பார்வையாளர்


ன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே, நான் கேள்விப்பட்ட அல்லது கேள்விப்படாத யாரோ ஒருவரைக் குறித்து அவர் எங்கே இருக்கிறார் என விசாரிக்க வந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் இந்தப் போர் வீரர் முரயாமா, காகிதத்தின் ஒரு துண்டை கையில் இறுகப் பற்றிக்கொண்டு எங்கள் மகன் யசுஷி-யைத் தெரியும் என்கிற தகவலுடன் வந்தார்.

நான் அவரை நம்பவில்லை. அவர் வெறுமனே கையில் கொண்டு வந்திருந்த துண்டுக் காகிதத்தில் தொடங்கி, வாசலுக்கு ஓர் அடி பின்னே நின்ற அவரின் மெலிந்த, கலையிழந்த படபடப்பான முகம் வரை என் கண்கள் அலைந்தன.  இந்த நாட்களில் மிக அரிதாகக் காணக்கூடிய மரியாதையான உடல்மொழி இது.  தோள் பையை இறுகப் பற்றிக்கொண்டு, நயமாக அவர் பேசினார். அந்தக் காகிதத்தைக் குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருந்தாலும் அதைப் பார்க்க நான் கேட்கவில்லை. நிழற்படத்தின் நெகடிவை, சுட்டெரிக்கும் சூரியனில் பிடித்து பின்பக்கமாக பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி, பரபரப்பான சாலையில், களைத்துப் போனவராக, அவமானத்திற்குரியவராக, கறுத்து சுருங்கிப் போய் அடிபட்ட நாய் போல அவர் இருந்தார். விரிசலை விட சற்று அகலமாகத் திறந்திருந்த, மரக் கதவின் வழியாக நான் கேட்டுக் கொண்டிருந்த போது, என்னை நேருக்கு நேர் பார்க்க ஒருமுறை கூட அவர் முயற்சி செய்யவில்லை. போகும்போது என் கணவர் கொடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி, சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வீரரை நான் முன் அறைக்கு அழைத்து வருவதை நானே கவனித்தேன். சில தேயிலை இலைகள் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் நூடுல்ஸ் ஆகியவற்றைத் தேடி எடுப்பதற்காக, இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வந்தேன். அதிகபட்சம் என்னால் முடிந்தது அவ்வளவுதான்.

காகிதம் பழுப்பு நிறத்தில் இருந்தது. நைந்து பளபளக்கும் ஆடையில், நலிவுற்று அலங்கோலமாக அவர் இருந்தார். தேநீரை ஊற்றும் போதும், என்னுடைய மாலை நேர பங்கில் இருந்து எடுக்கப்பட்ட நூடுல்ஸை அவருக்குப் பக்கத்தில் வைத்த போதும் காகிதத்தைப் பார்க்கும் ஆர்வத்தை நான் அடக்கிக் கொண்டேன். பக்கவாட்டில் நகரும் கண்ணாடி கதவிற்கு வெளியே அசைகின்ற ஒஸ்மாந்தஸ் மரத்தின் பாகங்கள் வழியாக ஊடுருவும் நண்பகல் சூரிய ஒளியால் இந்த அறை மங்கலான வெளிச்சத்தால் நிறைந்தது. அவர் சுருட்டி வைக்கப்பட்டவரைப் போல் அல்லாமல் சிறிது சுருங்கி இருப்பவராகவேத் தோன்றியது. ஒருவித உள்ளார்ந்த இறுக்கத்தினால் அவரது தசை நார்கள் மற்றும் தசைகள் காயமடைந்திருந்தன. அதனால், அவரைச் சுற்றி இருந்த காற்றில் கெட்ட வாடை அடித்தது. அவரைப் பார்த்தபடி, எப்படி அவரை வெளியே துரத்தப் போகிறேன் என திகைத்தேன். மாலையில் என் கணவர் திரும்பி வருவதற்கு முன்பாக, நான் இன்னும் கூடுதலாகச் சுத்தம் செய்ய வேண்டிய பணிக்கு குறைவான நேரமே எனக்கு இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்பைப் பற்றி என் கணவருக்கு ஏதும் தெரியக் கூடாது என்கிற ஒரு விசயத்தில் நான் தெளிவாக இருந்தேன். பின்னோக்கிப் பார்க்கையில், யாருக்காக என என்னால் சொல்ல முடியாவிட்டாலும், வேலையில் இருக்கும் போது இது ஒரு பாதுகாப்பு உள்ளுணர்வு என்பதை நான் புரிந்துகொண்டேன்.

முரயாமா உடனடியாகப் பேசவில்லை. பதிலாக, தன் பார்வையை அறையைச் சுற்றிச் சுழல விட்டார். வெளிரிய மங்கலான நிறத்திலான அலங்கார ஜாடியைத் தவிர, அறை தற்போது வெறுமையாக இருந்தது. அது, சீனாவில் வேலை செய்த போது என் கணவர் அனுப்பியது. மற்ற அனைத்தையும் போலவே, இந்த ஜாடியும் நீண்ட நாட்கள் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதன் மங்கிய நிறம், ஒரு மூட்டை தானியம் மற்றும் சில காய்கறிகளின் தண்டுகளுக்காக விரைவில் கொடுக்கப்படும். ஆனால், தற்போதைக்கு இது அறைக்குள் உற்சாகம் அளிக்கிறது, அதன் வடிவமைப்பு – இத்தகையத் தாக்கம் ஏதும் முரயாமா மீது இருப்பதாகத் தெரியாவிட்டாலும் – கண்களைக் கவரக் கூடியது. ஆன்மாவைச் சாந்தப்படுத்தக் கூடியது. அதைப் பார்த்த பிறகு அவர் மீண்டும் அமைதியானார். நான் எழுந்து கண்ணாடிக் கதவுகளைத் தள்ளித் திறந்தேன். 

வெளியே காற்று அசைவற்று இருந்தது. இது கோடைகாலம் என்பதை ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்துவதற்காக என்பது போல சில்வண்டு பூச்சிகள் எழுப்பும் ஆரவாரத்தில் வானம் கோலாகலமாகக் காட்சியளித்தது. பட்டம் விடுவதற்கும் தர்ப்பூசணி பழத்திற்கும் உகந்த வெப்ப நாட்கள் இவை. தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் இரண்டுமே சில காலமாக பருவகாலத்திலிருந்து தொலைந்து போய்விட்டன. உண்மையிலேயே, அதற்குள் ஜுலை மாதம் வந்துவிட்டதை நம்பவே கஷ்டமாக இருந்தது. சரணடைந்து, போர் வீரர்களும் அகதிகளும் வெள்ளம் போல திரும்பி வந்து – இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றி – காலமெல்லாம் காத்திருந்தவர்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் துயரமான செய்தியைக் கொணர்ந்து ஏறக்குறைய ஓர் ஆண்டு ஆகிவிட்டது. ஒரு காலத்தில் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவெடுத்து ஓடிப்போன யசுஷி, தற்போது உயிர் பிழைத்திருந்தாலும் கூட, இந்த வீட்டிற்குத் திரும்பி வருவதைத் தேர்வு செய்ய மாட்டான் என அறிந்து, தற்போது வரை, நம்பிக்கைத் தரும் எதற்கு எதிராகவும் என்னையே நான் மனதளவில் தயார் செய்திருந்தேன். ஆனால் இப்போது? சாதாரண அரக்கு பூசிய மேசையின் மூலையில் இருந்த சுருங்கியக் காகிதத்தை மீண்டும் நோட்டம் விட்டபடி நான் மறுபடியும் அமர்ந்தேன்.

