இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…”

அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு நோக்கினான் அந்தக் கனவான். நமக்கெல்லாம் தெரியும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் ஒருவன் தனக்குப் பரிச்சயமில்லாத இன்னொருவனோடு திடீரென்று தெருவில் நின்று பேச எத்தனித்தால், இரண்டாவது ஆள் சந்தேகத்திற்கிடமின்றி எச்சரிக்கை அடையத்தான் செய்வான்.

எனவே, அழைக்கப்பட்ட மனிதன் ஏதோ மனக்கிலேசம் கொண்டவனாய் நடக்க முற்பட்டான்.

“உங்களைத் தொந்தரவு செய்றதுக்கு மன்னிக்கணும்” ரக்கூன் கோட்டில் இருந்தவன் சொன்னான். “ஆனால் எனக்கு…. எனக்கு நிஜமாவே ஒண்ணும் புரியல. என்னை நீங்கள் மன்னிப்பீங்க. அதில் சந்தேகம் இல்லை; இங்கே பாருங்க ப்ளீஸ்…… எனக்குக் கொஞ்சம் மனக்கஷ்டம், அதான்”

அதற்கு அப்புறம்தான் மடிப்புகளுடன் தைக்கப்பட்டிருந்த கோட்டு அணிந்திருந்த அந்த இளைஞன், ரக்கூன் கோட்டு அணிந்திருந்த மனிதன் நிஜமாகவே மனக்கஷ்டத்தில் இருக்கிறான் என்பதைக் கவனித்தான். சுருக்கம் விழுந்திருந்த அவனது முகம் வெளிறிப் போயிருந்தது. அவனது குரலில் நடுக்கம் தெரிந்தது. அவன் ஏகக்குழப்பத்தில் இருந்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அவனது நாவிலிருந்து வார்த்தைகள் சரளமாக வரவில்லை. அவனுடைய கோரிக்கையை உடனடியாக யாரிடமாவது சொல்லி நிவாரணம் தேடியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இருந்தது. இருந்த போதும், தன்னை விட மிகவும் கீழான ஒரு பதவியில் அல்லது நிலையில் இருக்கும் ஒருவனிடம் கோரிக்கையைப் பணிவுடன் முன்வைத்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள அவன் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் அவனைப் பொறுத்த மட்டும் ஒரு மிகப்பெரிய முயற்சி என்பது நன்றாகவே தெரிந்தது. மதிப்பைத் தூண்டும் விதத்திலிருந்த அவனது கோட்டையும், பிரமிக்க வைக்கும் அடர் பச்சை நிறத்திலிருந்த அவனது மேலங்கியையும் அதில் பொறிக்கப்பட்டிருந்த தனிச்சிறப்பான அலங்காரங்களையும் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு மனிதனிடம் இருந்தா அந்த மாதிரியான பொருத்தமில்லாத, அற்பத்தனமான கோரிக்கை வந்தது என்று எண்ணத்தோன்றும். ரக்கூன் கோட்டு அணிந்திருந்த அந்த மனிதனும் கூட இதை எல்லாவற்றையும் நினைத்து குழம்புகிறான் என்று வெளிப்படையாகத் தெரிந்தது. இதை எல்லாம் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போலும். இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொள்வது என்று முடிவெடுத்துக் கொண்டான். தான் சுமந்து கொண்டு வந்திருந்த அந்த மாதிரியான அசூயையான நிலைமைக்கு அவனே அமைதியாக ஒரு முற்றுப்புள்ளியும் வைத்துக் கொண்டான்.

“மன்னிக்கனும்… நான் நானாக இல்லை. உங்களுக்கு என்னைத் தெரியாது என்பது உண்மைதான். உங்களைத் தொந்தரவு செய்வதற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மனதை நான் மாற்றிக்கொண்டேன்.”

இப்போது, பணிவாகத் தொப்பியை உயர்த்திப் பிடித்தவாறு சடுதியில் நடந்து சென்றான்.

“ஆயினும் என்னைப் பேச அனுமதிங்க……”

மடிப்புடன் தைக்கப்பட்ட கோட்டை அணிந்து கொண்டு நின்றவனை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டு, இளைய வயதுடைய அந்த மனிதன் இருளுக்குள் மறைந்து போனான்.

“என்ன ஒரு வினோதமான பேர்வழி இவன்?” என்று மடிப்புக் கோட்டு அணிந்த மனிதன் எண்ணிக்கொண்டான். கொஞ்ச நேரம் ஆச்சரியப்பட்டுவிட்டு இது சாதாரண விஷயம்தான் என்று மனதைத் தேற்றிக்கொண்டான். அப்புறம் தனது அதிர்ச்சியிலிருந்து மீண்டான். அதன் பிறகு தன்னுடைய பிரச்சினைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். எத்தனை மாடிகள் என்று எண்ண முடியாத அளவுக்குக் கட்டப்பட்டு இருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் வாசற்கதவுகளை உற்று உற்றுப் பார்த்த வண்ணம் முன்னும் பின்னும் நடக்கலானான். கொஞ்சம் பனிப்படலம் படியத்தொடங்கியதைக் கண்ட அந்த இளைஞனுக்குத் தான் அங்கே அப்படியும் இப்படியும் நடை பயின்று கொண்டிருப்பது எவருக்கும் அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்தான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமும் பிறந்தது. சொல்லப்போனால் சவாரி கிடைக்காமல் காத்துக்கொண்டிருக்கும் கார் ஓட்டுனர்களைத் தவிர அவனைப் பார்த்துக்கொண்டு நிற்பவர்கள் யாரும் அங்கே இல்லை.

“மன்னிக்கணும்”

அந்த இளைஞன் மீண்டும் புறப்பட எத்தனித்தான். ரக்கூன் கோட்டு அணிந்த மனிதன் மீண்டும் அவன் முன்னால் வந்து நின்றான்.

“மறுபடியும் என்னை மன்னிக்கணும்”. என்று திரும்பவும் ஆரம்பித்தான் அவன். “என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு மரியாதைக்குரிய மனிதர்தான். என்னுடைய சமூக அந்தஸ்தைப் பற்றி எதையும் நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். நான்தான் குழம்பிப் போயிருக்கிறேன். ஒரு மனிதனின் மீது இன்னொரு மனிதன் கரிசனம் கொள்வதைப்போல நினைச்சுக்கோங்க. ஒரு சின்ன உதவியை உங்களிடம் வேண்டி நிற்கும் ஒருவனா நிற்கிறேன்.”

“என்னால் முடிந்தால் பண்றேன். என்ன வேண்டும் உங்களுக்கு?”

“ஒருவேளை நான் உங்களிடம் பணம் கேட்கிறேன்னு நீங்க நினைக்கலாம்” என்று ஒரு வறண்டு போன சிரிப்புடனும், பைத்தியம் பிடித்தவனைப் போலவும் சொன்னான் அந்த மர்ம மனிதன். வெளுத்துப்போன முகத்துடன் இருந்தான்.

“ஓ! அப்படியெல்லாம் இல்லை அன்பனே”

“இல்லை… என்னால் கணிக்க முடிகிறது. நான் உங்களை எரிச்சல் படுத்திக்கிட்டு இருக்கேன். என்னை மன்னிக்கவும். என்னையே என்னால் தாங்கிக் கொள்ள முடியல. நான் ஏதோ கவலையால் பீடிக்கப்பட்ட, பைத்தியம் பிடித்த மனிதன்னு எண்ணிக் கொள்ளுங்களேன். ஆனால் இவ்ளோதான்னு ஒரு முடிவுக்கு நீங்கள் வந்துடக் கூடாது.”

“சரிப்பா… சொல்ல வர்றதை நேரடியாகச் சொல்லு… ம்ம்ம் சொல்லு” என்று தலையை ஆட்டி ஆட்டி, பொறுமையில்லாமல் அவனை மேலும் பேசத் தூண்டினான் இந்த இளைஞன்.

“இப்ப இப்படி நினைச்சு பாருங்க! கொஞ்ச வயதுள்ள உங்களை மாதிரி இளைஞர் ஒருவர் நான் என்னவோ சொல்பேச்சு கேட்காதவன் மாதிரி என்னைப் பார்த்துச் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லுங்கிறார். நான் அன்புள்ள மனிதன். பெரிதுபடுத்தவில்லை. என்னை இந்தக் கேவலமான நிலையில் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி தோணுது? வெளிப்படையாகச் சொல்லுங்க”

இந்த இளைஞன் அதீதமாகக் குழப்பம் மேலிட்டு ஒன்றும் பேசாமல் நின்றான்.

“உங்களை நான் வெளிப்படையாகவே ஒன்றைக் கேட்க அனுமதியுங்கள். நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களிடம் நான் கேட்க நினைத்தது இவ்வளவுதான்.” என்று ரக்கூன் கோட்டு அணிந்திருந்த மனிதன் அறுதியும் இறுதியுமாகக் கேட்டான்.

“பெண்ணா?”

“ஆமாம்…பெண்தான்.”

“ம்ம்ம். பார்த்திருக்கிறேன். இதோ எத்தனையோ பெண்கள் கடந்து போகிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன் என்று சொல்வதில் என்ன?”

“அவ்வளவுதானா” என்று ஒரு கசந்த புன்னகையை வெளித்தள்ளியவாறு சொன்னான் அந்த மர்ம மனிதன். “நான் குழம்பிப் போயிருக்கிறேன். நான் கேட்க வந்தது அதுவல்ல. மன்னிக்கணும். நான் கேட்க வந்தது வேறு. நரி ரோமத்தால் ஆன ஒரு தொப்பியும், கருமையான வெல்வெட் நிறத்தில் தலையங்கியும் கருமை நிறத்தில் முக மறைப்பானும் அணிந்து கொண்டு சென்ற ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தீர்களான்னு கேட்டேன்.”

“இல்லை…அந்த மாதிரி யாரையும் நான் பார்க்கவில்லை…. இல்லை… அப்படி யாரையும் நான் பார்க்கலேன்னு நினைக்கிறேன்,”

“நல்லது… அப்படீன்னா என்னை மன்னிச்சுக்கோங்க”

இந்த இளைஞன் ஏதோ கேட்க நினைத்தான். ஆனால் ரக்கூன் கோட்டு அணிந்த இளைஞன் மறுபடியும் காணாமல் போயிருந்தான். தான் இதுவரை பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியவனாய் மறுபடியும் எங்கோ சென்று மறைந்தான் அவன்.

“நல்லது…. ஏதாவது ஒரு பிசாசு அவனைக் கவ்விக்கொண்டு போகட்டும்” மடிப்பு கோட்டு அணிந்திருந்த இளைஞன் சொல்லிக் கொண்டான். அவன் அலுத்துக் கொண்டது நன்றாகவே தெரிந்தது.

எரிச்சலுடன் நீர் நாயின் ரோமங்களால் செய்யப்பட்ட காலரை உயர்த்திவிட்டுக் கொண்டான். பின்னர் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் வாசற்கதவுகளுக்கு முன்பாகக் கவனத்துடன் முன்னும் பின்னும் நடக்கத் தொடங்கினான். உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான் அவன்.

“ஏன் அவள் இன்னும் வெளியே வராமல் இருக்கிறாள்? மணி எட்டாகப் போகிறது”. என்று அவன் நினைத்துக் கொண்டான்.

நகரத்தின் கடிகாரம் எட்டு மணியைக் காட்டியது.

“பிசாசு கவ்வித் தொலைக்கட்டும்”

“மன்னிக்கனும்” குரல் கேட்டது.

“அந்த மாதிரி பேசியதற்கு என்னை மன்னிக்கனும். திடீரென்று என் மீது விழுவது போல வந்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினீர்களா அதான்” என்று கோபம் தொனிக்கும் விதத்திலும் கொஞ்சம் மன்னிப்புக் கேட்கும் தோரணையிலும் சொன்னான் அந்த இளைஞன்.

“இதோ நான் மீண்டும் வந்து விட்டேன். என்னைப் பார்த்தால் கடுப்பாகவும் புரியாத புதிராகவும் இருக்குமே!” என்றான் அவன்.

“இந்த வீண் பீடிகை எதுவும் இல்லாமல் உடனே நீ சொல்ல வந்ததைச் சொல்லிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்!. உனக்கு என்னதான் வேண்டும் என்று தெரிந்து தொலைக்க மாட்டேங்கிறது”

“ரொம்ப அவசரப்படுகிறீர்கள். சரி…எந்த ஒரு வார்த்தையையும் வீணடிக்காமல் நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லி விடுகிறேன். அதைச் சொல்லாமலும் இருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சம்பந்தமே இல்லாத வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரு மனிதர்களை ஒன்றாக இருக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தி விடுகிறது. உங்களைப் பார்த்தால் பொறுமை என்றால் என்னவென்று கேட்கும் ஆளாகத் தெரியுது. எனவே….இதை எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்: நான் ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். (உங்களுக்கு இதைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் என்று என் மனதைத் தயார்படுத்தி விட்டேன்). அந்தப் பெண் எங்கே சென்றாள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். அவள் யார், அவளுடைய பெயர் என்னவென்பதையெல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன் இளைஞனே”

“பரவாயில்லை… பரவாயில்லை… மேலே சொல்லுங்க”

“மேலே சொல்லவா? என்ன இப்படி எடுத்தெறிந்த மாதிரி கேட்கிறீங்க? என்னை மன்னிக்க வேண்டும். ஒருவேளை உங்களை இளைஞன் என்று அழைத்து உங்கள் மனதைப் புண்படுத்திட்டேனோ? ஆனால் என் மனதில் ஒன்றும் இல்லை. சுருக்கமாகச் சொல்கிறேனே-எனக்கு நீங்கள் ஒரு பெரிய உதவியைச் செய்ய விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். –அந்தப் பெண், அதாவது ஒரு பெரிய நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண். எனக்கு மிகவும் பழக்கமானவள். அவளைத் தேடிப்பிடிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எனக்கு எந்தக் குடும்பமும் இல்லை. தெரியுமா உங்களுக்கு?”

“ஓ…”

“என்னுடைய இடத்தில் உன்னை வைத்துப் பார் இளைஞனே! (ஐயோ! மறுபடியும் அதையே செய்கிறேன் பாருங்கள். மன்னித்துக்கொள்ளவும். மறுபடியும் உங்களை இளைஞன் என்று கூப்பிட்டுத் தொலைக்கிறேனே). ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. மனதைப் பீடித்து இருப்பது அவள் நினைவு மட்டும்தான். இந்தக் கட்டிடத்தில் யார் வசிக்கிறார்கள் என்பதை உங்களால் சொல்ல முடியாதா?”

“என்ன சொல்ல… இங்கு அனேகம் பேர் வசிக்கிறார்களே”

“ரொம்ப சரி… நீங்கள் சொல்வது முற்றிலும் சரி” ரக்கூன் கோட்டு மனிதன் தன்னை நற்பண்புகள் உள்ளவனாகக் காட்டும் பொருட்டு மென்மையாகப் புன்னகைத்தான். “எனக்கு என்னவோ நான் குழப்பமாக இருப்பதைப் போலவே இருக்கு. அது சரி… நீங்கள் ஏன் அந்த மாதிரி பேசினீர்கள்? உங்களுக்கே தெரியும். நான் குழம்பிப்போய் இருக்கிறேன் என்பதை நான் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். உங்களைப் பார்த்தா நீங்களும் தற்பெருமை பீத்திக்கிற ஆள் மாதிரிதான் தெரியுது. உங்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு நான் அசிங்கப்பட்டு நிற்பதை நீங்கள் பார்க்கத்தானே செய்கிறீர்கள். நான் சொல்லிக்கொண்டு இருப்பது நல்ல நடத்தையுள்ள ஒரு பெண்மணியைப் பற்றி. அதாவது மென்மையான சுபாவம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். மன்னிக்க வேண்டும். நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன். நான் ஏதோ இலக்கியம் பற்றி பேசுற மாதிரி இருக்குல்ல! பால் தே காக் இந்த மாதிரியான மென்மையான சுபாவம் கொண்டவனாக இருக்க வேண்டியவன். எல்லாத் தொல்லைகளும் அவனிடம் இருந்துதான் வந்து தொலைக்கின்றன. என்ன சொல்றீங்க….”

சுத்தமாக நம்பிக்கையற்றுப்போய் குழப்பத்துடனும் தடுமாற்றத்துடனும் நின்று கொண்டிருந்த அந்த ரக்கூன் கோட்டு மனிதனை இந்த இளைஞன் கனிவோடு பார்த்தான். அர்த்தமில்லாத புன்னகை ஒன்றை அவனைப் பார்த்து வீசினான். காரணம் எதுவும் இல்லாமல், நடுங்குகின்ற கைகளால் தனது கோட்டின் மடலைப் பிடித்துக்கொண்டான்.

“இங்கே யார் வசிக்கிறார்கள் என்று கேட்டாய் அல்லவா?” ஓர் அடி பின்னோக்கி நகர்ந்தவாறு கேட்டான் அந்த இளைஞன்.

“ஆமாம். இங்கே ஏராளமானோர் வசிக்கிறார்கள் என்றாய்”

“இங்கேதான்…….…. சோஃபியா ஓஸ்டஃப்யேவ்னா வசிக்கிறாள்.” அந்த இளைஞன் சன்னமான கரிசனத்துடன் சொன்னான்.

“பார்த்தீர்களா? உங்களுக்கு ஏதோ தெரிந்துதானே இருக்கிறது இளைஞனே”

“கண்டிப்பா எனக்குத் தெரியாது. ஒன்றுமே தெரியாது. நீங்கள் புலம்புவதைப் பார்த்து அனுமானித்தேன்”

“அவள் இங்கு வருவதில்லை என்பதைச் சமையல்காரியின் மூலம் தெரிந்து கொண்டேன். சோஃபியா ஓஸ்டஃப்யேவ்னாவுடன் நீங்கள் தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்றாள். அவளுக்கு அவளைத் தெரியாது”

“அப்படியா? ஓ….இடைமறிப்பதற்கு மன்னிக்கவும்…அப்புறம் என்னாச்சு?”

“அது ஒன்றும் உங்களுக்குப் பெரிதாக ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் இல்லை.” கசப்புடன் முரண்பட்ட விதமாகச் சொன்னான் அந்த விந்தை மனிதன்.

“இங்கே பாருங்கள்… என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான் அந்த இளைஞன். “இந்த மாதிரியான ஒரு நிலைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்னு தெரியவில்லை. இருந்தாலும் ஒன்றை எனக்கு வெளிப்படையாகச் சொல்லுங்க. ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை ஆமோதிப்பதைப்போல அவன் சிரித்தான். “நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்.” அவனுடைய மொத்த உடலும் பாதி வில்லாக வளைந்து நின்றது.

“தேவைப்பட்டா என்னை நசுக்கிக்கோ! ஆனால் அது நடந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால சொல்ல முடியும். எல்லோருக்கும் நடப்பதுதான்…. உன்னுடைய கரிசனம் நிஜமாகவே என்னை பரவசப்படுத்துகிறது. உண்மையைச் சொல்லப்போனால்…. எல்லா இளைஞர்களைப் போல ….நான் இளைஞன் இல்லைதான். என்றாலும்… உனக்கே தெரியாதா! பழக்க வழக்கங்கள்…. திருமணம் செய்யாமல் வாழும் வாழ்க்கை…. திருமணம் செய்யாத மற்ற இளைஞர்களுடன் இருக்கவேண்டிய நிலை…. நமக்கெல்லாம் இது தெரியாதா என்ன?”

“ஆமாம் …நமக்கெல்லாம் தெரியாதா என்ன? நமக்கெல்லாம் தெரியாதா என்ன? அது சரி! எந்த வழியில் உங்களுக்கு நான் உதவியாக இருக்க முடியும்?

“நான் சொல்வதைக் கவனியுங்கள். சோஃபியா ஓஸ்டஃப்யேவ்னாவை சந்திக்க வந்ததாகவே எடுத்துக் கொள்வோம். அவள் எங்கே போயிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் அந்த வீட்டில் அவள் இருக்கிறாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நீங்களும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தீர்கள்… அதே பக்கத்தில் நானும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்துத்தான் நான் என்னமோ ஏதோன்னு நினைக்க வேண்டியதாயிற்று… இங்கே பாருங்க… அந்தப் பெண்ணுக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன். அவள் அங்கேதான் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவளை நான் சந்திக்க வேண்டும்; அவளைப் பார்த்து இது எவ்வளவு அதிர்ச்சியான கேவலமான விஷயம்னு சொல்லனும். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.”

“ம்ம்ம்… புரிகிறது….”

“நான் ஒன்னும் நடித்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி எதையும் நினைச்சுக்க வேணாம். அவள் இன்னொருவரின் மனைவி! அவளுடைய கணவன் வோஸ்னெசன்ஸ்கி பாலத்தில் மீது நின்று கொண்டிருக்கிறான். அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க விரும்புகிறான். ஆனால் தைரியமில்லை. அதைச் சொன்னாலும் நம்பமாட்டான். எல்லாக் கணவர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள். (இங்கு அந்த ரக்கூன் கோட்டு அணிந்தவன் சிரிக்க முயற்சி எடுத்துக்கொண்டான்). “நான் அவனுடைய நண்பன். நான் எவ்வளவு மரியாதைக்குரிய மனிதன் என்பதை நீயே பார்க்கத்தானே செய்கிறாய். நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன்னு தெரியும். அது மாதிரி என்னால் இருக்க முடியாது.”

“ஓ…கண்டிப்பா இருக்க முடியாது…நல்லது…நல்லது….”

“எனவே நான் சொல்ல வருவது என்னன்னா…. அவளை நான் தேடிக்கிட்டு இருக்கேன். அந்தப் பணி எனக்குத் தரப்பட்டு இருக்கு. (மகிழ்ச்சி இழந்த அந்தக் கணவனால்தான்!!) ஆனால் எனக்குத் தெரியும். அந்த இளம்பெண் ஒரு ஏமாற்றுக்காரி. (பால் தே காக் அவளுடைய தலையணையில் கீழ்தானே கிடக்கிறான்) ஏதோ ஒரு பித்தலாட்டத்திற்காகத்தான் அவள் எங்கேயோ சென்று இருக்கிறாள்….. அந்தச் சமையல்காரி அவள் இங்குதான் வருகிறாள் என்று சொன்னதை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதைக் கேட்டதுதான் தாமதம். பைத்தியம் பிடித்தவனைப் போல நான் கிளம்பி ஓடி வந்தேன். அவளைப் பிடிக்க வேண்டும். எனக்கு ரொம்ப நாளாகச் சந்தேகம் இருந்தது. அதனால்தான் உங்களிடம் கேட்க விரும்பினேன். நீங்கள் வேறு இங்கே நடந்துகொண்டிருந்தீர்களா…. நீங்கள்… நீங்கள்…. எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியல”

“ம்ம்ம் சொல்லுங்க… உங்களுக்கு என்ன வேண்டும்”.

“சரி… உங்களுடன் பழகும் பாக்கியம் எனக்கு இல்லை. நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நான் நினைக்கவில்லை. இருந்தாலும் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி.”

