ஹாருகி முரகாமி நேர்காணல்கள்


ஹாருகி முரகாமி

ன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up Bird Chronicle கடந்த ஐம்பதாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த நாவலாக சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. Norwegian Wood, Hand – Boiled Wonderland and the End of the World, Dance Dance Dance, Kalfka on the Shore போன்ற நாவல்கள் பல இலட்சம் வாசகர்களை இவரது எழுத்தின்மேல் பித்துப்பிடிக்க வைத்திருக்கின்றன. After the Quake, The Elephant Vanishes, Blind Willow Sleeping Woman போன்றவை சிறுகதைத் தொகுப்புகள்.

ஹாருகி முரகாமி அளித்த இரண்டு பேட்டிகளின் தொகுப்பு இது. முரகாமி என்ற அதிசய மனிதருக்கு பல முகங்கள். இன்றைய தேதிகளில் ஜப்பானிய எழுத்தாளர்களில் தலையானவர் என்ற ஒருமுகம் தான் நமக்கு பரவலாகத் தெரியும். அதிகம் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு முரகாமி ஒரு மாரத்தான் ஓட்டவீர்ர். ஆம்! மாரத்தான்! குத்துச்சண்டை போட்ட எழுத்தாளர்கள், ஓவியம் வரைந்த எழுத்தாளர்கள், இன்னும் பலவித தொழில் முறையாளர்களை அறிவோம். முரகாமிக்கு நெடுந்தூர ஓட்டமும், நாவல் எழுதுவதும் ஆன்ம பரிசோதனையின் இரண்டு பக்கங்களாகவே இருப்பது இப்பேட்டிகளில் வெளிப்படுகிறது. முதலில் எழுத்தாளரின் பேட்டி, அடுத்தது மாரத்தான் ஓடும் அறுபது வயதுக்காரரின் பேட்டி.


நேர்காணல் 1 : 

Kafka on the Shore ஜப்பானில் 2002-ல் வெளிவந்தது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனவரி 2005-ல் தான் வரவிருக்கிறது. படைக்கப்பட்டு கணிசமான வருடங்கள் கடந்தபிறகு வெளிவரும் இந்தப் புத்தகத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

 பெரும்பாலான என் நாவல்கள் தற்கால பத்திரிகைத்தனமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவையல்ல என்பதால் இரண்டு மூன்று வருடங்கள் தாமதமாக ஆங்கிலத்தில் வருவது பெரிய பிரச்சனையல்லவென்று நினைக்கிறேன். ஒரு நாவலை மொழிபெயர்க்க பெரும்நேரம் பிடிக்கிறது. திரைப்படங்களை, சங்கீதத் தொகுப்புகளை அயல்நாடுகளைப் பெயர்த்துச் செல்வதைவிட இலக்கியத்தைக் கொண்டுசெல்வது மிக மெதுவாகத் தான் நடக்கிறது. இத்தகைய கால கட்டுப்பாடுகளைத் தாண்டி செல்லக்கூடிய வலுவான படைப்புகளையே நான் எப்போதும் எழுத விரும்புகிறேன். எனது நாவல்களில் நான் எழுத விரும்புவது மனிதர்களின் உணர்ச்சிகளில் இருக்கின்ற காலத்தையும், தூரத்தையும் கடந்து பகிர்ந்துகொள்ளக்கூடிய ஓர் உலகளாவிய சூழ்நிலைதான். 

உங்கள் நாவல் Norwegion Wood-க்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு அசாதாரணமானது. அப்படிப்பட்ட சமன் குலைக்கும் பிரபல்யத்திலிருந்து தவிர்க்க விரும்பும் ஒரு தனிமைவிரும்பியாக இருக்கும் நீங்கள், உங்கள் படைப்புகளுக்காக ஒரு பரந்த வாசகர் பரப்பு இருக்கவேண்டுமென்று விழைகிற ஒரு படைப்பாளியின் இச்சையை எப்படி கையாளுகிறீர்கள்?

