தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்

1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில், சமுதாயக் கோணத்தில் நாவலைப் பல திறனாய்வாளர்கள் பார்க்கிறார்கள். அப்பார்வைகள் நாவலில் மைய்யமாக இருக்கும் கருப்பொருள்களைக் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

நாவலை உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் முதலில் படிப்போம். ஃப்ராய்ட் தஸ்தயேவ்ஸ்கிக்குப் பின்னரே வந்தாலும், ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறையைக் கொண்டு நாவலைப் படிக்க முடியும். (ஃப்ராய்ட் தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றிச் சொல்லும்போது சிறுவயதில் அவர் தனது தந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததால் குற்ற உணர்வுடன் இருந்தார் என்றும் அவருக்கு ஈடிபஸ் குழப்பநிலை இருந்தது என்றும் எழுதுகிறார். ஆனால் உண்மையில் தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை அவருடைய பணியாளர்களால் கொல்லப்பட்டார்.) மிஷ்கினை ஒரு பிளவுபட்ட ஆளுமையாகக் கருதமுடியுமா என்பது கேள்விக்குறி. எனினும் அவனிடத்தில் ஒரு உளப் போராட்டத்தைக் காணமுடிகிறது. ஆன்மீக அல்லது இலட்சிய உலகத்திற்கும் அன்றாட வாழ்க்கை உண்மைகளுக்கும் இடையில் இருக்கும் போராட்டம்தான் அவனது வாழ்க்கை. ரஷியப் பண்பாட்டின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலைப்பாட்டுக்கும் மேலைநாட்டு நாகரிகத்தின் ஆதிக்கத்துக்கும் இடையில் அவன் ஒரு சமநிலையைக் காண விரும்புகிறான். கிறிஸ்தவ விழுமியங்கள் நழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு அவனால் இயல்பாக இருக்க இயலவில்லை. நல்லதையே செய்ய நினைக்கிறான். அது அவலத்தில் முடிகிறது, ரகோஜின்னையும் நாஸ்டாசியாவையும் பிறரையும் மாற்ற விரும்புகிறான். சீரழிந்துபோகும் சமுதாயத்தை அவனுடைய உலகிற்குள் கொண்டுவர நினைக்கிறான். அதே சமயம் அவனுடைய  அடிப்படை உடலின்ப உணர்ச்சிகள் அவனுடைய ஆன்மீக இலட்சியங்களுக்கு அறைகூவல் விடுக்கும்போது, அவனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. எனினும் இவை எல்லாம் மனப்பிறழ்வு அல்லது பிளவு ஆளுமையின் அடையாளங்கள் என்று கொள்ளமுடியுமா என்பதுதான் கேள்வி.

ரஸ்டோஜின்னை உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தமுடியாது என்பது பலரது முடிவு. எனினும் வேறு பாத்திரங்களை ஃப்ராய்டின் கருத்தியல்கள் மூலம் படிக்கமுடியும்.

ஹிப்போலிட்டிடம் புரட்சி கருத்துகள் ஒருபுறமும், தனக்குரிய உடைமையை அடைய வேண்டும் என்ற ஆசை இன்னொருபுறமும் மோதுகின்றன. நாவலின் பெண் பாத்திரங்களிடம் பெண்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தஸ்தயேவ்ஸ்கி காட்டும்போதும், ரஷியச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைச் சொல்லும்போதும், அவர்களிடம் காணப்படும் தங்களையே துன்புறுத்திக் கொள்வதில் இன்பம் காணும் (masochism) நாஸ்டாசியா போன்றவர்களை முன்னிறுத்துகிறார்.

இன்னொரு ஆய்வாளர் ஃப்ராய்ட் பின்னர் சொல்லப்போகிற உளவியல் கோட்பாடுகள் நாவலில் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்: கனவுகளின் பொருள், நனவிலி நிலைச் சிந்தனையின் தன்மை ஆகியவை எங்ஙனம் நாவலில் கையாளப் படுகின்றன என்பதை ஆய்வுசெய்யலாம்.  காதல் என்பது தன்னலத்தோடும் ஆட்கொள்ளும் வெறி (ஃப்ராய்ட் சொல்லும் ஆக்கிரமிப்பு உணர்ச்சியோடும் (aggresssion) பின்னி இருக்கிறது. நாகரிகத்தின் அறநெறிக் கட்டளைகளுக்கும், இயற்கையான தன்னல உணர்வுகளுக்கும் இடையேயுள்ள உறவு முதலியன நாவலில் விரவிக் காணப்படுகின்றன. எனினும் ஃப்ராய்டின் விளக்கங்களுக்கும் தஸ்தயேவ்ஸ்கி அவற்றைக் கையாளும் விதத்துக்குமுள்ள வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கனவுக்கான பொருள்காண்பது பற்றிய ஃப்ராய்டின் கோட்பாடு, இளவரசன் நாஸ்டாசியா அக்லாயாவிற்கு எழுதிய கடிதத்தை வாசித்தபோது தூங்கிப்போய் காணும் கனவு வெளிப்படுத்தும்.