அந்த மனிதன் உணர்ச்சி மேலிட்டு, நடுங்கும் கைகளால் அந்த இளைஞனின் கைகளைப் பற்றிக்கொண்டு குலுக்கினான்.

“நாம் பேச ஆரம்பிக்கும்போதே நான் இதைச் செய்திருக்க வேண்டும். என்னமோ தெரியல எல்லா நல்ல பழக்கங்களும் மறந்து தொலைத்துவிட்டன” என்று கூறிக்கொண்டான்.

ரக்கூன் கோட்டு அணிந்தவனால் பேசும்போது நிதானமாக நின்று பேச முடியவில்லை. இளைஞனை ஒரு மாதிரியாகச் சலனத்துடனே பார்த்தவாறு நின்றான். அவனுடைய பாதங்கள் நிலைகொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருந்தன. மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதன் ஒருவன் இறுக்கமாகப் பற்றிக்கொள்வதைப் போல அவன் அந்த இளைஞனின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றான்.

“இங்கே பாரு….” என்று தொடர்ந்தான். நட்பு ரீதியாக உன்னை அழைக்க விரும்புறேன். அந்த உரிமையை எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னிக்கனும். நீ அந்தப் பக்கமாய் போய், தெருவுக்கு ஓரமாய், கீழே பின் கதவு இருக்கும். அங்கே போய் நடந்து கொண்டிரு. நான் இந்தப்பக்கம் முன்வாசல் பக்கம் நடந்து கொண்டிருக்கிறேன். அவளை நாம் தவற விட மாட்டோம். நான்தான் அவளைத் தவற விட்டு விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அவளை நான் தவறவிட்டு விடக்கூடாது. அவளைப் பார்க்க நேர்ந்தால் உடனே என்னைச் சத்தம் போட்டுக் கூப்பிடு… ஐயோ… நான் என்ன இப்படி பைத்தியமாகி விட்டேன். நான் சொல்லும் யோசனைகள் முட்டாள்தனமாகவும் செயல்படுத்த லாயக்கற்றதாகவும் இருப்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது”

“இல்லை… ஏன்… அப்படியெல்லாம் இல்லை… சரியாகத்தான் நடக்கும்”

“என்னைச் சாந்தப்படுத்த காரணங்களைக் கூறாதே.. எனக்கு மனது சரியில்லை. இந்த மாதிரி ஒரு நிலையில் நான் எப்போதும் இருந்ததில்லை. ஏதோ வாழ்க்கையில் செய்த பாவங்களுக்காக நான் சோதிக்கப் படுவது போல இருக்கிறது. நான்தான் பொறுப்பேற்க வேண்டும். உன்னிடம் நேரடியாகவும் மரியாதையுடனும் நான் நடந்துகொள்வேன் இளைஞனே… நீதான் அந்தக் காதலனோ என்று நான் நினைத்துவிட்டேன்”

“அதாவது, சுருக்கமாகச் சொல்ல விரும்பினால், நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினீர்கள். அதானே?”

“என் அன்புக்குரியவனே! நீ ஒரு மரியாதைக்குரிய மனிதன். நீ அவன்தான் என்ற சந்தேகத்திலிருந்து நான் வெகுதூரம் இருக்கிறேன். அந்த மாதிரியான சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு உன்னை அவமானப்படுத்த மாட்டேன். இருந்தாலும் மரியாதை நிமித்தமாக அந்தக் காதலன் நீ இல்லை என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு. போதும்”

“ஓ…ரொம்ப நல்லது…. மரியாதை நிமித்தம் நானும் சத்தியம் செய்கிறேன். நான் ஒரு காதலன்தான். ஆனால் உன்னுடைய மனைவியின் காதலன் அல்ல. இல்லையேல் இப்படி நான் தெருவில் நின்று கொண்டிருக்க மாட்டேன். இந்நேரம் அவளுடன் இருந்திருப்பேன்.”

“மனைவியா! யார் சொன்னது அவள் என்னுடைய மனைவி என்று இளைஞனே! நான் திருமணமாகாதவன். நான்…. அதாவது… நானும் ஒரு காதலன்தான்”

“வோஸ்னெசன்ஸ்கி பாலத்தில் யாரோ ஒரு கணவன் காத்துக்கொண்டிருக்கிறான் என்று சொன்னீர்களே”

“ஆமாம்…ஆமாம்…. அதாவது நான் ரொம்ப வெளிப்படையா பேசிக்கொண்டு இருக்கிறேன். அவ்ளோதான். என்ன வேறு சில விஷயங்களிலும் கொஞ்சம் பிணைப்பு இருக்கிறது. உனக்கே தெரியும் இளைஞனே! குணாதிசயங்களில் இருக்கும் ஒரு மிருதுத்தன்மை…. அதாவது …..”

“ஆமாம்… ஆமாம்…. உண்மைதான்…. உண்மைதான்…..”

“அதாவது…. நான் அவளுடைய கணவனே இல்லை….”

“ஓ… சந்தேகம் இல்லை. இருந்தும் உங்களுக்கும் மறைக்காமல் ஒன்றைச் சொல்ல வேண்டும். என்னுடைய மனதை நான் அமைதிப் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால்தான் இதுவரை உங்களிடம் மனம் விட்டு பேசிக்கிட்டு இருந்தேன். நீங்கள் என்னவோ என் வழியை மறித்துக்கொண்டு என்னை மனக் கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களை நான் மீண்டும் அழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன். இப்போது என் வழியை விட்டு தூரமாக ஒதுங்கி நிற்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். எனக்குக் கொஞ்சம் தனிமை தேவை. நானும் ஒருவருக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

“கண்டிப்பாக… கண்டிப்பாக… நான் தூரப்போய் விடுகிறேன். அன்பு ததும்பி பொறுமையின்றி தவிக்கும் உன் இதயத் துடிப்பை நான் மதிக்கிறேன். இந்த நேரத்தில் நீ என்ன உணருகிறாய் என்பதை என்னால் உணர முடிகிறது.”

:ஓ… சரி… சரி….”

“மீண்டும் சந்திக்கும்வரை விடை பெறுகிறேன். ஆனால் மன்னித்துக் கொள்ளவும். மறுபடியும் கேட்கத் தோன்றுகிறது. எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. சத்தியப்பிரமாணம் போல, ஒரு நேர்மையானவனா, அந்தப் பெண்ணின் காதலன் நீ இல்லை என்ற ஒரு வார்த்தையை மட்டும் என்னிடம் சொல்லிவிட்டுப் போ.”

“நண்பா… என் மீது கொஞ்சம் கருணை காட்ட மாட்டாயா”

“ஒரே ஒரு கேள்வி மட்டும். கடைசிக் கேள்வி. அந்தப் பெண்ணின் கணவனின் குடும்பப் பெயர் என்னவென்று உனக்குத் தெரியுமா? அதாவது, உன்னுடைய பக்திக்குப் பாத்திரமான அந்தப் பெண்ணைத்தான் கேட்கிறேன்.”

“கண்டிப்பாக… எனக்குத் தெரியும். அது உனது பெயர் கிடையாது. அதைப் பற்றி அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

“ஏன்…. என்னுடைய பெயர் உனக்கு எப்படித் தெரியும்?”

“நீ இங்கிருந்து கிளம்பினால் நல்லது. உனக்கு நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறது. ஆயிரம் முறை அவள் தப்பிவிட வாய்ப்பு இருக்கிறது. உனக்கு என்னதான் வேண்டி இருக்கிறது? நீ தேடும் பெண் நரி ரோமத்தாலான தொப்பியும் ஒரு தலைக் காப்பானும் அணிந்து இருப்பாள். என்னுடையவள் சால்வையாக ஒரு நீண்ட அங்கியும், வெளிறிய நிறத்திலான ஊதா வெல்வட் தொப்பியும் அணிந்து இருப்பாள். போதுமா? வேறு என்ன வேணும்?”

“வெளிறிய நிறத்திலான ஊதா வெல்வெட் தொப்பியா? சால்வையாக ஒரு நீண்ட அங்கியும், வெளிறிய நிறத்திலான ஊதா வெல்வெட் தொப்பியுடன் இருந்தாளா?” பிடிவாதம் கொண்ட அவன் மீண்டும் திரும்பி அவனைப் பார்த்துச் சத்தமாகக் கேட்டான்.

“ஐயோ! அதை விட்டுத் தொலையேன்……..இருக்கலாம். என்னுடையவள் இங்கே வரப்போவதில்லை”

“அப்படியென்றால் அவள் எங்கே இருக்கிறாள்?— உன்னோட பெண்ணைப் பற்றித்தான் கேக்கிறேன்.”

“அது உனக்குத் தெரிய வேண்டுமாக்கும்? அதைத் தெரிந்து என்ன செய்யப் போறே?”

“எனக்குத் தெரிய வேண்டும். எனக்கு இன்னும் ……”

“அச்சோ! கொஞ்சம் கருணை காட்டு! உனக்கு நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதா? நல்லது… என்னவளுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். தெருவைப் பார்த்த மாதிரி இருக்கும் அந்த மூன்றாவது மாடியில்தான் அவர்கள் இருக்கிறார்கள். இப்ப அவர்கள் பெயர்கள் என்ன என்று கேட்பாய் பார்”

“அடக் கடவுளே! மூன்றாவது மாடியில் எனக்கும்கூட நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த ஜன்னல் கூட தெருவைப் பார்த்த வண்ணம் இருக்கிறது…. ஜெனரல்……”

“ஜெனரலா?”

“ஆமாம் ஜெனரல்தான். உனக்கு விருப்பமிருந்தால் அது எந்த ஜெனரல் என்று சொல்கிறேன். அது வந்து…. ஜெனரல் போலோவிட்ஸின்”

“அப்படிச் சொல்லாதே….இல்லை….அது அந்த ஆள் இல்லை (ஐயோ! உளறிட்டேனே…உளறிட்டேனே!)

“அந்த ஆள் இல்லையா”

“இல்லை…அந்த ஆள் இல்லை”

இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்தவாறு நின்றார்கள்.

“ஏன் என்னை அப்படி உற்றுப்பார்க்கிறாய்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீண்டவனாய் விரக்தியுடன் நம்பிக்கை தளர்ந்த குரலில் இளைஞன் கேட்டான்.

அந்த மனிதன் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தான்.

“எனக்கு…. எனக்கு அது தெரிந்தாக வேண்டும்”

“வா…என்னைப் பேச விடு…என்னைப் பேச விடு….இப்ப நாம் கொஞ்சம் விதண்டாவாதம் இல்லாமல் பேசுவோம். இது நம் இருவரையும் பற்றியது. எனக்கு விளக்கமாகச் சொல். இங்கே உனக்கு யாரைத் தெரியும்?”

“நீ யாரைக் கேட்கிறாய்? என்னுடைய நண்பர்களையா?

“ஆமாம். உன்னுடைய நண்பர்களைத்தான்”

“நல்லது….நான் சந்தேகித்தது சரி என்பது உன்னுடைய கண்களைப் பார்த்ததிலிருந்தே தெரிகிறது.”

“அதை விட்டுத் தொலைக்க மாட்டாயா? இல்லை…அப்படிச் சொல்லாதே! நீ என்ன குருடா? உனக்கு முன்னால்தானே நான் நின்று கொண்டிருக்கிறேன். நான் அவளுடன் இல்லை. எப்படியோ! நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை”

கழிவிரக்கம் கொண்டவனாய் கைகளை ஆட்டிக்கொண்டு அந்த இளைஞன் இருமுறை கோபமாகத் திரும்பினான்.

“ஓ…நான் ஒன்றும் சொல்லவில்லை. சத்தியம் செய்கிறேன். ஒரு மரியாதைக்குரிய மனிதன் என்ற முறையில் அதையெல்லாம் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன். முதலில் என்னுடைய மனைவி இங்கே தனியாக வருவது வழக்கம். அவர்கள் அவளுடைய உறவுகள்தான். எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. நேற்று மேதகு இளவரசனைச் சந்தித்தேன். மூன்று வாரங்களுக்கு முன்பே அவர் இந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டார் என்று சொன்னார். என்னுடைய மனை….அதாவது, என்னுடைய மனைவி அல்ல, யாரோ ஒருவரின் மனைவி (வோஸ்னெசன்ஸ்கி பாலத்தில் நிற்கும் கணவனின்). அவர்களுடன் நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்ததாகச் சொன்னாள். அதாவது, இளவரசனின் வீட்டில் பாபினிட்ஸின் என்ற இளைஞன் குடிவந்திருப்பதாக அந்தச் சமையல்காரி என்னிடம் சொன்னாள்.

“ஐயோ! போச்சு…கருமமே! எல்லாம் போச்சு”

“அன்பானவனே! எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனக்குள் அபாய மணி ஒலிக்கிறது”

“அதை விட்டுத் தொலை. உனக்குப் பயமாக இருந்தால் என்ன? அபாய மணி ஒலித்தால் என்ன? ஆஹ்….அங்கே பாரு…எவனோ ஒருவன் நழுவுறான் பாரு….அதோ அங்கேதான்.”

“எங்கே! எங்கே!…இவான் ஆன்ரேயிட்ச்ன்னு கத்து….நான் ஓடுகிறேன்.”

“சரி….சரி…நல்லா குழப்பு….இவான் ஆன்ரேயிட்ச்!”

“இங்கேதான் இருக்கேன்.” பலமாக மூச்சிறைத்தபடி கத்திக்கொண்டே திரும்பி வந்தான் இவான் ஆன்ரேயிட்ச். என்ன! என்னாச்சு! எங்கே!”

“ஒண்ணுமில்லை….சும்மாதான் கூப்பிட்டேன். அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள கூப்பிட்டேன்.

“கிளாஃபி…”

“கிளாஃபிரா?”

“இல்லை…கிளாபிரா இல்லை….மன்னிக்கவும். உன்னிடம் அவளுடைய பெயரைச் சொல்ல முடியாது”

இதைச் சொல்லும்போது மரியாதைக்குரியவன் என்று சொல்லிக்கொண்டவன் வெள்ளைத்தாளைப் போல வெளிறிப் போய் நின்றான்.

“ஓ…நிச்சயமாக அவள் கிளாஃபிரா இல்லைதான். அது கிளாஃபிரா இல்லை என்பது எனக்குத் தெரியும். என்னுடையவள் கிளாஃபிராவும் கிடையாது. அப்படியென்றால் யாருடன் அவள் இருக்கிறாள்?”

“எங்கே?”

“அங்கேதான். ஐயோ கருமமே…கருமமே…(அந்த இளைஞனுக்குக் கோபம் தலைக்கேறியது. அவனால் நிலையாக நிற்கக் கூட முடியவில்லை)

“அங்கே பாரு….அவளுடைய பெயர் கிளாபிரா என்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“ஓ…இந்தக் கருமம் வேறா…உனக்கு வேறு தொல்லை கொடுத்துவிட்டேனே! ஏன்? உன்னுடையவள் பெயர் கிளாபிரா இல்லை என்கிறாயா?”

“என்ன சார்! இப்படித்தான் பேசுவதா?”

“அட பிசாசே! என்னமோ அது முக்கியம் மாதிரி…யார் அவள்? உன்னுடைய மனைவியா?”

“இல்லை….எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் துயரத்தில் இருக்கும் மதிப்புக்குரிய மனிதன் ஒருவனின் மீது பிசாசை அள்ளி அள்ளி எறிந்து கொண்டிருக்க மாட்டேன். நான் ஒரு மேன்மை தங்கிய மனிதன் என்று என்னைச் சொல்ல மாட்டேன். ஆனால் கல்வி கற்றவன் என்று என்னால் சொல்ல முடியும். நீ என்னடா வென்றால் பிசாசு பிசாசு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாய். “

“உண்மையைச் சொல்வதென்றால் பிசாசு விழுங்கத்தான் போகிறது. அதுதான் நீ இங்கே நிற்கிறாய். சொல்வது புரிகிறதா?”

“கோபம் உன் கண்களை மறைத்துக்கொண்டு இருக்கிறது. நான் ஒன்றும் சொல்ல வில்லை. அங்கே பார். யார் அது?”

“எங்கே?”

அங்கே கூக்குரலும் யாரோ சிரிக்கின்ற சத்தமும் கேட்டது. இரண்டு அழகான பெண்கள் படிக்கட்டிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். இரண்டு பேரும் அந்தப் பெண்களை நோக்கி ஓடினார்கள்..

“ஐயோ!! இதென்ன அநாகரீகம். உங்களுக்கு என்ன வேண்டும்?”

“நீங்கள் எங்கே போகிறீர்கள்?”

“நாம் தேடி வந்தவர்கள் இவர்கள் இல்லை”

“ஓஓ….நீ தவறானவர்களைப் பிடித்துக்கொண்டாயோ! டாக்சி!”

“நீங்கள் எங்கே போக வேண்டும் மேடம்?”

“போக்ரோவ் போக வேண்டும். அன்னுஷ்கா…உள்ளே வா…நான் உன்னை கூட்டிட்டுப் போறேன்.”

“ம்ம்ம். நான் அந்தப் பக்கம் உட்கார்ந்துக்கிறேன். சீக்கிரமா போகணும்”

டாக்சி அங்கிருந்து நகர்ந்தது.

“இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?”

“நண்பனே!.அங்கே நாமும் போயிருக்கலாம் இல்லையா?”

“எங்கே?”

“வேறு எங்கே? பாபினிட்ஸின் இடத்துக்குத்தான்…”

“இல்லை… அந்தப் பேச்சுக்கே இடமில்லை”

“ஏன்?”

“நான் அங்கே போவேன். போனபிறகு அவள் இன்னொரு கதையைச் சொல்வாள். அப்படிச் சொல்லித் தப்பித்து விடுவாள். அப்புறம் என்னைக் கையும் களவுமா வேறு எவளோடவாவது பிடிப்பதற்காகத்தான் அங்கே வந்தேன் என்று புளுகுவாள். அப்புறம் எனக்குப் பிரச்சினைகள் அதிகரிக்கும்”

“அவள் அங்கே இருக்கலாம். ஆனால் நீ எதற்கு ஜெனரல் வீட்டுக்குப் போக விரும்புறே? அதுவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல்?”

“உனக்குத்தான் தெரியுமே. அவன் அங்கே இருந்து வெளியேறிவிட்டான்.”

“அதைப் பற்றிக் கவலை இல்லை. அவள் அங்குதான் சென்றிருக்கிறாள். உனக்குத் தெரியுமா? நீயும் அங்கே போ. உனக்குப் புரியவில்லையா? ஜெனரல் அங்கே இருந்து வெளியேறிவிட்டான் என்பதைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாதே. உன்னுடைய மனைவியை அழைத்து வருவதற்காக நீ அங்கே வந்திருக்கிறாய் என்பன போன்ற காரணங்களைச் சொல்லிக்கொள்”

“அப்புறம்”

“அதுக்கு அப்புறம் பாபியிட்ஸினின் வீட்டில் உனக்குத் தேவைப்படும் ஆளைக் கண்டுபிடி. ப்பூபூ…உனக்கு ஒண்ணும் ஆகித்தொலைக்க மாட்டேங்குது பாரு. எவ்வளவு அறிவு கெட்டவனாக இருக்கே நீ”

“நான் கண்டுபிடிக்கிறதுல உனக்கு என்ன பிரயோஜனம்” சொல்லு…சொல்லு”

“என்ன…என்ன….மறுபடியும் பழைய மாதிரி பேசக் கிளம்பிட்டே? ஓ….கடவுளே!…என் மீது இரக்கம் காட்ட மாட்டாயா? நீ வெட்கப்பட வேண்டும். உன்னை நினைத்தாலே கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒரு அடி முட்டாள் நீ”

“ஆமாம். அது இருக்கட்டும். ஆனால் அங்கே போவதில் உனக்கு ஏன் இவ்வளவு ஈடுபாடு?. அங்கே போய் நீ கண்டுபிடிக்கப் போவது இதைத்தானே?”

“எதைக் கண்டுபிடிக்கப் போகிறேன்? எதை? சாபம் ஏதாவது உன்னை வந்து கவ்வாதா? உன்னைப் பற்றி நினைக்க இப்போது என்னிடம் ஒன்றுமில்லை. நான் தனியாகவே போய்க்கொள்கிறேன். நீ கிளம்பு. பார்த்துப் போ. என் பார்வையிலிருந்து தொலைந்து போ”

“என் அன்பானவனே ! ஏறக்குறைய நீ உன்னையே மறந்துவிடுகிறாய். ரக்கூன் கோட்டிலிருந்த மனிதன் அங்கலாய்ப்புடன் கூறினான்.

“அப்படியா? எப்படி” நான் என்னை மறந்தால் என்னவாகும்?” என்று பற்களைக் கடித்தவாறு கோபத்துடன் ரக்கூன் அணிந்தவனை நோக்கி வந்தான் அந்த இளைஞன். “என்னவாகும் சொல். யாருக்கு முன்னால் என்னை நான் மறந்து போகிறேன்? முஷ்டியை மடக்கிக் கொண்டு உறுமினான் அவன்.

“கொஞ்சம் பேச விடுங்க நண்பரே!”

“அது இருக்கட்டும். யார் முன்பாக என்னை நான் மறக்கிறேன் என்பதைக் கேட்க நீ யார்? உன்னுடைய பெயர் என்ன?”

“அதைப் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது இளைஞனே! என்னுடைய பெயர் உனக்கு எதற்கு?…அதை உனக்கு நான் இப்போது சொல்ல முடியாது. உன்னுடன் நான் வருவதுதான் சிறந்தது. சரி…வா…நாம் கிளம்பலாம். நான் பின்னடைய மாட்டேன். நான் எதற்கும் தயார்…..ஆனால் உனக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். பெரிய பணிவுக்கும் மரியாதைக்கும் நான் தகுதியானவன். என்னவானாலும் நீ உனது தன்னிலையை மறக்கும் அளவுக்குப் போகக் கூடாது. எதன் பொருட்டாவது உனக்கு மனக் கஷ்டம் இருந்தால்- அது என்னவென்று என்னால் யூகிக்க முடியும்- உன்னை நீ மறக்க வேண்டிய நிலைக்குப்போக வேண்டிய அவசியம் இல்லை. நீ இன்னும் மிகவும் மிகவும் வயதில் சிறியவன்.”

“நீ வயதானவனாக இருப்பதில் எனக்கென்ன பயன்? அது உப்புக்குப் பிரயோசனம் இல்லாத ஒன்று. இங்கிருந்து போய்விடு. இங்கே எதற்கு நடனமாடிக்கொண்டிருக்கிறாய்?”

“இல்லை..உன்னுடன்தான் நான் இருப்பேன். நீ என்னை விட்டுப்போய் விட முடியாது. இந்த விஷயத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நான் உன்னுடன் வந்துதான் தீருவேன்.”

“ரொம்ப நல்லது. ஆனால் அமைதியாக வா. வாயைப் பொத்திக்கொண்டு இருந்தால் நல்லது.”

அவர்கள் இருவரும் படியேறிப் போனார்கள். அப்புறம் மூன்றாவது மாடிக்குப் படி இறங்கி வந்தார்கள். இருட்டாக இருந்தது.

