ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்

ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல் இழுக்கவேண்டி ஏற்படும். ஃபான்தான்காவில் உள்ள பலரும் கோடை வீடுகளை நோக்கி நகர்வதனால் பல விடுதிகளும் தற்காலிகமாக இயங்குவதில்லை என்ற அறிவித்தல் பலகையை வாசல் கதவுகளில் தொங்கப்பட்டிருந்தன. இயங்குகின்ற ஒரு சில விடுதிகளில் இருந்த அறைகளும் முன்பதிவில் நிரம்பி இருந்தன. கொண்டுவந்த சிகரட்டுகளில் ஒன்றுதான் மீதமிருந்தது. அன்றிரவு யெகாடெரிங்கோஃப்ஸ்கி ரயில் நிலையத்தில்தான் தங்கியாகவேண்டிய நிர்ப்பந்தம். தோளில் இருந்த பேக்கை கழற்றி ஒரு காலை கதிரையில் வைத்துக்கொண்டு அதற்கு மேலே தேடுவதற்கு வசதியாக அதை வைத்து நேற்றுக் குடித்துவிட்டு கொஞ்சமாக மிச்சம் வைத்திருந்த வைன் போத்தலை தேடிப் பார்த்தேன். அடிவரை துலாவிய போது கையில் பட்டது. கழுத்தைப் பிடித்து தூக்கி எடுத்து மிச்சம் வைனையும் உறிஞ்சிவிட்டு, போத்தலை எங்கும் வீசாமல் தண்ணி எடுப்பதற்கென்று மீண்டும் உள்ளுக்குள் திணித்துக்கொண்டேன்.

காத்திருப்பு பகுதியில் போடப்பட்டிருந்த இரும்புக்கதிரையின் ஒரு தொங்கலில் கொண்டுவந்த பேக்கை தலையணைக்கு ஏற்றாற்போல வைத்துவிட்டு உள்ளே இருந்த ஒரு புத்தகத்தையும், கம்பளியையும் கையில் எடுத்துக்கொண்டேன். மழையில் நனைந்திருந்த சப்பாத்துக்களை தண்ணி வடியும்படி சாய்வாக வைத்துவிட்டு சொக்ஸ்கள் இரண்டையும் இறுக்கிப் புளிந்து ஈரம் குறையும் வரைக்குமாக திரும்பத் திரும்ப உதறிய பின் மறு தொங்கலில் இருந்த இரும்புக் கைபிடிக்கு மேலே காயப் போட்டுவிட்டு அந்த நீண்ட கதிரையில் கால்களை ஒடுக்கிக்கொண்டு கம்பளியை இழுத்து உடல் முழுவதும் மறையும்படியாக போர்த்திக்கொண்டேன். எனக்கு எதிரே இருந்த கதிரையில் ஒரு பூனை தன் வாலை அசைத்தபடி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தது. அதன் முன்னங்கால்கள் அடிக்கடி முகத்தைச் சொறிவதும் எடுப்பதுமாக இருந்தை கவனித்துக்கொண்டே கண்களை மெல்ல மூடினேன்.

இரண்டு பலகைகளின் இடைவெளிக்கு நடுவே ஒரு பலகை அளவு இடைவெளி. தூங்குவதற்கு ஏதுவாக அது அமையவில்லை. ஆனாலும் அதன்மேலேதான் தூங்கியாகவேண்டும். இடைவெளிகளுக்கு ஊடாக குண்டூசிகள் குத்துவதைப்போல குளிரடித்துக் கொண்டருந்தது. இன்னுமொருபக்கம் தூவானம் உஸ்… உர்…. உஸ்…  என்று வீசிக்கொண்டிருந்தது. மேலும் அது சிறுவயதில் காதுச் சோணைகளை மெதுமெதுவாக பொத்தி விரித்து விளையாடிய அனுபவத்தை ஞாபகமூட்டிக்கொண்டிருந்தது.   பேய்க்காற்றில் சவுக்கு மரங்கள் சுழன்று சுழன்று ஆடின.