எனது படைப்புகளுக்கு வாசகர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சுவாரஸ்யமான, ஈர்ப்புள்ள புத்தகங்களை எழுதுவதுதான் நான் செய்கின்ற காரியம். நான் எழுதுகிற புத்தகங்கள் அவர்களை எனது அடுத்து வரும் புத்தகத்தை வாங்கச் செய்ய வேண்டும். அவர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகத் தான் கடுமையாக முயலுகிறேன். இருபத்தைந்து வருடங்களாக எழுதுகிறேன். எழுதுவதைத்தாண்டி சொல்லிக் கொள்கிறார்ப்போல எதையும் நான் செய்திருக்கவில்லை. நல்லவேளையாக என் வாசகர்களின் எண்ணிக்கை நிதானமாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. வாசகர்களைத் தேடிச்செல்வது நானல்ல. புத்தகங்களே வாசகர்களை கண்டுகொள்ளும். நான் அப்படித்தான் பார்க்கிறேன்,  உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், பரிச்சயமற்ற மனிதர்கள், வாசகர்கள் முன்னால் நின்று பேசுவது பிடிக்காத விசயமாக இருக்கிறது. எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை வாழவிரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் சுரங்கப் பாதையில், பேருந்தில் செல்கிறேன். கடைத்தெருக்களில் நடக்கிறேன். நடைப்பயிற்சியும் செய்கிறேன். இந்த சுதந்திரம் என்னிடமிருந்து பிரிக்கப்படுவதுதான் நான் மிக வெறுக்கும் விஷயம்.

உங்களுடைய புத்தகங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக தங்களின் புனைவற்ற எழுத்துக்கள், ஆங்கிலத்தில் வெளிவரவேயில்லை. மேற்குலகில் உங்களை வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவ்வெவையென்பதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறது. அபுனைவு எழுத்துக்களில் எந்தெந்த விஷயங்களை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள்? அவற்றை வாசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா?

ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளையும், பயணநூல்களையும் ஜப்பானில் வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் எனது புனைவெழுத்துக்களைப் போல அவற்றை அயல்மொழிகளில் மொழிபெயர்ப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. Underground-டைத் தவிர மற்றவையெல்லாம் லேசாக கேளிக்கைத்தன்மை கொண்டவை தான். தினசரி நடப்புகள், உள்ளூர் நிகழ்வுகள் போன்றவற்றை வார்த்தை ஜாலங்களோடு சொல்கின்ற எழுத்துக்கள். அவற்றில் பல பகுதிகளை அயலகவாசகர்கள் புரிந்துகொள்வது இயலாததாக இருக்கும். ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன். எனது மிகச் சிறந்த அம்சமே, என் நாவல்களில் இருக்கின்ற எழுத்தாளனாகிய நான் தான்.

வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தக விற்பனை நிலையம் உங்களுடைய The Wind-up Bird Chronicle  நாவலை எக்காலத்திலும் சிறந்த 20 நூல்களில் ஒன்று எனத் தேர்வு செய்துள்ளது. உங்களது படைப்பு வாழ்க்கையில் இந்த நாவல் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது?

 என் எழுத்து வாழ்க்கையில் The Wind-up Bird Chronicle மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்த நாவல் மட்டும் வெளிவந்திராவிட்டால் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாசிரியனாக நான் கருதப்படுவது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நாவலை எழுதி முடிக்க கணிசமான நேரமும் உ.ழைப்பும் தேவைப்பட்டது. இந்த நாவலை உருவாக்கிய எனது படைப்பியக்கம் என்னை ஒரு நாவலாசிரியனாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்திச் சென்றிருக்கிறது. 

உங்களுடைய சில ஆரம்பகால புத்தகங்களும் கதைகளும் 80-களில் திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளன. பிறகு வெகுகாலம் கழித்து உங்கள் படைப்புகள் சிலவற்றை வேறு வடிவங்களில் உருவாக்கம் செய்து கொள்ள அனுமதித்திருக்கிறீர்கள், The Elephant Vanishes மேடை நாடகமாக்கப்பட்டிருக்கிறது. Tony Takitoni திரைப்படாகியிருக்கிறது. இந்த இயக்குனர்களின் பணி உங்களை சந்தோசப்படுத்தியிருக்கிறதா? வேறு சில முரகாமி புத்தகங்களும் பெரிய திரையில் பார்க்கக் கிடைக்குமா?

எனது படைப்புகளின் மேடை, திரைவடிவங்களை நான் பார்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். ஒரு படைப்பை உருவாக்கும்போது, அதனை ஒரு திரைப்படமாக, ஒரு நாடகமாக ஏற்கெனவே என் மனதில் உருவாக்கிக் கொண்டுதான் படைக்கிறேன். எனவே வேறு யாரோ ஒருவரின் திரை, நாடக வடிவங்களை பார்க்க எனக்கு விருப்பம் கிடையாது. ஒருவேளை அவை மிகச்சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு என் நண்பர்கள் எல்லாருமேThe Elephant Vanishes – ஐ சைமன் மெக்பானி அற்புதமான மேடை நாடகமாக ஆக்கியிருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் எனக்காக என் மனதில் உருவாக்கிக் கொண்டிருந்த பிம்பத்தை நான் சிதைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் படைப்புகளை திரைப்படங்களாக, நாடகங்களாக, உருமாறிக் கொள்ளக் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். இப்போது சில உருவாகிக் ஒகொண்டிருக்கின்றன. சில பேச்சுவார்த்தை அளவில் இருக்கின்றன. இருந்தும் உருவாக்குவது மிகச் சிரமமான காரியமென்றே நினைக்கிறேன். அதை அவ்வளவு எளிதாக செயல்படுத்திவிட முடியாது. நேர்மையாகச் சொன்னால், என் படைப்புகளை திரைப்படங்களாக மாற்றுவதில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. ஒருவேளை after the Quake-ஐ வூடி ஆலனோ, The Wind-up Bird Chronicle-ஐ டேவிட் வின்ச்சோ இயக்குவதாக இருந்தால் எனக்கு ஆட்சேபணையில்லை. அவற்றைப் பார்க்கக்கூடச் செய்வேன். 

