வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது

வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய வடாற்காடு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும் கசடுகளையும், அதிலும் எமது மாவட்ட விவசாயக் குடிகளின் வாழ்க்கைப் பாடுகளையும், தன்னுடைய படைப்புக்களில் அழுத்தமாகத் தொடர்ந்து பதிவு செய்யும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் கவிப்பித்தன். இதுவரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் என்று தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
தனது படைப்புக்களுக்கு பல்வேறு தகுதியான விருதுகளை இவர் பெற்றிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பெரும்பாலும் தன் படைப்புகளைத் தவிரத் தன்னை ஏங்குமே முன்னிறுத்திக் கொள்ளாமல் இயங்குபவர். எப்போதும் நெருங்கிப் பழகுவதற்கு எளிய மனிதராகவே இருக்கும் எழுத்தாளர் கவிப்பித்தன் அவர்களைக் கனலியின் 16 வது இணைய இதழிற்காக மின்னஞ்சல் வழியாக நேர்கண்டுள்ளேன். இனி நேர்காணல்…

முதல் வாசிப்பு பயணம் எப்படித் தொடங்கியது. அந்த பயணத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா..

ராசரி மாணவர்களைப்போலப் பாடப்புத்தகங்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த நான் அவற்றைக் கடந்து வாசிக்கத் தொடங்கிய போது பதினாறு வயது. எப்போதும் பள்ளியில் முதல் மாணவனாக இருந்த நான் எப்படியோ பத்தாவது பொதுத் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் கோட்டை விட்டேன். அந்த ஒரு வருட இடைவெளியில்தான்… வெளியூரிலிருந்து வந்து எங்கள் கிராமத்தில் குடியேறிய ஒரு உறவினர் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தேன். அவர்களிடமிருந்து தவணை முறையில் புத்தகங்களை வாங்கி வந்து வாசிக்கத் தொடங்கினேன்.

மு.வரதராசன், சாண்டில்யன், பாலகுமாரன், கல்கி என வாசித்து, பின்னர் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, தேவிபாலா எனப் பலரின் கிரைம் நாவல்களை வெறியோடு படிக்கத் தொடங்கினேன். கல்லூரிப் படிப்பின் போதும் அதுவே தொடர்ந்தது. கவிதைகள் எழுதத் தொடங்கிய பிறகுதான் சிறு பத்திரிகைகளின் அறிமுகம் கிடைத்து எனது வாசிப்பின் திசை மாறத் தொடங்கியது.

 

தமிழிலக்கியமாக்கச் சூழல் மீதான உங்களின் பார்வைகளை எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். அதுவும் வாசகர், எழுத்தாளர், விமர்சகர் என்கிற மூன்று நிலைகளின் மீது நின்று…?

முதலில் வாசகனாகச் சொல்கிறேன்.

பொதுவாகச் சிறு வயதிலிருந்தே எனக்குக் கதைகளை வாசிப்பதில்தான் ஆர்வம். குறிப்பாகச் சிறுகதைகளை வாசிப்பதில் பேரார்வமாய் இருந்திருக்கிறேன்.  முதலில் கவிதைகளை எழுதத் தொடங்கினாலும் வாசிப்பதில் கதைகளும் நாவல்களும் தான் என்னை ஈர்த்தன.

அந்த வகையில்தான், தொடக்கக் காலத்தில்… இலக்கியப் படைப்புகளின் திசையில் என் பார்வை திரும்பிய பிறகு சோவியத் இலக்கியங்களை நிறைய வாசிக்கத் தொடங்கினேன். நியூசென்சுரி புத்தக நிறுவனத்தின் விலையும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அப்போதெல்லாம் பல தீவிர வாசகர்களைப் போல நானும் ரஷ்யாவின் பரந்த மாகாணங்களிலும், கூட்டுப் பண்ணைகளிலும், வெண்பனி படர்ந்த புல்வெளிகளிலும் குதிரைகளின் மீது பயணித்துக் கொண்டிருந்தேன்.உப்பில் வேகவைத்துப் பதப்படுத்தப்பட்ட பன்றிக்கறிகளை நினைத்து நினைத்து வாயூற எச்சிலை விழுங்கியிருக்கிறேன்.

தமிழ்ப் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியபிறகு, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ரா, ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், பெருமாள்முருகன், பாவண்ணன்,  இமையம், மேலாண்மை, கந்தர்வன், வேலராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், உதயசங்கர், கமலாலயன், ஆதவன்தீட்சண்யா, சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், யுவன் சந்திரசேகரன், ம.காமுத்துரை, அழகியபெரியவன், பவா செல்லதுரை, தமிழ்மகன், பாரதிபாலன், அ.வெண்ணிலா, சு.தமிழ்ச்செல்வி, நரன், சித்துராஜ் பொன்ராஜ், ராம் தங்கம், செந்தில் குமார் என எல்லோரின் படைப்புகளையும் முடிந்தவரை வாசித்து வருகிறேன்.

எனது பணியின் நேர நெருக்கடி காரணமாகக் குறைவாக வாசிக்க முடிந்தாலும், இன்று வரை வாசிப்பதில் எந்தவித உள் வட்டமும், வெளிவட்டமும் வரைந்துகொள்ளாமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

படைப்பாளியாகச் சொல்ல வேண்டுமெனில்,

தமிழ் இலக்கியத்தின் போக்கும், சில இலக்கியவாதிகளின் போக்கும் எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

இங்கே ஒரு படைப்பாளியோ அல்லது ஒரு படைப்போ படைப்பின் வழியாக மதிப்பிடப்படாமல் அல்லது பேசப்படாமல் வேறு பல அளவுகோல்களின்படி பேசப்படுவதும், கொண்டாடப்படுவதும் அல்லது மறைக்கப்படுவதும் எனக்குள் நீண்ட அதிருப்தியை விதைத்திருக்கிறது.

இது மாற வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்.

விமர்சகர் என்ற வகையில் கருத்தைச் சொல்வதற்கு நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன். என்றாலும் சில புதிய படைப்பாளிகளின் களமும், ஜெயமோகனின் எழுத்து வேகமும் என்னை நிறைய்ய யோசிக்க வைக்கிறது.

 

முதன் முதலில் எழுதிய சிறுகதை எது? அது வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள்…?

முதலில் எழுதிய சிறுகதை கல்லூரி மூன்றாம் ஆண்டில் எழுதினேன். அது இன்று வரை முடிக்கப்படவே இல்லை. அப்போது எனக்குக் கவிதை எழுதுவதில்தான் ஈர்ப்பு இருந்தது. இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகுதான் சிறுகதைகள் பக்கம் கவனம் திரும்பியது.

எனது திருமணத்திற்குப் பிறகு 2000 ஆம் ஆண்டில் இடுக்கி என்று ஒரு சிறுகதையை எழுதி இதயம் பேசுகிறது இதழுக்கு அனுப்பினேன். அந்த இதழில் எனது நிறைய கவிதைகள் பிரசுரமாகிய காலம் அது.  அப்போது அந்தக் கதையை “ஆண்மை வதை“ என்று அவர்களே தலைப்பை மாற்றிப் பிரசுரித்தார்கள்.

