1.
வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன.
காதுகளில்
வண்டொன்று சத்தமிடுகிறது.
காலங்கள்
கலைந்து தோன்றுகின்றன.
கண்கள்
நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன.
மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும்
சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது.
அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி
கள்மனம்.
மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய
உடல்.
இடைவெளிகளை உடைத்து விடுகின்ற
காலம்.
கற்பனைகளை அள்ளிய கைகள் நடுங்கத் தொடங்குகின்றன.
2.
திரும்பத் திரும்ப…
இவ்வலைகள் எனை வாரிக்கொள்கின்றன.
சுருட்டியிழுத்து
ஆழ ஆழமெனக் கொண்டு செல்கின்றன.
குளிர்மை,அச்சம்,தத்தளிப்பு…
அமிழும் என் குரல்
எவருக்கும் கேட்காத தொலைவது
விறைத்த தலையில் அமர்ந்த
புள்ளின் கூரலகு
சொற்களைக் கொத்துகின்றது.
ஆழப் புதைந்த மலையின் நுனி
பாதங்களைக் குத்துகிறது.
3.
கவிதை மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருப்பதால்,
கவிதைகள் நல்லனவென்றார் நண்பர்.
அதோடு
அவை உண்மைகளா எனவும் கேட்கிறார்.
யாரோ ஒருவரது உண்மையும்
ஏதோவொரு காட்சியும்
பிரதிபலிக்கும் கண்ணாடியும் கூடத்தானென்றேன்.
மொழியின் குரல்
மனதின் காதுகள் கொண்டு
முன்முடிவற்ற வாசிப்போடு
எடுப்பதும் இரசிப்பதும் விடுவதும் உங்கள் தெரிவு.
மேலும்,அது
கற்பனைகளைக் காவிக்கொண்டிருக்கிறது.
பொய்களைச் செரித்துக்கொண்டிருக்கிறது.
பிறகு உங்கள் விருப்பமென்றேன்.
-தர்மினி