சூதாடி -காளிப்ரஸாத்

ரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய கண்ணனும் பெரிய சூதாடிதானே. சமகாலத்தில் கூட இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடும் அண்டை நாடும், தனக்கான ஆட்டத்தை ஆடித்தானே செல்கிறது. சூதாடி நாவல் கூட ஒரு குடும்ப அளவில் அப்படித் துவங்குகிற ஒன்றுதான். ஒரு மூன்றாம் மனிதரின் வருகை என்பது சாதகமா பாதகமா என்பதற்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் கூட, அது தவிர்க்க முடியாத ஒன்றுதான். சூதாடி கதையில் வரும் கதைசொல்லி அப்படி ஒரு மூன்றாம் மனிதன்தான். அவனது பார்வையில் கதை விரிவதால் அவன் வழியாகவே நாம் கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்கிறோம். அதனாலேயே அவர்கள் குணச்சித்திரம் நமக்கு ஆர்வமூட்டுவதாக அமைந்து விடுகிறது. அவன் பார்வையில் சொல்லப்படுவதாலேயே நாம் அதை முற்றிலும் நம்பாமலும் போகிறோம். நாம் ஏன் அவன் சொல்வதை நம்பாமல் போகிறோம் என்று யோசித்தால் அதற்கான சகல சாத்தியங்களையும் அவர் நாவலில் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. அலெக்ஸெய் என்கிற அந்தக் கதை சொல்லி, தற்போது ஜெர்மனியில் இருக்கும் ரஷ்யக் கர்னலின் குடும்பத்திற்குள் அவரது குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஒரு ஆசிரியர் பணி செய்பவராக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அந்த ரஷ்யக் குடும்பம் அப்போது ஜெர்மனியில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறது. அலெக்ஸெய்க்கும் ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கான ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் பணியாளாக இல்லாமல் அவர்களது சொந்த உரையாடலுக்குள் நுழையும் துடுக்குத்தனமும், தான் கவனிக்கப் படாவிட்டாலும், தன்னுடைய அத்துமீறலுக்கான நியாயங்களை எடுத்துச் சொல்லும் தர்க்கங்களின் வழியாகவும், தன்னுடைய சொல்லுக்கு மரியாதை இல்லாத இடத்தில்கூட தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சாகசங்களைச் செய்கிறான். இந்த குணச்சித்திரத்தை நாம் அவரது பிற எந்தவொரு பெருநாவல்களில் ஒரு உபபாத்திரமாகக் காண இயலும். ஆனால் அந்தப் பாத்திரமே முதன்மையான பாத்திரமாக வருவதில், இந்தப் படைப்பு முக்கியமானது.

நாவலின் துவக்கத்தில் எழும் இடம், பொருள், ஏவல் குறித்த குழப்பங்களைக் கடந்து விட்டால், நாமும் தஸ்தவ்யேஸ்கியின் இந்த சித்தரிப்பில் உள் நுழைந்து அந்த மையப்பாத்திரமான கர்னலுக்கு அறிவுரை சொல்லவோ அவரை நினைத்துக் கவலைப்படவோ சித்தமாகி விடுகிறோம். நம் இருப்பு அல்லது உதவி அவர்களுக்குத் தேவையே இல்லாத ஒன்றாக ஆனபோதும் கூட அதன் வழியாக நாம் நிறுவிக்கொள்ள விரும்புவது எது என்கிற ஒரு கேள்வியை இது விட்டுச் செல்கிறது. உண்மையில் அலெக்ஸெய்-இன் விருப்பம்தான் என்ன? எதற்காக அவன் பதறுகிறான்? எதற்காக அவன் தன்னை ஒரு கோமாளியாகக் காட்டிக் கொள்கிறான்? என்பதற்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை அவரவர்கானதாக வாசகர்கள் கருதிக் கொள்ளலாம். கர்னலில் ஆசை நாயகியிடம் இருந்து கர்னலைக் காப்பாற்ற வேண்டும் என்று கதை சொல்லி விரும்புவதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இறுதி அத்தியாயத்தில் நிகழ்வனவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது அவன் தான் அடைய நினைத்தது கர்னலின் அந்த இடத்தைத்தான் என்று தோன்றுகிறது. ஆனாலும் சூதாட்டத்தில் ஆழ்பவர்களுக்கு, இயல் வாழ்க்கை வெற்றி அந்த ஒட்டு மொத்த ஆட்டத்தின் ஒரு “உருட்டல்” மட்டுமே என்றாகிவிடுகிறது. அவர்கள் பகடைகளை உருட்டுவதில் மட்டுமே இன்பம் காண்கிறார்கள். அந்த பகடைக்காய்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள புள்ளிகளில் ஒரு புள்ளி தான் தான் என்று உணர்ந்த பின்பும் கூட அவர்கள் மாறுவதில்லை

