மோகமுள்: ஒரு திருப்புமுனை


தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது.  ஏமாற்றமாக இருந்தது” என்றார். நான் சன்னமான குரலில், ஜானகிராமன் சிறு வயதில் தாத்தாவிடமும், அப்பாவிடமும், பாட்டியிடமும் அம்மாவிடமும் கேட்ட மொழி படைப்பில் இயங்கும்போது அடிமனசிலிருந்து எழுந்து உயிர் பெறுவது இயல்புதானே” என்றேன். சு.ரா., மேற்கொண்டு இது பற்றிப் பதில் சொல்லவில்லை. படைப்பு மொழி என்பது தொப்புள் கொடி உறவாக வருவது. சு.ரா., இன்றைய மொழியில் எழுதுவதே சரியாக இருக்கும் எனக் கருதினார். எனக்கு ஜானகிராமன் மொழியின் மாயசக்தியை மீட்டுவந்து  ஜொலிக்கவிட்டவர் என்றே  பட்டது. இசை பற்றித் தி.ஜா. மோகமுள்ளில் எழுதும் குறிப்புகளைப் படிக்கும்போது, எனக்குத் தமிழ் எழுத்துச் சூழலே நினைவிற்கு வந்தது.

வாசகர்கள் விரும்புவதைக் கணக்கில் வைத்து எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனர். “கணேசன் பிரமாதமாகப் பாடிக்கொண்டிருந்தார். இரண்டு வருஷமாக அவருக்கும் சுருதிக்கும் மனஸ்தாபம். பஞ்சமத்திற்குப் பிறகே அவஸ்தை. அவரே முகம் சிணுங்கிக் கொள்கிறார். ஆரோக்கியம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். குரலானால் அவஸ்தைப் படுகிறது. “உடம்பு நன்றாயிருக்கிறதென்றால்?”  “வயசு ஆகவில்லை”  “வயசானால் சுருதி சேராதோ?” “வயசான நம் வித்வான்களுக்குச் சேரவில்லையே” என்கிறார் பாலூர் ராமு. இளமையில் ஓரளவு நன்றாக எழுதியவர்கள் வயதான காலத்தில் சரிந்து விடுகிறதை எழுத்துலகிலும் பார்க்கிறோம். ஜெயகாந்தன் உடனே வருகிறார் நினைவுக்கு. “சுருதி தாய் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அவளைத் தினமும் சோறு போடாமல் இப்படித் தினமும் கச்சேரி கச்சேரியாக இழுத்துப்போய்க் கொலை செய்கிறோம். ஜனங்கள் இதைக் கேட்கிறார்கள் என்றால், அது அவருசி. ஹிம்சையைப் பார்த்துக் களிப்பதில் ஒருருசி. பாமரனுக்கு, சுவையில்லாதவனுக்கு உள்ள ஒரு சந்தோஷம். அவ்வளவுதானே”  “ஒரு எண்ணத்தை ஒரு சங்கதியை ஒரு பிடியை அபூர்வமாகப் பிடிக்கிறான், வித்வான். அதற்கு மாய்ந்துபோகிறார்கள்” “குரல் என்பது புறவயமான ஒரு விஷயம், காது ஒரு தோல், அதுவும் புறம்தான். அதற்குச் சுகம் கொடுத்தால் மட்டும் போதாது. உள்ளே ஹிருதயத்தையும் மூளையையும் போய்த் தொடவேண்டும். அப்படித் தொட்டுவிட்டால் ஜனங்கள் இந்தக் குரலை லட்சியம் பண்ண மாட்டார்கள். வெறும் குரலை மட்டும் பார்க்க மாட்டார்கள்” என்கிறார். கொஞ்சம் நல்லவிதமாய் எழுதத் தெரிந்தவர்களுக்கு, இதழ்களில் தொடர்ந்து  எழுத இடம் கிடைத்துவிட்டால், இலக்கியப் பசிக்குச் சோறு போடாமல் வாசகர்களுக்கு எழுதித் தள்ளுவதிலேயே வீழ்ந்து விடுகிறார்கள். ஏதோ ஓர் அம்சம் வாய்க்கப்பெற்றால் – அதை வாசகர்கள் விரும்பினால், அதிலேயே விழுந்து உற்பத்தி செய்வார்கள். ஒரு நல்ல எழுத்து நல்ல கருத்துகளை, முற்போக்குக் கருத்துகளைச் சொல்லிவிட்டது என்பதற்காக அல்ல, அது இதயத்தைத் தொடவேண்டும். அப்படி நேர்ந்தால் போலிகளை விரும்பமாட்டார்கள்.

பாலூர் ராமு, பாபு கனவில் புதுவிதமாக வந்ததைத் தி.ஜா. சொல்லும்போது எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘இரவு ஒரு கனவு வந்தது. ராமு தலை கீழாக நிற்கிறாற்போல. இரண்டு கைகளையும் தரையில் வைத்துக் கால்கள் மேலே நிற்க, நடக்கிறார். “இப்பப் பாருங்களேன்” என்கிறார்’. ஏதாவது வித்தை செய்தாவது நானும் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் என்று காட்ட முயல்கிறவர்கள், தமிழில் உண்டுதானே! ராகத்தில் தோன்றும் அழகு பற்றிப் பாபுவும் ராஜமும் பேசிக்கொள்ளும் ஓர் இடம் நுண்ணறிவு சார்ந்ததாயிருக்கிறது. “ராகத்தோட உருவமே அவ்வளவு அழகு. அது கண்ணை மூடவச்சுடறது. ராகத்துக்கே அந்தச் சக்தி இருக்கோல்லியோ” “ஒரு ராகத்துக்குச் சொந்தமா ஒரு அழகு, ஒரு தனித்தன்மை இருக்குன்னு தெரிஞ்சாத்தானே, பாடறவன் நன்னா பாடறான் பாடலேன்னு தெரியறது” “பாடாமலே இருக்கலாம். மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளரப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்” ஒவ்வோர் எழுத்தாளனும் அவனது தனித்திறனால் பேசப்படுவது, ஓர் அடிப்படையான விசயம் என்பதை, இங்கே நாம் நினைத்துப் பார்க்கலாம்.

உலக இலக்கியங்களில் இசை குறித்த இத்தனை நுணுக்கங்களுடன் எழுதப்பட்ட படைப்புகள் உண்டா எனத் தெரியவில்லை. என் வாசிப்புக்குக் கிட்டவில்லை. இந்திய அளவில் இல்லை. தமிழில் இதன் அருகில் நிற்கும் அப்படி ஒரு நாவல் இல்லவே இல்லை. இசை இந்நாவலில் வாழ்வின் பகுதியாக இயைந்து அபாரமான படைப்பாக உருவானது போல் இன்னொன்று வரவில்லை. வீணையின் இசை பொங்கி வருகிறது. ‘காலமும் இடமும் மறைந்து அற்றுப்போன நிலையில் வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஒரு கணப் பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகிவிட்டன’ என்கிறார். அகவயமாக எழும் இசையின் அசைவைப் புறவயமாக ஒரு மொழியில் பிடித்துக் காட்டுகிறார் தி.ஜா. கேட்கக் கேட்க, “சாரீரம் மர்மாவை எல்லாம் சிலிர்க்க அடிக்கிறது. கேக்கிறபோதே மயிர்க்கூச்செறிகிறது. அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப்பிடுறான்”.  மங்கள்வாடியாரின் முரட்டு இசை எப்படி மெல்ல மெல்லப் பல மாயங்களைச் செய்தது என்பதைச் சொல்லும்போதே, முரட்டு இலக்கியப்பிரதிகள் எப்படி இலக்கியமாக மலர்ந்தன; இலக்கியமாகாது கரடு முரடாகவே நின்று போயின என்ற நினைவிற்குத்தான் சென்றது என் மனம். டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’, ஆ. மாதவனின் ‘எட்டாம் நாள்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றும் ஒரு நாளே’, ஜோஸ்வாண்டேலுவின் ‘அபாயம்’, தஸ்தயேவ்ஸ்கியின் ‘அசடன்’, இப்படிப் பல எழுந்து வருகின்றன. இலக்கியமாகா வரிசையும் வருகிறது. இருக்கட்டும். தி.ஜானகிராமன், எல்லா எழுத்தாளர்களையும் பாராட்டிப் பேசும் குணம் படைத்தவர் என்று சொல்லும் வழக்குண்டு. உண்மையான ஜானகிராமன் அவரல்லர். அவர் மொழிபெயர்த்த நாவல்களும் சிறுகதைகளும் உலகத்தரம் பெற்றவை. அல்லறை சில்லறைகளை அவர் தொட்டதில்லை. தேர்வு சார்ந்து தெளிவாக இருந்திருக்கிறார். அவர் கையில் தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளைத் திணிக்கிறபோது, அவர்கள் மனம் கோணக்கூடாது என நினைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்நிலைக்கு எதிரான தீவிரமான இலக்கிய விமர்சனமும் கொண்டவர்தான். அதை இசையை முன்னிறுத்திச் செய்திருக்கிறார். இதுதான் உண்மையான தி.ஜா.என்பது என் எண்ணம். பாலூர் ராமுவும், பாபுவும் இசை குறித்துப் பேசிக்கொள்ளும் இடங்களில் எல்லாம், இந்தத் தரம் பற்றிய விமர்சனம் ஓங்கி ஒலிக்கிறது. இது ரங்கண்ணாவின் விமர்சனத்திலும் இருக்கிறது.

