1.
பரபரப்பு மிகுந்த
இந்த வாழ்வில்
ஏதோவொரு சாலையின்
ஓரத்தில் காத்திருக்கிறான்
கல்யாணசுந்தரம்
சிக்னலின்/ வாழ்வின்
பச்சை விளக்கிற்காக.
அது விழுவதாயில்லை
மாறாக,
சட்டைப் பாக்கெட்டிற்கு
சற்று மேலே விழுகிறது
ஒரு பறவையின் எச்சம்
எப்படியோ,
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
விரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:
வெகுநேரமாக் கவிழ்ந்து
படுத்தபடியே
இருக்கிறேன்
உடலுக்குள் ஊடுருவும்
ஒளியை சத்தமில்லாமல்
அறைக்குள்
அனுமதிக்கிறது
சன்னல்
எழுந்து அருகில்
சென்றதும்
எங்கிருந்தோ வந்த காற்றுடன்
அன்பாகப் பேசியபடி
தன்னைத் தானே
மூடிக்கொள்கிறது
சன்னல்
ஒரு சிறிய கீச்சொலியுடன்
சன்னல்களைத் திறந்து
மறுபடியும்
மூடினேன்
எதுவொன்றும் தானாக
நிகழ்வதில்
விருப்பமில்லை எனக்கு
தானாய் நிகழ்வதற்கு
நானெதற்கு?
3.
இப்போதுவரை
சிகரெட் பிடித்ததில்லை
அதன் புகை ஒவ்வாமை
என்னுடன் வருபவர்
இழுத்து இழுத்து
விடுகிறார்
சிகரெட்டை
ராபர்ட் ஃப்ரோஸ்ட்டிற்கு
இரண்டு வழி இருந்தது
எனக்கோ
வேறு வழியில்லை
இந்தப் பாதையில்தான்
கடலைச் சென்றடைய
வேண்டும்
மேலும்,
இப்படித்தான்
இத்தனைக் காலமும்
என்னுடன் வருபவர்களால்/இருப்பவர்களால்
வாழவே பிடிக்காத
இந்த
வாழ்க்கையை
வாழ வேண்டியதாகிப்
போய்விட்டது.