படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் கையாள்வதுதான். அதாவது, அவனது பிரக்ஞையில் படைப்பாக்கத்தின் மற்ற எல்லா சிக்கல்களும் வடிவச்சிக்கல் என்ற ஒரே பிரச்சனையாகச் சுருங்குகிறது. அவனது படைப்பூக்கம் கொண்ட மனதில் ‘என்ன?’ என்ற கேள்வி அரவமேயில்லாமல்  இருக்கிறது. ‘எப்படி?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் அவனைத் தீண்டுகிறது. வடிவம் முக்கியமா, உள்ளடக்கம் முக்கியமா என்ற கதைக்கு உதவாத விவாதத்தில் நான் வடிவத்தின் தரப்பைச் சேர்ந்தவன் என்று யாரும் பிழையாக எண்ணிவிட வேண்டாம். வெளிப்படுத்துவதற்கென ஏதாவது சில விஷயங்களை அகத்தே கொண்டவர்கள்தான் கலைஞர்கள். அப்படி எந்த விஷயமும் இல்லாதவர்கள் வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவர்கள் கலைஞர்கள் அல்ல. வெளிப்படுத்த சில விஷயங்களை அகத்தே கொண்டவர்களுக்குத்தான் வெளிப்பாட்டுமுறையின் பிரச்சனை. அந்தப் பிரச்சனையை எப்படி ஆராய்ந்தாலும் இறுதியில் அது வடிவச்சிக்கல் மட்டும்தான். தன் படைப்பாக்கத்தில் வடிவம் சார்ந்த சிக்கலை பிரக்ஞைபூர்வமாக ஒருமுறை கூட எதிர்கொள்ளாத ஒருவரை வடிவப்பிரக்ஞை இல்லாத கலைஞன் என்று சொல்லமுடியாது; அவர் கலைஞனே அல்ல. இந்த கருதுகோள் நாவலாசிரியர்கள் விஷயத்திலும் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் பொருந்தக்கூடியதுதான்.

இலக்கியம் தவிர்த்த மற்ற கலைவடிவங்களில் (சிற்பம், ஓவியம், இசை) அந்தக் கலையில் ஞானம் கொண்டவரிடம் பல ஆண்டுகள் கற்றுக்கொண்ட பிறகே ஒருவனுக்கு அந்தக் கலை வசப்பட ஆரம்பிக்கிறது. அந்தக் கலையைக் கற்றுக்கொடுக்கும் குருவின் மேன்மை சீடனின் மூலதனங்களில் ஒன்று. சிரத்தையுடன் கற்றுக்கொள்ளுதல்; பிறகு நிரந்தமான பயிற்சி- இவை இரண்டும் இல்லாமல் ஒரு இசைக்கலைஞன் கச்சேரியில் பாடுவது என்ற சாத்தியத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளின் விஷயத்திலும் இது பொருந்தும். ஒருவன் தன் இயல்பான நுண்ணுணர்வின் உந்துதலால்தான் ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை நோக்கிச் செல்கிறான். ஆனால், அவ்வாறு  இயல்பான நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் மேதைமை கொண்ட குரு ஒருவரிடம் அந்தக் கலையின் தொழில்நுட்பத்தைக் (craft) கற்றுக்கொள்ளுவதுதான் முதல்படி. ஒரு கலையை தன் இயல்பான நுண்ணுணர்வால் அணுகும் ஒருவனுக்கு கற்றுக்கொள்வது வழியாக என்ன கிடைக்கிறது? அவன் அந்தக் கலையின் தொழில்நுட்பத்தின்(craft) அடிப்படைகளைத்தான் கற்றுக்கொள்கிறான் என்று சுருக்கமாகச் சொல்லலாம். பின்பு கலை வழியாக  அவன் வெளிப்படுத்துவது என்ன என்பது தனிநபர் சார்ந்த விஷயம். ஆனால் வடிவத்தின் அடிப்படைகள் எல்லோருக்குமானது. ஒரு கலையின் வடிவம் சார்ந்த அடிப்படைகளை அறியாமல் அதை வெளிப்படுத்துவது சார்ந்த பிரச்சனையே உருவாவதில்லை.

இலக்கியம் என்ற கலைவடிவத்தை எடுத்துக்கொண்டால் அதன் நிலையே வேறு. நன்கு வரையறுத்த திட்டவட்டமான கற்பிக்கும்முறை இலக்கியத்திற்கு இல்லை. அது சாத்தியமும் இல்லை. அதனால், இலக்கியவாதிக்கு சரஸ்வதி கடாக்‌ஷம் ஒன்று மட்டும்போதும் என்று நான் சொல்லவில்லை. இலக்கியவாதிக்கு தொழில்நுட்பம்(craft) சார்ந்த பிரச்சனையே இல்லை என்றும் சொல்லவில்லை. மகத்தான நாவலாசிரியன் என்பவன் மகத்தான கலைஞனும்தான். அவனுக்கும் கலைப்படைப்பின் பிரச்சனை என்பது வடிவத்தின் பிரச்சனைதான், ஒரே ஒரு வித்தியாசம் மட்டும். தனக்கான வடிவம் என்ன என்பதை நாவலாசிரியர் தானாகவே கண்டுபிடிக்க வேண்டும், தானாகவே அதைக் கற்றுக்கொண்டு, தேர்ச்சி அடையவும் வேண்டியிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் எல்லோரும் அப்படித் தானாகவே கற்றுக்கொண்டு தேர்ச்சியடைந்தவர்கள்தான். இந்த உண்மையை இன்னும் தெளிவாக்க மிக நேரடியான ஒரு தரவு போதும்.