மூன்று கடிதங்களில் ஒன்றையும் திறக்காமல், சாய்வுக்கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தபோது, மீண்டும் அந்தத் துன்பம்தரும் கனவு கண்டான்; மீண்டும் அந்தப் ‘பாவியான’ பெண் அவன் முன் தோன்றினாள். மீண்டும் அவளுடைய இமைகளில் கண்ணீர் மின்ன அவனைப் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து வருமாறு அழைத்தாள். முன்னர் மாதிரியே அவளது முகம் அவனைப் பயமுறுத்த விழித்தெழுந்தான்.

தஸ்தயேவ்ஸ்கி இந்தக் கனவுக்கு நீண்ட விளக்கம் தருகிறார். “நமக்கு சில வேளைகளில் இயற்கையின் விதிகளுக்கு மாறான வினோதமான கனவுகள் வரும். நாம் விழித்தெழுந்தோமென்றால் அவற்றின் வினோதத் தன்மையைப் பற்றி வியப்படைவோம். மாயையான படிமங்கள் தொடர்ந்து வரும்போது உங்கள் முழுமையான பகுத்தறிவில் நீங்கள் இருப்பதை நினைத்துப் பார்க்கிறீர்கள்,” என்று சொல்லும் நாவலாசிரியர் மேலும் சில விளக்கங்களைத் தந்துவிட்டு, “நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு முன்னறிவிப்பை நீங்கள் உங்கள் கனவில் தேடுகிறீர்கள். இனிமையான அல்லது கொடூரமான, ஆழமான பாதிப்பை உங்கள் மேல் ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் பொருள் என்னவென்றால், உங்களுக்கு முன்னறிவிப்பு தரப்பட்டதை நீங்கள் புரிந்து கொள்ளவோ, நினைவில் வைத்திருக்கவோ முடியாது,” என்று முடிக்கிறார். (வெகுளி பக் 629-30) தஸ்தயேவ்ஸ்கி கனவின் மூலகாரணத்தை ஆராயாமல் அதன் தாக்கத்தையே ஆராய்கிறார் என்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் நாஸ்டாசியாவின் மேலுள்ள இரக்கத்திற்கும் அக்லயாவின் மேலுள்ள காதல் ஈர்ப்புக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் இளவரசனுடைய மனப்போராட்டம் இக்கனவில் வெளிப்படுகிறது என்றே சொல்லலாம்.

இதுபோலவே ஹிப்போலிட் தனது கட்டுரையை வாசித்தபோது அதில் தனது கனவுகள் பற்றிச் சொல்கிறான். அவன் கண்ட நூற்றுக்கணக்கான கனவுகளில் ஒன்றை விவரிக்கிறான். கனவில் அவன் வேறோரு பெரிய அறையில் இருக்கிறான். அறையில் ஒரு பயங்கரமான விலங்கு இருப்பது தெரிகிறது. அதற்குப் பயங்கரமான தோற்றம். (காஃப்காவின் உருமாற்றம் நினைவிற்கு வருகிறது) அதன் இயக்கமே அச்சுறுத்துவதாக இருக்கிறது.. அவன் தலைக்குமேல் சப்தம் கேட்கிறது; அவன் முகத்துக்கு நேராக மேலே ஊர்ந்து விடுகிறது. அதன் பயங்கர வால் அங்கும் இங்கும் வேகமாக அசைந்து அவனது முடியைத் தொடுகிறது. இவன் குதித்து எழுகிறான். மீண்டும் வருகிறது. அவன் அம்மா நாயைக் கூப்பிடுகிறார். அதுவும் நாய் நார்மாவும் சண்டைபோடுகின்றன. விலங்கு நாயின் நாக்கைக் கடித்துவிடுகிறது. விலங்கு நாயின் வாயில் இரண்டாகக் கடிக்கப்பட்டுக் கிடந்தது. ஹிப்போலிட் இந்தக் கனவை அவனுடைய சாவை முன்னறிவிப்பதாக நினைக்கிறான். உண்மையில் அவன் இன்னும் பதினைந்து நாட்கள்தான் உயிரோடு இருக்கப்போகிறான் என்று மருத்துவர் கூறியிருக்கிறார். எனவே இந்தக் கனவு அந்த அச்சத்தில் ஏற்பட்டிருக்கலாம். “இந்த ஊர்ந்து வரும் விலங்கு ஒரு மர்மமான இரகசியத்தோடு தொடர்புடையதாக, சாக்காட்டைச் சொல்லும் சகுனமாக நான் உணர்ந்ததுபோலவே நார்மாவும் உணர்ந்திருக்க வேண்டும்.” என்று எழுதுகிறான். (540,541)

