After Dark – நாவல் விமர்சனம்


ரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை மனம் ஈடுகொடுத்துச் செல்வதற்கு தூக்கத்தைத் துறக்கும் ஆற்றல் கொண்ட அசாதாரணமான விபத்தையொத்த அனுபவப் பின்னணி அவசியம். பகல் நேரத்து இயக்கங்கள் யாவும் ஓய்வில் ஆழ்ந்திருக்கும் வழுவழுப்பான இரவு புறவயமான காட்சிப் பிரதிபலிப்புகளற்றது. கனவுகளில் தோன்றும் காட்சிகள் தூக்கத்தின் ஜன்னலோரக் காட்சித்துணுக்குகள் எனினும் அவை இரவின் இன்றியமையாத அம்சங்களல்ல. கனவுகளற்ற தூக்கம் சாத்தியம். ஆனால் இரவைப் பொருட்படுத்தாத தூக்கமின்மை நிலை இயல்புக்கு முரணானது, வினோதமானது.

உலகமே தூக்கத்தில் மூழ்கியிருக்கும் இரவில் தூக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் மனம் ஒருபக்கம், வெளியுலக இயக்கங்களின் பாதிப்புகளிலிருந்து துண்டித்துக்கொண்டு இரண்டு மாதங்களாகப் பகலும் இரவும் தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கும் மனம் மறுபக்கம், இந்த இரண்டு மனங்களுக்கிடையேயான தொடர்புகளை அவர்களின் உள் மற்றும் புற இயக்கங்களின் அசைவுகளோடு பொருத்தி ஒரு முழு நீள இரவின் மர்மமான சுற்றுவழிப் பாதையில் அழைத்துச் செல்கிறது முரகாமியின் After Dark நாவல்.

முரகாமியின் ஒவ்வொரு நாவல்களிலும் கதை சொல் உத்தியில் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு தனித்துவம் இருக்கும். After Dark நாவலின் கதை, அந்தரத்தில் மிதக்கும் காமிரா கண்கள் மூலமாகச் சொல்லப்படுகிறது. காமிரா என்பது ஒருவகை உருவகம் தான் என்பது நமக்கு எளிதிலேயே புரிந்து விடுகிறது. இப்படி ஒரு உருவகமான கருவியின் பார்வையிலிருந்து கதைக் காட்சிப்படுத்தப்படுதலில் இருக்கும் சாதகமான அம்சங்கள் கூட எளிதில் நமக்குப் புலப்பட்டுவிடுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக, நடப்பவை யாவும் பௌதிக ரீதியாக வினோதமாகத் தோன்றினாலும், தான் வெறுமனே காட்சிகளைப் பதிவு செய்யும் ஒரு கருவி மட்டுமே, தன்னால் காட்சிகளின் முரண்களுக்கேற்ப பாதிப்படையவோ அல்லது கதாபாத்திரம் சந்திக்க இருக்கும் அண்மை அபாய விளைவுகள் பற்றி அவர்கள் காதுபட எச்சரிக்கை செய்யவோ அதிகாரமோ குறைந்தபட்சம் அக்கறையுணர்வோ இல்லாத திடப்பொருளே இந்த கதைசொல்லியாகிய நான் என்று ஒவ்வொரு கணமும் அது நமக்கு உணர்த்துகிறது. பேசும் தன்மைகொண்ட ஒரு கண்காணிப்பு காமிரா என்று அர்த்தப்படுத்திக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

After Dark நாவல் வெளிப்புறமாக இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டுக்குமிடையே தருக்க ரீதியான தொடர்புகளைக் கொண்டது. முழு விளக்கமற்ற நடையில் துண்டு துண்டாகக் காட்சிகளைச் சித்தரித்துச் சென்று ஒரு பகுதியில் விட்ட விளக்கத்தை இன்னொரு பகுதியில் அங்கிருந்து எதிர்முனைப் பார்வை வழியாகப் புரிய வைப்பது முரகாமியின் பாணிகளுள் ஒன்று. கனவின் சில பிரத்யேகமான அம்சங்களோடு இந்த வடிவத்தை நாம் பொருத்திப் பார்க்க முடியும். உதாரணமாகக் கனவில் நாம் காணும் ஒரு நிகழ்வின் துல்லியமான தொடக்கத்தை நம்மால் நினைவில் வைத்திருக்க முடியாது, கனவின் மையத்திலிருந்து முடிவு வரை மட்டுமேயான சம்பவங்களை மட்டுமே நம்மால் நினைவுபடுத்த முடியும் என்பதும் ஆய்வுத் தகவல்.