      


நேர்காணல் 2 : 

திரு.முரகாமி, எது கடினமானது? நாவல் எழுதுவதா, மாரத்தான் ஓடுவதா?

எழுதுவது சந்தோஷமானது. பெரும்பாலும், ஒவ்வொரு நாளும், நான்கு மணி நேரம் எழுதுகிறேன். அதற்குப் பிறகு ஓடச் செல்கிறேன். ஒரு நாளைக்கு கட்டாயமாக 10 கி.மீட்டர்கள். அது சுலபமாக செய்து முடிக்கக்கூடியது. ஆனால் முழு மாரத்தான் தூரமான 42.195கி.மீ ஒரேடியாக ஓடுவது கஷ்டம். வலுக்கட்டாயமாக என் மீது நானே திணித்துக் கொள்ளும் சித்திரவதை அது. மாரத்தான் ஓடுவதன் முக்கியமான அம்சம் என்னைப் பொறுத்தவரை அதுதான். 

எது இனிமையானது, ஒரு புத்தகத்தை முடிப்பதா, மாரத்தான் முடி கோட்டை ஓடிக் கடப்பதா?

கதையின் இறுதியில் கடைசி முற்றுப்புள்ளியை வைப்பதென்பது ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதைப் போல ஓர் ஒப்பிட முடியாத தருணம். அதிர்ஷ்டசாலியான எழுத்தாளன் ஒருவன் தன் வாழ்நாளில் சுமார் பனிரெண்டு நாவல்கள் எழுதுவான். என்னிடம் இன்னும் எத்தனை நல்ல புத்தகங்கள் மிச்சமிருக்கின்றன எனத்தெரியவில்லை. ஒருவேளை இன்னும் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். ஆனால் ஓடும்போது இந்தவிதமான வரம்புகள் எதையும் நான் உணர்வதில்லை. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு தடிமனான புத்தகத்தை நான் வெளியிடுகிறேன். ஆனால், ஒவ்வொரு வருடமும் ஒரு 10 கி.மீ ஓட்டம், ஒரு பாதி மாரத்தான், ஒரு முழு மாரத்தான் ஓடிவிடுகிறேன். இதுவரை 27 மாரத்தான் ஓட்டங்கள் ஓடியிருக்கிறேன். கடைசி ஓட்டம் சென்ற ஜனவரியில். 28, 29, 30-ஆவது ஓட்டங்கள் விரைவில் நிகழும்.

உங்களது சமீபத்திய புத்தகத்தில் உங்களுடைய ஓட்ட அனுபவங்களையும், நெடுந்தொலைவு ஓட்டங்கள் உங்கள் எழுத்துப்பணிக்கு ஏற்படுத்தும் முக்கியத்துவத்தையும் விவரித்திருக்கிறீர்கள். எதற்காக இத்தகைய சுயசரிதைத்தன்மையோடு ஒரு புத்தகத்தை எழுதியள்ளீ்ர்கள்?

25 வருடங்களுக்கு முன், 1982-ம் வருடத்தில் முதன்முறையாக ஓடத்தொடங்கியதிலிருந்து இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை எதற்காகத் தேர்ந்தெடுத்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏன் கால்பந்து ஆடவில்லை?  நான் ஓடத் தொடங்கிய நாள் முதல்தான் ஒரு தீவிர எழுத்தாளனாக எனது இருப்பு உண்மையில் ஸ்தாபமனமாகியது என்றால் அதன் காரணம் என்ன? என் எண்ணங்களை பதிவு செய்யும்போதுதான் விஷயங்களை நான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன். ஓடுவதைப்பற்றி எழுதும்போது என்னைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்பதை கண்டுகொண்டேன்.

எதற்காக ஓடத்தொடங்கினீர்கள்?

