காசா
நீங்கள் வெறுப்புடன் என்னை
தாக்க வருகிறீர்கள்
நீங்கள் கடுமையான வாதத்துடன்
என்னைத் தாக்க வருகிறீர்கள்
என்னை அழித்துவிடுவதை போல
என்னைத் தாக்க வருகிறீர்கள்
ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்
புகையைச் சுவாசித்துக்கொண்டு
நெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டு
வெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு
ஒவ்வொரு நாளையும் தொடர்ந்து
ஒவ்வொரு நாளும் வருகிறது
இருப்பினும் என்னால் முடிந்தபோது உண்கிறேன்
படுக்கையில்லாதபோதும் நான் தூங்குகிறேன்
நான் கண்ணியமானவன்
எனக்குத் துணிவு இருக்கிறது
எனக்கு ஆதரவளிக்க எந்தக் கடவுளும்
இல்லாதபோதும்
நான் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது
நீங்கள் எனது நிலத்திலிருந்து என்னை
விரட்ட விரும்புகிறீர்கள்
மனிதத் துரோகி என்று எனக்கு
முத்திரைகுத்த விரும்புகிறீர்கள்
ஆனால் நான் அப்படி இல்லை
நான் யார் என்று எனக்குத் தெரியும்
நான் பலவீனமானவன்
நான் பசித்திருப்பவன்
என் மீது கடும்பகை கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் நான் அமைதியானவன் அல்ல
உலகம் எனது குரலுக்குச் செவிமடுக்கிறது
கதிரவன் என்னைக் காண்கிறான்
இன்னும் நிலவு எனது இரவுகளை
கடந்து செல்கிறது
நான் தவழ்கிறேன்
நான் இறைஞ்சுகிறேன்
நான் அழுகிறேன்
அவநம்பிக்கையில் எனது இதயத்தை
கிழித்துக் கொள்கிறேன்
நான் காசா
மரணித்தவர்கள் கணக்கில்
என்னைச் சேர்க்காதீர்கள்
இல்லை, இல்லை
நான் இன்னும் மரணிக்கவில்லை
அன்புக்குரிய பாலஸ்தீனம்
பார்க்கிறாயா
பார்க்கிறாயா என் நண்பனே?
அவர்கள் உன் மூலமாக மூச்சுவிட விரும்புகிறார்கள்
அவர்கள் உனது பாதங்களால் நடனமாட விரும்புகிறார்கள்
அவர்கள் உண்ணவும் உறங்கவும்
மீண்டும் ஆழ்ந்த காதலை
பருகவும் விரும்புகிறார்கள்
உனது மேசையில் அமர்கிறார்கள்
நீ உரையாடுகிறபோது
பதற்றத்துடன் சிரிக்கிறார்கள்
அவர்கள் கேட்கிறார்கள்:
உனக்கு என்னை நினைவிருக்கிறதா”
உண்மையிலேயே நீ என்னை நேசிக்கிறாயா?
என்னை மீண்டும் மெய்யாக்கு
அவர்கள் கேட்கிறார்கள்
நான் மீண்டும் கண்ணுறச் செய்
இடிபாடுகளுக்குள்
எனது உடல் மறைந்துவிட்டது
எனது அழகிய கருமைநிறக் கூந்தல்
அவர்களுடைய குண்டுகளால்
சாம்பலாக மாறிவிட்டது
எனது பெருமித மார்புகள்
அவர்களுடைய கண்மூடித்தனமன வெறுப்பெனும்
தோட்டாக்களால் பிளக்கப்பட்டுள்ளன
எனது கருவறை
அவர்களுடைய வஞ்சினத்தால்
அவர்களுடைய கொலைகாரப் பொய்களால்
களங்கப்படுத்தப்பட்டுள்ளது
இன்னும் என்னை நீ அன்புக்குரியவளாக
பார்க்கிறாயா?
