துப்பறியும் பென்சில்- 4

4. கடத்தல் நாடகம்

வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி பேருந்திற்காகக் காத்திருந்தனர். அப்போது, காலை மணி ஒன்பது ஆகியிருந்தது.

“சனியன்… வெயில் காலையிலே இந்த போடு போடுது”

“எப்பவும் இல்லாமல் இன்னைக்கு வெயில் இப்படி மண்டைய பிளக்குது!.”

”கலி முத்திப்போச்சு. எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளைன்னு நடந்தா.. இப்படித்தான் வெயில் மண்டையை பிளக்கும்.”

“கடவுள் அவதாரம் எடுத்தக் காலமெல்லாம் போயிடுச்சு.,”

“அதெல்லாம் அந்தக்காலம். இப்பக் கடவுள் மழை, வெயில், புயல்ன்னு அரூபமா வந்து கொத்து கொத்தா மக்களைக் கொல்ல ஆரம்பிச்சுட்டான்.”

பஸ் ஸ்டாப் எதிரில் மருது சகோதரர்கள் சிலை கம்பீரமாக காட்சி தந்தது. அதன் தெற்குப் புறமாக பத்தடி நடந்தால் பி5 போலீஸ் ஸ்டேசன்.

பி5 போலீஸ் ஸ்டேசன் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. வாசலில் துப்பாக்கி வைத்தப்படி ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். போலீஸ் ஸ்டேசன் முன்பு போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் அமர்வதற்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்த நாற்காலியில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்திருந்தார். அவர் முன் இருந்த மேஜையில் பைல்கள் சில வைக்கப்பட்டிருந்தன. அவருக்கு முன்பு இருந்த  இருக்கைக்கு அருகில்  இரு பெண்கள், ஒரு இளைஞன், ஒரு வயதானவர் என நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

“ஏம்மா… சின்ன விசயத்துக்கு போலீஸ் ஸ்டேசன் வந்திருக்கீங்க? சமரசமா போங்க. கம்ப்ளய்ண்ட் மேல் நடவடிக்கை எடுத்தா என்னவாகும் தெரியுமா? அப்புறம் உன் புருசனுக்கு ஒரு செவண்டி பைவ் கேசு…  அந்தம்மா மகனுக்கு ஒரு செவண்டி பைவ்ன்னு கேசு போட வேண்டி இருக்கும்.  இனிமே சண்டை போட மாட்டோம்ன்னு எழுதிக் கொடுத்துட்டு வீட்டுக்குப் போங்க!  ஏட்டு வந்ததும் விசாரிக்கச் சொல்றேன்.,” என்று அந்த ரைட்டர் சமரசப் படுத்திக் கொண்டிருந்தார்.

”சார்.. அந்த பொடிப்பயன் என் புருசனைக் கை நீட்டி அடிச்சுட்டான். கேஸ் போட்டாத்தான் மனசு ஆறும்.,” என்று ஆரஞ்சு நிறப்புடவையில் இருந்த பெண்மணி கோபமாகக் கூறினார்.

“உன் புருசன், தோளுக்கு மேல் வளர்ந்த பையன்னு பார்க்காம அடிச்சான். அதான் பதிலுக்கு என் மகன் அடிச்சான். வாய் வார்த்தை இருக்கும் போது முதலில் கை வச்சது உன் புருசன் தானே. பாரு! என் பையன் மூக்கில் இரத்தம் ஒழுகுது . கேஸ் புக் ஆகட்டும், ஆஸ்பத்திரியில் சேர்த்து, சிகிச்சை எடுத்து, உன் புருசன் என் மகனைக் கொல்லப் பார்த்தான்னு கொலை கேஸ் போடலை என் பெயரை மாத்திக்க.,” என்று இன்னும் உரத்தக் குரலில் ஆவேசமாக மஞ்சள் புடவை உடுத்தி இருந்த பெண்மணிக் கத்தினார்.

“ஏம்மா ? இது போலீஸ் ஸ்டேசனா? இல்லை சந்தைக்கடையா? இங்கேயே இப்படி சண்டை போட்டீங்கன்னா…, அங்க எப்படி போட்டிருப்பீங்க?”