என் எடையைக் குறைக்க விரும்பினேன். எழுத்தாளனாக என் ஆரம்ப வருடங்களில் நிறைய புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன். மனதை ஒருமுகப்படுத்துவதற்காக. பற்களும், விரல்களும் மஞ்சளாகிவிட்டன. 33-வது வயதில் புகைப்பிடிப்பதை நிறுத்துவதென்று முடிவெடுத்த போது என் இடுப்பைச்சுற்றி பட்டை பட்டையாக கொழுப்பு சேர்ந்திருந்தது. எனவே ஓடத் தொடங்கினேன். ஓடுவதுதான் நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக இருந்தது. 

ஏன்?

குழு விளையாட்டுகள் எனக்கு ஏற்றவையல்ல. நான் மட்டும் தனியாக, என் சொந்த வேகத்தில் செயலாற்றும்போது எனக்கு எல்லாம் எளிமையாக இருக்கின்றது. ஓடுவதற்கு உங்களுக்கு துணையாரும் தேவையில்லை. டென்னிஸுக்கு தேவைப்படுவது போல தனி மைதானம் தேவையில்லை. ஒரு ஜோடிக்கால்கள் போதும். ஜுடோ எனக்குப் பொருந்திவராது. நான் சண்டைக்காரனல்ல. நெடுந்தொலைவு ஓட்டம் என்பது மற்றவர்களோடு போட்டி போட்டு ஓடி ஜெயிக்கிற விஷயமல்ல. உங்களுடைய எதிரி நீங்களேதான். வேறு யாரும் சேர்த்தியில்லை. ஆனால் நீங்கள் ஓர் உள்ளார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். உங்கள் வரம்பை திரும்பத் திரும்பத் தாண்டிச் செல்வது, அதற்கு உங்களை வருத்திக் கொள்வது. ஓடுவதன் சாராம்சம் இதுதான். ஓடுதல் வலியுண்டாக்கக் கூடியது. ஆனால் வலி என்னை விட்டுவிலகுவதில்லை. அதனை என்னால் சமாளித்துக் கொள்ள முடியும். இதுதான் என் சுபாவத்திற்கு உசிதமானது.

அந்த சமயத்தில் உங்களுடைய உடற்தகுதி எவ்வாறு இருந்தது?

இருபது நிமிடங்கள் கழித்து எனக்கு மூச்சு முட்டியது. என் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது. கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. முதலில் நான் ஓடுவதை மற்றவர்கள் பார்ப்பது எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால் ஓடுவது என்பதை பல்விளக்கவதைப் போல என் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டேன். அதன் பிறகு வெகுவாக முன்னேறிவிட்டேன். ஒருவருடத்துக்குள் எனது முதல் அதிகாரபூர்வமற்ற மாரத்தானை ஓடினேன்.

நீங்கள் மட்டும் தனியாக ஏதென்ஸிலிருந்து மாரத்தான் வரை ஓடினீர்கள் இல்லையா?

ஆம். அதுதான் அசல் மாரத்தான். வரலாற்றுச் சிறப்புமிக்க மாரத்தான் ஓடுபாதை. ஆனால் நான் எதிர்திசையில் ஓடினேன். காரணம், போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஏதென்ஸை சென்றடைய நான் விரும்பவில்லை. 35கி.மீக்கு மேல் நான் எப்போதுமே ஓடியதில்லை. என் கால்களும், உடம்பின் மேற்பகுதியும் அப்போது போதிய வலுப்பெற்றிருக்கவில்லை. எதை எதிர்பார்ப்பதென்று எனக்குத் தெரியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடுவதைப் போல. 

எப்படி ஓடினீர்கள்?

அது ஜுலைமாதம். பயங்கர வெயில். விடியற்காலையிலேயே புழுக்கமாக இருந்தது. அதற்குமுன் நான் கிரீஸுக்குச் சென்றதில்லை. அரைமணி நேரம் கழித்து என் சட்டையை கழற்றிவிட்டேன். ஐஸ் கோல்டு பீர் சாப்பிடவேண்டும் போலிருந்தது. சாலையோரத்தில் செத்துக் கிடந்த நாய்களையும் பூனைகளையும் எண்ணிக் கொண்டே ஓடினேன். சூரியன் தாங்க முடியாததாக இருந்தது, தோலில் கொப்புளங்கள் தோன்றின. 3 மணி நேரம் 51 நிமிடங்கள் பிடித்தது. பரவாயில்லை, பாராட்டக்கூடிய நேரம்தான். எல்லைக்கோட்டைத் தாண்டியதும் ஒரு பெட்ரோல் நிலையத்தில் சில்லென்று தண்ணீரை மேலே ஊற்றிக்கொண்டேன். நான் ஆசைப்பட்ட பீரை அருந்தினேன். அந்த பெட்ரோல் நிலைய உரிமையாளன், நான் செய்துமுடித்த காரியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதும் எனக்கு ஒரு பூங்கொத்தைப் பரிசளித்தான்.