வைனின் உதவியினாலும், இழுத்த அஸ்தலின்களினாலும் எப்படியோ தூக்கம் போகும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் கண்களை மூடினேன். ஆனால், இடை இடையே அந்த அழகிய யெகாடெரிங்கோஃப்ஸ்கி புகையிரத நிலையத்தை கடந்தும் தரித்தும் செல்லும் கறுப்பு அப்பிய புகைவண்டிகளின் கூ.. என்றபடி காதைக் கிழிக்கும் கோர்ண் ஒலிகளும் சச்சக்… சச்சக்.. என்றபடி சுழலும் சில்லுகளின் பேரிரைச்சலும் இடை இடையே தூக்கத்தைப் பறித்து வெளியே இழுத்துப்போட்டு எரிச்சலூட்டின. ஒரு கட்டத்துக்கு மேலே இனித் தூங்கமுடியாது என்று முடிவுசெய்து நெஞ்சுக்கு மேலே குளிர் தாவாமல் அணைத்து வைத்திருந்த புத்தகத்தை கையில் எடுத்து எழுந்து உட்கார்ந்தேன்.

முன்தெருவில் நிமிர்ந்து வளைந்திருந்த தெருவிளக்கின் மெல்லிய செம்மஞ்சல் ஒளியில் கோடு கோடாக பெய்துகொண்டிருப்பது மழையா அல்லது பனியா என்று தெரியாத அளவிற்கு அத்தூறல் காட்சி இருந்தது. இன்நேரம் சூடாக ஒரு இஞ்சி சேர்த்த கறுப்புக் கோப்பியும் பிஸ்கட்டும் இருந்தால் நல்ல சுகமாக இருக்கும். நினைத்துக்கொண்டே கென்டின் கதவை திரும்பிப் பார்த்தேன். இன்னும் திறந்தபாடில்லை. முழங்கால்வரை நீண்ட கோர்ட்டுகளை அணிந்தபடி வளைந்த கைபிடியுடைய அகன்ற கறுப்பு நிறக் குடைகளை விரித்து, கையில் பொதிகளோடு குறுக்கறுக்கும் மனிதர்களும் அவர்களின் சப்பாத்துச் சத்தங்களும், சில குதிரை வண்டிகளின் லாடன் சத்தங்களும் காதில் ஒலிக்க அந்தக் காட்சியை ரசித்தபடி புத்தகத்தை விரித்தேன்.

‘நீயே புரிந்து கொள்வாய்! அடுத்த 24 மணி நேரத்தை எப்படிக் கழிக்கப் போகிறேன் என்றுதான் புரியவில்லை!’

‘நன்றாகத் தூங்குங்கள். நல்லிரவாக அமையட்டும். நான் உங்களை ஏற்கனவே நம்பிவிட்டேன் என்பது நினைவில் இருக்கட்டும். ஒருவருடைய ஒவ்வொரு உணர்ச்சிக்கும்.. ஏன் சகோதர வாஞ்சைக்கும் அவர்களே பொறுப்பேற்றுக் கொள்ளமுடியாது என்று அழகாகக் கூறினீர்கள் தெரியுமா? அந்த நேர்த்தியில்தான், உங்களிடம் என் உண்மைகளைக் கூறலாம் என்று எனக்குத் தோன்றியது.’

‘தயவுசெய்து சொல்! எதைப்பற்றி? என்ன அது?’

‘நாளைவரை பொறுத்திருங்கள் அதுவரை அது ரகசியமாக இருக்கட்டும்…..’

இதற்குமேலே வாசிக்க முடியாது. இறந்த சில்லூறுப் பூச்சிகளால் நிரம்பி இருந்த மின்குமிழின் மங்கலான குருட்டு வெளிச்சத்தில் வாசிப்பது கண்ணுக்கு தொந்தரவாக இருந்ததும் அந்த முப்பத்தி ஆறாம் பக்க மூலையை சிறிதாக மடித்து புத்தகத்தை மூடிக்கொண்டு மீண்டும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.

