தேன்


லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். “நீ ஒரு ஜேப்படித் திருடன் என்பது எனக்குத் தெரியும்” என்று நான் அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, குறிப்பால் உணர்த்தியதும் அவர்கள் உடனடியாக என்னை விட்டுத் தள்ளி நின்றது எனக்கு வியப்பளித்தது. நான் அவர்களுள் எவன் ஒருவனைப் பார்த்தாலும் எனக்கு நன்கு அறிமுகம் ஆன பாவனையில் அவன் உடனே என்னை திரும்பப் பார்த்தான். கிடைக்கும் வருமானத்தில் செலவுகளைச் சமாளிப்பது இங்கு அவ்வளவு கடினமான ஒன்றா அல்லது மக்கள் வேலை செய்யாது சோம்பேறிகளாக இருக்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை. பியணோஸ் ஐரிஸ், ஒரு விசித்திரமான நகரம்.

புறாக்களுக்கான உணவை விற்றுக்கொண்டிருந்த  வயதான ஒரு பெண்ணையும் புறாக்களையும் வசதியாகப் பார்ப்பதற்காக பூக்களால் ஆன படுக்கையின் ஒரு ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். அவளுடைய மனதில் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. புறா உணவை விற்பனை செய்து அந்த தினத்தைக் கழிப்பதற்காக மட்டுமே அவள் அங்கு வந்திருப்பதாகத் தெரிந்தது. நானும் கிட்டதட்ட அதே மன நிலையில்தான் இருந்தேன்.

பிளாசாவின் தொலைதூரத்தில் இருந்து ‘லா காசா டி கொபியர்ணோ’ என்றழைக்கப்பட்ட அரசாங்க இல்லத்தின் இளஞ்சிகப்பு நிறச் சுவர்களைப் பார்க்க முடிந்தது. எவிட்டா திரைப்படத்தில் மடோனா பாடும் பாடல் காட்சி இங்குதானே  படமாக்கப்பட்டது! கடவுளே, அது போன்ற ஒரு திரைப்படத்தை என்னால் எப்படிப் பார்க்க முடிந்தது? இந்தக் கேள்வி எழுந்த அதே வேகத்தில்  வாடகைக்கு எடுத்து வந்திருந்த திரைப்படக் காணொளியை வரவேற்பறையில் அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்த அந்த மழை இரவு, மறுபடி இப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த மோசமான திரைப்படம் பாதி ஓடிக் கொண்டிருக்கையில் வீட்டுக்கு வந்த அவனுடைய வலப்புறம் முழுதாக நனைந்திருந்தது. தன்னுடைய குடையைக் காற்று உடைத்து சேதப்படுத்திவிட்டதாக அவன் சொன்னான். நான் ஒரு துவாலையைக் கொண்டுவந்தேன். ஒரு நாய் அல்லது பூனை மீதிருந்து ஈரத்தைத் துடைத்தெடுப்பது போல அவனுடைய தலையையும் உடலையும் மேலிருந்து கீழ் வரை இயல்பாகத் துடைத்துவிட்டு மீண்டும் சோஃபா மீது களைப்புடன் சாய்ந்து கொண்டேன். மழையுடன் அவன் வீட்டுக்குள் வந்ததால் அங்கு இப்போது மழை வாசனை அடித்தது. தெளிவான நீர் முத்துக்கள் கண்ணாடி ஜன்னலின் கீழ் வழிந்தன. வெளியே சாலை அமைதியாகவும், இருண்டும், ஈரமாகவும் இருந்தது. எல்லா இரவுகளைப் போல அதுவும் ஒரு சாதாரணமான இரவு. காபி தயாரித்தவன் என்னிடம் ஒரு கோப்பையைத் தந்தான். அந்தக் கோப்பையைக் கூட நாங்கள் இருவரும்தான் கலைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் ஒரு ஞாயிறன்று வாங்கினோம். அந்தக் கடையை அடைவதற்கு நாங்கள் நிறைய நேரம் சுற்றினோம். வழி எங்கும் நிறைய பூக்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் ஆன டன் கணக்கான பூக்கள் மலர்ந்து கொண்டிருந்தன. அந்தச் சாலையே சூரிய ஒளியில் வெண்ணிறமாக ஒளிர்ந்ததால் நான் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தேன். செம்மஞ்சள், மஞ்சள், இளம் சிவப்பு நிறப் பூக்கள். தன் மீது படர்ந்த காற்றில் உரசிய பசும்புல், ஒரு மெல்லிய ஓசையை எழுப்பிக் கொண்டு இருந்தது. இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே நிற்பதுபோல, அவற்றின் வழியே தொலைவில் இருக்கும் எதையோ இங்கிருந்து வெறிப்பது போல பற்பல நினைவுகள் எனக்குள் இருந்தன.