 

 

மாரத்தானில் உங்கள் சாதனை நேரம் என்ன?

1991-ல் நியூயார்க்கில் 3 மணி 27 நிமிடங்களில் ஓடியது. ஒரு கிலோ மீட்டருக்கு ஐந்து நிமிடங்கள். நான் பெருமைப்படக் கூடிய சாதனை அது. ஏனென்றால் அந்த ஓட்டத்தின் கடைசிப் பகுதி சென்ட்ரல் பார்க் வழியாகச் செல்லும்தடம் மிகக் கடினமானது. இந்த நேரத்தை முறியடிக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கு வயதாகி வருகிறது. மேலும் எனது தனிப்பட்ட நேர அளவுகளில் ஆர்வம் போய்விட்டது. எனக்கு நானே திருப்திப்பட்டுக் கொள்வது எனக்கு முக்கியம்.

ஓடும்போது முணுமுணுத்துக் கொள்ளும் மந்திரம் ஏதாவது உண்டா?

கிடையாது. அவ்வப்போது எனக்கு நானே கூறிக்கொள்வேன், ஹாருகி, உன்னால் முடியும். ஆனால் உண்மையில், நான் ஓடும்போது எதையுமே சிந்திப்பதில்லை.

எதையும் சிந்திக்காதிருப்பது சாத்தியமா?

நான் ஓடும்போது என் மனம் தன்னை காலியாக்கிக் கொள்கிறது. ஓடும்போது சிந்திக்கிற எல்லாமே இந்தச் செயலாக்கத்துக்கு கீழ்படிந்தே இருக்கிறது. ஓடும்போது என்மீது கவிகின்ற எண்ணங்கள் எல்லாமே சூறைக்காற்றைப் போலத்தான். திடீரென்று தோன்றி எதையும் மாற்றாமல் மறைந்துபோய்விடும். 

ஒவ்வொருநாளும் எப்படி உங்களை ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள்?

சில நாட்கள் வெப்பமாக இருக்கும். சிலநாட்கள் மிகவும் குளிராக இருக்கும். அல்லது மேகமூட்டமாக, இருந்தாலும் விடாமல் ஓடச் செல்வேன். ஒருநாள் ஓடப்போகாவிட்டால் அடுத்தநாளும் போகமாட்டேன் என்று எனக்குத் தெரியும். தேவையில்லாத பாரங்களை ஏற்று சுமந்திருப்பது மனிதஇயல்பில் இல்லாத ஒரு குணாம்சம். எனவே இந்த பழக்கங்கள் மாறிவிடும் அதற்கு அனுமதிக்கக்கூடாது. எழுதுவதற்கும் இது பொருந்தும். பழக்கம் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தினமும் எழுதுகிறேன். தொடர்ந்து ஓடுவதால் தசைநார்கள் மென்மேலும் வலுவடைவதைப் போலவே, தொடர்ந்து எழுதுவது எனது இலக்கிய அளவுகோலை மெதுவாக மென்மேலும் உயர்த்திக் கொண்டே செல்வதற்கு உதவும்.

நீங்கள் கூடப்பிறந்தவர் யாருமில்லாமல் ஒற்றையாய் வளர்ந்தவர். எழுதுதல் என்பது தனியாகச் செயல்படுவது. ஓடும்போதும் தனியாகத்தான் ஓடுகிறீர்கள். இவற்றிற்கெல்லாம் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதோ?

நிச்சயமாக. தனியாக இருந்து பழகிவிட்டது. தனியாக இருப்பதுதான் பிடித்தும் இருக்கிறது. என் மனைவிக்கு நேரெதிரான குணமாக, எனக்கு கூட்டமே பிடிப்பதில்லை. எனக்கு திருமணமாகி 37 வருடங்கள் ஆகின்றன. பெரும்பாலும் போராட்டம்தான். இதற்கு முன் பார்த்தவேலையில் விடியற்காலை வரை வேலை செய்வேன். இப்போது ஒன்பது பத்து மணிக்கெல்லாம் படுத்துவிடுகிறேன்.

ஓர் எழுத்தாளனாக, ஓட்டக்காரனாக ஆவதற்கு முன் டோக்கியோவில் ஒரு ஜாஸ் கிளப் நடத்தி வந்தீர்கள். மாற்றம் என்றாலும் மகத்தான மாற்றம் தான் இல்லையா?