மைக்கெல் ஏஞ்செலோ(Michelangelo), டாவின்ஸி (Leonardo da Vinci) போன்றவர்களின் ஓவியங்களில் ‘மாஸ்டர்பீஸ்’ என்ற தகுதியை அடைந்திருப்பது சில ஓவியங்கள் மட்டும்தான். ஆனால் அவர்களின் கலைப்படைப்புகளில் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டால் அவற்றின் மேன்மையில் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கேயான தனித்தன்மை கொண்ட அழிவற்ற கலைப்படைப்புகள். ஆனால் நாவலாசிரியர்களான பால்சாக் (Balzac), ஸ்டெந்தால்(Stendhal), டிக்கென்ஸ் (charles dickens) போன்றவர்களின்  நிலை அவ்வாறானதல்ல. அவர்களின் சில நாவல்கள் மட்டும்தான்  ‘மாஸ்டர்பீஸ்’ என்ற தகுதியை அடைகின்றன. மற்ற நாவல்கள் காலப்போக்கில் வெறும் வரலாற்றுப் பதிவுகளாக வீழ்ச்சியடைகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்த வீழ்ச்சிக்கான காரணம் இலக்கியத்தின் கதைத்தொழில்நுட்பத்திற்கு வரையறுக்கப்பட்ட கற்பிக்கும்முறை இல்லாததுதான் என்று சொல்வதைவிட அவை இலக்கியவாதி தானாகவே சரிசெய்ய வாய்ப்புள்ள எளிமையான பிழைகள்தான் என்றுகூடச் சொல்லலாம், தவறில்லை. மகத்தான ஆளுமைக்கு இலக்கியம் என்றல்ல, எந்தக் களத்திலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், அசல் இலக்கியவாதி தன் கதைத்தொழில்நுட்பத்தை(craft) தானே பயின்று தேர்ச்சியடைய வேண்டும் என்பது மட்டுமல்ல, தனக்கே உரிய கற்றுக்கொள்ளும் முறை ஒன்றை தானே உருவாக்கிக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. ஆனால் இது அனைத்தையும் தானே எழுதி எழுதி மட்டும்தான் கண்டடையமுடியும் என்பதுதான் இலக்கியவாதியின் சாபம்; வரமும்கூட.

இலக்கியத்தின் எந்த வடிவம் தன் கலைமனதிற்கு மிக இணக்கமானது என்று தானே கண்டுகொள்வதுதான்  இலக்கியவாதியின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும், அது எந்தக் காலமாக இருந்தாலும் சமகாலத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவம் மிகப் பிரபலமானதாக இருக்கும். இலக்கியத்தில்  நுண்ணுணர்வும் ரசனையும் கொண்ட யாராக இருந்தாலும்  சமகாலப்புகழ் கொண்ட இலக்கியவடிவத்தில் எழுத  வேண்டும் என்ற உந்துதல்தான் முதலில் உருவாகும். பிழையான உந்துதல்களுக்கு ஆட்பட்டு பயனற்ற படைப்புகளை எழுதி வீணாக்கினாலும் உண்மையான கலைஞன் என்றைக்காவது ஒருநாள் தன் இலக்கிய வடிவம் என்ன என்பதைத் தானே கண்டுகொள்வான். நாடகங்கள் எழுதி இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய பால்சாக்கும், கிட்டத்தட்ட நாடகத்தைப் போல இலக்கியப்படைப்புகளை எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியும் நாவல் என்ற இலக்கிய வகைமையைக் கண்டடைந்தது தங்கள் கலைமனதின் இயல்பான ஆற்றலால் மட்டும்தான். இந்த கண்டடைதல் முடிந்த பிறகு, தங்களுக்கேயான வாசிப்பையும், பயிற்சியையும் உண்மையாகவே எழுதுவது வழியாகத்தான் அவர்கள் அடைந்திருக்கிறார்கள். இசைக்கலைஞனும், ஓவியனும் சிற்பியும் கலையின் தொழில்நுட்பத்தின்(craft) அடிப்படைகளை குருவிடமிருந்து கற்றுக்கொள்ளும்போது நாவலாசிரியன் தங்கள் சொந்த படைப்பாக்கம் வழியாக, வாழ்க்கை அனுபவங்கள் வழியாகத் தொடர்ச்சியாக தாங்களே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. பால்சாக்(Balzac), தஸ்தாயெவ்ஸ்கியின் மாஸ்டர்பீஸ் நாவல்கள் தலை உயர்த்தித் தனியாக நிற்கும்போது, அவர்களின் பிற படைப்புகள் மிகமிக தரம் குறைந்த படைப்புகளாக ஆனதற்குக் காரணம் இலக்கியம் என்ற கலையில் என்றுமே உயிர்த்துடிப்புடன் எஞ்சியிருக்கும் பரிசோதனைத்தன்மைதான். இந்த தரவைத்தான் நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கியின் இலக்கிய வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுப்பரப்பை கருத்துருவங்கள் நிறைந்த உலகம் என்று சொல்லலாம். அங்கே கருத்துகள் தங்கள் தூய வடிவில் சஞ்சரிக்கின்றன. அதனால், நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கி ஒரு சிந்தனையாளரைப் போல கருத்துகளைக் கையாண்டார் என்று எண்ணிக்கொள்வது பிழையானது. தஸ்தாயெவ்ஸ்கி தன் படைப்பாக்கத்தில் பிரக்ஞைப்பூர்வமாக எதிர்கொண்ட ஒரே பிரச்சினை வடிவம் சார்ந்த சிக்கல்தான் ; அது அவர் கையாளும் கதைத்தொழில்நுட்பத்தின்(craft) சிக்கலும்கூட.

“ ஒரு நாவலாசிரியர் தான் கையாளும் கதைத்தொழில்நுட்பத்தின்(craft)  நுட்பங்கள் அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அவர் தன் புனைவில் விவரிக்கப்போகும் யதார்த்த வாழ்க்கையையும்  நுண்விவரணைகளுடன் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.”