இரவு முழுவதும் பெரும் ஆராவாரத்துடன் பெய்த மழை ஓய்ந்திருந்தது. அதுவரைக்கும் ஒளித்திருந்த சில நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கை அன்னார்ந்து பார்த்தேன் அதனுள் ஏதோ ஒன்று தும்புகளாலும், நார்களாலும் சிறு கூட்டைக்கட்டி வாழ்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு விளக்கின் அடிப்பகுதி பழைய பஞ்சுபோல நிறைந்திருந்தது. ‘மற்றவைக்கு பயந்த அல்லது மற்றவைகளில் இருந்து ஒதுங்கியவை எல்லாமே இப்படித்தானே’ என தனித்து வாழ்தல் பற்றிய பல எண்ணங்கள் எனக்குள்ளாக கிளைவிடத் தொடங்கின.

மாட்ரோனாவைத் தேடி அந்த வளைந்த பாலத்தைத் தாண்டி அதன் அருகில் இருந்த பரணிக்கோவ் மாளிகையை நோக்கி நடந்து சென்றேன். வற்றாமல் இருந்த வெள்ள நீர் சப்பாத்துகளில்; மிதிபட்டு தவளையைப்போல துள்ளிக் குதித்தன. பனி பொழிய ஆரம்பித்து கிறிஸ்துமஸ் மரங்களில் எல்லாம் படரத் தொடங்கி இருந்தன. நீண்ட கூம்பு போல பச்சையாக இருந்த மரங்கள் ஒவ்வொன்றும் வெள்ளையை உடுத்திருந்த காட்சி என்னை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அருகில் சென்று அந்த முதிர்ந்த மரத்தின் அடிக்கம்பில் இருந்த சில இலைகளை அசைத்தேன். சலீர் என கைகளில் கொட்டிய பனி கையுறையையும் தாண்டி உள்ளங்கையில் ஊசிபோல குத்தியது. தெருவின் இரு மருங்கிலும் இருந்த புற்களில் பனி உறவாடிக்கொண்டிருந்தது. சப்பாத்துக் கால்களால் தட்டி விளையாடி அதன் அழகைக் குழப்ப விருப்பமில்லாமல் ரசித்துக்கொண்டே நடந்தேன். எனக்கருகாக குதிரை வண்டிகளில் பலரும் சபாரி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரதும் ஏழனமான பார்வை என்னை கூச்சப்படுத்தியதும் என் பார்வைக்கோணத்தை அவர்களில் இருந்து விலத்தி வௌ;வேறுவிதமான அமைப்புகளையும் வண்ணங்களையும் கொண்ட வீடுகளைப் பார்த்துக்கொண்டே நடந்தேன்.

நான் ஊகித்துக்கொண்டபடி ஒரு வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு மாட்ரோனா… மாட்ரோனா…. என்று கதவைத் தட்டினேன். யாரும் வருவதாக இல்லை. ஆனால் உள்ளே ஆள்நடமாட்டமிருந்ததை என்னால் அனுமானிக்க முடிந்தது. அதனால் யாராவது வந்து கதவைத்திறப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இரண்டு படிகள் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தேன். கையில் புத்தகம் ஒன்றை ஏந்தியபடி ஒருத்தி கதவைத் திறந்தாள். ஒற்றை மரத்தில் பூவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கதவைத் திறந்ததும் ‘நெடோச்கா நெஸ்வநோவா’ நாவலின் முதலாம் பாகமான ‘ஆனல்ஸ் ஆப் தி பாதர்லாண்ட்’ என்ற அந்தப் புத்தகத்தின் முகப்பு அட்டைதான் என் கண்ணுக்கு நேராக இருந்தது.  ‘உள்ளே வரலாமா?’ ‘நிச்சயமாக. உள்ளே வாருங்கள்’ என்று அழைத்துச்சென்றவள்  சோபாவை நோக்கி கையை நீட்டி ‘உட்காருங்கள் ப்ளீஸ்’ என்று என்னை இருக்கச் செய்துவிட்டு அறைக்குள் நுளைந்தாள்.