கிளப் நடத்திக்கொண்டிந்தபோது பாருக்குப் பின்னால் நின்றிருப்பேன். உரையாடிக்கொண்டிருப்பதுதான் என் தொழில். அதை ஏழு வருடங்கள் செய்து கொண்டிருந்தேன். இயல்பில் நான் வாயாடி அல்ல. அப்போது ஒரு சத்தியம் செய்துகொண்டேன். இந்த வேலைக்குப் பிறகு, நான்  யாரிடம் பேசவிரும்புகிறேனோ, அவர்களிடம்தான் நான் பேசப் போகிறேன்.

புதிதாக ஒன்றைத் தொடங்க நேரம் வந்தாகிவிட்டது என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?

ஏப்ரல் 1978-ல் டோக்கியோவில் ஜிங்கு  அரங்கத்தில் ஒரு பேஸ்பால் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வெயில். பீர் அருந்திக்கொண்டிருந்தேன். யாகுல்ட் ஸ்வாலோஸின் டேவ் ஹில்டன் ஓர் அற்புதமான ஷாட் அடித்தபோது, அந்தக் கணத்தில் நான் ஒருநாவல் எழுதப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். அது ஓர் உன்னதமான உணர்வு. இப்போதும் அதை என் இதயத்தில் உணர்கிறேன். இப்போதும் அந்தப் பழைய திறந்தவெளி வாழ்க்கையை எனது புதிய மூடப்பட்ட வாழ்க்கையின் ஊடாக ஈடுசெய்து வருகிறேன். தொலைக்காட்சியில் ஒருபோதும் நான் தோன்றியதில்லை. வானொலியில் பேசியதில்லை. நூல் வாசிப்பு அரிதாகத்தான் செய்கிறேன். புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அதீதமான தயக்கம் எனக்கு உண்டு. மிக அரிதாகத்தான் பேட்டிகள் தருகிறேன். நான் ஒரு தனியன்.

ஆலன் ஸில்லிடோவின் The Loneliness of the Long Distance Runner படித்திருக்கிறீர்களா?

எனக்கு அந்தப்புத்தகம் பிடிக்கவில்லை. சலிப்பாக இருந்தது. ஸில்லிடோ ஓட்டக்காரர் அல்லவென்பதை நீங்கள் உடனே அறிந்துகொள்ளலாம். ஆனால் அதன் மையக்கருத்து நன்றாக இருந்தது. ஓடுவதன்மூலம் தன் அடையாளத்தை அந்த நாயகன் அறுதியிட்டுக் கொள்கிறான். அவன் சுதந்திரமாக உணரும் ஒரே நிலை. ஓடும்போது என்பதை அவன் கண்டுகொள்கிறான். இதனை என்னோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளமுடிகிறது.

ஓடுதல் உங்களுக்கு கற்றுத் தந்தது என்ன?

இறுதிக்கோட்டை நான் தொட்டுவிடுவேன் என்ற நிச்சயத்தன்மை எழுத்தாளனாக எனது திறமையில் நம்பிக்கை வைப்பதற்கு ஓடுதல் கற்றுத்தந்திருக்கிறது. எந்தளவுக்கு என்னை வருத்திக்கொண்டு உழைக்க முடியும். எப்போது அவசியத்திற்கு அதிகமாக நீண்டு செல்கிறது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஓடுவதில் ஈடுபடுவதால் உங்கள் எழுத்து மேம்பட்டிருக்கிறதா?

நிச்சயமாக. தசைகள் வலுவடைந்தால் மனமும் தெளிவடையும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழும் எழுத்தாளர்கள் சீக்கிரத்திலேயே மங்கிப்போகின்றனர். ஜிமி ஹென்றிக்ஸ், ஜிம் மாரிசன், ஜேனிஸ் ஜாப்ளின் போன்றோர் என் இளமையில் பெரும் நாயகர்களாக எனக்கு இருந்தனர். எல்லோருமே சின்ன வயதில் இறந்தவிட்டனர். மோஸார்ட், புஷ்கின் போன்ற மேதைகள்தான் அற்பாயுளில் இறந்துபோகத் தகுதியானவர்கள். இவர்கள் மேதைகளல்லர். ஜிமி ஹென்றிக்ஸ் பரவாயில்லை. ஆனால் போதை மருந்தினால் அழிந்தனர். கலாபூர்வமாக பணியாற்றுவது ஆரோக்கியக்கேடான விஷயம். அதை சமாளிக்க ஒரு கலைஞன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். ஒரு எழுத்தாளனுக்கு கதையை கண்டுபிடிப்பதென்பது அபாயகரமான விஷயம். ஓடுதல் அந்த அபாயத்தை தவிர்க்க உதவுகிறது.

இதை விளக்கமாகச் சொல்லமுடியுமா?