தன் பங்கிற்கு, முரயாமா என்னை மறந்துவிட்டது போல் தோன்றியது. மீண்டும், தேநீர் மற்றும் நூடுல்சை அவரை நோக்கித் தள்ளி வைத்தேன். நான் ஆச்சர்யப்படும் அளவிற்கு, அவர் நிமிர்ந்து பார்த்தார். எங்கள் கண்கள் சந்தித்தன. இந்த மனிதர், இந்தப் போர் வீரர் எங்கே இருந்தாரோ அங்கே தான் யசுஷியும் இருந்திருக்கிறான்; இந்தப் புரிதல், கூரான ஆயுதத்தால் திடீரென்று குத்தியது போல, காற்று திரையை விலக்கியது. ஒரு விநாடியில் நான் ஏறக்குறைய என் மகனை உணர்ந்தேன். அவனுடைய இருத்தல் என் முன்னே இருக்கும் இந்த மனிதர் போல தொடக்கூடிய தூரத்தில் இருந்தது. அவனின் வடிவம், அவனது முகம் ஏறக்குறையக் காணக்கூடியதாக இருந்தது. முரயாமா நகன்றதும் – ஒருவேளை என்னுடைய தீவிரத்தை உணர்ந்து – படாரென்று என்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் அறைக்குத் திரும்பினேன்.

உணவு எடுத்து உண்ணப் பயன்படுத்தும் தன்னுடைய ஒரு ஜோடி குச்சிகளை (Chopsticks) முரயாமா  எடுத்தார். அவரின் இரண்டு கைகளையும்  ஒன்றாகக் கொண்டுவந்து நன்றியுடன் தலையை ஆட்டிவிட்டு சாப்பிடத் தொடங்கினார். நூடுல்சை மென்று, சூப்பைப் பருகி அவர் மெதுவாகச் சாப்பிட்டார். மெல்ல, கவனமாகச் சாப்பிட வேண்டும் என முன்பு யாரோ ஒருவர் சொன்ன அறிவுரைக்குச் செவிசாய்ப்பது போல அவரின் அசைவுகள் இருந்தன.  ஜோடிக் குச்சிகளைத் திருப்பி வைத்தபோது, இதை அவரின் அம்மா வலியுறுத்தினார் என்னும் அளவிற்கு அவர் விளக்கினார். “நல்ல விஷயம் என்னவென்றால், எனக்குச் செரிமானப் பிரச்சினை வந்ததே இல்லை. மேலும் இந்த நாட்களில் பசியுடன் இருக்க அது எனக்கு உதவுகிறது”, அவர் கடைசியாகச் சரியாகச் சாப்பிட்டது இரண்டு நாட்களுக்கு முன்பாக, அவரின் வீடு மற்றும் சுற்றுவட்டாரம் முழுவதும் குண்டுவீச்சினால் இடிந்து கிடப்பதை அவர் கண்டறிந்த போது என்று கூடுதலாகக் குறிப்பிட்டார்.

“உங்கள் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடிந்ததா?” வீட்டில் இருந்த பொருட்களை வேகமாக நினைத்துக்கொண்டு, என் மனம் அனுப்பிய அவநம்பிக்கையை மறைத்தபடி நான் கேட்டேன்.

முரயாமா தலையை அசைத்தார். இடிபாடுகளில் இருந்து மீண்டவர்கள் தங்கியிருந்த குடிசைகளின் வழியாக அவர்களை அவர் அலைந்து தேடியிருக்கிறார். ஆனால், யாருமே அவர்களைப் பார்க்கவோ அவர்களைப் பற்றிக் கேள்விப்படவோ இல்லை. “அப்போதுதான் நான் தனாகாவை நினைத்துப் பார்த்தேன் – அதாவது, அவன் அப்படித்தான் தன்னை அழைத்தான்: தனாகா ஜிரோ. உண்மையிலேயே, காரணத்தை என்னிடம் அவன் ஒருபோதும் சொன்னதில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியுமா, ஒரு நாகரீகமான அழகான பெயரைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் அந்தப் பெயரை அவன் தேர்ந்தெடுத்தான் என நான் எப்போதும் வியந்திருக்கிறேன். அதைப் பற்றிப் பேசுவதற்கு ஒருபோதும் அவன் விரும்பியதில்லை. மேலும் உண்மையைச் சொல்வதென்றால், இந்த வீட்டை நான் கண்டுபிடிக்க முடிந்ததைக் குறித்து ஆச்சர்யப்படுகிறேன். குண்டுகள் விழுந்ததினால் அல்ல, ஆனால் இதையும் அவனே முடிவு செய்திருப்பான் என நினைக்கிறேன்”.  

நான் தலையாட்டினேன், ஆனால் நான் தடுமாறினேன். தனாகா ஜிரோ. எங்களுக்கு அந்தப் பெயரைத் தெரியும். நாட்டுப் பற்றுக்கு எதிரான கருத்தியல் கொண்டிருந்ததாக ஒரு முறை என் கணவரை விசாரணை செய்த காவல் அதிகாரியின் பெயர் அது. எப்படி யசுஷி அந்தப் பெயரைத் தாங்கினான், என்னால் கற்பனை செய்ய முடியவில்லை; அவன் மிகவும் சிறு குழந்தையாக இருந்தான், நாங்கள் ஒருபோதும் அந்தப் பெயர் குறித்து பேசியதும் இல்லை. “எங்களைப் பற்றி ஏதாவது யசுஷி சொன்னானா?” நான் கேட்டேன், என் நாடி துள்ளியது.

முரயாமா வெளியில் பார்த்தார். “தனாகா வெளிப்படையாகப் பேசக்கூடியவன். ஆனால், எங்கள் எல்லாருக்கும் வேறு எண்ணம் இருந்தது. துருவி கேட்காமல் இருக்க நாங்கள் முயற்சி செய்தோம்.”

“இருந்த போதிலும், அவன் தன் முகவரியை உங்களிடம் கொடுத்துள்ளான். நீங்கள் அவனுக்கு நெருக்கமானவராக இருந்திருக்க வேண்டும்”, நான் சொன்னேன்.

முரயாமா, காகிதத்தின் மீது பார்வையைப் படரவிட்டார். “உண்மையாகவே, ஏன் அவன் இப்படி செய்தான் என்பது எனக்குத் தெரியாது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல நாங்கள் தயாராக இருந்தோம். இயந்திரங்களைக் கையாளும் ஆற்றல் எனக்கு இருந்ததால் வேறொரு திசையில் பயணிக்க கடைசி நிமிடத்தில் என் குழுவில் இருந்து என்னை வெளியே எடுத்தார்கள். அவனைத் தேடி நான் பின்நாளில் வருவேன் என நினைத்து இந்தக் காகிதத்தை நான் வைத்திருந்தேன்”

“அப்படியென்றால் இது உங்களுடைய சொந்த முடிவா? இவ்வளவு தூரம் வருவதற்கு?”

முரயாமா தலையை ஆட்டினார்.

“அந்த நாட்களில் எங்கே இருந்தீர்கள்?”

“லூசோன். ஆனால் சிங்கப்பூரில் இருந்தே அவனை எனக்குத் தெரியும். எங்கள் குழுக்கள் அங்கே ஒன்றாக இருந்தன,” அவர் விளக்கினார்.

“எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் சில காலம் அறிந்திருக்கிறீர்கள். யசுஷி உம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்,” நான் மீண்டும் முயற்சித்தேன்.