மண்டபத்தின் சுவர்களை சுற்றிலுமாக ஆணிகளில் அறையப்பட்டிருந்த கொஸ்டோவ் கில்மிற் மற்றும் ஜோர்ஜ் செயுராட் ஆகியோரின் சில ஓவியங்களையும் இடையிடையே இருந்த மாட்ரோனாவின் புகைப்படங்களையும் நான் பாத்து முடித்துக்கொண்டிருந்த அந்த சில நிமிடங்களுக்குள் இரண்டு சிறிய குவளைகளில் சூடான காப்பியை ஊத்திக்கொண்டும் இன்னுமொரு பெரிய குவளையில் கொஞ்சம் காப்பியை நிரப்பி மூடிக்கொண்டும், நறுக்கிய ஐந்தாறு சக்கரைக் கட்டிகளையும் ஒரு சிறு கோப்பையில் வைத்துக்கொண்டு வந்து என் முன் நீட்டினாள். ஆவி பறந்தபடி சூடாக வந்த கோப்பி தொண்டைக்குள் இறங்கிய சுகம் அதுவரைக்குமான எல்லா அசதிகளையும் தூக்கியெறிந்து என்னை உட்சாகப்படுத்தியது.

‘சொல்லுங்கள் என்ன வேண்டும்? இதுவரை நான் எங்கேயும் கண்டிராத உங்களுக்கு என் பெயர் ‘மாட்ரோனா’ என்று எப்படித்தெரியும்? எதற்காக இந்த கொட்டுகின்ற மழைக்கும் பனிக்கும் நடுவே என்னைத் தேடி வந்தீர்கள்?’ என்று விசாரித்துக் கொண்டவளை இடைமறித்து நாஸ்தன்கா என்று கதையைத்தொடர வாய் திறந்த அடுத்த நிமிடமே ‘நாஸ்தான்காவின் உறவுக்காரரா நீங்கள்? எதற்காக முடிந்து போனதைத் தொடர வந்திருக்கிறீர்கள்? ஏற்கனவே ஆயிரம் கவலைகளோடு யோசித்துக்கொண்டும் அழுதுகொண்டுமிருக்கின்றேன். எனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஒருவரும் இங்கில்லை. உங்கள் கால்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் என்னைத் தொந்தரவு செய்யாமல் தயவுசெய்து இங்கே இருந்து போய்விடுங்கள்.’ என்று படபடத்த குரலில் பேசிக்கொண்டு தன் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.

‘மாட்ரோனா நான் ஒன்றும் நாஸ்தான்காவின் உறவுக்காரரும் அல்ல, இந்த ஊரைச்சேர்ந்தவனும் அல்ல. நான் உங்கள் மீதான பரிதாபத்தில்தான் இவ்வளவு தூரம் வந்தேன். சொல்லப்போனால் நாஸ்தான்காவின் மீது எனக்கு ஒருவித வெறுப்பு நிலைதான் உண்டே தவிர அவள்மீது எந்தவிதமான நேசமும் கிடையாது என்பதை சொல்லிக்கொள்கிறேன் மாட்ரோனா’ என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன். சிறிது நேரத்தில் அமைதியானாள்.

அந்த அமைதியை கலைத்து அதற்குள் இருந்து வெளியேற முதலில் நானே பேச்சை ஆரம்பிக்க வேண்டிய தேவையை உணர்ந்துகொண்டேன். ‘எக்ஸ்கியுஸ்மி மாட்ரோனா, நான் அவரைச் சந்திக்க முடியுமா’ என்றேன். தனது கரங்களால் முகத்தைப் பொத்தியபடி ஓவென்று அழத்தொடங்கினாள் அவளை எவ்வாறு நிறுத்துவது? அவளின் அழுகைக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவாக இருக்கும் இதில் எதுவும் புரியாமல் ‘நான் இந்த இடத்துக்கு வந்திருக்கக் கூடாது, நான் வந்ததிருக்காவிட்டால் அவள் வழமைபோல இருந்திருப்பாள், நான் ஏன் வந்தேன்’ என்றெல்லாம் எனக்குள்ளாகவே புலம்பத் தொடங்கினேன். நேரம்க ஆக அவள் அழும் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து அப்படியே நின்றுகொண்டது. மீண்டும் அந்த இடம் கனமாக அமைதியை அப்பிக்கொண்டது. இம்முறை அவ் அமைதியில் இருந்து வெளியேற எக்ஸ்கியுஸ்மிக்கு பதிலாக வேற ஏதோவொன்று தேவையாக இருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்த அலுமாரிக்கு மேலே இருந்து தொப்பென சோபா மீது குதித்த சிறு பூனை எங்கள் நீண்ட அமைதியை கலைத்துவிட்டு ஓரமாக ஒவ்வொரு அடியாக வைத்து பிஸ்டத்தை இடம் வலமாக ஆட்டி ஆட்டி நடக்கத்தொடங்கியது.