விழிப்பு நிலையில், தான் காணும் கனவுகளே தன் படைப்புகளாக உருவாகின்றன என்றும் எழுதத் துவங்கிய நாள் முதலே தனக்குத் தூக்கத்தில் கனவுகள் வருவதே இல்லை என்றும் முரகாமி நேர்காணலில் சொல்கிறார். கனவை நம்மால் திட்டமிட்டு வடிவமைக்க முடியாது. முரகாமியின் கதையுலகமும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுவதில்லை. கற்பனைக்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்து ஆழ்மனதில் தேங்கத்துவங்கும் எண்ண அலைகளைச் சிந்தாமல் சிதையாமல் பிரக்ஞையின் மேல் தளத்திற்குக் கொண்டு வந்து வார்த்தைகளால் சம்பவங்களைத் தீட்டுகிறார்.

இதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருக்கின்றன. முதலாவது, இம்மி பிசகினாலும் உடைந்து போகக்கூடிய பிம்பக் குமிழ்களை மீனுக்குத் தூண்டில் போடுவது போன்ற கூரிய கவனமும் விழிப்பும் நிதானமும் கொண்ட லாவகத்துடன் ஆழ்மனத்திலிருந்து மேல்மட்டத்திற்குக் கொண்டு வருவது. இரண்டாவது, கிடைத்த பிம்பங்கள் மற்றும் படிமங்களின் அப்போதைய வரவுக்கான காரணம் தீர்க்கமாகத் தெரியாமலேயே கதைத்தொடர்ச்சியின் வேறொரு தருணத்தில் அதற்கான முக்கியத்துவம் வெளிப்படும் என்ற உள்ளார்ந்த புரிதலில் அவற்றின் மீது அர்த்தப்பூர்வமான நம்பிக்கை வைப்பது.

Killing Commendatore நாவலின் மையக்கதாபாத்திரம் நடுஇரவில் மணியொலி ஒன்றைக் கேட்க நேர்வதும், இருப்பிடத்திற்கு வருகை தரும் நண்பன் கொண்டு வந்த கத்தி திடீரென காணாமல் போவதும் கதையின் இறுதிப்பகுதியில் Commendatore ஐ கொலை செய்ய நேர்கையில் பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் அதே கத்தி கிடைக்கப் பெறுவதும், Kafka on the shore இல் மீன் மழை பொழிவதும், Wind-up Bird Chronicle நாவலில் Cinnamon என்ற சிறுவன் ஒரே இரவில் பேச்சுத்தன்மையை இழந்து போவதும், ஆளுண்ணும் பூனைகள் சிறுகதையில் கிழவியைப் பூனைகள் உண்பதுவும், Sleep கதையில் பதினேழு நாட்களாக ஒரு பெண் தூக்கம் இல்லாமல் இருப்பதும், After Dark இல் இரண்டு மாதங்களாக ஒரு பெண் தொடர் தூக்கத்தில் இருப்பதும் பௌதிக ரீதியாக இயல்புக்கு முரணான சம்பவங்களாகத் தோன்றலாம். கனவுகளைப் போல ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதாரச் சம்பவ பாதிப்பு கதையின் போக்கிலேயே கட்டவிழ்கிறது. சிலவற்றின் காரணங்கள் சொல்லப்படாமல் கூட விடப்படுகின்றன. பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கையின் மறக்க முடியாத வெளியே யாரிடமும் பகிர்ந்து கொள்ளப்படாத கசப்பான சம்பவங்களே இதுபோன்ற கனவுத்தன்மை கொண்ட சம்பவங்கள் நிகழக் காரணமாக அமைகின்றன.