எங்கள் இருவரின் கதை எல்லையற்ற பரந்த இந்த உலகத்தைச் சின்னஞ்சிறு உருவமாக மாற்றியது போன்றது.

நான் இப்போது இவை அனைத்தில் இருந்தும் துண்டிக்கப்பட்டு விட்டேன்.

இந்த நகரத்தில் வசிக்கும் ஒரு தோழியைச் சந்திப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்.

என் தோழி டாங்கோ நடனம் கற்கையில் தனக்கு நடனம் கற்பித்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து மணந்துகொண்டாள். இப்போது ஜப்பானில் இருந்து வரும் பயணிகளுக்கு ஊர் சுற்றிக் காட்டுவதைத் தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறாள். அவள் அதிகாரபூர்வமான பயண வழிகாட்டி  கிடையாது. ஆனால் எப்போதும் ஓய்வின்றி வேலையில் மும்முரமாக இருந்தாள். சுற்றுலா முடிந்த பிறகு தரப்படும் அன்பளிப்பே தன் வருமானம் என்றாள். அவளுடைய கணவர் தான் நடனம் கற்பிக்கும் மாணவர்களுடன் அப்போதுதான் வெளியூர் சென்றிருந்தார். ஆகவே நான் அவர்களுடைய வீட்டில் தங்கினேன். சுற்றுலா வந்தவர்களுக்கு  ஊர் சுற்றிக் காட்டுவதில் பகல் நேரத்தைச் செலவழித்த என் தோழி வீட்டுக்குத் திரும்பும்போது இரவாகி விடும். ஒவ்வொரு நாளும் இதுவே தொடர்ந்தபோது நான் அதை மிக எளிதாக எடுத்துக்கொண்டேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் இப்படியே வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். குறிப்பாக என் தோழியின் வீடு இருந்த ரெகோலீட்டா நகர்ப்பகுதி நிறைய மரங்களும் புல்லுமாக மிக அருமையாக இருந்தது. அங்கு கால் போன போக்கில் உலாத்துவது எனக்குப் பெரும் மன மகிழ்ச்சியைத் தந்தது.  சிந்தனைகளற்று இருப்பதற்காக நான் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தேன். இறுதியில் என் கால்கள் வலிக்க ஆரம்பித்து, என்னுடைய சிந்தனை, உணர்ச்சி அற்றதாக மாறிய பிறகே நான் மறுபடி என்னுடைய இயல்புக்குத் திரும்பியதாக உணர்ந்தேன். இரவுகளில் நான் படுக்கை மீது புரண்டு கொண்டிருக்க சிறிய அளவு மதுவே கூடப் போதுமானதாக இருந்தது.

அந்நியமான நகர் ஒன்றில், எனக்குச் சொந்தமில்லாத ஒரு வீட்டின்

அசௌகரியமான சோஃபா ஒன்றில் என்னுடலைப் பரப்பிக் கொண்டு,

என் காதுகளில் ரீங்கரித்த அந்நியமான சத்தங்களைக் கேட்டபடி,

இப்போதைக்கு இது நன்று, இதுவே கூடப் போதுமானது என்று, கடந்து சென்று கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். நாக்கை நீட்டித் தன் காயங்களைத் துழாவியபடி, காய்ச்சல் கொண்ட தன் உடல் குணமாகும் வரை காத்திருக்கிற, காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்யாது, இருளில் கிஞ்சித்தும் அசையாமல் படுத்துக் கிடக்கும் ஒரு காட்டு விலங்கைப் போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தை நான் எனக்குத் தர வேண்டும். அது மட்டும் தான் இப்போதைக்கு என்னால் செய்ய முடியும். இப்படி எதுவும் செய்யாமல் இருப்பது தான் இப்போதைக்கு எனக்கு நடக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயம். எவ்வாறு சுவாசிப்பது என்பதை நான் மீண்டும் கற்றுக் கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக சிந்திக்க இயலும் காலத்துக்குள் அது என்னுடைய ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும்.

