புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற லட்சியத்தை அடைந்துவிட முடியாது

1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள் கொண்ட வீட்டில் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் ஐசக் பஷாவிஸ் சிங்கர்.

ஒரு சிறிய அறையிலிருக்கும் ஒழுங்கற்ற சிறிய மேசைதான் சிங்கரின் எழுத்து மேசை. எழுதுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்காமல் தினமும் பார்வையாளர்கள் வருகை, பேட்டிகள், போன் அழைப்புகளுக்கிடையில் என எந்நேரமும் எழுதிக்கொண்டிருக்கிறார். மான்ஹாட்டன் தொலைபேசி எண்கள் புத்தகத்தில் இன்னமும் இவரின் பெயர் இருக்கிறது. இவரின் எழுத்துக்களைப் படித்துவிட்டு முன்பின் தெரியாத நிறைய நபர்கள் தினமும் இவருக்கு போன் செய்து பேசாமல் இருப்பதேயில்லை. தவறாமல் தினமும் இவருக்கு ஒரு போன் காலாவது வந்துவிடும். அவ்வாறு அழைத்துப் பேசுவர்களை சமீப காலம் வரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்துபசரிக்காமல் இருப்பதில்லை சிங்கர்.

சிங்கர் தன்னுடைய படைப்புகளை இத்தீஷ் மொழியில் எழுதுகிறார். அவர் எழுதும் பெரும்பாலானவை இன்றுவரை நியூயார்க்கிலிருந்து வெளிவரும் அமெரிக்காவின் மிகப்பெரிய இத்தீஷ் மொழி தினசரியான Jewish Daily Forward எனும் தினசரியில்தான் முதலில் பிரசுரமாகிறது. இவருடைய படைப்புகளை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பாளர்களைக் கண்டுபிடிப்பதுதான் எப்பொழுதும் இருப்பதிலேயே மிகப்பெரிய சிக்கல். சிங்கர் தனது மொழிபெயர்ப்பாளருடன் மிகவும் ஒன்றிணைந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான அர்த்தத்தைக் கொடுப்பதை முக்கியமாகக் கருதுகிறார்.

 

கேள்வி – பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு முன்மாதிரியான எழுத்தாளர்கள் இருப்பார்கள். அப்படி உங்களுக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பதில் – ஆம் இருக்கிறார். The Brothers Ashkenazi என்ற நூலை எழுதிய ஐ.ஜே. சிங்கர் எனும் என்னுடைய சகோதரர்தான் என்னுடைய முன்மாதிரி எழுத்தாளர். எனக்கு என்னுடைய சகோதரரை விட சிறந்த முன்மாதிரியான எழுத்தாளர் யாரும் இல்லை எனலாம். என்னுடைய பெற்றோரிடம் தொடர்ந்து போராடி அவர் எப்படி எழுத ஆரம்பித்து மெதுவாக வெளியிட ஆரம்பித்தார் என்று ஆரம்பத்திலிருந்து கவனித்து வருகிறேன். எனவே இயல்பாகவே அவர் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, நான் புத்தகங்களை வெளியிடுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு நான் பயப்படும்படியாக எழுதுவதற்கான பல விதிகளை சகோதரர் எனக்களித்தார். அவற்றை மீறவே கூடாது என்பதற்கில்லை. அவற்றை நினைவில் வைத்திருப்பது நல்லது. அவருடைய விதிகளில் ஒன்று,

உண்மைகள் எப்போதும் காலாவதியாகவோ பழமையானதாகவோ மாறிவிடாது.

