கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா?
பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை நிறுத்திவிடுவீர்கள், எழுதியதை வாசித்துப் பார்ப்பீர்கள், பின் அங்கிருந்து எழுதிக் கொண்டிருப்பீர்கள். உத்வேகம் உள்ள மட்டும் எழுத்து நீடிக்கும் – பகல் வரை அல்லது அதற்கு முன்னதாக. நிறுத்தும்போது வெறுமையாகிவிடுவீர்கள் – அதே வேளையில் வெறுமையாயில்லாமல் நிரப்பிக் கொண்டிருப்பீர்கள் – நேசிக்கின்ற ஒருவருடன் உறவு கொண்டுள்ளதைப் போல. எதுவும் உங்களைப் புண்படுத்தாது, எதுவும் நிகழாது, எதுவும் ஒரு பொருட்டில்லை – மறுநாள் மீண்டும் எழுதும்வரை.
கே: தட்டச்சு இயந்திரத்திற்கு வெளியில் இருக்கும்போது, உங்கள் மனதில் உள்ள திட்டத்தை உங்களால் ஒதுக்கித் தள்ள இயலுமா?
ப: நிச்சயமாக. அவ்வாறு செய்திட முறையான பழக்கம் தேவை. இது பயின்றுகொள்வதுதான்.
கே: முன்னர் விட்டுவந்த இடம் வரை வாசித்துப் பார்க்கையில், மாற்றி எழுதுவதுண்டா? அல்லது ஒட்டுமொத்தமாக முடிந்ததும், அதனை மேற்கொள்வீர்களா?
ப: நான் நிறுத்திய இடம் வரை ஒவ்வொரு நாளும் மாற்றி எழுதுவேன். முடிந்ததும் இயல்பாகவே வாசித்துப் பார்ப்பேன். திருத்தியமைக்க அது இன்னொரு சந்தர்ப்பம்; இன்னொருவர் தட்டச்சு செய்கையில் மாற்றி எழுதுவீர்கள்; தட்டச்சுப் பிரதியில் தெளிவாக இருக்கும். பிழைதிருத்தம் செய்கையில் இறுதிச் சந்தர்ப்பம் கிட்டும்; இச்சந்தர்ப்பங்களுக்கு நன்றி பாராட்டுவீர்கள்.
கே: எந்த அளவுக்கு மாற்றி எழுதுவீர்கள்?
ப: அது அந்த நூலைப் பொறுத்தது. Farewell to Arms-ஐ எழுதிய போது, இறுதிப் பக்கத்தை 39 முறை திருத்தி எழுதினேன்.
கே: ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலா? எது உங்களை அயரவைத்தது?
ப: சரியான வார்த்தைகளைப் போடுவதுதான் பிரச்சனையாயிருந்தது.
கே: மறுவாசிப்புதான் “உத்வேக”த்தை ஊட்டுகிறதா?
ப: எங்கிருந்து தொடர வேண்டுமோ அங்கே உங்களை நிறுத்துவது மறுவாசிப்பே – எங்கேணும் ஓரிடத்தே உத்வேகம் நிலவும்.
கே: உற்சாகம் இல்லாத நேரங்கள் உண்டா?
ப: இயற்கையாகவே. தொடங்கும் மட்டும் நீங்கள் சரியாகவே இருக்கிறீர்கள். உத்வேகம் வந்துவிடும்.
கே: பணியாற்ற சாதகமாயுள்ள இடங்கள் எவை? நீங்கள் எழுதியுள்ள புத்தகங்களை வைத்துப் பார்க்கையில், அம்போஸ் முண்டோஸ் ஹோட்டல் அவற்றில் ஒன்றாயிருக்கும். அல்லது சுற்றுப் புறங்கள் உங்களது எழுத்தில் தாக்கம் செலுத்துவதில்லையா?
ப: ஹவானாவிலுள்ள அம்போஸ் முண்டோஸ் ஹோட்டல் எழுதுவதற்கு அருமையானது. ஆனால் எல்லாவிடத்திலும் நன்றாக எழுதியிருக்கிறேன். வேறுபட்ட சந்தர்ப்ப சூழல்களிலும் என்னால் எழுத முடிந்துள்ளது. தொலைபேசியும் வருகையாளர்களுமே வேலையைப் பாழாக்குபவர்கள்.
கே: உணர்வு நிலையிலான திடநிலை நன்றாக எழுதிட அவசியமா? காதல் வயப்படும் போது நன்றாக எழுத முடிந்ததாக ஒருமுறை என்னிடம் கூறினீர்கள். அது பற்றி விளக்க முடியுமா?
ப: என்னவொரு கேள்வி! முயன்று பார்ப்பதற்கு முழு மதிப்பெண்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல், மக்கள் உங்களை விட்டுச் செல்லும் எந்த நேரத்திலும் உங்களால் எழுத முடியும். அல்லது அது பற்றிய கரிசனம் இல்லையெனில், எழுத முடியும்.
ஆனால் மிகச் சிறந்த எழுத்து, நீங்கள் காதல் வயப்படும்போது. எதுவென்றாலும் சரி என்னும் பட்சத்தில், நான் இதுபற்றி விளக்காதிருப்பதே நல்லது.