“வெண்ணிறக் கழுத்துக் குட்டைகள் (scarves)அணிந்த அன்னையரின் ஊர்வலம் ஒன்று இன்று பிளாசா டி மாயோவில் இருந்து மதியம் இரண்டு மணிக்குத் துவங்குகிறது” என்று என் தோழி அன்று காலை வெளியே கிளம்பும்போது சொன்னாள். “அதைப் பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்காது. ஆனால் ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும் பல்வேறு விதமான விஷயங்களை அது என்னை யோசிக்க வைக்கும். உண்மையிலேயே பல்வேறு‌ விதமான விஷயங்கள். அதாவது மிகச் சமீபத்திய வரலாறு குறித்து நாம் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறோம். அதைப் பார்க்கும்போது நீயே புரிந்து கொள்வாய் என்று நான் நினைக்கிறேன். ஊரிலிருக்கும் உன்னுடைய பெற்றோரைப் பற்றி கூட நீ நினைப்பாய்” என்றாள்.

ஆகவே இந்த ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காக நான் இந்த பிளாசாவைத் தேடி வந்தேன். சிறிது நேரத்திலேயே தனித் தனியாகவும் சிறு குழுக்களாகவும் அன்னையர்- விரைவில் பாட்டியாகும் வயதை எட்டப் போகும் அன்னையர் தங்கள் தலைகளைச் சுற்றிக் கட்டப்பட்ட வெண்ணிறக் கழுத்துக் குட்டைகளுடன் அங்கு கூடத் துவங்கினர். நிகழ்வு பற்றித் தகவல்கள் திரட்ட சில பத்திரிகையாளர்களும், சில காவலர்களும் அங்கு இருந்தனர். லா காசா டி கொபியர்ணோவின் வெளிர் சிகப்பு நிறச் சுவர்கள் மேகம் சூழ்ந்த வானின் கீழ் மங்கலாகத் தெரிந்தன. இந்த நிறத்தைப் பெறுவதற்காக அவர்கள் எருதின் ரத்தத்தை சாயத்துடன் கலந்து இருந்தனர். திடீரெனப் பெரும் அளவிலான புறாக்கள் கூட்டம் காற்றில் தங்கள் சிறகுகளைப் படபடத்தன. ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த அன்னையர் தங்கள் வெண்ணிறக் கழுத்துக் குட்டைகளுடன் மெதுவாக வட்ட வடிவப் பாதையில் சுற்றி வரத் துவங்கினர். வயதான சில ஆண்களும் அவர்களுடன் இணைந்து நடந்தனர். உடனிருந்த மற்ற சிலர் அவர்களுடைய உறவினர்களாக இருக்கக் கூடும். இள வயது ஆண்களும் பெண்களும் மிக அழகாக உடை உடுத்திச் சிரித்துக் கொண்டு இருந்த பழைய புகைப்படங்களை அந்த அன்னையர் தங்கள் கைகளில் கவனமாகத் தாங்கிப் பிடித்திருந்தனர். மிக இனிமையாகவும் இயல்பாகவும் இருந்த அந்த அன்னையருடைய முக பாவனைகளைப் பார்த்த போது இவ்வளவு பயங்கரமான விஷயங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் என்பது ஏறத்தாழ நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

“நீங்கள் ஜப்பானைச் சேர்ந்தவரா?” எனக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் என்னிடம் கேட்டாள். பார்ப்பதற்கு ஜப்பானியரைப் போலத் தோற்றமளித்த அவள் ஜப்பானிய மொழியில் பேசினாள்.

“ஆம் நான் ஜப்பானைச் சேர்ந்தவள்தான்” என்றேன்.

