மியாசாகி: மாய நிலவெளிகளின் கதைசொல்லி


Life is suffering. It is hard. The world is cursed, people are cursed, but still, we wish to live.

-Princess Mononoke (1997, dir. Hayao Miyazaki)

ஃபேன்டஸி படைப்புகள் பெரும்பாலும் ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் கட்டி எழுப்பப் படுகின்றன. அந்த வரலாற்றுப் பின்புலமே, ஃபேன்டஸிக்கு ஒரு ஆதாரத்தன்மையை வழங்குகிறது. ஆனால், வரலாற்றைப் பேசுவதுபோல் தெரிந்தாலும், ஒரு நல்ல ஃபேன்டஸி படைப்பு, தற்காலச் சூழல், வாழ்க்கைமுறை, மனித சமூகத்தின் வளர்ச்சி அல்லது தேக்கம் குறித்தான விவாதங்களை எழுப்பும். மேலும், அது தனக்கு விதிக்கப்பட்ட குணாதிசயங்களை மீறும்போதுதான், அந்த விவாதம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. புனைவின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டு, அதே சமயம், எந்த அடையாளத்துக்குள்ளும் கட்டுப்படாமல் பயணிக்கும் வல்லமை ஃபேன்டஸிக்கு இருக்கிறது.

ஜப்பானிய சினிமாவின் முக்கியமான அங்கமான ‘அனிமே’ என்னும் இயங்குபடங்கள், இவ்வகையான ஃபேன்டஸிகள் அடிப்படையில், பல நல்ல படைப்புகளைக் கொடுத்திருக்கின்றன. அனிமே, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு கார்ட்டூன்கள் என்பதைத் தாண்டி, எல்லோருக்குமான படங்கள் என்றே அறியப்படுகின்றன. ‘மாங்கா’ காமிக்ஸ்களை ஆதாரமாகக் கொண்டு இயக்கப்படும் படங்கள், நேரடியாக அனிமேவாகும் படங்கள் எனப் பலவகையாய் இயக்கப்படுகின்றன. ‘ஹென்டாய்’ எனப்படும் ஆபாச கார்ட்டூன் படங்கள், பிற அனிமே படங்களைக் காட்டிலும் உலகளவில் பிரபலமானவை என்றாலும், சினிமா ரசிகர்கள் அனிமே படங்கள், சீரீஸ்களை பெரிதும் கொண்டாடுகிறார்கள்.

தொண்ணூறுகளின் இறுதியில், சீரியஸ் ரக அனிமே படங்கள் கொண்டுவந்தவர்களுள் மிக முக்கியமானவர் ஹாயாவ் மியாசாகி. ஜப்பானிய சினிமாவின் பிற ஜாம்பவான்களான அகிரா குரோசாவா (Akira Kurosawa), யாசுஜிரோ ஓசு (Yasujiro Ozu) போன்றோருக்குச் சமமாகக் கருதப்படுகிறவர். இவருடைய ஆரம்ப காலகட்டப் படைப்புகளில் ஐரோப்பிய இலக்கியம் மற்றும் சினிமாவின் பாதிப்புகளை நிறைய காணமுடியும். தம் நாடான ஜப்பானின் கதைகளையும், மக்களையும் இவர் உற்றுநோக்கத் தொடங்கியது பின்னர் வந்த படைப்புகளில் தான். தொழில்நுட்ப ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முதன்முதலில் அனிமே திரைப்படங்களை அணுகியவர் இவரே. இசாவ் டாகாஹாடா (Isao Takahata) என்னும் மற்றொரு அனிமே திரைப்பட இயக்குனருடன் சேர்ந்து மியாசாகி தொடங்கிய ஸ்டூடியோ ஜிபூரி (Studio Ghibli) மிகச்சிறந்த அனிமே படங்கள் தயாரித்து வெளியிடும் நிறுவனமாக இருக்கிறது. ஜப்பானியர்களுக்கு மட்டுமின்றி, அனிமேவை எல்லோருக்குமானதாக ஆக்கியதில் இவருக்கு பெரும் பங்குண்டு.