முரயாமா தலையை அசைத்தார். “அதுதான், அவன் ஒருபோதும் நம்பியதில்லை. எப்போதும் அவன் நகைச்சுவை செய்துகொண்டே இருப்பான். என்ன நினைக்கிறான் என்பதும், அவனுக்குள் என்ன இருக்கிறது என்பதும் தெரிந்துகொள்வது மிகவும் கடினம்”

“ஆனால் அவன் தன் பெயரை உங்களிடம் சொல்லியுள்ளான். அவனின் முகவரியை உங்களிடம் கொடுத்துள்ளான். அவனுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும்”

“அவர்கள் சென்ற பிறகும் நான் அங்கேயே இருப்பேன் என்பது அவனுக்குத் தெரியும் என்பது போன்றா? பாருங்கள்” – அவன் தொடர்ந்தான் – “வேண்டுமென்றால் அவனது பொருட்களை நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்று கூட நான் அவனிடம் சொன்னேன், உங்களுக்குத் தெரியுமா, ஆனால் அவன் எதுவுமே சொல்லவில்லை. மேலும் அடுத்த நாளே அவர்கள் போய்விட்டார்கள்.”

“ஆனால், அவன் உங்களிடம் முகவரியைக் கொடுத்துள்ளான். அவன் தன்னைப் பற்றி மழுப்பலான பதில் சொல்பவன் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். அவன் ஆபத்தானப் பயணத்தை மேற்கொண்டது, உங்களுக்குத் தெரியவில்லையா?”

முரயாமா பதில் சொல்லவில்லை. சிறிது நேரம், யசுஷிதான் இந்தக் காதிதத்தை இவரிடம் கொடுத்திருப்பானா! என ஆச்சர்யப்படாமல் இருக்க என்னால் முடியவில்லை. வீரர்களின் குடியிருப்பு பகுதியானது எல்லாருக்கும் பொதுவானது. முரயாமா ஒருவேளை திருடியிருக்கலாம், அப்படியா? அல்லது வேறொரு காரணத்திற்காக இவர் இங்கே வந்திருக்கலாம் – ஆனால் அது என்னவாக இருக்கும்? கடைசியில் நான் என் தலையை அசைத்தேன். 

“முரயாமா நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். பெரும்பாலும் நீங்கள் அனுமானித்தபடி, சில காலமாக யசுஷி எங்கே இருக்கிறார் என்கிற எந்தத் தகவலும் நம்மிடம் இல்லை. நிச்சயமாக, நமக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன – போர்ப்படையில் சேர்ந்துகொள்வதற்கு அவன் எப்போதும் உறுதிபூண்டிருந்தான் – நாம் விசாரித்தவரை அவனைப் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. மேலும், ஏன் என இப்போது எனக்குத் தெரிகிறது. ஒரே ஒரு தகவல் நீங்கள் எனக்குச் சொல்லலாம். யசுஷி இன்னும்—-?” என் குரல் கட்டியது.

முரயாமா தன் பார்வையைத் தாழ்த்தினார். யசுஷியின் படைப்பிரிவானது, ஒரு தீவில் முகாம் அமைக்க நியமிக்கப்பட்ட ஒரு படை அணியின் ஒரு பகுதியாக இருந்தது. “சூழ்நிலைகளைப் பார்க்கும் போது…..” அவர் தன் முழங்கால்களை இறுகப் பற்றிக்கொண்டார்.

நான் குனிந்து என் கைகளைப் பார்த்தேன். பற்றாக் குறையால் இப்போது சொற சொறப்பாக இருந்தன. நிச்சயமாக, எந்த ஒரு தாயையும் போல, இதை நான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் உறுதி செய்யப்பட்ட முடிவானது என்னை பற்றி இழுத்துக்கொண்டிருந்த என் நம்பிக்கையை மூழ்கடித்தது. நான் நடுங்கத் தொடங்கினேன்.

முரயாமா தன் கைகளை மேசையின் மீது வைத்தார், “கவனியுங்கள், உண்மை என்னவென்றால், அங்கே என்ன நடந்தது என்பது யாருக்குமே நிச்சயமாகத் தெரியாது. மேலும், திரும்பி வரப் போகிறவர் யார் என்பதும் இந்த நாட்களில் நிச்சயமாக உங்களுக்குத் தெரியாது. குடும்பத்திற்குச் சொந்தமான கல்லறைகளில் எழுதப்பட்ட தங்கள் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்காகவே தாங்கள் திரும்பி வந்திருக்கிறோம் போல என எல்லா வீரர்களும் மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள்” என்றார்.

அவருடைய கனிவான எண்ணத்திற்கு நன்றியோடு நான் தலையாட்டினேன், ஆனால் நான் முற்றிலும் சோர்ந்துவிட்டேன். வெகுநாட்களாக நான் கட்டுப்படுத்தி வைத்திருந்த களைப்பு இது, மேலும் தற்போது இது என் சதைக்குள் ஊடுருவியது, என்னுடைய மூட்டுக்களை துளைத்தது. இதுவரை என்னை இணைத்திருந்த எடையானது வெட்டப்பட்டது போல், மிதப்பதாக என்னை விசித்திரமாக உணர வைத்தது. இத்தனை ஆண்டுகளாக யசுஷியைச் சுற்றிச் சுழன்ற என் உடல் முழுவதும் எனக்குக் கீழே ஒரு பெருங் குவியலில் சரிந்தது. நான் திரும்பி, பக்கவாட்டில் தள்ளி திறக்கக்கூடிய கண்ணாடிக் கதவுகளைப் பார்த்தேன். ஒஸ்மாந்தஸ் மரத்தின் இலைகள் நாணயங்கள் போல மின்னின, விரைவில் மறையும் சில்வண்டு பூச்சிகள் ஒரே மாதிரி சேர்ந்து சத்தமாகக் கிறீச்சொலியுடன் பாடின. என் வலதுபுறம் இருந்த மங்கலான பச்சை நிற ஜாடியை நான் பார்த்தேன். அடக்கமான  வளமான அதன் வடிவமைப்பு தற்போது உட்புற வெற்றிடத்தை மட்டுமே முக்கியத்துவப் படுத்துவது போல் தோன்றியது. இந்த ஜாடி ஏன் முரயாமா மீது சாந்தமான விளைவை ஏற்படுத்தவில்லை என்பதை நான் கண்டு கொண்டேன்.

“நான் அதை..?” சைகை காட்டி நான் காகிதத்தைக் கேட்டேன்.

மன்னிப்புக் கேட்டபடி, என்னிடம் அதை முரயாமா கொடுத்தார்.

தாள் மிருதுவாக இருந்தது. நைந்த மடிப்புகள் முடைநாற்றத்தை வெளியேற்றின. மேலும், அது என் மகனின் கையெழுத்துத்தான் என நான் உடனடியாகக் கண்டுகொண்டேன். சரிசெய்ய வேண்டும் என அவன் முன்னமே தீர்மானித்திருந்ததற்கும் மாறாக அவனுடைய அரைகுறையான எழுத்து இன்னும் இடதுபுறம் சாய்ந்தபடியே இருந்தன. மேலும், இந்தச் சான்று, பழக்கப்பட்ட கூரான ஆயுதம் குத்துவது போல, என் இதயத்தில் ஊடுருவி சிறப்பான நினைவுகளை வெளியேற்றியது. யசுஷியின் இந்தத் துண்டுச் சீட்டு என் கைக்கு வந்து சேர்ந்ததற்காக அந்த நினைவுகள் விரைவாக நன்றியுணர்வின் அடையாளங்களாக மாறின.

மிகுந்த அக்கறையுடன் அவர் இந்தக் காகிதத்தை கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதற்காக முடிந்த மட்டும் நன்றி சொல்வதற்கு நான் எத்தனித்தேன், ஆனால் நான் நிமிர்ந்து பார்த்த போது அவரின் முகத்தில் விநோதமான, வழக்கத்துக்கு மாறான வெளிப்பாடு குறுக்கிட்டிருப்பதை நான் பார்த்தேன். இந்தத் தருணத்தைக் கவனித்துக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருந்தவர் போல பட்டும் படாமலும் விலகியே இருந்து – மெல்லிய தளர்வான உடையில் தனிமையில் இருந்த நடுத்தர வயது பெண்ணை – உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மேலும் என் வயிறு இறுகியது. உண்மைதான், இவர் போர் வீரர், நான் நினைத்துப் பார்த்தேன், வீதிகளில் பரவி வரும் பல வகையான வதந்திகள் என் காதுக்கு அருகே திடீரென முணுமுணுத்தன. 