ஆனால் கருத்துகள் அப்படி இல்லை. ஒரு எழுத்தாளர் உளவியல் ரீதியாக ஒரு காட்சியை அதிகமாக விவரிக்க முற்பட்டாலே அவர் காலாவதியாக ஆரம்பமாகிவிட்டார் எனலாம். கதாநாயகனின் இலக்கை உளவியல் ரீதியான பார்வையிலிருந்து விளக்க ஒரு எழுத்தாளர் முற்பட்டார் என்றால் அவர் ஏற்கெனவே காலாவதியாகிவிட்டார் என்றே அர்த்தம். அதற்காக நான் உளவியல் ரீதியான நாவல்களுக்கு எதிரானவன் என்றில்லை. அதை சிறப்பாகக் கையாண்ட மகத்தான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இளம் எழுத்தாளருக்கு அந்த வகை எழுத்தை அவர் எழுதுவதை நான் பரிந்துரைக்கமாட்டேன். உதாரணமாக தஸ்தாவஸ்கியை எடுத்துக்கொள்ளலாம். அவரை உளவியல் பாணி எழுத்துப் பள்ளியின் எழுத்தாளர் என்று நீங்கள் அழைத்தால் உறுதியாக அதை நான் ஏற்றுக்கொள்வேனா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகி அவருடைய பாணியில் நிகழ்வுகளைச் சித்தரிக்க முயற்சிக்கிறார். ஆனாலும் அவரிடமிருக்கும் அடிப்படை சக்தி உண்மைகளை சிறப்பாக சித்தரிப்பதுதான்.

கேள்வி – மனப் பகுப்பாய்வு எழுத்துப் பற்றிய உங்கள் கருத்து என்ன? நிறைய எழுத்தாளர்கள் மனப் பகுப்பாய்விற்குட்பட்டு தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளவதற்கு மட்டுமில்லாமல் அவர்கள் எழுதும் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்று கருதுகிறார்களே?

பதில் – ஒரு எழுத்தாளர் மருத்துவமனையில் மனப் பகுப்பாய்விற்குட்படுகிறார் எனில் அது அவருடைய சொந்த விஷயம் அதில் என்னால் கருத்துக்கூற முடியாது. ஆனால் மனப் பகுப்பாய்வை எழுத்தில் புகுத்தினால் அது பயங்கரமானதாகிவிடும். அதற்கு சிறந்த உதாரணம், Point Counter Point எனும் நாவலை எழுதியவர். அவருடைய பெயர் என்ன? நிவைில்லையே?

பேட்டி எடுப்பவர் – ஆல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley)

பதில் – ஆம் அவரேதான். பிராய்டிய மனப்பகுப்பாய்வு அடிப்படையில் அந்த நாவலை எழுத அவர் முற்பட்டிருக்கிறார். ஆனால் அதில் மிக மோசமான முறையில் தோல்வியடைந்துவிட்டார் என்றே கருதுகிறேன். இந்தக் குறிப்பிட்ட நாவல் இப்போது மிகவும் பழமையானதாகவும் காலாவதியுமாகிவிட்டது. பள்ளிகளில் கூட இதை இப்போது யாரும் வாசிப்பதில்லை. எனவே எழுத்தாளர்கள் மனப்பகுப்பாய்விற்கென்று அமரும்போது அவர்களே அவர்களைக் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கேள்வி – நீங்கள் முதன்முதலாகப் படித்த புனைவு ஷெர்லாக் ஹோம்ஸின் ‘அட்வென்சர்ஸ்’ என்று சொல்லியிருக்கிறீர்கள்

பதில் – ஆமாம் ஒரு பத்து பதினொரு வயதில் இதுபோன்ற புனைவுகளை நான் வாசித்தேன். அவை எனக்கு மிகவும் கம்பீரமானதாகவும் அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. ஆனால் இப்போது நான் ஷெர்லாக் ஹோம்ஸைப் படிக்கத் துணியமாட்டேன். ஏனென்றால் அது எனக்கு ஏமாற்றமானதாக இருந்துவிடுமோ என்று தயங்குகிறேன்.

கேள்வி – இஸ்ரேலின் குரலைப் பிரதிபலிக்கும் இரண்டு யூத எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு தரப்போவதாக பரிசுக் குழு அறிவித்துள்ளது. இதை அறிந்ததும் ஒரு யூத எழுத்தாளரையும், யூதராக இருக்கும் ஒரு எழுத்தாளரையும் எப்படி நீங்கள் வரையறுப்பீர்கள் என்று ஆச்சரிப்பட்டேன்.