1997-ஆம் ஆண்டு வெளிவந்த Princess Mononoke தான் மியாசாகியின் படைப்புகளில் உலகளவில் கவனிக்கப்பட்ட முதல் படைப்பு. இதற்கு முன்பும் பின்பும் பல நல்ல அனிமே படங்கள் இயக்கி இருந்தாலும், முக்கியமாக 2001-ல் Spirited Away என்னும் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கியிருந்தாலுமே கூட, Princess Mononoke தான் அனிமே படங்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமான படமாக விளங்குகிறது. வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஃபேன்டஸி என்று வகைப்படுத்தப் பட்டிருக்கும் இந்தப் படம், மியாசாகியின் புனைவுவெளிக்கு ஒரு தனித்துவத்தை அளித்தது. இதைத் துணையாகக் கொண்டு, மியாசாகியின் மாய நிலவெளிகளில் நாம் பயணிக்கலாம்.

 

கதை ஒரு புள்ளியில் தொடங்கி, வேறொரு புள்ளிக்குச் சென்று, அங்கிருந்து ஒரு கிளைக்கதைத் தொடங்கி நடந்து, இறுதியில் எல்லாம் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட வடிவம் பெறும் கதைசொல்லல் முறையைத் தான் மியாசாகி நிறைய முறை கையாண்டிருக்கிறார். குறிப்பாக, Spirited Away-ல். ஒரு குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு பயணத்தைத் தொடங்கும் முக்கிய கதாபாத்திரம் தன்னுடைய நிலவெளியிலிருந்து ஒரு நிகர் மாயவெளிக்குள் நுழைகிறது. அந்த மாய உலகில், அது சந்திக்கும் விசித்திர நிகழ்வுகளே கதையின் மையமாக அமைகிறது.

Princess Mononoke-வில், அஷிதாகா என்னும் ஓர் இளவரசன், கோபாவேசம் கொண்டு கிராமத்தில் புகுந்த ஒரு காட்டுப்பன்றி demon god-உடன் போரிடுகிறான். அவன் வெற்றி பெற்றாலும், அந்தக் காட்டுப்பன்றி தெய்வத்தின் சாபம் அவனைப் பிடித்துக்கொள்கிறது. அவனுடைய கை இதன் காரணமாய் பழுப்படையத் தொடங்குகின்றது. அவர்கள் இனக்குழுவின் தலைமை மூதாட்டி, அவன் பிழைக்க வழியில்லை என்றும், அந்தக் காட்டுப்பன்றி தெய்வத்தின் வெறிக்குக் காரணம் அதன் உடலிலிருந்து கிடைத்த ஒரு செயற்கையான பொருள்தான் என்றும் கூறி, மேற்கு நோக்கிப் பயணம் செய்து அது என்ன பொருள் என்று தெரிந்துகொண்டால் அவனுடைய சாபத்திற்கு ஒரு விமோசனம் கிடைக்கலாம் என்று யோசனை சொல்கிறார். இப்படியாக அஷிதாகாவின் பயணம் தொடங்குகிறது.

பயணத்தின் போது அவன் பல மனிதர்களைப் பார்க்கிறான். அதிகார மதம் பிடித்து கிராம மக்களைத் துன்புறுத்தும் ஒரு சாமுராய் கூட்டத்தோடு சண்டையிடுகிறான். அங்கு ஜிக்கோபோ என்பவர் அவனுக்கு ஷிஷிகாமி தெய்வத்தைப் பற்றிக் கூறி, அது வசிக்கும் காட்டிற்குச் சென்றால் சாபம் போக்கும் வழி பற்றித் தெரியவரலாம் என்கிறார். இப்போது அவனுக்கு இருபெரும் இனக்குழுக்கள் அறிமுகமாகின்றன. முதலில், ஓநாய்களுடன் வாழும், தன்னை ஓநாயாகவே கருதிக்கொண்டு மனிதர்களை வெறுக்கும் ‘சான்’ (இளவரசி மோனோனோகே). அடுத்து, தம் மக்களின் நலத்தைக் கருத்தில்கொண்டு, விஞ்ஞான முன்னேற்றத்தை அரவணைக்கும் லேடி எபோஷி. இவர் தலைமையில் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம உரிமை வழங்கப்படுகிறது. தொழுநோய் காரணமாகப் பிறரால் ஒதுக்கப்பட்டவர்களுக்குக்கூட துப்பாக்கிகள் செய்யும் பணி வழங்கி அவர்களையும் காப்பாற்றி வருகிறார். லேடி எபோஷியோடு பேசி முன்னர் வந்த காட்டுப்பன்றியின் வெறிக்குக் காரணம், அந்த செயற்கைப் பொருள், அவரின் இரும்பு துப்பாக்கி குண்டுகளே என்று அறிந்து அவன் அதிர்ச்சியடைகிறான்.

