நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்


ந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும் இந்திய மனங்களுக்கு அறிமுகப்படுத்த “நாத்சுமோ ஸோஸாகி” (Notsume Soseki) எழுதிய புகழ்பெற்ற கோகொரோ(kokoro) நாவல் ஒரு சிறந்த படைப்பாகும்.

நாவல் முழுக்கவும் ஒரு வகையான ஜப்பானிய அமைதி தொடர்ந்து வருவதனை, இதனை வாசிக்கும் வாசகர்கள் தெளிவாக உணரலாம். நாவல் விரிக்கும் கதைப் பரப்பில் எனக்குள் அது தந்த புதுமையான வாசிப்பனுபவத்தைப் பற்றி இக்கட்டுரையில் எழுத உள்ளேன். ஸோஸாகியின் குரலில் இந்நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது.

இந்நாவலோடு எனக்கான அறிமுகம்:

இந்நாவலை எனக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொன்னவர் கவிஞர் ராணிதிலக், அவர் என்னிடம் இப்புத்தகத்தை வாசிக்க கொடுத்தப் பின்பு நான் வாசிக்காமல் கொஞ்சக்காலம் கிடப்பில் போட்டு வைத்தேன், பின்பு சில நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் இருவரும் சந்திக்கையில் தன் வாழ்க்கையோடு இந்நாவலின் கதையை ஒப்பிட்டு நீண்ட நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தது, இதனை வாசிக்கும் ஆர்வம் எனக்குள் எழ வைத்தது.

நாவலின் வடிவம் மற்றும் கதைச் சுருக்கம்:

“அவரும் நானும்”, “பெற்றோரும் நானும்” மற்றும் “செஞ்யீயின் கடிதம்” என இந்நாவல் மூன்று பகுதிகளாகப் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாகக் கடிதத்தைக் கொண்டு இந்நாவலின் மையத்தை எழுதியிருப்பது ஸோஸாகியின் சமகால கதைச்சொல்லல் மரபிலிருந்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில் கடித இலக்கியங்கள் அல்லது கடிதங்களை கதைகளுக்குள் கொண்டுவருவது அவரின் காலத்தில் வெகுவாக இருந்தது.

பகுதி-1

அவரும் நானும்:

இக்கதை ஜப்பானிய கடற்கரை நகரமான காமக்கூராவிலிருந்து ஆரம்பிக்கிறது.

தனது விடுமுறை நாட்களை நண்பனுடன் கழிக்க காமக்கூராவிற்கு வரும் ஸோஸாகி, ஊரின் கடற்கரையில் தனது விடுமுறை நாட்களை மகிழ்வாக கழிக்கிறார். அப்பொழுது கூட்டத்தில் அமைதியாகக் குளித்துவிட்டு வெளியேறும் ஒரு முதியவரைக் கடற்கரையில் கண்டவுடன் எப்பொழுதும் தனிமையில் இருக்கும் ஸோஸாகியின் முழு கவனமும் அவரின்பால் செல்கிறது, பிறகு தினமும் அவரை அக்கடற்கரையில் காணும் ஸோஸாகிக்கு அவரின் மீது மதிப்பு ஏற்படுகிறது. அக்கடற்கரைக் கூட்டத்தில் எப்பொழுதும் தனித்திருக்கும் செஞ்சியின் தோற்றத்தாலும் அமைதியான முகத்தாலும் கவரப்பட்ட இளம் ஸோஸாக்கிக்கு அவரிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. தினமும் அவரைக் கடற்கரையில் சந்திக்கும் ஸோஸாகிக்கு அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது ஏற்படுகிறது, அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் நண்பனான ஸோஸாகி, காமக்கூராவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று சில நாட்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை செஞ்சீ (ஷென்ஷாய்/குரு) என்றழைக்க ஆரம்பிக்கிறார், ஆனால் அவ்வாறு அழைப்பதை செஞ்சீ விரும்பவில்லை. இவ்வாறாக ஒரு நாள் ஸோஸாகி காமக்கூராவில் அவரது வீட்டிற்குச் சென்ற சமயம் அவர் வீட்டிலில்லை எனவும் நகரின் கல்லறைக்குச் சென்றிருப்பதாகவும் அவர் மனைவியின் மூலம் கேள்விப்பட்டு அங்கே சென்ற ஸோஸாக்கியைக் கண்டவுடன் செஞ்சீயின் உடல்மொழியும், பதற்றமும் இவரை ஆச்சரியப்பட வைத்தது.