அவர் கண்ணியமாக நடந்துகொண்டார், அவருக்கு யசுஷியைத் தெரிந்திருக்கிறது, படையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார், இதன் அர்த்தம் என்ன? நான் அவரின் கைகளில் நோட்டம் விட்டேன். தடித்த ஆனால்  வலுவுள்ள கைகள். தூய நீல நிறம் படிந்து உறைந்த அவரின் நீளமான விரல்கள் தேநீர் கோப்பையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன. என்னிடம் எஞ்சியுள்ள நான்கு கோப்பைகள் அடங்கிய தொகுப்பின் ஒரு கோப்பை அது. மேலும் என் தோல் முறுக்கியது. அச்சத்தில் ரோமங்கள் குத்திட்டு நின்றன. வீரருக்கு நான் எவ்வகையிலும் ஜோடி இல்லை – இப்படிக் காய்ந்து கிடப்பவருக்கும் – என்பதை நன்கு உணர்ந்து ஜாடிக்கு அருகில் நான் சாய்ந்தேன்.

நான் சுதாரித்ததை முரயாமா கவனித்ததாகத் தெரியவில்லை. மேலும் அவர் பேசியபோது அவரது குரல் கனிவாக இருந்தது. தன் வருகைக்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு வேண்டினார். என் உபசரிப்பிற்கு நன்றி சொல்லியபடி, தனாகா திரும்பி வந்திருப்பான் என்கிற முரண்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கையுடன் மட்டுமே தான் வந்ததாக மறுபடியும் குறிப்பிட்டார். “எனக்கு வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த நாட்களில், போர் வீரர்களாகிய எங்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இல்லை. இவை எல்லாம் எதற்காக என நினைக்கவே கடினமாக இருக்கிறது” அவர் சொன்னார்.

நான் பதில் சொல்லவில்லை. என் முகத்தைத் துடைப்பதற்காக என் கைக்குட்டையை நான் வெளியே எடுத்தேன். பிறகு நான் எழுந்து சன்னல் கண்ணாடிகளை அகலமாகத் தள்ளினேன்.

வெளியே பகல்பொழுது இனிமையாகக் காட்சி அளித்தது. இளந்தென்றலின் காற்று குறைய ஆரம்பித்தது. கூரையின் இறவானப் பகுதி ஏற்படுத்திய குளிர் நிழலானது தரையில் நீளத் தொடங்கியது. பக்கவாட்டில் தள்ளித் திறக்கும் கண்ணாடி கதவுகளுக்கு கீழே உள்ள கல் படிக்கட்டுக்களை முழுமையாக மறைப்பதற்கு ஏதுவான – நாங்கள் எப்போதும் விரும்பிய, ஆனால் எங்களிடம் இல்லாத – பந்தல் அமைக்க வேண்டும் என்பதை அது நினைவூட்டியது. மழை காலத்திலும் ரகசியமாக புகை பிடிக்கலாம் என பெரும்பாலும் நினைத்தவனாக, இந்த எண்ணம் குறித்து யசுஷி கூட புன்னகைத்தான். ஒப்புதல் தந்த ஊக்கத்தில், அதைக் கட்டி முடிப்பதற்காக என் கணவரும் சில காலம் கணிசமான ஆற்றலைச் செலவிட்டார். யசுஷி வீட்டிற்கு வராமல் போன ஓர் இரவு வரை, இருவரும் தற்காலிகமாக ஒருவர் மற்றவரைச் சகித்துக் கொண்டார்கள். அந்த இரவில் சில்வண்டு இதே போல் தான் இடைவிடாமல் ஒலி எழுப்பியது. நினைவுகளின் வேதனை எல்லாவற்றையும் எனக்கு தெளிவுபடுத்தின. நான் மீண்டும் அமர்ந்து சொன்னேன், “மக்கள் களைத்துப் போய்விட்டார்கள். பழி கூறுவதற்காக யாரையாவது ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவைகள் உங்களைக் துன்பப்படுத்தாதவாறு நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இம்முறை பதில் சொல்லாமல் இருந்தது, முரயாமா. அதற்குப் பதிலாக, தேநீர் கோப்பையை இறுகப் பற்றினார், அதைச் சுழற்றினார். அவர் வந்த வழியே அவரை எப்படி அனுப்புவது என யோசிக்கத் தூண்டிய என் பதட்டத்தை மறைத்தபடி, அவரது நெற்றி லேசாக பிரகாசித்திருந்ததைக் கவனித்தேன். நான் அவரைத் தூண்ட விரும்பவில்லை. ஆனால், நான் சிறைபட்டிருப்பதாக உணரத் தொடங்கினேன். அவரது உடல் அமைப்பு பயமுறுத்துவதாக இல்லாவிட்டாலும் என்னை ஒடுக்கத் தொடங்கியது. ஏன் இவர் இங்கே வந்தார்? இந்தக் கேள்வி என் இதயத்தில் முகிழ்த்தது. அர்த்தம் புரியாத பதட்டம் என் முதுகில் பரவியது. நான் சொன்னதை அவர் கேட்கவில்லை என நினைத்து, சிறிது நேரம் கழித்து மறுபடியும் நான் சொன்னேன், “இந்தக் காரியங்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைகள் உங்களிடம் இருக்கின்றன.”

இது வேலை செய்தது போல, நான் சொன்னதை முரயாமா கேட்டார். ஏனென்றால் என்னைப் பார்த்து, என் பரிவினைப் பாராட்டுவதாகவும், ஆனால் மக்களால், குடிமக்கள் என அழைக்கப்படுகிறவர்களால் தான் களைத்துப் போய்விட்டதாகவும், சந்தோசப்படுவதற்கு காரணங்கள் இருக்கும் போது அவர்கள் கம்பளம் விரிக்கிறார்கள் ஆனால் முன்னேறுவது கடுமையாகும் போது அதைத் துடைத்து எடுத்துக்கொள்கிறார்கள் எனவும் முகத்தில் அடித்தாற்போல் கூறினார்.

“போர்க் களத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போரிடுகிறவர்களைப் பழி சொல்ல மக்கள் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் எங்களுக்கு அனுப்பியவை அறமற்றது, கழிவு, அனைத்தும் மிகவும் தரமற்றது. எங்களுக்கு அது பிடித்தது என நினைக்கிறீர்களா? நாங்கள் யாருக்காக இவை அனைத்தையும் செய்ததாக நினைக்கிறீர்கள்?”

“ஆனால், எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு மட்டும் தெரிந்திருந்தால், முறைப்படி எங்களுக்குச் சொல்லியிருந்தால்—–”

“பிறகு என்ன? என்ன செய்திருப்பீர்கள்?” 

“சரி, அங்கே ஏதாவது இருந்திருக்கும், யாராவது அங்கே இருந்திருப்பார்கள்—”

“பேரரசர் மாதிரி, அப்படித்தானே சொல்கிறீர்கள்? அவர் சிரித்தார். “உண்மை என்னவென்றால், யாருக்குமே தெரிந்துகொள்ள விருப்பமில்லை. உங்களுக்குத் தேவையானதெல்லாம் அழுக்கான வேலையைச் செய்ய யாராவது வேண்டும் மற்றும் இப்போது நாங்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்.”

“ஆனால், நீங்கள் எப்படி அப்படிச் சொல்ல முடியும்? கட்டளைகளைப் பின்பற்றுவதற்காக உங்களை யாரும் குறை சொல்ல முடியாது” நான் சொன்னேன்.