பிறகு இளவரசி மோனோனோகேவிற்கும் லேடி எபோஷி குழுவிற்கும் சண்டை நடக்கிறது. இளவரசி, ஒரு காட்டின் பிரதிநிதியாக, இயற்கையின் பிரதிநிதியாகவும், லேடி எபோஷி, தம் வளர்ச்சிக்காக இயற்கையை அழிக்கும் மனிதர்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். இந்தச் சண்டையில் குறுக்கிட்டு அஷிதாகா காயமடைகிறான். இருந்தாலும், இளவரசியைக் காப்பாற்றும் பொருட்டு, அஷிதாகா மயக்கமடைந்த அவளைத் தோளில் போட்டுக்கொண்டு காட்டுக்கு வந்துவிடுகிறான். அங்கே மயக்கம் தெளிந்த இளவரசி அவன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொல்ல எத்தனிக்கையில், ‘நீ மிகவும் அழகாக இருக்கிறாய்’, என்று கூறுகிறான்.

அப்போது காட்டின் மான் தெய்வமான ஷிஷிகாமி அவனைக் காயத்திலிருந்து குணப்படுத்துகிறது.  ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தி இரண்டும் வாய்க்கப்பெற்ற இந்த மான் தெய்வம் இயற்கையின் உருவகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மன்னனின் கைக்கூலியாகச் செயல்படும் ஜிகோபோ, சாகாவரம் தரும் என்று நம்பப்படும் அந்த மான் தெய்வத்தின் தலையைக் கொய்துவர லேடி எபோஷியின் உதவியை நாடுகிறார். லேடி எபோஷி – ஜிகோபோ அணி மான் தெய்வத்தின் தலையை வெட்டிவிட, அதுவரை ஆக்கும் சக்தியாக இருந்த அது, பேருருவம் பெற்று தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அழிக்கும் சக்தியாகிறது. இளவரசியின் ஓநாய் தாய் மோரோ உதவியுடனும், காட்டின் பிற தெய்வங்கள் உதவியுடனும் மான் தெய்வத்தின் தலை, மிகப்பெரும் போருக்குப் பிறகு, மீண்டும் பொருத்தப்படுகிறது.

மேலோட்டமாகக் கதையைப் பார்க்கும்போது மிகவும் சாதாரணமான கதையாகத் தோன்றினாலும், மியாசாகியின் ஜீனியஸ் கதையின் உள்ளடுக்குகளில் ஒளிந்திருக்கிறது. படத்தில் அஷிதாகா இரு பெரும் உலகங்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறான். திரையில் அதிக இடத்தை அஷிதாகா ஆக்கிரமித்திருந்தாலும், கதையின் தலைப்பை நாம் சானுடைய பாத்திரப் படைப்போடு பொருத்திப் பார்க்கும்போதுதான் அது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆணாதிக்கம் நிறைந்த சமூகமாக அடையாளப்படுத்தப்படும் ஜப்பானிய சமூகத்தின் அதிகாரப் படிநிலைகளைத் தகர்க்கிறார் மியாசாகி. லேடி எபோஷியின் பாத்திரத்தின் மூலம் முதல் படிநிலை தகர்க்கப்படுகிறது. தன் மக்களின் தேவைக்காக, இரும்பு தொழிலுக்காக, வாழ்வாதாரத்திற்காகக் காட்டை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதே சமயம், சாமுராய்களால் வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை. எனவே, லேடி எபோஷியின் பாத்திரத்தின் nuance தான் அவரை மிகச்சிறந்த பாத்திரப் படைப்புகளுள் ஒன்றாக்குகிறது.