கே: நிதிப் பாதுகாப்பு எப்படிப்பட்டது? நல்ல எழுத்துக்கு அது தடையாக இருக்கக்கூடுமோ?
ப: மிக ஆரம்பத்திலேயே அது வந்து, உங்கள் எழுத்தை நேசிக்கும் அளவுக்கு உங்கள் வாழ்வை நேசித்தால், தூண்டல்களை எதிர்த்திட நிறைய பண்புநலன் அவசியம். எழுத்து உங்களது பெரும்கேடாகவும் மாபெரும் சந்தோஷமாகவும் மாறியதும், மரணமே அதனைத் தடுக்க இயலும். நிதிப் பாதுகாப்பு, கவலையிலிருந்து உங்களை விலக்கி வைப்பதால், பெரும் உதவியாயிருக்கும். எழுதும் திறனை அழித்துவிடுகிறது கவலை. சுகவீனம் கவலையை ஏற்படுத்தி, அடிமனதைத் தாக்கி, உங்கள் கருவூலத்தை அழித்துவிடுவதால், அதற்கேற்ற வீதாச்சாரத்தில் மோசமானது.
கே: எழுத்தாளராகிய துல்லியமான தருணத்தை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா?
ப: இல்லை, நான் எப்போதும் எழுத்தாளராகவே விரும்பினேன்.
கே: 1918 பீரங்கித் தாக்குதலில் நீங்கள் அடைந்த அதிர்ச்சி, எழுத்தாளராக உங்களிடத்தே பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது என பிலிப்யங் தன் நூலில் குறிப்பிடுகிறார். இவ்வாய்வு குறித்து மாட்ரிட்டில் விளக்கிய நீங்கள், கலைஞனின் சாதனம் பெறப்பட்ட பண்புநலனல்ல மாறாக மெண்டலின் அர்த்தத்தில், சுவீகரிக்கப்பட்டது என்று கூறி, யங்கின் குறிப்பை நிராகரித்தீர்கள்.
ப: மாட்ரிட்டில் அந்த ஆண்டு என் மனநிலை நன்றாக இல்லை. யங்கின் புத்தகம் பற்றியும் இலக்கியம் சார்ந்த அவரது அதிர்ச்சி கோட்பாடு பற்றியும் சுருக்கமாவே பேசினேன். இரு அதிர்ச்சிகளும் அந்த ஆண்டு ஏற்பட்ட கபால முறிவும் எனது வாசகங்களில் என்னை பொறுப்பற்றவனாக ஆக்கியிருக்கலாம். கற்பனை, சுவீகரிக்கப்பட்ட இன அனுபவமாக இருக்க முடியும் என்பதை நம்பியதாக உங்களிடம் கூறியது நினைவிருக்கிறது. அதிர்ச்சிக்குப் பிறகான பேச்சில் இது வேடிக்கையாயுள்ளது. ஆக அடுத்த விடுதலை அதிர்ச்சி வரும்வரை இதனை அங்கேயே விட்டுவிடுவோம். சரியா? நான் குறிப்பிட்டிருக்கக் கூடிய உறவினர் பெயர்களை விட்டுவிட்டமைக்கு நன்றி. … காயங்களின் தாக்கங்கள் பெரிதும் வேறுபடும். எளிய காயங்கள் எலும்பை முறிக்காத நிலையில் ஒன்றும் செய்யாது. எலும்பைத் தாக்கி நரம்பு மண்டலத்தைப் பாதித்திடும் காயங்கள் எழுத்தாளருக்கோ வேறுயாருக்கோ நல்லதில்லை.
கே: எழுத்தாளராக ஆகப் போகின்றவருக்கான மிகச் சிறந்த அறிவார்த்த பயிற்சி என்று எதைக் கருதுகிறீர்கள்?
ப: நன்றாக எழுதுவது சாத்தியமற்றது, சிரமமானது என்று அவன் கருதுவதால், அவன் வெளியேறிச் சென்று தூக்கில் தொங்கவேண்டும். அப்புறம் ஈவு இரக்கமின்றி தூக்குக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும்; மற்றும் தன் எஞ்சிய ஆயுளெல்லாம் எழுதுமாறு தனது அகத்தினாலேயே கட்டாயப்படுத்தப்படவேண்டும். குறைந்தது, எழுத்தை ஆரம்பித்திட, தூக்கில் தொங்கிய கதையாவது அவனிடம் இருக்கும்.
கே: கல்வி வளாகப் பணிக்குப் போயுள்ளோர் பற்றி? ஆசிரியப் பணியிலுள்ள அதிக எண்ணிக்கையிலான எழுத்தாளர்கள் தம் இலக்கிய ஈடுபாட்டில் சமரசம் செய்துள்ளதாகக் கருதுகிறீர்களா?