கதை பின்பு டோக்கியோ நகரத்தை நோக்கி நகர்கிறது. காமக்கூராவைவிட்டுச் செஞ்சீ டோக்கியோவிற்குச் சென்ற பின்னர் அவரின் பிரிவால் எதையோ இழந்துவிட்டதைப்போல சிறிது காலம் உணர்ந்த ஸோஸாகி, பின்பு டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்கான வாய்ப்பு கிட்டியதும் டோக்கியோவிற்குச் செல்கிறார். அங்கே செஞ்சீயை அவரது வீட்டில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்த பின்பு வரும் நாட்களில் இருவருக்கும் அது நெருங்கிய நட்பாக வளர்ந்தது. ஸோஸாக்கி தனது கல்லூரி விடுதியை விடத் தனது பெரும்பான்மையான நேரங்களைச் செஞ்சியின் வீட்டில் அவரது மனைவியுடனோ அவருடனோ கழிக்கிறார், செஞ்சீ தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதால் இருவரும் ஸோஸாகியிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். அவர் அங்கு வரும்பொழுது டீ போட்டுக்கொடுப்பது மற்றும் உணவுகள் தயாரித்துக்கொடுப்பது என அவரை அன்புடன் உபசரித்துக்கொண்டனர். மேலும் கல்லூரி ஆராய்ச்சிக் கட்டுரைகள் சம்பந்தமான உதவிகளையும் கூட ஏராளமாகச் செய்தனர். இவ்வாறாக ஸோஸாகியும் தனது கல்லூரி காலம் முடியும் வரை அவர்களின் வீட்டிற்குச் சென்று வருகிறார். செஞ்சீயின் மௌனமான மற்றும் எப்பொழுதும் தனித்தே இருக்கும் குணத்தால் கவரப்பட்ட ஸோஸாகிக்கு அது ஆன்மீக வெளிப்பாடாகத் தோன்றினாலும் அதற்கான உண்மையான காரணத்தை அறிய வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் வளர்ந்து, பல சமயங்களில் அதனை அவரிடமே நேரடியாக கேட்கும்படியாகவே அமைந்துவிட்டாலும் அதற்கான பதில் செஞ்சீயிடம் இருந்து ஒரு முறையும் கிடைத்ததில்லை. இதனைச் செஞ்சியின் மனைவியிடமும் பலமுறை கேட்ட ஸோஸாகிக்கு, அதிலும் அவருக்குப் பதிலில்லை. இவ்வாறாக இருவரிடையே ஆரம்பித்த நட்பின் மூலமும், செஞ்சீயுடனும் அவரது மனைவியுடனும் வரும் உரையாடல்களின் மூலமும் ஸோஸாகி நம்மை ஜென் அனுபவத்தினை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

 

பகுதி-2

பெற்றோரும் நானும்:

இவ்வாறாக டோக்கியோவில் கல்லூரிப்படிப்பு முடிந்தபின்பு மீண்டும் செப்டம்பரில் டோக்கியோ வருவதாக அத்தம்பதியிடம் கூறிவிட்டு சொந்த கிராமத்திற்குச் செல்கிறார் ஸோஸாகி. ஸோஸாகி, செஞ்சீ மற்றும் அவரது மனைவியிடம் உள்ள தனது நட்பினைப் பற்றித் தனது தந்தையிடம் நிறையவே கூறுகிறார். பட்டம் பெற்ற தனது மகனைக் கண்டவுடன் ஸோஸாகியின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி, அதனால அவர் பட்டம் பெற்றதை வெகுவாகக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் ஆசைக்கு அவர் சம்மதிக்கவில்லை. விரைவில் அவர்கள் அவர் பட்டம் பெற்றதைத் திருமணத்தோடு தொடர்பு படுத்தித் திருமணப் பேச்சை ஆரம்பித்தார்கள்.

அதற்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. பட்டம் பெற்ற பிறகு வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஸோஸாகியின் நிலையைக் கண்டு அவரது பெற்றோர்கள் மிகவும் மனம் வருந்தினர். இவ்வாறாக நாட்கள் சென்றன. ஸொஸாகியின் தந்தை அடிக்கடி உடல் நலக்குறைவால் மயக்கம் அடைவது தொடர்ந்தது. இதற்கிடையில் தன் தாயாரின் அறிவுறுத்தலின்படி தன் வேலைக்காகச் செஞ்சீயிடம் நான்குமுறை கடிதம் எழுதினார், ஆனால் அதற்கான பதில் எதுவும் வராதது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியது. இந்நாவல் முழுக்க ஏதோ ஒருவகையில் ஜப்பானிய சக்கரவர்த்தி மேஜியின் (Meji) மரணத்திற்கு பின்னான ஜப்பானிய மக்களின் மனதைப் பதிவு செய்கிறது, அச்சக்கரவர்த்தியின் காலத்தவரான ஸோஸாகியின் தந்தை சக்கரவர்த்தியின் மரணத்தைக் கேட்டு மீளத் துயரில் வருந்துகிறார்,

இதனால் சிறிது நாட்களில் ஸோஸாகின் தந்தையின் உடல் நலமும் குன்ற அரம்பித்து அவரும் மரணமடைய போகும் சமயத்தில் அப்பொழுது ஸோஸாக்கிக்கு செஞ்சீயிடமிருந்து வரும் நீண்டக்கடிதம்.

