பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது பழுப்பு நிறம். அதுவும் தலை குனிந்து “ தல என் சிரம் தாழ்ந்த வணக்கம் “ என்றது.
“ம்.ம் நல்லது. நீ போய் அங்கே நில்!” என்று அதட்டியது பச்சை நிறம். பிறகு வந்தது நீலம். அது துண்டை இடுப்பில் கட்டி வணக்கம் கூறவும் தலையை ஆட்டி ஆமோதித்த பச்சை நிறம் “நீயும் போய் நான் சொல்லும் வரை நில்” என்றது.
இப்படியாக மஞ்சள் என்று மற்ற நிறங்களும் வணக்கம் கூறி பச்சை நிறம் சொல்லும் கட்டளை கேட்டு கை கட்டி நின்றன. அப்போதுதான் வெளியில் சென்றுவிட்டு வந்த சிகப்பு நிறம் அனைத்தையும் பார்த்தபடி கோபத்துடன் வந்தது. அது பச்சை நிறத்தைக் கும்பிட வில்லை. மாறாக “என்ன நடக்கிறது இங்கே?. ஏன் மற்ற நிறங்கள் எல்லாம் இந்தப் பச்சை நிறத்துக்குக் கும்பிடு போட்டுக் கைக்கட்டி நிற்க வேண்டும்?” என்று கேட்டது.
“அடே ! உன் நிறமே அபாயகரமானது என்பதாகும். ஆனால் வண்ணங்களில் நான்தான் மிகவும் மக்களால் பாராட்டப்படுபவன். பெருமை மிக்கவன். போற்றப்படுபவன். எங்கும் பசுமை என்றும் பசுமைப் புரட்சி என்றும் என்னைத்தான் மக்கள் போற்றி வளர்க்கிறார்கள். அதனால் வண்ணங்களுக்குள் இந்த பச்சை நிறமான நானே உயர்ந்தவன். சிறந்தவன். அதனால் மற்ற வண்ணங்கள் என்னிடம் அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் எனக்குக் கும்பிடு போட வேண்டும். இது என் உத்தரவு. இதைத்தான் அவைகள் செய்தன. அதற்கு நீ ஏன் குதிக்கிறாய். நீயும் சலாம் போடு” என்று மிகுந்த ஆணவத்துடன் பேசியது பச்சை நிறம்.
‘ஹ ஹ ஹ ஹா ஹா ஹா ’ எக்காளத்துடன் சிரித்தது சிகப்பு நிறம்.
”அடே கர்வம் பிடித்த பச்சையனே!. நானா அபாயகரமானவன்?. நான் தான் வரும் அபாயத்தை முன்னமேயே உணர்த்தி மக்களை நல் வழிப்படுத்திக் காப்பவன். அதனால்தான் எங்கெல்லாம் மனித உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறதோ அங்கெல்லாம் என் நிறம் போட்டு எச்சரிக்கை செய்வார்கள். உடன் என் அருமை நிறங்களே நாம் இப்போது வானத்தில் இருக்கிறோம். என் பெருமையையும் பச்சையாரின் பெருமையையும் நீங்களே நேரில் காணுங்கள்” என்றதும் மற்ற நிறங்கள் யாவும் சிகப்பு நிறத்துடன் சேர்ந்து கொள்ள, பச்சை நிறமும் அங்கு வந்து நின்றது. பூமியில் ஒரு பெரும் சிட்டி. பெரும் டிராபிக் நிறைந்த ஒரு நான்கு வழி பிரியும் சாலை. சிகப்பு நிறம் மற்ற நிறங்களைப் பார்த்து ”என் நண்பர்களே இப்போது வாகனங்கள் செல்லுகின்றன அல்லவா?. ”
“ஆமாம்” என்றன அணைத்து வண்ணங்களும். சற்று நாழியில் வாகனங்கள் ஓடாமல் நின்றன. “ஏன் நிற்கின்றன?” என்று கேட்டன மற்ற நிறங்கள்.
“நீங்களே பாருங்கள் அங்கு சிக்னலில் என்ன விளக்கு எரிகிறது என்று.” இது கேட்டதும் அவைகள் பார்த்தன.
”ஆமாம் சிகப்பு விளக்கு எரிகிறது”
” இப்போது புரிந்ததா? என்னைக் கண்டால் அனைவரும் நின்றுதான் செல்ல வேண்டும். அப்படி மீறிச் சென்றால் அவர்கள் உயிர் விபத்தில் போய்விடும். அதனால்தான் நான் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி விபத்து நேராதிருக்குமாறு செய்கிறேன். இப்போது பார்த்தீர்களா? ”
“ஆம் நண்பா ஆனால் இப்போது அனைத்து வாகனங்களும் ஓடுகின்றனவே. என்ன காரணம்?”
”நீங்களே பாருங்கள். அங்கு என்ன விளக்கு எரிகிறது என்று” என்றது சிகப்பு நிறம். “ஓ.! முதலில் சிகப்பு நிறத்திலிருந்த சிக்னலில் இப்போது பச்சை நிறம் அல்லவா தெரிகிறது.”