“நில்லு…தீப்பெட்டி இருக்கா?”

“தீப்பெட்டி? எந்தத் தீப்பெட்டி?”

“நீ சிகரெட்டு பிடிப்பாயா?”

“ஓ…ஆமா ஆமா …என்கிட்டே இருக்கு. இதோ இந்தா இருக்கு” ரக்கூன் கோட்டு மனிதன் குழப்பத்தில் உளறியபடி தந்தான்.

“ப்ப்பூ…இப்படியுமா அறிவுகெட்டுத் திரிவாய்? சாபக்கேடு! இதுதான் கதவுன்னு நினைக்கிறேன்.”

“இதுதான்…இதுதான்…இதுதான்…”

“இது..இது..இது…ஏன் இந்தக் காட்டுக் கத்தல் கத்துறே? உஷ்…”

“அன்பானவனே! என்னுடைய உணர்வுகளை அடக்குகிறேன். நீ என்னவோ இப்படி தான்தோன்றியா நடந்துக்கிறே…அங்கேதான்”

வெளிச்சம் பரவியது.

“ஆமா…இங்கேதான். இங்குதான் பித்தளைத் தட்டு இருக்கிறது. இது பாபினிட்ஸினின் வீடுதான். பாபியிட்ஸின் படிக்க முடிகிறதா?”

“முடியுது…முடியுது….”

“உஷ்ஷ்ஷ்”

“ஏன்..? வெளியே போய்ட்டானா?”

“ஆமா…வெளியே போய்ட்டான்.”

“கதவைத் தட்டலாமா?”

“ஆமா…தட்டத்தானே வேணும்”- ரக்கூன் கோட்டு மனிதன் சொன்னான்.

“அப்ப நீயே தட்டு”

“இல்லை…நான் எதுக்குத் தட்டணும்? நீதானே தொடங்கி வச்சே! நீயே தட்டு”

“பயந்தாங்கொள்ளி”

“நீதான் பயந்தாங்கொள்ளி”

“எங்காவது போய்த்தொலைய மாட்டாயா?”

“என்னுடைய ரகசியம் எல்லாத்தையும் உன்ட்டே சொன்னதுக்கு ரொம்ப வருந்துறேன்….நீ ஒரு….”

“நான்!!….ம்ம்ம் சொல்லு சொல்லு…நான் என்ன?”

“என்னுடைய துயரத்தை நீ உனக்குச் சாதகமாகப் பயன்படுத்துறே. எனக்கு மனக்கஷ்டங்கள் இருப்பது உனக்குத்தெரியும்”

“ஆனால் அதைப் பத்தி நான் கவலைப்பட்டேனா? உன்னுடைய கவலை எல்லாம் வெறும் கேலிக்கூத்து…அவ்வளவுதான் அதைப் பத்தி சொல்ல முடியும்.”

“நீ எதுக்கு இங்கே வந்தே?”

“அது சரி…நீ மட்டும் எதுக்கு இங்கே வந்தே?

“ரொம்ப ஒழுக்கம்” என்று ரக்கூன் கோட்டு மனிதன் கோபத்துடன் சொன்னான்.

“ஒழுக்கம் பற்றி ஏதோ சொல்றே? நீ என்ன பெரிய இவனா?”

“நல்லது…இது நெறிகளுக்குப் புறம்பானது”

“எது?”

“நீதானே அப்படி நினைக்கிறே.! ஏமாற்றப்பட்ட கணவன்கள் எல்லோரும் உன்னைப் பொறுத்தவரை வெறும் நூடுல்ஸ்தானே?”

“ஏன் அப்படி கேக்குறே? நீ என்ன கணவனா? வோஸ்னெசன்ஸ்கி பாலத்தில் நின்று கொண்டிருப்பவனையல்லவா நான் கணவன் என்று நினைச்சுகிட்டு இருக்கேன். அப்ப அதுக்கும் உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நீ எதுக்கு இதுல தேவை இல்லாம தலையிடுறே?”

“அந்தக் காதலன் நீதான்னு நான் நினைக்கிறேன்.”

“இங்கே பாரு: இதே ரீதியில் நீ பேசிக்கொண்டு இருந்தால் உன்னை நான் நூடுல்ஸ் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கும். யாரைச் சொல்கிறேன்னு தெரியுதா?”

“அதாவது நான்தான் அந்தக் கணவன் என்று சொல்ல வருகிறாய்.” சுடு தண்ணீர் ஊற்றிய மாதிரி ஓரடி பின்னோக்கி நகர்ந்தான், ரக்கூன் கோட்டு அணிந்தவன்.

“உஷ்ஷ்….வாயை மூடு…சொல்றது கேக்குதா?”

“”இது அவள்தான்.”

“இல்லை”

“ப்ப்பூபூ…எவ்வளவு இருட்டா இருக்கு!”

கொஞ்சம் அமைதி நிலவியது. பாபியிட்ஸின் வீட்டில் காதில் கேட்கும்படியான சிறு சத்தம் வெளிவந்தது.

“நாம் எதுக்குச் சண்டை போட்டுக்கொள்கிறோம்? என்று வினவினான் ரக்கூன் கோட்டு மனிதன்.

“என்ன சொன்னாலும் குறை கண்டு கடுப்பேற்றுகிறாய். அதான்.”

“ஆனால் நீயும் என்னுடைய பொறுமையைத் தேவைக்கு அதிகமாகச் சோதிக்கிறாய்?

“வாயை மூடு”

“நீ மிகவும் வயதில் இளையவன் என்பதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும்.”

“வாயை மூடு”

“இருந்தாலும் நீ சொன்ன இந்த மாதிரி நிலையில் இருக்கும் கணவன் ஒருவன் நூடுல்ஸ் மாதிரிதான் என்ற வார்த்தையை நானும் ஒப்புக்கொள்கிறேன்.”

“கடவுளே! கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா?”

“இந்த மாதிரியான துரதிர்ஷ்டவசமான கணவனுக்கு ஏன் இந்த மாதிரியான காட்டுமிராண்டித் தனமான தண்டனை?”

“அது அவள்தான்.”

அந்த நேரம் பார்த்து சத்தம் கொஞ்ச நேரம் நின்றது.

“அது அவள்தானா?”

“அவளேதான்…அவளேதான்…ஆனால் அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? அது உன்னுடைய பிரச்சினை இல்லையே!”

“அன்பானவனே! அன்பானவனே! ரக்கூன் கோட்டு மனிதன் தனக்குள் முனகிக் கொண்டான். முகம் வெளுத்தவனாய் எச்சில் விழுங்கினான். எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு. என்னோட பரிதாபமான நிலையை நீயே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய். இப்போது இது இரவு…நாளைக்கு நாம் சந்திக்க வேண்டிய அவசியம் வராமல் போகலாம். எனக்கென்ன உன்னைச் சந்திக்க பயமா என்ன? மேலும்…பிரச்சினை எனக்கு இல்லை. வோஸ்னெசன்ஸ்கி பாலத்தில் காத்திருக்கிறானே என்னுடைய நண்பன்…அவனுக்குத்தான் பிரச்சினை……இது அவனுடைய மனைவி……இன்னொருவனின் மனைவி…பாவப்பட்ட ஜென்மம். அவனை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். நீ கேட்பதாய் இருந்தால் அதைப் பத்தி எல்லாம் உன்னிடம் சொல்கிறேன். நான் அவனுடைய மிக நெருங்கிய நண்பன். பார்த்தாலே தெரியுது இல்லையா! இல்லையென்றால் அவன் பொருட்டு இந்த மாதிரியான சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிப்பேனா? நீயே பார்க்கத்தானே செய்கிறாய். பலமுறை அவனிடம் தலையில் அடித்துச் சொன்னேன். எதுக்குடா உனக்குக் கலியாணம் என்று? நல்ல பதவி இருக்கிறது. நல்ல சொத்துபத்து இருக்கிறது. நல்ல அந்தஸ்தும் இருக்கிறது. இந்தச் சரச வலையில் போய் ஏன் விழுகிறாய் என்று கேட்டேன். அவன் சொன்னதை நீ கேட்டிருக்க வேண்டும். “நான் திருமணம் செய்துகொண்டுதான் ஆக வேண்டும். குடும்பஸ்தனுக்குக் கிடைக்கும் ஒரு வரம் அது என்றான். இந்தா! அழகான குடும்பஸ்தன் வரம் அவனுக்குக் கிடைச்சிருக்கு பாரு. அந்த நாட்களில் பல கணவன்மார்களை அவன் ஏமாற்றி இருக்கிறான். இப்போ உப்பைத் தின்னுட்டு தண்ணி குடிக்கிறான். இதை நான் சொல்வதற்காக என்னை மன்னிக்கனும். இந்த விளக்கம் முற்றிலும் தேவையானது. அவன் ஒரு துரதிர்ஷ்டசாலி….இப்ப உப்பைத் தின்னுட்டுத் தண்ணி குடிக்கிறான். இதைச் சொல்லும்போது ரக்கூன் கோட்டு மனிதன் எச்சில் விழுங்கினான். அவன் நிஜமாக அழுவது தெரிந்தது.

“ஆஹ்….சாபம் உங்கள் எல்லோரையும் விழுங்காதா! இப்படி எத்தனை முட்டாள்கள் திரிகிறீர்கள்? அதுல நீ யாரு?”

அந்த இளைஞன் நற நறவென்று பற்களைக் கடித்துக் கொண்டான்.

“மறுபடியும் பாரு….உனக்கே தெரியும் உன்னிடம் நான் எவ்வளவு நாகரீகமாக நடந்து கொள்கிறேன். வெளிப்படையா சொல்றேன். நீ என்னடான்னா இப்படி எடுத்தெறிஞ்சு பேசுறே?”

“ம்ம்ம்ம் அதிருக்கட்டும்…உன்னோட பெயர் என்ன?”

“நீ ஏன் என்னுடைய பெயரைத் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?”

“ஆஹ்”

“என்னுடைய பெயரைச் சொல்ல முடியாது”

“உனக்கு ஷாப்ரின் யாருன்னு தெரியுமா?” அந்த இளைஞன் வேகமாகக் கேட்டான்.

“ஷாப்ரின்”..!!

“ஆமா ஷாப்ரின் தான். (இதைச் சொல்லும்போது மடிப்புக் கோட்டு அணிந்த இளைஞன் ரக்கூன் கோட்டு அணிந்தவனைப் போல நையாண்டி செய்து காண்பித்தான்.) புரியுதா?”

“இல்லை…எந்த ஷாப்ரின்… “குழப்பத்துடன் கேட்டான் ரக்கூன் கோட்டு மனிதன். “அது ஷாப்ரின் கிடையாது. அவன் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவன். பொறாமை தந்த துன்பத்தால் நீ கிறுக்குத்தனமாகப் பேசுவதை நான் மன்னித்துவிடுகிறேன். “

“அவன் ஒரு பொறுக்கி…இரக்கமில்லாத ஆத்மா. லஞ்சம் வாங்குகிற காட்டான். அரசாங்க பணத்தைத் திருடுபவன். ரொம்ப நளைக்கு இப்படி இருக்க முடியாது…ஒருநாள் செத்தொழிவான் பாரு…”

“மன்னிக்கணும்….வெளிறிய முகத்துடன் சொன்னான் ரக்கூன் கோட்டு மனிதன். “உனக்கு அவனைத் தெரியாது. நீ சொல்வதைப் பார்க்கும்போது அவரைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாது என்று தெரிகிறது.”

“உண்மைதான். தனிப்பட்ட முறையில் அவனைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவனோடு அருகில் இருப்பவர்கள் சொல்லக் கேட்டதுதான்.”

“யாரிடம் இருந்து சார்?…….என்னை பாருங்க…எனக்கு டென்ஷனை உண்டு பண்ன வேண்டாம்.”

“ஒரு முட்டாள். பொறாமை கொண்ட மூடன். மனைவியைப் பார்த்துக்கொள்ளத் தெரியாதவன். அவன்தான் அது. போதுமா. இதுதானே உனக்கு வேண்டும்?”

“மன்னிக்கனும். நீ மிக மிக மோசமாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”

“ஓ…”

“ஓ…”

பாபினிட்ஸின் வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டது. கதவு திறந்தது. குரல்கள் கேட்டன.

“ஓ…இது அவள் இல்லை. அவளுடைய குரல் எனக்குப் பரிச்சயம். இப்போது எல்லாம் எனக்குப் புரிகிறது. இது அவள் இல்லை” என்று வெள்ளைத்தாளைப் போல வெளுத்துப்போன முகத்துடன் சொன்னான் ரக்கூன் அணிந்த மனிதன்.

“உஷ்ஷ்”

அந்த இளைஞன் சுவரோடு சாய்ந்து கொண்டான்.

“அன்பானவனே! நான் கிளம்புகிறேன். இது அவள் இல்லை”

“அது சரி…அப்ப கிளம்ப வேண்டியதுதானே”

“அப்ப நீ மட்டும் எதுக்கு இங்கேயே இருக்கே?”

“அதைப்பத்தி உனக்கென்ன கவலை”

கதவு திறந்தது. ரக்கூன் கோட்டு அணிந்த மனிதன் தலைதெறிக்க படியில் இறங்கி கீழே ஓடினான்.

ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் அந்த இளைஞனைக் கடந்து சென்றார்கள். அவனுடைய இதயமே நின்று போனது போல இருந்தது. அவன் கேட்ட பெண்ணின் குரல் பரிச்சயமான ஒன்றாக இருந்தது. ஆணின் குரல் கரகரப்பாகச் சுத்தமாகப் பழக்கமில்லாததாக இருந்தது.

“ஒன்றும் கவலைப்படாதே! இன்னொரு சறுக்கு வண்டி ஏற்பாடு செய்கிறேன்.” என்றது கரகரப்பான குரல்.

“நல்லது… நல்லது…செய்யுங்கள் “

‘இங்கேயே அது வந்துடும்”

அந்தப் பெண்மணி தனித்து விடப்பட்டாள்.

“கிளஃபிரா ! உன்னுடைய சத்தியங்கள் என்னவாயிற்று?” மடிப்புடன் கூடிய கோட்டு அணிந்தவன் அந்தப் பெண்ணின் தோள்களைப் பற்றிக்கொண்டு கத்தினான்.

“ஓ…யார் அது….துவோரோகோவ்தானே நீ! அடக் கடவுளே!…இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”

“இங்கே நீ யாருடன் தங்கி இருக்கிறாய்?”

“எதற்குக் கேட்கிறாய்? என்னுடைய கணவனுடன்தான். முதலில் இங்கிருந்து போ…போய் விடு. என் கணவர் நேராக இங்கேதான் வருவார். போலோவிட்ஸினைப் பார்த்துவிட்டு……இங்கிருந்து போய் விடு…ஏதாவது நடக்கும் முன் இங்கிருந்து போய்விடு”

“போலோவிட்ஸின் இங்கிருந்து போய் மூன்று வாரங்களாகி விட்டன. எனக்கு எல்லாம் தெரியும்”

“ஐயோ! அந்தப் பெண் கீழே ஓடினாள். இளைஞன் அவளை முந்திக்கொண்டு நின்றான்.

“உனக்கு யார் சொன்னது?”

“உன்னுடைய கணவன் இவான் ஆன்ரேயிட்ச்தான் மேடம். உனக்கு முன்னால் அவர் இங்கேதான் இருக்கிறார்”

நிஜமாகவே இவான் ஆன்ரேயிட்ச் முன்வாசல் கதவில் நின்று கொண்டிருந்தான்.

“ஐயோ! நீயா?” என்று கத்தினான் ரக்கூன் கோட்டு மனிதன்.

“ஆஹ்…நீயா! போலித்தனமில்லாத ஒரு துள்ளலுடன் அவனைப் பார்த்துக் கத்திக்கொண்டு நெருங்கினாள் கிளாஃபிரா பெட்ரோவ்னா. “அன்பே! எனக்கு என்னவெல்லாம் நடந்தேறி விட்டது என்பது உனக்குத் தெரியாது. மரியாதை நிமித்தம் நான் போலோவிட்ஸினைப் பார்க்கப் போயிருந்தேன். உனக்குத்தான் தெரியுமே..இஸ்மாயிளோவ்ஸ்கி பாலத்திற்கு அருகில் அவர்கள் இருக்கிறார்கள். நான் இதை உனக்குச் சொல்லி இருக்கிறேன். உனக்கு நினைவு இருக்கிறதா? சறுக்கு வண்டி ஒன்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழியில் குதிரைகள் மிரண்டுவிட்டன. வண்டியை உடைத்துவிட்டன. அங்கிருந்து நூறு அடிதூரம் தூக்கி வீசப்பட்டேன். வண்டிக்காரனும் எங்கோ போய் விழுந்துவிட்டான். அதிர்ஷ்டவசமாக மிஸ்டர் துவோரோகோவ்தான்…..”

“என்ன சொல்றே”

மிஸ்டர் துவோரோகோவ் இறுகிப்போன பாறை மாதிரி நின்று கொண்டிருந்தான். மிஸ்டர் துவோரோகோவ் மாதிரி அவன் தெரியவில்லை.

“மிஸ்டர் துவோரோகோவ் தான் என்னைப் பார்த்தார். அவர்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தது. இப்ப நீ இங்கே இருக்கிறாய். உனக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை மட்டும்தான் கூற முடிகிறது இவான் இலியிட்ச்”.

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்று கொண்டிருந்த இவான் இலியிட்சை நோக்கித் தனது கைகளை நீட்டினாள். அவள் அதை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள் என்பதை விட அதைக் கிள்ளினாள் என்பதே பொருந்தும்.

“மிஸ்டர் துவோரோகொவ் எனக்குத் தெரிந்தவர்தான். ஸ்கொர்லோபோவ் நடனத்தின் போதுதான் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். உனக்கு இதை நான் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கோகோ! உனக்கு நினைவிருக்கிறதல்லவா?”

“ஆ…கண்டிப்பா…கண்டிப்பா….நல்லா நினைவு இருக்கிறது”- கோகோ என்று அழைக்கப்பட்ட ரக்கூன் கோட்டுக்காரன் சொன்னான். “ரொம்ப சந்தோசம்….ரொம்ப சந்தோசம்….”என்று மிஸ்டர் துவோரோகொவின் கைகளை ஆதரவாகப் பிடித்துக்கொண்டான்.

“யார் இவர்கள்? இதெல்லாம் என்ன கூத்து?நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றது கரகரப்பான குரல்.

மிகவும் நன்றாக உயரமாக வளர்ந்த உருவம் ஒன்று அந்தக் கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்றது. பிடிகள் அமைந்த தனது கண்ணாடியை எடுத்துவிட்டு ரக்கூன் அணிந்தவனைக் கூர்ந்து பார்த்தார் அவர்.

“ஆஹ்…மிஸ்டர் பாபினிட்ஸின்!…..” அவளிடம் இருந்து வார்த்தைகள் சிதறியது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அப்பாடா என்ன ஒரு சந்திப்பு!! இப்பத்தான் சறுக்குவண்டி பிரச்சினையாகிப்போய் இங்கே வந்தேன். இந்தா இவர்தான் என்னோட கணவர். மிஸ்டர் பாபினிட்ஸின்…நாம் கார்போவின் நடனத்தில்…..”

“ஆஹ்….சந்தோசம்…ரொம்ப சந்தோசம்…சரி நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புறேன்.”

“சரி…நீங்கள் கிளம்புங்கள். எனக்கு இன்னும் பயம் தெளியவில்லை. இன்னும் தலைச்சுற்றல் நிற்கவில்லை. இன்று இரவு முகமூடி நடனத்தில்….என்று துவோரோகோவின் காதுகளில் கிசிகிசுத்தாள். “குட் பை…குட் பை….மிஸ்டர் பாபினிட்ஸின்! அனேகமாக நாம் நாளை கார்ப்போவின் பாலே நடனத்தின் போது சந்திக்கலாம்..”

“இல்லை…என்னை மன்னிக்கணும். நாளைக்கு நான் இருக்க மாட்டேன். நிலைமை இதே மாதிரி இருந்தால் நாளைக்குச் சந்திப்பதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. “பாபினிட்ஸின் பற்களுக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்ட மாதிரி எதையோ முனகினான். அவனது வண்டியில் ஏறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வண்டி ஒன்று வந்து நின்றது. அவள் அதில் ஏறிக்கொண்டாள். ரக்கூன் கோட்டுக்காரன் நின்றான். நகர முடியாமல் நிற்பதைப் போலத் தோன்றியது. மடிப்பு கோட்டு அணிந்தவனை வெறுமையாகப் பார்த்தான். மடிப்பு கோட்டு இளைஞனும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தான்.

“எனக்கும் ஒன்னும் புரியலயே”

“மன்னிக்கணும்…உங்களோட தொடர்பு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” ஒருவித ஆவலுடனும் கொஞ்சம் பயந்தவனுமாய் பதில் சொன்னான் அந்த இளைஞன்.

“சந்தோசமா..சந்தோசமா…?”

“உன்னோட பூட்ஸ் தொலைஞ்சு போயிருச்சுன்னு நினைக்கிறேன்”

“ஆமா…ரொம்ப நன்றி. நன்றி….ரப்பர் பூட்ஸ் ஒன்னு வாங்கணும்”.

“ரப்பர் பூட்ஸ் போட்டா பாதம் ரொம்ப சூடாகும்”- ஏதோ ஆர்வ மிகுதியில் இளைஞன் சொன்னான்.

“நண்பா! நீயும் வர்ரியா?”

“ஆமா…சூடாகத்தான் செய்யும்…இதோ வந்துட்டேன் டார்லிங்…நாங்கள் ரொம்ப சுவாரசியமா பேசிக்கிட்டு இருந்தோம். உண்மைதான். நீ சொன்னது மிகச் சரி. பாதத்தை அது சூடாக்கத்தான் செய்கிறது. சரி…மன்னிக்கவும்…நான் கிளம்….”

“ஓ…கண்டிப்பா..உங்களோட தொடர்பு ஏற்பட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு.”

ரக்கூன் கோட்டு போட்ட மனிதன் வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி கிளம்பியது. அதிர்ச்சியில் உறைந்தவனாய் வண்டி போவதைப் பார்த்துக்கொண்டு நின்றான் அந்த இளைஞன்.