பதில் – என்னைப் பொறுத்தவரை இத்தீஷ் எழுத்தாளர்கள், ஹீப்ரூ எழுத்தாளர்கள், ஆங்கில எழுத்தாளர்கள், ஸ்பானிய எழுத்தாளர்கள்தான் இருக்கிறார்கள். யூத எழுத்தாளர் அல்லது கத்தோலிக்க எழுத்தாளர் எனும் கோட்பாடு பற்றிய ஒரு யோசனையே எனக்கு ஒவ்வாதது. ஆனால் யூத எழுத்தாளர் என்றொருவர் இருக்கிறார் என என்னை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினால், அவர் ஹீப்ரு, இத்தீஷ், டால்முட், மித்ராஷ், ஹாசிதிக் இலக்கியம், கபாலா மற்றும் இன்னும் பல தெரிந்தவராகவும், யூதத்துவத்தில் கரைகண்டவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவர் யூதர்கள் பற்றியும் யூதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதுபவராக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் ஒருவர் இருந்தாரெனில் அவரை யூத எழுத்தாளர் என வேண்டுமானால் அழைக்கலாம். எந்த மொழியில் எழுதினாலும், அவரை எழுத்தாளர் என்றுதானே நாம் கூறுகிறோம்.

கேள்வி – இன்றளவில் மிக மிகச் சிலரிடம் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் இத்தீஷ் மொழியில் எழுதுகிறீர்கள். உங்களுடைய புத்தகங்கள் 58 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உங்களுடைய வாசகர்கள் ஆங்கிலம் அல்லது ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பில்தான் உங்களை வாசிக்கிறார்கள் என்ற உண்மையை நீங்கள் என்றாவது நினைத்துப்பார்த்ததுண்டா? எழுத்தாளர்களிலேயே மிகக் குறைவானவர்களால்தான் இத்தீஷ் மொழியில் உங்கள் படைப்புகளை வாசிக்க முடியும். மொழிபெயர்ப்பு உங்கள் எழுத்தைச் சரியாகக் கடத்துவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா?

பதில் – உண்மையைக் கூறவேண்டுமென்றால், இத்தீஷ் மொழியில் எனக்கு நிறைய வாசகர்கள் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாகதான் உள்ளது. ஒரு மொழி என்றென்றும் வளர்ந்துதான் வரவேண்டும். அது பின்நோக்கி நகரக் கூடாது இத்தீஷ் மக்கள் அந்தப் பூக்கள் பூத்து மலரும் என்று சொன்னால் மலர்கள் பூத்துக்குலுங்குவதுபோல இத்தீஷ் மொழி மலர வேண்டுமென விரும்புகிறேன். மேலும் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில், இயற்கையாகவே அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளும் மொழிபெயர்ப்பில் பலவற்றை இழக்கிறார்கள்தான். குறிப்பாக கவிஞர்களும் நகைச்சுவை எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பில் மைய நீரோட்டத்தையே இழந்துவிடுவார்கள். அத்துடன் கதைகள் நாட்டுப்புறக் கதைகளுடன் தொடர்புடையதாக இருந்தால் அது எழுத்தாளருக்கு இன்னும் பலத்த இழப்புதான். இந்த விஷயத்தில் என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் இதில் எனக்கு தோல்விதான். ஆனால் அதற்குப் பிற்பாடு என்னுடைய படைப்புகளை மொழிபெயர்க்க நானும் இணைந்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவிசெய்கிறேன். சிக்கல்கள் என்ன என்று தெரிந்துகொள்கிறேன். இந்த முறையில் இப்போது நான் அதிகம் இழப்பதில்லை. சிக்கல் என்னவென்றால், ஒரு பழமொழிக்கு இணையான மற்றொரு பழமொழியை வேறு மொழிகளில் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இவ்வளவுக்கு இடையிலும் நம்முடைய இலக்கியத்தை மொழிபெயர்ப்பு வழியாகத்தானே நாம் கற்றுக்கொண்டோம். பெரும்பாலான மக்கள் பைபிளை, ஹோமரை, அனைத்து நவீனங்களை மொழிபெயர்ப்பில் படித்தவர்கள்தான், ஒரு எழுத்தாளருக்கு மொழிபெயர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவரை ஒரேயடியாகக் கொன்றுவிடாது. அவருடைய படைப்பு சிறப்பாக இருந்தால் அவர் மொழிபெயர்ப்பிலும் சிறப்பாக வெளிவருவார். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலேயே சொல்கிறேன். மேலும் மொழிபெயர்ப்பு வழியில் என்னுடைய எழுத்துக்களை மீண்டும் மீண்டும் வாசிப்பதனாலும், மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து திருத்தம் மேற்கொள்வதனாலும் என்னுடைய எழுத்தின் குறைகளை என்னாலேயே பார்க்க முடிகிறது. மொழிபெயர்ப்பினால்தான் என்னால் தவிர்க்க முடியாத இடர்களைத் தவிர்க்க முடிந்தது. இத்தீஷ் மொழியிலேயே எழுதி வெளியிட்டு அதை மொழிபெயர்ப்பில் மீண்டும் படிக்க வற்புறுத்தாமல் இருந்திருந்தால் என்னுடைய தவறுகளை என்னால் சரிசெய்திருக்கவே முடியாது. இந்த வகையில் மொழிபெயர்ப்பு எனக்கு மிகச் சிறப்பாக உதவுகிறது என்றுதான் நான் கூறுவேன்.