பண்டைக்காலத்தில் பேரரசிகள் தன்னுடைய அடிமையாக விளங்கும் ஆண்கள் முன்பு தன ஆடையைக் களையவும் தயங்குவதில்லை. அவர்களின் முன்பு உடை மாற்றிக்கொள்ள நாணம் கொள்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே வருவதில்லை. காரணம் அவர்கள் கண்முன் அந்த அடிமையானவன் ஒரு ஆண் அல்ல. அரசுகளின் பார்வையில் அவர்கள் அடிமைகள்தான். ஒரு நாற்காலி, ஒரு விலங்கு போலத்தான் அவர்கள். அலெக்ஸெய் கூட தன்னை கர்னல் குடும்பம் அவ்வாறுதான் நடத்துகிறது என்று எண்ணுகிறான். அவனுக்குள் இருக்கும் சீண்டல், மேல்தட்டு வர்க்கத்தின் மீது, குமாஸ்தா வர்க்கத்தின் மீது இருக்கும் பொருமல். ஆகவே பலீனாவிடம், அவன் இனி அவளுக்காக அவள் பணத்தில் சூதாட முடியாது என்றும் வேண்டுமெனில் தன் பணத்தில், தான் ஆடி, அதே தொகையை வென்று தருகிறேன் என்று கூறுவது ஒரு உதாரணம். தான் அடிமை அல்ல, தான் பொருளீட்டி உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் சொல். பலீனா தன்னை விரும்புவதாகச் சொன்னதும், ஒரு கணத்தில் உத்வேகம் கொண்டு தன்னிலை மறந்து சூதாடி பெருந்தொகையை வென்று வரவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதும் அதனால்தான். அவனால் அடிமை / அதிகாரம் என்கிற நிலையைக் கடக்க இயலவில்லை. ஆனால் அது ஏற்கப்படாது என்பதாலேயே தான் சுருங்கி விடக்கூடாது என்று தன்னை அவள் முன் ஒரு கோமாளியாகவும் சித்தரித்துக் கொள்ளத் தயங்காதவன். ஆள்பவர்கள் முன் அடிமைக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை தன்னை ஆளாக அடையாளப்படுத்திக் கொள்வது மட்டும்தான். அதனாலேயே கவனத்தை தன்பால் ஈர்க்க, பல உத்திகளைக் கையாளுகிறான். இருவருக்குள் நிகழும் விவாதத்தில் தானாகத் தன்னை நுழைத்துக் கொள்வது, அங்கு கேட்பவரைத் திடுக்கிட வைக்கும் சொற்றொடர்களை உபயோகிப்பது என, (பாதிரியாரின் தேநீர்க் கோப்பையில் உமிழ்வேன்). இது எல்லாம் விதியை நோக்கி சவால் விடும் தருணம்தான்.