தலையின்றி, கண்களின்றி
கரங்களோ பாதங்களோ இன்றி
நான் உன்மீது கொண்ட அன்பில்
நிறைந்திருக்கிறேன்
எனது உடல் இந்த நிலம்
எனது பெயரை நீ உரக்கக்கூவும்போது
எனது ஆன்மா சிட்டுக்குருவியாய்
உனது வாயிலிருந்து பறக்கிறது
எனது ஆன்மா உனது தோளில்
சிட்டுக்குருவியாய் அமர்கிறது
உனது வேதனையைத் தணிக்கிறது
என்னை நீ காண்கிறாயா அன்புக்குரியவனே
என் அன்புக்குரியவனே
நான் உன்னை ஒருபோதும் நீங்கமாட்டேன்.
இந்த நிலத்தைவிட்டு ஓடிவிடாதே
படையெடுப்பாளனிடமிருந்து தப்பி ஓடாதே
நில்
நின்று என்னைத் தழுவிக்கொள்
பாலஸ்தீனம் உன்னுடையது
கண்ணுற்ற சாட்சி
நான் அச்சுறுத்தலைப் பார்த்திருக்கிறேன்
சீற்றத்தை உணர்ந்திருக்கிறேன்
அன்னையரைக் கவனித்திருக்கிறேன்
குழந்தைகளை எண்ணியிருக்கிறேன்
மனிதர்களுக்காகத் துக்கித்திருக்கிறேன்
தீமை எனது இரத்தத்தைத் கொதிக்கச் செய்திருக்கிறது
தீமை அனைத்தையும் கலந்துவிட்டது
தீமை எனக்குள் வெறுப்பை நிரப்பியிருக்கிறது
அது வருத்தம் அனைத்தையும் தூக்கிச் சென்றுவிட்டது
தீமையிடமே பணம் அனைத்தும் இருக்கிறது
தீமையின் சொல்லே செவிமடுக்கப்படுகிறது
தீமையே வலிமையாக இருக்கிறது
கடவுள் அதை அப்படிப் படைத்துவிட்டார் போல் தெரிகிறது
கொலைகளை நான் காண்கிறபோது
பொய்களை நான் கேட்கிறபோது
நான் பொருண்மையைச் சபிக்கிறேன்
எனக்குக் காதுகள் இருக்கின்றன
எனக்குக் கண்கள் இருக்கின்றன
இந்த உலகின் அப்பட்டமான பயங்கரத்தையும்
ஒவ்வொரு உயிரையும் அது எவ்விதம் ஆள்கிறது என்பதையும்
நான் கண்டிருக்கிறேன்
அப்பாவிகள் ஏன் சாகவேண்டும் என்ற
பழைய கேள்வியை எனக்கு நானே
கேட்டுக்கொள்கிறேன்
இன்னொரு கேள்வியையும் எனக்கு நானே
கேட்டுக்கொள்கிறேன்
மோசமானதே ஏன் வளரவும் பெருகவும் செய்கிறது
கசாப்புக் கடைக்காரரின் கத்தியைப் போல
என்னை வெட்டுகின்ற இந்த அறிதலுடன்
எப்படி நான் வாழ்வது என்று
எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்
எப்படி நான் புன்னகை புரிவது
எப்படி நான் அன்பு செலுத்துவது
இந்தப் பூமியில் எப்படிச் சேர்ந்து நடப்பது
மீண்டும் உன்னுடன் நான்
எனது குரல்வளையில் தீமையுடன்
எனது இதயத்தைச் சுற்றிலும் வேதனையுடன்
எனது எலும்புகளுக்குள் அச்சத்துடன்
இருப்பினும் ஒவ்வொரு நாளும்
இடிபாடுகளுக்கு வெளியே
சித்திரவதைகளுக்கு அப்பால்
மூச்சைத் திணறவைக்கும் பொய்களிலிருந்து
ஒரு சிறு அடியை எடுத்து வைக்கிறேன்