கனவுகளின் விளக்கங்கள் பற்றி தஸ்தயேவ்ஸ்கியும் ஃப்ராய்டும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் வேறுபாடுகளைக் காண்பதும் பயனளிக்கும்.

அபத்தமான நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவைதான் கனவுகளில் இடம்பெற்றாலும் அவை கனவு காண்பவரின் உண்மையான வாழ்க்கையோடு தொடர்புடையவை என்றே நாவலாசிரியர் கருதுகிறார். அபத்தம் நிறைந்த கனவுகள் விழித்திருக்கும் நேர வாழ்க்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாதவையா அல்லது அவை நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்களின் மறு உருவங்களா என்ற முரண்பாட்டை தஸ்தயேவ்ஸ்கி அவிழ்க்கிறார். அவருடைய கருத்துப்படி, ஒருவரின் விழித்திருக்கும் வாழ்க்கையின் உண்மை நிலை ஒருவர் நனவுநிலையில் அன்றாட அனுபவம் மட்டுமல்ல; இந்த நனவு அனுபவம் நினைவிலி (unconscious) நிலையாலும் தாக்கம் பெறுகிறது. அதற்கு ஃப்ராய்ட் சொன்னதுபோல கனவுகள் வழியமைக்கின்றன.  நினைவிலி மனத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதைச் சந்திப்பதைத்தான் இளவரசனின் உணர்ச்சியும் ஹிப்பாலிட்டின் கட்டுரையும் காட்டுகின்றன.

இந்த விளக்கம் தஸ்தயேவ்ஸ்கி நினைவிலி நிலையை எப்படிக் காட்டுகிறார் என்பதற்கு இட்டுச் செல்கிறது. மனிதச் செயல்களுக்கான காரணம் இருமனம் என்றாலும்கூட, நினைவிலி எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் இன்னொரு திசையில் இழுக்கப்படுகிறான். வெகுளி நாவலில் நினைவிலி மனத்தைக் கட்டிவைக்கும் முரட்டுத்தனமான ஆக்கிரமிக்கும் அன்பு அல்லது காதல், நமது இயற்கையான தன்னல உணர்வுகளுக்கு எதிரான பண்பாட்டுக் கோட்டை. ஃப்ராய்ட் நனவு நிலையின் மூன்று பிரிவுகள்: ஆக்கிரமிப்பு உணர்ச்சியைத் தூண்டும் உள் அடிமனம், கட்டுப்படுத்தும் மேல்நிலை மனம் ஆகியவற்றிற்கு இடையே சமரசம் செய்யும் அடிமனம் என்ற நுணுக்கங்கள் ஆகியவை. காதலை அல்லது அன்பை தன்னலத்துக்கும் (உடல் இன்பம் ஆசை இதில் அடங்கும்) ஒழுக்க நெறிக்கும் இடையில் அடிமனம் இருக்கிறது. இதனை வெகுளி கதை மாந்தரிடம் காணலாம். கானியா, ரகோஜின், இளவரசன் ஆகியோருக்கு நாஸ்டாசியாவின் மேல் காதல்; எவெஜெனி, கான்யா, இளவரசன், ஹிப்போலிட் ஆகியோருக்கு அக்லாயா மேல் காதல்; நாஸ்டாசியா, அக்லாயாவுக்கு இளவரசன் மேல் காதல். இந்தப்போட்டியில் பொறாமை, ஆக்கிரமிப்பு ஆகியவை மேலோங்கியிருக்கின்றன. இளவரசன் மட்டுமே தன்னலமற்ற அன்புடன், ஒழுக்க நெறி இலட்சியத்துடன் நனவு நிலையில் தன்னலமோ, ஆக்கிரமிப்போ உடலின்பமோ உள்ள உணர்ச்சிகளில்லாமல் இருக்கிறான். எனினும் முரண்பாடுகளில் சிக்கித் தவிப்போருக்கு அவர்களது சிக்கலைத் தீர்க்க உதவச் செல்லும்போது தோல்வி காண்கிறான். தனது முயற்சிகள் தோல்வியடைய மனநிலை பாதிக்கப்படுகிறான்.