ராமுவின் இசையை ரங்கண்ணா மதிப்பிடுவதுபோலப் பொதுவாக இது சொல்லப் பட்டிருக்கிறது. “ராமுவுக்கு முக்கால் கட்டைக்குமேல் சாரீரம் எழும்பாது. சற்று அசைப்பில் கேட்டால் காக்காய்கள் ஒன்றின் மூக்கில் இன்னொன்று மூக்கை விட்டுக் குழறும்போது கேட்கும் தொனி மாதிரி இருக்கும். ஆனால், அதை ஒரு தினுசாகப் பக்குவப் படுத்தி, தன் ஞானபலத்தால் ஒப்பேற்றி, ஜனங்களின் காதுக்கும் அதைப் பழக்கப்படுத்திப் பேரடைந்தவர். பத்திரிகைக்காரர்களையும் பலவாறாக அண்டி. இதுதான் உயர்ந்த சங்கீதம் என்று அவர்களில் சிலர் எழுதி, ஜனங்கள் அதை ஏற்று, ஒரு மாதிரியாக உச்ச ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டவர்”. “நானும் எழுத்தாள ரௌடிதான் எனக் கூட்டம் புகுந்து பேனாக் கத்தி காட்டி மிரட்டும் எழுத்தாளர்களைப் போல இந்தப் பாடகர்களின் கூத்தை, ராமனுடைய குணத்தை யார் சொன்னா என்னான்னு கம்பன், வால்மீகி காளிதாசனோட, நானும் பண்றேன் ராமாயணம்னு எத்தனையோ சில்லுண்டி கவிராயன்லாம் பண்ணின ராமாயணத்தையும் சேர்த்து வைக்கிறாப்போல இருக்கு” என்று ஒப்புமை காட்டுகிறார். இந்த மதிப்பீட்டிற்குப் பொருத்தமான தமிழ் எழுத்தாளர்கள் நிறையப் பேர் வருகிறார்கள். வாசகர்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன். “ஆளைப் பார்த்தா காக்கா புடிக்கி மாதிரி இருக்கான். கந்தர்வனாய்ப் பொழியறானே… இது பரம ஆச்சர்யமான சாரீரம்” என ரங்கண்ணா சொல்வதற்கும் தமிழ் எழுத்தாளர் வரிசை உண்டு. “அந்தப் பையன் பேசும்போது சின்னக்குரலாக மிருதுவாக இருந்தது. பாடக் கிளம்பினால் குரல் விசுவரூபம் எடுத்தது போல் பருமன் கொண்டு இனிமையில் தோய்ந்து கம்பீரமாகப் பொழிந்தது. அண்டாத ஆழத்திலும் எட்டாத உயரத்திலும் ஆயாசமில்லாமல் திரிந்தது” என்கிறார். புதிதாக எழுத வரும் இளைஞர்களில் ஒரு சிலர், எடுத்தவுடனே அபாரமான கதைகளை எழுதிவிடுவது போல்தான் இசையும்!

 மங்கள்வாடிக்காரரும் பாபுவும் இசை குறித்துப் பேசும் இடங்கள், தமிழ் நாட்டில் நடக்கும் இலக்கிய அரசியலுக்கு இன்றுவரை பொருத்தமாயிருக்கிறது. வடநாட்டு மங்கள் வாடியாரை நன்றாகப் பேசவிட்டுள்ளார். “பெரிய வித்வான்கள்… சாரீரத்தையும் ஞானத்தையும் மாத்திரம் பொறுத்திருக்கவில்லை. சம்பந்தமில்லாத பல தகுதிகளும் வேண்டும் அதற்கு. மனிதர்களை அலுக்காமல் சலிக்காமல் போய்ப் பார்க்கும் பொறுமை வேண்டும். காலில் பலம் வேண்டும். நேரம் வேண்டும். அந்த நேரத்தில் கொஞ்சமாவது குரலைச் சாதகம் பண்ணலாமே, இன்னும் கொஞ்சம் ஞானத்தைச் சேர்த்துக் கொள்ளலாமே என்று அநாவசியமாக வருந்தக்கூடாது. நாம் போய்ப் பார்க்கிற மனிதர்கள் சங்கீதம் அரைகுறையாகத் தெரிந்தவர்களாக இருக்கலாம். தெரியாமலேயே இருக்கலாம். ஆனாலும் அவர்கள் சொன்னால் அதை உடனே மறுக்காமல் இருக்கவேண்டும்.மறுத்தால் மறுக்கிறோம் என்று தெரியாத வகைக்கு மறுக்கவேண்டும். அதையும் அவர்கள் கண்டு பிடித்து ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்கள் சொல்வதுதான் சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டும்” என்கிறார் தி.ஜா. சாகித்திய அகாதமி பரிசு, இதரப் பரிசு, பிரசுரம் சார்ந்த விசயத்திற்கு எழுத்தாளன் பத்திரிகையாளனிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற நடிப்புப் பற்றியெல்லாம் சொல்வதாயிருக்கிறது இது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே, அப்படி இசையைச் சாக்காக வைத்து இலக்கிய மோசடிகளை எழுதுவது போலிருக்கிறது.

அதிகாரத்திலுள்ள மடையனிடம் கலைஞன் எப்படி நடந்துகொண்டால் சாதிக்க முடியும் என்பதை மறைமுகமாகத் தி.ஜா. நகையாடுகிறார். “நன்றாகப் பாடுகிறார்கள். ரொம்பவும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் பாடவே இல்லையே. எப்படியாவது தப்பித்துக்கொண்டு ஓடிவிட ஆசைப்படுவது போலிருக்கிறது குரலைக் கேட்டால்”  “குரல் ஏமாற்று வித்தை காட்டுகிறது. கடினமான இடத்தின் அருகிலேயே போவதில்லை. போனாலும், தளுக்குப் பண்ணி, ரயிலில் டிக்கெட் வாங்காமல் போனால், செக்கிங் அதிகாரியைக்கூடப் பார்க்காமல் விர்ரென்று கடந்து போவார்களே. அது மாதிரி வேகமாக ஓடிவிடுகிறது.”  “அதிகாரி யாரும் இல்லை என்கிறீர்களா?” “இந்த ரயிலுக்கு நாம்தான் அதிகாரி” “அப்படி என்றால், தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்களா?” “ஆமாம். இதுதான் கஷ்டம். பிறரை ஏமாற்றுவதைவிடத் தன்னை ஏமாற்றிக்கொள்வது பாபம் இல்லையா?” “என்ன பாபம்? அப்பாடா, தப்பித்து விட்டோம் என்று நிம்மதி ஏற்பட்டுவிடுகிறதே!” “நிம்மதியில்லை. திருடிவிட்டுத் தப்பித்துக் கொண்டால், தப்பித்துக் கொண்ட திருப்திதான் இருக்கும். திருடிவிட்ட குற்றம் நெஞ்சுக்குள்ளேயே இருக்கும்” “எந்த ஊர் திருப்தியும் நமக்கு லட்சியமில்லை. நம்முடைய திருப்திதான்  நமது லட்சியம்” என்கிறார்.

