Sunday, Jun 26, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை

யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை


லைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம்.

நம் கதை நவம்பர் 24, 1970ல் தொடங்குகிறது, மிஷிமா தன் மாஸ்டர்பீசான நான்கு-நூல் தொகை, ‘த சீ ஆஃப் ஃபெர்ட்டிலிட்டி’யில் முத்தாய்ப்பாய்ச் சில செம்மைப்படுத்துதல்கள் செய்து கொண்டிருக்கிறார், இதன் பின் அவர் தன் கைப்பிரதியில் ஒப்பமிட்டு அதை ஓர் உறையினுள் இட்டு மறு நாள் தன் பதிப்பாளரின் உதவியாள் கொண்டு செல்லவென்று எடுத்து வைப்பார். இந்த இறுதிப் புத்தகமே அவரது கடைசி நூலாகவும் இருக்கப் போகிறது, ஏனெனில், கௌரவம் காக்கும் இறுதிச் செயலென்று வகுக்கப்பட்ட மரபார்ந்த முறையில் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குடல் சரிய மரணம் தழுவும் தற்கொலைச் சடங்கான ‘செப்புக்கு’ செய்துகொள்ளும் நாளென நவம்பர் 25 ஆம் தேதியை அவர் குறித்து வைத்தாயிற்று. இந்த பயங்கர நிகழ்வின் எதிர்பார்க்கக்கூடிய அவல விளைவுகளில் தன் குடல்களிலிருந்து பிதுங்கி வெளியேறும் மலம் கலந்து விடக்கூடாதென்று முன்னெச்சரிக்கையாய் அவர் பருத்திப் பொதிகளை வாங்கி வைத்திருப்பது தன் தற்கொலைக்கு முன் பட்டாலான சுருக்குக் கயிற்றில் சோப்பு பூசும் தாஸ்தவெஸ்கியின் ஸ்டாவ்ரோகினை நினைவுபடுத்துகிறது., ஸ்டாவ்ரோகின் தன் தற்கொலையில்கூட கெளரவம் போன்ற மானுட விழுமியங்களை  மூர்க்கமாக எள்ளி அடியறுக்க விரும்புகிறான், மிஷிமாவோ சுய கௌரவத்துடன் விடை பெற விரும்புகிறார்.

நவம்பர் 25 அன்று, விடிந்ததும் குளித்து ஷேவ் செய்து முடித்தபின், விரைவில் தற்கொலை செய்து கொள்ளவிருக்கும் அவர் கோவணம் மட்டும் தரித்தவராய் தனது ஷீல்ட் சொசைட்டி சீருடை அணிந்து கொள்கிறார் (‘டடனோகாய்’ அல்லது,’ஷீல்ட் சொசைட்டி’ மிஷிமாவால் துவக்கப்பட்டது, அது ஜப்பானிய விழுமியங்களையும் பேரரசர் மீதான பெருமதிப்பையும் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தனிநபர் சீருடைப்படை). பின், தன் மேஜையில் அமர்ந்து எதிர்காலத்தை முன்னிட்டு இறுதிச் சொற்கள் எழுதுகிறார்: “மானுட வாழ்வு எல்லைக்குட்பட்டது. ஆனால் நான் என்றென்றும் வாழ விரும்புகிறேன்.” அவரது சீடரும் (காதலருமான?) சக தற்கொலைக்காரர் மொரிட்டாவும் (இங்கு ஷின்ஜூ எனப் பரிணமிக்கும் இரட்டைத் தற்கொலை செப்புக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆனால் ஜலசமாதி எதுவும் உண்டெனில் அது ஒரு குறியீட்டளவில் மட்டுமே இருக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது, ஒருவேளை ரத்தம் வேண்டுமானால் அவ்விருவரின் சிரங்களையும் நனைக்கக்கூடும்) மொரிட்டா சகாக்களுடன் ஒரு காரருகே காத்திருக்கிறார். மிஷிமா ஒரு லெதர் அட்டாஷ் கேசுடன் வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார், அதனுள் பதினேழாம் நூற்றாண்டு கால கத்தியும் குறுவாளொன்றும் இருக்கின்றன, முடிவை நோக்கி இந்த ஐவர் குழு கிளம்புகிறது. இதற்கு முன் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள காரணத்தால் மிஷிமா இக்காட்சியின் சினிமாத்தனத்தை உணர்கிறார், கார் தன் மகளின் பள்ளியைக் கடக்கையில் அவர் விளையாட்டாய், “இதுவே ஒரு சினிமா என்றால் பின்னணியில் இங்கு செண்ட்டிமெண்டல் இசை ஒலிக்கும்,”என்று சொல்கிறார். இதற்குப் பின் குடல் சரிந்து சாகும் வரை நடக்கும் அத்தனையும் கேவலமாகத் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதலைச் சித்தரிக்கும் மோசமான திரைப்படத்துக்கு உரியவை.