2

அதை அடுத்த மாலைவேளை ஒன்றில் இத்தாலிய நாடகம் போன்ற ஒரு நாடகம் ஏற்பாடாகி இருந்தது. நாடகக் கொட்டகைக்குள் ஒரு வெடிகுண்டைப்போல நுழைந்தான் இவான் ஆன்ரேயிட்ச். இசையின்பால் அந்த மாதிரியான வெறி, அபிமானம் அவனிடம் இதற்கு முன்பு இருந்ததைப்போலத் தெரியவில்லை. நல்ல விதமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இத்தாலிய நாடகம் நடக்கும்போது ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகத் தூங்கி விடுவான். அது எவ்வளவு சுகமான அனுபவம் என்று பலமுறை அவனே சொல்லியுமிருக்கிறான். “ஏன்!! அந்த பாடகி சிறிய வெள்ளைப்பூனைக்குட்டி மாதிரி உன்னைப் பார்த்து மியாவ் குரலில் தாலாட்டுப் பாடவில்லை” என்று தனது நண்பர்களைப் பார்த்துக் கேட்பான். அதெல்லாம் அந்தக் காலம். அந்த சீஸனில் அவன் இப்படியெல்லாம் சொல்வது வழக்கம். ஆனால் இப்போ!…கடவுளே! வீட்டில் கூட இவான் ஆன்ரேயிட்ச் தூங்குவதில்லையாம். இப்போதெல்லாம் நாடகக் கொட்டகைகளுக்குள் வெடிகுண்டு மாதிரி நுழைந்து விடுகின்றானாம். அவனைப் பார்த்த மாத்திரம் நாடகம் நடத்துபவன் கூட அவனுடைய பாக்கெட்டில் கத்தியின் கைப்பிடி ஏதேனும் துருத்திக்கொண்டிருக்கிறதா என்ற நம்பிக்கையில் சந்தேகத்துடன் கடைக்கண்ணால் பார்ப்பதுண்டு.. நாடகத்தில் வரும் தங்களுக்கு பிடித்தமான பாடகிக்கு ஆதரவு தெரிவிக்க அங்கு இரண்டு குழுக்கள் இருந்தன. ஒன்று சிஸ்டுகள்…இன்னொன்று நிஸ்டுகள். இசைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்தவிதம் கண்டு நாடகம் நடத்துபவனே சில நேரம் அசந்து போவான். சில சமயம் அவர்கள் இசை குறித்தும் பாடகிகள் குறித்தும் சர்ச்சை ஏற்படும்போது நாடகம் நடத்துபவன் பயந்துதான் போவான். இப்படித்தான் ஒருதடவை நரைத்த முடியுடன் இருந்த ஒருவனின் (உண்மையில் அவன் நரைத்த முடி உள்ளவன் கிடையாது….ஐம்பது வயது இருக்கும்…வழுக்கை விழுந்திருக்கும்…மொத்தத்தில் பார்ப்பதற்கு மரியாதைக்குரியவனாக இருப்பான்) தோட்டத்துக்குள் போய் இந்த மாதிரியான இளமை ததும்பும் சச்சரவைப் பார்த்து நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த டென்மார்க் இளவரசன் ஹேம்லட் வயதானவன் இளைஞர்களுக்கு எப்படி ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கி உள்ளான் என்று கூக்குரலிட்டு அறிவிப்பு செய்ததை நாடகம் நடத்துபவன் நினைவு கூர்ந்தான். இந்த அனுபவத்தால்தான் பாக்கெட்டில் கத்தி ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா என்று கடைக்கண்ணால் அடிக்கொருதரம் பார்த்த வண்ணம் இருந்தான். ஆனால் அவன் பாக்கெட்டில் சிறு புத்தகம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை.

தியேட்டருக்குள் நுழைந்தவுடன் இரண்டாவது அடுக்கில் இருக்கும் பார்வையாளர்கள் உட்காரும் பெட்டிகளைக் கண நேரத்தில் நோட்டம் விட்டான் இவான் ஆன்ரேயிட்ச். ‘ஐயோ என்ன பயங்கரம்! அவனுடைய இதயம் ஒரு நொடி நின்றது. அவள் அங்கே இருந்தாள். அந்தப்பெட்டியில் அவள் அமர்ந்திருந்தாள். ஜெனரலின் உதவியாளன்- மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இளைஞன்- அவனும் அங்கே இருந்தான். ஆனால் இன்னொரு தலையும் தென்படுகிறதே! இவான் ஆன்ரேயிட்ச் தன் கவனத்தையும் பார்வையையும் கூர்மையாக்கினான். ..ஆஹா என்னவொரு பித்தலாட்டம்….அந்த மனிதன் உதவியாளனுக்குப் பின்னால் எப்படிச் சாமர்த்தியமாகத் தன்னை மறைத்துக் கொள்கிறான். இருட்டுக்குள் யாரும் அறியாவண்ணம் மறைந்து கொள்கிறான்.

அவள் இங்கேதான் இருக்கிறாள். ஆனால் இங்கே வரமாட்டேன் என்று சொன்னாளே!

இந்த மாதிரி சமீப காலங்களில் கிளஃபிரா பெட்ரோவ்னா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தென்படும் பித்தலாட்டம் இவான் ஆன்ரேயிட்சை அனுதினமும் நசுக்கிக் கொன்று கொண்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் அந்த சாதாரண மனிதன் வேறு இவான் ஆன்ரேயிட்சை விரக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தான். அவனுடைய கடையில் அப்படியே விரக்தியில் சரிந்து உட்கார்ந்தான். ஏன்?…ஒருவர் இப்படிக் கேட்கலாம். அது ஒரு மிகவும் சாதாரண விஷயம்தான்.

இவான் ஆன்ரேயிட்சின் கடை குளிக்கும் இடத்திற்கு அருகில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலைமையை இன்னும் மோசமாக்குகிற மாதிரி இரண்டாம் அடுக்கில் இருக்கும் அந்தப் பிரச்சினைக்குரிய பெட்டி மேலே என்ன நடக்கிறது என்பதை அவன் அறிய முடியாதபடி, அவனுக்கு எரிச்சலூட்டும் விதமாக அவனுடைய கடைக்கு நேர் உச்சியில் இருந்தது. கோபத்துடன் இதை நினைக்கும்போது கொதிக்கும் குடுவையைப்போல உணர்ந்தான் அவன். நாடகத்தின் முதல் காட்சி அவன் பார்க்காமலேயே கழிந்து போனது. அதாவது அதில் ஒரு குறிப்பைக் கூட அவன் கேட்கவில்லை. நல்ல இசை என்பது கேட்பவரின் மன நிலைக்குத் தக்கவாறு இசையின்பத்தை வாரி வழங்குவது என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியாக இருப்பவன் அதில் மகிழ்ச்சியைக் காண்கிறான். துக்கப்படுகிறவன் அதில் துக்கத்தைக் காண்கிறான். இவான் ஆன்ரேயிட்சின் காதுகளில் வழக்கமான புயல் காற்றின் பேரோசைதான் கேட்டுக்கொண்டு இருந்தது. அவனுடைய விரக்தியை இன்னும் அதிகப்படுத்துவது போல அவனுக்குப் பின்னாலும், முன்னாலும் பக்கவாட்டிலும் பெரிய இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. இவான் ஆன்ரேயிட்சின் இதயம் கிழிந்துவிடும் போல இருந்தது. கடைசியாக அந்தக் காட்சி முடிவடைந்தது. அந்தச் சமயத்தில் திரை கீழ் நோக்கி வந்தபோதுதான் எந்தப் பேனாவாலும் எழுதமுடியாத ஒரு சாகஸத்திற்கு நம்முடைய கதாநாயகன் தயாரானான்.

சில சமயங்களில் நாடகம் குறித்த விளம்பரத் தாள்கள் மேலே இருக்கும் பெட்டிகளிலிருந்து பறந்து வந்து கீழே விழும். நாடகம் கொஞ்சம் தொய்வடையும்போதோ பார்வையாளர்கள் கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியும்போதோ இந்த மாதிரி தாள்கள் பறந்து வந்து மேலே விழும். மிகவும் மென்மையான அந்தத் தாள்கள் மேல் அடுக்குகளிலிருந்து பறந்து வரும் அழகை சிலர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ஒவ்வொரு கடையின் மீதும் அது குறுக்கும் நெடுக்குமாக மெதுவாகப் பறந்து வந்து வந்து விழுவதை ஆசையாக நோக்குவார்கள். எதிர்பாராதவிதமாக யாராவது சிலர் தலையின் மீது சென்று அது படியும். தர்ம சங்கடத்துடன் நெளியும் தலைகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். (சம்பந்தப்பட்ட தலை தர்ம சங்கடப்படத்தான் செய்யும்). பெட்டிகளின் ஓரத்திலிருக்கும் பெண்கள் அணியும் கண்ணாடிகள் குறித்துத்தான் நான் பயந்துகொண்டு இருப்பேன். காரணம் அவை யாராவது சிவனே என்று அமர்ந்திருப்பவர் தலையில் விழுந்து தொலைத்தால் என்னாவது என்று கற்பனை செய்த வண்ணம் இருப்பேன். ஆனால் இந்த மாதிரியான துக்ககரமான சம்பவம் அங்கே சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். எனவே இதைப்பற்றி செய்தித்தாளுக்கு எழுதுவேன். அந்தச் செய்தித்தாள்கள் சூழ்ச்சிகளை வெல்வது எப்படி, தந்திரங்களை எப்படிக் கையாளுவது, வீட்டில் வண்டுகள் இருந்தால் அதைச் சமாளிப்பது எப்படி, ரஷ்யாவில் இருக்கும் வண்டுகளுக்கு மட்டுமல்ல பிரஷ்யாவின் கரப்பான் பூச்சிகளுக்கும் எதிரி என்று அங்கீகரிக்கப்பட்ட திரு பிரின்ஸிபி அவர்களின் சிபாரிசுகள் போன்ற பல விஷயங்கள் அந்த செய்தித் தாள்களில் நிரம்பி வழியும்.

இருந்தாலும் இவான் ஆன்ரேயிட்ச்சின் சாகசமே தனி. அது இதுவரை எங்குமே விவரிக்கப்படவில்லை. இதோ நாம் ஏற்கனவே சொன்ன அவனது அரைகுறை வழுக்கைத் தலையில் வந்து அது விழுந்துவிட்டது. ஆனால் வந்து விழுந்தது நாடக விளம்பரத்தாள் இல்லை. அவன் தலையில் வந்து விழுந்த அதைப் பற்றிச் சொல்ல எனக்கு நிஜமாகவே வெட்கமாக இருக்கிறது. மரியாதைக்குரிய, பளபளவென்று இருக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும், பொறாமைக் குணம் நிறைந்த, எரிச்சல் வசப்படும் இவான் ஆன்ரேயிட்சின் தலையில் நெறி பிறழ்ந்த ஒரு வாசனைமிக்க காதல் கடிதம் வந்து விழுந்தது என்பதைச் சொல்ல எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பாவம் இவான் ஆன்ரேயிட்ச்! எதிர்பாராத அந்த அதிர்ச்சியான நிகழ்வை எதிர்கொள்ள அவன் தயாராக இல்லாதவனாக இருந்தான். தலையில் ஏதோ எலி அல்லது காட்டு விலங்கு வந்து விழுந்துவிட்டதோ என்று குழம்பிப் பயந்து போனான்.

வந்து விழுந்த குறிப்பு சந்தேகம் இல்லாமல் காதல் கடிதம்தான். நாவல்களில் விவரிக்கப்படும் காதல் கடிதங்களைப் போல அதுவும் வாசனைத்தாளில் எழுதப்பட்டு இருந்தது. மிகவும் சிரமப்பட்டுப் பிரித்துப் பார்க்கக்கூடிய அளவில், ஒரு பெண்ணின் கையுறைக்குள் எளிதாக மறைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறியதாக அது மடிக்கப்பட்டு இருந்தது. அவளிடம் அது கொடுக்கப்பட்ட போது தவறி கீழே விழுந்திருக்க வேண்டும். விளம்பரத்தாளை கேட்பது போலக் கேட்டு, அதற்குள் தந்திரமாக இந்தக் காதல் கடிதத்தை மடித்துவைத்து அவளிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தைப்போல, சிறு தவறு நடந்தாலும் பெரிய அளவில் மன்னிப்பு கேட்டு வருந்தும் பழக்கமுள்ள அந்த உதவியாளனின் கை தெரியாமல் பட்டு, ஏற்கனவே குழம்பி நடுங்கிக் கொண்டிருந்த அந்த மனிதனின் கைகளிலிருந்து அது நழுவி விழுந்திருக்கிறது. அவன் கைகளை நீட்டிப் பார்த்தால் காதல் குறிப்புகளுக்குப் பதில் வெறும் விளம்பரத்தாள் மட்டும் கைகளில் சிக்கி இருந்தது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் அவன். சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது அவனுக்கு ஒரு வித்தியாசமான துன்பகரமான நிகழ்வுதான். ஆனால் இவான் ஆன்ரேயிட்ச் நிலைமை அதைவிட மோசமானது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்..

“எல்லாம் இப்படிதான் நடக்குதா…” வியர்த்தபடி கையில் இருக்கும் கடிதத்தை நசுக்கிக்கொண்டே முணுமுணுத்தான். “இப்படித்தானா? குற்றவாளியைத் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடித்து விட்டது என்று எண்ணிக் கொண்டான். “இல்லை… அப்படிச் சொல்வது சரி இல்லை. நான் எப்படிக் குற்றவாளி ஆக முடியும்? இன்னொரு பழமொழியும் இருக்கிறது. ஒரு முறை அதிர்ஷ்டம் விலகிப்போனால், தொல்லைகளும் விலகிப்போவதில்லை. “

இந்தச் சம்பவத்தினால் அவனுடைய காதுகளில் கேட்கும் ரீங்காரமும் தலையில் ஏற்பட்ட மயக்கமும் அவனுக்குப் போதுமானதாக இல்லை. அப்படியே பேயறைந்தவன் மாதிரி நாற்காலியில் அமர்ந்திருந்தான். அதாவது சொல்வார்களே!! செத்துப்போனவன் மாதிரி……அது மாதிரி. அவனுடைய சாகசம் நாலாப்பக்கங்களிலும் பார்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றத்தான் செய்தது. மொத்த நாடக கொட்டகையும் ஒன்ஸ் மோர் கேட்டுக் கத்திக்கொண்டிருந்தது. அவன் குழப்பம் மேலிட்டு உட்கார்ந்து இருந்தான். அந்த நிகழ்வு விரும்பாத ஆச்சரியம்தான் அது. மகிழ்ச்சி பொங்கக் கூட்டம் கத்திக்கொண்டு இருந்தபோதும் முகமெல்லாம் சிவந்து போய் கண்களை உயர்த்திப்பார்க்கக் கூட தைரியம் இல்லாமல் இருந்தான். ஒரு வழியாகத் தனது கண்களைத் திறந்து பார்த்தான்.

“ரொம்ப அழகா பாடினாள்”: என்று சொல்லிக்கொண்டு பக்கத்திலிருந்த கோமாளியை நோக்கினான்.

உற்சாகத்தின் இறுதிக் கட்டத்திலிருந்த அந்தக் கோமாளி கைதட்டிக்கொண்டு இன்னும் ஓங்கி ஓங்கி காலை தரையில் மிதித்துத் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினான். போகிற போக்கில் இவான் ஆன்ரேயிட்சை பார்த்தும் பார்க்காமலும் நோக்கினான். நன்றாகக் கேட்க வேண்டும் என்பதற்காக வாயில் கைகளை ஊதுகொம்பு போல வைத்துக்கொண்டு அந்தப் பாடகியின் பெயரை உரத்துச் சொன்னான். அந்த மாதிரியான ஓலத்தை இவான் ஆன்ரேயிட்ச் இதுவரை கேட்டதே இல்லை. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “நல்ல வேளை. இவன் பார்க்கவில்லை. என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குண்டான மனிதனும் திரும்பிப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கண்ணாடி வழியாகப் பார்வையாளர் பெட்டிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். “இவனுக்கும் ஒன்றும் தெரியாது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் இவான் ஆன்ரேயிட்ச். முன்பாக ஒன்றும் இல்லை. தைரியமாகவும் மகிழ்ச்சி கலந்த நம்பிக்கையுடனும் குளியல் தொட்டி இருக்கும் பகுதியை நோக்கி பார்வையை வீசினான். அதற்குப் பக்கத்தில்தான் அவனுடைய கடை இருந்தது. பார்த்தவுடன் அவனுக்கு என்னவோ போல ஒரு அசூயையான உணர்வு எழுந்தது. அங்கே ஒரு அழகான பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். வாயில் கைக்குட்டையைப் பொத்தியபடி நாற்காலியில் பின்னால் நன்றாகச் சாய்ந்தவாறு ஏதோ பைத்தியம் பிடித்த மாதிரி சிரித்துக்கொண்டிருந்தாள்.

“அஹ்ஹ்…இந்தப் பெண்கள்……” என்று முனகிக் கொண்டான் இவான் ஆன்ரேயிட்ச். அமர்ந்திருந்தவர்களின் கால்களை மிதித்துக்கொண்டு வெளியேறினான்.

இப்போது என்னையும் இவான் ஆன்ரேயிட்சையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நான் என்னுடைய வாசகர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவன் இப்போது செய்தது சரிதானா? அந்தப் பெரிய கொட்டகையில் பார்வையாளர் அடுக்கு நான்கு இருக்கிறது. காட்சியகத்துக்கு மேலாக ஐந்தாவது அடுக்கு அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பெட்டியிலிருந்துதான் அந்தக் கடிதம் விழுந்திருக்கிறது என்று அவன் எப்படி நினைக்க முடியும்? அதுவும் அந்தப் பெட்டியிலிருந்து மட்டும்?. வேறு எந்த பெட்டியிலும் இருந்தும் இல்லை. உதாரணத்திற்குப் பெண்கள் அடிக்கடி நடமாடும் அந்த காட்சியகத்திலிருந்து ஏன் விழுந்திருக்கக் கூடாது?. ஆனால் பைத்தியக்காரத்தனமான மோகம் என்பது எந்த சட்டத்துக்குள்ளும் வராத விதிவிலக்காயிற்றே! அதிலும் பொறாமை என்பது எல்லா மோகங்களுக்கும் பெரிய விதி விலக்காயிற்றே!.

இவான் ஆன்ரேயிட்ச் ஹாலுக்கு ஓடினான். விளக்கின் கீழே நின்றுகொண்டு சீலை உடைத்தான். படித்தான்.

“இன்று நாடகம் முடிந்தவுடன், X கார்னரில் இருக்கும் G தெரு, சந்து, k பில்டிங், மூன்றாவது மாடி, படிக்கட்டிலிருந்து வலது பக்கம் முதல், முன்வாசல். அங்கே வந்து சேர். கடவுள் சத்தியமா வரத் தவறாதே”

இவான் ஆன்ரேயிட்சுக்கு கையெழுத்து யாருடையது என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இது ஒரு அழைப்புதான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தது. “தேடிக் கண்டுபிடிப்பது, கையும் களவுமாகப் பிடிப்பது, இந்தக் கேடுகெட்டதனத்தை முளையிலேயே கிள்ளி எறிவது- இதுதான் இவான் ஆன்ரேயிட்சின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தக் கள்ளத்தனத்தை இங்கே இப்போதே தோலுரித்துக் காட்டிவிட வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஆனால் எப்படிச் செய்வது? இவான் ஆன்ரேயிட்ச் இரண்டாவது அடுக்கு வரைக்கும் ஓடிப்போய் பார்த்துவிட்டுச் சட்டெனத் திரும்பி வந்துவிட்டான். அடுத்து எங்கே ஓடுவது அவனுக்குப் புரியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் எதிர்த் திசையைப் பார்த்து ஓடினான். கொட்டகையின் எதிர்ப்புறமிருந்த வேறு யாரோ ஒருவரின் பெட்டிக்குள் நுழைந்து எட்டிப்பார்த்தான். இப்படித்தான் நடந்திருக்கும்….ஐந்து அடுக்குகளிலும் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு மேல் ஒருவர் செங்குத்தாக அமர்ந்திருந்தார்கள். அந்தக் காதல் கடிதம் எல்லா அடுக்குகளிலும் இருந்து ஒரே நேரத்தில் விழுந்திருக்கலாமல்லவா. அங்கு இருக்கும் எல்லோரும் தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதாக இவான் ஆன்ரேயிட்சுக்குத் தோன்றியது. ஆனால் எதுவுமே அவனை ஆறுதல்படுத்தவில்லை. அதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. நாடகத்திம் மொத்த இரண்டாவது காட்சியும் எல்லா அடுக்குகளின் கவனத்தைக் கவரும்படி மேலும் கீழும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மன அமைதிதான் இல்லாமல் இருந்தது. பெட்டிகள் வழங்கும் அலுவலகத்திற்குள் நுழைந்து நான்கு அடுக்குகளிலும் அமர்ந்திருப்பவர்களின் பெயர் பட்டியலை அங்கிருக்கும் வேலையாளிடம் இருந்து வாங்கியிருக்க அவனால் முடியும். ஆனால் அந்த அலுவலகமும் மூடி இருந்தது. இறுதியில் பலத்த கரவொலியும் கத்தலும் கேட்டன. நாடகம் முடிவடைந்தது. பாடகர்களை அழைக்கும் படலம் தொடங்கியது. மேலே இருந்த காட்சிக் கூடத்திலிருந்து கிளம்பிய இரண்டு குரல்கள் காதுகளைக் கிழித்தன. அது எதிர் அணியாக நிற்கும் இரண்டு தலைவர்களின் குரல்கள். ஆனால் அவர்கள் கத்தியது இவான் ஆன்ரேயிட்சுக்கு ஒரு பொருட்டு இல்லை. அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் அவனுடைய மனதில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்தது. கோட்டை எடுத்து அணிந்து கொண்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்று G தெருவை நோக்கி ஓடினான். அவர்கள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அவர்கள் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அதாவது நேற்று அவன் நடந்து கொண்ட முறையை விட இன்று சற்று அதிகமான சுறுசுறுப்போடு இயங்கவேண்டுமென்று விரும்பினான். சீக்கிரமே அவன் அந்த வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான். முன் வாசலை அவன் கடக்க முயன்ற போது அந்தக் கோமாளியின் உருவம் விசுக்கென்று அவனுக்கு முன்னால் பாய்ந்து சென்றது. அவனைக் கடந்து மூன்றாவது மாடியை நோக்கிச் சென்றது. கொட்டகைக்குள் சரியாக அடையாளம் காண முடியாவிட்டாலும் அதே கோமாளிதான் இவன் என்று இவான் ஆன்ரேயிட்ச்சுக்குத் தோன்றியது. அவனுடைய இதயமே நின்று விடும் போல இருந்தது. அந்தக் கோமாளி அவனைத் தாண்டி இரண்டு எட்டுகளில் இருந்தான். கடைசியாக மூன்றாவது தளத்தின் கதவு திறப்பது அவனுக்குக் கேட்டது. வருபவனை எதிர்பார்த்து இருந்ததைப் போல எந்த ஒரு அழைப்பு மணியின் ஓசையும் இன்றி திறந்தது. ஓடி வந்த அந்த இளைஞன் அந்த வீட்டுக்குள் சென்று மறைந்தான். தளத்தின் கதவு மூடுவதற்குள் இவான் ஆன்ரேயிட்ச் மூன்றாவது தளத்திற்கு வந்தான். அவன் கதவின் அருகில் நின்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஆற அமர யோசிக்க வேண்டும் என்று விரும்பினான். கவனமாகவும் இருக்க வேண்டும்; மிகவும் தீர்க்கமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். அந்த நேரம் பார்த்துத்தானா வண்டி ஒன்று வந்து தொலைக்க வேண்டும். அது வந்தவுடன் கதவுகள் சத்தத்துடன் திறந்தன. கனமான காலடி ஓசைகள் மூன்றாவது மாடியை நோக்கி அடியெடுத்து வரத் தொடங்கின. அடிக்கடி இருமும் சத்தமும் தொண்டையை செருகிக்கொள்ளும் சத்தமும் கூடவே கேட்டன. இவான் ஆன்ரேயிட்சால் அங்கே நிற்க முடியவில்லை. காயம்பட்ட கணவன் ஒருவனைப்போல அவன் கம்பீரமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தான். வேலைக்காரி ஒருத்தி அதிர்ச்சியுற்றவளாய் அவனை நோக்கி வந்தாள். அவளைத் தொடர்ந்து வேலைக்காரன் ஒருவனும் தோன்றினான். ஆனால் யாராலும் இவான் ஆன்ரேயிட்சை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரு குண்டைபோல அவன் உள்ளே நுழைந்தான். இருட்டாக இருந்த இரண்டு அறைகளைத் தாண்டிப்போனான். திடீரென்று படுக்கையறையில் ஒரு அழகிய பெண் இருப்பதைக் கண்டான். அவளோ அதிர்ச்சியில் உறைந்துபோனவளாய் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவளாய் திகிலுடன் அவள் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அந்த நேரம் பார்த்து பக்கத்து அறையிலிருந்து கனமான காலடிச் சத்தம் படுக்கையறையை நோக்கி வர ஆரம்பித்தது. படிக்கட்டில் ஏறி வந்த போது கேட்ட அதே காலடிச் சத்தங்கள்.

