குத் தெரியும்….ஒருவேளை காதலிக்கிறாயாகக் கூட இருக்கலாம்…ஆனால், உனக்கு இது தெரிய வேண்டும்…கேள்..”
‘இவள் என்னதான் சொல்ல வருகிறாள்? நான் காதலிப்பது தெரியும் என்கிறாள்….குழந்தையின் புகைப்படத்தை எந்தப் பதற்றமும் இல்லாமல் காட்டுகிறாள்..’
“கெவின்…அவனை என் சிறுவயதில் எனது மறைக்கல்வி வகுப்புகளில் சந்தித்திருக்கிறேன்..பின், பல வருடங்களுக்குப் பிறகு ஓர் இரவு, கேளிக்கை விடுதியொன்றில் முழு போதையில் ஆடிக்கொண்டிருந்த நான் அடுத்த நாள் காலை கண்விழித்தபோது அவனது அறையிலிருந்தேன்.. எனக்காகத் தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்தான். அதன் பிறகான நாட்களில் அவனுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவ்வளவு அழகு..இன்னும் அந்த நினைவுகள் என் கூடவே இருக்கின்றன…ஆனால், சில மாதங்களில் எங்களுக்கு ஒன்று புரிந்தது…இட் வாஸ் டூ ஓவர்வெல்மிங்…ம்ம்ம்…எப்படிச் சொல்வது?..நாங்கள் திருமணம் செய்து நீண்ட ஒரு வாழ்க்கை வாழ முடியுமென்று தோன்றவில்லை…”
நான் அமைதிக்கும் குழப்பத்திற்கும் இடையில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
“புரிகிறதா உனக்கு? உச்சகட்ட அன்பு…ஆனால், என்னால் உறுதியான ஒரு முடிவெடுக்க முடியவில்லை..அவனாலும் கூட…தற்செயலோ என்னவோ..அவன் குடும்பமும் நெதர்லேண்ட்ஸுக்கு மாறிப் போக வேண்டிய நிலைமை வந்தது…என்னாலும் அவனைத் திருமணம் செய்துகொண்டு அங்கே செல்ல முடியாது…உனக்குத் தெரியுமே…..எனது வேர் இங்கேதான் இருக்கிறது..என் அப்பாவை விட்டுவிட்டுப் போக முடியாது….அம்மா இருந்திருந்தால் ஒருவேளை வேறுவிதமாக யோசித்திருப்பேனோ என்னவோ..”
எனக்கு வார்த்தை ஏதும் வரவில்லை. ஆனால், அவள் சொல்வதன் மீது ஒரு ஈர்ப்பு, அவள் மீது இருந்த நெருக்கம் அந்த நொடி கூடிக்கொண்டு போவதை உணர்ந்தேன்.
“கெவின்..ஆனால், எனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று மிகவும் ஆசை..என் மகள் ஏலின் அவனுடைய குழந்தைதான்…அவனுக்கு இந்தக் குழந்தை பிறந்தது கூடத் தெரியாது..தெரியவும் வேண்டாமென்று விட்டுவிட்டேன்..இப்போது என் வாழ்க்கை ஏலினுக்காகத்தான்…ஏலின் என்றால் என்ன பொருள் தெரியுமா?”
நான் தலையை ஆட்டினேன்.
“நோபிள்…புனிதம் என்று பொருள் கெவின்…யார் இந்தப் பெயர் வைத்தது தெரியுமா? என் அப்பா..அவர்தான் இப்போது அவளைக் கவனித்துக்கொள்கிறார்..நான் குழந்தையாக இருந்தபோது அவர் என்னை எப்படியெல்லாம் சீராட்டியிருப்பார் என்று இப்போது நான் கண்கூடாகப் பார்க்கிறேன்…அவளுக்காக சமைப்பது, அவளைக் குளிப்பாட்டி விதவிதமாக ஆடை அணிவித்து அழகு பார்ப்பது…கதை சொல்லி உறங்கவைப்பது..எல்லாமே அப்பாதான்..சொல்லப்போனால், அப்பா இருந்தால் அவளுக்கு நான் தேவையே இல்லை..”