முன் திட்டப்படி இவர்கள் தளபதியை நாற்காலியில் கட்டிப் போடுகிறார்கள். “செல்வச் செழிப்பிலும் ஆன்மீக வெறுமையிலும் மூழ்கிக் கிடந்த குற்றத்திற்காகவும் “ஆன்மாவை இழந்த உலகில் வாழ்வதெனத் தேர்வு செய்த பாவத்திற்காகவும்” தேசத்தையும் பேரரசரையும் கண்டித்துத் தான் ஆற்றப்போகும் இறுதி உரையைக் கேட்க ராணுவ வீரர்கள் அனைவரும் உடனே கூடியாக வேண்டும், இல்லையென்றால் தளபதி கொலை செய்யப்படுவார் என்று மிஷிமா மிரட்டுகிறார். அடுத்து அவர் அந்த பால்கனியின் தரையில் அமர்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அதே தலைப்பில் தான் எழுதிய சிறுகதையின் திரையாக்கமாய் நான்காண்டுகளுக்கு முன் வெளிவந்த “தேசபக்தி” என்ற திரைப்படத்தில் நடித்துக் காட்டியதை இப்போது அவர் மீண்டும் அரங்கேற்றப் போகிறார். சொன்னது போலவே மிஷிமா வயிற்றை அறுத்துக் கொண்டபின் எதிர்பாராத வகையில் சடங்குமுறைத் திட்டம் நகைத்தன்மை கொண்ட அவல நாடகமாகிறது. அவரது சிரம் அறுப்பதில் மொரிட்டா சொதப்புகிறார். இதனால் அவர்களின் சகாவான ஃபுரு-கோகா முன்வந்து கத்தியை வீசி மிஷிமாவின் கழுத்தை வெட்டு ஒன்று துண்டு இரண்டெனச் சீவி எறிய வேண்டியதாகிறது. இதற்குள் மொரிட்டா வெலவெலத்துப் போயிருக்கிறார், சடங்கில் நிர்ணயிக்கப்பட்ட வகையில் அவரால் தன் வயிற்றைக் கிழித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தவிர்க்க முடியாத சம்பிரதாய ஆணைக்குக் கட்டுப்பட்டு இம்முறையும் ஃபுரு-கோகா முன்வந்து விதிக்கப்பட்ட வகையில் அவரது கழுத்தைத் துண்டிக்கிறார். இதெல்லாம் சாவதானமாக வீட்டில் செய்யப்படும் பூஜாக்கிரமம் என்பது போல், இவ்வளவு நேரம் கட்டி வைக்கப்பட்டிருக்கும் தளபதியும் தன் பங்கிற்குப் புதிதாய் பிரேதமான இந்த இரட்டையரை முன்னிட்டு பிரார்த்திக்கிறார்: “அமித புத்தரில் நான் அடைக்கலம் புகுகிறேன்.” கௌரவமான சாவுக்கு ஆசைப்பட்ட மிஷிமாவின் கவலைகள் இவ்வண்ணம் முடிவடைகின்றன.

 

 

ஆனால் கௌரவம் வேண்டுமென்றால் நாம் கலையை நோக்கித் திரும்ப வேண்டும். ஆம், கலையில் அனைத்தும் துல்லியமாய் வெளிப்படுகின்றன, ஸ்வரம் பிசகாத புனைவிசையாய் கோர்க்கப்பட்டிருக்கின்றன, இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட ஒன்றென, களங்கமற்றதென மகத்தான வகையில் உன்னதப்படுத்தப்படுகின்றன. இங்கு நான் மிஷிமாவின் குறும்படைப்பான ‘தேசப்பற்று’ குறித்துப் பேசுகிறேன், அதன் ஜப்பானிய மொழித் தலைப்பான ‘யுகோகு’ என்பது மிகப் பொருத்தமான வகையில் மிஷிமா பெயரின் முதற்பகுதியான யுகியோவை நினைவுபடுத்துகிறது- இது அந்த நான்கு நூல் தொகையின் முதல் நாவலான ‘ஹரு நூ யுகி’ (வேனிற்கால பனி) என்பதையும் எதிரொலிக்கிறது. 1981 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘தேசப்பற்று’ துணிச்சலுடன் தன் கதைச் சுருக்கத்தைச் சொல்லித் துவங்குகிறது, அது ஏதோ செய்திக் குறிப்பு என்பது போல்.

1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்து எட்டாம் தேதி (பிப்ரவரி 26 நிகழ்வின் மூன்றாம் நாள்), கோனோ டிரான்ஸ்போர்ட் பட்டாலியனைச் சேர்ந்த லூட்டனன்ட் ஷிஞ்சி டக்கேயாமாதன் நெருங்கிய சகாக்கள் கலகக்காரர்களுடன் இணைந்து துவக்கம் முதலே செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்த காரணத்தால் ஆழமான மன உளைச்சலுக்கும் இம்பீரியல் படைகள் சக இம்பீரியல் படைகளுக்கு எதிராகவே தாக்குதல் நடத்தப் போகின்றன என்று உளக் கொதிப்புக்கும் ஆளானவனாய்தன் உயரதிகாரியின் கத்தியை எடுத்து யோட்சூயா வார்டில், அவபாசோ ஆறாம் பிளாக்கில் உள்ள தன் இல்லத்தின் எட்டுப் பாய் அறையில் வயிறறுத்துக் கொள்ளும் சடங்கை நிறைவேற்றுகிறான். 