“நான் வேறொரு நாட்டிலிருந்து இங்கு குடியேறியுள்ளேன். நாங்கள் புறநகர்க் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வந்து விட்டதாக திடீரென உணர்ந்தோம். இடதுசாரி அரசியலில் எப்போதோ மேம்போக்காக ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெரோணிஸ்ட்டுகள் என நிறைய பேர் திடீரெனக் காணாமல் போய்விட்டார்கள். அவ்வாறு நிகழ ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வது போன்ற சிறிய விஷயங்களே கூடப் போதுமானதாக இருந்தது. காணாமல் போனவர்களில் யாரும் திரும்ப வரவே இல்லை” என்றாள்.

அவள் ஜப்பானைச் சேர்ந்தவள்தான் என்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவள் உடை உடுத்தி இருந்த விதம், முக பாவனைகள், ஒப்பனை ஆகியவை அவள் ஜப்பானிலிருந்து வெளியேறி வெகு  காலம் ஆகிவிட்டதான ஒரு உணர்வை எனக்குத் தந்தன.

‘இது பற்றிய திரைப்படம் ஒன்றை நான் முன்பு ஒரு முறை பார்த்தேன்’

மனதைக் தொந்திரவு செய்யும் அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை என்னால் எப்படிப் பார்க்க முடிந்தது? கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக ஒன்றாக அடைத்து வைப்பது, மாணவிகள் வன்புணர்வு செய்யப்படுவது, அவர்களின் உடலுக்குள் பிளாஸ்டிக் தண்ணீர்க் குழாய்கள் நுழைக்கப்படுவது, கண்கள் கட்டப்பட்டுக் கிடப்பது, முற்றும் கைவிடப்பட்ட நிலையில் தெருவில் வீசப்பட்டுக் கிடப்பது போன்ற காட்சிகள் அதில் இருந்தன. என் கண் முன்னே ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்ற இந்தப் பெற்றோர்கள் அந்த சம்பவங்கள் நிகழ்ந்த இரவுகளில் உறங்க முடியாதவர்களாக, அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்திலும், சினத்திலும் இருந்திருப்பார்கள். ஆனாலும் இப்போதும் வழக்கத்தைப் போலவே அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த காலகட்டத்தில் இவர்கள் தங்களுக்கு மிக முக்கியமான ஒன்றை, ஏதோ ஒரு உணர்வை என்றென்றைக்குமாய் இழந்து விட்டார்கள். மகன்களும் மகள்களும் தங்களுடைய உயிர்களை இழக்க, இந்தப் பெற்றோர் தங்களுடைய வாழ்வின் ஒரு பகுதியை  இழந்து நின்றார்கள்.

“ஒரு நாள் இரவு, ராணுவ டிரக் ஒன்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுப் பக்கமாக சென்றது. மிகுந்த அச்சத்துக்கு உள்ளான நாங்கள் வெளியே போகவில்லை. சிறிது நேரத்தில் சரமாரியாக துப்பாக்கிகள் சுடப்படும் சத்தமும், மக்களின் பயங்கரமான அலறலும், வலியில் முனகும் சத்தமும் கேட்டன. பிறகு இன்னொரு பெரிய ட்ரக் வந்தது. அதற்குப்பின் எந்த சத்தமும் கேட்கவில்லை. அடுத்த நாள் காலை நாங்கள் காட்டுக்குச் சென்று பார்த்தபோது நிலம் முழுதும் ரத்தம் பரவிக்கிடந்தது. முப்பதாயிரம் பேர் காணாமல் போனது இப்படித்தான்” என்றாள்.

ஊர்வலத்தைப் பார்த்தபடி எதுவும் பேசாமல் நான் தலையை மட்டும் அசைத்தேன்.

புறாக்கள், ஜேப்படிக்காரர்கள்,  எனக்குப் பின் நின்று கொண்டிருந்த இந்த நாட்டில் குடியேறியுள்ள அந்தப் பெண், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் மட்டுமே அங்கு இருந்ததாக எனக்குத் தோன்றியது. தங்களுடைய குழந்தைகள் இனி எப்போதும் வீட்டுக்குத் திரும்பி வரப்போவதில்லை என்று அந்த அன்னையர் அறிந்து இருந்ததாக வெண்ணிறக் கழுத்துக் குட்டைகள் அணிந்து, பிளாசாவைச் சுற்றி தளர் நடை நடக்கிற அவர்களைப் பார்க்கிற யாராலும் சொல்லிவிட முடியும். தங்களுடைய இதயத்தில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும் எல்லையற்ற சினத்தை அவர்கள் வெளிப்படுத்தும் முறையாக ஒருவேளை இது இருக்கலாம். தம் வாழ்வில் தாம் கடந்துவந்த துயரார்ந்த காலத்திற்கு ஒரு வடிவம் கொடுப்பதாக, நடந்து போன சம்பவங்கள் புறக்கணிப்பால்