“கட்டளைகள்?” முரயாமா என்னைப் பார்த்தார். “உண்மை, கட்டளைகளை நாங்கள் பின்பற்றினோம். நாங்கள் எப்போதும் கட்டளைகளைப் பின்பற்றினோம். கட்டளைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

லூசோன், சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வந்த –  யாருக்குத் தெரியும் இன்னும் வேறு எங்கெல்லாமோவென – அழுக்கான அவரின் கைகளை மீண்டும் நோட்டம் விட்டபடி, “தயவு செய்து” என்று நான் சொன்னேன். “இன்னும் சில மாதங்களில் இவை சரி செய்யப்படும். பிறகு இது வேறுமாதிரியாக இருக்கும். இன்னொரு கோப்பை தேநீர் வேண்டுமா?”  மீதம் ஏதும் இல்லை என எனக்குத் தெரிந்தாலும், நான் கொடுக்கத் தயாராக இருப்பது போல் காட்டிக்கொண்டேன்.

முரயாமா தன்னுடைய தேநீர் கோப்பையை நோட்டம் விட்டார். பிறகு அவர் முன்னோக்கிக் குனிந்தார், “கவனியுங்கள், பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா, உங்கள் மகன்——” அவர் நிறுத்தினார்.

ஒரு திடீர் அச்சம் என் தொண்டையைக் கவ்வியது; என் ரவிக்கையின் கழுத்துப் பகுதியை இறுகப் பற்றிக் கொண்டேன். “என்ன? யசுஷிக்கு என்னாச்சு?” 

முரயாமா அசையவில்லை. பிறகு அவர் தன் உதடுகளை நக்கினார். “அதை மறந்துவிடுங்கள். தனாகா ஒரு முன் மாதிரியான இளைஞன்,” அவர் சொன்னார். அவரின் குரல் கடமைக்காக மற்றும் வெறுமையாக இருந்தது.

அப்படியென்றால் ஏன் இவர் வந்தார்? ரகசியத்தைச் சொல்லவா? நான் காகிதத்தை எடுத்து யசுஷி எழுதியிருப்பதை மீண்டும் ஆராய்ந்தேன். அவனைக் காட்டிக் கொடுக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை, ஆனால் நான் ஒரு போர் வீரனின் தாய் என்பதைக் கருத்தில் கொண்டு வதந்திகளுக்கு நான் செவிகொடுக்கவில்லை. பயமூட்டும் நிகழ்வுகள், அழுக்கான விவரங்கள், அனைத்தும்,  என்னை வந்து சேருவதற்கு முன்பாகவே பல வகைகளில் அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அவை ரகசியமான முத்துக்களைச் சேகரிப்பது போல என் மனதுக்குள்ளே இருக்கின்றன. நான் மீண்டும் காகிதத்தை மேசையில் வைத்தேன். “நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள்.  நீங்கள் எதைக் குறித்துச் சொல்ல வந்தீர்கள்?” 

முரயாமா நிமிர்ந்து உட்கார்ந்தார், வியந்தார். சிறிது நேரம் அவரது முகம் தெளிவாக இருந்தது. அவரது கண்கள் விரிந்திருந்தன. பிறகு அவர் ஜாடியைப் பார்த்தார். அவரின் முகபாவனை மாறியது. மீண்டும் என்னைப் பார்த்து, தனாகா, சில மதிப்பீடுகள் மற்றும் குணாதிசயங்களை வலியுறுத்திய, மேலும் எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஒரு நேர்மையான போர்வீரன்  என்பதை எனக்கு உறுதிப்படுத்தினார்.

“விசயம் என்னவென்றால் நாங்கள் செய்ய வேண்டிய வேலை இருந்தது; எது அவசியமோ அதை நாங்கள் செய்ய வேண்டும். எங்களுக்குத் தேவையான பொருட்கள் இருந்தன என்பது அதற்கு அர்த்தமில்லை. பித்து வெறி ஏறி, கள்ளங்கபடம் இல்லாதவர்களை வெட்டி ஒருவரையொருவர் தின்ன வைத்தது. நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் அதைக் குறித்துக் கேள்விப்பட்டுள்ளீர்களா? தனாகா ஒரு தீவில் இருந்தான். ஆனால் அவன் தீவு முழுவதும் கிராமங்கள், காடுகள் இருந்தன. நிச்சயமாக, அங்கே மோசமானவர்கள் இருந்தார்கள். நிச்சயமாக நாம் நம் நிலையைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கருத்து என்னவென்றால், நாங்கள் அறிய விரும்புவது என்ன என்று சொல்வதற்கு அவர்கள் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தார்கள் என்றால்….. ஆனால் அந்தப் பூர்வகுடிகள்”- அவர் பதட்டத்துடன் சிரித்தார் – “எங்களுடைய நிழற்படங்களின் தொகுப்பு ஏட்டைப் பார்க்க ஆசையா?”

என் இதயம் உறைந்தது. தென்றல் காற்று அறைக்குள் வரத்தொடங்கிய போதிலும் எண்ணெயுடன் தற்போது வியர்வையும் கலந்த அவரின் முகத்தை நான் உற்றுப் பார்த்தேன். அவரது உடலின் வாசத்தை என்னால் நுகர முடிந்தது. திடீரென்ற அவரது கேள்வியானது இருண்ட ஆழத்தை மட்டுமே மறைத்திருக்கும் கண்ணாடி ஏரி போல் இருந்தது. பதட்டம் ஏற்படுத்திய மனவருத்தம் என்னை பயமுறுத்தியது. என் கைக்குட்டையை நான் கசக்கிப் பிடித்திருந்தேன். ஆமாம், நான் தலையை ஆட்டினேன். ஆமாம், நான் அவரின் நிழற்படங்களின் தொகுப்பு ஏட்டைப் பார்க்க விரும்பினேன்.

முரயாமா தன் நெற்றியைத் துடைத்துவிட்டு, தன்னுடைய தோள் பையை எடுத்தார். தொடக்கத்தில் யசுஷி வேறொரு படையணியில் இருந்து வந்ததால் தன்னுடைய இந்தத் தொகுப்பில் இல்லை என்பதை விளக்கிவிட்டு, இராணுவ வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும் என உறுதியளித்தார். “அதைப் பார்த்தீர்களா?” புத்தகத்தில் இருந்த முதல் குழு நிழற்படத்தை அவர் சுட்டிக் காட்டினார். “அது நான்”. மற்றொரு படத்தைச் சுட்டிக் காட்டினார். “அதோ அங்கே?” அவரோடு படையில் இருந்த ஒரு தோழனைக் காட்டினார்.

ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான நபர்களைக் காட்டி அவர்களின் படைப்பிரிவு குறித்த தகவல்கள், தலைமைக் கட்டளை அதிகாரி, படையணியின் எண்ணிக்கை, வீரர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்கள் செய்தவைகளை மிகவும் பெருமையாகச் சொல்லத் தொடங்கினார். வீரர்கள் சில வரிசைகளில் மட்டும் நிற்கின்ற படம் வந்த போது குரலை உயர்த்தினார். ஒவ்வொருவரின் முகங்களும் தெளிவாகத் தெரிந்தன. படத்தின் பின்புலமானது, நிலப்பகுதி, ஓடுபாதைகள், துறைமுகங்கள் என மாறின. 

தான் சார்ந்திருந்த படைப்பிரிவு வந்த போது தனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை, பயிற்சியின் துயரங்களை, எல்லா வேலைகளும் தங்கள் ஆற்றலை உறிஞ்சியதை, இறுதியில், தாங்கள் அதிகம் சுரண்டப்படுவதையும் எளிதில் ஏமாற்றப்படுவதையும் இச்சூழல் எப்படி உணரச் செய்தது என்பதை, வீரர்களின் அதிவேக அனிச்சையான சிந்தனை எப்போதும் தோட்டாக்களின் வேகத்தை நேருக்கு நேராகச் சந்தித்ததை அவர் சொன்னார். ஒவ்வோர் அறை, ஒவ்வொரு குத்து ஆகியவற்றை நினைத்துப் பார்த்தபடி, “குண்டடிபட்டு சாவதற்காக அவர்கள் உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏதாவது ஒரு கட்டத்தில் நீங்கள் சிறிது உணர்வீர்கள். ஆனால், மிக மோசமானது என்னவென்றால், கட்டுப்பாடுகள்” அவர் குறிப்பிட்டார். 