மனைவி ரெய்க்கோவும் அவன் செயலைப் பின்பற்றுகிறாள், கத்தியால் தன்னைக் குத்திக் கொண்டு சாகிறாள். லூட்டனன்ட்டின் மரணக் குறிப்பு ஒற்றை வாக்கியம் மட்டுமே: “இம்பீரியல் படைகள் நீடு வாழி.” தன் பெற்றோருக்கு முன் கல்லறை செல்வது ஒரு பெண்ணுக்கு அழகல்ல என்று மன்னிப்பு கோரியபின் அவளது மரணக் குறிப்பு இப்படி முற்றுப் பெறுகிறது: “போர் வீரன் மனைவியின் வாழ்வில் வந்தாக வேண்டிய நாள் வந்து விட்டது.” தீரமும் அர்ப்பணிப்பும் கொண்ட இந்தத் தம்பதியரின் கடைசி கணங்கள் கடவுளர்களையே கலங்கச் செய்வதாக இருந்தது. லூட்டனன்ட்டின் வயது முப்பத்து இரண்டு என்பதைக் குறிப்பிட வேண்டும், அவனது மனைவியின் வயது இருபத்து மூன்று; அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள்கூட முடியவில்லை. 

கதையின் தலைப்பிலும் முதல் பகுதியின் எதற்கெடுத்தாலும் கத்தி தூக்கும் போக்காலும் ஏமாந்து இது கௌரவம் மற்றும் கடமை பற்றிய கதை என்று முடிவு கட்டி மேற்கொண்டு படிக்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கும் கட்டத்தில்- சக ராணுவ வீரர்களைக் காட்டிக் கொடுப்பதா இல்லை பேரரசரைக் காட்டிக் கொடுப்பதா என்று தவிக்கும் நாயகன் தன் உயிரை மாய்த்துக் கொண்டு பிரச்சினைக்கு முடிவு காண்கிறான், அவன்பால் விசுவாசமாக இருக்கும் அவனது மனைவியும் தன் உயிரை மாய்த்துக் கொண்டு அவனைத் தொடர்ந்து செல்கிறாள், இதற்கு மேல் என்ன இருக்கப் போகிறது? என்று நாம் சலித்துக் கொள்ளும் தருணத்தில்- இரண்டாம் பகுதி தன் மொழியை நுட்பமாய் மாற்றிக் கொள்கிறது. தம்பதியர் திருமண நினைவாக எடுத்துக் கொண்ட புகைப்படம் நமக்குக் காட்டப்படுகிறது. அவன் முகம், “கறாராக இருக்கிறது, அவனது கண்கள் வாலிபத்தின் கறாரான நேர்மையை வெளிப்படுத்துகின்றன, “நாயகியோ, சன்னமான நாசியும் மலர்ந்த இதழ்களும் கொண்டவளாய், “கவர்ச்சியாகவும் பண்பட்டவளாகவும்” இருந்தாள். கதை தன் மொழியை சமூக குழுக்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும்போதே (“முதலிரவு” என்பது போகிற போக்கில் சொல்லப்படுகிறது) முதலில் கையாண்ட மொழிக்குத் திரும்ப வேண்டியதாகிறது. தன் பணியின் சோதனைகள் குறித்து ராணுவ வீரனுக்கேயுரிய உணர்ச்சிகளோடு அவன் உரையாற்றும்போது கதை முன்னிருந்த தீவிரத் தொனிக்குத் திரும்புகிறது, அதன் பின் அவன், தான் எந்நேரமும் மரணமடையக் கூடும் என்ற உண்மையை அவள் உறுதியான மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறாளா என்று கேட்கிறான். மனைவி எதுவும் சொல்லாமல் தன்னிடம் இருப்பதில் தான் மிகவும் நேசிக்கும் பொருளை எடுத்து வருகிறாள்- அது அவளுடைய அம்மா கொடுத்த குறுவாள், அதை அவள் தன் கணவனின் கத்திக்கு அருகே வைக்கிறாள். சொற்களின் உதவி தேவைப்படாத ஏதோ ஒன்று புரிந்து கொள்ளப்படுகிறது, அக்கணம் முதல் தன் மனைவியின் மன உறுதியைத் தான் சந்தேகிக்க வேண்டியதில்லை என்பதைக் கணவன் புரிந்து கொள்கிறான். சொல்லி வைத்தது போல் இதற்குப்பின் கதையின் தீவிரத் தொனி காமத்தின் மொழிக்கு மாறுகிறது.