எனக்கு ஒரு மாதிரியாக தலை கிறுகிறுத்துக்கொண்டு வந்தது. இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தேன். இப்போது அவள் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்னென்னமோ எண்ணங்கள், காட்சிகள் எனக்குள் வேகமாக வந்து கொண்டிருந்தன.
கடற்கரைப் பாறைக் குடைவில் என்ன நம்பிக்கையில் நான் கேட்ட நொடியில் ஆடை களைந்து நின்றாள் மரியா. என் கல்லூரிக்கு எதிர்புறம் இருந்த ஜெராக்ஸ் கடையில் உதவியாளாக வேலைக்கு நின்றாள். படிக்க வேண்டிய வயதுதான்.
‘கையப் புடிச்சேன் மாப்ள, ரெண்டு அமுக்கு அமுக்குனேன் பாத்துக்க…அன்னிக்கி எங்க வீட்ல யாருமில்ல, அவ வந்தா கேட்டியா, செம டாவு மக்கா…’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லக் கேட்டிருக்கிறேன். அவள் எல்லோரிடமும் வழிந்து வழிந்து பேசியதாகத்தான் எனக்கும் தோன்றியது. நான் அங்கிருக்கும்போதெல்லாம் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள். எதுவும் பேசியதில்லை.
ஒருநாள் நான் அந்தக் கடைக்குச் சென்றபோது அவள் மட்டும் இருந்தாள். என்னைப் பார்த்ததும் வேலையில் மும்முரமாக இருப்பதாக் காட்டினாள். முகத்தில் ஓரப்புன்னகை தெரிய வெட்கத்தில் தலை குனிந்திருந்தாள். எனக்குள்ளிருந்த ஏதோ என்னை உந்தித்தள்ள, அவள் கைவிரல்களைப் பிடித்தேன்.
அசைவற்று நின்றவள் “இவ்ளோ நாள் ஒங்களுக்குப் புரியலல்லா…எனக்கு ஒங்ககிட்ட நெறய பேசணும் கெவின்” என்று சொல்லி கண்கலங்கினாள்.
எனக்கு என்ன தோன்றியதோ! சட்டென அவள் கையை உதறி, “எல்லாவனும் சொல்ல மாதி நீ கேசுதாம்ட்டி…” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அதன் பிறகான நாட்களில் ஒரு இருபது கடிதங்களை என் நண்பர்கள் வழியாகவோ, தபால் வழியாகவோ எனக்கு அனுப்பினாள். அவள் சிறுவயது முதல் நடந்த எல்லாவற்றையும் எழுதியிருந்தாள். எல்லாமே ஒரு நாடகமாகத்தான் எனக்குத் தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட கடிதத்தில், ‘இதுதான் என்னோட கடைசி லெட்டர் கெவின். இதுதான் நிஜமான நான்’ என்று மட்டும் எழுதி கீழே அவளது சிறுவயது புகைப்படம் ஒன்றை ஒட்டி அனுப்பியிருந்தாள்.
திட்டமிட்டு அடுத்த நாள் அவளை அழைத்துக்கொண்டு கடற்கரைப் பாறைக் குடைவிற்குச் சென்றேன். அவள் ஆடைகளைந்து நின்ற நொடியில் என் மனம் ‘கேசு..கேசு..’ என்று கத்திக்கொண்டிருந்தது. தேவையானது கிடைத்ததும் அவளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். என் நண்பனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்ல, அவன் போய் அவளிடம் என்ன பேசினானோ, அதன் பிறகு அவள் அந்தக் கடைக்கு வேலைக்கு வருவதில்லை. என் வாழ்விலிருந்து அப்படியே தொலைந்து போனாள்.
அவளை ஏன் புறக்கணித்தேன்? அவளிடம், ‘முடியாது’ என்று கூட ஏன் என்னால் சொல்ல முடியவில்லை? அவள் உடலை மட்டும் என்னால் புறக்கணிக்க முடியவில்லை என்றால் நிஜத்தில் நான் புறக்கணித்தது எதை? அவள் அப்படிப்பட்ட பெண்தான் என்று ஏன் நான் முடிவு செய்தேன்? சரி, அவள் அப்படியென்றால் நான் எப்படிப்பட்டவன்? இப்போது டெனிஸின் பின்னால் வழிந்து அலைகிறேனே, இதற்குப் பெயர் என்ன?