ப: சமரசம் என எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை பயன்படுத்துவதா? அல்லது அரசியல் நிர்வாகியின் சமரசமா? சற்று அதிகம் தருவேன், ஆனால் மிகத் தாமதித்தே தருவேன் என உங்களது மளிகைக் கடைக்காரரிடமோ தையல்காரரிடமோ செய்துகொள்ளும் சமரசமா? எழுதவும் கற்பிக்கவும் முடிகின்ற எழுத்தாளர் இரண்டையும் மேற்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். பல திறமைசாலி எழுத்தாளர்கள் அதனை மேற்கொள்ள இயலும் என நிரூபணம் செய்துள்ளனர். என்னால் இயலாது, அவ்வாறு செய்வோரைப் பாராட்டுகிறேன். கல்வி வளாக வாழ்வு, வெளிப்புற அனுபவத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, உலக அறிவு வளர்ச்சியை வரம்பிடக் கூடும் என்றெண்ணுகிறேன். எனினும் அறிவு, ஓர் எழுத்தாளரிடம் கூடுதல் பொறுப்பைக் கோரி, எழுத்தினை மேலும் சிரமமானதாக்கும். நிலைத்த மதிப்புடைய ஒன்றை எழுத முற்படுவது முழு நேரப் பணியாகும் – உண்மையான எழுத்தில் நாள்தோறும் செலவிடப்படுவது சில மணி நேரங்களே என்றபோதும். எழுத்தாளரை கிணற்றுடன் ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் வரிசையைப் போல அத்தனை ரகங்களிலான கிணறுகள் உண்டு. முக்கிய விஷயம் கிணற்றில் நல்ல நீர் கிடைப்பது; நீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, நிரம்பும் வரை காத்திருப்பதை விடவும் சீரான அளவு நீர் கிடைப்பது மேலானது.
கே: இளம் எழுத்தாளருக்கு செய்தித்தாள் பணியைப் பரிந்துரைப்பீர்களா? The Kansas city star-இல் நீங்கள் பெற்ற பயிற்சி எவ்வளவு உதவிற்று?
ப: எளிய பிரகடனப்படுத்தும் வாக்கியத்தை எழுதக் கற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தம் இருந்தது. அது யாருக்கும் பயனுள்ளதே. செய்தித்தாள் பணி இளம் எழுத்தாளருக்குத் தீங்கிழைக்காது; நேரத்தே அங்கிருந்து வெளியேறிவிட்டால் துணை நிற்கும்.
கே: பத்திரிகைப் பணி செய்வது நல்ல ஊதியத்திற்காகத்தான் என Transatlantic Review-இல் ஒருமுறை எழுதினீர்கள். “எழுதுவதன் வாயிலாக மதிப்பு மிக்க பொருட்கள் உங்களிடமிருந்து, அவற்றை அழிக்கும்போது, எழுத்து சுய அழிவு போன்றது” என்று கருதுகிறீர்களா?
ப: அப்படி எழுதியதாக நினைவில்லை. ஆனால் அது முட்டாள்தனமாயிருக்கிறது. எழுத்து தன்னை அழிக்கும் செயல்பாடில்லை. ஆனால் பத்திரிகைத் தொழில் ஓரளவுக்குப் பின்னர் படைப்பாக்க எழுத்தாளருக்கு தன்னை அழிக்கும் செயல்பாடே.
கே: மற்ற எழுத்தாளர்களுடைய தோழமையின் தூண்டுதல், ஓர் எழுத்தாளருக்கு மதிப்பைப் பெற்றிருக்குமா?
ப: நிச்சயமாக.
கே: இருபதுகளின் பாரிஸில், பிற எழுத்தாளர்கள் – கலைஞர்களுடன் குழு உணர்வு ஏதேனும் கொண்டிருந்தீர்களா?
ப: இல்லை. குழு உணர்வு இருக்கவில்லை. ஒருவரிடம் மற்றவர் மதிப்பு வைத்திருந்தோம். என் வயதுக்காரர்கள், மூத்தவர்கள் – கிறிஸ், பிகாஸ்ஸோ, பிராக், மோனெ என – நிறைய ஓவியர்களை மதித்தேன். ஜாய்ஸ், எஸ்ரா, ஸ்டீய்ன் போன்ற சில எழுத்தாளர்களை மதித்தேன்…
கே: நீங்கள் எழுதுகையில், அப்போது வாசிக்கின்றவற்றின் தாக்கம் ஏற்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?
ப: ஜாய்ஸ், யுலீஸஸ் எழுதும் வரை கிடையாது. அவர் நேரடித் தாக்கமில்லை. ஆனால் அந்நாட்களில் நாமறிந்த சொற்கள் நமக்குத் தடுக்கப்பட்டபோது, தனியொரு சொல்லின் பொருட்டு போராடவேண்டியிருந்தது. அவரது எழுத்தின் செல்வாக்கு அனைத்தையும் மாற்றியது. கட்டுப்பாடுகளை உடைத்து வெளிவர எங்களுக்கு அது துணை நின்றது.
கே: எழுத்து குறித்து எழுத்தாளர்களிடமிருந்து நீங்கள் கற்க முடியுமா? எழுத்து பற்றிப் பேசுவதை ஜாய்ஸ் சகித்துக்கொள்ள மாட்டார் என்றீர்கள்.