கதை பிரசுரமான தகவலைச் சென்னையிலிருந்து ஒரு நண்பர் தொலைப்பேசி மூலம் சொன்னார். அப்போது குடும்பத்துடன் எங்களது கிராமத்தில் குடியிருந்தோம். பிரசுரமான முதல் கதை. மனசு பரபரப்பாகிவிட்டது. உடனே அதைப் பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு. உடனே 25 கிலோ மீட்டர் தூரம் இராணி்ப்பேட்டைக்கு பேருந்தில் பயணம் செய்து புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மனம் குதிக்கத் தொடங்கிவிட்டது.

 

நீங்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராக முதன் முதலில் வேலை செய்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.? அந்த அனுபவங்கள் எப்படி உங்களின் படைப்புகளுக்கு உதவியது அல்லது உதவுகிறது…? 

உண்மைதான். பத்திரிகையாளனாக சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி செய்திருக்கிறேன். அப்போது அது எனக்கு ஒரு பேராயுதமாக இருந்தது. அதே நேரம் ஏராளமான நெருக்கடிகளும் இருந்தன. முக்கியமாகப் பொருளாதார நெருக்கடி. அதிலிருந்துதான் ஏராளமான அனுபவங்களைப் பெற்றேன். அவை பெருமளவில் எனது படைப்புகளுக்கு உதவவில்லை என்றாலும், படைப்பின் சில இடங்களில் அதன் வேர்களோ, கிளைகளோ அல்லது இலைகளாவது எப்படியாவது முகத்தை நீட்டிவிடுகின்றன.

 

உங்களின் அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்கும் போது நிறைவாக உள்ளது. எப்படி இவ்வளவு மனிதர்களின் கதைகளை எழுத முடிந்தது…? உங்கள் பணிச்சுமையில் எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்க நேரமும் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால் இதைக் கேட்கிறேன். 

நான் ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூட இதைப் பதிவு செய்திருக்கிறேன். நான் இன்னமும் எனது கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் அதிக அளவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத எழுத வற்றாத வாழ்க்கையை எங்களின் ஆறும், மனிதர்களும் எனக்குள் நிரப்பி வைத்திருக்கிறார்கள். பணிச்சுமை என்பது பெரிய நெருக்கடி தான். அதனால்தான் கேளிக்கைகளையும், ஓய்வையும் துறந்துவிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

உங்களது சிறுகதைகள் துயரமான மனிதர்களின் கதைகளை அதிகமாகப் பேசுகிறது. முக்கியமாக மரணம் நிறையக் கதைகளில் ஒரு கருவாக வருகிறது. மரணத்தின் மீதான உங்கள் தொடர் பார்வையாக இவற்றைத் தொகுத்துக் கொள்ளலாமா…?

மரணம் நாம் தினசரி எதிர்கொள்கிற தவிர்க்க முடியாத ஒரு பேரதிசயமாக இருக்கிறது. மரணத்தை நாம் வாசலிலேயே காக்க வைத்துவிட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எப்போது நம்மையும் கைப்பிடித்து அழைத்துக்கொள்ளுமோ என்கிற பதட்டம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், ஏதோ ஒரு தைரியத்தில் மரணத்தின் கண்களுக்கு எதிரிலேயே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் நம்மை அனுமதித்துவிட்டுக் காத்திருக்கிறது.

இப்படி… தினசரி பல முறையாவது மரணத்தின் பிடியில் விழுந்து தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகிறோம். மரண பயம் என்பது மனதிற்குள் வராத வரைதான் ஒரு மனிதனின் வாழ்வு வாழ்வாக இருக்கும். அது வந்து விட்டால் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும். வாழ்கிற போதே பிணமாகக் கிடக்கிற பல பேரை நான் சந்தித்திருக்கிறேன். அதிகாரம், பதவி, சொத்து, அழகு, ஆணவம் எல்லாமே மரணத்தின் நிழல் நம்மைத் தொடாத வரைதான்.

கரும்பலகையில் எழுதி வைத்த எழுத்துகளை ஈரத்துணியால் துடைத்துவிடுவதைப் போல… எத்தனையோ பேரின் வாழ்க்கையை மரணம் எளிதாகத் துடைத்துவிட்டுப் போய்விடுகிறது. ஆனாலும் பல பேர் அதை உணராமல்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் எனக் காலம் காலமாக விவாதங்கள் ஒரு புறம் நடக்கிறது. என்ன நடந்தாலும் அதை நாம் உணரவோ, திரும்பி வரவோ அல்லது மீண்டும் ஒரு முறை வாழவோ முடியாது என்பதுதான் நம்ப முடியாத உண்மையாக இருக்கிறது. அப்படிதான் நான் பார்த்த நம்ப முடியாத பல மரணங்களை எழுதிப் பார்த்திருக்கிறேன். இன்னும் ஏராளமாக எழுத வேண்டியிருக்கிறது.

 

படைப்புகளில் நேர்கோட்டுக் கதைகள் மற்றும் இயல்பு வாதக் கதைகளை அதிகமாக எழுதுவது ஏன்? இதற்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா..? 

நாற்பது வயது வரை கிராமத்தில் வாழ்ந்தவன் நான். எனது தந்தை ஒரு ராணுவ வீரராக இருந்தாலும், இன்று வரை உணர்வுப்பூர்வமாக ஒரு விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் மக்கள் நன்செய் விவசாயத்தை விடவும் புன்செய் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். பெரும்பாலும் கிணற்றுப் பாசனம் தான் எங்களின் ஆதாரம். கிணற்றுக் கவலையில் மாடுகளைப் பூட்டி சால் மூலம் தண்ணீர் இறைத்துத்தான் விவசாயம் செய்தோம். தினம் தினம் பயிருக்கு நீர் பாய்ச்சுவதே எங்களுக்கு பெரும் போராட்டம். கிணற்றுக்கும் நிலத்துக்கும் இடையில் கால்வாயைக் கண்காணித்து வரப்பிலும், பயிரிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதனால்தான் “வந்து கொண்டு இருக்கிறாயா..?” என்பதை “வந்துகினு கீறியா…?” என்றும், “தின்று விட்டாயா…?” என்பதை “துன்ட்டியா…?” என்றும், “வந்துவிட்டாயா..?” என்பதை “வன்ட்டியா…?” என்றும் அந்த ஓட்டத்திற்கு  இணையாக வேகமாகப் பேசியவர்கள் எங்கள் மக்கள். இப்படித்தான் “சுருக்கெழுத்து” வருவதற்கு முன்பே “சுருக்குத் தமிழ்” பேசியவர்கள் நாங்கள். எங்களுக்கு எதையும் நிதானமாகவோ, சாவகாசமாகவோ பேச அப்போது நேரம் இருந்ததில்லை. இது நான் பல நிகழ்வுகளில் பகிர்ந்துகொண்ட தகவல்தான்.