அவமானம் அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதன் முடிவில், கொட்டித் தீர்க்கும் வரை அவரால் காத்திருக்க முடியவில்லை. “இங்கே இருக்கிற இந்த மனிதன்” ஒல்லியான ஒருவரைச் சுட்டிக் காட்டினார். “மிகக் கொடூரமாக எங்களைத் துன்புறுத்தினான். எப்போதும் ஒட்டுமொத்த குழுவினருக்குமான தண்டனையாக அவைகள் இருந்தன. அந்தச் சின்னப்பயல், அவனைக் கொல்ல வேண்டும் என்கிற ஆசையை எங்களுக்கு ஏற்படுத்தினான்..” அவர் சிரித்தார். 

“நல்ல விசயம் என்னவென்றால், பெரிய எதிரிகள் எங்களுக்கு இருந்தார்கள். அந்த அதிகாரிகளைப் பாருங்களேன்?”.  அலங்காரத்துடன் வரிசையாக நின்ற மனிதர்களைச் சுட்டிக் காட்டினார். “அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு உயர் பதவி இருந்தது. இல்லையென்றால்?” அறுப்பது போல் தன் கழுத்துக்குக் குறுக்கே கோடு வரைந்து சொன்னார்.

“இதைப் போன்ற நிகழ்வுகள் நடந்தனவா?” நான் கேட்டேன்.

“இல்லை, எங்கள் பிரிவில் நடக்கவில்லை. அது தற்கொலைக்குச் சமமானது” தன் பிரிவில் இருந்த மிகவும் சுவாரசியமான நபர்கள் மற்றும் சூழ்ச்சி மிகுந்த ஆனால் எந்த மாற்றமும் ஏற்படுத்தாத அவர்களின் சிறு கிளர்ச்சியை நினைத்து உள்ளூர சிரித்தபடி முரயாமா சொன்னார்.

யசுஷி அருகில் இருப்பது போன்ற உணர்வு என்னை மீண்டும் பற்றிக்கொண்டது. எப்போதாவது பழைய நினைவுகளால் தூசிதட்டப்படும் மங்கி மறைந்து போன ஓவியம் போல், அதைத் தவிர மற்ற நேரங்களில் அமைதியாக, வெறுமையாக, கற்பனைக்கு எட்டாத வகையில் இத்தனை ஆண்டுகளாக இருந்த அவனது நினைவுகளை நிரப்பி அவனுடைய உருவம், அவனுடைய அடையாளங்கள் திடீரென்று தெளிவாகத் தெரிந்தன. இதற்காக, இந்தத் தகவலுக்காக நான் எவ்வளவு ஏங்கியிருந்தேன்? ஒவ்வொரு விசயமும் என்னை வசியம் செய்தது. அதைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருப்பதாக உணர்ந்தேன், என் மகனுடன் மீண்டும் இணைவது போல நினைத்து என்னையே நான் அதில் ஈடுபடுத்தினேன்.

ஐந்து மணிக்கு நடு வீட்டில் இருந்த கடிகாரம் ஒலித்தது. அதன் உரத்த ஒலி எங்களைத் திடுக்கிடச் செய்தது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கடிகார வடிவமைப்பாளர் குஸ்தாவ் பெக்கர் என் கணவருக்கு பரிசாகக் கொடுத்தது என விளக்கிவிட்டு, மஞ்சள் நிற வானத்தைக் கவனிக்க சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். மர வேலியின் இடைவெளியில் திடீரென தெரிந்த வாகன நெரிசல் எந்நேரமும் என் கணவர் வரப்போவதை முன்னறிவித்தது. முரயாமா நிழற்படங்களின் தொகுப்பு ஏட்டின் கடைசி தாளைத் திருப்பியது எனக்கு நிம்மதியாக இருந்தது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே அவைகள் வெறுமையாக விடப்பட்டிருந்தன. ஒருசில சிறிய படங்களை அவர் அங்கே ஒட்டியிருந்தார். இவைகளை – சிங்கப்பூர், மலாயா, பிலிப்பைன்ஸ், ஜாவா –  எனக்குக் காட்டுவதற்காக இந்த இடத்தில் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் படங்களில் இருந்த தன்னுடைய நெருங்கிய நண்பர்களைச் சொல்லியபடி, இந்த இடங்களில் எல்லாம் யசுஷி இருந்திருப்பான் என விளக்கினார். அவனிடம் பேசி அவனிடம் இருந்த கேமராவால் படம் எடுக்க வைத்திருக்கலாம். 

“லேய்கா கேமராவை அவன் உண்மையிலேயே அதிகம் நேசித்தான், இதை அவன் சொன்னதாக நினைக்கிறேன். பத்திரிகையாளராகிட அவன் ஆசைப்பட்டான்” என்னிடம் சொன்னார், கூடுதலாக, தங்களின் அவசியத் தேவைகளுள் ஒன்றாக லேய்கா கேமரா இருந்ததாகவும் குறிப்பிட்டார். 

“இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிரியமானவைகள்” எனச் சொல்லி பல்வேறு படங்களை, குறிப்பாக யசுஷி மிகவும் நேசித்து எடுத்த படங்களைச் சுட்டிக் காட்டினார். அவை, சின்னச் சின்னப் பொருட்கள் – நசுக்கப்பட்ட ஒரு சிகரெட்டின் கீழ்ப்பகுதியின் மேல் ஒரு எறும்பு, காலியான நண்டுக் கூட்டில் தேங்கிய தண்ணீரில் ஒரு மீன் – ஆனால், அந்தக் காட்சி மனக்கிளர்ச்சியைத் தூண்டுவதாக, கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்வதாக இருந்தது. மேலும், மிகை யதார்த்தவாத உணர்வின் பெருமையையும் (surreal sense of pride) ஒட்டுமொத்த வெறுமையையும் அவை எனக்குள் தூண்டின. இந்தப் படங்கள் அனைத்தும் யசுஷியின் கண்கள் கண்ட, அதனைப் படமாக்க, காண்பிக்க, நினைவில் வைக்க அவனது உடலை இயக்கிய கற்பனைகள். இவைகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின மேலும், என் தொண்டைக்கு வந்த ஒரு கட்டியை விழுங்கியபடி நான் பேச்சற்றுப் போனேன்.

இதைக் கவனித்த முரயாமா, என்னை உற்சாகப்படுத்த முயன்றார். அவர்களின் வாக்குவாதம் பற்றிய கதைகள், அறிவுக்கு ஒவ்வாத பழங்கதைகள், தொழில்நுட்பம் குறித்த புரிதல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போட்டாபோட்டியின் உச்சத்தில் வெற்றுக் கூச்சலாக மாறியதை  ஒன்று மாற்றி ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தார். “புகைப்படக் கலை பற்றி எங்களுக்கு என்ன தெரியும்?” அவர் சிரித்தார். யசுஷி எடுத்த இன்னும் சில படங்களைக் காட்டி – பெரும்பாலும் தொடர்ச்சியாக மறுபடியும் மறுபடியும் நபர்களின் படங்கள் – “இருந்தாலும் அவன் ஏதாவது கற்றுக்கொண்டே இருந்தான்” என்றார். 