ப: உங்கள் தொழிலைச் சேர்ந்தோரின் தோழமையில் நீங்கள் இருக்கையில், மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் பற்றியே பொதுவாகப் பேசுவீர்கள். எழுத்தாளர்கள் எவ்வளவுக்கு சிறந்தவர்களோ அவ்வளவுக்கு தம் எழுத்து பற்றிக் குறைவாகவே பேசுவார்கள். ஜாய்ஸ் மிகப்பெரும் எழுத்தாளர். தாவிக் குதித்திட என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையே விளக்குவார்; அவர் மதித்த மற்ற எழுத்தாளர்கள் அவர் எழுத்தை வாசித்து அறிந்துகொள்ள வேண்டும் எனக் கருதப்பட்டது.
கே: பிந்தைய ஆண்டுகளில் எழுத்தாளர்களின் தோழமையை நீங்கள் தவிர்த்ததாகத் தோன்றிற்று. ஏன்?
ப: இது மிகவும் சிக்கலானது. எழுத்தில் நீங்கள் மேலே செல்லச் செல்ல, மேலும் தனிமையாகிறீர்கள். மிகச் சிறந்தவர்களும் வயதானவர்களும் இறந்துவிடுவர். மற்றவர்கள் சென்றுவிடுவார்கள். நீங்கள் அரிதாகவே அவர்களைப் பார்ப்பீர்கள். ஆனால் பழைய நாட்களில் காபி விடுதியில் நீங்களெல்லாம் சேர்ந்திருப்பது போலவே, அதே அளவு தொடர்புடன் எழுதுவீர்கள். தமாஷ் செய்துகொள்வீர்கள். சமயங்களில் ஆபாசமான – பொறுப்பற்றக் கடிதங்களும் எழுதிக் கொள்வீர்கள், பேசிக் கொள்வது போலவே அது இருக்கும். ஆனால் மிகவும் தனித்து இருப்பீர்கள். ஏனெனில் அப்போதுதான் நீங்கள் இயங்க முடியும்; இயங்குவதற்கான நேரம் குறைவாயிருப்பதால், அதனை வீணாக்கினால், பாவம் செய்துவிட்டதாக உணர்வீர்கள் – அதற்கு மன்னிப்பே கிடையாது.
கே: உங்களது சமகால எழுத்தாளர்கள் சிலரது செல்வாக்கு பற்றி என்ன கூறுவீர்கள்? ஜெர்ட்ரூட் ஸ்டெயினின் பங்களிப்பு ஏதேனும் உண்டா? அல்லது எஸ்ரா பவுண்டினுடையது? அல்லது மேக்ஸ் பெர்கின்ஸினுடையது?
ப: பொறுத்துக் கொள்ளவும். இந்தக் கூறாய்வுகளில் நான் சிறந்தவனில்லை. இலக்கியம் சார்ந்து இலக்கியம் சாராமலும் விசாரணை அலுவலர்கள் இருக்கவே செய்கின்றனர். திருமதி ஸ்டெய்ன் கணிசமாகவே எழுதினார். எனது எழுத்திலான தனது செல்வாக்கு குறித்து துல்லியமின்றிக் குறிப்பிட்டார். The Sun Also Rises என்னும் நூலிலிருந்து உரையாடல் எழுதக் கற்றுக்கொண்ட பிற்பாடு, இது அவருக்குத் தேவையாயிருந்தது. அவரை எனக்குப் பிடிக்கும். அவர் உரையாடல் எழுத அறிந்துகொண்டது அற்புதமானது. வாழ்ந்துகொண்டிருப்பவரோ இறந்துபோனவரோ, ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்வது எனக்குப் புதிதில்லை; ஜெர்ட்ரூடை அவ்வளவு வலுவாகப் பாதிக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. மற்றபடி அவர் நன்றாகவே எழுதினார். நான் அறிந்துள்ளவர்களில் எஸ்ரா பவுண்ட் மிகவும் புத்திசாலி… வார்த்தைகளின் சூக்கும உறவுநிலை பற்றி ஜெர்ட்ரூடிடமிருந்து நிறையவே கற்றுள்ளேன். மேக்ஸ் பெர்கின்ஸ் இறந்துவிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. நான் எழுதியவற்றில் எதையும் மாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டதே இல்லை – அப்போது பிரசுரிக்கத் தகாதவை என்றிருந்த சில வார்த்தைகள் தவிர்த்து. அவர் ஒரு அறிவார்ந்த நண்பர், ஆச்சரியகரமான பதிப்பாசிரியர்.
கே: உங்களது இலக்கிய முன்னோடிகள், நீங்கள் கற்றுக்கொண்டவர்கள் யார்?
ப: மார்க் ட்வைன், ஃப்ளாபர், ஸ்டெந்தால், பாக், துர்கனேவ், டால்ஸ்டாய், தாஸ்தோயெவ்ஸ்கி, செகாவ், ஆண்ட்ரூ மார்வெல், ஜான் டன், மாப்பஸான், நல்லகிப்ளிங், தோரோ, கேப்டன் மர்ரியட், சேக்ஸ்பியர், மொஸார்ட், குவைடோ, தாந்தே, விர்ஜில், டிண்டோரெடோ, ஹியரோனிமஸ் போஸ்ச், ஊரூகல், படினிர், கோயா, கியோட்டோ, செஸான், வான்கா, காகின், ஸான் யுவான் டெலா க்ருஸ், கோங்கோரா – ஒவ்வொருவரையும் ஞாபகப்படுத்திட ஒரு நாள் பிடிக்கும். என்னிடம் இல்லாத புலமையைக் காட்டிக் கொள்வதாகத் தொனிக்கும்.