நிலவு படிமத்தை நாம் மீண்டும் எதிர்கொள்கிறோம்: அவளது விரல் நகங்கள் “மதிமலர் மொட்டுக்கள்” என்று முன்னர் விவரிக்கப்பட்டிருந்தால் இப்போது அவளது அழகோ, “மழைக்குப் பின் நிலவு” சஞ்சலமின்றி ஒளிர்வது போல் நாளுக்கு நாள் அழகு கூடி வருகிறது. (அவளது கணவனின் “கொள்கைப்பற்று சூரியன் போன்றது” என்பதை நாம் பின்னர் அறிவோம்). “தீர்மானமான கன்னிமையின் மறுப்பு” தெரிவித்த ரெய்கோவின் மார்பகங்கள் இப்போது தன் வரவேற்கும் வெம்மையில் இணையத் தடையற்ற அழைப்பு விடுக்கின்றன. ஷின்ஜியின் கௌரவமான கத்திக்கு அருகே தன் குறுவாளை அவள் முன்னர் வைத்தது போல், இப்போதும் அதே அளவு வேகத்துடன் படுக்கையில் அவனுக்கு ஈடு கொடுக்கிறாள். ஆனால் காமம் உச்சம் தொடும் கட்டத்தில் மிஷிமா திரை போடுகிறார், நமக்கோ கலவி தடைப்பட்டது போலிருக்கிறது, “இருவரும் படுக்கையில்கூட அச்சுறுத்தும் தன்மை கொண்டதும் திகைக்கச் செய்யும் இயல்பு கொண்டதுமான தீவிரத்தன்மை பொருந்தியவர்களாய் இருந்தார்கள்,”என்று சொல்லி நம் தகிப்பையும் தணித்து விடுகிறார் மிஷிமா. படுக்கையறைக் கட்டிலின் மீது அவர்களுக்காகக் காத்திருக்கும் மரணத்தின் நிழல் சாய்கிறது, நாம் நினைத்தது போலில்லை, இது வேறு கதை போலயே, என்று சந்தேகிக்கத் துவங்குகிறோம். கலவியும் மரணமும் இப்போது ஒன்றையொன்று கூடியிருக்கின்றன, இவை ஏதோ ஒரு விரிவான சடங்கின் இலக்கணப்படுத்தப்பட்ட சமிக்ஞைக் குறிப்புகள் போல. இதற்கு முன் மிஷிமா எழுதிய இன்னொரு நாவல், “முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலங்கள்” கதையில் அவர் குவீடொ ரெனியின் புனித செபஸ்டியன் ஓவியத்தை விவரித்திருப்பது நினைவுக்கு வருகிறது, அம்பு அவரது வயிற்றைத் துளைத்து உள்ளே புகுந்து விட்டது, முகத்தில் வேதனையும் ஆனந்தமும், அடுத்து முதல் விந்து வெளியேற்றத்தில் முடிகிறது.

வன்முறை வெடித்து விட்டது என்ற செய்தியை ரெய்கோ வானொலியில் கேட்கிறாள், தனது கணவன் திரும்பத் தவறினால் தன்னை மாய்த்துக் கொள்வது என்று அவள் முடிவெடுக்கும்போது இச்சடங்கின் திசைக்கற்கள் நிறுவப்படுகின்றன. இதையடுத்து அவள் பீங்கானாலான மிருகப் பொம்மைகள் உட்பட தன் நேசத்துக்குரிய சின்னஞ்சிறு பொருட்களை அவற்றுக்குத் தக்க இடங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். வைத்த கையை எடுக்க மனமில்லாமல் அவற்றில் ஒன்றை, பீங்கான் அணிலை, தடவிக் கொடுக்கும்போது சில்லிட்ட விரல்களில் உணரும் குளுமையான தொடுகை அவள் அணிந்திருக்கும் மெசன் கிமோனோவுக்குள் கீழ்க்கால்களில் இனிய உணர்வைக் கிளர்த்துகிறது – “பனிக்கு எதிர் நிற்கும் ஊனின் வெப்ப நீர்மை.” இச்சடங்கு குறித்த நம் ஊகத்தை அடுத்த வாக்கியமே உறுதி செய்கிறது. “வீட்டில் தனித்திருக்கையில் தன் மனதில் நிழலாடும் மரணம் குறித்து அவள் சிறிதும் அச்சம் கொள்ளவில்லை.” காமத்தின் காலடித் தடத்தில் தொடரும் மரணம், வாழ்விச்சையும் மரண அவாவும் தொடர்ந்தெழுகின்றன.