இந்த பின்புலத்திலிருந்து வந்த என்னால் நேர்க்கோட்டுக் கதைகளையும், இயல்பு வாதக் கதைகளையும் தானே எழுத முடியும். அதனாலேயே மீ புனைவுகளையும் அல்லது அ புனைவுகளையும்,  பல அடுக்கு படிமங்களையும், மாயாவாதக் கதைகளையும் கலந்து எழுதவோ, பிசைந்த எழுதவோ எனக்குத் தெரியவில்லை.

ஒப்பனை அழகுதான். அது அழகை மேலும் அழகாக்கலாம். அதைவிடவும் நிஜம்தான் உண்மையான அழகு. அதுவே பேரழகு என நினைப்பவன் நான்.

 

இயல்பு வாதக் கதைகள் அழகியல் சார்ந்து சரியாக இருந்தாலும் அவை தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருப்பதும்  தமிழிலக்கிய சிறுகதைகளின் வரலாற்றில் ஒரு சலிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று நினைக்கிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?

இருக்கலாம். இது பல ஆண்டுகளாக முன் வைக்கப்படுகிற வாதம் தான். யதார்த்தவாத இலக்கியத்தின் மீது இது தொடர் குற்றச்சாட்டாகவே முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாய யதார்த்தவாதம் நவீனமாகிறது. அது பேரறிவாளிகளின் எழுத்து எனப் பேசப்படுகிறது. அப்படி நவீனத்துவ படைப்புகளாகச் சொல்லப்படுபவை உண்மையில் எத்தனை பேரால் அதன் உண்மையான முகத்தோடு புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படியான ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனுக்குப் பலவிதமான அனுபவங்கள் கிடைப்பதாகவும், அவனுக்குள் பல கதவுகள் திறக்கப்படுவதாகவும் சொல்லப்படலாம். ஆனால் அந்தக் கதவுகள் ஏன் எல்லோருக்கும் திறக்கப்படுவதில்லை.அப்படியான குண்டலினி திறப்பு வாய்த்தவர்களும் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தருகிற எழுத்து யோகிகளும் மகா புருஷர்கள். அவர்களின் எழுத்துத் தவம் தொடரட்டும்.

எல்லோருக்கும் புரிகிற இயல்புவாதக் கதைகளைத் தொடர்வதில் தேசத் துரோகக் குற்றம் எதுவும் இல்லாதவரை அதையே தொடரலாம் என நினைக்கிறேன். ஒருவேளை பெரும்பான்மையாக எழுதப்படுவதால் அது சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருக்கும் தொண்டை மண்டலத்தை உள்ளடக்கிய  எழுத்துகள் உங்களுடையது. அதே நேரத்தில் வட மாவட்டங்களின் எழுத்துகளுக்கு ஒரு சரியான இடம் இங்குக் கிடைக்கவில்லை இல்லையா? தமிழிலக்கியத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் ஒரு அந்நியத்தன்மைக்கு எப்போதும் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? 

வடாற்காடு மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பது நாடறிந்ததுதான். அது இலக்கியத்திற்கும் பொருந்தும் என்பதும் பல காலமாகப் பேசி வருவதுதான்.

ஜமதக்னி, மு.வரதராசன், சாவி, சார்வாகன் என வெகு சில எழுத்தாளர்களே இங்கே பிரபலமாக இருந்திருக்கிறார்கள்.

வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது. இந்தத் தீண்டாமைதான் இந்த வறட்சிக்கான முக்கிய காரணமாக நான் நினைக்கிறேன். இன்னொரு காரணமாக நான் நினைப்பது இலக்கியவாதிகளுக்குள் இருக்கிற பிரிவினை வாதம். குழு வாதம்.

அதையெல்லாம் உடைத்துவிட்டு, அண்மைக்காலமாக அழகிய பெரியவன், சுகிர்தராணி, ராணிதிலக், நேயன், யாழன் ஆதி, நாராயணி கண்ணகி, பவாசெல்லதுரை, பச்சியப்பன், விழியன் போன்ற படைப்பாளிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். முற்போக்கு படைப்பாளிகளான முல்லைவாசன், க.ராமஜெயம், சகுவரதன், ரமேஷ் போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளிவருகின்றன.

 

ஒரு எழுத்தாளர் ஒருமுறை என்னிடம் சொன்னது வடாற்காடு மாவட்டம் எப்போதும் இலக்கியத்திற்கு ஒரு வறட்சியான மாவட்டம் என்று. இந்த விமர்சனத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது.?( நானும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதைக் கேட்கிறேன்)

மற்ற மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் சக படைப்பாளிகளின் படைப்புகளையும் படிக்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். நல்ல படைப்பாக இருந்தால் அதைப்பற்றிப் பேசுவதும்,எழுதுவதும், கொண்டாடுவதும் கூட நடக்கிறது. அதெல்லாம் இங்கே இன்னும் கூடுதலாக வேண்டும்.

 

எழுத்தாளர் கவிப்பித்தன் இவ்வளவு எழுதிக் குவித்துள்ளார். அதற்குத் தகுதியான  சில விருதுகள் வந்துள்ளது. ஆனால் அவரின் படைப்புகளைப் பற்றிய ஒரு சில விமர்சனங்களைக் கூட பொதுவெளியில் காண இயலவில்லை என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

பல நேரங்களில் நானும் இதை உணர்ந்திருக்கிறேன். திரு.லிங்கம் அவர்களும் இந்தக் கேள்வியைப் பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறார்.

மடவளி நாவலுக்காக ஆனந்த விகடன் விருது வாங்கிய பிறகு தான் கவிப்பித்தன் என்ற பெயர் பொது வெளிக்கே அறிமுகமாகிறது என்றார்கள். அதற்கு முன்பாகவே இரண்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் என எழுதியிருந்தேன். எனது பெயர் மிகப் பழமையான பெயராக இருப்பதால் எளிதாக வாசகர்கள் கடந்து போய் விடுவதாக ஒரு காரணத்தை சில நண்பர்கள் சொன்னார்கள்.

இன்னொரு காரணமாக நான் உணர்வது எனது பணி. கடந்த பத்து ஆண்டுகளாகக் கடுமையான பணிச்சுமை. எந்த இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இயலாத பணி நெருக்கடி. எழுதுவதற்கே கடும் போராட்டம் நடத்த வேண்டிய கால நெருக்கடி. அடிக்கடி இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிலரைப்பற்றிப் பேசி, எழுதி முறைவாசல் செய்கிற பாக்கியமும் எனக்குக் குறைவு. ஒரு வேளை அதுவும் கூட காரணமாக இருக்கலாம். இங்கே நிகழ்கிற எல்லாவற்றிற்கும் ஒரு காரண காரியம் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து என் படைப்புகளை வாசித்துவிட்டு தினசரி ஒரு வாசகராவது என்னோடு கைப்பேசியில் பேசி விடுகிறார்கள். அதைவிட பெரும்பேறு வேறு என்ன வேண்டும்.