“சார், வேண்டுமென்றே அந்த பையன் எங்க வாசல்கிட்டே வண்டியை நிறுத்துறான்.,” என்றார் ஆரஞ்சு புடவை கட்டிய பெண்மணி.

“ஏன்? உங்க வீட்டில் பொம்பளைப்பிள்ளைகள் இருக்கா?”

“சார். அவுங்க எல்லோரையும் கட்டிக் கொடுத்துட்டாங்க. இவுங்க ரெண்டு பேருதான். என் புள்ளை அப்படி தப்பு தண்டாவுக்கு எல்லாம் போக மாட்டான். அவுங்க வீட்டு முன்னால் வண்டியை நிறுத்தக் கூடாதாம். அதுக்குத்தான் இந்த ஆர்பாட்டம்.”

“அதுக்கா இவ்வளவு சண்டை.”

“ சார். அவன் சைட் ஸ்டாண்டு போட்டு போவான்.  அது ஒரு ஓட்டை பைக். அதுக்கு தகுந்த மாதிரி ஸ்டாண்டும் ஓட்டை. வீட்டை விட்டு வெளியே வந்தா அந்த பைக் மேல் தான் மோதி வெளியே வரணும், அப்படி நிறுத்தி இருப்பான்.  இன்னிக்கு அப்படி வர்றப்ப தெரியாம கை பட்டு  பைக் கீழே விழுந்திடுது.. அதுக்கு, நாங்க தான் வேண்டுமென்று தள்ளி விடுறோம்ன்னு சண்டைக்கு வர்றாங்க… நிறைய தடவை சொல்லிட்டேன். இன்னைக்கு கை கலப்புல முடிஞ்சிடுச்சு.”

”எம்மா.. அய்யா செம டென்சன்ல வர்றார். இரண்டு பிள்ளைகளை ஸ்டேசன் பக்கத்திலே வச்சு கடத்தி இருக்கானுக. அந்த டென்சனில் இருக்கார். பேசாமல் சமாதானம் ஆகிட்டு போங்க. இல்ல.. கொலை கேசுன்னு பைல் பண்ணி உள்ளே தள்ளிட போறார்.”

ஓவியம்: அப்பு சிவா

அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

”என்ன இனிமே இந்த மாதிரி சண்டை போடமாட்டோம். அப்படி போட்டா சட்டப்படி நடவடிக்கை எடுங்கன்னு சொல்லி எழுதிக் கொடுத்திட்டு போங்க.”

ஸ்டேசன் பக்கத்தில் இருந்து, டீக்கடைக்காரப் பையன் நான்கைந்து டீயை கம்பியில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுக் கொண்டிருந்தான். கொட்டகையில் இருந்த போலீஸ்காரருக்கு ஒரு டீயைக் கொடுத்தான். அவர் அதனைப் பெற்றுக் கொண்டு, “தம்பி! அய்யா வர்ற சமயம்.. சீக்கிரம் கொடுத்துட்டு கிளம்பு.”

“எஸ்.ஐ.சார் தான் கொண்டு வர்ற சொன்னார். கார் டிரைவருக்காம். காலையில் இருந்து சாப்பிடலையாம். அதான் டீயும் பன்னும் கொண்டு வர்ற சொன்னார்.”

“அதுக்குள்ள உனக்கு தகவல் வந்திடுச்சா…?”

”அய்யா! குழந்தைகள் கடத்தல். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற கார் டிரைவரிடம் தீவிர விசாரணைன்னு டிவியில் நியூஸ் ஓடுது”

“அட பாவிகளா? சரி.. சரி. சீக்கிரம் டீயைக் கொடுத்துட்டு போ. ஏசி வர்ற நேரம்.”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ் ஜீப் ஒன்று ஸ்டேசன் வாசல் முன் வந்து நின்றது. அந்த ஜீப்பில் இருந்து கமிசனர் இறங்கினார். வாசலில் நின்றிருந்த காவலர், துப்பாக்கியை இடது கையில் தூக்கிப் பிடித்து, வலது கையால் வணக்கம் செலுத்தினார். கமிஷ்னரின் நடை, அதன் வேகம், அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கொட்டகையில் இருந்த போலீஸ் எழுந்து நின்று சல்யூட் அடித்து, அவருடன் சென்றார்.