ஆனால் ஷின்ஜி திரும்புகிறான், புதிதாய் மணமானவன் என்பதால் அவன் கலகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அன்றாட நிகழ்வில் மனைவி கணவனுக்கு உதவுவதைப் படிக்கும் கவனமாய் வாசிக்கும் வாசகன் ஒரு கிளுகிளுப்பான உணர்வுக்கு ஆளாகிறான்- அவன் கோட்டைக் கழற்ற அவள் உதவுகிறாள், இச்செயலுக்குப் புனைவு மேதைமை விரிவான கவனம் அளிக்கிறது. “கோட், சில்லிட்டு, ஈரமாக, வெயில் பட்டதும் அதிலிருந்து வழக்கமாய்க் கிளம்பும் குதிரைச் சாண வாடையை இழந்து, அவள் கரத்தில் கனத்துத் தொங்கியது.” நாம் அந்த குதிரைச் சாண வாடையில் சற்றுத் தாமதித்து நிற்கிறோம், கிட்டத்தட்ட அதை முகர்ந்தே பார்க்கிறோம், அதன் பின்னரே ஈரக் கோட்டின் கனத்தை உணர்கிறோம். நாம் வாசிப்பது இக்கணங்களுக்காகவே.

தம்பதியர் அஞ்சும் வகையிலும் திகைக்கும் வகையிலும் தீவிரமானவர்கள் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் குறைவான தகவல்கள் கொண்ட அச்சுறுத்தும் உரையாடல் தொடர்கிறது. ஏன் அச்சுறுத்தல் என்றால் இது போன்ற ஒரு மிகப்பெரிய முடிவு இவ்வளவு குறைவான வார்த்தைகளில் எடுத்து முடிக்கப்படக் கூடும் என்பதால்தான்.

இன்று நான் என் வயிற்றைக் கிழித்துக் கொள்ளப் போகிறேன்.” ரெய்கோ முகத்தில் அச்சமில்லை. 

அவளது வட்டக் கண்களில் இறுக்கம் தெரிந்தது, மணியோசை போன்ற இறுக்கம். 

தயாராக இருக்கிறேன். என்றாள். “உங்களைப் பின்பற்ற அனுமதி வேண்டும்.” 

நல்லது. நாம் சேர்ந்தே போகலாம். ஆனால் நீ முதலில் எனக்குச் சாட்சியாக இருக்க வேண்டும், என் தற்கொலையின் சாட்சி. சரியா?”

அதன் பின் ஷேவ் செய்து கொள்ளும் ஷிஞ்சி எதிர்பார்ப்பால் ஒரு இன்பகரமான உணர்வில் நிறைந்திருக்கிறான், “ஆரோக்கியமான உடலிச்சை”. உடலின் விழைவுகளுக்கும் தன் தேசபக்தியின் உண்மைக்கும் முரண்பாடில்லை என்று அவன் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான், இரண்டும் ஒரே விஷயத்தின் இரு பகுதிகள் என்றுகூட சொல்லிக் கொள்கிறான்.

சம்பிரதாய இரட்டைத் தற்கொலைக்குக் கொண்டு செல்லும் பத்திகள் அசாதாரண கவித்துவமும் புலனுணர்வைத் தூண்டும் அழகும் கொண்டவை. ஒப்பந்தத்தில் பணிந்து செல்லும் கடப்பாட்டை ஏற்றுக் கொண்ட ரெய்கோ களவின் உச்சம் தொடும்போது தான் சமமானவள் என்பதை நிறுவும் வகையில் நடுங்கும் குரலில் கேட்கிறாள்: “எங்கே, காட்டு.. நானும் பார்க்கிறேன், கடைசி முறையாக.”

 

லூட்டனன்ட்டுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும், “அவள் சொன்னபடியே அவன் நிமிர்ந்து படுத்துக் கொண்டான், தன் மனைவிக்குப் பணிந்து போனான்” என்று வாசிக்கிறோம். இந்தச் சிறு மணி போன்ற கதையில் அடையப்படும் காம உச்சங்கள் இனி கடக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, பின்நவீனத்துவ மீறல் இலக்கியங்கள் என்னதான் பெருமையடித்துக் கொண்டாலும் சரி.

கதையில் இனி வரும் பகுதிகள் முடிவுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. தியாகச் சடங்கின் முன்னேற்பாட்டுச் செய்கைகள் நேசத்துடன் விவரிக்கப்படுகின்றன. வாசகனுக்கு அருவெறுப்பாகவும் அவலமானதாகவும் இருக்கும் செயல் நிகழ்கிறது, அல்லது, அரைகுறையாக நிறைவடைகிறது. ஷிஞ்ஜி தன் பங்கு கடமையைச் செய்து முடிக்கிறான். கதைமொழி இப்போது இயல்பாகவே சோகக் குரல் கொள்கிறது, ஆனால் முன்னிருந்த காம விழைவு இன்னும் போவதாயில்லை. கிமோனோவின் கீழ்ப்பகுதி ரத்தத்தில் தோய, ரெய்கி ஒரு கண்ணாடி முன் அமர்ந்திருக்கிறாள். தன் தொடைப் பகுதியில் கணவனின் ரத்த ஈரமும் சில்லிப்பும் அவள் உணர்ந்தாள் என்று நாம் வாசிக்கிறோம், அவளுக்கு நடுக்கம் கொடுக்கிறது. பீங்கான் அணிலின் குளிர்த் தொடுகை அதை எதிர்த்து நிற்கும் நீர்மையாய் மாறியதை உணர்ந்து அவள் முன்னொரு முறை நடுங்கிய இடத்துக்கு நம்மை இது கொண்டு செல்கிறது.