இம்முறை அவளே முதலில் பேச்சைத் தொடங்கினாள். ‘நான்கைந்து மாதங்களுக்கு முன்னமே சக்கரவர்த்தி முதலாம் நிகோலசும் பிரபு ஆர்லோவும் அவரைக் கைதுசெய்து கொண்டுவரும்படியாக ஒரு கட்டளை வந்திருக்கின்றதாக கூறி ஐந்தாறு இராணுவச் சிப்பாய்கள் வந்தார்கள். உனக்கும் அந்த குழுவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு அவரை உதைத்தார்கள். கீழே விழுந்து கிடந்தவரை மேலும் உதைத்தார்கள். அதில் ஒருவனின் வூட்ஸ் நெற்றியில் பட்டு இரத்தம் சீறிப்பாய்ந்ததில் இந்த வாசல் படியில் கிடந்த பனிக்கட்டிகள் எல்லாம் சிவந்து போயின. இதுவரைகாலத்துக்கும் அவருக்கும் பெட்ராஷேவ்ஸ்கி மற்றும் பெலின்ஸ்கிக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இருந்ததே இல்லை என்று சொல்லி மன்றாடினோம், இன்னும் என்னென்னவோ சொல்லி கெஞ்சி அழுதோம். நாங்கள் எவ்வளவுதூரம் மண்டியிட்டும் செவிசாய்க்கவில்லை. தலைக்கவசத்தோடு அவர்கள் செவிகள் மட்டுமல்ல இதயங்களும் இறுக்கி மூடப்பட்டிருந்தன. இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் சென்றுவிட்டார்கள்’

‘இப்போது எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியுமா மாட்றோனா? நாங்கள் பார்க்க இயலாதா?’ என்று பதைத்தேன். ‘செம்யோநோவிலேதான் வைத்திருக்கிறார்களாம் என்று கேள்வியுற்றேன்;. ஆனால், அங்கெல்லாம் எங்களுக்கு அனுமதி கிடையாது. அரசியல் கைதிகள் பலரையும் செம்யோநோவிற்குள் வைத்திருப்பார்காள். அல்லது சைபீரியா, ஓம்ஸ்கின் கடோர்கா சிறைமுகாமிற்கு அனுப்பி கடுங்குளிருக்கும் மத்தியில் பணிகளை சுமத்தி தூங்கவிடாமல் கொடுமைப்படுத்துவார்கள். அல்லது அங்கிருந்து பதிநான்கு நாட்கள் பயண தொலைவில் உள்ள டோபோல்ஸ்க்கிற்கு அனுப்பிவைப்பார்கள். உயிரைப் பணயம் வைத்து அங்கெல்லாம் சென்றால் கூட நாங்கள் உள்ளே செல்ல எந்த அனுமதியும் இல்லையாம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.’ என்று ஏக்கத்தோடு மீண்டும் அழத்தொடங்கினாள்.

முடிந்தமட்டில் மாட்றோனாவின் அழுகையை நிறுத்துவற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தோற்றவனாய் அங்கிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் செம்யோநோவிற்கு புறப்படத் தயாரானேன். அதற்கு முதல் எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்ததை என் நாட்குறிப்பில் இப்படி எழுதிக்கொண்டேன்.

