ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும் மீண்டும் வாசித்து வருகிறேன். படைப்பு நுட்பம் மிக்கவராக, மக்களைப் பற்றிய உள்ளொளியிலும், அவருடைய அன்பு செலுத்தும் திறனிலும், எந்த எழுத்தாளனும் அவரோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்புபவன்.

தாஸ்தாயெவ்ஸ்கியின் செல்வாக்குக்கு ஆளான பல இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களில் ஃபாக்னரும் ஒருவர். அந்த ரஷ்ய எழுத்தாளர் இலக்கியத்திலும் தத்துவத்திலும் உருவாக்கிய சில கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்திய சிலரில் ஒருவர் மட்டுமல்ல ஃபாக்னர். ஆனால் அவருடைய எழுத்தில் தாஸ்தாயெவ்ஸ்கியின் பிரதான சாதனைக்கு ஒப்பளிக்க முடிந்தவர்: அவரால் ஆழமாக உணரப்பட்ட மனிதனும், அவனுடைய சோகமும், ஆழமாக உணரப்பட்ட மனிதத்துவம்.

இரு எழுத்தாளர்களுமே “கொடூரத்திற்”காக சில விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்: அதீதமான அளவில் சிரமம் மிக்க சோகமயமான காட்சிகள் அவர்களுடைய புத்தகங்களில் அடிக்கடி தோன்றும். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியோ அல்லது ஃபாக்னரோ நம்பிக்கையின்மையாலோ விரக்தியாலோ வாசகனை ஒருபோதும் நசுக்க முயன்றதில்லை. கொடூரம் வாழ்க்கையில் இயல்பானது என்று அவனைச் சமனப்படுத்தவே முயன்றார்கள். அவர்களை வசீகரித்தது ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையாகவும், பயமற்றும், முழுமையான நேர்மையோடும் இருப்பது.

எல்லா எரிச்சல்களையும் இடைஞ்சல்களையும் கடந்து மனிதன் மீதான அவர்களுடைய வீரமிக்க நம்பிக்கையை – தீமையின் ஆறுதலளிக்கும் அறியாமையின் மீதோ, குறுகிய மனப்பான்மை, சுய ஏமாற்றின் மீதோ கட்டப்படாமல், அது எவ்வளவு கடுமையானதாக இருந்தபோதிலும், உண்மையைப் பற்றிய முழு அறிவின் மீது கட்டப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களின் மனங்களையும் இதயங்களையும் தொட்டு வென்றெடுத்த நம்பிக்கையை – ஆயிரம் மடங்கு பெரும் வலிமையுடன் அவர்கள் உறுதி செய்து மீட்டெடுத்துக் கொள்ளுமாறு உலகில் நிகழ்கின்ற அதிக பயங்கரமான விஷயங்களில் அவர்கள் ஒரு தைரியமான பார்வையைக் கொண்டார்கள்.

ஃபாக்னரால் எடுத்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கியின் சோகமயமான மனிதத்துவம், ஆஸ்விஸிமின் (ஆஸ்ஷ்விட்ஸ்) வாயுக்குழிகளையும், ஹீரோசிமா மீதான அணுகுண்டையும் அறிந்த நம்முடைய யுகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியது என்ற அளவில் குறிப்பாக மதிப்புள்ளது. இரண்டு எழுத்தாளர்களின் புகழும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெறுவதற்கு சந்தேகத்துக்கிடமின்றி இது ஒரு காரணமாகும்.

ஃபாக்னர் 18 அல்லது 19 வயதில் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க ஆரம்பித்தார். அவருடைய மனப்போக்கு முதன்மையாகவே சோகமயமானது. எனவே அவர் தாஸ்தாயெவ்ஸ்கியை ஒத்துக்கொள்வதென்று முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார் என்று நீங்கள் சொல்லலாம். ஒரு நபர் அவர் வாசிக்கும் பல எழுத்தாளர்களில் தேர்ந்தெடுக்கும் இரண்டு அல்லது மூன்று, தனக்கு உகந்த எழுத்தாளர்களை அநேகமாகப் பிரக்ஞையின்றியே தீர்மானிக்குமாறு இவ்வித முன்தீர்மானம் செய்கிறது.