எழுதுவது எப்படி என எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக்கொண்ட அளவு, ஓவியர்களிடமிருந்து கற்றுள்ளேன். அது போலவே ஒத்திசைவு மற்றும் counterpoint-னை எண்ணிப் பார்த்து இசைக் கலைஞர்களிடமிருந்தும் கற்றுள்ளேன்.
கே: இசைக்கருவியைக் கூட இசைத்தீர்களா?
ப: ஸெல்லோ வாசிப்பதுண்டு. இசை மற்றும் counterpoint கற்றுக்கொள்ளும் பொருட்டு எனது அம்மா ஓராண்டு காலம் பள்ளியிலிருந்து என்னை வெளியே வைத்திருந்தார். எனக்குத் திறமை இருந்ததாகக் கருதினார், ஆனால் எனக்கு திறமை அறவே கிடையாது. நாங்கள் அறைக்குள் இசை (Chamber music) நிகழ்த்தினோம் – யாரேனும் ஒருவர் வயலின் வாசிக்க வந்தார்; என் சகோதரி வயோலாவும் அம்மா பியானோவும் வாசித்தார்கள். நான் வாசித்தது, பூமியில் யார் வாசித்ததை விடவும் மோசமானது.
கே: உங்கள் அபிமான எழுத்துக்களை திரும்பவும் வாசிப்பதுண்டா? எடுத்துக்காட்டாக, ட்வைன்?
ப: ட்வைனுடன் இரண்டல்லது மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டும். ஒவ்வோராண்டும் சேக்ஸ்பியரில் ஏதேனும் வாசிப்பேன். எப்போதும் வாசிப்பது லீயர். உற்சாகம் வந்துவிடும்.
கே: அப்படியானால், வாசிப்பு சீரான ஈடுபாடு, ஆனந்தம்.
ப: எப்போதும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன்.
கே: The Killers, Ten Indians, Today is Friday ஆகிய சிறுகதைகளை ஒரே நாளில் எழுதினீர்களா? உங்கள் முதல் நாவல் The Sun Also Rises -னை எந்தச் சூழலில் எழுதினீர்கள்?
ப: வேலன்ஸியாவில் ஜூலை 21 எனது பிறந்தநாளன்று The Sun Also Rises -னை ஆரம்பித்தேன். ஜூலை 24-ல் அங்கே தொடங்கவிருந்த சந்தையைக் காண்பதற்காக, முன்கூட்டியே என் மனைவி ஹட்லியுடன் அங்கு சென்றிருந்தேன். என் வயதுடைய ஒவ்வொருவரும் நாவல் எழுதியிருக்க, நானோ ஒரு பத்தி கூட எழுதாதிருந்தேன். சந்தை நாட்கள் முழுதும் எழுதினேன், அப்புறம் மேட்ரிட் சென்று அங்கும் எழுதினேன். பின் ஹெண்டயி சென்றோம். அங்கு ஒரு மலிவான ஓட்டலில் தங்கி எழுதினேன். அடுத்து பாரிஸ் சென்று எழுதி முடித்தேன் முதல் வரைவை. தொடங்கி 6 வாரங்களில் முடிந்தது. முதல் வரைவை நாவலாசிரியர் நதன் அஸ்ஸிடம் காட்டினேன். அவருக்கு அதிருப்தி. தளர்ந்துவிடாது திருத்தி எழுதினேன்.
நீங்கள் குறிப்பிட்ட கதைகளை மேட்ரிட்டில் மே 16 அன்று ஒரே நாளில் எழுதிவிட்டேன். The Killers முதலில் எழுதிப் பார்த்து தோற்றுப்போனது. அப்புறம் உணவை முடித்துக்கொண்டு எழுதியது Today is Friday. எனக்கு உத்வேகம் மூண்டுவிட்டது. எழுதுவதற்கு வேறு ஆறு கதைகள் இருந்தன. எனவே எருதுப் போராட்டக் கட்டிடத்திற்குச் சென்று காபி குடித்துவிட்டு திரும்பிவந்து Ten Indians எழுதினேன். இது என்னை வருத்தப்பட வைக்கவே, கொஞ்சம் பிராந்தி அருந்தியதும் தூங்கினேன். ஒரு பரிசாரகன் சாப்பிடுவதற்கு உணவு வகைகள் கொண்டுவந்தான்.
சாப்பிட்டதும் சிறிது ஓய்வெடுக்க நினைத்தேன். இன்னும் ஒரு கதை எழுதலாமே என்றான் பரிசாரகன். ஒன்று மட்டுமே எழுத எண்ணியிருந்தேன் என்றேன். உங்களால் ஆறு கதைகள் எழுத முடியும் என்றான். நாளை முயன்று பார்க்கிறேன் என்றேன். இன்றிரவு முயற்சி செய்யுங்கள் என்றான்.
அலுப்பாயிருக்கிறது என நான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், எனக்காக ஒன்றை மொழிபெயர்த்துச் சொல்லுங்கள் என்றான். என்னை தனித்து விடாதிருந்தால் எப்படி எழுதுவது என்று கேட்டேன்.
