சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம்,
இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம்
சுர குருவுக்கோ சரியான கண்ணாம்.
ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம்.
பதினஞ்சு மாசி பகல் துயின்றது.
வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி
வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி
பானு மறைந்தான். வானில் அந்தி
ஈயப்பாயைத் திக்கெலாம் விரித்து
யாருக்காகவோ காத்திருந்தது
ஈயப்பாயில் வெள்ளி ஈப்போல்
சாயும் திசையில் பூத்தது புள்ளி,
என்ன நீலம் என்ன நீலம்!
வெள்ளையும் வெளுத்த வண்ணார நீலம்.
நீல ரசத்தில் நனைத்த வெள்ளி,
மாலையின் செம்மையை மாய்த்த புள்ளி.
வாத்தியார் வந்தார். வானம் பார்த்தார்,
“இது தான் சுக்கிரன், வக்ரக் கண்ணன்
சூதில் கூர்ந்தவன், கரருக்கு வேம்பன்
தீது தெரிந்தும் நிதியின் மக்களைச்
சதி அமுதூட்டிச் சாகாது காப்பவன்
கொடையைத் தடுக்க வள்ளலின் கிண்டியில்
குருடான சுக்ரன் ” என்றார் வாத்யார்.
சூதுக்கித்தனை சோதி வருமோ?
சூழ்ச்சி தான் இச்சாந்தி தருமோ?
ஐயம் அலைத்தது
சரச் சுள்ளியாய் நேரம் எரிந்தது
வெள்ளிக் குருடைப் பார்த்து நின்றேன்
வேறொரு மங்கல் பக்கலில் தெரிந்தது
வெள்ளியின் சுடரால் வெளிறிப் போச்சோ?
விளக்கம் வந்ததேன்?
விளங்கக் காணோம்.
ஏனோ, ஏதோ! எனக்கேன் கவலை?
எழிலான கூடல்
கண்ணெடுக்காமல் காலமும் பார்க்கலாம்
கண்ணிரண்டாய்க் கண்டது ஜோடி
காணக் காணக் காதல் வளர்ந்தது
புளகம் உதறிப் பேச்சும் செத்து
இது தான்’ என்றார் புலவர் வாத்தியார்
எது செத்தாலும் சகிக்கமாட்டார்
பேசிப் பேசி பிழைக்கச் செய்வார்
“இது தான் வியாழன், இந்திரனார் குரு
இங்கே வாழும் நமக்கும் சற்குரு
மோகம் களைவார் போதத் தாழ்வார்
சாகா நிலையைக் காட்டும் வாத்யார்
தேவர் வாத்யார் தெய்வ நெறியர்”
என்றார் வாத்யார்.
நானும் பார்த்தேன் நகைத்தேன், நோக்கினேன்
சிவப்புக் கணவனின் வலத்தே நிற்கும்
கறுப்புப் பெண்ணைக் கண்டேன், சிரித்தேன்
பிடுங்கித் தின்பான், பழியே சொல்வான்
அடுத்தே நிற்பான் அப்பாலும் போகான்
ஏழைக் குறும்போடு எள்ளும் உறவினன்.
அமரர் குருவும் அங்ஙனே நிற்கிறார்
நேற்றும் வானம் நோக்கினவன் நான்
நேற்றவர் ஒரு கை மேலே நின்றார்
அதற்கு முதல் நாள் அரை ஏர் தூரம்
அதற்கும் முதல் நாள் முழு ஏர் தூரம்
அதற்கும் முந்தி ஆறும் ஏழும்.
– தி.ஜானகிராமன்
ஓவியம் : நெகிழன்
[mkdf_highlight background_color=”black” color=”yellow”]நன்றி[/mkdf_highlight] : இலக்கிய வட்டம் இதழ்த் தொகுப்பு