அடுத்து, இளவரசி மோனோனோகேவின் பாத்திரம். தன் காட்டையும் அது சார்ந்த இயற்கையையும் காப்பாற்றப் போராடும் பாத்திரம். கணவனுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று மறைந்துகொள்ளும் பெண் பாத்திரங்கள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜப்பானிய சினிமாவில், தன்னுடைய நோக்கத்திற்காகவும், தன்னைச் சேர்ந்தவர்களைக் காப்பதற்காகவும் போராடும் பெண் பாத்திரங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. பெண்ணியம் மட்டுமின்றி, தற்போதைய பல்கலைக்கழகங்களில் பெரிதாக விவாதிக்கப்படும் சூழலியல் திறனாய்வுகள் சார்ந்த விவாதங்களையும் முன்னெடுக்கிறது Princess Mononoke. ஓநாய்களோடு தனித்து வாழும் சானுக்கு தன் காட்டினைப் பற்றிய பிரக்ஞை எப்போதும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இதனை நாம் ஒரு trope-ஆக எடுத்துக்கொண்டால், சானைப் போன்ற, விலங்குகளுடன் வாழ்ந்த பிற மனிதர்களான ‘ஆங்கிலேயன்’ டார்சானுக்கோ, ‘இந்தியன்’ மௌக்ளிக்கோ, தம் காடு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. அவர்களின் கதைகள் பிற மனிதர்கள் அல்லது விலங்குகளுடனான சந்திப்பைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியுமே பெரும்பாலும் பேசுகின்றன. இளவரசி மோனோனோகேவிற்கோ பிற மனிதர்களைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. மேலும், மியாசாகியின் இளவரசி, வால்ட் டிஸ்னியின் ‘லாலா லல லாலா’ இளவரசி கிடையாது. ரொமான்டிஸைஸ் செய்யப்படாத, தன்னைச் சார்ந்தவர்களைக் காக்கும் பொறுப்பேற்றுக்கொண்ட இளவரசி.   

இந்த இடத்தில், நாம் குரோசாவாவின் சாமுராய்களையும், மியாசாகியின் சாமுராய்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். குரோசாவாவின் Seven Samurai (1954)-யில் வரும் ஏழு சாமுராய்களும், சாமுராய் கூட்டத்திலேயே விதிவிலக்கான சாமுராய்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. கிராமத்தினரின் பரிதாப நிலையைக் கேள்விப்பட்டு அவர்களைக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற வருகிறார்கள். சாமுராய்களின் உதவி தேவைப்படுவது நிதர்சனம்தான் என்றாலும், கிராம மக்களுக்கு அவர்கள் மீது ஒரு பயம் இருப்பது காண்பிக்கப்படுகிறது. ஒருவர் தன் பெண்ணை அவர்களிடமிருந்து ‘காப்பாற்றுவதற்காக’, அவள் தலைமுடியை வெட்டி, பையன் வேடம் போட்டுவிடுகிறார். மேலும், அங்கே ஏற்கனவே வந்து அட்டூழியம் செய்த பிற சாமுராய்களின் தடங்களும் இருக்கின்றன. ஆனால் படத்தில், ஏழு சாமுராய்களும் கிராமத்தினருக்காகக் கொள்ளையர்களிடம் சண்டை போடுகிறார்கள். குரோசாவா விதிவிலக்கு சாமுராய்களைப் பற்றிப் பேசும்போது, மியாசாகி பெரும்பான்மை சாமுராய்களைப் பற்றிப் பேசுகிறார். இந்தப் படத்தில் வரும் சாமுராய்கள் அதிகார மமதையில் கிராமத்தினரை மட்டுமின்றி, லேடி எபோஷியின் குழுவினரையும் துன்புறுத்துகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் இந்தக் கதையில் மியாசாகியின் மேற்கண்ட அரசியல் குறிப்பிடத்தக்கது. இதைக் குறித்து பிரபல அனிமே பட விமர்சகர் சூசன் நேப்பியர் (Susan Napier) இப்படி எழுதுகிறார்:

[…] Miyazaki’s ability to defamiliarize long-held conventions is one of his most striking talents. He subverts many Japanese traditions in Princess Mononoke—the sacredness of the emperor, the nobility of the samurai—but his most impressive piece of subversion is his incorporation of so many dominant female characters. (Miyazakiworld, 2018)