பகுதி-3

செஞ்சியின் கடிதம்:

செஞ்சீயைப் பற்றி ஸோஸாகியின் அனைத்துக் கேள்விகளுக்குமான விடை அக்கடிதத்தில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. செஞ்சீயின் பதின்ம வயதில் அவருக்கும் அவரின் நண்பனான பக்கத்து அறைவாசி “க”விற்கும் தங்கள் குடியிருக்கும் வீட்டின் முதலாளியம்மா மகளின் மீதான காதலால் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் கதை.

இளமையிலேயே தந்தையை இழந்த செஞ்சீ தன் சிற்றப்பாவின் கட்டுப்பாட்டில் வளர்கிறார். ஆனால் தன் அண்ணனின் சொத்துகளின் மீது ஆசைக் கொண்ட தனது சிற்றப்பாவால் செஞ்சீ ஏமாற்றப்படுகிறார். பின்னர் அவர் கணவனை இழந்து தன் ஒரே மகளுடன் வாழும் ஒரு அம்மையாரின் வீட்டில் தங்க அறை கிடைக்கிறது.

நண்பனான “க”-வின் ஆன்மீகத் தேடல் மிகுந்த வாழ்க்கையால் அவரின் வாழ்வில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் அவர் இழக்கும் தருணம் செஞ்சீயை வெகுவாக பாதித்தது. அவரை மீட்கும் பொருட்டு தனது காதலிக்கு அறிமுகம் செய்தததில் “க”விற்கு அப்பெண்ணின் மீதான ஒருதலைக்காதலில் முடிந்தது.

இதனால் “க” விற்கும் செஞ்சீக்கும் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தைத் தாங்கிக்கொள்ளால் “க” தற்கொலை செய்துக்கொள்வதால்

குற்றவுணர்ச்சியில் மௌனமாகும் செஞ்சீ இதனை தான் இறக்கும் வரை தொடர்கிறார், 35 ஆண்டுகளாக தன் முடிவை எதிர்நோக்கி இருந்ததாகவும், இப்பொழுது “க” போல் அல்லாது இரத்தம் வெளியே வராது இறப்பினை உண்டுபண்ணும் வழியினைப் பின்பற்றித் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாகவும் மேலும் அக்கடிதத்தின் முடிவில் அந்தப் பெண்ணையே தான் மனைவியாக ஏற்றதாகவும், இதில் குறிப்பிட்டுள்ள கதை யாவும் தன் மனைவிக்குத் தெரிய வேண்டாம் என கூறி ஸோஸாகியின் நீண்டநாள் கேள்விக்கு விடைகூறி கடிதத்தை முடிக்கிறார். இதற்கிடையில் இக்கடிதம் வருவதற்கு முன்பே உடனடியாக டோக்கியோவிற்கு வருமாறு செஞ்சியிடமிருந்து முன்னரே ஒரு தந்தி வந்திருந்தது, ஆனால் மரணப் படுக்கையில் இருக்கும் தனது தந்தையை விட்டுச்செல்ல இயலாமல் தவிக்கும் ஸோஸாகிக்கு இக்கடிதம் வந்தது, அதில் தான் மரணப் படுக்கையில் இருப்பதால் தான் கூற வேண்டும் என்ற விஷயங்களைப் பத்து நாட்களாக இக்கடிதத்தில் எழுதியதாகவும், இக்கடிதம் உன் கையில் கிடைத்தவுடன் தான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார் செஞ்சீ.

இக்கடிதத்தினை ஸோஸாகி படித்து முடிப்பதாக இந்நாவல் நிறைவுப்பெறுகிறது.