மனிதன் ஒரு மிருகம்
மனிதன் மனிதனுக்கு ஓர் ஓநாய்
நான் எங்காவது செல்வதென்றால்
எனக்கு எங்காவது ஓர் இடம் கிடைக்குமென்றால்
அக்கறை காட்டும் எந்த இடமும் எனக்குத் தெரியவில்லை
அறியப்படாத இடத்துக்கு என்னுடன் நீ நடந்துவருவாயா
சாத்தியமில்லா இடத்துக்குள் மெதுவாக என்னுடன்
நீ நடந்து வருவாயா
மன்னிக்குமிடத்துக்கு நீ என்னுடன் ஊர்ந்து வருவாயா
உரிமைக்கான நீதிக்கு என்னுடன் உரத்துக் குரல் கொடுப்பாயா
எண்ணற்ற குழந்தைகள் பிளந்தெறியப்படுவதை
நான் கண்டிருக்கிறேன்
எண்ணற்ற பெண்களின் இதயங்கள் பிளக்கப்படுவதை
நான் கண்டிருக்கிறேன்
எண்ணற்ற ஆண்கள் உடைந்துபோய் பைத்தியமானதை
நான் கண்டிருக்கிறேன்
தனிமையிலிருக்கும் நீ
என்னுடன் நடந்துவா
அச்சத்திலிருக்கும் நீ
என்னுடன் நடந்துவா
அடிமைப்படுத்தப்பட்ட நீ
என்னுடன் நடந்துவா
இருந்தாலும் கூட நமக்குத் தெரியாது
நாம் எங்கு செல்கிறோமென்று
எனக்குத் தெரியும்
கடவுளுடன் அல்லது கடவுளுடன் இல்லாமல்
அன்புக்கான நமது அணையாத் தாகத்துடன்
நீதிக்கான நமது இறவாப் பசியுடன்
நமது மீட்சிக்காக
நாம் அங்கு சென்றடைவோம்
ஆயிரம் ஆண்டுகளின்
இரத்தத்தால், கண்ணீரால், நம்பிக்கையால்
கட்டியெழுப்பப்பட்ட
அந்தப் புகழ்மிக்க வீட்டுக்கு.
நாம் சென்றடைவோம்
நெருப்பின் சுவாலைகள்
உனது பார்வைக்குத் தெரிகிறதா?
உயர்ந்தெழும் ஒளிவீச்சு
உனது விழிகளில் விழுகிறதா?
அஞ்சாதே
உனக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன்.
சபிக்கப்பட்டவர்கள்
நீங்கள் கொலை செய்த
குழந்தைகளின் ஆவிகளால் சூழப்பட்டிருக்க
நீங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்
ஆனால் நீங்கள் சூழப்படுவீர்கள்
பல லட்சக்கணக்கில் அவர்கள் வருவார்கள்
என்று நான் நம்புகிறேன்
உங்கள் நினைவுகளிலெல்லாம் அவர்கள்
மூச்சுத்திணறச் செய்வார்கள்
கழுத்துக்களை நெரிப்பார்கள்
ஊடறுப்பார்கள்
என்று நான் நம்புகிறேன்
அவர்களுடைய அலறல்களின் சத்தமே
உங்கள் கனவுகளில் கேட்கும் ஒரே சத்தமாக இருக்கும்
என்று நான் நம்புகிறேன்
அவர்களுடைய எரிந்த முகங்களுக்காக
அவர்களுடைய விழிகளில் கசியும் குருதிக்காக
அவர்களுடைய விறைத்துப் போன கரங்களுக்காக
உங்கள் வாழ்நாளெல்லாம் நொறுங்கிப் போவதற்கு
நீங்கள் தகுதியானவர்கள் தான்
என்று நான் நம்புகிறேன்
உங்கள் இதமான படுக்கைமீது
அவர்களுடைய இரத்தம் சொட்டுவதைக் காண்பதற்கு
நீங்கள் தகுதியானவர்கள் தாம்.
