முயல் வாலிழந்த கதை

முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது.  ஆனால் பூனைக்கு வால் இல்லை.  முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது.  அதைப் போன்ற வால், தனக்கில்லையே என  பூனை மிகவும் ஏங்கியது.

முயல் எப்போதுமே கவனக்குறைவான விலங்கு.  அது ஒருநாள்    முதுகுப்பக்கம் தன் அழகான வாலை நேராகத் தொங்கவிட்டவாறு,  தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த பூனை, கூர்மையான ஒரு கத்தியை எடுத்து, முயலின் வாலை நறுக்கிவிட்டது.  முயல் தூக்கம் கலைந்து, நன்றாக விழித்துப் பார்ப்பதற்குள், பூனை அதைத் தன் உடம்பில் வைத்துத் தைத்து விட்டது.

“உன்னிடம் இருந்ததை விட, என்னிடம் இருக்கும் போது, வால் மிகவும் அழகாய் இருக்கிறதல்லவா?” என்று முயலிடம் பூனை கேட்டது.

“உனக்கு மிகவும் அழகாகத் தான் இருக்கின்றது,” என்று பெருந்தன்மையுடன் பதில் அளித்தது, முயல்.

“வால் எனக்கு மிகவும் நீளமாகத் தான் இருந்தது; அதற்குப் பதிலாக, அந்தக் கூர்மையான கத்தியை, எனக்குக் கொடுத்தால், வாலை நீயே வைத்துக் கொள்ளலாம்,” என முயல், பூனையிடம் சொன்னது.

பூனையும் சரியென்று, அந்தக் கத்தியை, முயலிடம் கொடுத்தது.  காட்டிற்குள் போன முயல், “என் வாலை இழந்தேன்; ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு கத்தி கிடைத்தது,” என்றது.

காட்டிற்குள் தாவிக் குதித்துக் கொண்டிருந்த முயல், கடைசியில் பரபரப்பாக கூடை முடைந்து கொண்டிருந்த, ஒரு கிழவரிடம் வந்தது.

அவர் வேகமாகவும், புல் நார்களைப் பற்களால் கடித்தும், கூடை முடைந்து கொண்டிருந்தார்.  முயல் வாயில் கவ்விக் கொண்டிருந்த கத்தியைப் பார்த்தார் அவர்.

“முயலாரே! தயவு செய்து, அந்தக் கத்தியை, எனக்குக் கொடுப்பீரா?  இந்த  நார்களைப் பல்லால் கடித்துக் கூடை முடைவது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்று கிழவர் கேட்டார்.

முயல் அவரிடம் அந்த கத்தியை கொடுத்தது.  கிழவர் அதை வைத்துக்  கூடை நார்களை வெட்டத் துவங்கியதும், கத்தி இரண்டாக உடைந்து விட்டது.

“ஐயோ! நான் என்ன செய்வேன்? அருமையான என் புதுக்கத்தியை உடைத்துவிட்டீர்களே!” என்று முயல் அழுதது.

தான் வேண்டுமென்று கத்தியை உடைக்கவில்லை என்று சொல்லி முயலிடம் மன்னிப்புக் கேட்டார், அந்த கிழவர்..

“இந்த உடைந்த கத்தி, இனி எனக்குப் பயன்படாது; உடைந்தாலும், இதை நீங்கள் பயன்படுத்தலாம்,  உங்கள் கூடைகளில் ஒன்றை,  எனக்குக் கொடுத்தால்,  இதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்,” என முயல் கூறியது.

அவர் கத்தியை வைத்து கொண்டு, ஒரு கூடையை கொடுத்தார்.  அதை எடுத்து கொண்டு, காட்டிற்குள் சென்றது முயல்.

“என் வாலை இழந்தேன்; ஆனால் ஒரு கத்தி கிடைத்தது.  கத்தியை இழந்தேன்; ஆனால் ஒரு கூடை கிடைத்தது,” என்றது முயல்

காட்டிற்குள் தாவிக் குதித்து கொண்டிருந்த முயல், கடைசியில் ஒரு கிழவியிடம் வந்தது.  அவள் வேக வேகமாக லெட்டூஸ் கீரையைப் பறித்து மேலாடையில் வைத்துக் கொண்டிருந்தாள்.  முயல் வைத்திருந்த கூடையைப் பார்த்தாள், அவள்.

“முயலாரே! தயவு செய்து, நீங்கள் வைத்திருக்கும், அந்தக் கூடையை எனக்குக் கொடுப்பீரா?” எனக் கிழவி கேட்டாள்.

முயல் கூடையை அவளிடம் கொடுத்தது.  அவள் பறித்திருந்த கீரையை அதில் போடத் துவங்கினாள்.  கூடையின் அடிப்பகுதி உடைந்து, கீழே விழுந்து விட்டது.

“ஐயோ! நான் என்ன செய்வேன்?.  அருமையான என்  புதுக்கூடையின் அடிப்பாகத்தை உடைத்து விட்டீர்களே,” என்று முயல் அழுதது.

தான் வேண்டுமென்று கூடையை உடைக்கவில்லை என்று சொல்லி, முயலிடம் மன்னிப்புக் கேட்டாள், கிழவி.

“நீங்கள் பறித்த லெட்டூஸ் கீரையில், கொஞ்சம் எனக்குத் தருவதாயிருந்தால், இந்தக் கூடையை நீங்களே வைத்துக் கொள்ளலாம்,” என்று சொன்னது, முயல்.

அவள் கூடையை வைத்துக் கொண்டு, சிறிதளவு லெட்டூஸ் கீரையை, முயலிடம் கொடுத்தாள்.

“என் வாலை இழந்தேன்; ஆனால் ஒரு கத்தி கிடைத்தது; என் கத்தியை இழந்தேன்; ஆனால் ஒரு கூடை கிடைத்தது; என் கூடையை இழந்தேன்; ஆனால் லெட்டூஸ் கீரை கிடைத்தது,” என்றது முயல்.

அப்போது முயலுக்கு நல்ல பசி. நல்ல வாசனையுடன் இருந்த, அந்தக் கீரையை முயல் கடித்துப் பார்த்தது.  அதன் வாழ்நாளில், அவ்வளவு சுவையான பண்டத்தை, அது தின்றதே இல்லை.

“என் வால் போனதைப் பற்றிக் கவலையில்லை; அதற்குப் பதிலாக அதைவிட சிறந்த ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன்,” என்றது முயல்.

அன்றிலிருந்து, எந்த முயலுக்குமே வாலில்லை; அது இல்லாததைப் பற்றி எந்த முயலும், அக்கறை கொள்ளவுமில்லை.

அன்று முதல்  லெட்டூஸ் கீரை, முயல் மகிழ்ச்சியுடன் மிக விரும்பி உண்ணும் உணவானது.

இது தான் முயல் வாலிழந்த கதை.


மூலம் – How Rabbit lost his  tail   –  Brazilian  Folk Tales

தமிழில் –  ஞா.கலையரசி

2 COMMENTS

  1. நல்ல சுவாரசியமான கதை. வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் என்ற நம்மூர் குரங்கு கதை போலவே உள்ளது. பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.