சில படங்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது, என்னால் பார்க்க முடியாத உறுதியான வளர்ச்சி தெரிந்தது. இன்னும் சில படங்களைப் பார்த்த பிறகு நான் கை நீட்டி நிழற்படங்களின் தொகுப்பு ஏட்டைத் தொட்டேன். மகிழ்ச்சிக்கு மத்தியில் இன்னும் எதையோ அதிகமாக முரயாமா எதிர்பார்த்தார். நிழற்படங்களின் தொகுப்பு ஏட்டை மூடி வைத்தார். அவருடையப் பார்வை என் கையில் இருந்து சுவருக்கு வேகமாகச் சென்று, இறுதியில் ஜாடியில் நிலைகுத்தி நின்றது. மங்கிய ஜாடியானது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் மினுமினுத்தது. என்னைப் பார்க்க அவர் மீண்டும் திரும்பியபோது அந்த விசித்திரமான பார்வையை மீண்டும் கவனித்தேன். அமைதியாக எண்ணிப் பார்த்தேன், ஆனால் தற்போது ஏறக்குறைய குற்ற உணர்வாக இருந்தது. மீண்டும் எனக்கு உறைத்தது, இவர் ஏதோ ஒரு காரணத்தோடு வந்திருக்கிறார் ஒருவேளை, என்னிடமிருந்து திருடுவதற்காக இருக்குமோ, அவரைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் பயந்துவிட்டேன்… என விளக்கம் சொல்லி நான் உடனே வருந்தினேன். அவருடைய வருகை விலைமதிப்பில்லாத பரிசு என்பதால் அதற்குப் பிரதிபலனாக ஏதாவது அவருக்குக் கொடுக்க விரும்பினேன். “வேறொன்றும் இல்லை, ஆனால் யசுஷியின் ஆடைகளில் சில வேண்டுமா?”

முரயாமா விழித்தார். சிறிது நேரம் குழம்பிப்போனார். பிறகு அவரது முகம் சுருங்கியது, மேலும் விரும்பத்தகாததைக் கேட்டவர் போல இருந்தார். ஆவேசமாக தன் தலையை ஆட்டி முணுமுணுத்தார். அந்த முணுமுணுப்பு சங்கடத்துடனான மன்னிப்பு போல இருந்தது. தோள் பையில் தன் நிழற்படத் தொகுப்பு ஏட்டைத் திணித்தபடி அவர் எழுந்தார். என்னுடைய உபசரிப்பிற்கும், தான் உண்ட உணவிற்கும் நன்றி சொல்லி, அவர் எடுத்துக்கொண்ட நேரத்திற்காக மன்னிப்புக் கேட்டார். காலணிக்கு மேல் முழங்காலுக்குக் கீழே அணியும் ஆடையை இழுத்தபடி, பையை மாட்டியபடி “உங்களுக்கு தனாகா பற்றி எப்போதுமே தெரியாது” என்று என்னிடம் சொன்னார்.  வீட்டில் சடசடவென தொடர்ந்து ஒலித்த அவரின் குரல் இப்போது முடிவுக்கு வந்தது போல் தோன்றியது. “தகவல்களைக் கறப்பதில் உண்மையில் அவன் தேர்ந்தவன். உள்ளபடியே, அவன் வந்தான் என்றால், நான், முரயாமா, அவனைப் பார்க்க வந்ததாக சொல்வீர்களா?”

நிச்சயமாகச் சொல்வேன் என உறுதி கொடுத்துவிட்டு, நான் செய்ய வேண்டிய வேறு எதுவும் விடுபட்டு போய்விட்டதா? என கேட்டுக்கொண்டே நான் கதவின் தாழ்ப்பாளை விலக்கினேன்.

என் எதிர்பார்ப்பிற்கும் மேலாக ஏற்கெனவே தான் சங்கடப்படுத்திவிட்டதாகச் சொல்லிவிட்டு தாழ குனிந்து வணங்கிவிட்டு வெளியே சென்றார். மாலை நேரத்துக் கூட்டத்தில் மறைவதற்கு முன்பாக டாட்டா சொல்வதற்காக ஒருமுறை திரும்பினார்.

அறைக்குத் திரும்பி வந்து, நடுங்கியபடி அனைத்தையும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். உணவு அள்ளி சாப்பிட பயன்படுத்திய ஜோடி குச்சியைச் சேகரித்து, தேநீர் கோப்பையைக் குவளையில் வைத்து கழுவுவதற்காக சமையல் கூடத்திற்கு எடுத்துச் சென்றேன். மீண்டும் திரும்பி வந்து மேசையைத் துடைத்தேன். காகிதத்தைப் பையில் மெதுவாக வைத்தபடி, வீட்டினுள் தரையில் எப்போதும் விரிக்கப்பட்டிருந்த ததாமி பாயைக் கூட்டினேன். பக்கவாட்டில் தள்ளித் திறக்கப்படும் கண்ணாடிக் கதவுகளை மூடி, பூட்டி வேகமாக பூட்டை ஆட்டிப் பரிசோதித்தேன். கடந்து செல்லும் போது, ஜாடியைத் துடைப்பதற்காக நின்றேன். அதன் அடியில் ஒரு நிழற்படம் இருந்தது. அதன் வெள்ளை உருவம், கறுப்பு நிற சித்திர வேலைப்பாடுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூர்மையான குளிர்ச்சி என் முதுகெலும்பின் மீது படர்ந்தது. 

நான் அந்தப் படத்தை வெளியே எடுத்தேன். அதன் முன்புறத்தில் முரயாமா இருந்தார். பரந்த அவரின் சிரிப்பு, இன்று மாலை நான் பார்க்காத, ஒளிமிக்க சிறுவனை வெளிக்காட்டியது. அவருக்குப் பின்னே பரந்த நிலப்பரப்பு, தூரத்தில் சில புதர்கள் தெரிந்தன. பரந்த பசும்புல் வெளியில் மூலைவிட்ட நேர்கோட்டால் இரண்டு சமமானப் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட, புதிதாக வெட்டப்பட்ட அகழி இருந்தது. அகழியின் பக்கத்தில் வரிசையாகத் தெரிந்த மக்கள், சாதாரண ஆடை அணிந்து, கண்கள் கட்டப்பட்டு, முழந்தாளிட்டு, கணுக்கால்கள் மற்றும் மணிக்கட்டுகள் கயிற்றினால் பிணைக்கப்பட்டு, நிலத்தின் ஆழத்தில் ஊன்றப்பட்டிருந்த கம்பில் கட்டப்பட்டிருந்தார்கள். தொலைவாக இருப்பதால் சிறிதளவே தெரிந்தாலும், அவர்களின் முகங்களில் உறுதியும், திறந்துள்ள அவர்களது வாயின் மேலே கண்ணில் கட்டப்பட்ட துணி பறப்பதும் தெரிந்தது. அவர்களுக்குப் பின்னே ஏறக்குறைய பத்து மீட்டர் இடைவெளியில் நிற்கும் வீரர்கள் உடனடியாக முன்னேறி ஈட்டிகளை வெளியே எடுத்தார்கள். தலைகளைத் திருகினார்கள். கைதிகளின் முகங்களைப் போலவே வீரர்களின் முகங்களும் சிறிதளவே தெரிந்தாலும் அதில் உறுதி இருந்தது. நான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, தங்கள் ஈட்டிகளை இறுகப் பற்றியிருந்த மூர்க்கத்தனமான இந்த வீரர்களுக்கும், தலை திருகப்பட்ட நிலையில் நம்பிக்கையற்று பயத்துடன் இருந்த கைதிகளுக்கும் இடையில் முன்னும் பின்னும் என் பார்வையை ஓட விட்டேன்.