 

நீவாநதி உங்களின் முதல் நாவல். பொன்னை ஆற்றின் கரையோரம் வாழ்ந்த மக்களின் வளர்ச்சி, வீழ்ச்சி என்று வடாற்காடு மாவட்டத்தின் விவசாய மக்களின் பாடுகளைப் பேசுகிறது? முதல் நாவல் எழுதிய அனுபவங்கள் எப்படி இருந்தன…?

நீவாநதி நாவலை எழுதத் தொடங்கியபோது நான் பத்திரிகையாளனாக இருந்தேன். அப்போது நிறைய சுதந்திரம் இருந்தது. அதுவரை சிறுகதைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த நான் முதலில் நீவாநதியையும் ஒரு சிறுகதையாகத்தான் எழுதினேன். அண்மையில் கொரோனாவால் மறைந்த நண்பர் பாகவெளி ஆண்டிதான் அதை நாவலாக எழுதச் சொன்னார். தொடக்கத்தில் நிறைய தயக்கங்கள் இருந்தாலும் எழுதத் தொடங்கினேன். எழுத எழுத நாவல் என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது.

திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் பணியாற்றிய லாரி அலுவலகப் பணியைத் தொடர முடியாத சூழல். பொருளாதார நெருக்கடி. அதுவரை பகுதி நேரப் பத்திரிகையாளனாக பணியாற்றிய அனுபவத்திலும், எம்.ஏ., இதழியல் படித்த அனுபவத்திலும் மக்கள் புது முரசு என்ற ஒரு உள்ளூர் செய்திப்பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் வெளியீட்டாளராகவும், செய்தி ஆசிரியராகவும் நான் இருந்தேன். முறைப்படி இந்திய பத்திரிகைப் பதிவாளரிடம் பதிவு செய்து, ஒரு பிரபல செய்தித்தாளுக்கான கட்டமைப்புகளோடு அந்த இதழை பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தினோம். அதன் செய்திகளிலும் தரத்திலும் தனித்துப் பேசப்பட்டோம். எனது இலக்கிய  அனுபவம் அதற்குப் பெரிதும் உதவியது. நண்பர்கள் ஐந்து பேர் ஆசிரியர் குழுவிலிருந்தனர். முழுநேர நிருபர்கள் பணியாற்றினார்கள். பதிவு அலுவலகம், கிளை அலுவலகங்கள் என மூன்று அலுவலகங்கள் இருந்தன. ஒரு செய்திப் பத்திரிகையை நடத்துவதும், விளம்பரத்தை மட்டுமே நம்பி அதைத் தொடர்வதும் மிகுந்த சவாலாக இருந்தது. அந்த நேரத்தில்தான் நீவாநதி நாவலும் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் பத்திரிகையைத் தொடர்வது மிகுந்த பொருளாதார நெருக்கடியைத் தந்தது. அப்போது நீவாநதி நாவலை எழுதத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் கடந்து, முடியும் நிலையிலிருந்தது. அப்போது அரசுப்பணிக்கான வேலை நியமனத் தடை விலக்கப்பட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தத் தொடங்கியது. அரசுப்பணிக்கு போய்விடலாம் என முடிவெடுத்தேன். 39 ஆவது வயதில், பட்டம் பெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு குரூப் 2 தேர்வை எழுதத் தொடங்கினேன். நாற்பதாவது வயதில் வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன். அரசுப் பணி. அதிலும் வருவாய்த்துறையில் பணி. அதற்குப் பிறகு என்னால் நாவலைத் தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரவு நேரத்திலும், விடியற்காலைகளிலும் நேரத்தை ஒதுக்கி மளமளவென எழுதத் தொடங்கினேன். நாவலை எழுதி முடித்த போது ஏழு ஆண்டுகள் கடந்திருந்தன. நாவல் 520 பக்கங்களுக்கு பெரும் பயணம் பயணித்திருந்தது.

பெரும் தயக்கத்துடன்தான் அதைத் தோழர் கமலாலயனுக்கு அனுப்பி வைத்தேன். அவர் அப்படி ஒரு நாவலை என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உடனடியாக நியூ சென்சுரி புக் அவுசுக்கு பரிந்துரை செய்தார். அப்போது அங்கே பணியாற்றிய தோழர் மணிகண்டனுக்கும் அந்த நாவல் நிறையப் பிடித்துவிட்டது. மிக நேர்த்தியான வடிவமைப்போடு உடனடியாக நாவல் வெளியானது.

 

நீவாநதி நாவலில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொல்லாடல்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கே புதியதாகத் தோன்றியது. இப்படிப்பட்ட வட்டாரச் சொல்லாடல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எப்படித் தோன்றியது.? இதற்கு ஏதேனும் தனிப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டீர்களா…?

அதற்காக ஆய்வுகள் என எதையும் நான் செய்யவில்லை. நாற்பதாண்டுகாலம் நான் எனது கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் நீவாநதியில் பதிவு செய்திருக்கிறேன். எனது முன்னோர்களின் வாழ்க்கையையும், அவர்களின் காயங்களையும் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் அசலாகப் பதிவு செய்திருக்கிறேன்.

நாவலில் வருகிற பல வட்டார வழக்குச் சொற்கள் இன்றளவும் கூட எங்களின் கிரமங்களில் வழக்கத்தில் உள்ளவைதான். இன்றைய தலைமுறைக்கு அவற்றின் பொருள் தெரியாவிட்டாலும் கூட அவை இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைப் புதுப்பிக்கிற வாய்ப்பைதான் நான் பயன்படுத்திக் கொண்டேன்.

 

உங்களது எல்லா நாவல்களிலும் வரும் கிராமிய உணவுமுறைகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. முக்கியமாகக் களி என்பது அத்தியாவசியமான உணவாக எப்போதும் வருகிறது. இந்த உணவுமுறை வழக்கங்கள் தற்போது நமது மாவட்டத்தில் கூட பெரிதாக இல்லை என்று தோன்றுகிறது. படைப்புகளில் நீங்கள் பயன்படுத்தும் இத்தகைய உணவு வழக்கங்களின் வரலாற்று ரீதியான பார்வை ஏதேனும் இருந்தால் எங்களுக்குச் சொல்ல இயலுமா…?

என்றைக்குமே எங்களின் பிரியத்திற்குரிய உணவு கேழ்வரகுக் களியும், கருவாட்டுக் குழம்பும்தான். அது இன்றைக்கும் எங்கள் கிராமங்களில் தொடர்கிறது. நாங்கள் நகரத்திற்கு வந்த பிறகும்… இன்றும் கூட தினசரி ஒரு வேளை களியைச் சாப்பிடுகிறோம். இப்போது எனக்கு இருக்கிற செரிமானப் பிரச்சினையால் தினசரி களி வேண்டாம் என மருத்துவர்கள் சொன்னாலும் வாரத்தில் மூன்று நாள்களாவது களியை சாப்பிடுகிறேன். வீட்டினர் தினசரி ஒரு வேளையாவது எடுத்துக் கொள்கிறார்கள்.