இது தஸ்தாயெவ்ஸ்கி நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள். இது தஸ்தாயெவ்ஸ்கி போகிறபோக்கில் அலட்சியமாக எழுதிய வரிகள் அல்ல. அவர் பிரக்ஞைபூர்வமாகவே நாவலாசிரியரின் கதைத்தொழில்நுட்பம்(craft) என்ன என்று படித்து,  அதிக சிரமத்துடன் அதைப்  பரிசோதித்தும் பார்த்தவர். தஸ்தாயெவ்ஸ்கி தன் இளமைக்காலத்திலிருந்தே கதைத்தொழில்நுட்பம் சார்ந்த பரிசோதனைகளைத் தானாகவே செய்யத் தொடங்கிவிட்டார். தஸ்தாயெவ்ஸ்கியின் விரிவான [நூல் அறிமுகம்] /வாசிப்பு நம்மை பொறாமைப்பட வைக்கக்கூடியது. தல்ஸ்தோய்க்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை, அதை தல்ஸ்தோய் “ இவ்வளவு அறிவாற்றலும், பரந்துபட்ட வாசிப்பும் உள்ள ஒருவர் ஏன் ‘இம்மாதிரியான’ நாவல்களை எழுதுகிறார் ” என்று தன் ஆச்சரியத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார். உலக இலக்கியத்தின் எல்லா கிளாசிக் படைப்புகளையும் தஸ்தாயெவ்ஸ்கி ஆழமாக வாசித்திருந்தார். நாவல்களைப் பொறுத்தவரை அவருக்கு அறிமுகமில்லாத நாவல் என்று எதுவுமே இல்லையென்றே சொல்லிவிடலாம். கோகலைப்போல (Nikolai Gogol) எழுதவேண்டும் என்றுதான் தஸ்தாயெவ்ஸ்கி முதலில் நாவல் என்ற களத்தில் இறங்கினார். ஆனால், அன்றே ஜார்ஜ் சான்ட்(George Sand), பால்ஸாக் (Balzac), விக்டர் ஹ்யூகோ(Victor Hugo), டிக்கன்ஸ்(Dickens), ஸ்காட்(Walter scott) போன்றவர்களின் படைப்புகளை தஸ்தாயெவ்ஸ்கி நுட்பமான வாசித்திருந்தார். பால்சாக்கின்(Balzac) ‘தந்தை கோரியோ(Father Goriot)’ நாவலை தஸ்தாயெவ்ஸ்கி மொழிபெயர்த்திருந்தார். மேலே குறிப்பிட்ட நாவலாசிரியர்கள் மேல் தஸ்தாயெவ்ஸ்கிக்கு தன் வாழ்வின் இறுதிக்காலம்வரை வழிபாட்டுணர்வு இருந்தது. ஜார்ஜ் சாண்ட்டின்(George Sand) மரணச்செய்தியைக் கேட்டவுடன் அவரது படைப்புகளைப் பற்றி தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய கட்டுரை பொதுவாக நாவலாசிரியர்களின் கலைத்தன்மை பற்றி தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருக்கும் மரியாதையை, அறிதலை தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல அன்னா கரீனினா, டான் க்விக்சாட்(Don Quixote) போன்ற நாவல்கள் பற்றி தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய கட்டுரைகள் நாவலாசிரியர்களின் கலைத்தன்மை பற்றி தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருக்கும் அபிப்பிராயங்களை, அறிதல்களை தெளிவாகக் காட்டுபவை.

இங்கு தஸ்தாயெவ்ஸ்கியின் தனித்தன்மை ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். தீவிர இலக்கிய வாசகர்கள் தரம் தாழ்ந்தவை என்று அன்றும் இன்றும் புறக்கணிக்கும் த்ரில்லர்களும்(thriller), துப்பறியும் நாவல்களும் தஸ்தாயெவ்ஸ்கியை மிகவும் கவர்ந்த படைப்புகள். க்ரைம் நாவல்களின் தந்தை என்று சொல்லப்படும் ஹோஃப்மேனின் (E.T.A.Hoffmann) எல்லா நாவல்களையும் தஸ்தாயெவ்ஸ்கி விசேஷ கவனத்துடன் வாசித்திருந்தார். அதேபோல கோத்திக் நாவல்கள் (Gothic Fiction) எழுதிய அன்னா ராட்க்லிஃப்(Ann Radcliffe) என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரின் எல்லா படைப்புகளையும் வாசித்திருந்தார்.

தஸ்தாயெவ்ஸ்கி நாவல் என்ற இலக்கிய வகைமை பற்றிய திட்டவட்டமான அபிப்பிராயம் கொண்டவர். தான் எழுதும்போது என்ன வெளிப்படுகிறதோ அதுதான் நாவல் என்ற பண்படாத மனநிலை அவரைக் கொஞ்சம்கூடத் தீண்டவே இல்லை. நாவல் பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் அபிப்பிராயம் என்பது அந்த இலக்கிய வடிவத்தைப் பற்றிய விரிவான வாசிப்பிலிருந்து உருவானது. மேலும் அந்த அபிப்பிராயம் தன் சொந்த நாவலெழுத்தில் கடைபிடிக்கவேண்டிய, மீறக்கூடாத விதிகளின் ஆற்றல் கொண்டது. நாவல் என்பது சமகால வாழ்க்கை யதார்த்தத்தின் முன் நம்பகத்தன்மைகொண்ட ஒன்றாக  இருக்கவேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார். நாவலாசிரியர் யதார்த்தவாதத்தின் (Realism) விதிகளை மீறுவது என்பது தற்கொலைக்கு நிகரானது என்று தஸ்தாயெவ்ஸ்கி நம்பினார். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் pro and contra  என்ற பகுதி தூய கருத்து சார்ந்த விவாதங்கள் கொண்டது. அதைப்பற்றிகூட தஸ்தாயெவ்ஸ்கி இவ்வாறு எழுதியிருக்கிறார்:

“ இவ்வளவு ‘அருவமான’ விஷயத்தைக் கையாளும்போதுகூட நான் யதார்த்தவாதத்தின் (Realism) விதிகளை மீறவில்லை என்ற பெருமிதத்தால் மகிழ்ச்சியாக உணர்கிறேன் ”

‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில் நன்மையே உருவான அல்யோஷாவின்(Alyosha) பாத்திரப்படைப்பு போதுமான அளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறதா என்ற பதற்றம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்தது. அல்யோஷாவின்(Alyosha) உருவாக்கத்தில் நன்மை, அறிவாற்றல் போன்ற குணங்கள் அந்த கதாப்பாத்திரத்திற்குச் சரியான விகிதத்தில் இருக்கிறதா என நண்பர்களிடம் அபிப்பிராயம்  கேட்டிருக்கிறார்.