அப்படியே மறக்கடிக்கப்படுவதை இப்படி, இங்கு, இப்போது இருப்பதன் மூலம் அவர்கள் மறுத்தார்கள். தங்கள் மகள்களின், மகன்களின் புகைப்படங்களைக் கையில் கவனமாக ஏந்தியவாறு வயதான அந்த அன்னையர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அது அந்தத் தருணத்தின் உண்மைத்தன்மையை இன்னும் அதிகமாக என்னை உணரச் செய்தது.  இப்படியாக மட்டுமே அது அவர்களை விட்டு விலகிப் போகும் என நினைத்தேன். இது காலம் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பது. இது துயரத்தின் நிறம்.

துயரம் எப்போதும் ஆறிவிடுவதில்லை. நம்முடைய வலி மங்கிப் போனதாகத் தெரிவதில் நாம் ஆசுவாசம் கொள்கிறோம். இந்தப் பெற்றோருடைய உணர்வுகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய துயர் எவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது. உண்மையில் தனக்கு ஆதரவு அளிக்கும்படியான, சீற்றம் நிறைந்த, அநீதி இழைக்கப்பட்ட  எந்த முகாந்திரமும் நம்முடைய துயரில் இல்லை. எந்த நோக்கமும் இன்றி தெளிவற்ற தன் வழியில் அது தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும்.  ஆனால் அதற்குப் பொருள் இவற்றில் ஒரு துயரம் மற்றொன்றை விட மதிப்பு மிகுந்தது என்பதோ ஆழமானது என்பதோ இல்லை. இந்தப் பிளாசாவில் இருக்கும் நாங்கள் அனைவரும் இதில் சமமாகவே இருக்கிறோம். நான் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தேன்.

பதின் பருவத்தின் இயல்புகளான  திமிரும் அதீத தன்னம்பிக்கையும் கொண்ட, உயரமாக வளர்ந்திருந்த அவளுடைய மகன், ஒரு வாய் காபி மட்டும் குடித்துவிட்டு, தனக்கு மிகப் பிடித்த நீண்ட ஜீன்ஸ் அணிந்து அன்று காலையும் வழக்கம் போலத் தான் பள்ளிக்குச் செல்கிறான். அவனுடைய அம்மாவின் கண்களுக்கு அவன் இன்னும் சிறுவனாகவே தெரிகிறான். அவனுடைய அந்தத் தோற்றத்தில்தான் அவளுடைய பழங்கால நினைவுகள் அனைத்தும் குடிகொண்டு இருந்தன என்பது இயற்கையான ஒன்றுதான். தன் நண்பர்கள் செல்கிறார்கள் என்பதால் தானும் ஒரு ஆர்ப்பாட்டத்தில், அதுவும் சிறிது நேரம் மட்டுமே, கலந்து கொண்டதைப் பற்றி அவன் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. பள்ளிக்குச் சென்ற அவன் திரும்பி வரவே இல்லை. அந்த உணர்வு எப்படி இருக்கும்?

ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின் என்ன விதமான அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பதை அவை நிகழும்வரை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.