“என்ன கெவின்…பேசாமல் இருக்கிறாய்?” என்று என் தோளில் தட்டினாள் டெனிஸ்.
என்னால் சட்டென பதில் பேச முடியவில்லை..கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“கெவின்..ரிலாக்ஸ்..இதெல்லாம் உனக்கு ஒரு கல்ச்சுரல் ஷாக்காக இருக்குமென்று எனக்குப் புரிகிறது..”
“ம்ம்ம்..ஆனால், எப்படி உன் அப்பா இதைச் செய்கிறார்? என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை…” இதைக் கேட்டபோது சரியாக எனக்கு குமரேசன் சாரின் ஞாபகம் வந்தது. என் சட்டையைப் பிடித்து அவர் உலுக்குவது போல இருந்தது.
“கெவின்..அப்பாவுக்கு நான்தான் உயிர்..எனக்கு என் குழந்தைதான் உயிர்..வேறென்ன? அன்பென்றால் அவ்வளவுதானே?” சொல்லி என் கண்களை உற்றுப் பார்த்து சிரித்தாள். “கெவின், இந்த நொடி, நான் இதையெல்லாம் சொன்னதால் உன் அன்பு காணாமல் போய்விட்டதா என்ன?”
எனக்கு மரியாவின் சிறுவயது புகைப்படம் கண்முன் வந்து நின்றது. மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்தேன். டெனிஸ் சட்டென அதைப் பிடுங்கி பாதியைத் திருகிக் கீழே போட்டு மீதியை என்னிடம் கொடுத்தாள்.
“வா..போகலாம்..நேரம் ஆகிவிட்டது..”
நாகர்கோவில்…வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது “ஊ..ஊ..” என்று ஒரு சத்தம். பக்கத்து பைக்கில் சென்ற ஓர் ஆள்தான் அப்படிச் சத்தமிட்டது. தனியாகத்தான் போய்க் கொண்டிருந்தார். நான் கூட அவர் ஏதோ பைத்தியமாக இருப்பார் என விட்டு விட்டேன். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவர் அதே மாதிரி சத்திமிட்டுக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
ஒரு நாள் என்னைப் பார்த்துக் கையைக் காட்டி ‘ஹாய்’ சொன்னார். தொடர்ந்து அவருக்குள்ளேயே சத்தமாகப் பேசிக்கொண்டே சென்றார். இன்னொரு நாள் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒரு வேலையாக நான் சென்றபோது வக்கீல்களின் பார் கவுன்சிலில் அவர் இருந்தார். வக்கீல் உடையில்.
“ப்ரதர்..வணக்கம்..எப்படி இருக்கீங்க?” என்று அவரே என்னைப் பார்த்துக் கத்தினார்.
“நல்லாருக்கேன் சார்..ஒரு ஃபிரெண்டோட கேஸ் விசயமா வந்தேன்..”. அப்படி ஆரம்பித்த நட்பு தினசரி பைக் பயணங்கள், டீக்கடைகள், மதிய உணவுகள் என வளர்ந்தது. அவரைச் சுற்றி எப்போதுமே ஒரு உற்சாகமான கூட்டம், சிரிப்பு, பல கெட்ட வார்த்தைகள், இளம் ஆண், பெண் வக்கீல்கள் அவர் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவருக்கு அப்போது 45 வயது இருக்கும். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒருநாள், ஒரு மதுபான விடுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, “கெவின் ப்ரதர், இப்பல்லாம், ஒரு பத்து நாளா ஒரு புது அனுபவம் பாத்துக்கங்க…”
“என்ன சார், சொல்லுங்க..”
“பைக்ல போகும்போது எதிர்ல ஒரு 18லருந்து 20 வயசுக்குள்ள இருக்குற பொண்ணுங்க வறப்ப மட்டும், அவங்க எல்லாமே என் கண்ணுக்கு நிர்வாணமா தெரியுறாங்க…ஆனா, அப்படி ஒரு ஜொலிப்பான நிர்வாணம்..ஏதோ கடவுளே வந்த மாதிரி..”