ஒரு நாவல் திகிலூட்டும் வாசிப்பனுபவத்தை அளிக்க வேண்டும் (must thrill the reader) என்ற நம்பிக்கை கொண்டவர் தஸ்தாயெவ்ஸ்கி. இதைச் சொல்லும்போது தஸ்தாயெவ்ஸ்கியின் மனதில் ஹோஃப்மேன் (E.T.E.Hoffman), அன்னா ராட்க்லிஃப் (Ann Radcliffe) போன்றவர்கள்தான் இருந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் அப்பால் சமகால யதார்த்தத்தையும் சமகால வாழ்க்கையின் பிரச்சினைகளையும் கையாள வேண்டியது நாவலாசிரியனின் பொறுப்பு என்று  தஸ்தாயெவ்ஸ்கி நம்பினார். தஸ்தாயெவ்ஸ்கி நாளிதழ்களை வாசித்ததற்குக் காரணம் இந்த நம்பிக்கைதான்; நாளிதழ்களை சும்மா புரட்டிப்பார்க்கவில்லை, வாசித்தார். தஸ்தாயெவ்ஸ்கி  நாளிதழ்களை வாழ்க்கையின் ஆவணங்கள் என்பதுபோல பாதுகாத்து வைத்து நுட்பமாக வாசித்தவர்.  தஸ்தாயெவ்ஸ்கி இதழாசிரியராக வேலை பார்த்தவர். நாவல் எழுதத் தேவைப்படும் விலைமதிப்பற்ற நேரத்தை இதழாசிரியர் வேலை செய்து ஏன் வீணடிக்கிறீர்கள் என்று கேட்ட நண்பர்களிடம்

‘ஒரு நாவலாசிரியனுக்கு சமகால வாழ்க்கையுடன், இளம் தலைமுறையினரிடம் உறவு இருக்க வேண்டும். அதனால் நாளிதழ்களுடனான உறவு எனக்குக் கண்டிப்பாகத் தேவை’ என்று தஸ்தாயெவ்ஸ்கி  பதில் சொல்லியிருக்கிறார்.

இங்குதான் ஒரு சிக்கல் வருகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் பெரும்பாலும் நாடகங்களைப் போல. அதாவது அன்றாட வாழ்க்கையிலிருந்து அப்பாலிருக்கும் தூய கருத்துகளின் நாடகங்கள். நாவல் என்ற வடிவத்தில் அம்மாதிரியான கருத்து நாடகங்களை எழுதலாம் என ஒருவர் எண்ணுவதே ஒரு சாகசம்தான். அவரது படைப்புகளில் எந்த வடிவத்திற்கும் சிக்காத தூய கருத்துகளும், தூய அழகியல் அனுபவங்களும்தான் இயல்பாக வெளிப்படுகின்றன. யதார்த்தவாத (realism) சட்டகத்தில் நம்பகத்தன்மைகொண்ட திட்டவட்டமான வடிவத்தின் மூலமாகத் தூய கருத்துருவங்களை உருவாக்குவதுதான் தஸ்தாயெவ்ஸ்கி கையாண்ட சவால். தஸ்தாயெவ்ஸ்கியின் மேதைமை (genius) படைப்பூக்கத்துடன் வெளிப்படத் துடிக்கும் அருவமான இயல்புகளைக் கொண்டது. அவர் ‘வெளிப்பாட்டு ஊடகமாக’ தேர்ந்தெடுத்த நாவல் என்ற வடிவம் யதார்த்தவாத (realism) சட்டகம் கொண்டது. இவை இரண்டிற்குமான இடைவெளி (Genius Vs Realism)  அச்சமூட்டக்கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவானது. அருவமான கருத்துருவங்களை பூமியில் உள்ள மனிதர்களுக்கு இடையே மனிதர்களைப்போல வாழ்வதாக வாசகனை எப்படி நம்பவைப்பது என்பதுதான் தன் எழுத்தின் வழியாக நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கி என்றென்றைக்குமாக நடத்திய மற்போர்.

தஸ்தாயெவ்ஸ்கிதன்மை(dostoveskyan) கொண்ட நாவல்கள் விசித்திரமான முறையில்தான் பிறக்கின்றன, வளர்ச்சி அடைகின்றன. எல்லாமுறையும் தூய கருத்துகளிலிருந்து உருவாகும் கற்பனைதான் அவரது நாவல் விதை. ஒரு நாவல் ‘அறிவாற்றல், விருப்புறுதி (will) இவை மட்டும் மனித வாழ்க்கைக்கான அடிப்படையாக ஆகிவிட்டால் வாழ்க்கை சாத்தியமற்றதாக ஆகிவிடும்’ என்ற கருத்திலிருந்து தொடங்கலாம். களங்கமற்ற தூய நன்மை நவீன வாழ்க்கைச்சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களைப் பற்றிய கற்பனையிலிருந்து வேறொரு நாவல் ஆரம்பிக்கலாம். சாத்தானால் பாதிக்கப்பட்ட ‘gadarene’ பன்றிகளைப்பற்றிய பைபிள் கதையுடன் (Gerasene swine) சமகால கடவுள் மறுப்பு இயக்கங்கள் சார்ந்த சிந்தனைகளை இணைத்து ஒரு நாவல் பிறக்கிறது. ஆனால், இந்த அடிப்படை விதை என்பது  நீண்ட சிக்கலான செயல்பாட்டின் தொடக்கம் மட்டும்தான்.

அந்த தொடக்கத்திற்கு பின்னர் தஸ்தாயெவ்ஸ்கி அந்த அடிப்படையான கற்பனையின் இன்னும் தெளிவான வடிவத்தை நோக்கி நகர்ந்தார். அந்த ஆரம்பகட்ட கற்பனையிலிருந்து தூய கருத்தியல் வடிவமான ஒரு கதாப்பாத்திரம் முதலில் உருவாகிறது. ‘அசடன்’ நாவல் எழுதும்போது தஸ்தாயெவ்ஸ்கி நண்பர்களுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களில் உள்ள தகவல்கள் அவரின் படைப்பாக்கத்தை, அதன் செயல்முறையை  நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. நண்பர் மெய்கோவிற்கு (Apollon Maikov) அவர் எழுதுகிறார்:

“…  ரொம்ப காலமாக, ஒரு கற்பனை என் மனதைத் தொந்தரவு செய்தபடியே இருக்கிறது. ஆனால், அதை அடிப்படையாகக்கொண்டு ஒரு நாவலை எழுத ஆரம்பிக்க எனக்குப் பயமாக இருக்கிறது. ஏனெனில் அந்தக் கற்பனை எழுத்து வழியாக எளிதில் வெளிப்படமுடியாத அளவுக்கு அவ்வளவு சிக்கலானது. அந்தக் கற்பனை வசீகமானதுதான் என்றாலும், அவ்வாறான ஒன்றை வைத்துச் செயல்படத் தொடங்கும் அளவுக்கு இன்னும் நான் தகுதியடையவில்லை. நன்மை மட்டுமே நிறைந்த, களங்கமற்ற ஒரு கதாப்பாத்திரத்தைச் சித்தரிக்க வேண்டும். இதைவிடக் கடினமாக வேறொன்று இருக்க சாத்தியமே இல்லையென்று நான் நினைக்கிறேன்- அதுவும் இந்த நவீனகாலத்தில்…”