உழைப்பற்ற தேடலற்ற ஆழமற்ற பாடகர்களையே ஜானகிராமன் ஏசுகிறார். கல்கி, அகிலன் போன்றோரின் எழுத்துவகைக்குக்கூடப் பொருந்திப்போகிறது இது. கல்கியில் எழுதிக்கொண்டு, கல்கியின் எழுத்தை விமர்சிக்க முடியுமா? இசை தி.ஜா.விற்கு நல்ல கேடயம். இரண்டாம்தர மூன்றாம்தரப் பாடகர்கள் தம் இடத்தைப் பிடிப்பதற்குச் செய்யும் தந்திரங்களை விமர்சிக்கிறார். இது பத்திரிகைக் கதைகள் எழுதிக் குவிப்பவர்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தும். இதையே நம் எழுத்தாளர்கள் மீதும் வைத்தால் மன வருத்தம் உண்டாகும். இசை நல்ல ஆயுதமாகப் போய்விட்டது. அதிலும் விமர்சனத்தை வடநாட்டு மங்கள்வாடிக்காரர் வழியாக வைக்கிறார். இது ஓர் உத்தி.  இதையே சுந்தர ராமசாமி, தமிழ்ச் சூழலில் நின்று போலி எழுத்துக்களைப் பேசினால் தீவிரமாக விவாதிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை மலையாள இலக்கியப் பின்னணியில் பேசுகிறார். தி.ஜா. இசையை வைத்த இடத்தில் சு.ரா. இலக்கியத்தை வைத்துப் பேசினார் எனப் புரிந்துகொள்ளலாம். மோகமுள் நாவல், இசையுலகத்தைப் பேசுவதற்காக எழுதப்பட்டதுதான். அதில் ஒன்றின் பாதிப்பை இங்கு யாரும் பேசவில்லை என்பதற்காகத்தான், இ்தை நான் சொல்கிறேன். பாதிப்பு இல்லை என்றுகூட யாரேனும் சொல்லலாம். ஆனால் இப்படியிருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மோகமுள் குறித்துச் சுந்தர ராமசாமி சொன்ன இரண்டொரு வரிகள், நினைவிற்கு வருகின்றன. ‘யதார்த்தத்தின் மேல் கனவின் பனிப்படலத்தை விரித்த மிக வெற்றிகரமான கலைஞன் என ஜானகிராமனைச் சொல்லலாம். அவருடைய மோகமுள் ஒரு சிறந்த உதாரணம். இந்த எழுத்தாளர்களைச் சுற்றி இலக்கிய ஈடுபாடற்ற ‘ரசிக’ சிகாமணிகளும் கூடியிருப்பதன் காரணம் இதுதான். வாழ்வின் உக்கிரத்தைப் புரிந்துகொள்ள அல்ல, கனவுகளின் ஒருமடக்கைப் போட்டுக்கொள்ள வந்தவர்கள் அவர்கள்’ எனத் தி.ஜா.வையும் அவரது வாசகர்களையும் சு.ரா. மதிப்பிடுகிறார். உண்மையில் வாழ்வின் உக்கிரத்தின் ஆழம் எதுவரை இருக்குமோ அதன் வேர் நுனிவரை சென்று பார்த்தவர் தி.ஜா. என்பதை மோகமுள்ளில் பார்க்க முடியும். யமுனாவின் வீழ்ச்சிச் சித்திரத்தில் மட்டுமல்ல. இந்த நாவல் முழுக்கவே அப்படியான பாய்ச்சல் உண்டு. வெறுமனே இந்நாவலை யமுனா – பாபு கதையாக மட்டுமே பார்த்ததின் விளைவே இப்பனிப்படலம்! இனி, இ்தன் உக்கிரத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உருக்குலைந்த யமுனாவின் மீது பாபுவிற்கு ஒருவித திகைப்புதான் ஏற்படுகிறதே தவிர, அவள் மீதான காதல் குறையவில்லை. யமுனாவிற்குக் காலம் சலிப்பையும் ஆர்வமின்மையையும் உண்டாக்கிவிடுகிறது. உடல் இச்சை பற்றிய கனவு வடிந்துவிடுகிறது. திருமணம் தொலைதூரம் சென்றுவிட்ட விசயமாகவே யமுனா புரிந்திருக்கிறாள். தற்சமயம் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழவேண்டும் என்பது தவிர்த்து யமுனாவிற்கு வேறொன்றும் இல்லை. இந்த ஆய்ந்தடங்கிய ஒரு மனநிலையின் சித்திரத்தைத் தி.ஜா. சென்னை வந்தபின் தருகிறார். பாபுவிடம் நேர்மாறாகக் காதல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு உரிய வயதும் பாபுவிற்கு இருக்கிறது. ஆர்வம் – ஆர்வமின்மை என்ற இரு உள்ளங்களின் மோதலாக, இந்நாவல் விரிகிறது. இருநிலையையும் மிகத்திறமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வாசகனின் விருப்பத்திற்காக யமுனாவைக் காதலில் ஆர்வம் மிக்க பெண்ணாகக் காட்டவில்லை. இதில் தி.ஜா. காட்டியிருக்கும் பக்குவம் அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ‘நீதான் வேணும்’ என்கிறான் பாபு. ‘எவ்வளவோ நீ மாறியிருப்பன்னு நினைச்சேன். நீ பழைய பாபுவாகவே இருக்கியே’ என்கிறாள். ‘உனக்கு இதில நாட்டமில்லையா’ என்கிறான். “இருந்தது உண்டு. ஆனா ராவும் பகலுமாகத் தவிச்சு நசுக்கிட்டேன் எல்லாத்தையும். அப்படி சுலபமா நசுக்கக்கூடிய சக்தியில்லை. வேறென்ன செய்யறது? தலையெடுத்துத் தலையெடுத்து மறுபடியும் ஆடுவதைப் பிடிச்சு நசுக்கிக் காலால் மிதிச்சுத் தேச்சு வந்தேன். எட்டிய மோகம் மட்டுமல்ல, எட்டாத மோகமும் அப்படித்தான். இப்ப உசிர் இல்லாம கிடக்கு” என்கிறாள் யமுனா. பதினாறு வயதில் குத்திய மோகமுள், உள்ளுக்குள்ளேயே குத்திக் குத்தி ரணமாகிக் காய்ந்து மரத்துப் போனதைச் சொல்கிறாள். அவளுக்கும் ஆசை இருந்திருக்கிறது. கனவு இருந்திருக்கிறது. எல்லாம் காலம் தின்று தீர்த்துவிட்டதைச் சொல்கிறாள்.

எப்படிச் சொன்னாலும் யமுனாவின் சோர்வையும் உற்சாகமின்மையையும் ஏற்க முடியவில்லை பாபுவால். வயதும் காதலும் நீறுபூத்த நெருப்பாயிருக்கிறது. கடற்கரையில் அமர்கிறார்கள். நெருங்கித் தொடுகிறான். அந்தத் தொடுதல் பற்றிச் சொல்கிறான். “உண்மைதான். கனவு இல்லை. தொட்டேன். கையை வருடினேன். கன்னத்தை வருடினேன். இதழ்களைத் தீண்டினேன். வறண்ட இதழ்கள். முதலில் எதையோ கல்லைத் தீண்டுவது போலிருந்தது. உயிரற்று உலர்ந்தது. எழுந்து போகும்முன் மறுபடியும் தீண்டியபோதுகூட அப்படித்தான்” என்று அவனது உணர்ச்சிக்கு எதிர்மாறானதையே பாபு உணர்கிறான். காதல், கல்யாணம், காமம், பிள்ளைப்பேறு, கனவு யாவும் அடங்கிவிட்ட நிலையில் பாபுவின் விருப்பத்திற்குத் தன்னைத் தருகிறாள் யமுனா. மலைச்சிகரத்தின் உச்சியில் நின்ற யமுனாவைச் சூழலும் காலமும் சமூகமும் அதல பாதாளத்திற்குத் தள்ளுகின்றன. இந்தப் பாதாளத்தில் விழ அவளது சுய கௌரவமும்கூடக் காரணமாகிறது. மனிதனுள் தோன்றும் இந்தக் காதலுக்கு எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கும் என்ற கேள்வியை முன் வைக்கிறாள். “வருஷக் கணக்கா, எத்தனை வருஷம், எட்டு வருஷமா, இல்லை விபரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே ம்?” எளிதில் அவனால் பதில் சொல்லிவிட முடிவதில்லை. யமுனாவிடம் தோன்றிய வறண்ட புன்னகை குறித்துக் ‘கடந்த காலத்தின் சாம்பல் அந்தப் புன்னகையில் வெளிறிச் சிரித்தது’ என்று எழுதுகிறார். காதல் என்ற வார்த்தையின் அடியாழம் வரை யமுனாவின் கேள்வி துளைத்துச் செல்கிறது. மனித வாழ்வில் காதல் என்பதன் பொருளை – அதன் அடியில் புதைந்திருக்கும் காமத்தை, இந்நாவல் திறந்துகாட்டியதுபோல வேறொரு நாவலும் செய்யவில்லை. காதலின் பித்தாக இருந்தது, இருப்பது “இதற்குத்தான்” எனக் காதலின் உள்ளசையும் அதிசயத்தை மனிதச் சமூகத்தின் முன் யமுனா திறந்து காட்டுகிறாள். இது ஒரு தரிசனமாகப் பெருந்திறப்பாகத் திரை விலக்குகிறது. இதைக் க.நா.சு.வும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

யமுனாவின் இளமைப் பருவத்தையெல்லாம் கீறிக் கீறி ரத்தம் சுண்டி மறந்துபோன உடலாகக் காலம் மாற்றிவிட்ட பெரும் சோகத்தைச் சொல்கிறது இந்நாவல். இந்நாவலில் ஒளிவு மறைவற்ற பாத்திரமாக ஆரம்பம் முதல் இறுதிவரை பிசிறில்லாமல் யமுனாவை உருவாக்கிவிட்டார். இப்பாத்திரத்தை அதன் சகல துக்கங்களுடன் ஒரு படிமமாக இறுதிவரியில் எழுதுகிறார். “அவள் இளமை மறைவது போலிருந்தது. வெண்கலச் சிலைபோல் அவள் அசைவற்று நின்றது, மோகத்தைக் காலடியில் மிதிப்பதுபோல் இருந்தது” என எழுதுகிறார். காதல், காமம் இவற்றின் சூட்சுமத்தைக் கண்டடைந்த இடத்தில் நாவல் முடிந்து விட்டதாக ஒரு வாசக விமர்சனப் பார்வை உண்டு. தி.ஜா. ஒரு நாவலாசிரியராகத் தடுப்புச்சுவரை முட்டி உடைத்து நகர்கிறார். கலை மனம் கொண்டவன் காமத்தில் மட்டுமே மூழ்கிக் கிடக்கமாட்டான். காமம், உடல்பசி சார்ந்தது. அவன் ஆன்மாவின் பசி இசையாலானது. காமத்தில் மட்டுமே அவனால் திளைத்துக்கொண்டிருக்க முடியாது. தொடக்கத்திலிருந்தே இசை மீது கொண்ட பேரார்வமும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பும் விரிந்தபடியே இருக்கிறது. அவனது காதலுக்கு ஒருபடி மேலேயே இருப்பதை நுணுக்கமாக அறிய முடிகிறது. லட்சியக் கனவை நோக்கி – புதிய படைப்புக்கனவை நோக்கிப் பாய்கிறான். படைப்பு மனம் கொண்டவர்கள் தாம்பத்திய சுகத்திலே மட்டும் நிறைவுகொள்ளக் கூடியவர்கள் அல்லர். காமம் முக்கியம்தான். அதைவிடக் கலையின் அழைப்பு முக்கியம். அந்த லட்சியக்கனவை நோக்கிச் செலுத்துவது நாவலுக்குப் புதிய பெரிய பரிமாணத்தைத் தருகிறது.

