தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா

ம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என  சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய் , தஸ்தயெவ்ஸ்கி , ஆண்டன் செகாவ், துர்கனேவ், மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும், உட்பகையும், ஈகோவும்  அதிகம் இருந்திருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தயெவ்ஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர்.  வாழும் போதும் இறந்த பின்பும் ருஷ்யாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.  இவற்றையெல்லாம் கடந்து தான் அவர் 200ம் ஆண்டில் உலகமே கொண்டாடும் மகத்தான படைப்பாளியாக  பிரகாசிக்கிறார். அவரை விமர்சிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கண்டெடுத்தனர். மாக்சிம் கார்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுக்காவது அவர் மீது குற்றம் சொல்லக் காரணம் இருந்தது. ஆனால் துர்கனேவ், நபக்கோவ் போன்றோர் விமர்சனம் என்ற பெயரில் வெளிப்படுத்தியது  எல்லாம் வசைகள், அவமானங்கள், உதாசீனங்கள்.

இவர்களில் கடுமை குறைவாக விமர்சனமாக இல்லாமல் அபிப்ராயமாக கருத்துகள் சொன்னவர் டால்ஸ்டாய் மட்டுமே. அதேசமயம் சமகாலத்தில் புகழ்பெற்ற இன்னொரு சக எழுத்தாளன் எனத் தெரிந்தும் டால்ஸ்டாய் தஸ்தயெவ்ஸ்கியைப் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை. இன்று வரை உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாகக் கருதப்படும் டால்ஸ்டாயும் தஸ்தயெவ்ஸ்கி யும்  சம காலத்தில் புகழ்பெற்று விளங்கினர். ருஷ்யாவின் இரண்டு நட்சத்திரங்களாக இருந்தும்  பேசிக்கொள்ளவே இல்லை.  குறிப்பாகப்  புத்துயிர்ப்பு, அன்னா கரீன்னா, போரும் அமைதியும்  போன்ற காவியங்களைப் படைத்து நம்மூர் காந்திக்கே அன்பையும் அஹிம்சையையும் போதித்த டால்ஸ்டாய் அதில் பிடிவாதத்துடன் இருந்தார்  என்பதும் தான் ஆச்சரியம்.

இருவரும் கடைசி வரை பேசாமல் போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  நிலவியல் இடைவெளி. இருவரும் வேறு வேறு நகரத்தின் பிரதிநிதிகள்.  டால்ஸ்டாய் மாஸ்கோ நகரம் என்றால் தஸ்தயெவ்ஸ்கி   பீட்டர்ஸ்பர்க் நகரம். இரண்டுமே பாரம்பரியமான ருஷ்ய நகரங்கள் என்றாலும் மாஸ்கோ  பிரபுக்களும், அதிகார வர்க்கத்தினரும் அதிகம் வசிக்கும் நகரம். மாஸ்கோவிலிருந்து 200கிமீ தொலைவிலிருக்கும் அவரது  யாஸ்னயா போனா எனப்படும் பண்ணையை சுற்றி  மொத்தம் 12 கிமீ நிலப்பரப்பு எஸ்டேட்  அவருக்குச் சொந்தமாக இருந்தது.

தஸ்தயெவ்ஸ்கியோ  ஏழைகளுக்கு மருத்துவம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். பரம்பரையாக மத ஊழியம் செய்து பிழைத்த குடும்பம். அவர் பிறந்தது என்னமோ மாஸ்கோ நகரில் என்றாலும் பத்து வயதிலேயே பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அவரது தந்தையால் அனுப்பி வைக்கப்பட்டு, பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத்துவங்கியவர்.  குடியானவர்கள், ஏழைகள் அதிகமாக வசிக்கும்  பீட்டர்ஸ்பர்க் நகரின் வீதிகளைப்பற்றி தஸ்தயெவ்ஸ்கி அவரது நாவல்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதைக் காணலாம்.  இந்த இரண்டு நகரங்களுக்கும்  கிட்டத்தட்ட 700 கிமீ இடைவெளி என்பது வேறு இருவரும்  சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம். இப்படி  இருவரும் இருவிதமான முரண்பட்ட தன்மைகொண்ட  நகரங்களின் பின்புலமே அவர்களது சுபாவமாகவும் இருந்திருக்கிறது. இந்த நகரங்களின் சுபாவம் இருவரது கதைகளிலும் வெளிப்படுவதைக் காணமுடியும்.