ஆனால் இவ்விதமான முன்தீர்மானம் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்ட எல்லாமும் அல்ல. தாஸ்தாயெவ்ஸ்கி வாழ்ந்து பணிபுரிந்த சரித்திரச் சூழ்நிலைகள், ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதிகளில் உருவான சூழ்நிலைகளோடு நிறைய பொதுத்தன்மை கொண்டதாயிருக்கின்றன என்ற விவரம் ஒரு மாபெரும் பங்காற்றியிருக்கிறது. இரு நாடுகளிலும் அடிமைத்தனமும், பண்ணையடிமைத்தனமும் ஒரு வலிமை மிக்க பதிவை சமூக உறவுகளின் இயற்கை மீது விட்டுச் சென்றிருந்தன. அவற்றின் உளவியல், ஒழுக்கவியல் விளைவுகள் ,அரசு, பொது, குடும்ப, தனிப்பட்ட வாழ்வின் எல்லாக் கண்களையும் திறந்திருந்தன. புதிய முதலாளித்துவ உறவுகளின் நெருக்கடியில் பிரபுத்துவ வாழ்க்கை முறைகள் வேகமாக நொறுங்கிவந்தன. பழைய அமைப்பு அதனுடைய வாழ்நாளை வாழ்ந்து தீர்த்து புதிய அமைப்பு மெதுவாக எழுந்து வந்துகொண்டிருந்தது. முன்னால் உள்ள எல்லா ஒழுக்கக் கருத்துகளும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. பழைய காலாவதியாகிப் போன ஒழுக்க மோஸ்தர்களுக்குப் பதிலாக புதியவற்றை உருவாக்கியது, நிகழ்ச்சிகளின் விரைந்த அணிவகுப்பை பின்தங்கச் செய்துவிட்டது. அதனால் எல்லா ஒழுக்கக் கோட்பாடுகளின் இழப்பினாலும் ஏற்பட்ட குழப்ப உணர்வும், நிலையில்லா உணர்வும், இது எல்லாமும் ரஷ்ய, அமெரிக்க எழுத்தாளர்களின் நாவல்களின் மீது குறிப்பிடத்தக்க அளவில் வலிமையோடும் கவனத்தைக் கவரும் வகையிலும் அவற்றின் பதிவுகளை விட்டுச்சென்றன.

ஃபாக்னரின் தாஸ்தாயெவ்ஸ்கியுடனான பிணைப்பை அவருடைய முதல் முதிர்ச்சி வாய்ந்த படைப்பான அவருடைய நாவல் ‘ஒலியும் கோபமும்’ (Sound and Fury) (1929) என்பதிலேயே தெளிவாக உணரமுடியும். காம்ப்ஸன் சகோதரர்களின் கதை சில வழிகளில் கரமஸோவ் சகோதரர்களின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது, சகோதரர்கள் வேறுபட்டவர்களாய் இருந்தாலும். ஃபாக்னரின் நாவலும் தாஸ்தாயெவ்ஸ்கியினுடையதும் ‘ஒரு குடும்பத்தின் கதை’ மட்டுமல்ல, ஒரு முழு சமூக வர்க்கத்தின் சரித்திர ரீதியான வீழ்ச்சியின் குறியீடு, ஒரு முழுமையான சமூக அமைப்பின் சிதைவு, அதோடு அவை மனித ஆன்மா உண்மையைத் தேடி அலைவதின் பெருங்கதையும் ஆகும்.

காம்ப்ஸன்களில் ஒவ்வொருவரும் கரமஸோவ்களில் ஒவ்வொருவரையும் போல, மனித பிரக்ஞை, வாழ்க்கைக் கண்ணோட்டம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட மாதிரி, விதிவிலக்கான வேறுபட்ட மாதிரி, விதிவிலக்கான வேறுபட்ட எல்லை முக்கியத்துவமும் அர்த்தத்தி ன் ஆழமும் கொண்ட மாதிரி.

தாஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் முழுமையான முக்கியத்துவத்தைக் கிரகிப்பது இயலாதது. ஃபாக்னரின் கதாபாத்திரங்களும் பல முகங்களைக் கொண்டவை.

ஃபாக்னரின் நாவலிலேயே அதிகப் பின்னலான கதாபாத்திரம் குவென்டின். அவனுடைய சில நெருக்கடியான கேள்விகள் மீதான, அநேகமாக பைத்தியக்காரத்தனமான அதிதீவிர கவனம் அவனைச் சுற்றியுள்ள உலகின் மீது ஞாபக மறதியுள்ள அந்நியமாதலுக்கு இட்டுச் செல்வது, ஒரு திசையில் அல்லது மற்றொரு திசையில் நடுக்கத்துடன் விரையும் அவனது சிந்தனைகள், அவனுடைய ஆன்மிக அமைப்பின் பின்னல், அவனது சோகமான விதி, – இவை எல்லாமும் குவென்டினை தாஸ்தாயெவ்ஸ்கியின் அறிவுஜீவி கதாபாத்திரங்களான ரஸோல்னிகோவ், கிராப்ட், இப்போலிட், கிரிலோவ் ஆகியோருக்கு அருகில் இட்டுச் செல்கின்றன. ஒரு தனிமொழியில் குவென்டின் விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு அத்தியாயத்தில் அநேக எதிரொலிகள் உள்ளன. குறிப்பிட்ட அம்சங்கள் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை நினைவுபடுத்துகின்றன. இது தற்செயல் ஒற்றுமையாக இருக்கலாம் அல்லது ஒருவேளை பிரக்ஞைபூர்வமான அல்லது பிரக்ஞையற்ற இரவல் வாங்கலாக இருக்கலாம். குவென்டின் – ஹெர்பெர்ட் ஹெட் உறவு, உதாரணத்திற்கு, ரஸோல்னிக்கோவ் – லூஷின் உறவை நிறைய நினைவுபடுத்துகிறது.