நாவலில் இந்த லட்சியம் நோக்கிய பயணம் அவசர அவசரமாயிருக்கிறது. நாவலில் கூடிவந்த நிதானம் இந்த இறுதிப்பகுதியில் இருந்திருந்தால், இன்னும் அழகு கூடியிருக்கும். காமத்திலிருந்து கரையேறி உடனே பெருங்கனவை நோக்கிப் பாபு நகர்கிறான். காமம் உயிர்களின் அடிப்படை இயல்பு. நாவல் முழுக்க யமுனா யமுனா என்று அரற்றியவன், யமுனாவுடன் நான்கைந்து நாள் உறவுகொண்டதும் காமத்தில் நிறைவுகண்டு வடநாடு செல்வது நம்பும்படியாக இல்லை. பாபுவின் தேர்வு அற்புதமானது. அழகானது. யமுனாவுடனான உறவுவரை மிக நிதானமாக நகர்ந்த நாவல், அடுத்தநொடி- வேகவேகமாக முடிக்கவேண்டும் என்ற எல்லைக்குச் சென்றுவிடுகிறது. இல்லறத்தின் நிதானத்திலிருந்து அப்பாய்ச்சல் நிகழ்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்று அன்னா கரீனா. அதற்கு எவ்வகையிலும் தாழ்ந்ததாக மோகமுள்ளை நான் கருதவில்லை. அன்னா கரீனாவைவிட மொழியின் பேரழகு மோக முள்ளில்தான் கூடியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். அந்தந்த தேச சமூகப் பிரச்சனையின் பின்புலம் நாவலின் தீவிரத்தன்மையை வேறுபடுத்தலாம். வாழ்வின் ஆழ அகலங்களிலும் வித்தியாசப்படலாம். அதை எல்லாம் மீறி மோகமுள் முதன்மையான நாவலாக எனக்குப் படுகிறது. தமிழின் ஆகச்சிறந்த நாவலாக மோகமுள் என்றென்றும் இருக்கும் என்றே படுகிறது.

தஸ்தயேவ்ஸ்கியின் கரம்சோவ் சகோதரர்கள் நாவலில் வருவது தத்துவ உரையாடல். அது சிந்தனையிலிருந்து தோன்றுவது. தி.ஜா. நாவலில் வரும் உரையாடல் மனிதர் வாழ்க்கைப்பாடுகளிலிருந்தும் அனுபவச் சாரத்திலிருந்தும் உருவாவது. இதன் உச்ச எல்லை மோகமுள். இந்த உரையாடலில் கண்டடைந்த வாழ்வின் அடிப்படைகள் ஆழ்ந்த உண்மைகளாகத் தெரிக்கின்றன. ராஜத்தை வடநாட்டிற்கு ஏற்றிவிட்டு நடு இருளில் யமுனா வீட்டிற்கு வருகிறான். “இனிமே மடத்துத் தெருவுக்கு நடந்துபோகப் போறியா? இங்கேயே படுத்துக்கவேன். இரு, ஜமக்காளம், தலயாணி கொண்டாரேன்” மூன்று நான்கு பத்திகளில் விவரிக்க வேண்டியதை நான்கைந்து வார்த்தைகளிலேயே பேசிவிட நேர்கிறது. சுருக்கம் என்கிறோமே, அது இப்படி உரையாடலிலே நிகழ்த்துவதும்தான். என் வாசிப்பிற்கு எட்டியவரை உலகில் எந்த நாவலிலும் இல்லை. அறிவு சார்ந்த தத்துவ விவாதம் வேறு. சாதாரண மனிதர்களின் எண்ண வெளிப்பாடுகளில் நிகழும் உரையாடல் நுட்பம் என்பது வேறு. சொற்களின் வீச்சு புதுசாகத் தனித்தன்மையோடு வந்து விழுகின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இருக்கலாம். நாடகம் என்பதே 95-சதம் உரையாடல் சார்ந்த இலக்கிய வடிவம்தான். பாபுவைத் தேடிக்கொண்டு அறைக்கு வருகிறான் ராஜம். தங்கத்தின் கதை அவனுக்குத் தெரியும். “என் அறையில் உட்கார முடிந்ததா ராஜம்?” “ஏன்” “இல்ல கேட்கிறேன்” “உன் அறை என்ன தீமிதிக்குப் போட்ட நெருப்பா?”  “எனக்கு அப்படித்தானிருக்கிறது?” சின்னச் சின்ன தொடர்கள்; பதில் உடனே சொல்ல முடியாத, பதில் தெரிந்தும் தவிர்க்கும் இடங்களில் வரும் மௌனங்கள், மடக்கியடிக்கிற இடங்கள், என உரையாடலில் விளையாடித் தீர்க்கிறார். ராஜம் யமுனா வீட்டிற்கு வந்து செல்கிறான். அவனை, “அடக்கம் நிறைஞ்ச குடம்” என்கிறான் பாபு. “அழுத்தமாகக்கூட இருப்பான்போல் இருக்கு. ஆர அமரத்தான் எதையும் செய்வானா?”  “ஆமாம்” “உன் அவசரத்துக்கும் அவன் அவசரத்துக்கும் ரொம்பத் தூரம் இருக்கும் போலிருக்கேன்னு கேட்டேன்” இப்படி ஒரு குத்தல். “ஆமாம். பத்து வயசுக்கு மேல் அண்ணாந்து பார்க்கிறேன் என்று  நாலு முட்டாள் நினைக்கலாம்”  “அதையும்கூட நினைச்சுப் பாத்துட்டியா நீ” “எல்லாம் நீதான் எனக்கு” “அதாவது விச்சோடிச் செருப்பாத்தான் இருக்கா இன்னமும்?”  “…. …. ….”   “வயசு வயசு வயசு என்று உலகம் சிரிக்கும். என் பந்துக்கள் சிரிப்பார்கள். உன் பந்துக்கள் சிரிப்பார்கள். உன் சிநேகிதர்கள் சிரிப்பார்கள். இந்தச் சிரிப்பு எல்லாம் சேர்ந்து யாரையும் அழவச்சிடும்” இன்னொரு சந்திப்பு.  “சிபாரிசுக்கெல்லாம் ஆள் வச்சிருக்கப் போல” – யமுனா. “எனக்கு யார் சிபார்சும் தேவையில்லை. ராஜம் வந்தானா” “ம் வந்தான். சொன்னான்” “நீ என்ன சொன்ன”  “நான் பேசாம இருந்திட்டேன்” “ஓகோ… சரி. கொம்பில் புல்லக் கட்டி விடுகிற இந்த அவதியை என்னால் தாங்கிக்கொண்டிருக்க முடியவில்லை.

மனிதர்களின் பலம் பலவீனத்தை, எவ்வளவு தூரம் புகுந்து சென்று காண முடியுமோ அவ்வளவு தூரம்வரை கண்டவர் தி.ஜானகிராமன். எப்படியெல்லாம் அறமும் அறமின்மையும் ஆட்டங்காட்டுகிறது என்பதை, தமிழ் இந்திய மரபு உண்டாக்கிய அசாதாரணமான நம்பிக்கைகளை, அதன் சீரழிந்த நாற்றங்களை, பெண்களைப் போற்றும் மரபிலே தொற்றியிருக்கும் தீப்படிமங்களை, மனிதர் உண்டாக்கிய கலையின் உச்சபட்ச வீச்சை எட்டிப் பார்க்கத் துடிக்கும் உள்ளத்தை, கலையின் பேரால் வயிறு வளர்த்துச் சுகபோகத்தில் குளிர்காய்வோரை, காமத்தின் விழிப்புகளை, அவஸ்தைகளைக் காமக் கடும்புனல் வற்றிப்போன தடத்தை, காதலின் காமத் துயரக் குரலை, காமத்திற்கும் அப்பாலான நேசத்தை, சாதாரண மனிதர்களிடம் வெளிப்படும் அசாதாரணமான நேசிப்பை, பெரிய மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் சில்லறைத்தனத்தை, இளகிய மனங்கள் இறுகிப்போன கோலத்தை, செழிப்பின் கொண்டாட்டங்களை, வறுமைத் தத்தளிப்பை, நம்பிக்கைத் துரோகங்களை, நேசக்கரங்களை, புதிர்களை, அவை மேல் விழும் வெளிச்சங்களை மோகமுள் கலைநயத்தோடு அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதுவா பனிப் படலம்? இல்லை சு.ரா., இதுவே உச்சம்!