ஆனால் கொடூரமான வகையில் வாழ்வின் மறுகரைக்கு ஷிஞ்ஜி பயணப்படுகையில், மரணத்துக்கு வெகு அருகில் இருக்கும் ரெய்கி திடீரென்று தன் கணவன் அனுபவிக்கும் வலியை உணர்கிறாள், அது ஆயிரம் மணிகளென ஒலித்து எதிரொலிக்கிறது (மணியோசை என அவளது கண்களின் இறுக்கம் பற்றிய உவமையை நாம் வாசித்திருக்கிறோம்), அது அவள் கணவனின் தனிமையை முழுமையாக்குகிறது, இருவருக்குமிடையே “குரூரமான உயர்ந்த கண்ணாடிச் சுவர்” எழுப்புகிறது. கடமையின் தன் பங்கை அவள் நிறைவேற்றத் தயாராகும்போது மறு கரை சேர்ந்த அவள் கணவன் முகத்தில் தெரிந்த புரிந்து கொள்ள முடியாத புதிர் உணர்வுக்கு விடை காண அவளும் அக்கரைக்குப் பயணப்படுவாள். ஆனால் அதற்கு முன், தன் தொண்டையில் கத்தி முனையைப் பாய்ச்சிக் கொள்கையில், பயணம் கிளம்பும் முன் குடிக்கும் கடைசி மிடற்று என, அதை அவள் தன் நாவில் வைத்துச் சுவைக்கிறாள், மெருகூட்டப்பட்ட எஃக்கின் “மெல்லிய இன்சுவையை” தீண்டிப் பார்க்கிறாள்.

 

 

நான் ‘தேசப்பற்றை’ முதலில் பார்த்தது தில்லியில் கிளிஃப்டன் ஃபடிமான் முன்னுரையுடன் வெளிவந்த ‘வர்ல்ட் டிரெஷரி ஆஃப் லவ் ஸ்டோரிஸ்’ என்ற தொகுப்பில் (அதன் முன் அட்டையில் குஸ்டாஃப் கிளிம்ட்டின் ‘கிஸ்’ இருந்தது). அழகாகவும் அவலமாகவும் இருந்த ஒருவகை கடப்புத்தன்மை கொண்ட சடங்கில் காமத்தையும் சாவையும் இது எவ்வளவு சிரமமில்லாமல் இணைத்துப் பேசுகிறது என்பது வியப்பாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கதையின் திரை வடிவத்தைப் பார்த்தேன், நான் புரிந்து கொண்டது சரிதான் என்பது உறுதியானபோது மகிழ்ச்சியாக இருந்தது- அதன் தலைப்பு ‘தேசபக்தி அல்லது காதல் மரணச் சடங்கு’ என்றிருந்தது. அதைவிட மகிழ்ச்சியளித்த விஷயம் அதன் இயக்குனர் மிஷிமா என்பதுதான், தன் நாயகனான ஷிஞ்சி டக்கேயாமா பாத்திரத்திலும் அவரே நடித்திருந்தார். கதையை மிகவும் ஸ்டைலான விதத்தில் திரைப்படமாக்கியிருந்தார், நோஹ் நாடக மேடையை கதை நிகழும் தளமாய் மாற்றியிருந்தார். வெறுமை நிறைந்த ஜப்பானியப் பின்னணியுடன் அதன் பழங்காலத் தன்மைக்கு வலு சேர்க்க டிரிஸ்டன் அண்ட் இசொல்டேவின் அந்தக் கால ஒலிப்பதிவு பின்னணியில் கோர்க்கப்பட்டிருக்கிறது. நோஹ் மேடை வெண்மை நிறைந்தது, குடல் இறக்கச் சடங்குக்குத் தேவைப்படும் தாராள அளவிலான ரத்தத்தின் கருமைக்கு மிகப் பொருத்தமான எதிர்ப்புள்ளியை ரெய்கியின் கலை வேலைப்பாடு நிறைந்த கிமோனோ அளிக்கிறது. இறுதியில் வரும் காதல் காட்சி திரையாக்கத்தில் பல்வகைப்பட்ட சித்தரிப்புகளுக்கு இடம் கொடுக்கிறது, வெளிச்சமும் நிழலும் ஊடாடுகின்றன, தலைமுடி அலை அலையாய் திரையில் தோன்றி மறைகிறது, காமத்தைத் தூண்டும் தொப்புள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது (“கூர்மையான நிழலில் தாழ்ந்த தொப்புள் அக்கணம்தான் அங்கு வீழ்ந்திருக்கக் கூடிய மழைத்துளி பதித்த புதுத்தடமாக இருக்கக்கூடும்”), சில ஷாட்டுக்களின் tableau vivant தன்மை காமத்தை ஒரு சடங்காக மாற்றுகிறது, எல்லாமே நம் கண் முன் உறைந்துவிட்ட காட்சிகளாய் நிகழ்வதால்.