இவை எதுவும் திட்டத்துடன் புகுத்தப்பட்ட சம்பவங்களாக அல்லாமல் நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத விபத்து போலத் தன்னிச்சையாக நிகழ்பவை போன்றே தோற்றம் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏற்படும் அதிர்வுகளை இரண்டு விதமாக வேறுபடுத்திப் பார்க்க முடியும். ஒன்று சம்பவங்களினால் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் எதிர்வினை, இது கிட்டத்தட்ட வாசகர்களின் மனநிலையோடு ஒருங்கிணைந்த அலைவரிசையுடன் பொருந்திப் போவதை உணர முடியும். இன்னொன்று சம்பவங்களை விவரித்துச் செல்லும் மொழியின் தொனி. இந்த தொனி தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனெனில் எப்பேர்ப்பட்ட சம்பவமாக இருப்பினும் மொழியின் தொனியை ஆழமான நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பைப் போன்ற சலனமின்மையுடனும், நடப்பவை யாவும் இதை விட யதார்த்தமாகவும் இயல்பாகவும் நடக்க முடியாது என்கிற பவ்யமான பாவனையிலும் கையாள்கிறார். முரகாமியின் கதைகளில் பூனைகள் கட்டாயம் இடம்பெறும் என்பது அறியப்பட்ட ஒன்றே, கதைகளுக்கான தொனியை பூனைகளின் குணாம்சங்களில் இருந்தே முரகாமி எடுத்துப் பயன்படுத்துகிறாரோ என்பது அவரது சக பூனைக்காதலனான எனக்குத் தனிப்பட்ட முறையில் இருந்து வரும் சந்தேகம்.

கதையில் Mari Asai மற்றும் Eri Asai என்று இரண்டு மையக்கதாபாத்திரங்கள். இருவரும் சகோதரிகள். மூத்தவள் Mari Asai, மிக அழகானவள், வெளிப்படையாகப் பழகும் சுபாவமும் அதனால் அதிகமான நண்பர்களையும் உடையவள், மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கிறாள். இளையவள் Eri Asai, அக்காளை விட அழகு குறைந்தவள், அறிமுகமற்றவர்களோடு பழகும் சுபாவமற்றவள், அறிவுஜீவி.

கதையின் பிற முக்கிய கதாபாத்திரங்களாக, Takahashi அடிப்படையில் ஒரு சட்டப்படிப்பு மாணவன், இசை மீது மிகுந்த ஈடுபாடு உடையவன், இளம் நண்பர்களைக் கொண்ட குழுவில் இசைக்கலைஞனாக இருந்து வருகிறான். Kaoru காதல் விடுதி ஒன்றின் மேலாளராக இருந்து வருபவள். புத்திக்கூர்மையும் ஆணுக்கு நிகரான முரட்டுத்தனமான உடல் பலமும் கொண்டவள். Shirakawa வெளிப்படையாக மாசுமருவற்ற நவநாகரீகமான தோற்றமும் நேர்த்தியான உடற்கட்டும் கொண்டவன். சிறு செயலையும் பிசிரற்ற கூரிய கவனத்துடன் செய்யும் இயல்பினன். மென்பொருள் வல்லுநன்.

கதையில் மனிதர்களல்லாத இன்னும் இரண்டு பிரதானமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவை இருளும், பனியும். நாவல் நெடுகிலும் கதையில் இருளும் பனியும் சூழலின் மனவோட்டத்தில் படிந்திருக்கின்றன. குளிர் காலத்து இருள் அதிக நேரம் நீடிக்கக்கூடியது. தூக்கமற்ற இரவைக் கடந்தவர்களுக்குத் தெரியும் இரவின் அடர்த்தி நேரத்துக்கு நேரம் எப்படி கனமாகிக் கொண்டே செல்லும் என்பது. அயற்சி கண்ணை அழுத்த மூளை சோர்வுற்ற நிலையில் தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையேயான தீவிர நிலையில் சில தொடர்பற்ற சமிக்ஞைகள் ப்ரக்ஞையில் ஓடி மறையும். அது ஒரு வித hypnotized நிலை. After Dark நாவலின் பெரும்பகுதி இந்த நிலையில் நம்மை இருத்தி வைக்கிறது.

200 பக்க நாவலின் மொத்தக் கதையும் ஒரே இரவில் நடக்கிறது. இரண்டு மாதங்களாக Mari Asai தூக்கத்தில் இருக்கிறாள். ஆரம்பத்தில் பயந்து விடும் பெற்றோர்கள் மருத்துவர்களைத் தொடர்ந்து வரவைத்துப் பரிசோதிக்கிறார்கள், உடல் ரீதியாகச் சிறு பாதிப்பும் இல்லாமலேயே இருக்கிறாள் என்று தெரிய வர, அவளது நெடுந்தூக்கத்தை ஏற்றுக்கொள்ளும் இயல்புக்கு வந்து விடுகிறார்கள். இந்த மர்மமான சம்பவத்தின் பின்னணி Mari Asai இன் தங்கையான Eri Asai இன் மூலம் அவளுக்கு நண்பனாக அறிமுகமாகும் Takahashi உடனான உரையாடல் வழியாக புதிரவிழ்கிறது.