குவென்டின் அவனுடைய சகோதரி ஹேடியினுடைய வியாபாரி ஹெர்பர்ட் ஹெட்டுடன் நடக்கவிருக்கிற கல்யாணத்தைப் பற்றிய செய்தியை மிகக் கடினமாக, துரதிருஷ்டத்தின் அறிகுறியாக எடுத்துக்கொண்டான். அவனுடைய சகோதரியிடம் அவனுடைய மௌனமான வேண்டுதல்கள் ஒரு நம்பிக்கையற்ற வழிபாட்டுடன் இணைந்துவிட்டது, ரஸோல்னிக்கோவ் அவனுடைய சகோதரியின் வரவிருக்கிற கல்யாணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அவளுடைய எண்ணத்தைக் கைவிடுமாறு வேண்டிக்கொள்வதை நினைவுபடுத்துகிறது.

லூஷினும் ஹெர்பர்ட் ஹெட்டும் ஒரே வேதத்தைத்தான் ஓதுகிறார்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக லாபம். குவென்டின் ஹெர்பர்ட் ஹெட்டை சந்தித்து உரையாடுவது, லூஷின் ரஸோல்னிக்கோவுடன் முதன்முதலாக உரையாடுவதைப் போன்று, மணமகன் இளைஞனிடம் காரியம் சாதிக்கும் எண்ணத்துடன் அணுகுவதுடன் தொடங்கி, பரஸ்பர வெறுப்பின் தெளிவான பிரகடனத்துடன் முடிவது – நடைமுறையற்ற அறிவுஜீவி, வழிவகைகள் நிறைய உள்ள வியாபாரி ஆகியோரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வெறுப்பு.

தாஸ்தாயெவ்ஸ்கியில் ரஸோல்னிக்கோவ் ஜெயிக்கிறான்; துனேச்கா லூஷினை விட்டு அகன்றுவிடுகிறாள். ஃபாக்னரில் நிலைப்பது ஹெர்பர்ட் ஹெட்; ஹேடி, துனேச்காவைப் போல கர்வமுள்ள கற்புக்கரசியல்ல – அவள் எளிமையானவள், கருணையுள்ளவள், இரக்கப்படத்தக்க ஜீவன், சாதாரணமானவள், பாவமுள்ளவள். குவென்டினின், சகோதரி, பெண் குறித்த லட்சியம் கடுமையான ஒழுக்க அளவுகோல்களுள்ள தூய்மையான பக்தி மிக்க ஒரு யுகத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஹேடி இரக்கமில்லாமல் அவனுடைய லட்சியத்தை அழித்துவிடுகிறாள்; ஒரு புதுயுகம் உதயமாகிவிட்டது, பக்தி என்பது கடந்தகால விஷயம், “அனுமதிக்கும் சமுதாயம்” தெருமுனையில் நுழைந்துவிட்டது. புதுயுகம் குவென்டின் உணராமல் இருக்கும்போதே அவனைப் பிடித்துக்கொண்டது; அவன் இன்னமும் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே பாவத்தையும் நியாயத் தீர்ப்புநாளையும் பற்றிச் சிந்தித்து கொண்டிருக்கிறான்