இத்தகைய அரசியலை மியாசாகி ஃபேன்டஸியின் துணைகொண்டு நிகழ்த்துகிறார். இதை மனிதரல்லாத உயிரினங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை வைத்துப் புரிந்துகொள்ளலாம். சானின் தாய் ஓநாயாக வரும் ‘மோரோ’, காட்டுப்பன்றியின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஒக்கோட்டோ, மான் தெய்வம், என இயற்கையின் பல்வேறு வடிவங்களே இயற்கைக்குத் துணையாக நிற்கின்றன. குறிப்பாக, மான் தெய்வம் பகலில் மான் உருவமும், இரவில் பேருருவமாக மாறும் காட்சி, அனிமே படங்கள் வரலாற்றிலே மிகச்சிறப்பான கிராபிக்ஸ்களுள் ஒன்று. அடுத்ததாக, காடு ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் கொடோமா என்னும் விசித்திரப் பிறவிகள்.

படத்தின் இறுதியில், லேடி எபோஷி ஒரு ஓநாயால் காப்பாற்றப்படுகிறார். அஷிதாகாவின் கைப் பழுப்பு மறையத் தொடங்குகிறது. ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் உன் இனத்தை என்னால் மன்னிக்கமுடியாது’, என்று சொல்லிவிட்டு இளவரசி அஷிதாகாவைப் பிரிந்துவிடுகிறாள். மான் தெய்வத்தின் தலை மீண்டும் பொருத்தப்பட்டதும், அழிந்துபோன காட்டில் மீண்டும் செடிகள் வளரத்தொடங்குகின்றன. ஆனால், படத்தில் முதலில் கொத்துக்கொத்தாய் நிறைய இருந்த கொடோமாக்கள், இறுதியில் ஒன்றிரண்டாகச் சுருங்கிவிடுகின்றன. இரண்டாம் முறையாகக் காடு வளர ஆரம்பிக்கும்போது, அங்கு மான் தெய்வம் மீண்டும் தோன்றவில்லை. ‘காட்டின் செடிகள் மீண்டும் வளரத் தொடங்கினாலும், அவை மான் தெய்வத்தின் செடிகள் அல்ல’, என்று இளவரசி கடைசியில் கூறுகிறாள். இயற்கையின் மாய நிலவெளிகள் அற்றுப் போய்விட்டன. இனி, அவை கதைகளில் மட்டுமே நிலைத்து இருக்கும்.

லேடி எபோஷியோ, ஜிகோபோவோ demonize செய்யப்படவில்லை. அவர்கள் தம் தேவைகளுக்காகவும், அரசனுக்கு அஞ்சியும் தான் இயற்கையை அழிக்க முற்பட்டனர். எனில், இயற்கையின் மீது மனிதன் வைத்திருக்கும் மெத்தனப்போக்கிற்கு அவனைக் குற்றம் சொல்ல முடியாதா? இங்கு எல்லாம் தேவையின் அடிப்படையில்தான் நடக்கிறதென்றால் இயற்கையின் அழிவு மனிதனின் தேவையா? அஷிதாகா லேடி எபோஷியுடன் துப்பாக்கி செய்யும் தொழுநோயாளிகளைக் காணச் செல்லும்போது, அவர்களுள் ஒருவர் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனத்தைக் கூறுகிறார். அதை மியாசாகியின் குரலில் மீண்டும் ஒரு முறை நாம் படித்துக்கொள்வோம்.

பி.கு: Princess Mononoke நெட்ஃபிலிக்ஸில் இருக்கிறது.

உசாத்துணை:

  1. போஸ்டர் படம் – Wikipedia CC license
  2. படம் 2 மற்றும் 3 – mepixels.com CC0 Free for commercial use
  3. Susan Napier, Miyazakiworld: A Life in Art, Yale University Press, 2018 (e-book)

ஈஸ்வர்

[tds_info]

ஈஸ்வர் : தமிழகத்திலுள்ள விழுப்புரத்தை சார்ந்தவர். தற்போது பிரான்ஸ் நாட்டிலுள்ள கியாங்கூரில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக உள்ளார். பிரஞ்ச் மொழியையும் கற்றுத் தேர்ந்தவராக உள்ளார். இலக்கிய வாசிப்பிலும், திரைப்படங்களிலும் ஆர்வமுள்ளதாக தெரிவிக்கும் இவர் சமீபமாக அபுனைவுகளை எழுதி வருகிறார். [/tds_info]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.