“ஐயோ..கடவுளே…வருவது என் கணவன்…” என்று கைகளைப் பிசைந்து கொண்டு அலறினாள் அந்தப் பெண். அவள் அணிந்திருந்த மேலாடையை விட வெளிறிப்போனாள் அவள்.

தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டோம் என்று இவான் ஆன்ரேயிட்சுக்குப் புரிந்துவிட்டது. முன் யோசனை எதுவும் இல்லாமல் குழந்தைத்தனமான கிறுக்குத்தனத்தை அவன் செய்துள்ளதும் எந்த ஒரு எச்சரிக்கையுணர்வுமில்லாமல் இங்கே வந்து மாட்டிக் கொண்டதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை. கதவு ஏற்கனவே திறந்துவிட்டது. காலடிகளை வைத்தே கனமான கணவன் என்று முடிவு செய்யப்பட்டிருந்த கணவனும் அறைக்கு வந்து கொண்டிருக்கிறான். அந்த சமயம் இவான் ஆன்ரேயிட்ச் தன்னை பற்றி என்ன நினைத்தான் என்று எனக்குத்தெரியவில்லை. அந்தப் பெண்ணின் கணவனைப் பார்த்து ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது, வேண்டுமென்றே நுழைந்து அசிங்கமாக நடந்துகொள்ள முயலவில்லை என்று மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிமறைந்திருக்கலாம். அதைச் செய்யாமல் அவனைத் தடுத்தது எது என்று எனக்குத் தெரியவில்லை. எதையோ சாதித்துவிட்ட பெருமையில் அல்ல; கண்டிப்பாக பெரும் புகழோடும் அல்ல. குறைந்த பட்சம் ஒரு மனிதன் நாகரீகமாக வெளியேறுவதைப் போல அவன் வெளியேறியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இவான் ஆன்ரேயிட்ச் மறுபடியும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டான். தன்னை ஏதோ ஒரு டான் ஜூவான் என்றோ லவ் லேஸ் என்று நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை. முதலில் படுக்கைக்குப் பக்கத்திலிருந்த திரைக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான். கடைசியில் சுத்தமாக வெறுத்து நம்பிக்கையற்றுப்போய் தரையில் வீழ்ந்து உருண்டு போய் அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் படுக்கைக்குக் கீழே போய் படுத்துக்கொண்டான். அவனுடைய பயம் அவனுடைய அறிவை வேலை செய்யவிடாமல் ஆக்கி இருந்தது. அவன் ஏற்கனவே ஒரு காயம் பட்டுப்போன கணவன். எந்தச் சூழ்நிலையிலும் அவன் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட கணவனாக இருந்துகொண்டு இன்னொரு கணவன் முன்னால் நின்றுகொண்டு அவனையும் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. இது இப்படியே இருக்கட்டும். இப்போது அவன் படுக்கைக்குக் கீழே படுத்துக்கிடந்தான். எப்படி அந்த இடத்துக்கு வந்தான் என்பது அவனுக்கும் புரியாமல்தான் இருந்தது. எல்லாவற்றையும் விட ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால் அந்தப் பெண் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் இருந்ததுதான். முன் பின் தெரியாத வயதான ஒரு கிழவன் திடீரென்று தனது படுக்கைக்குக் கீழே அடைக்கலம் ஆகி இருக்கிறான் என்று தெரிந்தும் அவள் கத்தவில்லை. அதீத பயத்தினால் அவளுடைய பேசும் சக்தி அவளிடம் இருந்து விடை பெற்றதைப்போல இருந்தது.

மூச்சிரைத்துக்கொண்டும் தொண்டையைச் செருமிக்கொண்டும் அவளுடைய கணவன் உள்ளே வந்தான். கிழட்டுக்குரலில் தனது மனைவியை நோக்கி மாலை வணக்கத்தைப் பாடிக்கொண்டே சொன்னான். ஏதோ பெரிய மரக்கட்டைகளைச் சுமந்து வந்து களைப்படைந்ததைப்போல ஒரு நாற்காலியில் பொத்தென்று விழுந்தான். அவன் இருமும் சத்தம் மிகவும் ஆழமாகவும் நீண்ட நேரமாகவும் கேட்டது. சற்று நேரத்திற்கு முன்பாக கர்ண கடூரமாக உறுமிய புலியாக இருந்த இவான் ஆன்ரேயிட்ச் ஆட்டுக்குட்டியாக உருமாற்றம் பெற்று ஒடுங்கிக் கிடந்தான். பூனைக்கு முன்னால் நடுங்கிச் சாகும் எலியைப் போல நடுங்கிக் கொண்டிருந்தான். காயப்பட்ட கணவன்மார்கள் எல்லோரும் ஒரே மாதிரி மேலே விழுந்து கடிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு அனுபவ ரீதியாக அறிவு இருந்தபோதும் பயத்தினால் மூச்சுவிடக் கூடத் தயங்கினான் அவன். ஆனாலும் இந்த சிந்தனையெல்லாம் அவன் மண்டைக்குள் நுழையவில்லை. அது அவனுக்கு இருந்த அறிவின்மையாலோ அதிர்ச்சியினாலோ இருக்கலாம். எச்சரிக்கையாக, மெதுவாகப் படுக்கைக்குக் கீழே வசதியாகப் படுத்துக்கொள்ள அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தான். அங்கே அவனுடைய கைகள் ஏதோ ஒரு பொருளைத் தொட்டது. ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டான். அவனுடைய ஆச்சரியத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் அந்தப்பொருள் அசைந்து இவனுடைய கைகளையும் பிடித்தது!. படுக்கைக்குக் கீழே இன்னொரு மனிதனும் படுத்துக்கிடந்தான்.

“யார்ரா நீ?” என்று குசுகுசுத்தான் இவான் ஆன்ரேயிட்ச்.

“நான் யாருன்னு நான் உனக்குச் சொல்லப்போவதில்லை” என்று பதிலுக்குக் குசுகுசுத்தான் அங்கிருந்தவன். “அமைதியா அப்படியே படுத்துக் கிட… ஏதாவது குழப்பம் கிழப்பம் பண்ணினே தொலைஞ்சே”

“ஆனால்…நான் என்ன சொல்ல வர்றேன்னா?”

“வாயை மூடு”

கூடுதலாக அங்கே இருந்த அந்த மனிதன் (படிக்கையின் கீழ்ப்புறம் ஒரு ஆளுக்குப் போதுமானதாக இருந்தது) இவான் ஆன்ரேயிட்சின் கைகளைத் தனது முஷ்டிக்குள் வைத்து ஏறக்குறைய அவன் சத்தம் போடும் அளவுக்கு நசுக்கினான்.

“அன்புக்குரிய நண்பரே”

“உஷ்ஷ்..”

“அப்படீன்னா என் கையை அந்த மாதிரிக் கிள்ளாதே! அப்புறம் நான் கத்த வேண்டி வரும்.”

“அப்படியா? கத்திப் பாரேன்…ம்ம்ம் கத்து”

இவான் ஆன்ரேயிட்சுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. முன்பின் தெரியாத அந்த புதிய மனிதன் கடுப்பேற்றுபனவாகவும் சிடுசிடுப்பவனாகவும் இருந்தான். இந்த மாதிரியான மனிதர்கள் ஒரு தடவைக்கும் மேலாக விதியின் வலிய கைகளுக்குள் சிக்கி சின்னா பின்னமாகி வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவான் ஆன்ரேயிட்ச் ஒரு கத்துக்குட்டி. இறுக்கமான அந்தச் சூழ்நிலையில் அவன் சரியாக மூச்சு விட முடியாமல் திணறினான். இரத்தம் தலைக்கேறியது. எது நடந்தாலும் அவனுக்கு உதவி என்று எதுவும் வரப்போவதில்லை. தலைக்குப்புற படுத்துக் கிடக்க வேண்டியதுதான். அப்படியே இவான் ஆன்ரேயிட்ச் அடங்கிப்போனான். அமைதியானான்.

“பவேல் இவானிட்சைப் பார்க்கப்போயிருந்தேன் அன்பே” என்று ஆரம்பித்தான் அவள் கணவன். “தெரிவு செய்யும் விளையாட்டு ஒன்றை விளையாட ஆரம்பித்தோம்.” லொக்கு…லொக்கு…லொக்கு…(அவனுக்குத் தீராத இருமல் இருந்தது). ஆமா……லொக்கு….என்னோட முதுகு…….. லொக்கு…ரொம்ப சிரமப் படுத்துது….லொக்கு…லொக்கு…லொக்கு…

அந்தக் கிழவன் இருமலில் அப்படியே மூழ்கிப்போய் விட்டான்.

“என்னோட முதுகு…” கடைசியில் கண்ணில் கண்ணீரோடு சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டான். “என்னோட முதுகு ஒரே வலி… கருமம் பிடிச்ச இந்த மூல நோய்!… நிக்கவும் முடியல…உட்காரவும் முடியல…உட்காரக் கூட….லொக்கு….லொக்கு…லொக்கு…”

அந்தக் கிழவனுக்கு இயல்பாக இருந்த இருமலை விட அதைத் தொடர்ந்து வந்த இருமல் அதிக நேரம் நீட்டிக்க விதிக்கப்பட்டிருந்ததைப் போலத்தோன்றியது. கிடைத்த இடைவெளிகளில் அந்தக் கிழவன் எதையோ முணுமுணுத்தான். என்ன சொல்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

“நண்பா! என் நிலையைப் புரிஞ்சுகிட்டு கொஞ்சம் தள்ளிப் படேன்.“ முகம் செத்தவனாய் அவனைக் கெஞ்சிக் குசுகுசுத்தான் இவான் ஆன்ரேயிட்ச்.

“எப்படி முடியும்? இங்கே இடம் ஏது?”

“என்னால் இப்படி இருக்க முடியாது என்பதை நீ ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.இந்த மாதிரியான ஒரு கேவலமான நிலையில் நான் மாட்டிக்கொண்டு விழிப்பது என் வாழ்க்கையில் இதுதான் முதல் தடவை.”

“அப்ப நான் அசிங்கமான சமுதாயத்தில் வாழ்றேனா.”

“அப்படி இல்……..…இளைஞனே!”

“கொஞ்சம் வாயை மூடுறியா?”

“வாயை மூடவா? எப்படி இவ்வளவு அநாகரீகமா பேசுறே இளைஞனே! நான் நினைப்பது சரி. நீ வயதில் மிகவும் இளையவன். நான் உன்னை விட மூத்தவன்”

“இப்ப வாயை மூடப்போறியா இல்லையா?”

“நண்பா! கோபத்தில் நீ என்ன பேசுகிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை. நீ யாரிடம் பேசிக்கிட்டு இருக்கேங்கிறதும் உனக்குத் தெரியவில்லை”

“படுக்கைக்குக் கீழே படுத்துக்கிடக்கும் ஒரு உத்தமனிடம்”

“அது ஒரு விசித்திரமான தற்செயல். தவறுதலாக நடந்த விஷயம். ஆனால் உன்னோட விஷயத்தில் நான் இப்படிச் சொல்வதில் தவறில்லை….நெறிதவறிய நடத்தை”

“சார்…நாம் இருவருமே ஒரே படகில்தான் பயணித்துக்கொண்டு இருக்கோம். என்னோட முகத்தை புடிச்சு இழுக்காதேன்னு கேட்டுக்கிறேன்”.

“சார்…நான் ஒன்னு பேசிட்டு இருக்கும்போது இன்னொன்னை செய்ய முடியாது. மன்னிக்கனும். இங்கே இடம் இல்லை”

“நீ இவ்வ்ளவு குண்டா இருப்பதால்தான் பிரச்சினையே”

“கடவுளே! இந்த மாதிரியான ஒரு கேவலமான நிலையில் நான் இருந்ததே இல்லை”

“ஆமா …இதுக்கு மேலே ஒருவர் கீழே இறங்கி வர முடியாது”.

“சார்…சார்…நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. எப்படி நான் இதுல வந்து மாட்டிக்கிட்டேன்னு தெரியல. ஏதோ தவறுதலாய் இங்கே வந்துவிட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்லை”

“நீ இங்கே வந்திருக்காவிட்டால் நான் எதற்கு உன்னைப் பற்றி நினைக்கப் போகிறேன்? இப்ப உன்னுடைய வாயைக் கொஞ்சம் மூடிட்டு இரு…சரியா?”

“சார்…இப்ப நீங்க கொஞ்சம் நகரலேன்னா நான் நெஞ்சடைச்சே செத்துப் போவேன். அப்புறம் நான் செத்ததுக்கு நீங்கதான் பதில் சொல்லனும். நான் சொல்லிப்புட்டேன். நான் ஒரு மரியாதையுள்ள மனிதன். ஒரு குடும்பத்திற்கு தலைவன். இந்த மாதிரியான ஒரு நிலைமையில் நிஜமாகவே நான் இருக்க முடியாது”

“இந்த நிலைமையை நீதானே வலிய இழுத்துப்போட்டுகிட்டே! சரி வா…கொஞ்சம் நகர்ந்து வா. உனக்குக் கொஞ்சம் இடம் தந்துள்ளேன். இதுக்கு மேல முடியாது.”

“உன்னதமானவன் நீ! உன்னைப்போய் தவறாக நினைத்தேன் பாரு” என்று கிடைத்த அந்த இடைவெளிக்கு நன்றி கூறும் விதமாக வருத்தப்பட்டுக்கொண்டான் இவான் ஆன்ரேயிட்ச். சுருங்கிப்போயிருந்த கால்களைக் கொஞ்சம் விரித்துக்கொண்டான். “உங்களுடைய இந்த இக்கட்டான நிலைமை எனக்குப் புரிகிறது. என்னைப் பற்றி நீங்கள் தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுடைய பார்வையில் நான் தப்பானவன் என்ற கருத்தை தவறு என்று நான் நிரூபிக்க வேண்டும். நான் யார் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். நான் இங்கு வந்தது என்னுடைய விருப்பத்திற்கு மாறாகத்தான். நீங்கள் நினைக்கும் குறிக்கோளுடன் நான் இங்கே வரவில்லை. அது உறுதி. நான் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்”

“ஓ…வாயை மூடுடா! நாம பேசுறது யாருக்காவது கேட்டா நம்ம நிலைமை என்ன்வாகும்னு யோசி. உஷ்ஷ்… அந்த ஆள் ஏதோ பேசுறான்”

அந்தக் கிழவனின் இருமல் ஒருவழியாக முடிவுக்கு வந்ததைப் போல இருந்தது.

“என்னன்னு நான் விளக்கமா சொல்றேன். அன்பே!” என்று தொண்டைக்குழிக்குள் இருந்து காற்று மட்டும் வருகிற மாதிரியான குரலில் பேசினான் அந்தக் கிழவன். என்னன்னு நான் விளக்கமா சொல்றேன். அன்பே! …லொக்கு…லொக்கு…அப்பா…என்ன கஷ்டம் இது…ஃபெடோஸி இவானோவிட்ச் சொன்னான். ‘இனிமேல் நான் யாரோ பூ இலை டீ குடிக்க வேண்டுமாம். நான் சொல்றது கேக்குதா டியர்?”

“கேக்குது டியர்.”

“ஆமா…அதைத்தான் அவன் சொன்னான். நான் யாரோ டீ குடிக்கனுமாம். நான் அட்டைகளை வைத்து வைத்தியம் செய்து கொண்டு இருக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு அவன், “இல்லை…அலெக்ஸாண்டர் டெமியானோவிட்ச்! யாரோ டீ சிறந்தது. அது ஒரு நல்ல மலமிளக்கி என்றான். நான் உனக்கு விளக்….லொக்கு …லொக்கு…லொக்கு…நீ என்ன நினைக்கிறே அன்பே! லொக்கு….ஐயோ கடவுளே! லொக்கு…யாரோ டீ குடிப்பது நல்லதுதானே! லொக்கு…லொக்கு…ஓ…” அவன் இருமினான்.

“அந்த வைத்தியத்தைச் செய்து பார்ப்பது நல்லது என்றுதான் நானும் நினைக்கிறேன்” என்றாள் அவனுடைய மனைவி.

“ஆமா.. பண்ணிப் பார்க்கணும். உனக்கு காச நோய் இருக்கலாம் என்று சொன்னான் அவன். லொக்கு…லொக்கு….எனக்கு மூட்டு வலி… வயித்துல எரிச்சல்னு சொன்னேன். லொக்கு…லொக்கு….ஆனால் அது காசநோயாகத்தான் இருக்கும்னு அவன் சந்தேகப்படுறான். நீ என்ன நினைக்கிறே டியர்?..லொக்கு…லொக்கு…அது காச நோயா?”

“கடவுளே! என்ன பேசுறீங்க நீங்க?”

“என்ன பேசுறேனா? காச நோயைப் பத்திதான். சரி நீ உடை மாத்திகிட்டு படுக்கைக்கு போ. லொக்கு…லொக்கு….இன்னைக்கு எனக்குத் தலையில் கொஞ்சம் சளி புடிச்சு இருக்கு”

“ஊஃப்…என்று மூச்சு விட்டான் இவான் ஆன்ரேயிட்ச்… ”கடவுள் மேல ஆணை…எனக்குக் கொஞ்சம் இடம் கொடு”

“உனக்கு என்ன ஆச்சுன்னு எனக்குப் புரியல. கொஞ்ச நேரம் சத்தம் போடாமல் இருக்க மாட்டியா?”

“என்னைப் பத்தி நினைச்சாலே உனக்கு பத்திக்கிட்டு வருது நண்பா! என்னைக் காயப்படுத்துவது என்று முடிவெடுத்து விட்டாய். எனக்குத் தெரியும். இந்தப் பெண்ணோட காதலன் நீதான்னு நினைக்கிறேன்.”

“வாயை மூடுடா”

“நான் மூட மாட்டேன். எனக்கு நீ கட்டளையிட நான் அனுமதிக்க மாட்டேன். சந்தேகமே இல்லாமல் நீதான் அவளோட காதலன். நாம் பிடிபட்டால் என்னை யாரும் குற்றவாளியாக்க முடியாது. எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது.”

“இப்ப நீ மட்டும் வாயை மூடாமல் இருந்தாய் என்றால் என்னை இங்கே கூட்டி வந்ததே நீதான் என்று சொல்லிடுவேன்” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான் அந்த இளைஞன். “நீ என்னுடைய மாமா என்றும் சொத்து பத்து எல்லாம் இவர் கரைச்சுட்டார். மண்ணாகிப் போச்சுன்னு சொல்வேன். அதுக்கு அப்புறம் நான் அந்தப் பொண்ணோட காதலன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.”

“சார்…. என்னை வச்சு நீங்க காமெடி பண்றீங்க!…என்னோட பொறுமையின் எல்லையை சோதிக்கிறீங்க”

“கம்முன்னு இரு…இல்லேன்னா உன்னை கம்முன்னு இருக்க வைப்பேன். என்னைப் புடிச்ச சாபம் நீ! எதுக்கு நீ இங்கே வந்து தொலைச்சே! நீ வந்திருக்காவிட்டால் பேசாம நான் பாட்டுக்கு காலை வரை இங்கேயே படுத்து கிடந்துட்டு அப்புறம் வெளியே போயிருப்பேன்.”

“என்னால் எல்லாம் காலை வரை இப்படியே படுத்துக் கிடக்க முடியாது. நான் ஒரு மரியாதைக்குரிய மனிதன். எனக்கு குடும்பம் குட்டின்னு இருக்கு. சரியா… நீ என்ன நினைக்கிறே? கண்டிப்பா இந்த ஆள் இங்கே இரவு முழுவதையும் கழிக்க மாட்டான். “

“யாரு?”

ஏன்… இந்தக் கிழவனைத்தான் சொல்றேன்.”

“கண்டிப்பா இங்கேதான் இருக்கப் போறான். எல்லாக் கணவன்மார்களும் உன்னை மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் தங்களது இரவை தங்கள் வீட்டிலேயே கழிப்பார்கள்.”

“என் அன்பானவனே! என் அன்புக்குரியவனே! “பயத்தால் அழுதான் இவான் ஆன்ரேயிட்ச். இனிமே நான் என்னோட வீட்டிலேயே ராத்திரி தூங்குவேன்னு சத்தியம் செய்றேன். இதுதான் முதல் தடவை. ஆனால் கடவுளே!..நான் யார் தெரியுமா! நீ யாருப்பா! அதையாவது சொல்லேன். உன்னைக் கெஞ்சி கேக்கிறேன். நட்பு ரீதியா இல்லாவிட்டாலும் உன்னை கேக்கிறேன். நீ யாரு?”

“இங்கே பாரு…இனிமே நான் வன்முறையில் இறங்கிடுவேன்.”

“சார்…சார்…இந்த கருமம் பிடிச்ச சம்பவம் எப்படி நடந்ததுன்னு சொல்ல கொஞ்சம் அனுமதி கொடுப்பா.”

“எந்த விளக்கத்தையும் நான் கேக்க மாட்டேன். அது எனக்குத் தேவையும் இல்லை. அமைதியா இரு….இல்லையேல்….”

“இல்லை…என்னால் இருக்க முடியாது…”

கட்டிலுக்கு அடியில் ஒரு சிறிய சச்சரவு ஏற்பட்டது. பிறகு இவான் ஆன்ரேயிட்ச் அமைதியானான்.

“அன்பே! ஏதோ பூனைகள் சண்டை போடுவது போல சத்தம் கேட்கிறது இல்ல”

“பூனைகளா! அடுத்து என்ன கற்பனை பண்ணுவீர்கள்?”