அவளுக்கு யாருமே உதவ முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அனைவருமே மிகுந்த அச்சத்துடன் இருந்தனர். தொடர்ந்து உலவிக் கொண்டிருந்த பயங்கரமான வதந்திகள் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தின. அந்த வதந்திகள் எவையும் நல்ல விதமாக இல்லை. அரசியல் கைதிகளுக்கான முகாம்களிலிருந்து மீண்டு வரும் அளவுக்கு அதிர்ஷ்டம் கொண்ட அவர்கள் அதற்குப் பிறகு பெரும் அச்சத்திலேயேதான் வாழ்ந்தனர். அவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு அவளுக்கு மயிர்க் கூச்செரிந்தது… இது நடந்தபோது நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தேன். ஆனால் அது இங்கிருந்து வெகு தொலைவில் இருந்தது. இது இண்கா பேரரசின் கதை இல்லை. போர் நடந்த சமயத்தில் இது நிகழவில்லை. இது நிகழ்ந்த போது ஜப்பானிலிருந்த எங்கள் வீட்டில், என் பெற்றோர் என் மீது செலுத்திய கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடி, விடியும் வரை வீட்டுக்கு வராமல் வெளியே இருந்தபடி, எதோ செய்து கொண்டு, இங்குதான், இந்த பூமியில்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால்  அதே தருணத்தில் இவர்களுக்கு நடந்தவையோ மிகப் பெரிய விஷயங்கள், மிக மோசமானவை – நான் இப்போது அங்கேயே மயங்கி விழுந்து விடுவேன் போலிருந்தது.

தனிச் சிறப்பு ஏதுமற்ற இந்த பிளாசாவில் களைப்படைந்த மேகங்கள் சூழ்ந்த வானத்தின் கீழ், இந்த மதிய வேளையில், இவர்களுடைய வாழ்வும் என் வாழ்வும் ஏன் இவ்விதமாக ஒன்றையொன்று சந்திக்கின்றன? என நினைத்தேன்.

வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டு இருக்கிற அன்னையருக்கு இடையே என்னுடைய அம்மாவைப் போலவே இருந்த ஒரு பருமனான பெண்ணைக் கவனித்தேன். அவளை உற்றுப் பார்த்தபோது, அவளுடைய கண்களின் நிறம் தவிர்த்து, அவள் எனக்கு நன்கு பரிச்சயமான ஒருத்தியாகத் தோன்றினாள். நான் அங்கிருந்து கிளம்பியபோது அவளும் அதே திசையில் நகர்ந்ததாக நான் நினைக்கத் துவங்கினேன்.

எனக்கு சளி பிடித்த போதெல்லாம் என்னுடைய அம்மா வெந்நீரில் தேனைக் கலந்து, அதனுடன் சிறிய அளவில் விஸ்கி சேர்த்து, எலுமிச்சம் பழச் சாற்றினைப் பிழிந்து உருவாக்கிய ஒரு பானத்தை எனக்கு அருந்தத் தருவார். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த வரையிலும் கூட அதை அவள் செய்து கொண்டிருந்தாள். மாலை வேளைகளில் இங்கிருக்கும் குழந்தைகள் ரத்தம் ஒழுக சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அவளால் நான் சீராட்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்த உலகம் என்பது இப்படித்தானா? மிக நுட்பமாக பார்த்தால் இதுவேதானா? ஏதோ ஒரு காரணத்துக்காக என்னுடைய அம்மா அந்த பானத்தை ‘தேன் பானம்’ என்று அழைத்தாள். நான் அவளிடம் ‘எலுமிச்சை கலந்த தேன்’ சுவைதான் அதில் அதிகமாக இருக்கிறது என்று எத்தனையோ முறை சுட்டிக் காட்டியபோதும், ‘தான் வைத்த பெயர்தான்  பொருத்தமாக இருக்கிறது’ என்று அவள் அந்த பானத்தை எப்போதும் அவ்விதமே குறிப்பிட்டாள். சூடான, இனிப்பான அதன் சுவை என்னுடைய வாய் முழுவதையும் நிறைத்ததாக நான் இப்போது உனர்ந்தேன். உலகம் முழுக்க இது இப்படித்தான். ஒரு தாயின் வாசனை, பெண்ணுடலில் இருந்து எழும் வாசனையின் வீச்சு, பலமானதும், இனிமையானதும், முடிவற்ற ஆழமும் கொண்ட அந்த வாசனை, இப்போது இங்கு எழுந்தது. வெளியேறுவதற்கு வழியற்று இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து பிளாசாவை நிறைத்தது.

“இது முட்டாள்தனம்!  இப்படிப்பட்ட ஒரு விசயத்திற்காகவெல்லாம் நீ உறவை முறித்துக் கொள்ளக் கூடாது” என்று என்னுடைய அம்மா தொலைபேசியில் என்னிடம் அழுதாள். “திருமண வாழ்வு நீண்டகாலம் நிலைத்திருப்பது. எல்லா விதமான விஷயங்களும் அதில் நிகழவே செய்யும். அதை நீ முறித்துக் கொள்வதாக இருந்தாலும் கூட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அதற்குரிய ஒரு வாய்ப்பை நீ தர வேண்டும்” என்றாள்.