இன்றைக்கும் எங்கள் கிராமங்களில், நடவுக் காலங்களில் கூலியாட்களுக்கு மதியம் சுடச்சுடக் களியும் கருவாட்டுக் குழம்பும் தான் உணவு. குறிப்பாகக் காலையிலிருந்து மாலை வரை சேற்றில் நின்று நெல் நடவு நடுகிற பெண்களுக்கும், தண்ணீரில் உட்கார்ந்து நாற்று பறிக்கிற ஆண்களுக்கும் கருவாட்டுக் குழம்பும் களியும் தான் பிடித்தமான உணவு. அந்த ஈர நசநசப்பிலும், குளிரிலும் பருப்பு சாம்பார் சாப்பிட முடியாது. கத்திரிக்காயோடு மொச்சைக் கொட்டையோ, உருளைக் கிழங்கோ போட்டுக் காய்ச்சுகிற கருவாட்டுக் குழம்புதான் அமிர்தம். அவர்களின் கடுமையான உழைப்புக்கு களிதான் நாள் முழுவதும் தாங்கும். களிக்கு முன்னதாக கலையில் ஒரு முறை தேநீரைப்போல பதினோரு மணி வாக்கில் சொம்பு சொம்பாக கூழ் குடிப்பார்கள். சோறோ, இட்லியோ சாப்பிட்டால் காற்றைப் போல புஸ்ஸென போய்விடும் என்பார்கள்.

நெல் நடவுக் காலத்தில் ஒரு மாதம் கூட தொடர்ந்து தினசரி களியும் கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் வருவதில்லை. ஆனால் இன்றைய நவீன தலை முறை ஒரு வேளை கருவாடோ, மீனோ சாப்பிட்டாலே உடல் உஷ்ணமாகி விடுவதாகப் புகார் சொல்கிறார்கள். அதிலிருந்தே அவர்களின் உடல் பலவீனம் தெரிகிறது.

 

நாவலில் இருக்கும் பொன்னை ஆற்றுக்கும் தற்போது இருக்கும் ஆற்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்துவிட்டது என்று தோன்றுகிறது. பொன்னை ஆற்றுடன் நீங்கள் கழித்த இளைமைப் பருவம் இன்னும் நினைவுகளில் இருக்கும். தற்போது ஆற்றைக் கடக்கும் நேரங்களில்  மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது…?

அந்த நீவாநதிதான் இன்றைய பொன்னை ஆறு என்கிற வரலாறு… அந்த ஆற்றை நம்பி வாழ்கிற இன்றைய கிராமத்து இளைஞர்களுக்கே தெரியவில்லை. அந்த நதியை நம்பித்தான் காலம் காலமாக எனது முன்னோர்கள் வாழ்ந்தனர். அதன் மடியில்தான் தூங்கினார்கள். நானும் அதன் மடியில்தான் வளர்ந்தேன். அந்த நதியைக் கடந்துதான் தினசரி பள்ளிக்குச் சென்றேன். அதன் நுரைக்கும் வெள்ளத்தோடும், கோடையிலும் அதில் பீறிட்ட ஊற்றோடும், அதில் துள்ளிய மீன்களோடும்தான் வாழ்ந்தேன். வழக்கொழிந்து போன விலாங்கு, வெளிச்சி, ஆறால், தேளி என எங்கள் ஆற்றிலும், ஏரிகளிலும் துள்ளிய மீன்களின் காலம் இன்னும் என் நெஞ்சில் ஈரமாய் ஓடுகிறது.

இடையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீவாநதி வறண்டு கிடந்தபோதும், அதன் மணல் இரவு பகலாய் கொள்ளை போனபோதும், நில எடுப்புகளால் எமது மக்கள் வாழ்க்கையைத் தொலைத்த போதும் ஒரு பத்திரிகையாளனாக அதைப் பொது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அந்த ரணத்தை படைப்பாக்கி இருக்கிறேன்.

இந்த நாவல் வந்த பிறகு “நீவாநதிக்கரை மக்கள்” என ஒரு புலனக் குழுவை எங்கள் பகுதி இளைஞர்கள் தொடங்கி இருக்கிறார்கள். நதியின் மீதான அவர்களின் அக்கறை கூடியிருக்கிறது.

இயற்கையின் கருணையால் இப்போது இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் வருகிறது. புதிய புதிய மீன்கள் நிறைந்து கிடக்கிறது. ஆனால் முறையாக விவசாயம் செய்யப்படாமல் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் இளம் விதவைகளைப் போலத் தரிசாகக் கிடக்கின்றன. இந்தத் தலைமுறையினருக்கு விவசாயத்தில் போதிய ஆர்வம் இல்லை. துணிந்து பயிர் செய்கிறவர்களுக்கும் மன நெருக்கடியும், பண நெருக்கடியும்தான் மிஞ்சுகிறது. இன்றைய விவசாய நடைமுறைகளும், வர்த்தக நடைமுறைகளும் மாறினால் மட்டுமே உழவன் தலை நிமிர முடியும்.

 

சிப்காட் போன்ற தொழிற்சாலை கொண்ட பகுதிகள் உருவாகியது எந்த வகையில் உங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைத் தந்துள்ளது…?

தொழிற்சாலைகளின் வரவால் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தது உண்மை. அதனால் பொருளாதாரம் முன்னேறி இருக்கிறது. வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீட்டுக்கொரு இருசக்கர வாகனம், பெரிய அளவிலான வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள், இரண்டு மூன்று கைப்பேசிகள் என வாழ்க்கை வசதியாகி இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் பறி போயிருக்கிறது. விவசாயம் வேகமாக அழிந்து வருகிறது. ரசாயனக் கழிவுகளால் பொன்னை ஆறும், பாலாறும் நஞ்சாகி வருகின்றன. கண்களை விற்று சித்திரம் வாங்கிய பழைய உதாரணம் தான் நடந்து கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னேற முடியாது என்பது உண்மைதான். ஆனால் அது அதற்கான அறத்தோடு வளர வேண்டும். எல்லோருமே தங்களின் அறத்திலிருந்து விலகுவதால்தான் இந்த மோசமான நிலை அரங்கேறி வருகிறது.

 

மடவளி உங்களின் இரண்டாவது நாவல் (ஆனந்த விகடன் விருது பெற்ற நாவல்) இந்த நாவல்  எழுதியதன் பின்னணி பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்?

பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2001 –ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனக்கு அப்போது திருமணமாகி 2 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. எங்கள் ஊராட்சி வாலாசா ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகிற ஒரு நடுத்தரமான ஊராட்சி.

ஊராட்சித் தலைவர் பதவி சுழற்சி முறையில் அப்போது பொதுப்பிரிவு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது. ஏழு சின்ன சின்ன கிராமங்கள் கொண்ட எங்கள் ஊராட்சியில் நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். அந்த ஊரில் அப்போது வரை முதல் பட்டதாரி நான் தான். அப்போதே கவிதை, கதை என எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகையாளன் வேறு. ஊரில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. அதனால் என் நலன் விரும்பிகள் (!) சில பேர் என்னைத் தேர்தலில் நிற்க வைக்க ஆசைப்பட்டனர். அதற்கு எப்படியோ நானும் பலியானேன். அப்படிதான் முதல் தேர்தலில் எனது துணைவியார் தேர்தலில் நின்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றோம்.