“பூனைதான் அன்பே! ஒரு நாள் நான் படிப்பதற்காக சென்றேன். அங்கே ஒரு மண்டைப் பூனை நின்று கொண்டிருந்தது. என்னை பார்த்து ஹிஸ்..ஹிஸ்..ஹிஸ் னு சத்தம் போட்டது. “உனக்கு என்ன வேணும்னு கேட்டேன். மறுபடியும் ஹிஸ்..ஹிஸ்னு சொல்லிக்கிடே இருந்துச்சு. ஏதோ முணுமுணுக்கிற மாதிரி இருந்துச்சு. “கடவுளேனு நினைச்சுப் பார்த்தேன். “ஹிஸ்ஸிங்க் சத்தம் ஒன்னும் என் சாவோட அறிகுறி இல்லையே?”

“என்ன லூசுத்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க இன்னைக்கு? இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கமா இல்லையா?

“சரி…சரி…மனசுல வச்சுக்காதே அன்பே! ரொம்பவும் கடுமையா பேசாதே! எனக்குத் தெரியும் நான் சாவதைப் பற்றி நீ நினைத்துப்பார்க்க விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது அதுவல்ல. சரி அது இருக்கட்டும் நீ உடை மாற்றிக்கொண்டு படுக்க போ… நான் இங்கே கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.”

“அதுக்கு அப்புறமாவது கிளம்புங்க”

“நல்லது…சரி எரிச்சல் அடையாதே…ஆனால் எனக்கென்னமோ இங்கே எலிகள் சுத்திகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது”

“முதல்ல பூனைகள்…அப்புறம் எலி…உங்களுக்கு என்னாச்சுன்னே தெரியல”

“சரி சரி……எனக்கு ஒன்னும் இல்லை. லொக்கு….நான்….லொக்கு….நீ ஒன்னும் நினைக்காதே…லொக்கு…லொக்கு…லொக்கு…லொக்கு….கடவுளே எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்டு…லொக்கு….”

“கேட்டாயா… நீ இப்படி ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணிகிட்டு இருந்தா அந்த ஆள் கேட்டுட்டான் பாரு…” இளைஞன் குசுகுசுத்தான்.

“இப்ப எனக்கு என்ன ஆகிக்கிட்டு இருக்குன்னு உனக்கு தெரிஞ்சா…. இங்க பாரு என்னோட மூக்குல ரத்தம் வருது”

“நல்லா வரட்டும். வாயை மூடிட்டு இரு…. அவன் போற வரைக்கும் சும்மா இரு”

“நண்பா! என்னோட இடத்துல இருந்து பாரு. யார்கூட இங்கே நான் படுத்துக் கிடக்கிறேன்னு கூட எனக்குத் தெரியலேயே”

“அது தெரிஞ்சா அதனால உனக்கு என்ன பெரிய பிரயோசனம்? உன்னொட பெயரைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லைதான். இருந்தாலும் கேக்கிறேன். உன் பெயர் என்ன?”

“இல்லை…என் பெயர் உனக்கு எதுக்கு? அதை வச்சு என்ன பண்ணப் போறே? நான் சொல்ல் விரும்புவதெல்லாம் இந்த மாதிரியான முட்டாள்தனமான சூழ்நிலையில் நாம்….”

“உஷ்ஷ்….அவன் மீண்டும் பேசுகிறான்.”

“நிஜமாத்தான் சொல்றேன் அன்பே! ஏதோ முணுமுணுப்புச் சத்தம் கேக்குது”

“ ஓ…அப்படியெல்லாம் ஏதுமில்லை…உங்களோட காதுக்குள்ள இருக்கும் பஞ்சு கீழே விழுந்திருக்கும்”

“ஓ…அதிருக்கட்டும்… காதுக்குள்ள பஞ்சு இருந்ததா என்ன… உனக்குத் தெரியுமா மேல்மாடியில…. லொக்கு…லொக்கு….லொக்கு…மேல்மாடில….”

“மேல்மாடியா? என்று முனகினான் அந்த இளைஞன். “இதென்ன கொடுமை! இதுதான் கடைசி மாடின்னு நினைச்சேன். அப்ப இது இரண்டாவது மாடிதானா?”

“இளைஞனே! இவான் ஆன்ரேயிட்ச் அவனிடம் முணுமுணுத்தான். “என்ன சொன்னே! கடவுளே! அது சரி…எந்த மாடியாயிருந்தா என்ன? உனக்கு அதைப்பத்தி என்ன கவலை? இதுதான் கடைசி மாடின்னு நானும்தான் நினைச்சேன். கடவுள் மேல சத்தியம்…தயவு செஞ்சு சொல்லு…இதுக்குமேலயும் ஒரு மாடி இருக்கா?”

“நிஜமாவே யாரோ அசைகிற மாதிரி தெரியுது” என்று இறுதியாக ஒரு இருமலை வெளியேற்றிவிட்டு சொன்னான் கிழவன்.

“உஷ்ஷ்…. அவன் சொன்னது கேட்டுச்சா? இவான் ஆன்ரேயிட்சின் கைகளை இறுக்கிக்கொண்டு கேட்டான் அந்த இளைஞன்.

“சார்…என்னோட கையை இறுக்கமா புடிச்சிருக்கீங்க…என்னை விடுங்க”

“உஷ்ஷ்….”

அங்கு ஒரு சிறு சண்டை நிகழ்ந்தது. பிறகு அமைதி நிலவியது.

“ஆக நான் ஒரு அழகான பெண்ணை சந்தித்தேன். ….” என்று ஆரம்பித்தான் கிழவன்.

“அழகான பெண்ணா? …என்று இடைமறித்தாள் அவனுடைய மனைவி.

“ஆமா…படிக்கட்டில் ஒரு அழகான பெண்ணை சந்தித்தேன் என்று உனக்குச் சொன்னதாக நினைவிருக்கிறது. ஒருவேளை சொல்ல வில்லையோ? என்னுடைய நினைவாற்றல் குறைவாகிப் போச்சு. ஆமா…..St ஜான் பீர்…லொக்கு…லொக்கு….

“என்னது”

“St.ஜான் பீர் குடிக்கனும். அது நல்லா இருக்கும்னு எல்லோரும் சொல்றாங்க. லொக்கு,…லொக்கு…லொக்கு…அது நல்லது இல்லையா?”

“நீதான் அவனை பேசவிடாம இடையில் உளறினே!” என்று பற்களை நறநற வென்று கடித்துக்கொண்டு பேசினான் அந்த இளைஞன்.

“நீங்க ஏதோ சொன்னீங்க…யாரோ அழகான பெண்ணை சந்தித்ததா சொன்னீங்க.. அவன் மனைவி தொடர்ந்தாள்.

“ஏஹ்…”

“அழகான பெண்ணைச் சந்தித்தீர்களா?”

“யார் சந்திச்சது?”

“ஏன்…நீங்கதான் சந்திச்சேனு சொன்னீங்க”

“நானா? எப்போ?”

“ஓ…ஐயோ கடவுளே”

“கடைசில…இம்புட்டுதானா..அட ஜடமே! அந்தக் கிழவனின் மறதியை நினைத்து உள்ளுக்குள் புழுங்கியபடி முணுமுணுத்துக்கொண்டான் இளைஞன்.

“அன்பானவனே! நான் பயத்தால் உறைந்து போயிருக்கிறேன். கடவுளே! நான் கேட்பது உண்மைதானா! இது எல்லாமே நேத்து நடந்த மாதிரி இருக்கே… நேத்து நடந்த அதே மாதிரி!…”

“உஷ்ஷ்…”

“ஆமா…சரியாகச் சொன்னா எனக்கு நினைவு இருக்கிறது. பித்தலாட்டக்காரி… ஊதா நிற தொப்பியுடன்….”

“ஊதா நிற தொப்பியா? “அவதான் …அவளேதான்…”

“அது அவள்தான். அவள் கூட ஊதா நிற தொப்பி அணிந்து இருந்தாள். ஐயோ கடவுளே!” என்று அலறினான் இவான் ஆன்ரேயிட்ச்.

“அவள்னா? எவ அது?”  ஆன்ரேயிட்சின் கைகளை நசுக்கியவாறு கேட்டான் இளைஞன்.

“உஷ்ஷ்…” இப்போது இவான் ஆன்ரேயிட்ச் அவன் பங்குக்குச் சொன்னான். “இதோ இவன் பேசுகிறான்.”

“ஆஹ்… கடவுளே… கடவுளே!!”

“தெரியாமல்தான் கேக்கிறேன். யாரிடம்தான் ஊதா நிறத் தொப்பி இல்லை?”

“எப்படிப்பட்ட குட்டி ஏமாற்று சிறுக்கி தெரியுமா அவள்? கிழவன் தொடர்ந்தான். அவளுடைய நண்பர்களைப் பார்க்க அவள் இங்கு வருவது வழக்கம். பார்ப்பவர்களை வசியம் பண்ணப்போவது போல பார்ப்பாள். நண்பர்களும் அவர்களுடைய மற்ற நண்பர்களைப் பார்க்க இங்கே வருவார்கள்…..”

“ப்பூபூ…. இதெல்லாம் சும்மா… அந்தப் பெண் இடைமறித்துப் பேசலானாள். “இந்த மாதிரி உதவாக்கரை விஷயங்களில் உங்களால் எப்படிக் கவனம் செலுத்த முடிகிறது?”

“சரி…சரி… அதைப்போய் பெரிது படுத்தாதே. அவளைப் புகழ்வது போல சமாதானம் செய்ய முயன்றான் கிழவன். “நான் பேசுவதை நீ கவனிக்க விரும்பவில்லையென்றால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். என்னமோ தெரியல… இன்னைக்கு நீ சிரிச்சு பேசவே மாட்டேங்கிறே!”

“சரி… நீ எப்படி இந்த இடத்துக்கு வந்தே” என்று கேட்டான் இளைஞன்.

“பார்த்தியா… பார்த்தியா… இப்ப ஆர்வம் வந்திருச்சு… முன்னாடி நீ கேக்கத் தயாரில்லை”

“ஓகே… எனக்கு ஒரு அக்கறையும் இல்ல. தயவு செஞ்சு நீ எதுவும் சொல்லிடாதே! என்ன சாபமோ! இந்த குழப்பமெல்லாம் நடக்கணும்னு எழுதியிருக்கு”

“ரொம்ப வருத்தப்படாதே நண்பா! நான் என்ன சொல்றேன்னு எனக்கே தெரியல. நான் எதையும் தவறா அர்த்தப்படுத்திச் சொல்லல. நீ ஆர்வப்படுவதற்கு ஏதேனும் நல்ல காரணம் இருக்கலாம் என்ற நினைப்பில்தான் நான் அப்படிச் சொன்னேன். அதிருக்கட்டும். நீ யாரு நண்பா! உன்னைப் பார்த்தா புது ஆளு மாதிரி தெரியுது… யாருன்னுதான் தெரியல. நீ யாரு? ஐயோ! நண்பா! மன்னிச்சுக்கோ… மறுபடியும் நான் என்ன பேசுறேன்னே எனக்குத் தெரியவில்லை.”

“உஹ்ஹ்ஹ்… சரி அதைக் கொஞ்சம் விடுறியா? ப்ளீஸ்…” வேறு எதையோ சிந்தித்தவனாய் இளைஞன் இடைமறித்துச் சொன்னான்.

“ஆனால் நான் உனக்கு எல்லாத்தையும் சொல்வேன்.. நான் சொல்ல மாட்டேன்னு நீ நினைத்திருக்கலாம். உன்மேல நான் கோபமா இருக்கேன்னு நீ நினைச்சிருப்பியே! ஓ.. இல்லை… இந்தா பாரு என்னோட கை….. நான் மனவிரக்தியில் இருக்கிறேன். அவ்வளவுதான், வேறொன்றுமில்லை. கடவுள் மீது ஆணையா சொல்லு. நீ எப்படி இங்கே வந்தேன்னு முதல்ல சொல்லு. எந்த மாதிரியான சூழ்நிலையில் வந்தாய்? என்னைப் பொறுத்தவரை எனக்கு மனவருத்தம் ஏதும் இல்லை. இல்லை… நிஜமாகவே இல்லை… இந்தாப்பாரு என்னோட கை. இங்கே வந்தப்புறம் அதை எவ்வளவு அழுக்காக்கிட்டேன் பாரு. இங்கே ரொம்ப தூசியாக இருக்கு. உணர்வுகள் உண்மையாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.”

“ம்ஹ்ஹ்… உன் கையை அந்தப் பக்கம் கொண்டு போ. இதுக்கு மேல நகர்வதற்கு இடமே இல்லை. அவன் வேற அவனோட கையை என் மேல வச்சு அழுத்திக்கிட்டு இருக்கான்.”

“இருந்தாலும் நண்பா! நான் சொல்றதை நீ அனுமதிச்சா நான் ஒன்னு சொல்லட்டுமா? என்னை ஒரு பிஞ்சு போன செருப்பை மதிக்கிற மாதிரி நீ மதிக்கிறே” என்று விரக்தியில் நிற்கும் ஒருவனின் குழைவான குரலில் அன்பைக் கலந்து அவனிடம் சொன்னான் இவான் ஆன்ரேயிட்ச். “என்னைக் கொஞ்சம் மரியாதையோடு நடத்து… கொஞ்சம்தான். உனக்கு நான் அதைப்பத்தி எல்லாத்தையும் சொல்றேன். நாம் நண்பர்களாக இருப்போம். என் வீட்டுக்கு உன்னை இரவு உணவுக்கு அழைக்கும் அளவுக்குக் கூட நான் தயார். நாம் இந்த மாதிரி அருகருகில் படுத்துக் கிடக்கக்கூடாது. நான் நேரடியாகவே சொல்றேன். நீ தப்பு பண்றே இளைஞனே! உனக்கு அது தெரியவில்லை…”

“அவன் அவளை எப்போது சந்தித்தான்?” அந்த இளைஞன் முணுமுணுத்தான். உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாய் இருந்தான் என்பதை அவன் தோற்றம் காட்டியது. “ஒருவேளை அவள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். உடனடியாக இந்த இடத்தை விட்டு நான் கிளம்பியாக வேண்டும்.”

“அவள்? அவள்னா யாரு? ஐயோ கடவுளே! எவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாய் இளைஞனே! மேல்மாடின்னு சொன்னதும் ஏதும் நினைக்கிறியா? கடவுளே… கடவுளே… என்னை ஏன் இப்படித் தண்டிக்கிறாய்?”

விரக்தியில் தனது முதுகைத் திருப்பிக்கொள்ள முயன்றான் இவன் ஆன்ரேயிட்ச்.

“அவள் யாரென்று தெரிந்துகொள்ள நீ ஏன் விரும்புகிறாய்? அது அந்தப் பேய்தானா அல்லது வேறு யாரோ யாருக்குத் தெரியும். எது எப்படியோ நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.”

“அன்பானவனே! என்ன அப்படிச் சொல்லி விட்டாய்? அப்புறம் என் நிலைமை என்னாவது? என்று புலம்பிக்கொண்டே இவான் ஆன்ரேயிட்ச் பக்கத்தில் இருந்தவனின் கோட்டின் நுனியை ஆற்றாமையோடு இறுகப் பற்றிக்கொண்டான்.

“நல்லது. நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன? இதோடு நீ நிறுத்திக்கோ… இல்லையேல் நீதான் சொத்துக்களை அழித்த என்னோட மாமான்னு அவர்களிடம் சொல்லி விடுவேன். அதுக்கப்புறம் அந்தக் கிழவன் அவனோட மனைவியின் காதலன் நான்தான் என்பதை நம்ப மாட்டான்”

“ஆனால் அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று நண்பா! நான் எப்படி உன்னுடைய மாமாவாக முடியும். இயற்கைக்குப் புறம்பானது. யாரும் உன்னை நம்ப மாட்டார்கள். ஏன்… ஒரு குழந்தை கூட அதை நம்பாது. இவான் ஆன்ரேயிட்ச் மறுபடியும் விரக்தியில் புலம்பினான்.

“அப்படீன்னா இந்த மாதிரி உளறிக்கிட்டே இருக்காதே. பான் கேக் மாதிரி படுத்துக்கிட. அனேகமா நீ இந்த இரவு முழுவதும் இங்கேதான் படுத்துக் கிடக்க நேரிடும். காலையில் கிளம்பி ஓடிவிடலாம். யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள். யாராவது ஒருவர் ஒருவர் நழுவி ஓடிவிட்டால், இன்னொரு ஆளும் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். ஒரு டஜன் பேர் இருந்தாலும் கூட. நீயே ஒரு டஜன் ஆட்களுக்கு சமம்தானே! கொஞ்சம் நகர்ந்து கொள்! நான் ஓடி விடுகிறேன்.”

“என்னை நீ மிகவும் காயப்படுத்துகிறாய் நண்பா! எனக்கு இருமல் வந்து இருமிட்டா என்ன செய்வது? இதையெல்லாம் யோசித்துப்பார்க்க வேண்டாமா?”

“உஷ்ஷ்…”

“என்ன அது? மேல்மாடியில் ஏதோ நடப்பதைப் போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கிழவன் சொன்னான். இடையில் தூங்கிவிட்டான் போல இருந்தது.

“மேல்மாடியா?

“சொன்னதைக் கேட்டாயா இளைஞனே? நான் ஓடப்போறேன்.”

“நல்லா கேளு… சத்தம் கேக்குது இல்லையா”

“ஐயையோ! இளைஞனே! நான் கிளம்புறேன்”

“ஓகே… நல்லது.. அப்ப நான் போகல. எனக்குக் கவலை இல்லை. ஏதாச்சும் பிரச்சினை வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால் நான் என்ன சந்தேகப்படுறேன் தெரியுமா? ஏமாற்றப்பட்ட கணவன் நீதான்னு தோணுது. அதானே?”

“அடப்பாவி! என்ன ஒரு குதர்க்கபுத்தி. நீ எப்படி அந்த மாதிரி சந்தேகப்பட முடியும்? அதுவும் கணவன்னு! எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை”

“திருமணம் ஆகவில்லையா? நான்சென்ஸ்”

“நான் ஒரு காதலனாக இருக்கலாம்.”

“ஆமா…ரொம்ப லட்சணமான காதலன்!”

“அன்பானவனே! அன்பானவனே! ரொம்ப நல்லது… என்னோட மொத்த கதையையும் சொல்றேன். துயரம் தோய்ந்த என் கதையை கேளு. அது நான் இல்லை. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. உன்னை மாதிரி திருமணமாகாதவன்தான் நானும். என்னுடைய நண்பன் ஒருவன் இருக்கிறான். என்னுடைய பால்ய காலத்து நண்பன். நான் வெறும் காதல் செய்பவன் மட்டும்தான். ஒருநாள் அவன் என்னிடம் தான் ஒரு மகிழ்ச்சியிழந்த மனிதன் என்று சொன்னான். கசப்பான அனுபவங்களை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். “எனது மனைவியை நான் சந்தேகிக்கிறேன்” என்றான். “எதனால் நீ அவளைச் சந்தேகப்படுகிறாய்? என்று கேட்டேன். நான் என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்கிறாய். நான் சொல்வதைக் கவனி நண்பா… ப்ளீஸ் கவனி. “பொறாமை என்பது ஒரு பித்துக்குளித்தனம்” என்று நான் சொன்னேன். “பொறாமை ஒரு கெட்ட குணம்” என்றேன். “இல்லை… நான் சந்தோசமே இல்லாத மனிதன்… நான் ஒரு குடிகாரன்… நான் என் மனைவியை சந்தேகப்படுகிறேன்.” என்று அவன் புலம்பினான். “நீ என்னுடைய நண்பன். என்னுடைய இளமைக்கால நண்பன். நாம் இருவரும் சந்தோசப்பூக்களை சேர்ந்து பறித்தோம். இன்பத்தின் சிறகுகளில் படுத்து உருண்டோம்” என்று அவனிடம் சொன்னேன். ஐயோ… நான் பாட்டுக்கு என்னென்னவோ புலம்பிகிட்டு இருக்கேன். நீ அதைக் கேட்டு சிரிச்சுகிட்டே இருக்கியே நண்பா… என்னை பைத்தியமாக்கிடுவே போலிருக்கே”

“இப்ப நீ பைத்தியம்தான்”

“நான் பைத்தியமாகிருவேன்னு சொல்லிக்கொண்டிருந்தபோதே நினைச்சேன் நீ இப்படி சொல்லுவேன்னு. சிரி.… சிரி… நல்லா சிரி நண்பா! நானும் இப்படித்தான் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் வழிதவறிப் போயிட்டேன். என்னுடைய மூளையில் ஏதாவது வீங்கித் தொலையப் போகுது”

“அது என்ன சத்தம் அன்பே? ஏதோ தும்மல் சத்தம் கேட்ட மாதிரி இருக்கு. நீ தும்மினாயா அன்பே!” என்று கேட்டான் கிழவன்.

“ஐயோ! கடவுளே!”

“த்ச்ச்” கட்டிலுக்குக் கீழே இருந்து தும்மல் சத்தம் கேட்டது.

படுக்கைக்குக் கீழே இருந்து சத்தம் கேட்டவுடன் அவனுடைய மனைவி உஷாரானாள். “மேல் மாடியில் அவர்கள்தான் ஏதோ சத்தம் போடுகிறார்கள்” என்று சமாளித்தாள்.

“ஆமா… மேல்மாடிதான். மேல்மாடியில் நான் சொன்னேன்ல நான் சந்திச்சேன்…. லொக்கு… லொக்கு…. இளமையான மீசையுடன் கூடிய வட்ட முகம் ஒன்றைப் பார்த்தேன். ஐயோ அம்மா… என் முதுகு….. இளமையான மீசையுடன் கூடிய வட்ட முகம்”

“மீசையுடனா? கடவுளே! அது நீயாகத்தான் இருக்க வேண்டும்” என்று இவான் ஆன்ரேயிட்ச் முணுமுணுத்தான்.

“இரக்கம் நிறைந்த இறைவா! என்ன மனிதன் இவன்! உன்னுடன் நான் எதற்கு படுத்துக்கிடக்கிறேன். அவன் எப்படிடா என்னைப் பார்த்திருக்க முடியும். அதுக்காக என் மூஞ்சியை இப்படி உத்து உத்து பார்க்காதே!”

“ஐயோ!… இன்னும் ஒரு நிமிடத்தில் நான் மயங்கி விழப்போகிறேன்”

தலைக்கு மேலே ஒரு பெரிய சத்தம் கேட்டது.

“அங்கே என்ன நடக்குது” என்று வினவினான் இளைஞன்.

“நண்பா! எனக்கு அதிர்ச்சியா இருக்கு,… பயமா இருக்கு… எனக்கு உதவு”

“உஷ்ஷ்”

“உண்மையாகவே அங்கே இருந்து சத்தம் வருது அன்பே! எப்போதும் கூட்டமா வந்து இப்படித்தான் இரைச்சலா இருக்கும். உன்னோட படுக்கையறைக்கு நேர் மேலா. யாரையாவது அனுப்பி விசாரிக்கலாமா?“

“சரி….அதுக்கு அப்புறம் என்ன மாதிரியான கற்பனையெல்லாம் உங்களுக்குத் தோன்றும்”

“சரி.. சரி.. விசாரிக்கல… ஆனால் இன்னைக்கு நீ ஏன் இவ்வளவு கிறுக்கு மாதிரி பேசுறே?”