எழுத்தில் சாத்தியப்படாத சாயங்களைப் பூச காட்சி ஊடகம் மிஷிமாவுக்கு உதவுகிறது. அரங்கேறும் பலவற்றுக்கும் பின்னணியில் இருக்கும் ககெமோனோ சுருளைத்தான் எடுத்துக் கொள்வோம், அந்த ஏட்டுச்சுருளில் உள்ள இரு எழுத்துக்கள், “இதயப்பூர்வமான விசுவாசம்” என்ற சொற்களைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகிறது, கதைக்கும் இதுவே நல்ல தலைப்பாகவும் இருந்திருக்கக்கூடும். ஐந்தாம் பகுதியின் துவக்கத்தில், ஷிஞ்சி கிட்டத்தட்ட செத்து விட்டான், ரெய்க்கிக்கு தூக்கித் தூக்கிப் போடுகிறது, அந்த கொடூரமான சடங்கு தலைநீராட்டின் முடிவில் வெடிக்கும் ரத்தத்தில் குளித்து அவள் அணிந்திருக்கும் வெள்ளாடை சிவப்பு பூண்டிருக்கிறது. ஏட்டுச்சுருளையும் அதையடுத்து வீழ்ந்து கிடக்கும் பிரேதத்தின் முன் துக்கம் மேவி நின்றிருக்கும் ரெய்க்கியையும் நேர்க்கோட்டில் இணைக்கும் ஒரு ஷாட் வருகிறது. அவள் ஆடையின் அடிப்பாகத்தில் உள்ள ரத்தக்கறை ஏட்டுச்சுருளில் உள்ள எழுத்துக்களைப் பிரதிபலிக்கிறது. அசாதாரண உருக்கம் கொண்ட காட்சி இது, கதையின் வெவ்வேறு கூறுகளை ஒரே காட்சியில் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது- “காதல், மரணம், கௌரவம்.”

 

 

மாபெரும் கலையின் அபூர்வ உயரங்களிலிருந்து மெல்ல இறங்கி நமக்குப் பழக்கப்பட்ட யதார்த்த வாழ்வனுபவத்தைப் பார்ப்போம், நிஜ உலகில் ஜெனரலின் அலுவலகத்தில் உயிரற்று விழுந்து கிடக்கும் துண்டிக்கப்பட்ட இரு தலைகளுக்கு வருவோம். அவற்றின் ஈமச் சடங்கு புகைப்படங்களின் ஒன்றினுள் புகுவோம், அற்ப விஷயங்களை அறிந்து கொள்ளும் நம் ஆர்வத்துக்குத் தடை போட வேண்டாம், மிஷிமாவின் குடும்பம் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் யசுனாரி கவாபாட்டா, மறைந்த எழுத்தாளரின் நண்பர், ஆசான், முந்தைய ஆண்டுதான் நோபல் விருது வென்றவர் அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். தன் சீடனைவிட கவாபாட்டா நாடகீயத்தன்மை குறைந்தவர், அவரும் அதே ஆண்டு மிஷிமாவின் மரணத்தை நினைவுகூர்வது போல் அவரை விடச் சற்றே அடங்கிய வகையில் இவ்வுலகிலிருந்து விடை பெறுவார்- சமையல் வாயுக் குழாய்க்குத் தலை கொடுத்து.

எது எப்படியாக இருப்பினும், இறுதியில் மரணம் விட்டுச் செல்வது வெற்றிடத்தை, நமக்குக் கிட்டிய தகவல்களைக் கொண்டு நாம் அதை அவசர அவசரமாய் நிரப்புகிறோம், இதனால் மரணம் முடிவில் அபத்தமாகிறது. இந்த விஷயத்தில் மிஷிமா 1969 ஆம் ஆண்டு சொன்னதற்கு முக்கியத்துவம் கொடுப்போமானால் அதற்கு ஒரு வகை உருக்கம் கிட்டும், “கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகால எண்ணங்களை நான் மீண்டும் வாழ்ந்து பார்க்கும்போது, அவற்றின் வெறுமை என்னைத் திகைப்பில் நிறைக்கிறது. நான் வாழ்ந்திருக்கிறேன் என்றும்கூட சொல்ல முடியாது.” இப்படிச் சொன்னவர்தான் நாற்பது நாவல்கள், இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்கள், சிறுகதை, மற்றும் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு லிப்ரட்டோ இவையனைத்தும் போதாதென்று ஒரு திரைப்படத்தையும் தந்திருக்கிறார். இதைக் கேட்டுத் திகைக்க முடியாதவர்கள், தற்கொலைச் செய்தி அறிந்ததும் அவரது மனைவி சொன்னது கேட்டு அதிர்ச்சியடையலாம்- “அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது எனக்குத் தெரியும் ஆனால் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் இருப்பார் என்று நினைத்தேன்” என்று மிகவும் இயல்பான தொனியில் அவர் சொன்னார். இதன் பின் தன் மனைவி குறித்து “யோகோவுக்கு ‘கற்பனை’ கிடையாது” என்று மிஷிமா கூறியதை ஜான் லெனனுடன் தொடர்புபடுத்திச் சற்று சிரிக்கலாம், (ஆனால் மிஷிமா ரசிகர்கள் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்தபோது குறுக்கிட்டு அவர்களை விடுவித்தவர் யோகோதான் என்பதையும் அவர்கள் மறக்கக்கூடாது)