அந்த அனுபவமும், மானப் பிரச்சனையும், தன்மானமும் சேர்ந்து 2006 தேர்தலில் மீண்டும் நிற்க வைத்தது. எனது ஆதரவாளர்களின் வெறித்தனமான (!?) ஆர்வம் ஒரு பக்கம். இரண்டாவது முறையும் இன்னும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றோம். அதே வெறியும், ஆதரவும் 2011 ல் மூன்றாவது தேர்தலிலும் நிற்க வைத்தது. தோற்க வைத்தது.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதியாகவே இருந்தது. அதனாலேயே மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்றோம். ஆனால் கடைசி நேர அரசியல் விளையாட்டுகள், நயவஞ்சகங்கள், ஈவு இரக்கமற்ற சூதாட்டங்கள், சாதி மோதல்கள், குழிபறிப்புகள் எல்லாம் சேர்ந்து எங்களைக் கடுமையாக பலி வாங்கியது. அரசியலுக்கு நேர்மையும், அறிவும் மட்டும் போதாது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் மூன்று முறை தோற்க வேண்டி இருந்தது.

ஒரே தட்டில் சாப்பிட்ட உறவினர்கள் பகைவர்கள் ஆனார்கள். தோளில் கைபோட்டுப் பழகிய பால்ய நண்பர்கள் கூட துரோகிகள் ஆனார்கள். ஒரு தேர்தலில் பக்கபலமாய் இருந்து களமாடியவர்கள் அடுத்த தேர்தலில் ஜென்ம விரோதிகள் ஆனார்கள். ஒரு முறை ஒதுங்கிப்  போனவர்கள் அடுத்த முறை நெருங்கி வந்தார்கள். நெருக்கமான தொப்புள்கொடி உறவுகள் கூட பதம் பார்த்துக் கழுத்தறுத்தார்கள்.

இப்படி ஏராளமான அனுபவங்கள். மூன்று தோல்விகளுக்குப் பிறகு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை நான் முற்றிலுமாக இழந்திருந்தேன். ஏராளமான மனித சுபாவங்களையும், மனித மனங்களின் வக்கிரங்களையும் நெருக்கத்தில் உணர்ந்தேன்.

இதனோடு நான் பத்திரிகையாளனாகப் பெற்ற அனுபவம், நான் சந்தித்த அரசியல்வாதிகளின் பின்புலங்கள், அதனோடு கலந்த சில புனைவுகள் என உருவானதுதான் மடவளி நாவல்.

 

மடவளி நாவலில் வண்ணார் மற்றும் நாவிதர் போன்ற எளிய சமூகங்கள்  சுரண்டப்படுவதை ஒரு கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலின் பின்னணி வழியாகச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். இன்று திரும்பிப் பார்க்கும் போது அத்தகைய கிராமங்களில் நிலை எப்படி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முதல்  சாதீய சுரண்டல்கள் வரை.

இன்றும் அப்படியேதான் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் சகஜமாக நடத்தப்படுவது போல ஒரு பாவனை  தெரியும். ஆனால் அது பாவனைதான் என வேட்பாளர்களுக்கும் தெரியும். அந்த மக்களுக்கும் தெரியும்.  வாக்குகள் பெட்டிக்குள் விழுகிற வரைதான் அந்த சமத்துவம். அல்லது வாக்குகள் எண்ணப்படும் வரை. தாழ்த்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றாலும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாத கிராமங்கள் தான் இன்றும் அதிகமாக உள்ளன.

 

மடவளி நாவலில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வடாற்காடு வட்டார மொழி வழக்கு நாவலுக்கு இன்னும் சுவை தருகிறது. அதே நேரத்தில் நாவலில் சில இடங்களில் குழப்பங்கள் வருவதையும் தவிர்க்க முடியவில்லை எடுத்துக்காட்டாகக் காலத்துக்கும் உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் இடையே இருக்கும் மாறுபாடுகள். இவற்றை விமர்சனங்களாக முன் வைக்கவில்லை என்றாலும் நடுநிலையாக அணுகும்  ஒரு வாசகனாக இதைக் கேட்கிறேன்?

விமர்சனமாகவே முன்வைக்கலாம். அதுதான் ஒரு படைப்பாளிக்கான மரியாதை என நினைக்கிறேன்.

ஆனால் மூன்று தேர்தல்கள், வாக்கு சேகரிப்புகள், வாக்கு  எண்ணிக்கை நிகழ்வுகள் என நாவல் நகர்வதால் எந்தக் குழப்பமும் வந்துவிடக் கூடாது என மிகக் கவனமாகவே நாவலை நகர்த்தியிருப்பேன். அதற்காகக் கடுமையாகவே உழைத்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் சொல்வதைப் போல காலமும் உணவுப்பழக்கங்களும்  எங்கே முரண்படுகின்றன எனத் தெரியவில்லை. பதினைந்தாண்டுகால இடைவெளியில் நாவல் முடிந்து விடுகிறது. எங்கள் கிராமங்களில் இன்றைக்கும் அதே உணவுப்பழக்கங்கள் தான் தொடர்கின்றன. நகரத்தைப் போல அங்கே பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை.

 

சாதீய சுரண்டல்கள், கிராமத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், எளிய மனிதர்களின் கதைகள் என்று நிறையவே நமக்குத் தனது எழுத்துகளின் வழியாகக் காட்சிப்படுத்தும் கவிப்பித்தன் எந்தவொரு சமூகத்தின் இன்னொரு முகமான பாலியல் கதைகளையும் (இதை இப்படி கூடச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்) உங்களின் கதாபாத்திரங்கள்  பாலியல் நடத்தையில் ஒருவித ஒழுக்கத்துடன் தான் வந்து போகிறார்கள். ஆனால் எந்த காலத்திலும் சமூகம் அப்படிப்பட்டதாக இல்லை இல்லையா அதனால் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்?

நிச்சயமாக. சமூகம் எந்தக் காலத்திலும் முழு நேர்மையுடனும், ஒரே நேர்க்கோட்டிலும் பயணிக்கவே முடியாது. உலகம் நியாஸ்தர்களின் வசிப்பிடமாக மட்டுமே இருந்துவிட முடியாது. ஆனால் அப்படி ஒரு சமூகத்தைக் கட்டமைப்பது தான் நமது லட்சியமாக, நமது பிறவி நோக்கமாக நினைத்து நாம் வாழ்க்கையை வாழ்கிறோம். அதைத்தான் நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்களும்,  நமது கல்வி முறையும் போதிக்கின்றன. அல்லது போதிப்பதாகச் சொல்கின்றன. ஆனால் எதார்த்தம் அதற்கு நேர்மாறாகத்தான் உலகத்தைக் கட்டமைக்கிறது. என்றாலும் உலகில் அந்த எதிர்மறையின் விழுக்காடு குறைவுதானே. அல்லது அப்படியான நம்பிக்கையில் தானே நாம் வாழ்ந்தாக வேண்டும். அல்லது அதை நோக்கித்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும் இல்லையா. வண்ணதாசனின் கதைகளில் மட்டும் எப்படி அத்தனை பேரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால்,தெருநாய்கள் என்று ஒரு சிறுகதை. வாயில்லாதவை என்று ஒரு கதை. நீங்கள் சொன்னதைப் போல நானும் எழுதியிருக்கிறேன்.