இருவருக்குமிடையில் ஏழு வருடங்கள் மட்டுமே வித்தியாசம். தஸ்தயெவ்ஸ்கி 1821 லும் டால்ஸ்டாய் 1828லும் பிறந்தவர்கள். இருவருமே முதல் கதையை தன் 24ம் வயதில் எழுதத் துவங்குகின்றனர்.தஸ்தயெவ்ஸ்கியின்  ‘குற்றமும் தண்டனையும்’  டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’   இரண்டும்  ஒரே காலத்தில்  1866 & 67 ஒரு வருட இடைவெளியில்  வெளியாகின. இந்த இரண்டு நாவல்களுமே இன்று வரை உலக இலக்கியத்தின்  இரண்டு சிகரங்களாகக் கொண்டாடப்படுகின்றன என்பது கவனிக்கவேண்டிய விஷயம். போரும் அமைதியும் எனும் நாவல் வெளிவந்தவுடன் அதை தஸ்தயெவ்ஸ்கி படித்துவிட்டு டால்ஸ்டாயை பார்க்க ஆவலுடன் இருந்தார், அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது. புஷ்கின் மறைவையொட்டி அவருக்கு ஒரு  சிலை திறப்பு விழா   மாஸ்கோவில் நடத்தத் திட்டமிட்டபோது  தஸ்தயெவ்ஸ்கி அழைக்கப்பட்டார். இம்முறை விழாவுக்கு ஒரு நாள் முன்பு எப்படியும் டால்ஸ்டாயை சந்திப்பது என முடிவெடுத்து அவரது இல்லத்துக்குச் செல்ல அனுமதி கேட்டபோது டால்ஸ்டாய் மறுத்துவிட்டார். தான் இப்போது தனிமையில் இருக்க விரும்புவதாக  ஏற்பாடு செய்த நண்பர்கள் மூலமாக தஸ்தயெவ்ஸ்கி க்கு பதில் சொல்லி அனுப்பினார். அந்த புஷ்கின்  நினைவஞ்சலி கூட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி  ஆற்றிய உரை தான் இன்று வரை இலக்கிய உலகின் தலைசிறந்த அஞ்சலி உரையாகக் கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் தஸ்தயெவ்ஸ்கி யார் என ருஷ்யாவுக்கு அடையாளம் காட்டிய உரை என்றும் சொல்லலாம். ருஷ்ய தேசிய வாதம் பற்றி அவர் ஆற்றிய உரை பிற்பாடு வந்த அரசியல் எழுச்சிகளுக்கெல்லாம் விதை எனக் குறிப்பிடும் அளவுக்கு ருஷ்ய மொழியையும் இலக்கியங்களையும் புதிய திசைக்கு அந்த உரையில் நெறிப்படுத்தியிருந்தார் எனப் பலரும் கருதுகின்றனர்.

பிறகு 1878 ல் ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவ ஆசிரியரான விளாதிமீர் சோல்யோதேவின் உரை நிகழ்ந்தபோது இருவரும்  அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமலேயே பிரிந்திருக்கின்றனர். அதன் பிறகும் பலர் டால்ஸ்டாயிடம் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து பற்றிக் கேட்டபோது அது தன்னைப் பெரிதாகக் கவரவில்லை. என்றும் பலரும் பாராட்டும் கரமசோவ் பிரதர்ஸ் என்னால் படிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும்  தஸ்தயெவ்ஸ்கி க்கு  கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் போதாமை உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்.