இனி கட்டமைப்பியல் பார்வையில் நாவலை ஆய்வு செய்கிறவர்கள், இப்பெரிய நாவலின் பகுப்புகளையும் அவற்றின் அமைப்பு முறைகளையும் விளக்குகிறார்கள். இளவரசன் மிஷ்கின் மனநிலை பாதிக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று ரஷியா திரும்புகிறான். மாசற்ற ஓரிடத்திலிருந்த ஒரு மாசற்றவனாக நலிந்துகொண்டிருக்கும் தனது தாய்நாட்டுக்கு வருகிறான், மீண்டும் மனநோய் ஏற்பட ஸ்விட்சர்லாந்துக்கே போகிறான். இந்த வட்டப் பயணத்தில் அவனுடைய அனுபவங்கள் எத்தனை, அவனை அவை மாசற்ற நிலையிலிருந்து மாற்றுகின்றனவா என்பன இந்தக் கட்டமைப்புக்குள் வருகின்றன.

கதை சொல்லலின் இயக்கம் அதனுடைய நெறியை அமைக்கிறது. தான் என்பதன் உண்மைத் தன்மையைக் கதையில் காட்டியும் அதற்குப் பொருள் கண்டும் கேள்விகேட்கிறது. மிஷ்கின் அனைத்தையும் தாண்டிய குறிப்பாக இருக்கக்கூடியதன் சாத்தியக்கூற்றில் முதலில் நம்பிக்கை கொள்கிறான். இந்த விளைவை தஸ்தயேவ்ஸ்கி குறியீட்டுக்கும், அதன் பொருளுக்கும் அதன் உள்ளேயே உறைந்திருக்கும் தூரத்தை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம் தருகிறார். கதையின் உரையாடலில் பங்கு கொள்ளும் வாசகன் அதன் பொருளைத் தன்வயப்படுத்துவதில் ஈடுபடுகிறான். இறுதியில் கதை தனக்குத் தானே உடல்சார் வன்முறையை (masochistic) அளித்துக் கொள்வதிலோ (இப்போலிட், நாஸ்டாசியா) அல்லது பிறர் மேல் வன்முறையைப் பயன்படுத்துவதிலோ (ரகோசின்) முடிகிறது. தான் என்பதனை, வாசகர் உட்பட, – கதை சொல்லல் அமைப்பை – தஸ்தயேவ்ஸ்கி சிதைத்து விடுகிறார். இது இரண்டு எதிர் நிலைகளைக் கொண்டுவருவதால் நிகழ்கிறது: வன்முறை – இரக்கம். இப்படித்தான் இருக்கிறது என்பதற்கும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கும் உள்ள இடைவெளியை மிஷ்கின் தாண்டுகிறான். முதலில் சொன்னது முறைசார் கதை சொல்லலுக்குள் நேர்மறையான பொருளைக் காணும் முயற்சி. இரண்டாவது மௌனமான முட்டாள்தனமான கருணைச் செயல்கள். இறுதியில் அது குறியீடாக ஆக்கப்படுவதை இயலாததாக ஆக்குகிறது. இது தான் நாவலின் கட்டமைப்பினை, கதைத்தலைவனின் வளர்ச்சியைக் (bildungsroman) காட்டுவது.

மிஷ்கின்

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் உளவியல், மதம், இருத்தலியல் ஆகிய கருப்பொருள்கள் பின்னிப் பிணைந்து காணப்படும். 1838-இல் அவருடைய பெற்றோரின் மறைவிற்குப்பிறகு அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காக அவர் 1849-ஆம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். தண்டனை கடைசி நிமிடத்தில் மாற்றப்பட நான்கு ஆண்டுகள் சைபீரியாவில் கடும்தண்டனையை அனுபவித்தார். (மரணதண்டனையை எதிர்நோக்கி நிற்கும் ஒருவனின் மன வேதனையை நாவலின் முதல் பகுதி மிஷ்கினின் அனுபவமாக விவரிக்கிறது. பக். 97)