 

மடவளி  நாவலுக்கு  எப்படிப்பட்ட பாராட்டுக்களும்  எதிர்வினைகளும் வந்தது?

நாவலை எழுதியபோது எனக்குள் ஏராளமான தயக்கங்கள் இருந்தன. நாவலில் வருகிற ஏராளமான பாத்திரங்கள் உண்மையானவை. அவர்கள் இன்றும் எங்கள் கிராமத்தில் வாழ்பவர்கள். அவர்கள் நாவலைப் படித்தால் எப்படி எதிர்கொள்வார்களோ என்ற தயக்கம் என்னைப் பல முறை நாவலைத் தொடரவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த போர்க்களம் எனக்குத் தந்த காயங்களும், எனக்குள் குமுறிக் கொண்டிருந்த உணர்வுகளும் என்னைத் துணிந்து எழுத வைத்தன.

ஆனால் நாவல் வந்தபிறகு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதற்கு விகடன் விருது கிடைத்ததை எங்கள் சுற்று வட்டார கிராமங்கள் எல்லாமே கொண்டாடின. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விருது விழா நிகழ்வுகளைப் பல ஆயிரம் இளைஞர்கள் முகநூலிலும், வாட்ஸப்பிலும் பகிர்ந்து பெருமை கொண்டனர்.

இலக்கிய உலகம் அதை எதிர்கொண்ட விதமும் ஒரு வகையில் திருப்திதான். உள்ளாட்சித் தேர்தல் பின்புலத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் என சில மூத்த படைப்பாளிகள் மனதார வரவேற்றனர். ஏராளமான வாசகர்கள் நேரிலும் கைப்பேசியிலும் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். எனது முந்தைய படைப்புகள் எல்லாவற்றையும் விட ஏராளமான வாசகர்களை எனக்குத் தந்தது மடவளி. அதற்கு ஆனந்த விகடன் விருதும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விருது விழா நிகழ்வுகளும் முக்கியக் காரணம். தனது பதிப்பில் எப்போதும் புதிய அழகியலையும், செய்நேர்த்தியையும் வெளிப்படுத்தும் நூல்வனம் பதிப்பக உரிமையாளர் தோழர் மணிகண்டனின் நேர்த்தியான வெளியீடும் மடவளிக்கு மிகப் பெரிய பலம்.

ஆனால் இதில் அதிசயம் என்ன தெரியுமா…?

மடவளி நாவலுக்கு விருது வழங்கிய ஆனந்த விகடன் இதழும், நூல் வெளியீட்டு விழா செய்தியை வெளியிட்ட கல்கி இதழையும் தவிர, இன்று வரை வேறு எந்த பத்திரிகையும் நாவலைப் பற்றி ஒரு வரி விமர்சனத்தைக் கூட எழுதவில்லை

 

வடாற்காடு மாவட்டத்தின் விவசாய வாழ்க்கை எப்படி மற்ற மாவட்டங்களில் இருக்கும் விவசாய மக்களின் வாழ்க்கையிலிருந்து மாறுபடுகிறது…? விவசாய முறைகளில் கூட நிறைய மாற்றங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இங்கே ஆற்றுப்பாசனம் மிகக் குறைவு. கிணற்றுப் பாசனமும், ஏரிப் பாசனமும்தான் அதிகம். கிணற்றிலும் மின்சார மோட்டார்கள் குறைவு. கவலைப்பாசனம் குறைந்த பிறகு டீசல் இஞ்ஜின்கள் பயன்பாட்டுக்கு வந்தன. டீசலும், மண்ணெண்ணெய்யும் விற்கிற விலையில் அதை வாங்கி ஊற்றி மிஷினை ஓட்டி பயிர் வைப்பது யானையைக் கட்டி தீனி போடுகிற வேலை. தவிரவும் வட மாவட்டங்களில் பெரிய பெரிய நிலச்சுவான்தார்கள் இல்லை. எல்லோருமே சிறு, குறு விவசாயிகள் தான். அதிலும் புன்செய் விவசாயம் தான் அதிகம். இது நீண்ட காலமாக வயிற்றுப்பாட்டுக்கான போராட்டமாகத்தான் தொடர்ந்தது. அதுவே பலரை அதிலிருந்து விரட்டியது. இந்த போராட்டம்தான் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே கிராமங்களைக் காலி செய்து பல குடும்பங்களை பெங்களூர் பக்கம் கொத்தனார் வேலைக்கு அனுப்பி வைத்தது. இப்போது இளைய தலைமுறையினரை ராணிப்பேட்டை சிப்காட் பக்கம் தஞ்சமடைய வைத்திருக்கிறது. இனி விவசாயம் ஒரு முழுநேரத் தொழிலாக இருக்க வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அது ஒரு விருப்பத் தொழிலாகத்தான் இருக்கும்.

 

சமீபத்தில் வெளிவந்துள்ள உங்களின் மூன்றாவது நாவலான ஈமம் வாசிப்பில்  எனக்குப் பெரிய அதிர்ச்சிகளைத் தனிப்பட்ட விதத்தில் தந்தது. இந்த நாவலின் கரு உண்மையானதா அல்லது உங்கள் கற்பனையில் உருவானதா…?

ஈமம் புனைவுகள் கலந்த உண்மை. எனது எந்த ஒரு படைப்பையும் முழுமையான கற்பனையையோ அல்லது முழுமையான உண்மையையோ வைத்து நான் எழுதியதில்லை. என் எழுத்துகளில் புனைவைவிட நிஜம் அதிகம் இருக்கும் என ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். ஈமம் கதையின் நாயகனும் இன்றும் நம்மிடையில் வாழ்கிறார் என்பதையும் நான் பதிவு செய்திருக்கிறேன். அவர் வாழ்வில் நடந்த நம்பமுடியாத ஒரு சிறு நிகழ்வின் பெரும் புனைவுதான் ஈமம். ஈமம் இன்னும் முடியவில்லை.

 

ஈமம் நாவலை வாசிக்கும் யாருக்கும் நிச்சயம் சில நாட்களுக்காவது உறக்கம் வராது என்று நினைக்கிறேன். அதை எழுதிக் கொண்டிருந்த போது மனதளவில் உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன…?