கேள்வி – உங்கள் எழுத்தை வாசிப்பவர்கள் யாருமில்லை என்று நீங்கள் கருதியதால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் நீங்கள் எழுதவில்லை என்பது உண்மையா?

பதில் – ஆம். அது உண்மைதான். இந்த நாட்டிற்கு வந்த புதிதில் பல வருடங்களுக்கு எதுவும் எழுதவில்லைதான். என் எழுத்தை வாசிப்பவர்கள் யாருமில்லை எனக் கருதியதால்தான் எழுதுவதை நிறுத்தினேனா என்று சரியாக என்னால் கூறமுடியவில்லை. நிறைய வாசகர்கள் இருந்தனர் என்றுதான் நினைக்கிறேன். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு புலம்பெயர்வது என்பது மிகவும் நெருக்கடியான நிலை. என்னுடைய மொழியைத் தொலைத்தது போன்ற ஒரு உணர்வு. என்னை எதனுடனும் இணைத்து அடையாளம் காணமுடியவில்லை. போலந்தில் இத்தீஷ் மொழியில் ஒரு பெயரைக் கூட காணமுடியவில்லை. திடீரென்று என்னுடைய அடையாளத்தை இழந்தது போன்ற ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டேன். என்னுடய மொழியைத் தொலைத்துவிட்டேன். என்னைச் சுற்றியுள்ளவை பற்றிய சுயஉணர்வை இழந்துவிட்டேன். புதிய சூழலில் என்னைப் பொருத்திக்கொண்டு வாழ்வதற்கு சில காலம் பிடித்தது. இவையெல்லாம் சரியாக சில வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் எழுதுவதற்கும் தாமதமாகிவிட்டது.

கேள்வி – இத்தீஷ் மொழிக்கு எதிர்காலம் இருக்கிறது எனக் கருதுகிறீர்களா? அல்லது கூடிய விரைவில் முற்றிலுமாக மறைந்துவிடுமா?