தூக்கம் நல்லவர்களுக்கானது
கொடுங்கனவு கடவுளின் அழைப்பாணை
ஓ அரசர்களே
ஓ கொலைகாரர்களே
நீங்கள் தப்பிக்க மாட்டீர்கள்
மரணத்தின் முத்தம் உங்களுக்கானது
மரணித்த குழந்தைகளின் கரிய இறகுகள்
வளர்கின்றன
கள்ளங்கபடமற்றோரின் கரிய கூர் நகங்கள்
உங்கள் மனங்களுக்குள் கீறுகின்றன
நீங்கள் இறந்த குழந்தைகளால் சபிக்கப்பட்டவர்கள்
அவர்கள் உங்களைச் சூழ்ந்திருக்கிறார்கள்
அவர்கள் உங்களை மூச்சுத் திணற மூழ்கடிப்பார்கள்
பறக்கும் தேவதைகளின் பழிவாங்கும் பார்வை
உங்களுக்குத் தெரியவரும்
சினங்கொண்ட கடவுளின் இரகசியக் குரல்கள்
உங்களுக்குக் கேட்கும்
காசாவில் நீங்கள்
உடன்பிறந்தாரைக் கொல்பவரினும் இழிந்தவர்கள்
இறைச் சட்டத்தை மீறிச் சென்றுவிட்டீர்கள்
நீங்கள் குழந்தைகளைக் கொன்றிருக்கக் கூடாது
உங்கள் பெயர் சபிக்கப்பட்டது
உங்கள் எஞ்சிய நாட்கள் சபிக்கப்பட்டன
இப்போது சபிக்கப்பட்ட உங்கள் நிலத்தில்
சின்னஞ்சிறு குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஏனென்றால் அவர்கள் கண்காணிக்கும் கடவுளின் கண்கள்
ஆமென்.
கைவிடப்பட்டவர்கள்
தேவதைகள் இந்த நிலத்தைத் தொடமாட்டார்கள்
கடவுள் தனது கரத்தை அசைக்க மாட்டார்
இந்த நிலத்தை அவர் சுட்டிக்காட்டவோ
திசைவழி காட்டவோ மாட்டார்
அமைதியே இந்த நிலம்
ஆண்கள் இறைஞ்சுகிறார்கள்
பெண்கள் கீச்சிடுகிறார்கள்
அழுதழுது நினைவின்மையின் விளிம்பு நோக்கி
குழந்தைகள் விரைந்து சிதறியோடுகிறார்கள்
கடவுள் இந்த நிலத்துக்கு ஒருபோதும் வரவில்லை
உண்மையான தொடக்கம் இல்லையென்று
தெரிகிறது
வேதனை முடிவற்றதாகத் தோன்றுகிறது
காலத்தை அன்பு ஒன்றுதான்
அடக்குகிறது
கைவிடப்பட்ட இரத்தத்தில்
மின்னணு செய்தித்தாள்களின்
முன்னறிவிப்புக்குத் தலையசைத்து
ஒவ்வொருவரும் எங்கோ பார்க்கிறார்கள்
உலகம் தொலைவில் இருக்கிறது
இது கிழித்தெறியப்பட்ட நிலம்
இது இன்னும் பிறவா நிலம்
தங்கப் பிரபுக்களால்
இந்த நிலம் வஞ்சிக்கப்பட்டது
இந்த நிலம் நிலையா நினைவுக்குள்
மூழ்கும் வரை
இதை இரத்த ஆறுகள் மூடுகின்றன
இங்குக் கதிரவன் உதிக்க மாட்டான்
இங்குக் கதிரவன் ஒருபோதும் உதிப்பதில்லை
கடவுள் மனிதனுக்கு அளித்த இந்த நிலத்தில்
எங்கள் உடல்களும்
எங்கள் மனங்களும்
அதிகாரத்தின் சிதிலங்கள்
மௌனக் கற்களாகிவிட்ட
எங்களூடே நடந்து செல்லுங்கள்
எங்களைத் தொட்டுப்பாருங்கள்
நீங்களும் இங்கே மௌனமாகிவிடுவீர்கள்
ஏனென்றால் நீங்கள் செவிமடுப்பதே
நீங்கள் யாரென்ற நிஜமாகும்
கடவுளற்ற மனிதர்கள்
மனிதர்களின் இதயங்களை
புதைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்
இந்தப் பூமி பற்றி எரிகிறது
இந்த நிலமே உங்கள் நீதித் தீர்ப்பு
இது எங்கள் கல்லறை
இது எங்கள் விதி
இங்கு மௌனமாக இருங்கள்
நாங்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்
-டான் கார்ஜெயெஸ்கு
டான் கார்ஜெயெஸ்கு – ஜெர்மனியின் டுபின்ஜென் பல்கலைக்கழகப் பேராசிரியர்.
இக்கவிதைகள் அவரது அறச்சீற்றத்தின் வெளிப்பாடுகள்
தமிழில்: நிழல்வண்ணன்
நன்றி: countercurrents.org