இதனிடையே தஸ்தயெவ்ஸ்கி 1881ல் இறந்த சேதி அறிந்த உடன் டால்ஸ்டாய் மிகுந்த வேதனையுடன் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் ஓர் அற்புதமான எழுத்தாளனை தான் கடைசிவரை  சந்திக்காமலேயே போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்று கண்ணீர் வடிப்பதாகவும்,  இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும், என்றாவது ஒருநாள் இருவரும் சந்திக்கப்போவது உறுதி என்றும் அவரது The house of the dead நாவல் ஒரு உன்னதப் படைப்பு என நிகொலாய் ஸ்ட்ராகோவ் என்பவருக்குக் கடிதமாகவும் எழுதியிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

தஸ்தயெவ்ஸ்கியின் மறைவுக்குப்பின் அன்னா, தஸ்தாயெவெஸ்கி, யாஸ்னயா போல்யானவுக்கு (டால்ஸ்டாயின் பண்ணை] சென்று டால்ஸ்டாயின் மனைவியோடு நெருங்கிய உறவு பேணியதாகவும் அப்போது  ஒருமுறை டால்ஸ்டாய்  தஸ்தயெவ்ஸ்கி யை சந்திக்காமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.

இறுதியாக டால்ஸ்டாய் தன் யாஸ்னயா போல்யான்யா பண்ணையை  விட்டு அஸ்தபோவா  ரயில் நிலையத்தில் அனாதையாக இறப்பதற்கு முன் அவர் கடைசியாக வாசித்த புத்தகம் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ்  பிரதர்ஸ்

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை ருஷ்ய எழுத்தாளர்கள் பலரும் ஏற்கவில்லை. இது மட்டுமல்லாமல் இன்னும் துர்கனேவ் நபக்கோவ் என எல்லோராலும் வெவ்வேறு காலங்களில் அவமானங்களையும் வசையும் பெற்றவர்தான் தஸ்தயெவ்ஸ்கி, துர்கனேவ் பிரான்சில் தன் காதலியின் பாய்பெஸ்டியாக அவளது அரண்மனை வீட்டுக்கு வந்த போது பிரான்சுக்கு செல்லும் ருஷ்ய எழுத்தாளர்கள் அவர் வீட்டுக்கு சென்று விருந்தும் உபசரணை பெற்று வருவது வழக்கம். தஸ்தயெவ்ஸ்கியும் ஒருமுறை அன்னாவுடன் பிரான்ஸ் போய் சூதாட்டத்தில் பணமெல்லாம் இழந்து பிச்சைக்கார கோலத்தில் துர்கனேவ் வீட்டுக்குப் போனபோது துர்கனேவ் வீட்டுக்குள்ளேயே சேர்க்காமல் விரட்டி அடித்து அவமானப்படுத்திய கதையும் உண்டு.

குறிப்பாகச் சிறுகதைகளின் உச்சம் என அழைக்கப்படும் ஆண்டன் செகாவ் கூட தஸ்தயெவ்ஸ்கியை கடுமையாக விமர்சிக்கிறார். சாலையில் நம் முன் ஒரு புலி வந்தால் எதார்த்தத்தில் என்ன செய்வோம் உயிரைக் காப்பாற்ற ஓடுவோம் அதுதான் நிஜம். ஆனால் தஸ்தயெவ்ஸ்கியின் பாத்திரம் என்ன செய்யும் தெரியுமா? இந்த புலி எதற்காக என்னை இப்படிப் பார்க்கவேண்டும், அது அப்படிப் பார்ப்பதால் என்ன கிடைக்கும் என் சதை போதுமானதாக இருக்குமா என்ற ரீதியில் எழுதுவார். இந்த நம்ப முடியாத கற்பனைவாத எழுத்தை என்னால் சகிக்கவே முடியாது எனக் கிண்டலடிக்கிறார். மாக்சிம் கார்க்கி பற்றிச் சொல்லவே தேவையில்லை. ருஷ்யாவில் புரட்சிக்குப்பின் தஸ்தயெவ்ஸ்கி  எழுதிய கதையை ட்ராட்ஸ்கி ஆட்கள் நாடகமாக்க முயன்ற போது அதைக் கடைசிவரை மேடையேற விடாமல் தடுத்தவர் அவர்.

இப்படி வாழும் காலத்தில் பல அவமானங்களைச் சந்தித்த தஸ்தயெவ்ஸ்கிதான் இன்றும் உலகில் பல கோடி வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக தன் 200ம் ஆண்டைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே காலம் அவர் அவமானங்களுக்குப் போட்ட நல் மருந்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.