டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்


1.

ழவரே! உழவரே

விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும் 

தானியம் போல   பற்களை  மாற்றி இருக்கிறேன் 

உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்

முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள் 

உழவர், அவளைப் பார்த்தவாரேச்சோ! ச்சோஎன 

காற்றில் பறக்கும் புழுதியையும் மாடுகளையும் அவளையும் ஏர்க்குச்சியால் விரட்டினார்

அவளுடைய முளைக்காமலிருந்த பல் ஈற்றை அவர்

காட்டுயானம் நெல்லில்  கீறி இருக்கிறார், அதனால் மண்ணில் சற்று பெரிய தானியம் போல் விழுந்து எழுந்தாள்

 

உழவன்தான் பூமி மீது 

முதன்முதலில்  பெரிய ஓவியம் வரைந்தவன் 

அவ் ஒவியம்  நிறைய நீள்வட்டங்களால், கோடுகளால் ஆனது

அதன் அதிகப்படியான பச்சை நிறத்தையும்  

சிறு பூ  நிறங்களையும் தீட்டுவதற்கு மழையிடம் விட்டுவிடுவான்


2.

குயவரே ! குயவரே!

யானை மிதித்தும் உடையாத பானையாக

மனதை வனைந்து இருக்கிறேன் 

உங்களின் தட்டு கோலால்  என்னை சில்லு சில்லாக உடைக்க நினைத்தால்

பசுமண்  கலயமாக மாறிவிடுவேன் என்றாள்

அவளைப் பார்த்தவாறே   

இதயத்தை விட  எடை அதிகமான களிமண் பொம்மைகள் செய்து  

சக்கரத்தைத்  தட்டு கோலால் தட்டினார்

அவள் நிலமெங்கும் சில்லு சில்லாக சிதறிக் காட்டினாள் 

குயவர் வேக வைத்த பானைகளில் தண்ணீரை ஊற்றுவதன் மூலம் 

உயிருள்ள பானைகளை உருவாக்குகிறோம் .  

ஒவ்வொரு பானைக்கும் ஆயிரம் கண்கள்

அக்கண்களின் குளிர்மைதான் தாகசாந்தி தருகிறது.  

பெரிய கண் ஒன்றின் வழியாகவே பானைகளைப்  பயன்படுத்த முடியும்

உருவாக்குபவனே கடவுள் என்றால் முதல் கடவுள் குயவனாக தானே இருக்க முடியும்


3.

முடிதிருத்துபவரேமுடிதிருத்துபவரே!  

யாரிடமும் சண்டையில் ஜெயித்துவிடுவதற்கு ஏற்ப

நானே புதுமையான முறையில் முடிவெட்டி இருக்கிறேன்

கத்திரிக்கோலால் என்னை வெட்ட நினைத்தால்

என் உடல் வைக்கோல் போல ஆகிவிடும் தெரியுமா

அவளைப் பார்த்தவாறே முடி திருத்துபவர் காற்றை வெட்டிக்காட்டினார்

துண்டுகளாகி சரிவதுபோல சரிந்து காட்டினாள் 

அவர், சூரியனுக்குப் பதிலாய் வானத்தில் ஒளிரும் 

ஒரு செம்மறி ஆட்டிற்கு 

இரகசியம் ஏதுமில்லாதவர்களின் முடியை 

பச்சிளம் புற்களாக மாற்றி மேகங்களின் மீது தூவுகிறார்.  

அவர் மீது எல்லா  மேய்ப்பர்களுக்கும் பொறாமை இயேசு உட்பட 

அதனால் அவர்களுக்கு இடி இடிக்கும் ஓசை மே! மே! எனக் கேட்கிறது.


4.

தையல்காரரே !   தையல்காரரே !   

ஒவ்வொரு வினாடியும் நிறமாறும் உடை உடுத்தியிருக்கிறேன்

கத்திரிக்கோலால் என்னை வெட்ட நினைத்தால்

உடல் மஸ்லின் துணி போல ஆகிவிடும் தெரியுமா

அவளைப் பார்த்தவாறே தையல்காரர் காற்றை வெட்டிக்காட்டினார்.

அலறுவதுபோல் நடித்தாள்.

அவர் கடவுளின் மனநல மருத்துவர்  

பெண்கள் அவரிடம் ரவிக்கை தைத்துக்கொள்கிறார்கள்

 அதனால் ஆண்களுக்குப் பொறாமை 

ஏனெனில் அவர் அளவு நாடாவைப் பயன்படுத்துவதில்லை

 

இப்படி எல்லோரையும் வம்பிழுக்கும் பெண் யார்

இதோ உங்களைக் கடக்கிறாள்

அவளை நிறுத்த முடியாது

முடிந்தால் உடன்போக்கு செய்யுங்கள் அல்லது மடலேறுங்கள்.


[mkdf_icon icon_pack=”font_awesome” fa_icon=”fa fa-pencil” size=”mkdf-icon-small” custom_size=”” type=”normal” border_radius=”” shape_size=”” icon_color=”red” border_color=”” border_width=”” background_color=”” hover_icon_color=”yellow” hover_border_color=”” hover_background_color=”” margin=”” icon_animation=”icon_animation” icon_animation_delay=”” link=”” anchor_icon=”yes” target=”_self”] பூவிதழ் உமேஷ்

Previous articleவெட்சி
Next articleடெனிஸ்
Avatar
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர்- வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி என்ற கவிதைத் தொகுப்பும் மூலம் பரவலான கவனம் பெற்றார். இவர் சிறார் இலக்கியத்திலும் வலுவான தடம்பதித்து வருகிறார். தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும் ஆகிய மூன்று நாவல்கள் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார். அடுத்ததாக சதுரமான மூக்கு என்ற கவிதைத் தொகுப்பு நூலும் (ஆகுதி பதிப்பகம்) "a piece of moonshine at dinner" ( Writersgram publication ) என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் இளம் படைப்பாளர் விருது, சௌமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது பெற்றுள்ளார்.

6 COMMENTS

 1. நீங்க ரசித்து கடந்த தருணங்கள் இங்கே வாசகர் ரசித்து வாசிக்கும் கவிதைகளாக..அருமை

  • குயவரே ….
   குயவரே…..

   உருவாக்குபவனே கடவுள் என்றால் முதல் கடவுள் குயவன் தானே…….அருமை…

 2. அருமை
  உழவன்தான் பூமி மீது
  முதன்முதலில் பெரிய ஓவியம்
  வரைந்தவன்
  அவ் ஓவியம் நிறைய நீள்வட்டங்களால் கோடுகளால்
  ஆனது
  அதன் அதிகப்படியான பச்சைநிறத்தையும்
  சிறு பூ நிறங்களையும் தீட்டுவதற்கு
  மழையிடம் விட்டுவிடுவான்

 3. ஆழமான அழகான கவித்துவம்
  இவ்வரிகளை உணரும் தருணம்
  யாரும் உடன்போக்கு செய்யத்தான்
  வேண்டும். மடல் ஏறியாக வேண்டும்.அண்ணா நன்று.சிந்தனையின் சாரல் சமூகத்தின் பசுமைக்கு உரமாகட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.