என்னுடைய வாசிப்பனுபவம்:

மேலே இயந்தவரை இந்நாவலின் மையத்தை அல்லது கதையைக் கூற முற்பட்டுள்ளேன். மேலும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நுண்ணிய இடங்களையும் மற்றும் உரையாடல்களையும் முழுமையாக இதில் நான் குறிப்பிட விரும்பவில்லை அவ்வாறு செய்வதில் நாவலின் முழு அனுபவமும் சிதைந்துவிடும் என்பது என் பார்வை. ஏனெனில் அதை ஒவ்வொருவராகத் தேடிக் கண்டடைய வேண்டும் என்பதே ஸோஸாக்கியின் விருப்பம். அதுவே என் விருப்பமும் கூட. காதலுக்கும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் பரீட்சையே இந்நாவல்.

ஸோஸாகி விளக்கும் “க” என்ற கதாபாத்திரத்தை நுகர்வு கலாச்சாரத்தை முற்றிலும் வெறுக்கும் மற்றும் லௌகீக வாழ்க்கையின் சுகதுக்கங்களில் இருந்து விடுபட நினைக்கும் ஜப்பானிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு தத்துவங்களின் எச்சமாக எழுதியுள்ளார். ஆனால் ஒரு பெண்ணின் நட்புணர்வு கிடைப்பதற்கு முன்னால் ஒரு வேதாந்தியாக பைபிள், மகாயான பௌத்தம் மற்றும் பல்வேறு மதங்களின் கோட்பாடுகளுக்குள் மூழ்கியும் பல பௌத்த மதகுருமார்களின் கோயில்களைத் தேடி அலையும் ஒருவனாக இருக்கும் “க” ஸோஸாகியின் காதலியின் மீது மையல் கொண்ட பின்பு தனது சந்நியாசத்தை முற்றிலும் துறந்து இன்பத்தில் திளைப்பவனாக மாறுவது என்பது மனித மனதின் பலவீனங்களின் அப்பட்டமான சித்தரிப்பு, இதனை மிகவும் நுட்பமாக விவரிக்கிறது ஸோஸாகியின் எழுத்து.

இந்நாவலில் ஸோஸாகி தனக்கான ஆன்மீகத் தேடல்களின் மற்றும் அக்காலக்கட்டத்தில் எழுந்த போர்களாலும், ஐரோப்பாவின் ஆதிக்கத்தாலும் அழிந்து வந்த ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரதிநிதியாக, பழைய ஜப்பானியராக வரும் ஸோஸாகியின் அப்பாவை முன்நவீனத்துவ ஜப்பானியராக அவரின் மதிப்பீடுகளையும், சக்கரவர்த்தியின் மரணத்திற்கு பிறகான பின்நவீனத்துவ ஜப்பானியனான ஸோஸாகியின் வாழ்க்கை மீதான கொண்டுள்ள மதிப்பீடுகளையும் தெளிவாக வேறுபடுத்தி எழுதியுள்ளார். இந்நாவலின் மையக் கதை என்னவோ பரிட்சையைப் பட்டதாகவும் அல்லது மேலோட்டமாகவும் தோன்றினாலும் அதனுள் ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மாவையும், தனித்த பல கூறுகளையும் இறுதிவரை தாங்கி வருவதே சிறப்பு, உதாரணமாக “க” தற்கொலை செய்துகொள்வதும் அதனை வீட்டின் முதலாளியம்மாவும் காவல்காரர்களும் மற்றும் அச்சமயத்தில் செஞ்சீயும் எவ்வாறு தற்கொலையை புரிந்துகொள்கிறார்கள் என்பது ஜப்பானியர்கள் தற்கொலை என்பதை தனிமனித விருப்பமாக எடுத்துக்கொள்ளும் மரபினை இயல்பாக பதிவு செய்துள்ளார் மற்றும் நாவலில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல்களும் ஜப்பானிய கலாச்சாரத்தின் கூறுகளாகவே இருக்கிறது. மேலும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனிமனித விடுதலையை நுட்பமான தங்களின் செயல்பாடுகளாலும், உரையாடல்களாலும் நிதானமாக பேசுகின்றன. செஞ்சீ வீட்டு முதலாளியம்மாவின் ஆண் பெண் உறவுகளின் மீது கொண்டுள்ள ஆழமான பார்வை ஜப்பானியக் கலாச்சாரத்தின் அடிப்படையான கூறுகளில் ஒன்று. இதுபோல இந்நாவல் காட்டும் அமைதியான தரிசனங்கள் பல. அதனைக் கண்டிப்பாக அனைவரும் பெற வேண்டும்.


விக்ரம் சிவக்குமார்

 

[tds_info]

 முதலாமாண்டு பல் மருத்துவ மாணவர். நவீன இலக்கியம் மற்றும் நாட்டாரியலில் ஆர்வம் உடையவர்.
கும்பகோணத்தை சேர்ந்த இவர்,இப்போது சென்னையில் வசிக்கிறார். உலக கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

[/tds_info]

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.