“அந்த அப்பள கம்பெனி ஓனர் வந்தாச்சா?”

“ஆமா சார். அவர் உள்ளே உட்கார்ந்திருக்கார். ஏ.சி. சார். கண்ட்ரோல் ரூமில் இருந்து காமிராவைப் பார்த்து வண்டியை டிரேஸ் பண்ணிகிட்டு இருக்கார்.  டிரைவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டு இருக்கான்.”

“அவனுக்கு போலீஸ் விசாரணை பத்தி தெரியலை.”

கைதிகளை அடைத்து வைத்திருந்த செல்லைத் தாண்டி உள்ளே இருந்த அறைக்குச் சென்றார்கள்.

அங்கு இரண்டு எஸ்.ஐ கள் கார் டிரைவரை விசாரித்தப்படி இருந்தனர். அருகில் காமாட்சி அப்பளக் கம்பெனி ஓனர் சுந்தராஜன் அமர்ந்திருந்தார்.

“என்ன அண்ணாச்சி சொல்றான், உங்க விசுவாச டிரைவர்?” என கமிஷ்னர் கேட்டார்.

“அய்யா! இவன் என்கிட்ட பத்து வருசமா டிரைவரா இருக்கான். இவன் மேல் எனக்கு சந்தேகம் இல்லை. யாரு கடத்தினாங்கன்னு கண்டு பிடிங்க. இரண்டு மணி நேரம் ஆச்சு. இன்னும் கார் எங்கன்னு கண்டு பிடிக்க முடியலை? பொம்பளைப்பிள்ளைங்க வேற, கொஞ்சம் பதட்டமா இருக்கு.”

“உங்களுக்கு எதிரிகள் யாரும் இருக்கானுங்களா? யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?”

“சார்! எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லை. வியாபாரம் நல்லா தான் போகுது. தொழில் போட்டின்னு யாரும் இல்லைங்க.”

“உண்மையிலே நீ அப்பளம் தான் விக்கிறீய்யா?” என இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“சார். அப்படி எல்லாம் பேசாதீங்க?”

“அவர் அப்பளக் கம்பெனியை சர்ச் பண்ணீங்களா? அங்க விசாரிச்சீங்களா?” என கமிஷ்னர் இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தார்.

“சார்! நம்ம ஏட்டு ரத்தின வேலை அனுப்பி வச்சோம். அவர் விசாரிச்ச வரைக்கும் எந்த எவிடன்ஸ்சும் கிடைக்கலை.”

“நல்லா விசாரிக்க சொல்லுங்க. அங்க வேலைப் பார்க்கிறவுங்க எல்லோரும் இன்னிக்கு வேலைக்கு வந்தாங்களான்னு செக் பண்ணுங்க. அப்புறம் வேலைக்கு வராதவங்க இருந்தா வீட்டில் போய் விசாரிச்சு ஸ்டேசன் இழுத்துட்டு வாங்க. இன்னிக்கு ஏன் லீவு போட்டான்னு விசாரிங்க”

“ஓகே சார். சேகர்ன்னு ஒருத்தன் இன்னைக்கு வரலையாம். அவன் வீட்டுக்கு நம்ம சிதம்பரத்தை அனுப்பி இழுத்துகிட்டு வரச் சொல்லி இருக்கேன்.”

“சார். சேகர் பாவம் சார். அவன் நேத்தே காய்ச்சல்ன்னு என்கிட்ட சொல்லித் தான் வேலைக்கு வந்தான். அவன் அப்பாவி. சார். இது வேற யாரோ செய்து இருங்கன்னு நினைக்கிறேன்.”

“யாரு பாவம். உன் பிள்ளைக கிடைக்கணும்ன்னா பேசாம இரு.” என இன்ஸ்பெக்டர் அவரை அதட்டினார்.

”வேறு யாரு கடத்தி இருபாங்கன்னு நீங்க யோசித்து சொல்லுங்க. பிள்ளைகள் வேணும்ன்னா எல்லா தரப்பிலும் விசாரிக்கணும். இது எங்க கடமை.,” என கமிஷ்னர் சுந்தராஜனிடம் கூறினார்.

“சார்! எட்டரைக்கு கடத்தி இருக்கானுங்க. இப்ப மணி பதினென்னு ஆகப் போகுது. வண்டியை கண்டு பிடிங்க சார்.,” என சுந்தராஜன் அழுதப்படி கெஞ்சினார்.