“ஓகே டியர்… நீங்க போய் படுத்துத் தூங்கினா சரியாயிடும்

“லிசா.! என் மேல உனக்கு பிரியமே இல்லாமல் போயிருச்சு”

“அப்படியெல்லாம் இல்லை. உங்க மேல எனக்கு பிரியம் இருக்கு. கடவுளே… நான் ரொம்ப களைப்பா இருக்கேன்.”

“நல்லது… நல்லது… நான் கிளம்புறேன்.”

“ஓ… இல்லை… வேணாம் வேணாம்… போகாதீங்க” என்று அவன் மனைவி அலறினாள். “சரி சரி… போங்க”

“ஏன்…என்னாச்சு உனக்கு இன்னைக்கு? ஒரு நிமிடம் என்னைப் போகச் சொல்றே… மறு நிமிடம் வேண்டாங்கறே. லொக்கு… லொக்கு…. இது படுக்கிற நேரம்தான். லொக்கு…. லொக்கு…. அந்த பானஃபிடினோட மகளை…. லொக்கு…. லொக்கு… அந்த சின்ன பொண்ணை…. லொக்கு…. லொக்கு…. அவர்களோட சின்ன பொண்ணோட நூரம்பெர்க் பொம்மையைப் பார்த்தேன். லொக்கு… லொக்கு….”

“நல்லது… இப்ப பொம்மைக்கு வந்தாச்சா?”

“லொக்கு…. லொக்கு… அழகான பொம்மை…. லொக்கு….. லொக்கு….”

“அவன் குட்பை சொல்றான். இப்ப அவன் போய்டுவான். உடனே நாமும் வெளியே ஓடிடலாம். சொல்றது கேக்குதா? இனிமே நீ சந்தோசமா குதிக்கலாம்.” என்றான் இளைஞன்.

“ஓ… கடவுள் கருணை காட்டிட்டார்”

“உனக்கு இது நல்ல பாடம்”

“இளைஞனே! பாடமா? எதுக்கு? எனக்குத் தெரியும். நீ ரொம்ப சின்னவன். நீ எனக்கு எதையும் கற்றுத் தர முடியாது.”

“ஆனால் என்னால் கவனிக்க முடியும்”

“நண்பா! எனக்கு தும்மல் வருது…

“உஷ்ஷ்… தைரியமிருந்தா தும்மு”

“நான் என்ன பண்றது. ஒரு சுண்டெலி இங்கே இருக்கு. என்னால தும்மாம இருக்க முடியாது. என்னோட பாக்கெட்டுல இருந்து என்னோட கைக்குட்டையை வெளியே எடு… என்னால் அசையக்கூட முடியல.… கடவுளே… எனக்கு ஏன் இப்படியெல்லாம் தண்டனை?”

“இந்தா உன்னோட கைக்குட்டை. உனக்கு ஏன் இப்படி தண்டனை கிடைச்சு இருக்குன்னு நான் சொல்றேன். நீ பொறாமை பிடிச்சவன். நீ ஏன் பைத்தியம் பிடிச்சவன் மாதிரி இன்னொருவரின் வீட்டுக்குள் வேகமா நுழைஞ்சு இந்த கலாட்டா எல்லாம் பண்றேன்னு கடவுளுக்குத்தான் தெரியும்.”

“இளைஞனே! நான் கலாட்டா ஏதும் செய்யவில்லை”

“உஷ்ஷ்…”

“இளைஞனே! நல்லது கெட்டது பற்றி நீ எனக்குப் பாடம் எடுக்கக்கூடாது. உன்னை விட நல்லது கெட்டது அறிந்தவன் நான்.”

“உஷ்ஷ்….

“ஓ… கடவுளே… கடவுளே…”

“நீதான் இந்தக் கலாட்டாவுக்கெல்லாம் காரணம். பயந்தால் என்ன செய்யணும்னு கூட தெரியாத ஒரு இளம்பெண்ணை அநாவசியமா பயமுறுத்தி இருக்கே. நோயினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பாவம் அந்தக் கிழவனைத் தொந்தரவு செஞ்சிருக்கே. அந்த ஆளுக்கு ஓய்வு மட்டும் தேவைப்படுது. இது எல்லாத்தையும் நீ ஏன் செஞ்சே? காரணம் என்ன தெரியுமா? அக்கம் பக்கம் நமக்கு எதிரா என்னமோ நடக்குதுனு முட்டாள்தனமா கற்பனை பண்ணிக்கிட்டு நீ சுத்திக்கிட்டு திரிஞ்சதுதான். எந்த மாதிரியான பயங்கரமான சூழ்நிலையில் நீ வந்து மாட்டி இருக்கேன்னு இப்பத் தெரியுதா?

“தெரியுது நண்பா! எனக்கும் அது புரியாமல் இல்லை. ஆனால் அதைச் சொல்ல உனக்கு உரிமை இல்லை”

“வாயைப் பொத்துடா… இதுல உரிமையைப் பத்திப் பேச என்ன இருக்கு. இந்த சம்பவம் முடிவில் ஒரு துக்கமாகப் போய் முடியும் என்பதாவது உனக்குத் தெரியுதா? தன்னோட பொண்டாட்டியின் படுக்கைக்குக் கீழே நீ உருண்டுகிட்டு இருக்கேன்னு அவ மேல உயிரையே வச்சிருக்கிற அந்தக் கிழவனுக்குத் தெரிந்தால் மண்டை கிறுகிறுத்து என்ன செய்வான்னு யாருக்குத் தெரியும்? கட்டிலுக்குக் கீழே நீ தவழ்ந்து வந்த லட்சணத்தை எவராவது பார்த்திருந்தால் கண்டிப்பாகச் சிரித்திருப்பார்கள். உன்னை நல்ல வெளிச்சத்தில் பார்க்கணும் போல இருக்கு. உன்னைப் பார்த்தா கோமாளி மாதிரிதான் இருக்கும்.”

“நீ மட்டும் எப்படி இருப்பியாம்? உன்னைப் பார்த்தாலும் கோமாளி மாதிரிதான் இருக்கும். உன்னையும் நான் நல்லா பார்க்கனும்.”

“நான் சவால் விட்டுச் சொல்றேன். நீ கண்டிப்பா பார்ப்பே”

“ஒழுக்கமே இல்லாதவன் என்ற முத்திரையை நீ கைவசம் வைத்திருக்க வேண்டும் இளைஞனே!”

“ஆஹ்… ஒழுக்கத்தைப் பற்றி நீ பேசுறியா? நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? நான் இங்கே தவறுதலா வந்துட்டேன். எந்தத் தளம்னு சரியா தெரிஞ்சுக்காம வந்துட்டேன். எப்படி என்னை உள்ளே விட்டாங்கன்னு இந்த பிசாசுக்குத்தான் தெரியும். அவள் வேறு யாரையோ எதிர்பார்த்து இருந்தாள்னு நினைக்கிறேன். (கண்டிப்பா நீ இல்லைடா மூடமே!) உன்னோட காலடிச் சத்தம் கேட்டு அவள் பயந்தவுடன் நான் கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டேன். அப்போது ரொம்ப இருட்டா இருந்துச்சு. இதையெல்லாம் உன்னிடம் எதுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு கிறுக்கன். பொறாமை பிடித்தவன். நான் தவழ்ந்து போய் வெளியேறாமல் இருக்கிறேன் ஏன் தெரியுமா? வெளியே வருவதற்கு நான் பயப்படுகிறேன்னு ஒருவேளை நீ நினைக்கலாம். உண்மை அதுவல்ல. உன்மேல கொஞ்சம் இரக்கம் பிறந்ததால்தான் நான் வெளியேறாமல் இங்கேயே இருக்கிறேன். நான் இங்கே இல்லாவிட்டால் உன்னைப் பற்றி எந்த மாதிரியான அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும். சொல்லு. ஏதோ கம்பம் மாதிரி அசையாமல் திரு திருன்னு முழிச்சுகிட்டு நின்னிருப்பே. உன்னால் அடுத்து ஒன்னும் செய்ய முடியாது என்ற உண்மையைத் தெரிஞ்சுகிட்டு முழிப்பே!”

“நீ ஏன் அந்தப் பொருளை உதாரணம் காட்டிப் பேசுறே? என்னை ஒப்பிட்டு சொல்ல உனக்கு வேறு பொருளே கிடைக்கலையா இளைஞனே! அடுத்து என்ன செய்யனும் எனக்குத் தெரியாது எப்படிச் சொல்லலாம்? அடுத்து என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்.”

“ஓ… கருமமே! இந்த சொறிநாய் குரைக்கிறதை நிறுத்தாது போலிருக்கே!”

“ஓ… உண்மையாவா? ஏன்னா நீதான் விடாமல் உளறிகிட்டே இருக்கே. நீதான் நாயை உசுப்பி விட்டே. இப்ப பாரு…. இனிமே தொல்லை எப்படி வருதுன்னு பாரு.”

அதுவரைக்கும் மூலையில் தலையணை ஒன்றின் மீது தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் நாய் திடீரென்று விழித்துக்கொண்டது. யாரோ புதியவர்கள் இருப்பதை மோப்பம் பிடித்துக்கொண்டது. பலமாகக் குரைத்துக்கொண்டு கட்டிலுக்குக் கீழே சென்றது.

“ஐயோ… இந்தக் கிறுக்குப் புடிச்ச நாய் எங்கே இருந்து வந்து தொலைத்தது? என்று முணுமுணுத்தான் இவான் ஆன்ரேயிட்ச். “இது நம் எல்லோரையும் காட்டிக் கொடுக்கப்போகுது. இது வேற வேதனையா?”

“எப்படிப்பட்ட கோழை நீ. நல்லா வாங்கிக் கட்டு”

“அமி… அமி… இங்கே வா… என்று கத்தினாள் அந்தப் பெண். இங்கே… இங்கே…”. அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் நேராக இவான் ஆன்ரேயிட்சிடம் போய் நின்றது அந்த நாய்க்குட்டி.

“ஏன் அமிஸ்கா இப்படி குரைக்குது? என்று கேட்டான் கிழவன். எலியோ பூனையோ கட்டிலுக்கு அடியில் பதுங்கிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். ஒரு தும்மல் சத்தம் கூட கேட்டது இல்லையா?….. அந்தப் பூனைக்கு சளி புடிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்.”

“அசையாமல் இரு” என்றான் அந்த இளைஞன். “அப்படி இப்படி அசைஞ்சு தொலைக்காதே. அதுவா திரும்பிப் போயிடும்”

“சார்… என் கையை விடுங்க சார்… அதை ஏன் இப்படி புடிச்சுக்கிட்டு இருக்கீங்க”

“உஷ்… அமைதியா இரு…”

“கொஞ்சம் கருணை காட்டு நண்பா.. அது மூக்கைக் கடிக்கிற மாதிரி நிக்குது. எனக்கு மூக்கு இல்லாம மூளியா இருப்பதுதான் உனக்கு இஷ்டம். இல்லையா?”

அதைத் தொடர்ந்து ஒரு சிறு சச்சரவு நடந்தது. இறுதியில் இவான் ஆன்ரேயிட்ச் கையை விடுவித்துக்கொண்டான். நாய்க்குட்டி தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது. திடீரென்று குரைப்பது நின்றது. ஒரு நீண்ட சன்னமான ஊளைச் சத்தம் மட்டும் கேட்டது.

“ஐயோ!.. என்னாச்சு” என்று பதறிப்போனாள் அந்தப் பெண்.

“அட… அரக்கனே.. என்னடா பண்ணித் தொலைஞ்சே! என்று அலறினான் இளைஞன். நாம் இரண்டு பேரும் உன்னால இன்னைக்குத் தொலைஞ்சோம். கையில் எதைப் பிடிச்சுகிட்டு இருக்கே? “ஐயோ… அதன் கழுத்தை நெரிக்கிறானே! அதை விடுடா… அரக்கனே! இதை நீ செஞ்சா ஒரு பொண்ணோட மனசு எப்படிப்பட்டதுனு உனக்குத் தெரியலேன்னு அர்த்தம். அந்த நாய்குட்டி கழுத்தை நெரிச்சா அவள் நம்மை எளிதில் காட்டிக் கொடுத்துவிடுவாள்”

ஆனால் அதற்குள் இவான் ஆன்ரேயிட்ச் எல்லாவற்றையும் முடித்துவிட்டான். சத்தம் எதுவும் கேட்கவில்லை. அந்த நாய்க்குட்டியை எப்படியோ பிடித்துவிட்டான். தன்னை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு அதன் குரல்வளையை நெரித்துவிட்டான். அந்த நாயும் கத்திப்பார்த்து அந்தப் பிசாசிடம் சரணடைந்துவிட்டது.

“அவ்வளவுதான். நாம் தொலைஞ்சோம்” என்றான் இளைஞன்.

“அமிஸ்கா… அமிஸ்கா… என்ஸ்ரு அரற்றினாள் அந்தப்பெண். கடவுளே! அமிஸ்காவை அவர்கள் என்ன செஞ்சாங்கன்னு தெரியலயே! அமிஸ்கா… அமிஸ்கா… இந்தா இருக்கானுங்க… அரக்கர்கள்… காட்டுமிராண்டிகள்…. ஐயோ… அன்பே!… எனக்கு தலை சுத்துது”

“என்னாச்சு… என்னாச்சு…” என்று கத்திக்கொண்டே நாற்காலியிலிருந்து குதித்து அருகில் வந்தான் கிழவன். உனக்கு என்னாச்சு டார்லிங்” என்று அவளைப் பார்த்துக் கேட்டான். கட்டிலுக்கு அடியில் எட்டிப் பார்த்து விரல்களால் சுண்டி நாக்கினால் சத்தம் எழுப்பி “அமிஸ்கா… அமிஸ்கா.. அமிஸ்கா” என்று அழைத்துப் பார்த்தான் கிழவன். “அமிஸ்கா இங்கே வா… இங்கே வா.. என்று சொல்லிப் பார்த்தான். “பூனை அதைச் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அந்தப் பூனைக்கு அடி தேவைப்படுது அன்பே! எங்கிட்டே அடிவாங்கி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அடங்காத பூனையா இருக்கு. நீ என்ன நினைக்கிறாய் அன்பே!.. நான் வேண்டுமானால் ப்ரஸ்கோவ்யா ஸகரியேவ்னா கிட்டே பேசிப்பார்க்கவா? ஐயோ என்னாச்சு உனக்கு டியர்…? ஏன் இப்படி வெளிறிப்போய் இருக்கே? ஓ..ஓ… யாரங்கே.. யாரங்கே…. என்று கத்திக்கொண்டு அந்த அறையில் அங்குமிங்கும் ஓடினான் கிழவன்.

“கொடுமைக்காரர்கள். அரக்கர்கள்… சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு அழுதாள்

“யாரு… யாரு… யாரு….? என்று அலறினான் கிழவன்.

“இங்கே யாரோ திருட்டுப்பயல்கள் நுழைஞ்சு இருக்கானுங்க… அந்தக் கட்டிலுக்குக் கீழே… ஐயோ அமிஸ்கா…. உன்னை இப்படிப் பண்ணிட்டானுங்களே. படுபாவிகள்!” என்று அரற்றினாள் அவள்.

“அடக்கடவுளே! எந்தத் திருட்டுப் பயல்கள்… அமிஸ்கா…. டேய் யாரங்கே… இங்கே வாங்க…. இங்கே யார் இருக்காங்கன்னு பாருங்க… என்று கத்திக்கொண்டே மெழுகுவர்த்தி ஒன்றைப் பற்ற வைத்து கட்டிலுக்கு அடியில் துழாவத் தொடங்கினான் கிழவன்.

“யார்டா அது”

இவான் ஆன்ரேயிட்ச் பிணத்தைப் போல படுத்துக்கிடந்தான். பக்கத்தில் செத்துப்போன நாய்க்குட்டி கிடந்தது. அந்த இளைஞனோ கிழவனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக்கொண்டிருந்தான். சுவற்றோடு இருக்கும் கட்டிலின் அந்தப் பக்கத்திற்குச் சென்று கீழே குனிந்து கிழவன் தேடிக் கொண்டிருந்த நேரம் பார்த்து விலுக்கென்று கணப்பொழுதில் கட்டிலின் அடியிலிருந்து வெளியே வந்தான் அந்த இளைஞன். அந்தக் கிழவன் திருட்டுப்பயல்கலை அந்தப் பக்கம் தேடிக்கொண்டிருந்த போது விசுக்கென்று வெளியே ஓடினான்.

“ஐயோ!… இளைஞனைப் பார்த்து ஆச்சரியத்தில் கத்தினாள் அந்தப் பெண். “நீ யாருடா? நான்வேறு யாரோ ஒளிஞ்சுகிட்டு இருக்கான்னு….”

“அந்த அரக்கன் உள்ளேதான் இருக்கான். அமிஸ்கா இறந்ததுக்கு அவன்தான் காரணம்” என்றான் அவன்.

“ஐயையோ! என்று வீறிட்டாள் அவள். அதற்குள் அந்த இளைஞன் அந்த அறையை விட்டு வெளியே ஓடிவிட்டான்.

“இந்தா… இங்கே ஒருத்தன் இருக்கான்… இங்கே யாரோ ஒருத்தனோட பூட்ஸ் இருக்கு.” என்று சத்தமிட்டான் கிழவன். அவனது கைகளில் இவன் ஆன்ரேயிட்சின் கால்கள் இருந்தன.

“கொலைகாரன்… கொலைகாரன்….. ஐயோ… என் அமிஸ்கா… அமிஸ்கா என்று அழுதபடி அரற்றினாள் அந்தப்பெண்.

“வெளியே வாடா… வெளியே வாடா” விரிப்பின் மீது இரண்டு பாதங்களையும் அழுத்தி நின்றவாறு கத்தினான் கிழவன். “வெளியே வாடா… யார்டா நீ? கடவுளே! என்னவொரு வினோதமான பிராணி!”

“என்ன சொல்றீங்க… அவன் ஒரு திருடன்…”

“கடவுள் மீது ஆணையாக…. கடவுள் மீது ஆணையாக….. கெஞ்சிக்கொண்டே இவான் ஆன்ரேயிட்ச் வெளியே வந்தான். கடவுள் ஆணையாக… பிரபு தயவு செஞ்சு வேலைக்காரர்களைக் கூப்பிடாதீர்கள். பிரபு! யாரையும் கூப்பிடாதீர்கள். அதுக்கு அவசியம் இல்லை. என்னை நீங்கள் உதைத்து வெளியே தள்ள முடியாது. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நான் இங்கே வந்தது ஒரு கதை. பிரபு… இதெல்லாம் தெரியாத்தனமாக நடந்துவிட்ட ஒரு அசம்பாவிதம். உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறேன் பிரபு! மூச்சிறைத்துக்கொண்டு அழுதவாறு சொன்னான் இவான் ஆன்ரேயிட்ச். இதெல்லாத்துக்கும் காரணம் என்னோட மனைவிதான். ஆனால் அவள் என்னோட மனைவி இல்லை. இன்னொருவனின் மனைவி. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் வெறும்…. அவன் என்னோட நண்பன். என்னோட பால்ய கால நண்பன்…”

“என்னடா காது குத்துறே? பால்ய கால நண்பனாம்!” தரையில் ஓங்கி மிதித்துக்கொண்டு கத்தினான் கிழவன். “நீ ஒரு திருடன். இங்கே எதையோ திருடிட்டுப் போகத்தான் வந்திருக்கே. இளமைக்கால நண்பனாக அல்ல”

“இல்லை…. நான் திருடன் இல்லை பிரபு… உண்மையிலேயே நான் அவனோட பால்யகால நண்பன்தான். ஒரு விபத்தா நான் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். ஒரு தவறான இடத்துக்கு வந்துட்டேன்.”

“ஆமா.. ஆமா… நீ தவழ்ந்து வந்த இடம்தானே! பார்த்தாலே தெரியுது… தெரியுது…”

“பிரபு.. நான் அந்த மாதிரியான மனிதன் கிடையாது. நீங்கள் தவறாகப் புரிந்து இருக்கிறீர்கள். நீங்கள் என்னை மிகவும் தவறாகப் புரிந்து இருக்கிறீர்கள் பிரபு. அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். என்னைக் கொஞ்சம் பாருங்கள். என்னைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். நான் திருடனாக இருக்கவே முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிரபு! பிரபு! “ என்று கையெடுத்து அந்தப் பெண்ணைக் கும்பிட்டவாறு கெஞ்சினான் இவான் ஆன்ரேயிட்ச். “நீங்கள் ஒரு பெண். என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அமிஸ்காவை கொன்னது நான்தான். நான் சந்தோசத்தைத் தொலைத்த மனிதன். வாழ்க்கையின் கசப்புகளை மட்டுமே குடித்து வருகிறேன்.”

“அதனால் என்ன? நீ வாழ்க்கையின் கசப்புகளைக் குடித்தால் எனக்கென்ன வந்துவிடப்போகிறது? அனேகமா நீ அதை மட்டும் குடிக்கவில்லை. நீ இருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அதிருக்கட்டும்.. நீ எப்படி இங்கே வந்தாய்? உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டு கேட்டான் அந்தக் கிழவன். மேலோட்டமாக அவனுக்குத் தெரிந்த அறிகுறிகளில் இருந்தும் பேச்சில் இருந்தும் இவான் ஆன்ரேயிட்ச் ஒரு திருடனாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். “மீண்டும் கேட்கிறேன். நீ எப்படி இங்கே வந்தாய்? ஒரு திருட்டுப்பயல் மாதிரி உடைத்துக்கொண்டு நுழைந்திருக்கிறாய்!”

“திருடன் இல்லை பிரபு!… தெரியாம தவறான இடத்துக்கு வந்துட்டேன். உண்மையில் நான் ஒரு திருடன் இல்லை. இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட பொறாமைதான். அதைப் பத்தி சொல்றேன் பிரபு. என் அப்பாவிடம் சொல்வதைப்போல எல்லாத்தையும் உங்ககிட்ட வெளிப்படையாகச் சொல்லிடுறேன் பிரபு. நீங்களும் என்னோட அப்பாவின் மதிப்பான வயதையொத்து இருப்பதால் உங்களை நான் என் அப்பாவாகக் கருதியே சொல்றேன்.”

“அதென்னடா மதிப்பான வயது?”