இந்த சமூக அடுக்கு முறை உருவாக்கும் பிரச்சனைகள் அல்லது அவை அள்ளித்தரும் மரியாதை, இரண்டும் நாவலில் மாறி மாறி வருகிறது. கர்னலின் ஆசைநாயகி ‘தே காமான்ஷ்’ அல்ல அவர்கள் ‘து பிளிசெ” தான் என்று திருமண நாளன்று தெரிய வருகிறது. பிரெஞ்சுக்காரரான ‘தெ-கிரியே’ கூட ஒரு மார்க்கேஸ் அல்ல என்று. ஹோட்டலில் அறை ஒதுக்கப்படுவதிலிருந்து, உணவு மேஜையில் அமர வைக்கப்படுவது வரை அங்கு நிலவும் சமூக அடுக்கு முறை அடிநாதமாக நாவலில் சொல்லப் பட்டுக்கொண்டே வருகிறது. தான் ஒரு ‘உச்சீத்தெள்’ என்பதை வைத்து, தான் உயர்வகுப்பினன் அல்ல என்பது தெரியும் அதனால்தான் தான் மரியாதையாக நடத்தப் படுவதில்லை என்றும் பொருமுகிறான். இங்கே அலெக்ஸெய் சொல்லும் ஜெர்மன் குடும்பத்தின் உதாரணம் கவனிக்கத்தக்கது. ஒரு பத்து தலைமுறையில் செல்வத்தின் வழியாக அதன் அடையாளம் மாறுகிறது என்பதைக் குறிப்பிடுகிறான். ஜெர்மானிய குடும்ப அமைப்பைக் கிண்டல் செய்யும் தொனியில் சொன்னால் கூட, பொருளீட்டல் வழியாக அவர்கள் அடையும் ஒரு அந்தஸ்தை அவன் தன் தலைமுறையில் தானே அடைய விரும்புகிறான். அதை, சூதாட்ட மேஜையில் வெல்லும் பணம் வழியாக ஈட்டி விட முடியும் என்றும் எண்ணுகிறான். என்ன ஆனாலும் பண்டைய ரஷ்யாவைவிட ஐரோப்பிய வழி அவனுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

ஆனால் தஸ்தவ்யேஸ்கியின் கதை சொல்லல் முறை என்பது இத்தகைய பின்னணி சூழல்களைக் கதாசிரியர் சொல்லிக் கொண்டிருப்பதல்ல. அது உரையாடலின் வழி வாசகருக்குள் திரண்டு வருவதே. ஆகவே நாவலின் கதையோட்டம் என்பது வேறோர் தளத்தில் ஒழுங்காகச் சென்று கொண்டே இருக்கும். இதையெல்லாம் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை. நாவல், ஒரு வாசிப்புச் சுவாரஸ்யத்திற்கான அனைத்து காரணிகளையும், திடீர் திருப்பங்களையும் கொண்டிருக்கும். இன்றும் அவர் வாசிக்கப்படுவதற்கும் மொழிபெயர்க்கப்படுவதற்கும், அவரது நாவலில் பல அடுக்குகளாக உள்ள இத்தகைய உள்ளடக்கமும், வெளியே இருக்கும் சுவாரசியமான கதையோட்டமும்தான் காரணம். கர்னல் தன் கடனைக் கட்டி முடிக்க தன் உறவுக்கார கிழவியின் மரணத்தையும் அதன் பின் தனக்கு வரும் சொத்துக்களையும் நம்பிக் காத்திருக்கிறார். ஆனால் அந்த மூதாட்டி, தானே நேராகக் கிளம்பி வந்து தன் சொத்துக்களைச் சூதாடி அழித்து விட்டுச் செல்வாள் என்பதும், அது வாசகருக்குள்ளும் உருவாக்கும் பதைபதைப்பும் ஒரு முதற்கட்ட வாசகருக்கு முக்கியமானவை. இதைவிடவும் சிக்கலான பிரச்சனைகளைப் பேசும் இவருடைய பெருநாவல்களை வாசிக்கும்போது கூட இந்த ஆற்றொழுக்கான கதைசொல்லல் முறையை ரசிக்காமல் இருக்க இயலாது. இந்தக் கதை சொல்லல் முறையையும் அதன் உள்ளடக்கத்தையும் அப்படியே தமிழில் கொண்டுவந்துள்ள ரா.கிருஷ்ணையா அவர்களின் சிறந்த மொழிபெயர்ப்பையும், நூல்வனம் செம்பதிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் இது சென்ற நூற்றாண்டில் நிகழும் கதை என்பதையும் சமகால பொருத்தப்பாடும் உள்ள நாவல் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது இந்த மொழிபெயர்ப்பு.