இந்தக் கற்பனையை வெளிப்படுத்துவது என்பது மிகச் சிரமமான விஷயம்தான். ஆனால், அதிலிருந்து பின்வாங்க தஸ்தாயெவ்ஸ்கி தயாராக இல்லை. அவர் தன் கடிதத்தைத் தொடர்கிறார்:

“ ஒருவழியாக ஒரு திட்டம் உருவாகியிருக்கிறது. சம்பவங்களின் பரிணாமத்தை யோசித்துவிட்டேன், அதில் விவரணைகள் சரியாகப் பொருந்துகின்றன. அதனால் நான்  மிகமிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். ஆனால் நாவலின் ஒட்டுமொத்த வடிவம்? கதாநாயகனை என்ன செய்வது? அந்த நாவலின் முழுமையான வடிவம் கதாநாயகன் சார்ந்ததுதான் இயங்குகிறது. கதாநாயகனின் உத்தேசமான வடிவத்தை நான் உருவாக்கிவிட்டேன். ஏனெனில், அப்படி ஒரு உத்தேசமான வடிவத்தை முதலிலேயே உருவாக்காமல் எதுவுமே சாத்தியமில்லை. சரி, அந்த உத்தேசமான வடிவம் என் பேனாவை அசைப்பது வழியாகத் தானாகவே வளருமா?………… என்னென்ன தாளமுடியாத சிக்கல்கள் இருக்கின்றன! ஒருவேளை, என் மனதில் கதாநாயகனின் சித்திரம் திட்டவட்டமான வடிவில் பதிந்திருக்கலாம். ஆனாலும் அந்த கதாநாயகன் மிகமிக நெருக்கடிகொண்டவனாக ஆகிவிட்டிருக்கிறான். இந்த நாவலை எழுத சாதாரணமாகத் தேவைப்படுவதை விடக் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிகமான நேரம் எனக்குத் தேவைப்படுகிறது….”

இந்த கடிதத்தை வைத்து கதாநாயகனின் சித்திரம் மனதில் உருவானவுடன் தஸ்தாயெவ்ஸ்கி நேராக நாவலெழுதத் தொடங்கினார் என்றோ, எழுதும்போது இயல்பாகவே கதாநாயகனும் மற்ற கதாப்பாத்திரங்களும் தானாக வளர்ந்து உயிர்பெற ஆரம்பித்தன என்றோ யாரும் நினைத்துக்கொள்ளவேண்டாம். தன் படிப்பறையில் அமர்ந்து நாவலின் ஒட்டுமொத்த வடிவத்தைப் பற்றியும், அதிலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தைப் பற்றியும், ஒவ்வொரு களத்தைப் பற்றியும் தன் எண்ணங்களை விரிவாக எழுதிக்கொள்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இம்மாதிரியான எண்ணங்கள் அப்படியே காற்றோடு போய்விடுவதில்லை. அவருக்கு அந்தக் குறிப்புகளை நிரந்தரமாகத் திரும்பத் திரும்ப எழுதி ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், கூடவே முன்னகரவும் வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் எழுதும் செயல்பாட்டில் இம்மாதிரியான சிடுக்குகள் நிறைந்த தனிப்பட்ட சிந்தனைகள் எல்லாமே குறிப்புகளாக எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் உள்ள ஒவ்வொரு விஷயத்தைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களும், அந்த விஷயத்தின் எல்லாக் கோணங்களும் தனிக்குறிப்புகளாக எழுதிவைக்கப்படுகின்றன. தோராயமான தீற்றல்கள், சிலசமயம் களங்கள், முகங்கள், அவற்றின் சித்திரங்கள் – இவை அத்தனையும் டஜன் கணக்காக தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்பேட்டில் இடம்பிடிக்கின்றன.

இந்நிலையில்தான் கதைத்தொழில்நுட்பம்(craft) சார்ந்த  சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றன. தூய கருத்துகளும், தூய கருத்துகளின் பருவடிவங்களான கதாப்பாத்திரங்களும் அவரது மனதில் பதியும் செயல்பாடு முடிந்தவுடன் தான் செயல்படும் களத்தை மாற்றி அமைக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி, தூய கருத்துகளின் பரப்பிலிருந்து அன்றாட வாழ்க்கையிலுள்ள கீழான உலகங்களுக்கு, சமகால நாளிதழ்களில் உள்ள செய்திக்குறிப்புகளுக்கு நேராக இறங்கி வருகிறார். தூய கருத்துகள் மண்ணிலிருந்து உயர்ந்தவை, அன்றாட வாழ்க்கையுடன் துளியும் ஒட்டாமல் அகன்று நிற்பவை. அவற்றை தஸ்தாயெவ்ஸ்கி நாவலின் யதார்த்தவாத கூறுகளில் பிரதி செய்கிறார். அவற்றை நம்பகத்தன்மை கொண்ட கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் வழியாக இணைப்பதுதான் நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கியின் வேலை. இதை கதைத்தொழில்நுட்ப தேர்ச்சி வழியாகத்தான் சாதிக்க வேண்டும். இந்த இணைப்பு வெற்றிபெறவில்லையென்றால் தான் எழுதுவது நாவல் அல்லாத வேறொன்றாகத்தான் இருக்கும் என்பதை தஸ்தாயெவ்ஸ்கி நன்கு அறிவார். தஸ்தாயெவ்ஸ்கியின் அபிப்பிராயத்தில் நாவல் என்ற இலக்கிய வடிவம் என்பது சமகால வாழ்க்கைச்சூழலில் முழுமையான நம்பிக்கைத்தன்மையை கொண்டதாக இருக்கும். அது சமகால பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும், வாசகனுக்கு திகிலூட்டக்கூடியதாக வாசிப்பனுபவத்தை அளிக்கும். எந்த ஐயத்திற்கும் இடமில்லாததுதான் இந்த அபிப்பிராயம். அவர் தன் காட்டாறு போன்ற படைப்பூக்கத்திற்கு முன்னால் கதைத்தொழில்நுட்பம்(craft) என்ற அணைக்கட்டை கட்டுமளவுக்கு கடினமான பணியைச் செய்துகொண்டிருந்தார்.