விநோதமான சிக்கலான காதல். கிட்டத்தட்டத் தீவிரமான முதிர்கன்னி மீதான ஒருதலைக்காதல். இளம்பிராயத்தில் ஆடவர்களிடம் உண்டாகிச் சொல்லப் படாமலேயே புதைந்து போகும் காதல், காமத்தைப் புனைவில் நிஜமாகப் பாபுவைக் கொண்டு தி.ஜா. மோதவிடுகிறார் மோகமுள் நாவலில். அந்தக் காதலால் பாபு சமூகத்தில் சந்திக்க நேரும் சிக்கல்கள் என்னென்ன விதத்தில் இருக்கும் என்பதில் அநாயசமாகப் புகுந்து போகிறார். பாபுவைக் காதல் ஆட்டிக் குலைக்கிறது. அவனது இசைக் கனவையும் சிதற அடிக்கிறது. காதலாலும் இசையாலும் தத்தளிக்கிறான். காதல் – இசை இதில் எந்த ஒன்றையும் அவனால் தூக்கி எறிய முடியவில்லை. இரண்டு உணர்ச்சிகளிலும் மூழ்குகிறான். ஒன்று கலை சம்பந்தமானது; ஒன்று உணர்வு சம்பந்தமானது. பிரிக்க முடியாத இரு அம்சங்களால் நிரம்பிய பாபு, இரண்டிலும் வெல்ல நினைக்கிறான். ரங்கண்ணா, ராஜம், பாலூர் ராமு, யமுனா, சங்கு, தங்கம், திருவல்லிக்கேணி வீட்டுக்காரர் எல்லாம் பாபுவின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இசைக்கோலங்களை மகத்தான வடிவங்களாகக் காண்கின்றனர். தனக்குள் ததும்பும் இசை பரிபூரண உச்சத்தை அடைந்தது அல்ல என்பதைப் பாபு உணர்கிறான். அதனை வசப்படுத்தத் தான் எவ்வளவோ தொலைவு செல்ல வேண்டியிருப்பதையும் உணர்கிறான். கைத்தட்டலுக்காகச் சில இசை வடிவங்களைக் கைவசப்படுத்திக்கொண்டு கச்சேரியில் புகழ்க்கொடி நாட்டுகிறவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறான். குடி கூத்து சல்லாபத்திற்கு இந்த இசையைப் பயன் படுத்திக்கொள்ளும் மூன்றாம்தரப் போலி இசைச் சக்கரவர்த்திகளைச் சாடுகிறான். நாதச் சுழற்றல் இல்லாத கற்பனையின் பிராந்தியங்களைத் தொடாத மனித உணர்ச்சிகளை, இசையின் சித்திரங்களாக வரைந்து பேரனுபவத்தை ஏற்படுத்தாத, பணத்திற்காக, புகழுக்காக அரைகுறை சரக்கை விற்பனை செய்யும் ஆட்களை நிராகரிக்கிறான். மனித உணர்ச்சியில் உள்முகமாகப் பாய்ந்து வேறொரு பிரபஞ்சத்தை இசை விரித்துக் காட்டுவது என்று நம்புகிறான். இதை அனுபவிக்க முடியும், பணத்தால் வாங்க முடியாது என்பது அவன் எண்ணம். தன் உழைப்பால் தனக்கு வாய்த்த அருளால் பிறரால் வசப்படுத்த முடியாத அந்த இடத்தைத் தூய உள்ளத்தால் அடையக் கனவு காண்கிறான். பாபுவின் லட்சியத்தை இப்படிச் சொல்லிச்  செல்லும்போது, என் உள்ளத்தில், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.வும் எழுந்து வருகிறான்.

ஜே.ஜே. போலி இலக்கியவாதிகளின் உலகை முற்றாக மறுத்து உன்னத இலக்கியம் குறித்துக் கனவு கண்டவன். நண்பன், காதலி, மூதோர், இளையோர், சொந்தம் என எதிலும் சமரசம் கொள்ளாது அவர்களது நூல்களை நிராகரிப்பவன். இவன் யார்? பாபு என்ற பாத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்ட மற்றொரு பாத்திரம். பாபுவிற்கு உன்னத இசை, ஜே.ஜேக்கு உன்னத இலக்கியம். மோகமுள் நாவல் குறித்துச் சுந்தர ராமசாமி எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விரிவாகப் பேசியதில்லை. அதாவது பேசவேண்டும் என்ற சூழலிருந்தும் அவர் பேசியதில்லை. கதைகளோடு ஒப்பிட்டு, ஒப்பிடுவதற்காக மட்டுமே ஒரே ஒரு வரி எழுதியிருக்கிறார். மற்றபடி எழுதியதில்லை. பாபு ஜே.ஜே. என்ற பரிமாணம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம் என்பது என் எண்ணம். பாபு இசை குறித்துப் பேசும் இடங்களிலெல்லாம் ஜே.ஜே.வின் மனதிற்கு அப்படியே அச்சு அசலாகப் பொருந்திப் போகிறது. மோகமுள் எழுதப்பட்டு 25-ஆண்டுக்குப் பின், ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ வருகிறது. சுந்தர ராமசாமியின் 55-ஆண்டுக்கால இலக்கியப் பணியில், ‘மோகமுள்’ குறித்துப் பேசாமலேயே இருந்தது ஆச்சரியமாக இல்லை? மோகமுள்ளில் இசை குறித்து வரும் ஒரு சில இடங்களை மட்டும் பார்ப்போம். ரங்கண்ணா, சொல்கிறார்.

“வித்தையோட ரகசியம் என்ன, உசிரு எது, நோக்கம் என்னன்னு யாராவது பாடறச்சே நெனச்சிண்டு பாடறானா? எந்த ஹைக்கோர்ட்டு ஜட்ஜ் தலை ஆட்டுறான்னு பாத்துக்கிட்டல்ல பாடுறான்.உருப்படுமா?” “பாடாமலே இருக்கலாம். மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளரப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்” “ஒன்றும் கேட்டிராத குழந்தை, ராகத்தின் அழகையா திடீரென்று தியானம் பண்ணும்? முன்னே பின்னே கேட்கிறவனுக்கு இந்த அனுபவமெல்லாம் எங்கே வரப்போகிறது.”  “கச்சேரியில யார் தலையாட்டறானு பார்த்துண்டேயிருக்கான். இதுக்கெல்லாம் அப்பீல் இல்லாது போயிடுத்து. இந்த ஆடம்பரங்கள்லாம் என்னத்துக்காகும்? கச்சேரியிலே எங்கேயோ ஒருமூலையிலே அனுமார் மாதிரி பரம ரஸிகனாக ஒருத்தன் உட்கார்ந்திண்டு இருப்பான். அவன்னா ஹைகோர்ட் ஜட்ஜ்! அவன் எங்கேயாவது மூஞ்சியைச் சிணுங்கப் போறானேன்னு மனசுல பயம் இருக்கணும். அவனைப் பார்த்தா பரதேசி மாதிரி இருக்கானோ, எப்படியிருக்கானோ, போலீஸ்காரன் உடுப்பைக் கழட்டி விட்டுத் துப்புத்தேட வந்திருக்காப்ல வந்திருப்பான். அதனாலே பரம ஜாக்கிரதையா இருக்கணும். நமக்கு எது சமயம்னு பட்டுதோ அதைப் பாடுறோம். நாம சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அதன் ரூபத்தை அறிஞ்சு ஆராதிச்சா எந்தப் பய ஒரு வார்த்தை சொல்ல முடியும்கறேன்” என்கிறார் ரங்கண்ணா. பேச்சு மொழியில் சொல்லப்பட்ட உயர்ந்த இசை பற்றிய இந்த எண்ணத்தைச் சுந்தர ராமசாமி மெருகு ஏற்றப்பட்ட அழகிய உரைநடையில் ஜே.ஜே.வில் காட்டுகிறார். இங்கு அமர்ந்திருக்கும் இசைக் குரங்கைத்தான், “யாரோ ஒருவனுக்காக” என்று சுந்தர ராமசாமியும் சொல்கிறார். புதுமைப்பித்தன், ‘வாழையடி வாழையாக வந்த ஒரு வாசகனுக்கு’ என்றதும் நினைவிற்கு வருகிறது. சலங்கை ஒலி கமல்ஹாசனும் நினைவிற்கு வருகிறார். மோகமுள் நாவலில் வரும் இசை குறித்த நுட்பமான பகுதிகளும் விமர்சனங்களும், ஜே.ஜே. சில குறிப்புகளில் இலக்கியம் குறித்த பார்வையாக விரிவுற்றுக் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளன. இதைச் சு.ரா. சொல்லவில்லை. நான் சொல்கிறேன். அவ்வளவுதான்.