கனவின் மத்திய நிலை போல ஆரம்பம் தெளிவாகத் தோன்றாத, கிடைத்த புள்ளியிலிருந்து முன்னும் பின்னும் சென்று காரணத்தைக் கண்டறியும் பாதையில், முன்னர் பெரிதாகப் பொருட்படுத்தப்படாமல் சகித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறு சிறு அசைவுகளில் நுணுக்கமான மாறுதல்களை வெளிக்காட்டிய சம்பவங்களின் மீதான நினைவுகளின் மீளாய்வு மூலமாக நம்புவதற்கு வியப்பாகத் தெரிந்த ஒன்று இயல்பான ஒன்றாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளை இணைக்கும் சரடு தான் கதைப்பயணம்.

பகல் தன் ஒளியால் காட்சிகளைப் பட்டவர்த்தனமாகத் தெரியக்காட்டி பொருட்களை அதன்  அடையாளங்களிலிருந்து விலக்காத எதிரொளிப்பைச் செய்கிறது. அந்தப் பொழுதில் காண்பவை யாவும் கற்பிதங்களின் பழக்கத்தால் பதியப்பட்ட இயல்பு முறைகளிலிருந்து முரணாகத் தெரிய வாய்ப்பில்லை. இரவின் இயல்பு ஒளியற்றது, காட்சி உருவங்கள் இருளின் போர்வைக்குள் பதுங்கிக்கொண்டு தங்களின் அடையாளங்களைக் காண்பவனின் கற்பனைக்கேற்ப மாற்றிக் காட்டும் தந்திரம் தெரிந்ததாக இருக்கின்றன. இந்தக் காரணத்தால் கற்பனையை விழிப்படையச் செய்வதில் பகலை விட இரவுப் பொழுதின் வீச்சு பலமடங்கு எட்ட செல்லக்கூடியதாக இருக்கிறது. After Dark நாவலில் நடைபெறும் சில இட கால வரையறை மீறின சம்பவங்கள் இப்படியான இரவின் போர்வையைக் கவசமாகக் கொண்டே சாத்தியமாகின்றன.

முரகாமியின் படைப்புகளில் இசைக்கு முக்கியத்துவம் அதிகமிருப்பது எழுதப்படாத விதி. After Dark நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. முரகாமியைத் தேர்வு செய்யும் விருப்பங்களில் அவர் உருவாக்கும் வினோதமான சூழல் அமைவுகளால் ஈர்க்கப்படுதலும் ஒன்று என்று நம்பும் வாசகனுக்கு அவர் குறிப்பிடும் இசைக்கோர்வைகளைக் கதைக்களத்தை இன்னும் நெருக்கமாகத் தொட்டுணர்வதற்கான முகாந்திரங்களாகக் கொள்ள முடியும். அதேசமயம் கதைக்கு வெளியே சென்று சூழலின் சீதோஷ்ண நிலையை அனுபவித்து பின் கதைக்குள் நுழையும் பொறுமை இல்லாதவர்களுக்கு இலத்தீன் மொழி தெரியாத வாசகருக்கு ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தில் திடுமென ஒரு பத்தி இலத்தீன் மொழியில் குறுக்கிட்டதைப் பார்ப்பது போன்ற தடங்கலுணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நம் இயக்கங்கள் சார்ந்த அசைவுகளைப் பொருத்து ஒரு இணை உலகம் கண்ணுக்குப் புலனாகாத தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற சமன்பாடு முரகாமியின் சில படைப்புகளில் காணக்கிடைப்பது. தனிமை ஒரு சிறையைப் போன்றது என்ற ரீதியில் காட்டும் விதமாக இயங்கும் இவரது கதைக்களமும் அதனுள் விழிப்புடன் உயிர்த்திருக்க எப்படிப்பட்ட சாகசங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என்ற சாத்திய அசாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதாகவும் அமைபவை இவரது கதாபாத்திரங்கள்.