ஆனால் குவென்டின் தற்கொலை செய்துகொண்டது, அவனுடைய சகோதரி அவளுடைய கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவில்லை என்பதால் என்ற வகையில் முன்வைப்பது, ஹேம்லெட்டினுடைய சோகம், அவனுடைய தாய் இரண்டாவது கல்யாணம் முடித்துக்கொண்டதால் குமுறிய அவனுடைய தந்தைப் பாசத்தால் எழுந்தது என்று சொல்வதைப் போன்றது. இந்த நிகழ்ச்சிகள் முடிவைத் துரிதப்படுத்தியது, ஆனால் தீர்மானிக்கவில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார்: “அவனுடைய உச்சபட்ச நிகழ்வுகளிலும், உச்சபட்சத் தெளிவுகளிலும் ஒரு மனிதன் எதையும் செய்துவிடுவதில்லை, அல்லது தன்னைத்தானே சுட்டுக் கொள்வதுமில்லை.” இந்த வார்த்தைகள் ‘பண்படாத இளைஞனில்’ (Raw Youth) ஒரு கதாபாத்திரமான கிராப்டைக் குறிப்பவை; அவை குவென்டினுக்கும் பொருந்தும். குவென்டினின் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் காரணங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை. அவை அவனுடைய இயற்கையில் உள்ளவை: அவன் தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையோடு ஒத்துப்போக முடியாத அளவுக்குத் தன்னைத்தானே உயர்வாகக் கருதுகிற புத்தகத்தனமான கண்ணியமான மனிதன், அதே நேரத்தில் அதை எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு பலஹீனமானவன்.

குவென்டின் எப்போதும் போராட விரைகிறான், ஆனால் எப்போதும் தோற்கடிக்கப்படுகிறான். அவன் முதலில் மிருக சக்தியின் உருவகமான டால்டன் அமெஸால் சேணத்திலிருந்து தள்ளப்பட்டான். அவன் காயப்படுத்துபவனின் மாதிரி. குவென்டின் அவனைப் பார்த்துக் கத்துகிறான் – “உனக்கு எப்போதாவது ஒரு சகோதரி இருந்திருக்கிறாளா?” – அவன் அலட்சியமாகப் பதில் சொல்லுகிறான்: “இல்லை, அவர்கள் எல்லோரும் வேசிகள்.”

அடுத்த அறை லாப நோக்கம் கொண்ட ஹெர்பர்ட் ஹெட் மூலமாக விழுகிறது, அதற்குப் பிறகு ஹார்வர்டைச் சேர்ந்த பிரமுகர், ‘தங்க இளைஞர்களின்’ தேவதையான ஜெரால்ட் பிளாண்ட். இந்த மூன்று கதாபாத்திரங்கள் – காயப்படுத்துபவன், வியாபாரி, சமூகப் பிரமுகர், குவென்டினுக்கு அந்நியமான, அவன் ஒத்தைக்கு ஒத்தையாக வீணாகச் சமாளிக்க முயன்ற அமெரிக்காவில் உள்ள சக்திகளை உருவகப்படுத்துகிறது.

குவென்டினுக்கு தற்கொலை என்பது வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அவனது மலட்டுத்தனத்தைக் குறித்த வேதனையுள்ள பிரக்ஞையிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி, அதே நேரத்தில் அவனுடைய குறைந்தபட்சக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுய மரியாதைக்கான அவனுடைய உரிமையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியும் ஆகும்.

யதார்த்த நாவல் வகையில் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். அதன் ஒவ்வொரு நடவடிக்கையும், “இருப்பதா இறப்பதா” என்ற கேள்விக்கான நடைமுறை ரீதியான பதில் கொடுப்பது வரை, தனிப்பட்ட இயற்கையின் காரணங்களால் (திவாலாகுதல், உடைந்த இதயம், அவதூறு, ஏமாற்று, நண்பர்களால் தண்டிக்கப்படுதல் இவ்விதமானவை) அதிகமாக ஆளப்படாமல் மிக உயர்வான அறிவார்ந்த அமைப்பின் கருதுதல்களால் ஆளப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் வழக்கமாகக் காணப்படாத அறிவார்ந்த சாய்வு உள்ள முக்கியக் கதாபாத்திரங்கள். நவீன எழுத்தாளர்களின் படைப்புகளில் தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். குவென்டின் காம்ப்ஸன் இப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்திற்கு அழுத்தந்திருத்தமான உதாரணங்களில் ஒன்று.

தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிய ஃபாக்னரின் மதிப்பீட்டில் அவர் ரஷ்ய எழுத்தாளரை எல்லாவற்றையும் விட ‘ஒரு படைப்புநுட்பக்காரராக’ மதிப்பிடுகிறார் என்பதை ஒருவர் குறிப்பாகக் கவனிக்க முடியும். தாஸ்தாயெவ்ஸ்கி மக்களைப் புரிந்துகொள்வதையும், அவருடைய பாசத்தையும் அவர் கவனிக்கிறார் என்றாலும் அவருடைய எழுத்தாளனின் தொழில் பற்றிய அறிவுக்கு அவர் பெருமை மிக்க இடம் கொடுக்கிறார். ஆனாலும் தாஸ்தாயெவ்ஸ்கியின், கலைத்திறன் கொண்ட எழுத்தாளர் என்ற புகழ் பணத்திற்காக எழுதவேண்டியிருந்தது. விளைவாகத் தவிர்க்க இயலாதவாறு விஷயங்களை வீணடிக்க வேண்டி வந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான கட்டத்தில் இருந்தபோது, அவருடைய கடைசிச் சட்டையை அடகுக் கடைக்காரரிடம் அனுப்பியபோது அவருடைய விமர்சகர்களின் குற்றச்சாட்டு எரிச்சலை வெடிக்க வைத்தது:

“அவர்கள் என்னிடம் கலைத்தன்மையை, தூய்மையை, கவிதையை, பதட்டமற்ற தன்மையை, எரிதலின் புகையற்ற தன்மையை வேண்டுகிறார்கள். துர்கனேவையும், கோஞ்சாரவையும் சுட்டிக் காட்டுகிறார்கள். நான் பணிபுரிகிற நிலைமைகளை அவர்கள் காணவேண்டும்.”

அன்னா தாஸ்தாயெவ்காயா நினைவு கூர்கிறார்: “அடிக்கடி நிகழுவது நாவலின் முதல் மூன்று அத்தியாயங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டிருக்கும், நான்காவது டைப் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், ஐந்தாவது அப்போது தான் எழுதி முடிக்கப்பட்டிருக்கும், ஆறாவது இனிமேல் தான் எழுதப்படவேண்டியதிருக்கும், மீதி அத்தியாயங்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடப் பட்டிருக்காது…” அவருடைய நோய் மேலும் ஒரு தடங்கல்: “ஒரு வலிப்பு வந்த பிறகு நான் பதிப்பாசிரியருக்கு அனுப்பிய பக்கங்களில் நான் ஏற்கனவே என்ன எழுதியிருந்தேன் என்பதை நான் மறந்துவிடுவேன். நான் தொடர வேண்டும். ஆனால் நான் இதை அல்லது அதைச் சொன்னேனா அல்லது சொல்ல விரும்பினேனா என்பது எனக்கு ஞாபகம் இருக்காது.” தாஸ்தாயெவ்ஸ்கி அவசரமில்லாமல் எழுதவேண்டும் என்று கனவு கண்டார் அது ஒரு நிறைவேறாத மகிழ்ச்சி என்பது போல: “நான் எழுத விரும்புகிறேன்… ஒரு கால வரம்புக்குட்பட்டு அல்லாமல், ஆனால் டால்ஸ்டாய்கள், துர்கனேவ்கள், கோஞ்சரோவ்கள் எழுதுவது போல. ஒருவேளை நான் ஒரு விஷயத்தை நான் சுதந்திரமாக எழுத முடிந்தால், கால வரம்புக்கு உட்படாமல்.”

அவருடைய வாழ்நாளில் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு மாபெரும் படைப்புநுட்பக்காரர் என்று பிரகடனப்படுத்தாவிட்டாலும் இன்று நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், எல்லாவற்றிலும் கடும் பரிசோதனையான, காலத்தின் பரிசோதனைக்குத் தாக்குப் பிடித்துள்ளன. தாக்குப் பிடிக்க மட்டும் இல்லை, காலத்தை வென்றுவிட்டன, காலத்தைத் தங்கள் சேவகன் ஆக்கிவிட்டன. டி.ஹெச்.லாரன்ஸ் கருதியதைப் போல, அவருடைய நாவல்கள் ‘குட்டிக் கதைகள்’ ஆக இருக்குமானால், ஒருவேளை ‘பெரிய நாவல்’களாக இருக்குமானால் அவற்றால் ஒரு நூற்றாண்டு கழித்து இவ்வளவு வலிமையோடு வாசகனைப் பற்றிப் பிடிக்க முடியாது, மயக்க முடியாது, கிளர்ச்சியுறச் செய்ய முடியாது – உண்மையான அசலான கலையே இதைச் செய்ய முடியும்.

பல அம்சங்களில் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பு நுட்பம் இன்னும் முழுக்கத் தீர்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது. அவருடைய படைப்பு நுட்பத்தை நாம் புரிந்துகொள்ள முடியாத காரணங்களில் ஒன்று அவர் ஆழமாக ஒரு புதுத்தன்மையை உருவாக்கியிருக்கிறார் என்பதில் அடங்கியிருக்கிறது என்ற சாத்தியத்தை ஒருவர் மறுக்கமுடியாது. ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பு நுட்பம் குறித்த ஃபாக்னரின் விவாதம் சரியானது என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: சோவியத் லிட்டரேச்சர்

எண் 12, 1981

தமிழில்: ஜோதி விநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.