“இப்போது இருப்பதை விட அதிக வயதாகி விட்டால் எனக்கு இரண்டாம் வாய்ப்புக் கிடைக்காது” என்று நான் பதில் சொன்னேன்.

“உன்னுடைய இந்த இளம் வயதில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என்பது விஷயமே இல்லை” என்று என் அம்மா சொன்னாள்.

இதற்கு சம்பந்தமற்ற ஒரு காட்சி என்னுடைய மனதில் இப்போது தோன்றியது. எங்களுடைய பூனை இறந்துவிட்டதற்காக என் முகத்தை சோஃபாவில் அழுத்தியபடி உரத்த குரலில் நான் அழுது கொண்டு இருக்கிறேன்; என் அம்மா தன் முரட்டுத்தனமான கைகளை என் தலை நெடுகிலும் படரவிட்டு விரல் நுனிகளால் மென்மையாக என் தலைமுடியைக் கோதிவிட்டாள்.

என் கணவர் இப்போதும் என்னை நேசிக்காது இருந்திருந்தால்! அவருடைய அன்பு திடீரென மறைந்து போய் விட்டிருந்தால்! அவருடைய காதலி  மோசமான விரும்பத்தகாத  ஒரு பெண்ணாக இருந்திருந்தால்! ஆனால் நிஜ வாழ்க்கையில் விஷயங்கள் அவ்வளவு கச்சிதமாக அமைந்து விடுவதில்லை. நான் இங்கு வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாள் இரவிலும் அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு அவருக்கே தன் மீது நம்பிக்கை இல்லாதது போல இருந்தது. என் அம்மாவின் கைகளில் இருந்த இயல்பான தன்மை எதுவும் அவரிடம் முற்றிலும் இல்லை. ஒருவேளை இது எங்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியாலா?  நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆகிவிட்டதாக நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் இணக்கமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் அவரவர் பங்கிற்குச் சிறப்பாக செய்து கொண்டிருந்த நாங்கள்  உண்மையில் அன்னியர்கள் மட்டுமே. ஆனாலும் நாங்கள் இருவரும் ஒன்றாகக் கழித்த பல வருடங்களால் பலவந்தமாகத் தூண்டப்பட்டு, அன்றிரவு நான் என் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவேன் என்று எனக்குத் தோன்றியது. இந்த தாய்களைப் பார்த்தபிறகு எனக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளை நான் தொலைபேசியில் அவருடன் பேசும்போது பகிர்ந்து கொள்ள விரும்புவேன் என்று நான் நினைத்தேன். மிகுந்த குழப்பமாக இருந்தது…..

இந்தக் குழப்பத்தை மனதுள் வைத்துக்கொண்டு என்னுடைய தோழியின் வீட்டில் அந்த சோஃபாவில் நான் இன்றிரவு மீண்டும் படுத்துக் கிடப்பேன். இந்த அன்னையரை திரைப்படத்தில் ஒரு காட்சியாகப் பாராமல், ஒரு புத்தகத்தில் வரிகளாகப் படிக்காமல், அவர்களை என் கண்ணுக்கு நேராகப் பார்த்ததும், அவர்களுடைய குரலைக் கேட்டதும், அவர்களுடைய ஸ்கர்ட்ஸ் தென்றலில் அசைந்தாடியதையும், அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது எப்படிச் சிரித்தார்கள் என்பதை உற்றுப் பார்த்ததும் – இவை அனைத்தும் மிக முக்கியமான ஒரு கூறாக என்னுள் நுழைந்து, என்னைச் சிறிதளவாவது மாற்றிவிடக் கூடியவை என்று எனக்குள் ஒரு உணர்வு தோன்றியது.

வேறொரு பிறவியாக சட்டென மாறியிருந்த என்னை வெகு தொலைவில் இருந்து நானே பார்த்தேன்.