அவர்களின் முகபாவம் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தது. இரண்டு பிரிவினரும் உக்கிரமான பயத்துடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் வேகமாகக் குத்திக் கிழித்துவிட வேண்டும் என தாக்குகிறவர்கள் எதிர்பார்த்தது போலவே அதை வாங்கத் தயாராக இருந்த கைதிகளும் எதிர்பார்த்திருந்தார்கள். இதன் பிறகுதான் எனக்குப் புரிந்தது, நான் பார்த்துக் கொண்டிருப்பது, நான் முதலில் யூகித்தது போல இது மரண தண்டனை நிறைவேற்றும் காட்சி அல்ல மாறாக ஒரு பயிற்சி வகுப்பு. வரிசையாக புதர் போல தெரிந்தது புதர்கள் அல்ல மாறாக அலங்கரிக்கப்பட்ட அதிகாரிகள் வரிசையாக நாற்காலிகளில் அமர்ந்து வீரர்களின் செயல்திறனைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இரண்டு கேள்விகள் எனக்கு எழுந்தன: ஏன் முரயாமா இந்தப் படத்தை இந்த ஜாடியில் மறைத்து வைத்துவிட்டுப் போக வேண்டும்? மற்றவைகளைப் போல இதுவும் யசுஷி எடுத்த நிழற்படமா? இந்தச் சந்திப்பு முழுவதும் சூழ்ச்சியாக, கொடூரமாக மற்றும் ரகசியமானதாக ஒருவேளை யசுஷியாலேயே திட்டமிடப்பட்டதாக எனக்குத் தோன்றிது. இராணுவத்தின் கொடூரத்தைத் தெளிவாகச் சொல்லும் படத்தை விட்டுச் செல்ல மட்டும் அல்ல, தன்னைப் பற்றி காட்டிக்கொள்ள விரும்பம் இல்லாவிட்டாலும் தான் உயிருடன் இருப்பதை எனக்கு அறிவிக்க யசுஷி அனுப்பியிருக்க வேண்டும்.

இந்தக் கடைசி எண்ணம் என் கற்பனையை ஆட்கொண்டது. இதைக் குறித்து நான் அதிகம் நினைக்க நினைக்க  அது இன்னுங் கூடுதலாக  உண்மை போல் தோன்றியது. கடைசியில், முரயாமாவின் விசித்திரமான நடவடிக்கைகளை இது தெளிவுபடுத்தியது. போவதற்கு முன்பாக, யசுஷி கடைசியில் திரும்பி வருவான் என என்னைத் தயார் செய்வதில் அவர் கவனமாக இருந்தார்  இல்லையா? 

நிழற்படத்தை என் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தேன். மங்கிப் போய் இருந்த அதன் இரசாயன வாசனை மூக்கைத் துளைத்தது. ஆமாம், அவர்கள் உண்மையிலேயே அதிகாரிகள் தான் மற்றும் வரிசையில் நிற்கிறவர்கள் நிச்சயமாக பயிற்சி பெறும் வீரர்களே. படத்தின் ஓர் ஓரத்தில் முரயாமாவின் தலை தெரிந்தது. அதற்கு நேர் எதிரே வரிசையின் கடைசியில் நிழற்படத்தின் ஓரத்தில் பார்க்கக்கூடிய அளவில் உள்ள வீரரின் ஒரு பகுதி மட்டும் படத்தில் இருந்தது. காணக்கூடிய அளவில் ஒரு கால் முன்னேறி இருந்தது, பார்க்கும்படி உள்ள, துப்பாக்கியின் முனையில் கத்தி பிணைக்கப்பட்டு ஈட்டி போலுள்ள ஆயுதத்தை ஒரு கை உயர்த்திப் பிடித்திருந்தது. அவரின் முகம் திரும்பியிருந்ததால் முழுமையாகத் தெரிந்தது. அதிர்ச்சி எனக்குள் பரவியது. யசுஷி. நிழற்படத்தை கீழே போட்டு விட்டேன். வெளியே, வானம் குளிர்ச்சியானது. பிரிந்து செல்லும் பாதைகளில் கடந்து செல்கிறவர்களின் காலடிச் சத்தங்கள் – ஒரு ஜோடி காலணியின் குறுகிய அடிகளுடன் கூடிய வேகமான ஓசையை வாசலுக்கு வெளியே விட்டுவிட்டு – குறையத் தொடங்கின. என் கணவர் தாழ்ப்பாளைத் தள்ளும் சத்தம் கேட்டது. நான் நிழற்படத்தை வெடுக்கெனப் பற்றினேன். அதை மறைப்பதற்கான இடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, முரயாமா போலவே, ஜாடியில், என் கணவர் பொதுவாக சோதித்துப் பார்க்காத, ஜாடியின் சொரசொரப்பான உட்பகுதியில் என் பார்வை தங்கியது. படத்தின் மேல் பகுதி மேலே தெரியும்படி, அப்போதுதான் அதன் இருண்ட சாயல் ஜாடியின் உட்புற நிறத்துடன் ஒத்திருக்கும், என நினைத்து கவனமாக வைத்தேன், பின்னால் வந்தேன், என் முழங்கால்கள் வலுவிழந்தன. வெளியே என் கணவரின் காலடிச் சத்தம் பாதியில் நின்றது. பூட்டினுள்ளே சென்ற அவருடைய சாவி சத்தம் எழுப்பிய வேளையில் ரவிக்கையின் கழுத்துப் பகுதியை இறுகப் பற்றிக்கொண்டு, என் முதுகை நேரே நிமிர்த்தி என்னையே சரி செய்தேன், பாவாடையின் விளிம்பைத் தளர்வாக்கி என் ரவிக்கையின் ஓரத்தை உள்ளே இழுத்து விட்டேன். என்னைச் சுற்றியுள்ள எல்லாம், அறையின் இத்தருணத்தின் அமைதி, இருண்டுவரும் கோடை வானத்தால் விழுங்கப்பட்டது போல இருந்தது.


அசாகோ செரிஷவா

தமிழில் : சூ.ம.ஜெயசீலன்


[tds_info]

ஆசிரியர் குறிப்பு : 

அசாகோ செரிஷவா (Asako Serizawa) ஜப்பான் நாட்டில் பிறந்து சிங்கப்பூர், ஜகார்ட்டா மற்றும் டோக்கியோவில் வளர்ந்தவர். இரண்டு முறை ஓ. ஹென்றி விருது பெற்றவர் (2013&2016). புஷ்கார்ட் விருது மற்றும் ரானா ஜாஃப் அறக்கட்டளை எழுத்தாளர்களுக்கான விருது பெற்ற எழுத்தாளர். தற்போது பாஸ்டன் நகரில் வசிக்கிறார். இவர் எழுதிய சிறுகதைகள் பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகியுள்ளன. இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு, Inheritors ஜூலை, 2020-இல் வெளிவந்துள்ளது. பார்வையாளர் – இத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளுள் ஒன்று.

 

ஓ . ஹென்றி பரிசு பெற்ற 2013-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று இது. இந்தச் சிறுகதை 1946-ஆம் ஆண்டின் பின்னணியில் எழுதப்பட்டது.

 

மொழிப்பெயர்ப்பாளர் :

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தவர்.  இதமான, கவித்துவமான, உணர்வுப்பூர்வமான எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவரின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” நூல் சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்றது, கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இவரின் 16 நூல்கள் வெளி வந்துள்ளன. தற்போது இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கிறார்.

[/tds_info]

1 COMMENT

  1. போருக்கு பின்னைய மக்களின் நிலையையும், ஒரு போர் வீரனின் தாயின் மனது படும் வேதனையையும், போரில் தோல்வியுற்று திரும்பிய இழப்புக்கு மத்தியில் வாழ்வின் எஞ்சியதை தேடும் வீரனின் மனநிலையையும் நன்கு எளிய முறையில் உணர்வுகளுடன் இணைத்து பதிவு செய்துள்ளார் ஆசிரியர் … அதனை பிறழாது மொழிபெயர்த்துள்ளார் மொழி பெயர்பாளர்…அருமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.