பதில் – இத்தீஷ் மொழி எப்பொழுதும் அழிந்துவிடாது. ஏனென்றால் 400, 500 ஆண்டுகால யூத வரலாற்றுடன் இம்மொழி பிணைக்கப்பட்டுள்ளது. யூத வரலாற்றைப் படிக்க விரும்பும் அனைவரும் இத்தீஷ் மொழியை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் நகைச்சுவையாக இவ்வாறு கூறுவதுண்டு, ‘இப்போது உலக மக்கள் தொகை நம்மிடம் 350 கோடி மக்கள் உள்ளனர். கடந்த நூறாண்டுகளில் 100 கோடி மக்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் முனைவர் பட்டம் பெற வேண்டுமென்றால் கூட இத்தீஷ் மொழியை, கலாச்சாரத்தை ஆய்வு செய்தால் எளிதாக முனைவர் ஆகிவிடலாம்.’ இந்தப் பரப்பை எண்ணிப்பாருங்கள் எவ்வளவு வளங்கொண்ட மொழியாக இத்தீஷ் இருக்கிறது. அராமிக் மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்த மொழியை யூதர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் இன்றும் அது அழியாமல் இருக்கிறது. இப்போது அராமிக் மொழி ஹீப்ரூவின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. யூதர்கள் உண்மையில் எதையும் மறக்க மாட்டார்கள். குறிப்பாக மொழியை. இத்தீஷ் போன்று தங்களுக்கு வாரி வழங்கிய ஒரு மொழியை மறக்கவே மாட்டார்கள்.

கேள்வி – உன்னத உலகம் என்ற கருத்தாக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

பதில் – ஏன் இல்லாமல்?  உன்னத உலகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் ஒரு புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற லட்சியத்தை அடைந்துவிட முடியாது. நிறைய மக்களால், அரசியல்வாதிகளால், இராஜதந்திரிகளால், சமூகவியலாளர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட உன்னத உலகத்தை யார் உருவாக்குவார்கள் என்று தெரியாது. ஆனால் அதை நிச்சயம் நாவலாசிரியர்களால் உருவாக்க முடியாது.

கேள்வி – உங்கள் படைப்புகள் அனைத்திலும் (குறிப்பாக சிறுகதைகளில்) இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகிறது. அமானுஷ்யத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு? தனிப்பட்ட முறையில் அமானுஷ்யத்தை நம்புகிறீர்களா?

பதில் – நிச்சயமாக, அமானுஷ்யம் என் படைப்பில் அதிகளவு இடம்பெறக் காரணம் அவை என் மனதில் எப்போதும் நீங்காமல் இடம்பெற்றுள்ளது என்பதால்தான். என்னை ஒரு ஆன்மீகவாதி என்றழைக்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் செய்யும் எல்லாவற்றிலும், பெரும் பங்கு வகிக்கும் சக்திகளாலும் அமானுஷ்ய சக்திகளாலும் நாம் எப்போதும் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணர்கிறேன். ஒவ்வொரு காதல் கதையில், வியாபரத்தில், மனிதர்கள் செய்யும் அனைத்திலும் ஞானப் பார்வையும், டெலிபதியும் உள்ளது என்றே நம்புகிறேன்.

கேள்வி – நீங்கள் எவ்வாறு கதையை எழுதுவீர்கள்? ஒரு நிரூபர் போல எப்போதும் விழிப்புடன் இருப்பீர்களா? குறிப்புகள் எடுத்துக்கொள்வீர்களா?

பதில் – கதைகளைத் தேடி நான் எங்கும் வெளியே செல்வதில்லை. என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவையே என் கதைகள். குறிப்புகளை எடுத்துக்கொள்ளும் பழக்கமுள்ளது ஆனால் நிரூபரைப் போன்றெல்லாம் இல்லை. என்னுடைய குறிப்புகள் கதைக்கான யோசனை, ஒரு முடிவுடன் இருக்கும். ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கை சித்திரத்தை மாதிரியாக எழுதி வைக்கும் பழக்கம் எனக்கில்லை. கதைக்கான யோசனை வந்தால் நான் எப்போதும் வைத்திருக்கும் குறிப்புப் புத்தகத்தில் உடனே எழுதிவிடுவேன். இறுதியாக கதை எழுதுமாறு அது என்னைத் தூண்டினால் எழுத ஆரம்பித்துவிடுவேன்.

கேள்வி – எழுதுவதில் எந்தப் பகுதி கடினமானது எனக் கருதுகிறீர்கள்?