எழுத்தாளன் ஒரு கதையை உருவாக்கும்போது, அவன் தனக்குள்ளிருக்கும் விஷத்தை நேருக்கு நேராக எதிர்கொள்கிறான். உங்களுக்குள் அந்த விஷம் இல்லாவிட்டால் நீங்கள் உருவாக்கும் கதை மொண்ணையாக, நீர்த்துப்போனதாக இருக்கும். இது ஃபூகுவைப் போல, பஃப்பர் மீனின் சதைப்பகுதி மிகமிகச் சுவையானது.

ஆனால் அந்த மீனின் முட்டையும், ஈரலும், இதயமும் உயிர்கொல்லும் நச்சுத்தன்மை கொண்டவை. என் கதைகள் என் பிரக்ஞையின் இருண்ட, அபாயகரமான பகுதியில் பொதிந்திருக்கின்றன. என் மனதில் இருக்கும் நஞ்சை நான் உணர்கிறேன். எனக்கு வலுவான உடல் இருப்பதால் மிக அதிக அளவு நஞ்சையும் என்னால் தாக்குப் பிடிக்கமுடிகிறது. இளைஞராக இருக்கும்போது நல்ல உடல் வலிமையோடு இருக்கிறீர்கள். எனவே எந்தவித பயிற்சியும் இல்லாமலே அந்த விஷத்தை உங்களால் வெற்றி கொள்ள முடிகிறது. நாற்பது வயதுக்குப்பின் உங்கள் பலம் குறைகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் நடத்த முடியாவிட்டால் அந்த விஷத்தை உங்களால் சமாளிக்க முடியாது.

ஜே.டி.ஸாலிங்கர் தனது ஒரே நாவலான Catcher in the Rye- 32 வயதில் எழுதினார். தனக்குள்ளிருந்த விஷத்தை தாங்கமுடியாதளவுக்கு பலவீனமாகிவிட்டார் எனலாமா?

அவரது புத்தகத்தை நான் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தேன். அது மிக நல்ல நாவல். ஆனால் முடிவடையாதிருந்தது. கதை போகப்போக இருண்டு கொண்டே செல்கிறது. கதைநாயகனான ஹோல்டன் காஃபீல்ட்டுக்கு அந்த இருட்டுலகிலிருந்து வெளியே வர வழி தெரியவில்லை. எனக்கென்னவோ ஸாலிங்கருக்கும் வழி தெரியவில்லையென்றுதான் தோன்றுகிறது. விளையாட்டில் அவர் ஈடுபட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பாரோ? எனக்குத் தெரியவில்லை.

கதைகளுக்கான அகத்தூண்டல் உங்களுக்கு ஓடுவதால் கிடைக்கிறதா?

கிடையாது. ஒரு கதைக்கான ஆதாரத்தை விளையாட்டுத்தனமாகத் தேடிச்செல்லும் எழுத்தாளனல்ல நான். ஆதாரத்திற்காக நான் ஆழமாகத் தோண்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. என் ஆன்மாவின் இருண்ட பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தோண்டிச்சென்று அங்கே புதைந்திருக்கும் கதையை நான் கண்டெடுக்கவேண்டியிருக்கிறது இதற்காகவும் கூட என் உடல் நல்ல வலுவோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஓடத்தொடங்கிய பிறகு என்னால் நெடுநேரத்துக்கு மனதை ஒருமுகப்படுத்தியிருக்கிறது. மணிக்கணக்காக மனதை ஒருமுகப்படுத்தி இருட்டுக்குள் செல்லமுடிகிறது. இருட்டுக்குள் அப்படி போகும்போது வழியில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கின்றன. பிம்பங்கள், பாத்திரங்கள், உருவகங்கள், உடல்ரீதியாக நீங்கள் பலவீனமாக இருந்தால் அவற்றைத் தவறவிட்டுவிடுவீர்கள். அவற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உங்கள் பிரக்ஞையின் மேற்பரப்பிற்கு கொண்டுவரச் செய்ய உங்களுக்கு சக்தியிருக்காது. நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது முக்கியமான விஷயமென்பது, ஆதாரத்துக்குள் உங்களைத் தேடிக்கொண்டே செல்வதல்ல. இருட்டிலிருந்து திரும்ப மேலே வருவதுதான். ஓட்டத்திலும் இதே விஷயம்தான். என்ன விலை கொடுத்தாவது நீங்கள் கடக்கவேண்டிய இறுதிக்கோடு ஒன்று இருக்கிறது.

இதைப் போன்ற இருட்டுப் பிரதேசத்தில்தான் நீங்கள் ஓடும்போது இருக்கிறீர்களா?