அவருக்கிருந்த வலிப்பு நோய் வினோதமான மனக்காட்சியுடன் ஒரு பரவச நிலையில் தொடங்கி அதன் பிறகு உடலில் வலிப்பாக ஆகும். அதன் பிறகு மிகுந்த சோம்பல் ஏற்படும். மறதியும் அடிக்கடி ஏற்படும். இது டெம்போரல் லோப் வலிப்பாக இருக்கலாம். அல்லது இன்சுலர் கோர்டக்ஸின் பரவச வலிப்புகளாக இருக்கலாம். அவருடைய பாத்திரங்களில் ஐந்துபேர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள். வெகுளியின் மிஷ்கின் இளவரசனும் அவர்களில் ஒருவன். அவனும் ஒரு ஒளிக்காட்சியைத் தான் முதலில் அனுபவித்தான். வாழ்வின் மிக உயரிய இன்பமான பரவசமான மன்றாட்டு நிறைந்த சேர்க்கை என்று அவன் அதை வர்ணித்தான்.

அவனுடைய குணநலனைப்பற்றிச் சொல்லவரும் திறனாய்வாளர்கள் அவனை மிகுந்த நுண்ணறிவு மிக்கவன் என்றும், எளிமையானவன் என்றும் பிறர் துன்பத்தைத் தனது துன்பம் போலக் கருதும் கரிசனை கொண்டவன் என்றும் வர்ணிக்கிறார்கள். அவன் ‘முட்டாள்’ இல்லை. அவனுடைய காதல் தெய்வீகமானது. தெய்வீக விழுமியங்களும் மனித மதிப்பீடுகளும் அவனுள் மோதிக்கொண்டன. இந்த மோதல், அவன் இந்த உலகில் வாழ்வதைக் கடினமாக்கியது, சிலர் அவனைக் கிறிஸ்துவாகக் காண்கிறார்கள். டான் குயிக்சாட்டுக்கு ஒப்பிடுகிறார்கள். (ஜான் புரூக்ஸ்)

இனி இருமை எதிர்ப்பு நிலை என்று சிதைவாக்கத் திறனாய்வாளர்கள் கையாளும் ஆய்வினை வெகுளி நாவலுக்குப்  பொருத்திப்பார்க்கிறார்கள்.

நல்லதும் தீயதும் என்ற இருமை நிலைபற்றிய வினாதான் வெகுளி   நாவலின் அடிநாதமாக இருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கியின் பார்வையில் கடவுளின் அருளால் பெறப்பட்ட முழுமையான ஆன்மா உடலின் இச்சைகளால் துரத்தப்படுகிறது, அதிலிருந்து விடுபட இறைவனின் மன்னிப்பு வேண்டும். எனவே மாசில்லாப் பண்பும் பாவமும் என்ற இரட்டைநிலை மனிதனை அலைக்கழிக்கிறது. இந்த இருமை நிலையை நாவலின் கதை மாந்தரில் காண்கிறோம். மிஷ்கினுக்கு ரகோசின், நாஸ்டாசியாவிற்கு அக்லாயா, ஜெனரல் எபான்சின் – ஜெனரல் இவோல்ஜின், டாட்ஸ்கி – லெபடெவ் என்று பல இருமைநிலை கதை மாந்தரை தஸ்தயேவ்ஸ்கி படைக்கிறார். ஆனால் நல்லவர்கள் எல்லாம் முழுவதும் நல்லவர்களாக இல்லை. கெட்டவர்கள் எல்லாம் முழுவதும் தீயவர்கள் இல்லை. நாஸ்டாசியாவின் பாதுகாவலர் டாட்ஸ்கி அவளைக் கெடுத்தவர். ஜெனரல் எபான்சின் காரியாவுக்கு நாஸ்டாசியாவை மணம் முடித்துவைத்துவிட்டால் தனது இச்சைக்கு அவளை உட்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார். பொய் சொல்வதில் மகிழ்ச்சி காணும் ஜெனெரல் இவோல்ஜின் உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான மாயையில் இருக்கிறார்; ஆனால் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. ரகோஜின்னுடைய காமமும்கூட மனிதநேயத்துக்குள் அடங்கிப் போகிறதா? இறுதியில் வக்கிர புத்திக்காரனான அவனும் முழுமையான மனிதம் கொண்ட மிஷ்கினும் அவர்களுடைய காதலியின் உயிரற்ற உடலின் முன்னால் சமாதானம் அடைகிறார்கள். அன்பு வெறுப்பாவதும் வெறுப்பு அன்பாவதும் இயற்கை.