மீண்டும் ஒரு புதிய களத்தில் உழைக்க ஆரம்பிக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. தன் தூய கருத்து சார்ந்த கற்பனையை செறித்துக்கொள்ளக்கூடிய ஒரு யதார்த்தமான சம்பவத்தை (அது நாளிதழ்களில் வந்த ஒரு கொலைவழக்கின் அறிக்கையாக ஆக இருக்கலாம்) அதை தஸ்தாயெவ்ஸ்கி கண்டுபிடிக்கிறார். அந்த கொலையின் எல்லா விவரங்களையும் சேகரிப்பதில் பரபரப்புடன் செயல்படுகிறார். இதில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிவைக்கும் குறிப்புகளின் முறைமையே மாறுகிறது. இங்கு தான் கண்டுபிடித்த உண்மையான கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் நிஜப்பெயர்களை, அது சார்ந்த தகவல்களைப் பயன்படுத்தி அவர் தன் நாவலுக்கான  குறிப்புகளை எழுதுகிறார்.

கதாப்பாத்திரங்களை உருவாக்குவதிலும் ஏறக்குறைய இதே முறைமையைத்தான் அவர் கடைப்பிடிக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பூக்கம் கொண்ட கலைமனதில் இயல்பாகவே தூய கருத்துகளின் வடிவில் மட்டும்தான் கதாப்பாத்திரங்கள் மலர்கின்றன. நன்மையின் வடிவங்களான மிஷ்கினும்(Prince Mysskin), அல்யோஷாவும்(Alyosha); அறிவாற்றலும் தர்க்கப்பூர்வமான திறனும் கொண்ட தீமைவடிவங்களான ஸ்டரவ்ரோஜினும்(stravrogin), இவானும்(ivan); ஆபாசமானவற்றில் திளைக்கும் வாழ்வாசையின் வடிவமான ஃப்யோதர் பாவ்லோவிச் (Fyodor Pavlovich Karamazov)- இப்படி….. ஆனால் இந்த அடிப்படை கற்பனை உருவானபிறகு தஸ்தாயெவ்ஸ்கி தனக்கு நன்கு  அறிமுகமான உண்மையான மனித ஆளுமைகள் கொண்ட களத்திற்கு மாறுகிறார்.  தூய கருத்தின் பருவடிவத்தை உண்மையான மனித ஆளுமையுடன் அவர் இணைக்கிறார். அந்த இணைப்பிற்குப் பின் ஒரு கதாப்பாத்திரம் தொடர்பான குறிப்புகள் அனைத்தும் ஒரு உண்மையான மனிதனின் பெயரில்தான் இருக்கும். தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்புகளில் அவரின் பிரதான கதாப்பாத்திரங்கள் அனைத்துமே இப்படி நிஜ மனிதர்களின் பெயரில்தான் அடையாளப்படுத்தப்படுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கி கால, இட தொடர்பு இல்லாத தூய கருத்தை தன் சொந்த சிந்தனையைக்கொண்டு அதற்கு வாழ்க்கையுடன் தொடர்பை உருவாக்க மனப்பூர்வமாக முயற்சிக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. தூய கருத்திற்கும் நிஜ மனிதனுக்குமான உறவைத் தானாகவே திரும்பத்திரும்ப உருவாக்கி அழித்து தன் சொந்த சிந்தனையின் பகுதியாகவே ஆக்குவது அவருக்குள்ளே இருக்கும் தேர்ச்சியடைந்த கைவினைஞர்தான்.

தன் நாவலின் சட்டகமாக அவர் தேர்ந்தெடுக்கும் உண்மையான சம்பவங்களைப் பற்றிய விவரணைகளை எவ்வளவு தேடியபிறகும் தஸ்தாயெவ்ஸ்கி திருப்தியடைவதில்லை. நெசயேவ்(Sergey Nechayev) என்ற புரட்சியாளர் மேல் (நெசயேவ்) இருந்த கொலை வழக்கு அன்று பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அதை ‘டெவில்ஸ்(devils)’ நாவலின் கருத்தியல் விவாதங்களுக்கு தஸ்தாயெவ்ஸ்கி எடுத்துக்கொண்டார். அந்த வழக்கு சார்ந்த தகவல்களை அவர் நாளிதழ்களில் கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை பின்தொடர்ந்தவர். அது தொடர்பான முழுமையான நீதிமன்ற ஆவணங்களைக்கூட வாசித்திருக்க வேண்டும், அதுவரை அவருக்குத் திருப்தி வருவதில்லை. கரமசோவ் சகோதரர்கள் நாவலின் நீதிமன்றம் சார்ந்த பகுதிகளுக்காக நீதிமன்ற முறைமை,, நடவடிக்கைகள் பற்றியும் முழுமையாகப் படித்தவர் அவர்.

தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் உண்மையான சம்பவங்கள் சார்ந்த விவரணைகள் மிக நுண்மையாக இருக்கும். இதை ஒரே ஒரு உதாரணத்தை வைத்தே சொல்லிவிடலாம். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒப்புநோக்க அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமான ‘கோல்யா க்ரோஸ்கின்’ என்ற சிறுவன் ஓடும் ரயிலுக்குக் கீழே தண்டவாளத்தில் படுத்துக் கிடப்பான். அந்தப் பையனின் விசித்திரமான குணாதிசயத்தைக் காட்டுவதற்காக இந்தச் சம்பவத்தை நாவலில் வைத்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு எழுதி முடித்த ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் கடைசிப்பகுதியில்தான் இந்த ‘கோல்யா க்ரோஸ்கின்’ என்ற சிறுவன் அறிமுகமாகிறான். ஆனால், ஓடும் ரயிலுக்குக் கீழே உயிர் ஆபத்து எதுவுமே ஏற்படாமல் படுத்தபடி இருப்பதற்கான சாத்தியத்தைப் பற்றி நாவலின் ஆரம்பகட்டத் தயாரிப்பிலேயே தேடத்தொடங்கியிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. பலர் அது சாத்தியம்தான் என்று சொன்னபிறகும் தஸ்தாயெவ்ஸ்கி திருப்தி அடையவில்லை. அவர் ரயில்வே அதிகாரிகளிடம் இதைப்பற்றி தனிப்பட்ட கடிதங்கள் எழுதியபிறகுதான் தானே நம்ப ஆரம்பித்தார். அதற்குப் பிறகுதான் அந்த சம்பவம் நாவலில் இடம்பெறுகிறது.