கே: ஒரு சிறுகதையின் கருத்தமைவு உங்கள் மனதில் எவ்வளவு முழுமையடைந்திருக்கும்? மையக் கருத்தோ கதைப்பின்னலோ பாத்திரமோ மாறுமா?
ப: சில வேளைகளில் உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். இன்னும் சில வேளைகளில் அதனை உருவாக்கிக் கொள்வீர்கள். அது எப்படி வெளிப்படும் என்று தெரியாதிருக்கும். போகப்போக ஒவ்வொன்றும் மாறும். அப்படித்தான் கதையை ஆக்கிடும் இயக்கம் இருக்கும். சமயங்களில் இந்த இயக்கம் மந்தமானதாயிருக்கும், நகராது. ஆனால் எப்போதும் மாறுதல் இருக்கும், இயக்கம் இருக்கும்.
கே: நாவலைப் பொறுத்தும் இதேதான் நிலைமையா? அல்லது தொடங்குமுன்னரே முழுத் திட்டத்தையும் உருவாக்கிவிட்டு, அப்படியே பின்பற்றுவீர்களா?
ப: For whom the Bell Tolls எனக்குப் பிரச்சனையாயிருந்தது, ஒவ்வொரு நாளும் யோசித்தேன். என்ன நிகழும் என்பது கருத்தளவில் தெரிந்திருந்தது. ஆனால் நான் எழுதிய ஒவ்வொரு நாளும் கண்டறிந்தேன்.
கே: The Green Hills of Africa, To Have and Have not, Across the River and Into the Trees – அனைத்தும் சிறுகதைகளாக ஆரம்பித்து, நாவல்களாக வளர்ந்துவிட்டனவா? எழுத்தாளர் தன் அணுகுமுறையை மாற்றாமலேயே, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குக் கடந்துபோகக் கூடியதாக இவ்விரு வடிவங்களும் அவ்வளவு ஒத்திருப்பவையா?
ப: இல்லை, அது உண்மையில்லை. The Green Hills of Africa நாவலில்லை; ஒரு நாட்டின் வடிவமும் ஒரு மாதச் செயல்பாட்டின் வகை மாதிரியும் ஒரு கற்பனைப் படைப்புடன் போட்டியிட இயலுமா என்று காண்பதற்காக, அறுதியான உண்மை நூலொன்றை எழுதிடும் முயற்சியாகத்தான் எழுதப்பட்டது. அதனை எழுதியதும், The Snows of Kilimanjaro, The Shore Happy Life of Francis Macomber ஆகிய இரு சிறுகதைகளை எழுதினேன். The Green Hills of Africa எழுதும்பொருட்டு நான் போய்வந்த வேட்டை முகாமின் ஒரு மாதத்தில் நான் பெற்ற அறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் நான் கண்டறிந்தவையே இரு சிறுகதைகளும். To Have and Have Not, Across the River and Into the Trees – இரண்டும் சிறுகதைகளாக ஆரம்பிக்கப்பட்டவை.
கே: எழுதாதபோது, தொடர்ந்து, பயன்படக்கூடிய ஒன்றைத் தேடி பார்வையாளராக இருக்கின்றீர்களா?
ப: நிச்சயமாக. பார்வையிடுவதை நிறுத்தும் எழுத்தாளன் முடிந்து போகிறான். ஆனால் அவன் பிரக்ஞைபூர்வமாக பார்க்கவேண்டியதில்லை, அது எப்படிப் பயனுள்ளதாயிருக்கும் என்று சிந்திக்கவும் தேவையில்லை. ஆரம்பத்தில் அது உண்மையாயிருக்கலாம். ஆனால் பிற்பாடு அவன் பார்க்கின்ற ஒவ்வொன்றும், அவன் அறிந்துள்ளவற்றின் / பார்த்துள்ளவற்றின் பெரும் சேகரத்தில் சென்று சேரும். அதனை அறிவதால் பயனுண்டா? நான் எப்போதும் பனிப்பாறை கொள்கைப்படி எழுதுவதுண்டு. தெரிகின்ற ஒவ்வொரு பகுதிக்கும் எட்டில் ஒரு பங்கு நீருக்கடியில் இருக்கும். உங்களுக்குத் தெரியவரும் எதனையும் நீக்கிவிடலாம், அது உங்கள் பனிப்பாறையை வலுப்படுத்தவே செய்யும். தெரியவராத பகுதி அது. தனக்குத் தெரியாததால் எழுத்தாளர் ஒன்றினை ஒதுக்கிவிட்டால், அப்போது கதையில் ஓட்டை விழுந்துவிடும்.