பாபு சொல்கிறான். “நல்ல சங்கீதம் கேட்கிற போதெல்லாம் எனக்குத் துக்கம் துக்கமாக வருகிறது. நிம்மதி போயிடுறது” 1956இல் எழுதிய வரி. ஜானகிராமன் பணி ஓய்வு பெற்றுச் சென்னை வந்தபின் ஒரு கச்சேரிக்குச் செல்கிறார். மிகச்சிறந்த இசைக் கச்சேரி அது. கேட்டுக் கொண்டிருந்த ஜானகிராமனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. இந்தக் காட்சியைப் பத்திரிகையாளர் வாஸந்தி ஓரிடத்தில் வியந்து குறிப்பிட்டிருக்கிறார். சுந்தர ராமசாமி என்னவாக உருவாக விரும்பினார் என்பதின் மாற்று உருவம்தான் ஜே.ஜே. தி.ஜானகிராமன் என்னவாக உருவாக விரும்பினார் என்பதின் கனவு வடிவம்தான் பாபு. பாபு சொல்கிறான். “நினைத்ததை எல்லாம் குரல் வடிவில் மாற்ற வேண்டாமா? போரையும் களி ஆட்டத்தையும் காதலையும் வெறுப்பையும் அசட்டையையும் அசம்பாவத்தையும் என் குரலில் காண்பிக்க முடியுமா? சொல்லுக்கு இருக்கிற அத்தனை வேகங்களும் நுணுக்கமான தொனிகளும் குரலில் வருமா? போரை நினைத்துப் பாடும்போது போர்க்களத்தின் களரி அமளிப்பட வேண்டும். புத்திர சோகத்தை நினைத்துப் பாடுகையில் தந்தையரும் தாய்மார்களும் மக்களும் உளம் வெடிக்கவேண்டும். வாஞ்சையும் பக்தியும் தோல்வியும் வெற்றி எக்காளமும் தனிமையும் கூட்டமும் இரைச்சலும் மௌனமும் குரலாக வடியவேண்டும். உலகிலுள்ள எல்லாக் கலைகளும் சொல்லமுடியும் செய்திகளைக் குரல் சொல்லவேண்டும். மற்ற கலைகளின் ஆற்றல்கள் எல்லாம் குரலில் தேங்குமா? சிற்பமும் சித்திரமும் கதையும் நாவலும் கவிதையும் பேச்சும் தனிச்சிறப்பாகச் சொல்லும் செய்திகள் என் குரலில் ஒலிக்குமா? பாலூர் ராமுவின் பதவியை, நினைத்தால் ஒரு மாதத்தில் பிடித்துவிடலாம். இந்தச் சுமைதாங்கியின் மீது ஏறி உட்காருவதா என் லட்சியம்? ஒரு எம்பு எம்பினால் எட்டிவிடக்கூடிய இதுவா! நான் நினைக்கும் உயரத்திலிருந்து பார்க்கும்போது, இந்தச் சுமைதாங்கி கண்ணுக்குக்கூடத் தெரியாது. குப்பைக் குழியின் பள்ளமும் இதன் உயரமும் ஒன்றாகத்தான் இருக்கும். நீதிபதியின் தலைகளும் பத்திரிகைக்காரர்களின் தலைகளும் மற்ற எளிய தலைகளோடு தலைகளாக ஒருமட்டமாகத்தான் தெரியும்.அவ்வளவு உயரத்தில் இவை கண்ணில் கூடப் படாமலும் இருந்துவிடலாம். ராமு நீர் ஏன் கவலைப்படுகிறீர்? உம்மோடு நான் போட்டிக்கு வரவே மாட்டேன். குளிர்விட்டு நிம்மதியாக இருக்கலாம் நீர். அண்ணாவின் கண் பார்வையில் இத்தனை நாள் வளர்ந்துவிட்டு, இந்தச் சின்ன ஆசைகள் எனக்கு நிச்சயமாக வராது. ஆனால் உங்களுக்கு எப்படி வந்தது என்று நினைக்கும் போதுதான் புரியவில்லை. வெளிச்சமும் மேடையும் எனக்கு வேண்டியதில்லை” இந்த ஆவேசக்குரல் ஒரு பேரிலக்கியம் தன்னுள் கொண்டுள்ள படைப்புக்குரல் தானே! இத்தனை விதமான சாத்தியங்களையும் கொண்டு வருவதுதான் ஒரு மகத்தான இலக்கியம் – அதாவது மொழியில் படைப்பது என்று எளிதாகப் புரிய முடிகிறதுதானே! இதில் வரும் நீதிபதி யார்? சிட்டியாக இருக்குமா? இருக்கலாம். வேறு யாராகவும் இருக்கலாம். போகட்டும்.

இதில் வரும் பாலூர் ராமுவுக்கும் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் வரும் முல்லைக்கல்லுக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை. ஜெயகாந்தனையே முல்லைக்கல்லாக ஜே.ஜே.வில் பாவித்திருக்கிறார் என்ற பேச்செல்லாம் தமிழ் இலக்கியச் சூழலில் அடி பட்டதல்லவா. ராமுவின் உயரம் என்ன என்பது இந்நாவலில் பேசப்படுகிறது. சராசரிக்கும் கொஞ்சம் மேலே. பாபுவின் கனவு பிரமாண்டமானது. ஜே.ஜே.யில் முல்லைக்கல்லின் உயரம் பேசப்படுகிறது. ஜே.ஜே.யின் கனவு மகத்தானது.ஜே.ஜே., சிவகாமியின் சபதத்தைத் தாக்குவதுபோல, கச்சேரியிலே ஜவ்வாக இழுக்கிற பழைய தலைகளைப் பாபு சாடுகிறான். “இன்று பேகடை ராகம் எப்படியிருந்தது? நானா பாடினேன். ராகத்தின் அழகு அது. அதுவாகப் பாடிக்கொண்டது. புஷ்பம் மலர்வதுபோல் தன்னையே மலரவைத்துக் கொண்டது. இப்படியே நிரபாஸாரி நீதபஸா என்று மந்திரத்தில் மனனம் செய்து கொண்டேயிருந்தால்… திருப்பித் திருப்பி மந்த்ர ஸ்ஞ்சாரங்களை நாடிக்கொண்டே இருந்தது மனம்…”என்கிறார். ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில், சூரியனை நோக்கிப் பறவை பறப்பதும், கருகி விழுந்தபின் மற்றொரு பறவை மீண்டும் சூரியனை நோக்கிப் பறப்பதுமான ஒரு படிமம் வருகிறதல்லவா? மோகமுள்ளில் இப்படி வருகிறது. “ரிஷிகள் ரிஷிகள் என்று நாம் சொல்லுகிற பழைய விஞ்ஞானிகளும் சத்யதர்சிகளும் பெரியவர்களும் ஒரேசிந்தையாக, ஒரேவேலையாகத் தங்கள் மனசையும் புலன்களையும் உடலையும் அர்ப்பணம் செய்தார்கள். லட்சியத்தை அடைவதற்குள் அவர்கள் உடம்பு எலும்பும் தோலுமாக ஆகிவிட்டது. அப்படிச் செய்த பிறகுதான் லட்சியம் கைக்கு எட்டிற்று. இலையைச் சருகாகக் காயவைத்தால்தான் தீப்பிடிக்கும்”

இசையின் நுட்பங்கள், உன்னதங்கள் குறித்து இந்நாவலில் சொல்லப்பட்ட எல்லாம் மேலான இலக்கியத்திற்கும் அப்படியே பொருந்துகிறது. “வெளிச்சம் மாதிரி நல்ல எண்ணம் ஒன்று தோன்றினால், அதை வேணும் என்றே ஊதி அணைக்கக்கூடாது. ஒரே இருட்டுத்தான் மிஞ்சும்” இந்தக் குரல் எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா? அதாவது, இதன் சாயலை? கேட்கும் ஒவ்வொரு ஒலியும், நான் ஆற்றில் மிதக்கிற கட்டைபோல மிதக்கும். அறிவீனத்தைத்தான் இடித்துக் காட்டுகிறது. மணி, பட்சிகளின் ஓசை, அலை, கார் ஓசை, பாத்திரங்கள் விழும் ஓலம், மனிதக்குரல் – எல்லாம்தான். நாதத்தை ஏதோ பொழுதுபோக்காகச் சொக்கட்டான் ஆடும் தடித்தனத்தைத்தான் இடித்துக் காட்டுகிறது. ஆனால் பாட்டு என்று நினைக்கும்போது, என்னென்னமோ சந்தேகங்களும் ஆசைகளும் தோன்றுகின்றன. மனிதக்குரலில் எந்த ரசத்தையும், எந்தக் காட்சியையும் வெளிப்படுத்த முடியுமா? தோற்றுவிக்க முடியுமா? முடியவேண்டும். இதுவரை தோன்றிய உயிர்களின் எல்லை மனிதன். ஆகவே மற்ற உயிர்களின் ஆற்றல்கள் எல்லாம் மனிதனுக்குள் அடங்கிக் கிடக்கின்றன. இதுவரை தோன்றிய உயிர்களின் ஒலிகளெல்லாம் அவன் குரலில் இருக்கத்தான் இருக்கும் என்ற நிச்சயம் எனக்கு… எந்த உணர்ச்சியும் எந்தக் காட்சியும் அதற்கு வசமாக வேண்டும்” என்கிறான் பாபு.  சு.ரா., ‘இந்த மண்ணில் உன்னதங்கள் முளைக்காது என்கிறார்கள். இதே மண்ணில் மகத்தான காரியங்கள் கைகூடும் என்று நம்புகிறவன் நான்’ என்று சொல்லிய வசனம், என் நினைவிலிருந்து மேலெழுகிறது. பாபுவின் இசை குறித்த டைரிக் குறிப்புகளை வாசகர்கள் யாரேனும் வாசித்துள்ளார்களா எனத் தெரியவில்லை. நாம் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் வரும் டைரிக் குறிப்புகளை வாசித்ததோடு நின்றுவிட்டோம். அதற்குப் பல காலம் முன்பே, பாபு எழுதிய டைரிக் குறிப்புகளை மோகமுள் நாவலிலிருந்து மொழி பெயர்த்துத் தருகிறேன். ரங்கண்ணாவை, ஜே.ஜே.போல, ஒரு நாவல் வடிவில் கொண்டு வர ஏதுவாயிருக்கும் அது.