“என்ன சார் சொல்றீங்க?”
“ப்ரதர், நெஜமாத்தான் சொல்றேன். நான் அந்த பழைய கடவுள் அனுபவம் சொல்லிருக்கேன்லா. அந்த ட்ரெயின்ல நடந்த சம்பவம். அப்ப கடவுள் என் கூட உக்காந்து இருந்தப்ப என்ன ஃபீல் கெடச்சுதோ அதே ஃபீல் தான்.. “
“சார்..நீங்க என்னல்லாமோ சொல்றீங்க..என்ன கிண்டல் பண்றீங்களான்னும் புரியல..”
“கெவின் ப்ரதர்..நீங்க என்ன நெனைக்கீங்க? இந்த கற்பு, கலாச்சாரம், குடும்பம், சம்பிரதாயம், சாதி, அரசியல் எல்லாம் எவன் கொண்டு வந்தான்? உங்க தாத்தனும் என் தாத்தனும்தான? கடவுள் இல்லன்னு ஒரு பத்து பயக்க, கோவில் கோவிலா அலைய ஒரு பெரிய கூட்டம்..அப்ப, எவன் சரி? எவன் தப்பு? சொல்லுங்க?”
நான் ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.
“ஒரு கோட் இருக்கு தெரியுமா? ’Maternity is a fact, paternity is an opinion’-னு..கேள்விப் பட்டிருக்கீங்களா?…நம்ம குடும்பம்லாம் தொலஞ்சு போயிரும் அதக் கேட்டா..ஹிஹிஹி”
ஒன்றும் புரியாமல் நான் உட்கார்ந்திருக்க அவர் தொடர்ந்தார். “கெவின், நம்ம மண்டைக்காடு கலவரம் வந்துச்சுல்லா, எத்தன ரேப் தெரியுமா? முடியாமலே போன கேசுங்க எத்தன தெரியுமா? அந்த பகவதி அம்மன் அவ்ளோ சக்தியானவன்னு நம்பிக்க இருக்குல்லா? அவ முன்னாடி தான இதெல்லாம் நடந்துச்சு…நா அந்த சமயத்துல ஒரு நாள் ராத்திரி அந்த வழியா போய்ட்ருக்கேன்..திடீர்னு ரோட்டுல ஒரு பொண்ணு..ஒட்டுத் துணி இல்ல..அழுதுட்டே என்ன நிறுத்துனா…கதறுறா…அண்ணே, அண்ணே..என்ன எப்டியாம் இங்கருந்து கூட்டிட்டு போய்ருங்கண்ணே..என் வயித்துல புள்ள இருக்குண்ணே….என்ன காப்பாத்துங்க அண்ணேன்னு..”
திகைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தேன் நான். “அந்தப் பொண்ணுட்ட என் சட்டயக் கொடுத்து அவள அப்படியே பைக்ல ஏத்தி எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்..அவள ரேப் பண்ண தொரத்திருக்கானுவ..யாரு? சொந்தக்காரனுவ தான் எல்லாவனும்..”
நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக் கேட்டேன், “நெஜமாவா சார்? பொறவு என்னாச்சு?”
“அந்தப் பொண்ண காப்பாத்த நாம்பட்ட பாடு..என்ன ப்ரதர் சாமி, போலீஸ், மண்ணாங்கட்டிலாம்..சவத்துப்பயக்க எல்லாவனும் பொணம்தா……..திங்கணும், பேழணும்..எவ பின்னயாம் போவணும்..இதுல மானம், மரியாத, ஆம்பள, பொம்பள, எல்லா மயிரும்…”
அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது. அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றி எங்கோ ஒரு ஊருக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னார்.