‘கடலும் கிழவனும்’ ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் வந்திருக்கும் – அதிலுள்ள கிராமத்துப் பாத்திரம் ஒவ்வொன்றும் பிறந்தது, வளர்ந்தது, கல்வி கற்றது, குழந்தைகள் பெற்றது என நிகழ்வுப் போக்கெல்லாம் சேர்ந்திருக்கும். அது மற்ற எழுத்தாளர்களால் அருமையாகச் செய்யப்படுகிறது. ஏற்கனவே திருப்திகரமாக செய்யப்பட்டிருப்பதால் எழுத்தில் நீங்கள் வரம்பிடப்படுகிறீர்கள். ஆகவே வேறொன்றினைக் கற்றிட முற்பட்டுள்ளேன். முதலில் வாசகனுக்கு அனுபவத்தை தொடர்புறுத்துவதில் தேவையில்லாதவற்றையெல்லாம் நீக்கிட முயன்றேன் – அப்போதுதான் வாசித்து முடித்ததும் அது அவனது அனுபவப் பகுதியாகி, நிஜமாவே நடந்ததாகத் தோன்றும். இது செய்வதற்குச் சிரமமானது, மிகச் சிரமப்பட்டு மேற்கொண்டேன்.
வேறு யாராலும் தொடர்புறுத்த முடியாததை என்னால் செய்ய முடிந்தது நம்ப முடியாத நல்வாய்ப்புதான். நல்வாய்ப்பாக ஒரு நல்ல மனிதனும் நல்ல சிறுவனும் எனக்கிருந்தனர். அப்புறம், மனிதனைப் போலவே எழுதுவதற்குத் தகுதியுடையதாக கடல் இருந்தது. ஆக நல்வாய்ப்புள்ளவனாக இருந்தேன். நீரின் போக்கில் ஒரே பகுதியில் 50 திமிங்கிலங்களைப் பார்க்க முடிந்தது. சுமார் 60 அடி நீளமுள்ள திமிங்கிலத்தைப் பிடிக்க முயன்று விட்டுவிட்டேன். மீனவக் கிராமத்தில் நான் தெரிந்துகொண்டவற்றையெல்லாம் விட்டுவிட்டேன்.
ஆனால் அறிவென்பது பனிப்பாறையின் நீருக்கடியில் இருப்பதை ஆக்குவதே.
கே: அனுபவத்தைத் தொடர்புறுத்துவதில் உங்களுக்கென்று ஒரு பாணியை Cansas City Star நாட்களின்போது கைக்கொண்டுவிட்டீர்கள் என ஆர்கிபால்ட் மக்லீஸ் குறிப்பிட்டுள்ளார். கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட சிறு விவரணங்களால் அனுபவம் தொடர்புறுத்தப்படும். வாசகன் தன்னை அறியாமலேயே அறிந்துகொள்ளும் வகையில், ஒட்டுமொத்தத்தையும் இது சுட்டிக்காட்டிவிடும்…
ப: 1920-களில் சிகாகோவில், உணர்வோட்டங்களை எழுப்பிடும் கவனிக்கப்படாத விஷயங்களைத் தேடிப் பார்த்தேன். கையுறை எங்கு விழும் என்ற கவனமின்றியே உதறியெறியும் விளையாட்டு வீரன்… உடற்பயிற்சியின்போது ஷூக்களில் ஒட்டியுள்ள பசை… ஜேக் பிளாக்பர்னின் சாம்பல் நிறம் என. கதை உங்களுக்குத் தெரியுமுன் இவை உங்களை நெகிழச் செய்துவிடும்.
கே: தனிப்பட்ட முறையில் தெரிந்திராததை எப்போதேனும் சித்தரித்துள்ளீர்களா?
ப: இது விசித்திரமான கேள்வி. நல்லதொரு எழுத்தாளன் விவரிப்பதில்லை. அவன் கண்டறிகிறான் அல்லது ஆக்கிக் கொள்கிறான்; சமயங்களில் விளக்கப்படாத விஷயஞானம் அவனிடத்தே இருக்கும் – அது மறந்துபோன இன / குடும்ப அனுபவத்திலிருந்து வந்திருக்க முடியும். வீடு திரும்பும் பறவைக்குக் கற்றுக் கொடுப்பது யார்? சண்டையிடும் காளை / நுகர்ந்தறியும் நாய் எங்கிருந்து தெரிந்துகொள்கிறது?
கே: புனைவுரீதியில் எழுதுவதற்கு முன்னர், ஓர் அனுபவத்திலிருந்து எவ்வளவு விலகி இருக்கவேண்டும் நீங்கள்? எடுத்துக்காட்டாக, நீங்கள் சம்பந்தப்பட்டிருந்த ஆப்பிரிக்க விமான விபத்துகள்?
ப: அது அனுபவத்தைப் பொறுத்தது. உங்களின் ஒரு பகுதி, ஆரம்பத்திலிருந்தே முழுப் பற்றின்றி கவனிக்கும். இன்னொரு பகுதி அதில் ஈடுபட்டிருக்கும். எவ்வளவு விரைவில் அதனை எழுதிட வேண்டும் என்பதற்கு விதிமுறை கிடையாது. அந்நபர் எந்த அளவுக்குத் தன்னைச் சரி செய்துவிடுகிறார் மற்றும் அவரது மீளும் திறனைச் சார்ந்தது. நிச்சயமாக, பயிற்சி பெற்ற எழுத்தாளர் பற்றியெரியும் விமானத்தில் மோத நேர்வது மதிப்புவாய்ந்தது. பல முக்கிய விஷயங்களை அவர் சீக்கிரமே கற்றுக்கொள்கிறார். அவை பயனுள்ளதாக இருக்குமா என்பது உயிர் பிழைத்திருப்பதைப் பொறுத்தது. கௌரவத்துடன் உயிர் பிழைத்தல் ஓர் எழுத்தாளருக்கு முக்கியமானது. இறந்துவிடுவோர் அல்லது சீக்கிரமே இலகுவாக வெளியேறி விடுவோர் விரும்பப்படுவர். ஏனெனில் அவர்கள் புரிந்துகொள்ளப்படுபவர்கள் மற்றும் மனிதாயமிக்கவர்கள். தோல்வியும் நன்கு மறைக்கப்பட்ட கோழைத்தனமும் மிகவும் மனிதாயமானவை, நேசிக்கக் கூடியவை.