பதில் – கதை கட்டுமானம். இதுதான் எனக்கு மிகவும் கடினமானப் பகுதி. கதையை எப்படி உருவாக்கிக் கட்டமைத்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்பது எனக்கு இன்றளவும் கடினமானதுதான். உண்மையாக அப்படியே எழுதுவதுதான் எனக்கு எளிதானது. கதை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் எனக்கு கிடைத்துவிட்டால், விளக்கம், உரையாடல்கள் என அவையெல்லாம் தானாகவே வந்துவிடும்.

கேள்வி – மேற்குலக இலக்கியத்தில் கதைநாயகர்கள் சூப்பர்மேன், போராளிகள் போன்றவையாக இருக்கும். யூத எழுத்தில், இத்தீஷ் புனைவின் நாயகனோ மிகச் சிறியவனாக காணப்படுகிறான். ஏழ்மையானவன் ஆனால் பெருமைமிக்க மனிதன், போராட்டக் குணமிக்கவன். பல இத்தீஷ் நாவல்களின் ஹீரோக்கள் சிறியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான உங்களுடைய விளக்கம் என்ன?

பதில் – இத்தீஷ் எழுத்தாளர்கள் கதைநாயகன் என்ற யோசனையை எப்போதும் முன்வைப்பதில்லை. யூதப் பாரம்பரியத்திலேயே மிகச் சில கதைநாயகன் கதாபாத்திரங்கள்தான் உள்ளன. என்னுடைய சொந்தப் படைப்பிலேயே இத்தீஷ் எழுத்தாளர்களின் சிறிய மனிதர்கள் என்ற பாராம்பரியக் கருத்தாக்கத்தை நான் ஊக்குவித்து அவ்வாறு கதைநாயகர்களைப் படைப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் சிறிய மனிதர்கள் பாதிக்கப்பட்டவர்கள். செமின்ட்டிய எதிர்ப்பால் பாதிப்படைந்தவர்கள், பொருளாதாரத்தால் பாதிப்படைந்தவர்கள். என்னுடைய எழுத்தில், இந்த உலகின் பெரும் பங்கை ஆற்றும் வகையிலான பெரிய கதாபாத்திரங்களும் இல்லை, தங்களுடைய நடத்தையால், சிந்தனையால், பெரும் துயரால் சிறிய மனிதர்கள் என்ற கதாபாத்திரங்களும் இல்லை.

கேள்வி – சில சமயங்களில் உங்களை வாசிக்கும்போது, இந்திய தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்ற சில தூரக் கிழக்குத் தத்துவவாதிகள் நினைவிற்கு வருகிறார்கள். பௌத்த அல்லது இந்து எழுத்துக்களின் தாக்கம் உங்களிடம் உள்ளதா?

பதில் – இந்த எழுத்துக்களை மிக தாமதமாகத் தான் வாசித்தேன். அதனால் அவை என் மீது தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு இல்லை. ஆனால் மிகத் தாமதமாக வாசித்தாலும், இவற்றையெல்லாமல் வாசிக்காமலேயே இதே போன்ற எண்ண ஓட்டத்துடன் சிந்தனையுடன்தான் நானும் இருக்கிறேன் என்ற வியப்பு இவை வாசிக்கும்போது ஏற்பட்டது. பகவத் கீதையை வாசிக்கும் போது இந்த நூலை நிச்சயம் என்னுடைய முற்பிறவியில் வாசித்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று ஆச்சரியப்படுமளவிற்கு மிகவும் அணுக்கமானதாக இருந்தது. புத்தர் மற்றும் பிற தூரக் கிழக்கத்திய எழுத்துக்களுக்கும் இதே போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது. நித்திய உண்மை என்றழைக்கப்படுபவை உண்மையிலேயே நித்தியமானவைதான். அவை நம் ரத்தத்திலும் சாராம்சத்திலும் கலந்துள்ளன.

 

(The Paris review இணைய இதழில் வெளிவந்த நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.