1)நாடு மாறி நான்
சிவப்புக் காதோலை
கருப்பு வளையல்
ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்
களக்கக் கட்டிய பூச்சரங்களென
பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்
காவிரிக்கரையில்
முழு ஆடையோடு முழுகி
வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு
கரையேறும் கட்டுக்கழுத்திகள்
படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி
மஞ்சள் தோய்த்தச் சரடைக்
கழுத்தில் கட்டி முடித்தபின்
முகூர்த்த மாலைகள் ஆற்றில் வீசியெறியப்பட்டன
குளம் பிறந்த பின்
பிறந்த கிராமத்திலிருந்து
பொன்னியாற்றங்கரையேறி
மெயின் கார்டு கேட்டில் இறங்க
யோசனை தூரம் நீண்ட வரிசையில்
கடவுச்சீட்டின் தாகத்தை
நன்னாரி சர்பத் தீர்த்து வைத்தது.
பதினெட்டாம் பெருக்கன்று
கறுப்பு அட்டை கைக்கு வந்த களிப்பில்
தேங்காய்ப் பல் அரிசியில்
கருங்காலி எள் கலந்து இன்னும் கூடுதலாய்
இனித்தது கற்பகக்கட்டி
புடம்போட்ட ‘ பிங்க்’ அட்டை கைக்கு வந்தவுடன்
கறுப்புக் கடவுச்சீட்டில் ஓட்டையிட்டபோது
தேசப்பிதாவிற்குச் சற்று நேரம் நெஞ்சுவலி வந்தது
இப்படியாகச் சப்பரங்கட்டி இழுத்து வந்து
கல்லாங் ஆற்றில் கழித்து விடப்பட்ட
நாடுமாறி நான்.
2) வினோதமான மியாவ்
அந்த நாற்காலில் தனியாக
அமர்ந்திருந்தது அந்த பூனைக்குட்டி
அதன் விழிகளில்
இரண்டு பளிங்குக் கற்கள்
சும்மா இல்லை
அலைபாய்ந்தன
அவள் அந்தப் பூனைக்குப்
பாலூட்ட வருகிறாள்
மிருதுவான பாதங்கள் திரும்புகின்றன
அவளருகே நெருங்கிச் செல்கிறது
அவளருகே தயங்கித் தயங்கி நிற்கிறது
அவள் மெல்ல வருடிக்கொடுக்கிறாள்
அவள் தன் கரங்களால் தூக்குகிறாள்
அவள் மடியில் வசதியாக அமர்ந்துகொண்டது
இப்போது மியாவ் சத்தம்
வினோதமாகக் கேட்கிறது
3) சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும்
வெயிலை வரைந்து கொண்டிருந்த
தூரிகையிலிருந்து
இளமஞ்சள் திரவம்
வழிந்துக் கொண்டிருந்தது
இரண்டு கைகளிலும்
மணலை அள்ளிப்
பறக்கவிடுகிறாள் சிறுமி
வண்ணத்துப் பூச்சிகள்
பறந்து செல்கின்றன
பூக்களால் நிரம்பி
வழிந்தது கடற்கரை
அவளைத் தன் கால்களால்
தூக்கிக் கொண்டு வந்து
வீட்டில் இறக்கி விட்டுச்செல்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்.
இன்பா
கவிஞர்
எழுத்தாளர்
கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
ஙப் போல் நிமிர்
ஞயம்படச் சொல்
யாதுமாகி – சிங்கப்பூர் 50 பெண் கவிஞர்களின் 200 கவிதைகள் தொகுப்பு நூல்பரிசுகள்/விருதுகள்
கவிமாலை நடத்திய சிறந்த கவிதை நூல் போட்டி 2019ல் ‘ஞயம்படச் சொல்’ கவிதை நூலுக்கு தங்கப்பதக்க விருது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறி 18 ஆண்டுகள் ஆகிறது.
நாடுமாறி கவிதை ப்பா செம்மையா எழுதியிருக்கீங்க இன்பா
மிகச் சிறப்பு
நன்றி ப்ரியா.
வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்படும் மரத்தின் வலிசொல்லும் கவிதை. என்றாலும்
நாடுமாறுவது இப்போ பக்கத்து நகரத்தில் குடியேறுவது போலாயிற்று. நல்ல கவிதைகள்..
நன்றி பனசை
இறுதி வரிகள் முடிவு செய்கின்றன கவிதையின் உள்ளீடுகளை. நாடுமாறிய ஆற்றங்கரைவாசி கடல்கடந்து மீண்டும் சப்்பரமாய் மிதக்கவிடப்படுகிறாள் ஆற்றில் கட்டுக்கழுத்தி சடங்குகளை முடித்தவளாய்….அருமை!
பூனைக்கே பால்வார்க்கிறாள்! வித்தியாசமான இறுதிவரி மியாவ் வினோதமாய் கேட்கிறது பூனையிடம்!
அதீத கற்பனைகள் கவிதையை மெருகேற்றவும் செய்கிறது. வண்ணத்துப்பூச்சியின் கால்களில் வீடுநோக்கிப் பயணிக்கும் சிறுமியின் மனநிலையில் நான், குதியாட்டம் போட்டுக்கொண்டு…அழகிதழகிது!!
உங்களுக்குப் பிடித்ததிருந்ததில் மகிழ்ச்சியும் நன்றி
மூன்று கவிதைகளும் மூன்றுவிதமான உணர்வுகளைத் தருகின்றன. ஒவ்வொன்றின் மையக்கருவிலும் உயிர்த்துடிப்பு லப்டப் என்றடிக்கிறது. நாடுமாறி இழந்த அனுபவங்களில் வலிகள் சேர்த்ததும் வெய்யில் கால மணலில் வெறுங்காலுடன் நிற்கும் சூடு இருக்கிறது.
பூனையின் வித்தியானமான மியாவுக்கு நற்காரணங்கள் உண்டு.
வண்ணத்துப்பூச்சிகளால் தூக்கிச் செல்லும் மெல் இதயங்கள் வாய்ப்பது அரிது.
100 க்கு 110 மதிப்பெண் வழங்கி ‘ஆல் பாஸ் ‘ போடுகிறேன்.
நாடுமாறி – காவிரியிலிருந்து காலாங்கிற்குப் பயணப்படும் பெண்ணின் மன உணர்வுகளைப் பேசும் சித்திரம்
வினோதமான மியாவ் – அன்பெனும் பெருவெளி இயல்பையும் மாற்றிப்போடும் ஆற்றல் வாய்ந்த்தது என்பதைக் காட்டுகிறது
சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும் – பெண்களுக்கான உலகம் எண்ணிப்பார்க்க இயலா கற்பனைகளும் அழகியலும் சூழ்ந்தது என்பதைப் படம் பிடித்துக்காட்டும் கவிதை
இன்பாவுக்கு வாழ்த்துகள்💐
உங்களுடைய பின்னூட்டம் மேலும் ஊக்கப்படுத்துகிறது.
என்றும் அன்புடன்
மகிழ்ச்சியும் நன்றியும்