கருப்பு உடையும் வெண்ணிறக் கழுத்துக் குட்டைகளும் அணிந்திருந்த சில அன்னையர் பிளாசாவுக்கு வெகு தொலைவில் ஒரு திறந்தவெளி விற்பனைச் சாவடியை அமைத்திருந்தனர். காணொளிகள், துண்டுப் பிரசுரங்கள், அஞ்சல் அட்டைகள், டி ஷர்ட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதில் கிடைக்கும் லாபம் அவர்களுடைய இயக்கத்திற்குச் செல்லும் என்ற குறிப்புடன் அங்கு ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. நான் ஒரு டி ஷர்ட்டைத் தேர்ந்தெடுத்தபோது வெண்ணிறக் கழுத்துக் குட்டைகள்  அணிந்த அன்னையரில் ஒருவர் என்னிடம் பேசத் துவங்கினார். எனக்கு ஸ்பானிஷ் மொழி தெரியாததால் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. என்னருகே நின்றிருந்த, பத்திரிகையாளராகத் தோற்றமளித்த ஒரு இளம்பெண்,

” ‘எஸ்’ அளவுதான் பொருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம் மக்கள் அளவு சிறுத்த டி-ஷர்ட்ஸ் அணிந்து கொள்கிறார்கள்” என்று அவள் ஸ்பானிஷில் சொன்னதை எனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னாள்.

என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. எத்தகைய ஆன்ம பலம்! நிச்சயமாக அவளுக்கும் இதற்கு முன் ஒரு குழந்தை இருந்திருக்கும்…அவள் இப்போது இப்படி இருப்பது துயர் மிகுந்த ஒன்று. எந்த நாட்டவராக இருந்தாலும் அம்மாக்கள் அம்மாக்கள் தான். நான் எப்போதாவது தாயாவேனா? இவர்களை எப்பொழுதாவது என்னால் வேறுவிதமாக நினைக்க, வேறுவிதமாகப் பார்க்க முடியுமா?

எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் அனைத்துமே வித்தியாசமான முறையில் புதிப்பிக்கப்பட்டதாகத் தோன்றியது. டி ஷர்ட்டை வாங்கிக்கொண்ட நான் நன்றி சொல்லி பிளாசாவில் இருந்து கிளம்பினேன்.


மஹோகோ யொஷிமொதோ 

தமிழில் : கயல்

[tds_note]

குறிப்பு:

வெகு இயல்பாகக் துவங்கி, பின் மெல்ல மெல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி, மனதின் ஆழத்தில் புதைந்துள்ள பல்வேறு உணர்வுகளைத் தூண்டி, தன் போக்கில் கேள்விகளை எழுப்பியபடி பயணிக்கும் இந்தத் “தேன்”, ஜப்பானியப் பெண் எழுத்தாளரான மஹோகோ யொஷிமொதோவின் சிறுகதை. “சமகால நிகழ்வுகளின் காரணமாக ஜப்பானின் இளைய தலைமுறையைப் பீடித்திருக்கும் கடும் மனச் சோர்வு”, “பயங்கரமான அனுபவங்கள் எப்படி ஒருவரின் வாழ்வை வடிவமைக்கின்றன” ஆகிய இந்த இரு முக்கிய கருப் பொருட்களைச் சுற்றியே தன் படைப்புலகம் பிணைக்கப் பட்டிருப்பதாக மஹோகோ கூறுகிறார்.

யாமோமோதோ ஷுகோரோ விருது, முதல் நாவலான அம்ரிதாவுக்கு முரசாகி ஷிகிபு விருது, இத்தாலிய விருதான ஸ்கேணோ இலக்கிய விருது, கேப்ரி விருது ஆகியவை இவருடைய விருதுப் பட்டியலில் உள்ள சில விருதுகள்.

மொழிபெயர்ப்பாளர்: 

முனைவர் கயல் வேலூரில் தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து 20 ஆண்டுகாலக் கல்விப் பணியில் வணிகவியல் துறை விரிவுரையாளராக மேலாண்மையியல் துறை இயக்குனராகப் பணியாற்றி, தற்போது வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியின் வணிகவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரின் கவிதை நூல்கள்: கல்லூஞ்சல் (2015) மழைக்குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019). அடுத்ததாக உயிரளபெடை என்கிற தொகுப்பு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

[/tds_note]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.