’23 டிசெம்பர் 1989 – என் கனவுலகவாசியை தேடும் பாதையில் ஆயிரம் தடைவரலாம். ஒருபோதும் என் பயணத்தைப் பின்வாங்கப்போவதில்லை’

பனியையும் அதுதரும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு குதிரைவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அந்த சிறைமுகாமுக்கான எங்கள் பயணம் தொடங்கிய முதல் நொடியில் ‘உங்களுக்கு ஏன் இந்த விபரிதமான முயற்சி. அங்கெல்லாம் போனால் திரும்பி வருவதை எண்ணிப்பார்க்கவே முடியாது. அது போக முகாமுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியே கிடையாது. நீங்க வேற வெளியூர்க்காரராய் இருக்றீங்க’ குதிரை வண்டிக்காரர் என்னை எச்சரித்தார். பின் பயணம் நெடுகிலும் பேசிக்கொண்டே வந்தார். நிறைய நிறைய நினைவுகளை குதிரைவண்டிக்கு மேலே சுமந்துசெல்கின்ற அந்த மனிதனிடம் தேங்கிக்கிடக்கும் கதைகள் ஏராளம். கடைசியாக ஒரு மைதானத்துக்கு அருகில் வைத்துச் சொன்னார் ‘முக்கியமாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு கேளுங்கள். சுற்றிலும் முள்வேலிகளாக காணப்படுகின்ற இந்த மைதானத்தில் பலி கொடுக்கப்பட்ட அப்பாவிகள் வரிசையில் நீங்கள் தேடிக்கொண்டு வந்திருக்கின்றவரும் ஒருவராக இருக்கலாம் அல்லது அதோ தெரிகின்ற அந்த மேடையை சற்று உற்றுப் பாருங்கள்’ அவர் காட்டிய திசையை நோக்கி கூர்ந்து பார்த்தோம். பனி பொழிந்துகொண்டிருந்ததால் எங்களுக்கு எதுவும் தெளிவாக தென்படவில்லை. ஆனால், வரிசையில் சில சிலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அச் சிலைகளை பார்வையிடவந்தவுர்கள் மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருப்பதைப் போலவும் தெரிந்தது. அந்த வரிசையில் நிற்பவர்களில் ஒருவராகவும் அவர் நிறுத்தப்பட்டிருக்கலாம். தேவையில்லாத பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்ளாமல் பேசாமல் திரும்பிக்கொள்ளலாம்’ என்றார்.

குதிரை வண்டிக்காரர் கூறியவை எல்லாம் காதுகளில் கேட்டாலும், மனதுக்குள் சிறிதாய்க்கூட ஒலிக்கவில்லை என்பதே உண்மை. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இதற்கு மேலே நீங்கள் நடந்துதான் போக வேண்டும் என்று ஓரிடத்தில் எங்களை இறங்கச்சொன்னார். கையில் இருந்த சில ரூபிள்களை கொடுத்தேன். எவ்வளவு கொடுத்தேன், அவர் மீதியாக எவ்வளவு தந்தார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்கவே இல்லை.

இருவரும் முகாமை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை நடந்திருப்போம். முகாமுக்குள் செல்லும் பிரதான வாயிலில் நின்றுகொண்டிருந்த இரண்டு இராணுவச் சிப்பாய்கள் எங்களைத் தடுத்தி நிறுத்தி, ஒருவிதமான அதட்டலோடு தலை முதல் கால்வரை தடாவித்தடாவி சோதனையிட்டார்கள். அத்தோடு உள்ளே செல்லவும் முடியாமல் அங்கேயே தடுத்தும் நிறுத்தி வைத்திருந்தார்கள். மாட்றோனா அவர்களிடம் சென்று ஏதோ கதைத்துக்கொண்டு இருந்தாள்.  மேலும் கெஞ்சி அழுதுகொண்டும் இருந்தாள். அவர்கள் இந்தச் செய்தியை தங்கள் மேலதிகாரிக்கு அறிவித்துவிட்டு உள்ளே இருந்து கட்டளை வரும்வரை அவளது வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார்கள். சில மணித்தியாலங்கள் கழித்து ஒரு குதிரையில் வேகமாக வந்த இராணுவச் சிப்பாய் எங்களை உள்ளே அனுமதிக்கும்படி சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பிக்கொண்டிருந்தான். செய்தி கிடைத்த மறுகனமே வேகமாக நடக்கத் தொடங்கினோம். சில மணி நேரத்துக்குள் அந்த மைதானத்தின் மத்திக்கு சென்றுவிட்டோம். வெண்ணிறம் படர்ந்த அந்த மைதானமும் அதன் முள்வேலியும் என்னை அச்சமூட்டின.