பல ஊர்களில் பல வேலைகளை முயன்று ஒருவழியாக வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்திருந்த சமயம். ஒருநாள், ஒரு மரத்தடி நொங்கு சர்பத் கடையில் குமரேசன் சார் நிற்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்தேன். அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. டை அடிக்காமல் வெள்ளை முடியோடு, அதே வெள்ளைச் சட்டை, பக்கத்தில் ஒரு பெண்மணி..அவருக்கும் நரை எட்டிப்பார்க்கும் வயசுதான் இருக்கும்..ஓர் இளம் பெண்ணும் கூட நின்றாள். சார் என்னைப் பார்த்ததும், “ஊ..ஊ…..ஓய்…யாரு வோய் இது” என்று கத்திக் கொண்டே வந்து என்னை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
“சார்…உங்கள பாப்பேன்னு நெனைக்கவேல்ல சார்..அடுத்த வாரம் வெளி நாட்டுக்குப் போறேன் சார்..”
“சூப்பர்…ப்ரதர்…அது சரி, இது யாருன்னு சொல்லுங்க பாப்போம்..” என்று என்னைச் சிரிப்போடு பார்த்தார்.
“சார்…நெஜமாவா? அவங்களா இது? நம்பவே முடில சார்…” என்று சொல்லி அவரை மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அந்த மண்டைக்காட்டுப் பெண்…அவரது இளம் மகளுடன்…
“சார், அவங்க குடும்பம்?” என்று குழப்பமாக அவரைப் பார்த்தேன்.
“என்ன ப்ரதர்…நம்ம அப்ப என்ன மயித்துக்கு இருக்கோம்..அன்பு, மயிருன்னு வெறும் பேச்சுக்குச் சொன்னாப் போறுமா? நாந்தான் அவ குடும்பம். அவதான் எங்குடும்பம்.”
“சார், சொல்லவேல்ல பாத்தீங்களா? எப்ப கல்யாணம் பண்ணீங்க?” அவர் கைகளை ஆசையாகப் பிடித்துக் கேட்டேன் நான்.
“ப்ரதர்..கல்யாணமா? எதுக்கு? இந்த எளவு ரேப்பிஸ்ட் பயக்களுக்காகவா? இது அதுக்கும் மேலல்லா?..கெடக்கானுவோ கல்யாணம்..மண்ணாங்கட்டின்னு..” என்று சொல்லி அந்தப் பெண்ணைப் பார்த்து சிரித்தார்.
அந்த நொடியில் எனக்குக் கண் கலங்கி விட்டது. மனிதர்கள் புத்துயிர்ப்படைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். சிலர் கடவுளாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கையில் திணித்தார்.
“நல்லா இரி மக்களே!” என்றார்.
“உன் அன்பு காணாமல் போய்விட்டதா என்ன?” என்று டெனிஸ் கேட்ட அந்த நொடி என் முன்னால் குமரேசன் சாரைக் கொண்டு வந்து நிறுத்தியது. அவர் ட்ரெயினில் கண்ட கடவுள் உண்மையாக இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால், அந்தக் கடற்கரையில் அவர் எங்கள் இருவரின் முன்னால் நின்று என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.
ஏதும் பேசாமல் டெனிஸின் கையைப் பிடித்துக் கொண்டு திரும்பி நடந்தேன். இப்போது என் காதலை என்ன செய்வது? மரியாவைப் புறக்கணித்த நான் இவளை என்ன செய்யப்போகிறேன்? எனக்குள் இருந்த எல்லாத் தேடல்களும் என்ன ஆயின? உலகின் ஒட்டு மொத்த அறமும் அன்பும் என் முன் நின்று எனைக் கேள்வி கேட்க, எவ்வளவு காலம் நான் தலைகுனிந்து செல்வது? எனக்கான அறம்தான் என்ன? இவளது அப்பா செய்திருக்கும் செயல் எப்படிப்பட்டது? அந்தக் குழந்தை நிஜமாகவே ஒரு புனிதம் தானா? மரியாவின் சிறுவயது புகைப்படம் என்னிடம் என்ன சொல்ல வந்தது என்ன? எல்லாமே சரிதான் என்றால் எதற்கு இந்த மனித மனத்தில் இவ்வளவு குழப்பங்கள்? என் அம்மா இந்தப் பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்வார்? ஒருவேளை, அம்மா மரியாவை ஏற்றுக்கொண்டிருப்பாளோ?