நாவலின் தலைப்பான தி இடியட் என்பது பொருள்மயக்கம் தரக்கூடிய ஒரு சொல். ரஷிய மொழியிலும் அதே பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம். கிரேக்க மூலத்திலிருந்த வந்த அந்தச் சொல் இன்று அறிவிலி அல்லது முட்டாள் என்ற பொருள் கொடுக்கிறது. ஆனால் முன்னர் அது மனவளர்ச்சி குன்றிய ஒருவரைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. ஒரு “இடியட்டுக்கு” குழந்தையின் மன வளர்ச்சியின் அளவே இருக்கும். மட்டி, மடையன், மூடன், பேதை முதலான சொற்கள் தமிழில் இருக்கின்றன. வீரமாமுனிவர் தனது பரமார்த்த குரு கதையில் சீடர்களுக்கு இவ்வாறு பெயர் வைத்தார். இன்னொரு பொருள் ஒரு களங்கமில்லாத வெகுளியையும் இச்சொல் குறிக்கும். நாவலின் கதைத் தலைவனான மிஷ்கினை எல்லோருமே இடியட் என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் அவன் முட்டாளோ அறிவிலியோ இல்லை. அவனுக்குச் சிறுவயதில் வந்த நோயினால் அந்தப் பெயரால் அழைக்கப்படுகிறான். அவன் எளிமை மிக்கவன், இரக்கமும் அனைவரிடமும் அன்பும் கொள்பவன். ஆனால் தீயஎண்ணம் எதுவும் இல்லாதவன். அவன் அசடனும் இல்லை, கள்ளங்கபடமற்றவன். எனவே தான் என்னுடைய மொழிபெயர்ப்புக்கு வெகுளி என்று தலைப்பிட்டேன். எனவே அவனிடம் இருமைத்தன்மை அல்லது பிளவுபட்ட ஆளுமை இல்லை; அவன் அறிவிலியும் இல்லை. மனிதர்களைச் சரியாக எடைபோடும் அக்லாயா ”உன்னை முட்டாள் என்று அழைத்தார்களா என்று எனக்குத் தெரியாது. உறுதியாக நான் உன்னை முட்டாளாக நினைக்கவில்லை,” என்று கூறுகிறாள். மேலும், “உன்னை மிக மிக நேர்மையானவனாக, கபடமற்றவனாக – எந்த மனிதரைக் காட்டிலும் நேர்மையானவனாக, கபடமற்றவனாகக் – கருதுகிறேன். யாராவது உன் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது நியாயமற்றது…. உன்னுடைய மனம் அவர்கள் எல்லோருடைய மனங்களையும் ஒன்று சேர்த்தாலும் அதனிலும் உயர்ந்தது. அத்தகைய மனத்தை அவர்கள் கனவில்கூடக் கண்டதில்லை. ஏனென்றால் இரண்டு மனங்கள் இருக்கின்றன – கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடியது ஒன்று – கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவைப்படாத ஒன்று,” என்று மிகச் சரியாக இளவரசன் மிஷ்கினைக் கணிக்கிறாள்.

தஸ்தயேவ்ஸ்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் சீரழிந்து கொண்டிருந்த ரஷியாவைப் பின்புலமாகக் கொண்டு நாவலைப் படைத்திருக்கிறார். வெற்றுப் பெருமை பேசுபவர்கள், படோடோப வாழ்க்கை வாழ்பவர்கள், வறுமையிலும் நோய்களிலும் உழல்வோர் அவருடைய பாத்திரங்கள். அவர் விவரிக்கும் சமூகச் சிதைவு ரஷியாவில் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வரப்போகும் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கிறது.

இவ்வாறு வெகுளி நாவலை மீள்வாசிப்புக்கு உட்படுத்துவது நமக்குப் புதுப்புதுப் புதையல்களைத் தருகிறது.

 

பார்வைக்கு:

தஸ்தயேவ்ஸ்கி, பியோதர். வெகுளி. சென்னை: நியூ சென்சுரி புக் ஹவுஸ், 2018.

Brooks, John. “Prince Myshkin (The Idiot): the falling sickness, The Gambler and the Grand Inquisitor.”British Journal of  General Practice 2019.

Kilger, Ilya. “Dostoevsky’s The Idiot and Freud.” March 14, 2011. http.//christopcarrier.blogspot.com 2011/03.

Spektor, Alexander. “From Violence to Silence: Vicissitudes of Reading (in) The Idiot.”      C U P, 20 January 2017.

Svetlana,Retchenko-Drellard. “The Conflicting Perceptions of Dostoyevsky in the Novel The Idiot.” Hal – 02983439, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.