கமிஷனரின் செல் போன் அலறியது.

“ம்.. சொல்லுங்க.”

”ம்..வெரி குட்.”

”அப்ப மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் சிக்னல் கேமிராவை செக் பண்ணுங்க.. அப்புறம் அந்த மாருதி வேன் என்னாச்சு? ஐந்து நிமிசம் கழிச்சு போன் செய்து விபரத்தை உடனே உடனே அப்டேட் பண்ணுங்க.”

”அந்த டிரைவரை இங்க வர்ற சொல்லு” எனத் தடித்த குரலில் கமிஷனர் கூறினார்.

டிரைவர் அவர் எதிரில் வந்து நின்றான்.

“இங்க பாரு! போலீஸ் அடி உனக்கு தெரியாது. ஜென்மத்துக்கும் நடக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிடு.”

“அய்யா ! நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். நான் தான் கம்ப்ளெய்ண்டே கொடுத்தேன்.”

“எல்லாத்தையும் செய்து விட்டு கம்ப்ளெய்ண்ட் வேற குடுப்பியா? அதென்ன உன் செல் போன் அவுட் கோயிங் இல்லை?”

“அய்யா! சம்பளம் வாங்கின உடன் ரிசார்ச் பண்ணலாம்ன்னு இருந்தேன்.”

“சரி!  வீரகனூர் ரிங் ரோடு அருகில் வண்டியை நிப்பாட்டிட்டு, குழந்தைகளை மாருதி வேனில் கொண்டு போனாங்கன்னு சொல்றே.  இப்ப நீ ஓட்டி வந்த கார் கோச்சடை பாஸ்போர்ட் ஆபீஸ் அருகில் நிக்கிதுன்னு தகவல் வருது. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிடு.”

”வண்டியில் கஞ்சா கடத்துரன்னு சொல்லி.. என்னையும், ஓனரையும் விசாரிக்கணும்ன்னு  கூட்டிட்டு போனாங்க. நம்ம ஸ்டேசன் வர்றப்ப,. அய்யா ரிங் ரோட்டில் இருக்கார்ன்னு அந்த கும்பலில் ஒருத்தனுக்கு போன் வந்துச்சு. வண்டியை ரிங்க் ரோட்டுக்கு ஓட்டச் சொன்னான்.. வீரகனூர் ரிங் ரோட் பக்கத்தில் வந்ததும் வண்டியை நிறுத்தினாங்க. வண்டியில் இருந்து என்னை இறக்கி விட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு போய் உன் ஓனரை கூட்டிகிட்டு போலீஸ் ஸ்டேசன் வந்திடுன்னு சொன்னாங்க.”

“அப்ப நீ ஏன் ஓனரை கூப்பிடாம. நேரா ஸ்டேசன் வந்து சொன்னே?”

“சார்! ஸ்டேசன் முன்னாடி ஜீப் நின்றது. சந்தேகப்பட்டு உள்ளே வந்து  சொன்னேன். இங்கிருந்து எஸ். ஐ. சார் ஓனருக்கு போன் பண்ணி வர்ற சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் கடத்தினது ஊர்ஜிதம் ஆச்சு.”

“அப்ப உனக்கு கடத்தல்ன்னு தெரியும்”

“அய்யா! சத்தியமா என் பிள்ளைகள் அறிய தெரியாது. இங்க போலீஸ் ஜீப்பை பார்த்ததும் தான் சந்தேகமே வந்தது. என்னை நம்புங்க. எங்க ஓனர் உப்பை தின்னு வளர்ந்தவன். எனக்கு காசு வேணும்ன்னா வாய் திறந்து கேட்பேன். நான் எதுக்குய்யா கடத்திறேன்.”

“ வாய் திறந்து கேட்டு கொடுக்கலைன்னா கடத்துவீய்யா?”

“உன் மகள் கல்யாணத்துக்கு காசு கேட்டீய்யா?”

“ஆமாங்கய்யா.”

”கொடுத்தாரா?”

“கொடுத்தாரு.”

“இரண்டு லட்சம் தரலைன்னு கேள்வி பட்டோம்.”