மைதானத்தின் மறுதொங்கலில் எங்களைப்போல ஏராளம் பொதுமக்கள் ஒரு கால் வட்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். சிலர் மண்டியிட்டுக்கொண்டு நிண்றார்கள். அவர்களுக்கு முன்னால் ஐந்து வரிகளில் முட்கம்பிகளாலான சிறு வேலி இருந்தது. அந்த வேலித் தூண்களின் இடைவளிக்கு இருவரென நீட்டுத் துப்பாக்கிகளை ஏந்திய சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு எதிர்த் திசையில் நெடிய கம்பங்கள் இருந்தன. ஒவ்வொரு கம்பத்திலும் கைகள் கட்டபட்ட நிலையில் சில கைதிகள் மரண தண்டனைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்கள். அவலக் குரல்களும் அழுகைகளும் காதுகளுக்கு கேட்டபடியே பொதுமக்களுக்கான இடத்தை வந்தடைந்தோம். அங்கே குதிரை வண்டிக்கு மேலே இருந்தபடி தூக்குத்தண்டனை நிறைவேறுவதனை மேற்பார்வைசெய்ய வந்த தளபதியொருவன் கால்களை சற்று அகட்டியபடி நின்றுகொண்டிருந்த ஒரு அரசியல் கைதியை பார்த்து ‘அடேய் சாகும்போதாவது ஒழுக்கமாக நின்று செத்துப்போடா..’ என்று அதட்டுவதைக் கேட்டதும்  அதிர்ந்துபோனேன். அந்த செக்கனே அங்கிருந்த ஒரு கைதி மயங்கி கீழே சரிந்தான். என்னைவிட அவன் அதிகமாக பயந்திருக்கவேண்டும் என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள். அது பசியால் வந்த மயக்கமாகக் கூட இருந்திருக்கலாம். அந்தத் தளபதி மேலும் கூறிக்கொண்டிருந்தான் ‘மயங்கி வீழ்வதால் மரணதண்டனையில் இருந்து நீங்கள் ஒன்றும் தப்பிக்க முடியாது’ பக்கத்தில் இருந்த மற்றொரு தளபதி கேலியாகச் சிரித்தான். வெண்பனித்தரையில் சில செந்நிற நதிகள் ஊற்றெடுத்தன.

இதற்கிடையில் மாட்ரோனா கையை நீட்டி அங்கிருந்த ஒரு கைதியைக் காட்டி அவரைப் பாருங்கள் அந்த அப்பாவியைப் பாருங்கள் என்று கதறி அழுதுகொண்டு முழங்கால்கள் மடிபட கீழே சரிந்தாள். யாரைத் தேடி இவ்வளவு தூரம் வந்தேனோ அவரின் கைகள் இரண்டும் பின்பக்கமாகக் கட்டப்பட்டு மரணதண்டனைக்காக காத்திருப்பவர்களின் இரண்டாவது வரிசையில் மூன்றாவதாக நின்றுகொண்டிருந்தார். ப்லஷேயேயும் டுரோவும் அவருக்கு அடுத்தடுத்து நின்றிருந்தார்கள். அவர்களுக்கு சரி நேரெதிராக துப்பாக்கிகளை நீட்டியபடி சில இராணுவச் சிப்பாய்கள் நின்று கொண்டிருந்தார்கள். நான் பனிபோலே உறையத்தொடங்கினேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.