“கீர்த்தனை நோட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகப் புரட்ட ஆரம்பித்தான். ஆறேழு வருஷப் பாடங்கள், பெரும் பெரும் நோட்டுகளாகப் பதின்மூன்று நோட்டுகளில் அடைந்து கிடந்தன. ரங்கண்ணா அவ்வப்போது விளக்கிய ராக வடிவங்கள், சஞ்சாரங்கள், லயத்தைப் பற்றிய கருத்துக்கள் எல்லாவற்றையும் வேறு இரண்டு நோட்டுகளில் எழுதி வைத்திருந்தான். ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது ரங்கண்ணாவின் மேதைமையையும், வேறு சிந்தையில்லாமல் அவர் உழைத்த உழைப்பையும் தியானங்களையும்தான் அவனுக்குக் காணமுடிந்தது. அநேகமாக ஆறேழு வருஷங்களில் அவர் சொல்லிய முக்கியமான கருத்துக்கள் எல்லாம் அதில் இருந்தன. ஒருபக்கத்தில் அவர் சொன்ன சங்கீத சம்பந்தமான ஹாஸ்யம் ஒன்று எழுதி வைத்திருந்தது – இன்னொரு இடத்தில் ஒரு சங்கீத வித்வானைப் பற்றிய விமர்சனம். பாபுவுக்குச் சிரிப்பு வந்தது. விமர்சனம் இல்லை, வெசவு விமர்சனமே அந்த வெசவில் அடங்கியிருந்தது. வாயில் சொல்லமுடியாத வார்த்தைகள், இதை எப்படி, எப்பொழுது எழுதினோம்? எறும்பு மொய்ப்பதுபோல சிறு சிறு எழுத்துக்கள். இரண்டு நோட்டுகளுமாக சுமார் ஆயிரத்து ஐந்நூறு பக்கம் இருக்கும். குறிப்புகள் கணக்கில்லாமல் எழுதியிருந்தன. இவ்வளவும் நானா எழுதினேன்? ரங்கண்ணாவின் கதையை யாராவது எழுதுவதானால் எவ்வளவு உபயோகமாயிருக்கும் இத்தனை குறிப்புகளும்! ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது மண்ணிலிருந்து உயர உயர எழுந்தது அறிவு. ஒரு தபஸ்வியின், ஒரு விஞ்ஞானியின், சிந்தனைகள் எண்ணில்லாமல் மின்னும் நடுநிசி வானைப்போல மின்னிற்று, அந்த ஏழு வருஷ காலமும், எத்தனை ஹாஸ்யங்கள்! எத்தனை அபிப்பிராயங்கள்!”

இந்த டைரிக்குறிப்பு இருக்கட்டும். சுந்தர ராமசாமியின் மிகச்சிறந்த கட்டுரைகளுள் ஒன்று, ‘தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்’ கட்டுரை. கல்குதிரை தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழில் (1991) வந்தது. அதன் தொடக்கம், தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பாற்றலின் உச்சத்தைத் தொடும் வரிகள். “…இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தித் தஸ்தயேவ்ஸ்கி முன்செல்ல நாம் பின்தொடர்கிறோம். குகையின் வழிகள், திருப்பங்கள், ரகசியங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. எந்த இருள் திரை போல் கவிழ்ந்து நம் பார்வையை முடக்குகிறதோ, அதே இருள் வாகனமாகி அவனைச் சுமந்து செல்கிறது. ஆழம் இதற்கு மேலிருக்கமுடியாது என்று நாம் முடிவுகொள்ளுமிடத்தில் தொடங்குகிறது ஒரு கிடுகிடு பள்ளம். அந்தகாரம் இதற்குமேல் அடர்த்திகொள்ள இயலாது என்று நாம் உறுதி்கொள்ளுமிடத்தில் இருளின் ஆகக்கரிய போர்வை ஒன்று சுருள்விரியத் தொடங்குகிறது…” இது முன்னும் பின்னும், திறக்கத் திறக்க அறிய முடியாத ஒன்றாக ஆழத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறார். இந்த விவரணை, கிட்டத்தட்ட இதே நடையில், யமுனாவின் மனத்தை வைத்துச் சொல்லப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனாலிருக்கிறது. “யமுனா எதற்கும் அசையாதவள். அவள் உள்ளத்தில் புகுந்து, என்ன இருக்கிறது அங்கு என்று கண்டு பிடிக்கவேண்டும் என்று நானும் எட்டு வருஷமாக முயன்று வருகிறேன். முடியவில்லை. அவள் உள்ளத்தில் புகுந்து புரிந்துகொண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது மீண்டும் சுவரில் ஒரு திட்டிவாசல் தெரிகிறது. அங்கே நுழைந்தால் அதுவும் கடைசியில்லை என்று மீண்டும் ஒரு கதவு தென்படுகிறது. மீண்டும் அதில் போனால் மீண்டும் ஒரு கதவு…” பாபு யமுனாவை அறிய முயன்று முயன்று பார்க்கிறான். ஏதோ புரிவதுபோலத் தோன்றுகிறது. அடுத்த கணம் அந்தப் புரிதல் தவறாகப் போய்விடுகிறது. தொடர்ந்து ஒரு தேடல். யமுனா எளிதாகப் புரிந்துகொள்ள முடியாத திரையைப் போட்டுக் கொண்டேயிருக்கிறாள். புரிந்துக் கொள்ள முடியாத தன்மைதான் யமுனா என்று கண்டடைகிறான். யமுனா என்ற பெண் மட்டுமில்லை, மற்ற பெண்களும், மற்ற மனிதனும் தான் என்ற அறிதலை உணர்கிறான். இவ்விதம் தரிசனமே ஒரு புதிர்த்தன்மைதான் என்றும் தெரியவருகிறது. இங்குச் சொல்ல வந்தது இந்தத் தரிசனம் இல்லை. சுந்தர ராமசாமி தஸ்தயேவ்ஸ்கி குறித்துச் சொன்ன நடையில் காட்டும் புதிர்த்தன்மையும், தி.ஜா. பாபு வழியாகச் சொன்ன யமுனாவின் புதிர்த்தன்மை சார்ந்த நடையும் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறது! அணுகும்விதம்கூட ஒரே பாணிதான்.