“ கடனா கேட்டேன். அப்ப ஓனர் நிலைமை சரி இல்லை. அதான் இல்லைன்னு சொல்லிட்டார். ஆனா, அதுக்கப்புறம் இரண்டு மாசம் கழிச்சு தந்தாருங்கய்யா. அதுக்காக யாரும் கடத்துவாங்களா?”

“அப்ப வேறு எதுக்காக கடத்தினே? உண்மையை சொல்லு. நீ சரி பட்டு வர்ற மாட்டே. கார் எப்படி பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு போச்சு?” என்றபடி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.

“சார்.. நான் ரிங் ரோட்டோடு வந்ததும். ஆட்டோ பிடிச்சு வந்திட்டேன்.” என கண் கலங்கி கூறினான்.

போலீஸ்காரர் ஒருவர் உள்ளே நுழைந்து சல்யூட் வைத்து, “சார்! அப்பளக் கம்பெனியில் லீவு போட்ட சேகரை கூட்டி வந்திருக்கோம்.”

“அவனை உள்ளே வரச் சொல்லு.”

மற்றொரு போலீஸ்காரர் சல்யூட் அடித்தபடி சேகரை அழைத்து வந்தார்.

“சார். நாங்க வீட்டுக்கு போனப்ப மேலூர் போயிருக்கான்னு சொன்னாங்க. வேகமா பைக்கில் போய் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் பிடிச்சு கூட்டிகிட்டு வர்றோம்.”

“என்னடா.. இந்த டிரைவரோட சேர்ந்து குழந்தையை கடத்திட்டு தப்பிக்கவா பார்க்கிறே? உனக்கு காய்ச்சல்ன்னு சொன்னங்க. நீ எதுக்கு மேலூர் கிளம்பினே?”

”சார்! கடத்தலா?”

“என்னம்மா நடிக்கிறான் பாருங்க! ஒழுங்கு மரியாதையா சொல்லு. நீ தானே குழந்தையை கடத்தினே. குழந்தையை எங்க வச்சிருக்கே. வண்டியை பாஸ்போர்ட் ஆபீசில் நிறுத்திட்டு எங்கே போக பார்க்கிற?”

“சார். என்ன என்னமோ சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலை?”

இன்ஸ்பெக்டர் சேகரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

சேகர் கலங்கி நின்றான்.

“உனக்கு உன் ஓனர் பொண்ணுகளை கடத்தின செய்தி தெரியாது. அப்படி தானே”

“சார்! சத்தியமா தெரியாது. நீங்க இப்ப சொல்லிதான் தெரியும். கம்பெனியில் ஏதோ பொருளைக் காணம்ன்னு சொல்லித்தான் என்னைக் கூட்டிகிட்டு வந்தாங்க.”

அப்போது சுந்தராஜனின் போன் ஒலித்தது.

அனைவரும் அமைதி ஆகினார்கள்.

கமிஷ்னர் மற்றும் அங்கிருந்த அனைவரும் போனை உற்று நோக்கினார்கள்.

பையில் இருந்து போனை எடுத்த சுந்தராஜன் அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய போனை கமிஷ்னரிடம் கொடுத்தார்.

போன் டிஸ்ப்ளேயில் அன் நோன் நம்பர் என வந்தது.

கமிஷ்னர் சுந்தராஜனிடம் பதட்டம் அடையாமல் பேசும் படி கூறினார்.

சுந்தராஜன் போனை ஆன் செய்தார்.

“ஹாலோ!”

“என்ன சுந்தராஜன் போலீஸ் ஸ்டேசனில் இருக்கிற மாதிரி தெரியுது?”

“நீங்க யாரு? என் பொண்ணுங்க எப்படி இருக்காங்க?”

“பரவாயில்லை. போலீசை விட புத்திசாலியா இருக்கே.! உன் பொண்ணுகளுக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கணும்ன்னா இரண்டு கோடி பணம் ரெடி பண்ணிட்டு நாங்க சொல்ற இடத்துக்கு வா! என்ன புரிஞ்சுதா? ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்றேன்.”

போன் கட் ஆனது.

போலீஸ் ஸ்டேசன் மயான அமைதியில் இருந்தது.


தொடரும். 

நன்றி ஓவியம் : அப்பு சிவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.