கே: ஓர் எழுத்தாளன் தன் காலத்து சமூக அரசியல் பிரச்சனைகளில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்க வேண்டும்?
ப: ஒவ்வொருவரிடமும் அவரது மனச்சாட்சி உள்ளது. மனச்சாட்சி எப்படி செயல்பட வேண்டும் என விதிமுறை கிடையாது. அரசியல் மனமுள்ள ஓர் எழுத்தாளரைப் பொறுத்து நிச்சயமானது எதுவெனில், அவரது எழுத்தை வாசிக்கையில் அரசியல் பகுதியை ஒதுக்கிவிட்டால், அது நீடித்து நிற்கும் என்பதே. அரசியல் சார்புள்ளதாகக் கூறிக்கொள்ளப்படும் பல எழுத்தாளர்கள் தம் அரசியலை அடிக்கடி மாற்றிக் கொள்வர். இது அவர்களுக்கும் அவர்தம் அரசியல் – இலக்கியப் பரிசீலனைகளுக்கும் பரபரப்பளிக்கும். சமயங்களில் அவர்கள் தம் பார்வைநிலைகளை திருத்தி எழுத வேண்டியிருக்கும்… அவசரக் கோலத்தில். சந்தோஷத்தைப் பின்தொடர்வதன் வடிவில் இது மதிக்கக் கூடியதாக இருக்கக்கூடும்.
கே: இறுதியாக ஓர் அடிப்படைக் கேள்வி. ஒரு படைப்பாக்க எழுத்தாளராக, உங்கள் கலையின் செயல்பாடு எது என்று கருதுகிறீர்கள்? உண்மை விபரம் என்பதை விடவும் உண்மை விபரத்தின் பிரதிநிதித்துவப் படுத்தல் ஏன்?
ப: ஏன் புதிர்போட வேண்டும்? நிகழ்ந்துள்ளவை, இருந்துகொண்டிருப்பவை, அறிந்திருப்பவை, அறிய முடியாதவை ஆகியவற்றிலிருந்து உங்களது கண்டுபிடிப்பால் ஒன்றினை உருவாக்குகிறீர்கள், அது பிரதிநிதித்துவப்படுத்தல் இல்லை, மாறாக, உண்மையானதும் உயிர்த்திருப்பதுமான எந்தவொன்றைக் காட்டிலும் புதிதான முழுமுற்றான ஒன்று; மற்றும் அதனை உயிர்க்க வைக்கிறீர்கள்; அதனை நன்றாக ஆக்கினால், அதற்கு அழியாத் தன்மை தருகின்றீர்கள். அதற்குத்தான் எழுதுகிறீர்களே ஒழிய வேறு எதற்காகவும் அல்ல என்பதை அறிவீர்கள். ஆனால் யாரும் அறிந்திடாத காரணங்கள் பற்றி என்ன சொல்வது?
ஆதாரம்: The Art of Fiction: The Paris Review Interviews – I
நேர்காணல் செய்தவர்: ஜார்ஜ் ப்ளிம்டன்
சுருக்கமாக தமிழில்: சா.தேவதாஸ்
தட்டச்சு : கீதா மதிவாணன்.
குறிப்பு:
இந்நேர்காணல் ஹவானாவில் ஹெமிங்வே தங்கியிருந்தபோது ஜார்ஜ் ப்ளிம்டனால் மேற்கொள்ளப்பட்டது 1958 இல்.
எருதுச்சண்டையில் மூழ்கி விடுபவராக, மீன்பிடித்தலில் லயித்துப் போகிறவராக, உலகமெல்லாம் சுற்றி வருபவராக ஹெமிங்வே இருந்தாலும், எழுத்து என்று வரும்போது அவ்வளவு அர்ப்பணிப்பு உள்ளவர். தீவிர வாசிப்பு, தீவிர அவதானிப்பு, மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தாராளமாகக் கற்றுக்கொள்ளல் எல்லாம் நிரம்பியவர். ஓவியர்களையும் இசைக் கலைஞர்களையும் போற்றும் அவர், வேடிக்கையும் கலகலப்புமாகவும் இருக்கத் தெரிந்தவர். தீவிரமாக வாழ்ந்த அவரே தற்கொலை செய்துகொண்டவர்.
‘கடலும் கிழவனும்’ (Old Man and the Sea) நாவலுக்காக நோபல் பரிசு பெற்றவர். ச.து.சு.யோகியார் மற்றும் எம்.எஸ். ஆகியோரின் இரு தமிழாக்கங்கள் உண்டு.