அருவமான தூய கருத்துகளை வாழ்க்கைப்பாடுகளில் கட்டி நிறுத்தவேண்டிய யத்தனத்தில் சேகரித்த உண்மையான தகவல்களின் செறிவு தஸ்தாயெவ்ஸ்கியின் கைக்கு இன்னும் கூடுதலான உறுதியைத் தந்திருக்கவேண்டும். தகவல்களை, அவற்றைப்பற்றிய நுண் விவரணைகளைச் சேகரிப்பதில் தஸ்தாயெவ்ஸ்கி காட்டிய பிடிவாதத்திற்கான காரணம் நாவலில் அவை தேவை என்பதற்காக அல்ல. அதற்கெல்லாம் அப்பால் ஒரு நாவல் தனக்கேயான நம்பகத்தன்மையைக் கொண்டிருப்பதற்கு அந்த தகவல்கள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கையின் வெவ்வேறு உணர்வுநிலைகளை வைத்து தானே உருவாக்கிய  தூய கருத்தின் பருவடிவங்கள் நம்பகத்தன்மையை அடையவேண்டுமென்றால் அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவங்களைத் தானே நம்பவேண்டும், அதனால் உண்மையான தகவல்கள் தவிர்க்கமுடியாதவை என்று அவர் கருதியிருக்கலாம்.மித்யாவின்(Mitya) உண்மை வடிவம் சைபீரிய சிறையில் தஸ்தாயெவ்ஸ்கியுடன் கூட இருந்த ‘இல்லின்ஸ்கி’. ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலுக்காக தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய தனிப்பட்ட குறிப்புகளில் ‘மித்யா’ என்ற கதாப்பாத்திரம் வரும் இடங்களில் ‘இல்லின்ஸ்கி’ என்ற உண்மையான பெயரைத்தான் தஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்தியிருக்கிறார். தூய கருத்துகளின் பருவடிவங்களுக்கு திட்டவட்டமான வாழ்க்கைக்களத்தை ஏற்படுத்தி பூமியில் தளைத்து நிறுத்தியிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. அவற்றைத் தான் நிரந்தரமான கவனத்துடன் கையாளாவிட்டால் அவை ஒரேடியாக வீழ்ந்துவிடும் என்ற பயம் தன் எழுத்தின் கதைத்தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் தஸ்தாயெவ்ஸ்கி என்ற கைவினைஞருக்குப் பயம்.

ஆனால், தஸ்தாயெவ்ஸ்கியின் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. ஒரு தூய கருத்து  தனக்கேயான முறையில்  வளர்ச்சியடைவதன் கதையைத்தான் அவர் சித்தரிக்கவேண்டியிருக்கிறது. தன் நாவலில் ஒரு தூய கருத்தின் சலனங்களை ஒரு மனிதனின் வாழ்க்கை சார்ந்த சலனங்களாகக் காட்ட வேண்டியிருக்கிறது, இது சாதாரணமான விஷயமல்ல. ஒரு மனிதனை பேய்பிடிக்க வைக்க வேண்டும். அப்படியான பேய்பிடித்த நிலையில், அவனது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கிறோம் என்ற உணர்வை வாசகனுக்கு ஏற்படுத்தத்தக்க விதத்தில், பேயின் வரலாற்றை எழுதுவதுதான் தஸ்தாயெவ்ஸ்கியின் முறைமை என்று சொல்லலாம். தஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்த செயல்பாடு நாடகத்தின் தீவிரத்துடன், க்ரைம் நாவலின் திகிலுடன் இருக்க வேண்டும். இதை தஸ்தாயெவ்ஸ்கி செய்யும் முறையைக் கவனித்தால் நாவலின் கதைத்தொழில்நுட்பத்தைப்பற்றி  அவருக்கு இருக்கும் விஷேஷமான அறிவை, கதைத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவருக்கு இருக்கும் நிபுணத்துவத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் வடிவம் நாடகங்களின் வடிவத்துடன் நெருக்கமானது. இது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் தன் இயல்பான படைப்பூக்கத்துடன் வெளிப்படுவது  நாடகம் என்ற வடிவத்தில்தான் என்று பலர் நினைக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களுக்கு நாடகங்களுடன் உள்ள வடிவம் சார்ந்த ஒற்றுமை என்பது எந்த நிலையிலும் மறுக்கமுடியாதது. ஆனால், தஸ்தாயெவ்ஸ்கி என்பவர் வழிதவறி நாவல் எழுத வந்த ஷேக்ஸ்பியர் என்று சொல்வது அவ்வளவு சரியானதல்ல. தன் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த சிக்கலை தனக்கே உரிய முறையில் கையாள்வதற்காக தஸ்தாயெவ்ஸ்கி நாடகம் சார்ந்த சில உத்திகள் பலவற்றை  பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது.

துன்பவியல் நாடகங்களும் (classical tragedies), ஷேக்ஸ்பியரின் பிரதான படைப்புகளும் தூய கருத்துகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் குறியீட்டுரீதியான படைப்புகள்தான். யதார்த்தவாத பாணியில்(realistic) நம்பகத்தன்மையான முறையில் சமகால முக்கியத்துவம் கொண்ட இலக்கியப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. எந்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு தூய நாடக வடிவம் போதுமானதாக இருந்ததில்லை. ஆனால், கருத்தியல் வடிவங்களையும் தூய கருத்துகளையும் வைத்துச் செயல்படும் அவரின் கலைமனதால் நாடகத்தின் முறைமையை, அதன் சாத்தியங்களை முற்றிலுமாக வேண்டாம் என ஒதுக்க முடியவில்லை. தூய கருத்தையும் உண்மையான மனிதனின் வாழ்க்கையையும் கலந்து கதாப்பாத்திரங்களை உருவாக்கிய தஸ்தாயெவ்ஸ்கி என்ற ‘கைவினைஞர்’ நாவலின் உத்திகளிலும் நாடகத்தின் உத்திகளிலும் தனக்குள்ள விசேஷமான அறிவைப் பயன்படுத்தி ஒரு புதிய வடிவத்தைத்தான் உண்மையாகவே உருவாக்கியிருக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை  ஒருவகையில் நாவல்-நாடகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பல முக்கிய இலக்கிய விமர்சகர்கள் அவற்றை ‘நாவல்-நாடகங்கள்’ என்றே அழைத்திருக்கிறார்கள். விசித்திரமான இந்த வடிவத்தை கண் இமைகளை மூடித்திறப்பது போல எந்தத் தடையுமின்றி எழுதும் பாக்கியம் கொண்டவர் அல்ல தஸ்தாயெவ்ஸ்கி. கருத்துகளை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஒரு கலைஞன் பிரக்ஞைப்பூர்வமாகக் கையாண்டதன் விளைவுதான் அந்த வடிவம். ஒருபுறம் தான் வெளிப்படுத்த வேண்டிய அருவமான கருத்துகள், கலைமனம் இவற்றின் தனித்தன்மைகள்- மறுபுறம் தான் எடுத்துக்கொண்ட நாவல் என்ற இலக்கிய வகைமையுடன் பிரிக்கமுடியாத அதன் வடிவம் சார்ந்த தனித்தன்மை- இவை இரண்டையும் இணைக்க தான் வாழும் காலம் முழுவதும் மற்போர் நடத்தியவர்தான் தஸ்தாயெவ்ஸ்கி. கதைத்தொழில்நுட்பப்பயிற்சியில் மூழ்கியிருந்த அந்த நாவலாசிரியரின்  சிந்தனை எல்லா கலைவடிவங்களையும் தேடி அலைந்தது.  தான் செய்துபார்த்த சோதனை முயற்சிகளின் வழியாகக் கலைவடிவங்களின் சாத்தியங்களை அவர் மதிப்பிட்டார்.