”ஆம் நான் ஒழுங்குபடுத்திய பிறகுதான் பச்சை விளக்கு எரியும். இப்போது என் பெருமை புரிந்ததா? அனைத்தும் ’ஆம் ! ஆம் ! ’ என்றன.
பச்சை நிறம் பேசாமல் நின்றது.
“நண்பர்களே இது சாலையில் மட்டும் அல்ல. இரயில் நிலையங்களிலும் ஏன் விமான நிலையங்களிலும் கூட விபத்துகளைத் தவிர்க்கவும் ஓட்டத்தை ஒழுங்கு படுத்தவும் என் நிறத்தைத்தான் பயன் படுத்துகின்றனர். மஞ்சள் அண்ணா இங்கே வாருங்கள் என்றது” சிகப்பு. இவர் பெருமை இந்த பச்சைக்குத் தெரியுமா? ஒரு பச்சை வாழைக்காய் ஒரு மாங்காய் என்று கடித்துப் பாருங்கள். அதே நன்கு பழுத்து மஞ்சள்நிறத் தோலுடன் பழமாக இருக்கும் போது அதைச் சுவைத்துப் பாருங்கள். எதில் சுவை அதிகம். பச்சை காயிலா? இல்லை மஞ்சள் பழத்திலா? அதே மாதிரி பச்சை நிறத்தில் இருக்கும் எலுமிச்சைக்கு அதிக மதிப்பா இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம்பழத்துக்கு அதிக மதிப்பா? கூறுங்கள் நண்பர்களே!” என்றது சிகப்பு.
பச்சை கண்களை மூடிக்கொண்டது.
“மீண்டும் சொல்கிறேன். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஆரஞ்சு பழம்தான் வைட்டமின் சி நிறைந்தது. அது என்ன மட்டமான நிறமா? அதே போல் வெள்ளை நிறம் என்ன சாதாரணமானதா. பசுமைப் புரட்சி என்பது போல் வெண்மைப் புரட்சி என்று வந்தாகிவிட்டது. குழந்தை முதல் முதியவர்; வரை உயிர் காக்கும் பால் வெள்ளை நிறம்தான். வெண்ணெய், தயிர், மோர், சீஸ், பன்னீர், ரசகுல்லா என்று மக்கள் உபயோகிக்கும் அனைத்துமே வெள்ளை நிறம்தான்.
ஏன் நீலம் மட்டும் என்ன மட்டமா? இந்த உலகமே முக்கால்வாசிப் பகுதி நீரால் சூழப்பட்டுதான் இருக்கிறது. அந்த நீரும் வானும் இயற்கையால் நீல நிறமாகத்தான் காட்சி அளிக்கிறது. அப்படிப் பார்த்தால் நீல வண்ணம்தான் பூமி மற்றும் வானம் வரை பரவி இருக்கும் ஒரு நிறம்.
அடே பழுப்பு நிற அண்ணா நீயும் சாதாரணமானவன் அல்ல. நெற்பயிர் ஆரம்பத்தில் பசுமையாகத்தான் இருக்கும். ஆனால் அது நன்கு வளர்ந்து கதிராகும் போது பழுப்பு நிறத்தில்தானே மாறுகிறது. அதே போல் நெல்லும் பழுப்பு நிறம்தானே. கோதுமையும் பழுப்பு நிறம்தானே. நெல்லில் இருக்கும் அரிசி வெண்மை நிறம். இப்படி அனைத்து வண்ணங்களுமே மக்களால் கொண்டாடப்படும் போது பச்சை மட்டும் தன்னை மிகைப்படுத்தி தலைவன் பதவியில் இருக்க நினைப்பதும் மற்றவர்கள் சலாம் போட வேண்டும் என்று கட்டளை இடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பச்சையைப் போற்றுவோம். பச்சைக் காய்கறிகள். பச்சை நிறத்தில் இருக்கும் சில பழங்கள் ஆகியவை மக்களுக்கு உணவுதான். அதனால் அதன் பங்கு மற்ற நிறங்களின் பங்கைப்போல் தானே அன்றி அல்லது சற்று குறைவே அன்றி மிகையானது அல்ல. இனி நாம் அனைவரும் ஒரே குடும்பம். நாம் அனைவரும் பல விதங்களில் பல வழிகளில் மக்களுக்குப் பயன் தருகிறோம். நம்மில் உயர்வு தாழ்வு என்பதோ பச்சை நிறம் மட்டுமே உயர்ந்தது என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது” என்றதும் மற்ற நிறங்கள் எல்லாம் ”ஆம். அருமையாகச் சொன்னாய். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று கூறி குதூகலிக்கவும் பச்சை நிறம் தன் நிலை உணர்ந்தது. மனம் வருந்தி அழுதது. பின் மற்ற நிறங்களிடம் மன்னிப்பு கேட்டது. இப்போது நிறங்கள் குடும்பத்துடன் பச்சை நிறமும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து கொண்டது.
– சுப்பிணி தாத்தா