ஈமம் நாவல் தொடங்கிய பிறகு எனக்கு ஏற்கனவே இருக்கிற நேர நெருக்கடிதான் நாவலை உடனே முடிக்க முடியாமல் தள்ளிக் கொண்டே போனது. நாவலை முடிக்க ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் வரை தேவைப்பட்டது. ஒரு திகில் திரைப்படத்தை உருவாக்குவதைப் போலத் தான் அது என்னையும் அடிக்கடி சிலிர்க்க வைத்தது. பிணவறை, பிணக்கூறு ஆய்வு தொடர்பாக எழுதுவதற்காகப் பல நாள்களைச் செலவழித்திருக்கிறேன். மருத்துவர்கள் முதல் பிணவறை உதவியாளர்கள் வரை பல பேரை நேரில் சந்தித்து தரவுகளைச் சேகரித்திருக்கிறேன். மாசானத்தின் வாழ்க்கையை எழுதவும் நேரடியாகக் களத்தில் இறங்கித்தான் சில தரவுகளைச் சேகரித்தேன்.

மகேந்திரனின் பிற்பகுதி வாழ்க்கையை எழுதுகிற போது பல நாள்கள் மனதளவில் நானே ஒரு தொழிலாளியாக வாழ்ந்திருக்கிறேன். அந்த ரணங்களை உணர்ந்திருக்கிறேன். சுசிலாவோடு மகேந்திரன் நடத்திய அந்தக் காதல் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக நானே வாழ்ந்திருக்கிறேன்.

 

தற்போது திரும்பிப் பார்க்கும் போது ஈமம் நாவல் நீங்கள் நினைத்த அளவுக்கு வந்துள்ளதாக நினைக்கிறீர்களா…?

நாவலை முழுமையாக ஒரே தொகுப்பாகக் கொண்டு வந்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். நாவலைக் கொண்டு வருவதில் அப்போதிருந்த சில சிக்கல்களும், ஊரடங்கின் நெருக்கடிகளும் சேர்ந்துகொண்டதால் அதன் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுவர முடிந்தது. இரண்டாவது பாகம் உடனே கொண்டு வரத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை மேலும் மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் இப்போது அதைத் தள்ளி வைத்திருக்கிறேன்.

 

கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்துவது ஏன்…? முக்கியமாகக் கட்டுரைகள் அதிகம் எழுதாமல் தவிர்ப்பதற்குத் தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருக்கிறதா?

நேர நெருக்கடிதான் காரணம். சில கதைகளைத் தவிர்க்க முடியாமல் எழுத வேண்டியிருக்கிறது. எழுதி முடிக்கிற வரை சில படைப்புகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கின்றன. நாவல்களும் அப்படிதான் தனக்கான நேரத்தைத் தானாகவே உருவாக்கிக் கொள்கின்றன. கட்டுரைகள் எழுத வேண்டும் என்று எனக்குள் அப்படி எந்த வித நெருக்கடியும் எழுந்ததில்லை. ஒரு வேளை தேவையான அளவுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறபோது அப்படித் தோன்றலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல அப்போது கட்டுரைகளையும் எழுதுவேன்.

 

உங்கள் படைப்புகளில் நீங்கள் நமது மாவட்டத்தின் மக்களின் கதைகளைத் தான் அதிகமாக எழுதியுள்ளீர்கள். ஆனால் ஒரு நவீன இலக்கிய படைப்பாளியாக இவற்றைத் தாண்டி எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா…? தொடர்ந்து ஒரே எல்லைகளுக்குள் ஒரு படைப்பாளி இருப்பதும் அவரின் மீது சில விமர்சனங்களையும் தரும் இல்லையா… அதனால் கேட்கிறேன்…?

திரும்பத் திரும்ப நான் ஒரே பதிலைச் சொல்வதை நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். வருவாய்த்துறைப் பணியிலிருந்துகொண்டு எழுதுவதே பெரும் அதிசயமாகத்தான் இருக்கிறது. புதிய முயற்சிகளையும், புனைவுகளையும் எழுதுவதில் எனக்கு ஈர்ப்பு இல்லை என்பதற்குக் காரணமும் நேரமின்மைதான். தீராத பசியில் இருப்பவன் முதலில் வயிற்றுக்குள் எதையாவது போட்டால் போதும் என்று தான் நினைப்பான். அறு சுவை உணவைப்பற்றி வயிறு நிறைந்த பிறகு ஒரு வேளை யோசிக்கலாம். ஒரு வேளை இந்த பதில் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் போகலாம்.

 

இவ்வளவு இக்கட்டான பணிச்சுமைகளில் எழுதுவதற்கென்று எப்படி நேரம் ஒதுக்கீடு செய்கிறீர்கள்…? தீவிரமான இந்தப் பணிச் சுமையில் படைப்பாற்றலைத் தக்கவைத்துக் கொள்ள எப்படிப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்கிறீர்கள்…?

எனக்குக் கிடைக்கிற ஓய்வு நேரம் என்பதே இரவு பதினோரு மணிக்கு மேல்தான். அப்போதும் சிந்தனை முழுவதும் அலுவலகப் பணியில்தான் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் அதிகாலை நேரங்களில் எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். தவிரவும் நான் குடும்பத்துடன் செலவிடுகிற நேரம் மிக மிகக் குறைவு. உறவினர்களோடு செலவிட என்னிடம் நேரம் சுத்தமாகவே இல்லை. இப்படியான சில சுய தியாகங்களின் பின்னணியில்தான் எனது படைப்புகள் வருகின்றன. குடும்பத்தினரின் சகிப்புத் தன்மைதான் எனக்குக் கிடைத்த பெரிய வரம். அதற்காக வாழ்வில் கிடைத்தற்கரிய எத்தனையோ நிகழ்வுகளை நாங்கள் இழந்திருக்கிறோம். ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும் என இயற்கை நிர்ணயித்திருக்கிறதே. என்ன செய்வது…!

 

எதிர்கால இலக்கிய திட்டங்கள் ஏதேனும் மனதிலிருக்கிறதா…? அடுத்த நாவலின் கரு எதைப்பற்றி இருக்கும்…?

இரண்டு ஆண்டுகளாகவே உடல் நிலையில் சில பிரச்சினைகள் தொடர்கின்றன. அதனால் உடலும் மனமும் பலவீனமடைந்திருக்கின்றன. ஓய்வின்மையும், பதட்டமும், மன நெருக்கடியுமே அதற்கான காரணங்களாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். சித்த மருத்துவச் சிகிச்சைகள் ஒரு பக்கம் தொடர்கின்றன. இரண்டு ஆண்டுகளாகவே எழுதுவதும், வாசிப்பதும் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் மனிதர்களின் வாழ்க்கைகளை இன்னும் அசலாக எழுதிவிட வேண்டும் என்கிற ஆசையும், லட்சியமும் நிறைய இருக்கிறது. இன்னும் எழுத வேண்டியதும் ஏராளமாக இருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக லாரித் தொழிலை மையமாக வைத்து ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன். உடல்நிலையின் காரணமாக அந்த நாவல் முழுமையடையாமல் நிற்கிறது. அது புதிய களம். இதுவரை யாரும் எழுதாத களம்.

எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் அந்த நாவலை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வழக்கம் போல இந்த நாவலும் தனக்கான நேரத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கை மட்டும் துணை இருக்கிறது. உடலும் மனமும் மீண்டும் புத்துணர்வு கொள்ளும். அதற்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறேன்.

 

புதிய நாவலுக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் உடல் நலமும் இன்னும் மேம்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.