சன்னதம் வந்தது போல ஆவேசத்தில் பேனாவிலிருந்து வந்தது அனைத்தையும் அப்படியே நாவலாக எழுதியவர்தான் தஸ்தாயெவ்ஸ்கி என்று சிலர் எண்ணுகிறார்கள். அப்படி எழுதப்பட்டிருந்தால் இன்று நாம் வாசிக்கும் தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில்கூட ஒன்றுகூட உலகத்திற்குக் கிடைத்திருக்காது. ஒருபக்கம் பைபிள், துன்பவியல் நாடகங்கள் (Classical Tragedies), தத்துவங்கள்; இன்னொருபக்கம் க்ரைம் நாவல்கள், நாளிதழ்கள், கொலை சார்ந்த அறிக்கைகள்- இவை இரண்டிற்கும் இடையே பொதுவான எந்த அம்சமும் இல்லை. இந்த வெவ்வேறான அம்சங்களை ஒன்றாகக் கலந்து உருவாக்கப்பட்டவைதான் தஸ்தாயெவ்ஸ்கியின் மாஸ்டர்பீஸ் நாவல்கள். தஸ்தாயெவ்ஸ்கியின்  நாவல்களின் மொழிநடை பைபிளின் உணர்வுப்பூர்வமான நடையையும், நாளிதழ்களின் மொழிநடையையும் ஒன்றாகக் கலந்ததுபோல இருக்கும். அந்த மொழிநடை பற்றி எப்போதுமே விவாதத்திற்குரிய விஷயமாகத்தான் இருக்கும். என்றுமே ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கும். ஒருபோதும் ஒன்றாக இணைக்கமுடியாத வெவ்வேறான கூறுகளைத் தன் சொந்த படைப்பின் உள்ளடக்கம், வடிவம், மொழிநடை என்ற மூன்று அம்சங்களிலும் ஒன்றாக இணைத்து வியப்பளிக்கும் வகையில் நுட்பமான பிரபஞ்சத்தையே படைத்திருக்கிறார் நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கி. இந்த இணைப்பை ஏற்படுத்தியது தஸ்தாயெவ்ஸ்கியின் சாதனை. தன் புனைவில் தஸ்தாயெவ்ஸ்கி இதை அடைந்தது ஆச்சரியமானது, நம்பமுடியாதது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் வடிவம்  மேன்மையா? அல்லது போதாமையா? என்ற விஷயத்தைப்பற்றிய விவாதம் இன்னும்கூட முடிவுறவில்லை. பைபிளின் மொழிநடையையும் சமகால நாளிதழ்களின் நடையையும் ஒன்றாக ஆக்கிய அவரது மொழிநடைபற்றிய விவாதங்கள் நாளையும் தொடரலாம். ஆனால், எந்த தருணத்திலும் யாராலும் கேள்விகேட்க முடியாத ஒரு தரவை இங்கு குறிப்பிட வேண்டும். தன் பணி என்ன என்று அறிந்து, அது சார்ந்த சிக்கல்களை நுட்பமாக, விரிவாகப் படித்து, நாவல் என்ற இலக்கிய வடிவத்தைப் பிரக்ஞைப்பூர்வமாகக் கையாண்ட பிரத்தியேகமான கலைமனம் கொண்டவர்தான் தஸ்தாயெவ்ஸ்கி. அந்த பிரத்தியேக கலைமனதைக்கொண்டு தனக்கேயான ஒரு முழுமையான இலக்கிய உலகத்தை முழுக்க படைத்த பிறகும் தன் நெருங்கிய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மனவேதனையுடன் தஸ்தாயெவ்ஸ்கி இவ்வாறு எழுதுகிறார்:

“……… என்னை நானே மதிப்பிடும் சந்தர்ப்பத்தில், ………… என் படைப்புகளின் நுண்மைகள் பற்றி மற்ற யாரையும்விட எனக்கு நன்றாகவே தெரியும்……….. என் ஆன்மாவில் இருப்பவற்றில் ஐந்து சதவீதத்தைக்கூட என்னால் வெளிப்படுத்த முடியவில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும், இது ஒரு கசப்பான உண்மை. எதிர்காலத்தில், என்றாவது ஊழ் இருந்தால்; புனிதமான, அரிதான படைப்பூக்கத்தை எல்லாம் வல்லவன் எனக்கு அளித்தால் அன்று என் ஆன்மாவில் இருக்கும் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்று நான் என்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்…..”

தன்னைப்பற்றிய நிறைவின்மையுணர்வு கொண்ட தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த வேதனை மகத்தான எந்த நாவலாசிரியரும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உணரும் வேதனைதான். அவரின் அந்த பிரார்த்தனை உலகின் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும் உண்மையான கலைஞனின் மனதிலிருந்து என்றுமே உயர்ந்துவரும் பிரார்த்தனை தான்.

தமிழாக்கம்: அழகிய மணவாளன்

குறிப்பு: மலையாள இலக்கியத்தின் முன்னோடி இலக்கிய விமர்சகரான பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல்: “ஸித்தியும் சாதனையும்” என்ற கட்டுரைத்தொகுதியிலிருக்கும் ஒரு கட்டுரை

பி.கே.பாலகிருஷ்ணன் பற்றி: https://www.jeyamohan.in/11151/ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.