ஜப்பானிய மக்களின் அன்றாட வாழ்வில் எப்போதும் உடனிருந்து கொண்டே இருக்கும் பயங்களுள் ஒன்று எப்போது நிலநடுக்கம் வரும் என்று தெரியாத ஆபத்தான நிலை. கிட்டத்தட்ட அவர்கள் எல்லோரது மரபணுவிலும் பதிந்துவிட்ட அச்சம் அது. ஆபத்துக் காலத்திற்கு முன்னெச்சரிக்கையாக அத்யாவசியப் பொருட்களைப் பாதுகாப்பான பதுங்கு அறைகளில் சேமித்து வைத்தல் என்பது அவர்களது இயல்பு வாழ்க்கையின் ஒரு தன்னிச்சையான செயல்பாடு. ஒடுக்கமான லிப்ட், குகை வழிப்பாதை, கிணறு, இருட்டான அறை இவற்றில் ஏதாவதொன்றின் மீதான பயத்தால் பாதிப்படையாத கதாபாத்திரம் முரகாமியின் எந்தப் படைப்புகளிலும் இல்லாமலில்லை என்றே சொல்லலாம். எந்நேரமும் பயத்தில் இருப்பவனால் மட்டுமே எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்க முடியும். விழிப்புணர்வு குறிப்பிட்ட எல்லை மீறிச் செல்லும் போது நிஜம் நினைவுகளால் கலப்படமடையத் துவங்குகிறது. இந்த நிலையே அவர்களுக்கு ரியலிசமும், நமக்கு சர்ரியலிசமுமாகத் தோன்றுகின்றன. முரகாமி மட்டுமல்லாது அனைத்து சமகால ஜப்பானிய எழுத்தாளர்களின் படைப்புகளிலும் பிற தேசத்து எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்ட சர்ரியலசத் தன்மை அடர்த்தியான வண்ணத்தோடு இருப்பதாக வாசகர்கள் சொல்வதுண்டு. அதற்கு அவர்களின் எந்நேரமும் விபத்தை எதிர்நோக்கி இருக்கும் பதட்டமான மனநிலையும் அளவுமீறிய விழிப்புணர்வும் அதனால் விளையும் கலப்பின யதார்த்த உருவகங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடும்.

இலக்கியத்தின் பணிகளுள் இன்றியமையாத ஒன்று சூழலின் மீதான நமது பார்வையைத் துல்லியப்படுத்துவது. Dots Per Inch என்று தொலைக்காட்சியின் ஒளித்துல்லிய அளவை குறிப்பிடும் தொழில்நுட்ப அளவீடு ஒன்று உண்டு, இந்த DPI இன் அளவு எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் காட்சிகளின் துல்லியம் நெருக்கமான அனுபவத்தைத் தரும். அதேபோல யதார்த்தத்தின் அழகை சித்திரக்காரனின் அவதானிப்புகளோடும் மனதை லயிக்க விடும் நிதானத்தோடும் அணுகி ஸ்பரிசிக்க வைப்பது இலக்கியங்களின் முக்கிய குணாம்சங்களுள் ஒன்று. அவை நம் பார்வையைக் காட்சிப்பொருளின் மீது கவனமாகவும் முன்னனுமானமற்ற வெளிப்படையான மனநிலையுடனும் பதிய வைக்கின்றன.

இந்த வகையில் முரகாமியின் படைப்புகளின் பங்களிப்பென்பது அவை யதார்த்தத்தின் உச்ச பட்ச சாத்தியங்களைக் கவர்ச்சிகரமாகத் துலக்கமாக்குகின்றன. நடப்புக்கணத்திலிருந்து ஒரு கருந்துளைப் பாதையை கண்முன்னால் விரித்து நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கிருந்து கொண்டு நம் உலகத்தைக் காணும் போது முன்னர் இங்கு வெற்றிடமாகத் தோன்றிய இடைவெளிகள் இப்போது ஒளித்துகள்களால் நிரப்பப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நடக்க வேண்டியதை நம் விருப்பப்படி கட்டுப்படுத்தவோ தீர்மானிக்கவோ தேவையான சந்தர்ப்பமும் சாதகமும் நம் கையில் இல்லாத நிர்க்கதியான நிலையில் உணரும் தனிமை இன்றைய அவசர உலகில் பாரபட்சமின்றி அனைத்து வயதினரையும் பீடித்துக்கொண்டிருப்பது. தவிர்க்கவே முடியாத இந்தத் தனிமையை அனுசரணையாக ஆதரவளித்து இயங்கிச் செல்ல ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்குத் துணைபுரிபவை முரகாமியின் படைப்புகள்.


 -ந. இரஞ்சித் குமார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.