அடுத்த சில நாட்களுக்கு நான் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவே இருந்தேன். பல்பொருள் அங்காடியில் அனைவரும் என்ன, என்னவென்று விசாரிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், டெனிஸ் ஏதும் நடக்காத மாதிரி மிகவும் இயல்பாக எனைப் பார்த்துப் பேசினாள், சிரித்தாள், இடைவேளையில் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள். அதே மாதிரி சிகரெட்டின் முனையைத் திருகிப் போட்டு எனைப் பார்த்துக் கண்ணடித்தாள். அன்று நடந்த உரையாடல் பற்றியோ, நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றியோ அவள் எதுவுமே கேட்கவில்லை.
அவள் என்னைக் காதலித்தாள், என்னுடன் வாழ விரும்பினாள். ஆனால், அது நடக்காமல் போனாலும் அவள் அப்படியே தான் இருப்பாள். அவள் உலகம் முழுவதுமே அன்பு நிறைந்து தான் இருக்கும். ஒருவேளை இன்னொரு அன்பானவனுடன் இனி அவள் இணையவும் கூட முடியும். அப்போதும் அவளிடம் இதே அன்பும் சிரிப்பும் இருக்கும். அதி சரி, முதல் காதலனைத் திருமணம் செய்யத் தோன்றவில்லை என்றாளே, இப்போது என்னை மட்டும் திருமணம் செய்துகொள்வாளா என்ன?
ஒரு பத்து நாட்கள் இருக்கும். வழக்கமாக அங்காடிக்கு வந்து போகும் லாராவை அவரது வீட்டில் கொண்டுவிடச் சென்றேன். பக்கத்து மதுபான விடுதியில் அவர் ஒரு பாடகி. ஒரு 50 வயது இருக்கும். ஆனால், தன்னை இளமையாகக் காட்டிக் கொள்வதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார். நடை, உடை, அலங்காரம், கொஞ்சும் பேச்சு. எப்போது வந்தாலும் பின்னாலிருந்து என் தோளில் தட்டிக் கூப்பிட்டு சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போவார்.
“மாம்மி..என்ன இன்றைக்கு இவ்வளவு பர்ச்சேஸ்? எனிதிங் ஸ்பெஷல்?” என்று கேட்டேன். மிக நெருக்கமானவர்களை மட்டுமே இங்கே மாம்மி, பாப்பி என்று அழைப்பது வழக்கம்.
“ஆமாம் பாப்பி..என் பேத்தி வருகிறாள், அதனால்தான் நிறைய பர்ச்சேஸ் செய்திருக்கிறேன்..அவளுக்குப் பிடித்த கேக், டர்க்கி பார்பெக்யூ எல்லாம் செய்ய வேண்டும்.” என்றார்.
“மகிழ்ச்சி மாம்மி! ஆமாம், என்ன, உங்களைக் கொஞ்ச நாட்களாகப் பாரில் பார்க்க முடியவில்லையே? உங்கள் ‘Je t’aime’-க்கு நான் அடிமை தெரியுமா? எல்லா சனி, ஞாயிறுகளிலும் நான் அதற்காகத்தான் பாருக்கு வருவேன்.”
“ஓ..நிஜமாகவா?…நான் கொஞ்சம் ஓய்வில் இருந்தேன்..அதனால்தான் வரமுடியவில்லை! அது சரி, எங்கே உன் கேர்ள்ஃபிரண்ட்? உன்னையே சுற்றிச்சுற்றி வருவாளே! நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?”
“தெரியவில்லை மாம்மி…பார்க்கலாம்…என்ன எழுதியிருக்கிறது என்று..”
“ஓ கமான்…நீ தான் எழுத வேண்டும் பாப்பி! எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது…” என்று சொல்லிக் கண்ணடித்தார் அவர். அப்போதுதான் கவனித்தேன், அவர் நாக்கில் ஏதோ பிரகாசமாகத் தெரிந்தது. சீ..சீ..இருக்காது என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் கவனித்தேன். அது ஒரு தங்க நிற முத்து.
“மாம்மி, தவறாக நினைக்காதீர்கள், நீங்கள் நாக்கில் ஸ்டட் அணிந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அவர் வெட்கப் பட்டவாறே, “எஸ்..எஸ்..இன் ஃபேக்ட்..சில நாட்களுக்கு முன்புதான் குத்திக்கொண்டேன்…ஒரே வலி…ஒரு வாரமாகப் பேச கூட முடியவில்லை..இப்போது இன்ஃபெக்சன் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..”
எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. இளம் வயது பெண்கள், குறிப்பாகப் பாலியல் தொழிலில் இருப்பவர்கள் தான் இப்படி முத்துகள் அணிவது வழக்கம்.
“இதை என் பாய் ஃபிரெண்டிற்காக போட்டுக்கொண்டேன் பாப்பி.. அவர் ஒரு கால்பந்துப் பயிற்சியாளர். நான்கு வருடமாகப் பழகிக்கொண்டிருக்கிறோம்….சச் எ நைஸ் மேன்.”
“மாம்மி…அப்படியென்றால் உங்கள் குடும்பம்?”
“ம்ம்…என் கணவர் பல வருடங்கள் முன்னரே இறந்துவிட்டார். ஒரு மகள், அவள் நெதர்லண்ட்ஸில் இருக்கிறாள். அவளுடைய மகள்தான் இன்று வருகிறாள், என் பேத்தி..” என்று சொல்லி அமைதியாக எதையோ யோசித்தவர், “ஜான் மட்டும் வராவிட்டால் நான் தனிமையில் செத்துப் போயிருப்பேன்….இல்லாவிட்டால் ஒருவேளை பைத்தியம் ஆகியிருப்பேன்.. மனப்பிறழ்வில் இருந்து அவன் என்னைத் தனது அன்பால் இழுத்து வெளியே எடுத்தான்..அது ஒரு பெரிய கதை…அளவுகடந்த தனிமை விஷமாகி விடும் கெவின்.”
நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன்.
“ஜானுக்கு இப்படி நான் ஸ்டட் அணிய வேண்டுமென்று ஆசை..ஹீ இஸ் எ ரொமாண்டிக் ராஸ்கல்…அவனுக்கு மகிழ்ச்சியென்றால் நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் பாப்பி….இப்போது நான் என்னுடைய குமரிப் பருவத்தில் இருப்பதுபோல உணர்கிறேன்….”
திரும்பி வரும் வழியில் மரியா, டெனிஸ், மற்றும் பாப்பியின் முகங்கள் திரும்பத் திரும்ப என் முன் வந்துகொண்டிருந்தன. என்ன மாதிரியான உலகம் இது, எது புனிதம்? எது அசிங்கம்? எப்படியெல்லாம் நம்மை நாமே கட்டிவைத்து இறுக்கமாக வாழ்கிறோம்?
காரில் அப்படியே கடற்கரையின் பக்கத்தில் இருந்த சிறிய மலைமீது ஏறிச் சென்றேன். உச்சியில் சென்று அங்கிருந்த மிகப்பெரிய கற்சிலுவையின் முன் நீண்ட நேரம் நின்றேன். சிலுவையைச் சுற்றிலும் மக்கள் மஞ்சள் மலர்களை அடுக்கி வைத்து வழிபட்டுச் சென்றனர். அம்மஞ்சள் மலர்கள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பிக்கை. கீழ்வானின் சிவப்புச் சூரியன் அன்றைய நாளை வாழ்ந்து முடித்த நிறைவுடன் பிரகாசித்துக் கடலிற்குள் சென்றான்.
டெனிஸ் ஃபோனில் அழைத்தாள். “என்ன? எம் தேசத்தின் மொத்த ஒயின் பாட்டில்களையும் காலி செய்ய இந்திரனின் தேசத்திலிருந்து வந்திருக்கும் சாத்தானே, ஊரை விட்டு ஓடிவிட்டாயா?” என்றாள்.
“எங்கள் சந்தையின் ஒயின் விற்பனையைப் பன்மடங்கு அதிகரிக்க வந்த ஒயின் கடவுளே! அவ்வளவு எளிதாக ஓடிவிட விட்டுவிடுவாயா என்ன?” என்று சொல்லிச் சிரித்தேன். குமரேசன் சார் கற்சிலுவையின் அருகில் நின்று என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு “ஊ..ஊ..” என்று கத்தினார்..
- சுஷில் குமார்