அல்லது நாம் முழு வட்டம் திரும்பி வரலாம். மீண்டும் இலக்கியத்திற்கே திரும்பலாம், மிஷிமாவின் கிரீடத்தை அணிந்து கொண்ட எழுத்தாளனான ஹருகீ முராகாமியின் ‘வைல்ட் ஷீப் சேஸ்” மெய்யாகவே மிஷிமாவின் மரணத்தில் துவங்குவதையும், அதன் முதல் பகுதி நவம்பர் 25, 1970 என்று தலைப்பிடப்பட்டிருப்பதையும் எண்ணி ஆச்சரியப்படலாம். ஆனால் திசையின்றி  சிந்தனைகளில் நம்மை இழந்து ஆகப்போவதென்ன? இறுதியில் கண்கவர் காட்சித்தன்மைகொண்ட மரணங்களும் சற்றே அபத்தமாகின்றன. “த சீ ஆஃப்ஃபெர்ட்டிலிட்டி”, மேர் ஃபெகுண்டிடாடிஸ்(Mare Fecunditatis), ஒரு காலத்தில் நீர்நிலையாகக் கருதப்பட்டது, இன்றோ சந்திரனின் கரும் பசால்ட் சமவெளியாய் மாறி விட்டது. “அண்டம் மேவிய மறுப்பின் மீது வளமை நிறைந்த கடலின் பிம்பத்தைப் பூட்டும்” மிஷிமாவின் தேவையை அறிவியல் இல்லாமல் ஆக்கிவிட்டதோ என்று மிகக் கடுமையாகக் கிண்டலும் செய்யலாம். ஆனால் அவரை விரும்பிப்படித்த வாசகர்களாகிய நாம் அனைத்துக்கும் மறுப்பாய் நிலவும் அண்டத்தில் அதன் வெறுமைக்கு எதிரிடையாக நாம் வென்ற வளமைக் கடல்களையும் பூட்டலாம்.

அவ்வாறு பூட்டுகையில் சூனியத்தின் வெறுமையும் ஒரு நிறைவே என்பதையும் உணர நேரிடலாம்; “சீ ஆஃப் ஃபெர்ட்டிலிட்டியின்” முடிவில் கதைநாயகன் ஹோண்டா பெண் மடாதிபதியால் மடாலயத்தின் உள் அரங்குக்கு அழைத்துச் செல்லப்படுகிறான், அமைதியான, யாருமற்ற தென் தோட்டத்துக்குச் செல்கிறான், “ஒன்றுமில்லாது, நினைவுகள் இல்லாத” அவ்விடத்தை மதியச் சூரியனின் ஓத வெள்ளம் பேரழகு பொருந்திய வெறும் வானிலிருந்து பொங்கிப் புரண்டு நிறைத்ததையும் நினைவுகூரலாம். வெறுமைக்குள் செல்லத்துணிந்து, அதற்கெதிராய் சுவர் எழுப்பிக் கொள்ளும் வகையில், ‘தேசப்பற்று’நூலின் கசங்கிய பிரதியை எடுத்து, அதன் பெருகூட்டப்பட்ட எஃக்கின் மெல்லிய இனிப்பை மீண்டுமொரு முறை சுவைக்கலாம்.

 

மூலநூல்கள்/ மேலும்படிக்க:

  • Mishima, Yukio, Patriotism, Death in Midsummer and Other Stories, New Directions, 1966
  • Mishima, Yukio, Spring Snow, Alfred A. Knopf, 1972
  • Mishima, Yukio, Runaway Horses, Alfred A. Knopf, 1973.
  • Mishima, Yukio, The Temple of Dawn, Alfred A. Knopf, 1973
  • Mishima, Yukio, Decay of the Angel, Alfred. A. Knopf, 1974
  • Yourcenar, Marguerite, Mishima: a vision of the void, Collins Publishers, 1986.

நம்பி கிருஷ்ணன்.

நம்பி கிருஷ்ணன் பல ஆண்டுகளாக சொல்வனம் இணையப் பத்திரிகையில் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். பதாகை , தமிழினி, கனலி, காலச்சுவடு மற்றும் சாகித்ய அகாடமியின் Indian Literature இதழ்களில் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ் புனைவுகளையும் Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் முயற்சிப்பவர். அண்மையில் பாண்டியாட்டம் என்ற தலைப்பில் இவரது கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது.


 

 

No comments

leave a comment

error: Content is protected !!