“ஐயோ பிரபு! உங்களை சங்கடப் படுத்திட்டேன்னு நினைக்கிறேன். உண்மைதான் அழகான இளம் பெண்…. உங்க வயது இப்படி…. பார்ப்பதற்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கு பிரபு! இந்த மாதிரி தம்பதிகளைப் பார்க்கும்போது மனசு நிறைஞ்சு போகுது. வேலைக்காரர்களை மட்டும் கூப்பிடாதீர்கள். கடவுள் ஆணையா வேலைக்காரர்களை மட்டும் கூப்பிட்டு விடாதீர்கள். அவங்களுக்குத் தெரிஞ்சா சிரிப்பாங்க… எனக்கு அவங்களைப் பத்தி தெரியும். அதனால சமூகத்தின் கடைநிலையில் இருக்கிறவங்களை மட்டும்தான் எனக்குத் தெரியும்னு நினைச்சுற வேண்டாம். எனக்குச் சேவகம் செய்யவே ஒரு வேலைக்காரன் இருக்கிறான். எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருப்பானுங்க… கழுதைகள்! மரியாதைக்குரிய பிரபு! நான் நினைப்பது சரியென்றால் நான் இளவரசரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன், சரியா நான் சொல்வது?”

“இல்லை… நான் இளவரசனெல்லாம் கிடையாது. சாதாரண சுதந்திரமான குடிமகன். என்னை பிரபு என்று அழைத்து வெறுமனே புகழாதே! நீ எப்படி இங்கே வந்தாய்? எப்படி வந்தாய்”

“மரியாதைக்குரிய பிரபு!… அதாவது பிரபு…. மன்னிக்கணும்… நீங்களே உங்களுக்குப் பிரபு என்று நினைத்து விட்டேன். உங்களைப் பார்த்தேனா? உடனே அப்படி நினைச்சுட்டேன். எனக்கு இந்த மாதிரி அவ்வப்போது தோணும். உங்களைப் பார்த்தால் இளவரசர் கோரோட்கௌஹௌ மாதிரி இருக்கு. என்னோட நண்பர் மிஸ்டர் புஸிரேவோட வீட்டில் இளவரசரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. என்ன சொல்ல வர்ரேன்னா எனக்கு இளவரசர்களிடம் தொடர்பு உண்டு. இளவரசர்களை நான் சந்திப்பதுண்டு. என்னுடைய நண்பர்களின் வீட்டில் சந்திப்பேன். நீங்கள் நினைப்பது போல என்னை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் திருடன் இல்லை பிரபு… வேலைக்காரர்களைக் கூப்பிடாதீர்கள். அவர்களைக் கூப்பிடுவதால் என்ன பிரயோசனம் வந்து விடப்போகிறது?”

“அது சரி… நீ எப்படி இங்கே வந்தாய்? நீ யாரு” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமா… நீ யாரு? “கணவனும் அவளுடன் சேர்ந்து கொண்டான். “அன்பே! முதலில் பூனைதான் தும்முகிறது என்று நினைத்தேன். ஆனால் தும்மியது இவன்தான். டேய் புறம்போக்கு! யாருன்னு சொல்லுடா. யார் நீ”

கிழவன் தரை விரிப்பின் மீது மீண்டும் ஒருமுறை கால்களை உதைத்தான்

“என்னால் பேச முடியவில்லை பிரபு! நீங்கள் பேசி முடிக்கும்வரை நான் காத்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் நகைச்சுவைகளை நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கேவலமான கதை என்பேன். அதையெல்லாம் நான் விளக்கமாகச் சொல்கிறேன். மேலும் எந்தப் பீடிகையும் இல்லாமல் அந்தக்கதையை நான் சொல்கிறேன். அதாவது… தயவு செஞ்சு வேலைக்காரர்களை அழைக்காதீர்கள் பிரபு! என்னை மரியாதையுடன் நடத்துங்கள். நான் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கிடந்ததால் நான் ஒன்றும் குறைந்து போகவில்லை. அதனால் என்னுடைய கண்ணியம் ஒன்றும் குறைபட்டுப்போய் விடவில்லை. அதெல்லாம் ஒரு நகைச்சுவையான கதை பிரபு!” என்று சொன்னான் இவான் ஆன்ரேயிட்ச். அந்தப் பெண்ணைப் பார்த்து மரியாதையுடன் பேசுகிற பாவனையில், “நீங்க கூட இதைக்கேட்டா சிரிப்பீங்க மேடம்” என்றான். பொறாமை கொண்ட கணவன் எப்படி நடந்து கொள்வான் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் எந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டுள்ளேன். என் புத்திக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்கிறது. அவ்வளவு தாழ்ந்து போய்விட்டேன். நான்தான் அமிஸ்காவை கொன்றேன். ஐயோ கடவுளே! நான் என்ன உளறிக்கிட்டு இருக்கேன்னு தெரியலயே”

“அதையெல்லாம் விடு… இங்கே எப்படி வந்தே”

“இருட்டு இருக்கு பாருங்க… பிரபு!… அந்த இருட்டு பாருங்க!.. உங்களுடைய மன்னிப்பைக் கேட்டுக்கிறேன். மன்னிச்சுக்குங்க பிரபு! உங்களுடைய மன்னிப்பை ரொம்ப தாழ்மையோட கேட்டுக்கிறேன். நான் சும்மா ஒரு அவமானப்படுத்தப்பட்ட கணவன். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. நான் ஒரு காதலன்னு கற்பனை எதுவும் பண்ணிடாதீங்க பிரபு! நான் காதலன் இல்லை. எங்கிட்ட அபிப்ராயம் கேட்டா உங்க மனைவி சொக்கத் தங்கம்னு தயங்காம சொல்வேன். அவங்க ரொம்ப கண்ணியமானவங்க… வெகுளியானவங்க”

“என்ன? என்ன? இப்படியெல்லாம் பேச உனக்கு எவ்வளவு தைரியம்?” மறுபடியும் தனது கால்களைத் தரையில் ஓங்கி மிதித்தபடி கத்தினான் கிழவன். உனக்கு ஏதும் பைத்தியம் பிடித்துவிட்டதா? என் மனைவியைப் பற்றிப் பேச உனக்கு எவ்வளவு தைரியம்?”

“இவன் ஒரு கொடூரன்… கொலைகாரன்…. நம்ம அமிஸ்காவை கொன்ற பாவி” கண்ணீர் மல்க அழுதுகொண்டே சொன்னாள் அவன் மனைவி. “பண்றதையெல்லாம் பண்ணிட்டு இப்ப பேசுறதைப் பார்த்தீங்களா”

“பிரபு… பிரபு!… நான்தான் ஏதோ அசட்டுத்தனமாகப் பேசிட்டேன்.” இவான் ஆன்ரேயிட்ச் குழப்பத்துடன் உளறினான். “நான் பேசியது முட்டாள்தனம்தான். ஏதோ மனக்குழப்பத்தில் உள்ளவனாக நினைத்துக் கொள்ளுங்களேன். கருணைகூர்ந்து என்னை மனம் பேதலிச்சவனா நினைச்சுக்கோங்க… அப்படி நினைச்சாலே நீங்கள் எனக்குப் பெரிய உதவி செய்ற மாதிரி…… இதோ என் கையைப் புடிச்சுக்கோங்க… சத்தியமா இனிமே இது மாதிரி பண்ண மாட்டேன். நான் தனியானவன் இல்லை… எனக்கும் குடும்பம் உண்டு…. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் என்னை ஒரு காதலனாகக் கருதக் கூடாது. அதற்காகத்தான். ஐயோ கடவுளே! மறுபடியும் அதையே திரும்பத் திரும்ப பேசிகிட்டு இருக்கேனே. தப்பா எடுத்துக்காதீங்க பிரபு” என்று இவான் ஆன்ரேயிட்ச் அந்தப் பெண்ணிடம் கெஞ்சினான். “நீங்கள் ஒரு பெண். காதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும்… அது ஒரு மென்மையான உணர்வு இல்லையா? ஐயோ மறுபடியும் நான் என்ன பேசுகிறேன்? மறுபடியும் கிறுக்குத்தனமா பேசுறேனே! நான் என்ன சொல்ல வர்றேன்னா நான் ஒரு வயதானவன்… அதாவது நடுத்தர வயதுள்ளவன். கிழவன் இல்லை. அதனால் நான் உங்களுடைய காதலனாக இருக்க முடியாது. ரிச்சர்ஸன் அல்லது லவ்லேஸ் இவங்கதான் காதலர்களாக இருக்க முடியும்…. ஆஹ் மறுபடியும் முட்டாள்தனமா உளறுகிறேனே! ஆனால் பாருங்க பிரபு! நான் ரொம்ப மெத்தப் படிச்சவன். இலக்கியங்கள் பத்தி கொஞ்சம் தெரியும். நீங்கள் சிரிக்கிறீர்கள் பிரபு… உங்களுடைய நகைச்சுவை உணர்வைத் தூண்டிவிட்டது எனக்குச் சந்தோசமாக இருக்கு… நான் சந்தோசமாக இருக்கேன். உங்களுடைய நகைச்சுவை உணர்வைத் தூண்டிவிட்டதால் நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கேன் தெரியுமா?”

“அடக்கடவுளே! இவன் என்ன உலக மகா ஜோக்கரா இருப்பான் போலிருக்கே!” என்று சொல்லியபடி விழுந்து விழுந்து சிரித்தாள் கிழவனின் மனைவி.

“ஆமா அவன் ஜோக்கர்தான். இந்த மாதிரி குழப்பத்துல போய் மாட்டிக்கிட்டான்” கிழவனுக்கு அவன் மனைவி சிரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. “இவன் திருடனாக இருக்க முடியாது…. ஆனால் எப்படி உள்ளே வந்தான்?”

“அது நிஜமாகவே புதிர்தான். பெரிய புதிர். அது நாவல் மாதிரி ஒரு கதை. இல்லையா பின்ன? நட்ட நடு நிசியில்… கட்டிலுக்குக் கீழே ஒருத்தன்… வேடிக்கையா இருக்காதா பின்ன…ரினால்டோ ரினால்டினி கதாபாத்திரங்கள் மாதிரி…. ஆனால் அது பிரச்சினை இல்லை பிரபு… அது ஒரு பிரச்சினையே இல்லை… நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்லாம விடுவேனா? மேலும் மடியில் வச்சுக்கிற மாதிரி நாய்க்குட்டி ஒன்னு வாங்கித் தர்ரேன். ரொம்ப அழகான நாய்க்குட்டி ஒன்னு… நீளமான கோட்டு… குட்டையான கால்கள்…. ஒன்னு இரண்டு அடிகளுக்கு மேலா அதனால நடக்க முடியாது. கொஞ்ச தூரம் ஓடும்.. அப்புறம் கோட்டுக்குள் கால் சிக்கி கீழே விழும்… சர்க்கரையைத் தவிர எதையும் சாப்பிடாது… அந்த மாதிரி ஒரு நாய்க்குட்டியை நான் வாங்கிட்டு வர்றேன்.”

“ஹா..ஹா..ஹா..ஹா..” இவன் பேசுவதைக் கேட்டு அந்தப் பெண் உருண்டு உருண்டு சிரித்தாள். “ஐயோ இவன் பேசுறதைக் கேட்டுக்கிட்டு இருந்தால் எனக்குப் பைத்தியமே பிடிச்சிறும். எவ்வளவு பெரிய ஜோக்கரா இருக்கான் பாருங்க!”

“ஆமா..ஆமா… ஹா..ஹா..ஹா..ஹா.. லொக்கு…. லொக்கு… லொக்கு… ஆமா அவன் ஜோக்கர்தான். இந்த மாதிரி குழப்பத்துல போய் மாட்டிக்கிட்டான். லொக்கு…. லொக்கு… லொக்கு…”

“பிரபு… இப்ப நான் முற்றிலும் சந்தோசமா இருக்கேன். கையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனிமே இந்த மாதிரி கிறுக்குத் தனம் எதுவும் செய்ய மாட்டேன். நான் இதுவரை தவறு செய்து வந்திருக்கிறேன். இப்ப என்னோட கண்கள் திறந்துவிட்டன. என்னோட மனைவி பரிசுத்தமானவள். ரொம்பவும் வெகுளித்தனமானவள். அவளைப்போய் சந்தேகப்பட்டது என்னோட தவறுதான்.”

“மனைவியா? அவனோட மனைவியா!” சிரித்து சிரித்து கண்ணில் பெருகிய கண்ணீருக்கு இடையே சிரித்துக் கொண்டே கேட்டாள் கிழவனின் மனைவி.

“அவனுக்கு மணமாகி விட்டதா? சாத்தியமே இல்லை” என்னால் அப்படி கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை” என்றான் கிழவன்.

“பிரபு… என்னுடைய மனைவி இருக்கிறாளே! எல்லாம் அவளுடைய தவறுதான்… அதாவது என்னுடைய தவறுதான். நான்தானே அவளைச் சந்தேகப்பட்டேன். இங்கே யாரோ சந்தித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது… இங்கே மேல் மாடியில்தான். என் கையில் கடிதம் ஒன்று கிடைத்தது. எந்தத் தளம் என்று அறியாமல் தவறு செய்துவிட்டேன். கட்டிலுக்குக் கீழே மறைந்து கொள்ளும்படி ஆகிவிட்டது.”

“ஹி…ஹி…ஹி…ஹி…”

“ஹா..ஹா…ஹா…ஹா”

.“ஹா..ஹா…ஹா…ஹா” என்று இவான் ஆன்ரேயிட்சும் கடைசியாகச் சிரித்தான். “எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான். நாம் எல்லோரும் இப்படி மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது எவ்வளவு சந்தோசமா இருக்கு! என்னோட மனைவி ரொம்ப நல்லவள். அப்படித்தானே அவள் இருக்கிறாள் பிரபு?”

“ஹா..ஹா..ஹா… லொக்கு… லொக்கு…. அது யாருன்னு உன்னால அனுமானிக்க முடியுதா அன்பே” என்று சிரிப்பை அடக்கியவாறு தனது மனைவியை நோக்கி கேட்டான் கிழவன்.

“யாரது? ஹா..ஹா..ஹா”

“உத்து உத்து பார்ப்பாளே ஒரு அழகான பொண்ணு… கோமாளி கூட இருந்தாளே.. அவதான். அவதான் இவனோட பொண்டாட்டி”

“இல்லை பிரபு! அவள் என்னோட மனைவியாக இருக்க முடியாது. எனக்குக் கண்டிப்பாகத் தெரியும்.”

“சரி சரி… உனக்குக் கால தாமதம் ஆகுது இல்லையா!” சிரிப்பினூடே சொன்னாள் அந்தப்பெண். “ஓடு… மேல் மாடிக்கு ஓடு… ஒருவேளை நீ அவர்களைக் கையும் களவுமா பிடிக்கலாம்”

“கண்டிப்பாகப் பிரபு! இதோ பறந்து போறேன். ஆனால் நான் யாரையும் பார்க்க முடியாது பிரபு!. அது அவள் இல்லை. எனக்கு அது முன்னாடியே தெரியும். அவள் இப்ப வீட்டிலதான் இருப்பா. இது எல்லாம் என்னோட தவறுதான். என்னோட பொறாமை. அவ்வளவுதான். நீங்க என்ன நினைக்கிறீங்க? நான் அவர்களைக் கையும் களவுமா பிடிக்க முடியும்னு நீங்கள் நினைக்கிறீங்களா

“ஹி…ஹி…ஹி…ஹி…”

“ஹா..ஹா…ஹா…ஹா…. லொக்கு…லொக்கு….”

“போய்த்தான் பாரேன்… போ.. போ… திரும்பும்போது எங்கிட்டே வந்து சொல்லு” என்று சொன்னாள் அந்தப் பெண். “முடியலேன்னா நாளை காலை வந்து சொல்லு. அவளையும் கூட்டிட்டு வா. அவளுடன் நட்பு கொள்ள விரும்புறேன்.”

“குட் பை பிரபு! குட் பை” கண்டிப்பா அவளைக் கூட்டிக்கிட்டு வர்ரேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் விருட்டென்று சென்றான் இவான் ஆன்ரேயிட்ச். “கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன். எவ்வளவு அழகான நாய்க்குட்டி அது… இனிப்பான மாமிசம் கொண்டு பேக்கரிக்காரன் செய்த இனிப்பு மாதிரி! பார்ப்பதற்கும் ரொம்ப வேடிக்கையான பிராணி!… தான் அணிந்திருக்கும் கோட்டுக்குள்ளேயே கால் சிக்கி விழும்… உண்மையிலேயே அது மடி நாய்க்குட்டிதான். என் மனைவியிடம் சொன்னேன். அன்பே இது எப்படி இருக்கு? பாரு இது எப்பப் பார்த்தாலும் கீழே விழுந்துட்டே இருக்கு… ரொம்ப அழகான சின்ன குட்டின்னு அவ கொஞ்சுவா. சர்க்கரையால் செஞ்ச மாதிரி இருக்கும் பிரபு! குட் பை! உங்க கூட பழக வாய்ப்பு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.!!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!!!

இவான் ஆன்ரேயிட்ச் குனிந்து வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறினான்.

“ஹலோ சார்… கொஞ்சம் நில்லுங்க” சென்றுகொண்டிருந்த இவான் ஆன்ரேயிட்சைப் பார்த்துக் கூப்பிட்டான் கிழவன்.

மூன்றாவது முறையாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.

“அந்தப் பூனையை என்னால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் கட்டிலுக்குக் கீழே படுத்துக்கிடந்த போது அதைப் பார்த்தீர்களா? “

“இல்லை பிரபு! நான் பார்க்கவில்லை. உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது எனக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்று கருதுவேன்.”

“அந்தப் பூனைக்கு தலையில் சளி பிடித்து இருக்கு. அடிக்கடி தும்மிக்கிட்டே இருக்கு… அதுக்கு நல்லா அடி கொடுக்கனும்”

“ஆமா பிரபு… வளர்ப்பு பிராணிகளைக் கண்டிப்புடன் வளர்க்க இந்த மாதிரி தண்டனைகள் கொடுப்பதுதான் சரி.”

“என்ன சொல்றே?”

“நான் என்ன சொல்றேன்னா சரி செய்யும் தண்டனைகள் அவசியம்னு சொன்னேன். அப்பத்தான் வளர்ப்பு பிராணிகள் சொல் பேச்சு கேக்கும்”

“ஆஹ்… நல்லது… குட் பை…. இனிமே குட் பை சொன்னால்தான் நல்லது”

இவான் ஆன்ரேயிட்ச் தெருவுக்கு வந்தான். நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் அவனுக்கு வலிப்பு வந்தாலும் வந்துவிடும் போலத் தோன்றியது. தொப்பியைக் கழற்றினான். புருவங்களில் வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான். கண்களை இடுக்கிக்கொண்டு ஒரு நிமிடம் பார்த்தான். பின்னர் வீட்டை நோக்கி நடந்தான்.

அவனுக்கு ஆச்சரியம் தரும் வகையில் கிளாஃபிரா பெட்ரோவ்னா நெடுநேரத்துக்கு முன்பாகவே தியேட்டரில் இருந்து திரும்பி இருந்தாள். அவளுக்குப் பல் வலி இருந்தது. மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தாள். அட்டை வைத்தியம் மேற்கொண்டிருந்தாள். இப்போது படுக்கையில் படுத்தவாறு இவான் ஆன்ரேயிட்சை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

இவான் ஆன்ரேயிட்ச் நெற்றியில் அடித்துக் கொண்டான். வேலையாளைக் கூப்பிட்டு துணிகளைத் துவைக்குமாறு பணித்தான். கடைசியாக மனைவியைக் காண அவளுடைய அறைக்குள் நுழைந்தான்.

“இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே? எவ்வளவு கண்றாவி தோற்றத்துல இருக்கே பாரு… எதுக்கு இப்படி இருக்கே? இவ்வளவு நேரம் எங்கே போய் ஊர் சுத்திட்டு வர்ரே? நான் சொல்றதைக் கேளு… இங்கே உன் மனைவி செத்துக்கிட்டு இருக்கா… ஆனால் உன்னை இந்த நகரம் முழுக்க வலை வீசித் தேட வேண்டி இருக்கு. எங்கே போயிருந்தே? கண்டிப்பா நான் எங்கே இருக்கேன்னு துரத்திட்டு இருந்திருக்க மாட்டே. நான் யாரையாவது சந்திக்க வேண்டி ஏற்பாடு செய்திருந்தால் அதைப்போய் எப்படி தொந்தரவு செய்யலாம்னு திட்டம் போட்டிருப்பியே… வெக்கமா இல்லையா உனக்கு! நீ ஒரு கணவன்தானே! இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் எல்லோரும் நீ தெருவில் திரிவதைப் பார்க்கத்தான் போகிறார்கள்.”

“அன்பே…” என்று ஆரம்பித்தான் இவான் ஆன்ரேயிட்ச்.

இந்த இடத்தில் அவன் குழப்பம் மேலிட்டு நின்றான். பேசத் தொடங்கி வார்த்தைகளைத் தேடினான். வார்த்தையும் வரவில்லை… சிந்தனையும் ஓடவில்லை. பாக்கெட்டுக்குள் கைவிட்டு கைக்குட்டையை எடுக்க முயன்றான். அவனுக்கு அதிர்ச்சியும், கிலியையும் பரபரப்பையும் தரும் விதமாக அவனுடைய கைக்குட்டையோடு இறந்து போன அமிஸ்காவின் உடலும் வெளியே வந்து விழுந்தது. அவன் கட்டிலுக்குக் கீழேயிருந்து திடீரென்று வெளியே வரவேண்டிய சமயத்தில் விரக்தியினாலும் இனம் புரியாத பயத்தாலும் அமிஸ்காவை பாக்கெட்டுக்குள் அவன் திணித்தது அவனுக்கு நினைவில்லை. நாய்க்குட்டி இறந்ததை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மறைத்துவிடலாம் என்றும், குற்றத்தை எவர் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்துவிடலாமென்றும் அதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பி விடலாமென்றும் அவன் கணக்குப் போட்டிருந்தான்.

“இது என்ன?” என்று அலறினாள் அவனுடைய மனைவி….” கருமம்…. செத்துப்போன நாய் இது… இது எங்கே இருந்து வந்துச்சு? நீ என்னதான் பண்ணித்தொலைச்சே? எங்கே போய்த் தொலைச்சுருந்தே? எங்கே போயிந்தேன்னு இப்ப சொல்லப்போறியா இல்லையா?”

“அன்பே!…. ஏறக்குறைய செத்துப்போன அமிஸ்காவின் நிலைக்கு வந்துவிட்டவனைப்போல அவளைப் பார்த்துக் கெஞ்சினான் இவான் ஆன்ரேயிட்ச்…” அன்பே…”

இந்த இடத்தில் நம்முடைய கதாநாயகனை விட்டு விடுவோம்.- இன்னொரு சந்தர்ப்பம் வரும் வரை. இதே மாதிரியான வித்தியாசமான சாகஸங்கள் இனிமேலும் தொடங்கலாம். எல்லா பேரிழப்புகளையும், துரதிருஷ்டங்களையும் நாம் விளக்கமாக விவரிப்போம். ஒன்றை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். பொறாமை என்பது மன்னிக்கவே முடியாத கடும் பற்று. அதையும் தாண்டி சொல்லப்போனால் அது ஒரு நேர்மறையான துரதிருஷ்டம்.

 

ஆங்கில மூலம்: ஃப்யோதர் தோஸ்தோயெவ்ஸ்கியின் “Another Man’s Wife” சிறுகதை

 

ஆங்கில வழி தமிழாக்கம் -சரவணன்.கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.