சுந்தர ராமசாமி, ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தி.ஜானகிராமனின் சாதனைப் படைப்பாகக் கூறுவார். ‘மோகமுள்’ நாவலைச் சொல்லமாட்டார். சொல்லமாட்டார் என்றால், மோகமுள் நாவலைவிட ‘அம்மா வந்தாள்’ நாவல் உயர்ந்த நாவல் என்ற அர்த்தத்தில் அல்ல. ‘மோகமுள்’ளின் தீவிரமான பாதிப்பு ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் இருப்பதைத் தானே இனம் காட்டிவிடக்கூடாது என்ற கவனம்தான் காரணம். மற்றொன்று ‘அம்மா வந்தாள்’ நாவல் உலகம் போன்ற ஒன்றுகூடச் சுந்தர ராமசாமியிடம் இல்லை என்பது. சு.ரா.வின் எழுத்திற்குச் சம்பந்தமே இல்லாத ஒன்று ‘அம்மா வந்தாள்’ என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும் என்பதால், அந்நாவலைச் சாகித்ய அகாதமி தவறவிட்ட காலத்தைச் சுட்டுகிறார். தனிப்பட்ட உரையாடலில், ‘தலைமுறைகள்’ நாவலைவிடப் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல்தான் நீல.பத்மநாபனின் தலைசிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறார். ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலைவிடப் பன்மடங்கு உயர்ந்து நிற்கும் ‘மோகமுள்’ பற்றி ஏதும் பேசாது இருந்ததற்கு அதன் தாக்கம் ஜே.ஜே.வில் இருப்பதுதான் காரணம். பாலூர் ராமு, விமர்சனத்துறைக்கு வரும் தடாலடித் தங்கப்பாக்களில் ஒருவரைப் பற்றிச் “சங்கீதத்தைப் பற்றி இந்த மாதிரி அபிப்பிராயத்தை இலவசமாகக் கொடுக்கிற பிரபுக்களில் இவர் ஒருவர். அபிப்பிராயம் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்று ஆகிவிட்ட காலம் இது. சொல்லுகிற மண்டை சூன்யமா, கனமா, சரக்கு உள்ளதா என்று நாம் தெரிந்துகொண்டு, வாங்குறதையோ தள்ளுகிறதையோ செய்யணும்” என்கிறார். சுப்புடு பற்றியா? சுப்புடுவுக்கு முன்னான சுப்புடு பற்றியா என்று தெரியவில்லை. இசையுலகில் இருப்பவர்களுக்குத் தெரியலாம். ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பட்ட பேரிலக்கியங்கள், அவ்விலக்கியங்கள் எழுதப்பட்டபின் பெரிய தாக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்தும். ‘பொய்த்தேவு’ (1944) முக்கிய நாவல்தான். அது எழுத்தாளர்களின் இலக்கியப்போக்கில் பெரிய செல்வாக்கைச் செலுத்தியதாகக் கூற முடியவில்லை. வட்டார நாவல்களில் ‘நாகம்மாள்’ (1944) சிறந்த நாவல்தான். ஆனால், அது எழுத்தாளரிடையே எவ்விதம் பாதிப்பை உண்டாக்கியது எனக் கூறமுடியவில்லை. இதோடு சங்கரராமின் ‘மண்ணாசை’ (1941), ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் ‘இதயநாதம்’ (1952) ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்கலாம். இவையெல்லாம் ‘மோகமுள்’ நாவலுக்கு முன் எழுதப்பட்டவை. நாவல் கலை குறித்துத் தீவிர வாசகர்களால் தமிழ்ச் சூழலில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டவையாக மேலும் சில நாவல்கள் இருக்கலாம். ஆனால் மோகமுள் வந்தபின் எழுத்தாளர்கள் பெரும் தாக்கத்திற்குள்ளானார்கள் என்பது படிக்கும் போது எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் தெரியவருகிறது. உண்மையில் இந்நாவல், சுந்தர ராமசாமியை மிகத்தீவிரமாகப் பாதித்திருக்கிறது. அவர் கூறவில்லையானாலும், அவரது நாவல் சொல்கிறது.அது குறையோ நிறையோ இல்லை. தனக்குமுன் வெளிவந்த சிறந்த படைப்பால் அதன் பின்வந்த எழுத்தாளன் தப்பமுடியாதபடி அதன் தாக்கத்திற்கு உள்ளாவான். அது ‘மோகமுள்’ வந்தபின் நிகழ்ந்ததுபோல வேறொரு படைப்பிற்கும் நேரவில்லை. தாக்கம், பாதிப்பு, ஒரேவிதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அந்தந்த எழுத்தாளனின் பார்வை, மனவார்ப்பு, சூசகத்திற்கு ஏற்ப இப்படைப்பிலிருந்து பெரும் தாக்கம் பெற்றிருக்கிறார்கள். பலவித நுட்பங்களைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி போல ஜெயகாந்தனும் ‘மோகமுள்’ளால் நிரம்பத் தாக்கம் பெற்றிருக்கிறார். ஆனால் அவர் தன் பார்வையால் வேறொன்றாகத் தந்திருக்கிறார். முக்கியமாகப் பிராமணர்களின் குடும்பக் கதைகளை எழுதத் தி.ஜானகிராமனின் ஆக்கங்களை நிரம்பவே வாசித்திருக்கிறார். அவர் சொல்லவில்லை. மோகமுள் நாவலில் வரும் புல்லுக்கட்டுக்காரியின் அசலான மனம் படைத்தவள்தான் ஜெயகாந்தனின் ‘இருளைத் தேடி’ கதையில் வரும் நாயகி. ‘அம்மா வந்தாள்’ நாவலில் வரும் ‘இந்து’, யுகசந்தியில் வரும் கௌரிப்பாட்டியின் பேத்தி. அம்மா வந்தாளில் ‘இந்துவுக்கு ஓர் அத்தை உண்டு. பிரமிள் ஒரு பேட்டியில் சு.ரா.விற்குப் பதில் சொல்லும் நோக்கில், வன்முறைக்கு எதிர்ப்பதம் ‘அகிம்சை’ என்பது தவறு. மென்முறை என்பதே சரி. இச்சொல்லைத் தெருவோரம் இட்லி சுட்டு விற்கும் பாட்டியிடம் பெற்றேன் என்கிறார். மோகமுள் நாவலில், பெண்ணைப் பற்றிய ஞானத்தைத் தெருவில் சென்ற புல்லுக்கட்டுக்காரியிடம் பெற்றேன் என்கிறான் ராஜம். இன்னும் சொல்கிறான். “மழைக்காக ஒதுங்கினா, இப்படிச் செய்யலாமான்னு சிரிச்சாளே.அந்தச் சிரிப்பு.அவ சிரிச்சாப்போல இல்லை. எனக்கு யாரோ உடம்பு இல்லாத ஒன்னு சிரிச்சாப்போல இருந்தது. வெறுமே அந்தச் சிரிப்பு கேட்டுண்டேயிருக்கும் எனக்கு.”  ராஜமாக இந்நாவலில் வருபவனும் எம்.வி.வி.யின் இன்னொரு சாயலே என்றும் வாசிக்கலாம். எம்.வி.வி., ஜானகிராமனின் உற்ற நண்பர். அவரது ‘காதுகள்’ நாவலில் வரும் அமானுசிய ஆசைக்கு மூலம் இது. பாபு இழவு விசாரிக்க வருகிறான். சாப்பிடாமல் இரவில் படுக்கிறான். பசிக்கிறது. “மல்லாந்து படுத்தால் பசி இன்னும் கிளருகிறது! இப்படி ஒருக்களித்துப் படுத்தால்? காலை இப்படி நாற்காலியைப்போல மடக்கிக் கொண்டால்? – பசி சற்றுத் தணிந்த மாதிரி இருக்கிறது. தணியவில்லை. எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்” பசியை அடக்க, அந்தச் சிந்தனையை மாற்ற என்னென்னவோ செய்கிறான். ச.தமிழ்ச்செல்வன், ‘பாவனைகள்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். ஒரு தொகுப்பின் முதல்கதை (ராஜராஜன் பதிப்பகம்). ஒரு சிறுவன் பசியை அடக்க எப்படியெப்படியோ அமர்வதாகக் கதை தொடங்கும். தி.ஜா. இங்கு விவரித்தது போலவேயிருக்கும். பசி அனுபவத்தை இருவரும் ஒன்றுபோலவே எழுதி இருப்பது சற்று வியப்பாகவே இருக்கிறது. அனுபவம் அப்படி எழுத வைத்திருக்கலாம். மோகமுள்ளின் நடை, தாக்கம் நம்மை அறியாமலேயே ஆழப் புதைந்திருக்கலாம். அனுமானம் அனுபவத்தைப் பிடித்திருக்கலாம். என்றாலும், தமிழ்ச்செல்வன் ஞாபகம் வருகிறார். வண்ணதாசனும் அப்படியே தி.ஜா.விடமிருந்து கைமாற்றிப் பெற்றுக்கொண்டுள்ளார். தம் மானசீக முன்னோடியான கு.ப.ரா.வை, ஜானகிராமன் ஓரிடத்தில் சுட்டியிருக்கிறார். அவருக்குக்கூட இவரின் நுட்பம் இவ்வளவு விரிவாகக் கூடிவரவில்லை.

ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இணைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை. அதன் அடிமரமும் பட்டையும் நிறமும் வைரமும் வேறானவை. பூமிக்குள் புதைந்திருக்கும் பின்னலும் நீர் தேடிச்சென்ற அதன் நாக்குகளும் வேறானவை. நாம் ஒரு ஐரோப்பிய மூடியைக் கொண்டு மூடிப்பார்ப்பதோ, அவர்களின் பெட்டியில் தூக்கிவைத்துப் பார்த்து எடைபோடுவதோ இலக்கியத்தின் தகுதியை நிர்ணயிப்பதாகாது. காம்யூவின் ‘அந்நியன்’, ஐரோப்பியச் சமூகத்தில், மனித உறவுத்தளத்தில் உணர்வுரீதியாக அந்நியமாகிப் போன நவீன மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. அது அதன் வடிவத்திற்காகப் பேசப்படுவதில்லை. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு மேலைநாட்டுக் காப்பிய மூடியைப் போட்டுப் பேச முடியுமா? கம்பராமாயணம்? மகாபாரதம்? அவை அவற்றிற்கேயான எளிய வடிவத்தில் இருக்கின்றன.

தி.ஜா எழுதுகிறார். ‘சங்கு எழுதுகிற தானா, கானா, ஜானா, நம்பர் நாலு, நானா, டானா எல்லாம் தனி ராயசமும் முதுமையும் பெற்றுக் கம்பீரமாக இருக்கும். சுஜாதா, வண்ணதாசன் எழுத்துகளை நடனமாடவிட்டதற்கு முன்னோடி தி.ஜா. என்பதும் தெரிகிறது. ரங்கண்ணா தியானத்தில் மூழ்கியிருந்த அந்தக் காட்சியைக் “கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தைவிட இனிமைன்னு இங்கிலீஷில்  சொல்றாளே, அந்த மாதிரி கேட்காத சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாரோ என்னவோ!” என்று ராஜம் கூறுகிறான். இதை வண்ணதாசன் ஒரு கவிதையாகவே தந்திருக்கிறார். “விடிகிறபோது எழுத உட்கார்ந்தேன், வெயில் வந்துவிட்டது, எழுதிய வரிகளைவிட, அழகாக இருக்கிறது, எழுதாத வரியின் நிழல்” என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். இப்படி எத்தனையோ விதமாக மோகமுள் எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாதிக்கிறது. பாதித்திருக்கிறது என்பதற்கு முழு அர்த்தம் சொல்ல வேண்டுமானால், மோகமுள் தான் முதல் இடத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். மோகமுள்ளைப் படிக்காமலேகூட எழுத்தாளர்கள் அதேபோல் சிந்தித்திருக்கவும், அவர்கள் நடை உருவாகியிருக்கவும் கூடும் ஆனால் அந்தச் சுயமான வெளிப்பாடும் முன்பே மோகமுள்ளில் ஜானகிராமனால் எழுதப்பட்டிருக்கிறது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜூ போன்றோர்களைப் பாதித்திருக்கிறது. ஒரு மொழியின் முக்கியமான படைப்பு என்பது, அது படைக்கப்பட்டபின் நேருகிற பாதிப்பைக் கொண்டுதான் அளவிடப்படுகிறது. அவ்வகையில் மோகமுள்ளுக்கு இணையாக மற்றொரு நாவலை, என் வாசிப்புக்குப்பட்ட வகையில் கூற முடியவில்லை. மோகமுள், இலக்கிய வரலாற்றிலே ஒரு திருப்புமுனை என்பது என் எண்ணம்.


-சு.வேணுகோபால்

குறிப்பு: இந்தக் கட்டுரை ‘கல்யாணராமன்’ தொகுக்கும் “ஜானகிராமம்’” என்ற தி.ஜானகிராமன் பற்றிய ‘படைப்பாவணப் பெருந்தொகுதி’க்காக எழுதப்பட்டது.


 

Previous article‘நளபாகம்’ – கலவை ருசி!
Next articleகுரு
சு வேணுகோபால்
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர்.கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.