முன்பு சொன்ன மூன்றாம் ஆள் இடத்திற்கு வருவோம். அங்கு கதை சொல்லி இல்லாமற் போனால், இந்தக் கதையில் மாறுதல்கள் ஏதாவது நிகழ்ந்திருக்குமா என்பது பற்றியும் யோசிக்கலாம். கதையின் கடைசி இரு அத்தியாயங்கள் தவிர வேறு ஏதும் மாறியிருக்குமா. துவக்கத்திலிருந்து பார்த்தால் இறுதியில் முக்கிய பாத்திரங்களின் மொத்த குணாதிசயங்களும் மாறியிருக்கின்றன. தான் வென்று வந்த பணம், காலணிகளாகவும் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காகவும் போய்க்கொண்டே இருப்பதைக் காண்கிறான் அவன். அவன் அப்போது கர்னல் இருக்க விரும்பிய இடத்தில் இருக்கிறான். ஆனால் நடப்பதைக் கண்டு உரக்கச் சிரிப்பதைத் தவிர வேறு ஏதும் அவன் செய்வதற்கில்லை. அவன் அது கண்டு கோபமோ எரிச்சலோ கொள்ளவில்லை என்பதே பிறருக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது. இன்று நாம் முதலில் காணும் ரஷ்ய இலக்கியங்கள் என்பவை தஸ்தவ்யெஸ்கி காலத்திற்குப் பின் வந்த பொதுவுடைமைச் சித்தாந்தம் சார்ந்த நாவல்கள். காலத்தால் அதற்கு முந்தியதான தஸ்தவ்யெஸ்கி நாவல்களில் அதற்கான முன்னோட்டங்கள் தெரிகின்றன. வரலாற்று ரீதியாக நெப்போலியனுக்குப் பிறகான பிரெஞ்சு ஆதிக்கம், ஐரோப்பிய சிந்தனை தாக்கம் எல்லாம், மரபார்ந்த ருஷ்யாவில் உண்டாக்கிய அதிர்வுகளைக் காணமுடிகிறது. இது பிற்காலத்தில் எவ்வாறு செல்லும் என்று அவர் கருதியவையும் அவ்வாறே நிகழ்ந்ததை இன்று உய்த்துணர முடிகிறது. இந்த நாவலில் வரும் கர்னல், மூதாட்டி ஆகியோரை ஒன்றுக்கொன்று முரண்படும் ருஷ்யக் கூறுகளாகவும் பிற பாத்திரங்களை பிரெஞ்சு, ஜெர்மானிய, மற்றும் ஆங்கில கலாச்சாரத்தின் தாக்கமாகவும், அனைவரும் விரும்பும் பலீனாவை பண்டைய ரஷ்யாவின் உருவகமாகவும் ஒரு வாசிப்பை நிகழ்த்திப் பார்க்கலாம். ஆனால், அங்கு ஒரு சமகால எழுத்தாளனால் சூதாடியாக மட்டுமே வாழ்க்கையை கழிக்க முடிந்திருக்கும். அனைத்தையும் பார்த்தது உரக்க நகைத்துக் கொண்டும் தன்னைத்தானே கோமாளியாக்கிக் கொண்டும்.

Previous articleஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா
Next articleபடைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
காளிப்ரஸாத்
சிறுகதைகள் மொழியாக்கங்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது பத்து சிறுகதைகளின் தொகுப்பு 'ஆள்தலும் அளத்தலும்' என்ற பெயரில் 2021-ல் யாவரும் & பதாகை பதிப்பகம் சார்பாக வெளியாகியுள்ளது. இந்திய ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங் எழுதி ஆங்கிலத்தில் வெளியான The Dhamma Man புதினத்தை 'தம்மம் தந்தவன்' என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார். அந்நாவல் நற்றிணை பதிப்பகத்தில் வெளியானது. இவரது இலக்கிய விமர்சன கட்டுரைகள் இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. இணையபக்கம்:- http://kaliprasadh.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.