அதோடு ஒப்பிடுகிறார்ப்போல ஏதோ ஒன்று நான் ஓடும்போது எனக்குள் இருக்கிறது. ஓடும்போது நான் அமைதியான இடத்தில் இருக்கிறேன்.

யு.எஸ்,ஸில் பல வருடங்களாக இருந்திருக்கிறீர்கள். அமெரிக்க ஓட்டக்காரர்களுக்கும் ஜப்பானிய ஓட்டக்காரர்களுக்கும் வேறுபாடு இருக்கின்றனவா?

இல்லை. ஆனால் கேம்பிரிட்ஜில் (ஹார்வர்டில் உறைவிட எழுத்தாளராக இருந்த காலத்தில்) உயர்குடி உறுப்பினர்கள் ஓடுகிற விதம் சாதாரணமானவர்கள் ஓடுவதிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை கவனித்திருக்கிறேன். 

எப்படிச் சொல்கிறீர்கள்?

நான் சார்லஸ் நதியோரமாகத்தான் ஓடுவேன். அந்தத் தடத்தில் இளம்பெண்களும் ஹார்வர்டின் மாணவர்களும் தமது செவிகளில் ஐ பாடுகளை அணிந்துகொண்டு பொன்னிறப் பின்னல் முன்னும் பின்னும் புரள, நீண்டதாக கால்வீசி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அவர்கள் மொத்த உடம்பும் பிரகாசிக்கும். தாம் வழக்கத்துக்குமாறான அசாதரணர்கள் என்ற பிரக்ஞை அவர்களிடம் பரிபூரணமாகத் தெரியும். இந்த சுய பிரக்ஞை என்னை ஆழமாக பாதித்திருக்கிறது. அவர்களைவிட நான் ஒரு சிறந்த ஓட்டக்காரன், ஆனால் அவர்களிடம் என்னைவிட ஆக்கப்பூர்வமான புறமெய்மை ஏதோவொன்று இருப்பது பளிச்சென்று தெரிந்தது. என்னிடமிருந்து வெகுவாக மாறுபட்டு இருந்தனர். அந்த மேட்டுக்குடி குழாமில் ஓர் அங்கத்தினனாக என்னால் எப்போதுமே முடிந்ததில்லை.

ஓர் ஆரம்பநிலை ஓட்டக்காரனை அனுபவசாலியான ஓட்டக்காரனிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க உங்களால் முடியுமா?

ஆரம்பநிலை ஓட்டக்காரன் மிக வேகமாக ஓடுவான். அவன் சுவாசம் மேலெழுந்தவாரியாகத்தான் இருக்கும். அனுபவசாலி பதற்றமின்றி ஓடுவான். ஒரு அனுபவசாலி எழுத்தாளன் அவனைப் போன்ற இன்னொரு எழுத்தாளனனின் நடை, மொழி ஆகியவற்றை வைத்து அடையாளம் கண்டுகொள்வதைப் போலத்தான் இது.

உங்கள் கதைகள் மாய யதார்த்தவாத பாணியில்யதார்த்தம் மாயத்தோடு ஒன்று கலந்திட எழுதப்படுகின்றன, உங்கள் ஓட்டப்பயிற்சி என்பது உடல்ரீதியான இயக்கத்தைத் தாண்டி ஒரு மீயதார்த்தவாத (Surriealist) அல்லது மீபொருண்மைவாத (Metaphysical) பரிமாணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியுமா?

வெகுகாலமாகச் செய்துகொண்டிருக்கும் எந்தவொரு செயலும் ஒருவித ஆன்மீகத்தன்மையை கைக்கொண்டுவிடும். 1995-ல் நான் ஒரு 100கி.மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஓடிமுடிக்க 11மணி நேரம் 42 நிமிடங்கள் ஆனது. ஆனால் இறுதியில் அது ஒரு தெய்வீக அனுபவம்.

..ஹா!

55கி.மீ ஆனதும் நான் தளர்ந்து போனேன். என் கால்கள் கீழ்படிய மறுத்தன. எனு உடம்பை இரண்டு குதிரைகள் எதிரெதிர் திசைகளில் பிடித்து இழுப்பதைப் போலிருந்தது. 75-ஆவது கி.மீ தாண்டியதும் திடீரென்று என்னால் சரியாக ஓட முடிந்தது. வலி மாயமாக மறைந்துவிட்டது. நான் மறுகரையை அடைந்துவிட்டேன். சந்தோஷம் எனக்குள்ளே பெருக்கெடுத்தது. முடிவுக்கோட்டை கடந்தபோது எனக்குள் குதூகலம் நிரம்பியிருந்தது. இன்னும் கூட தொடர்ந்து என்னால் ஓடியிருக்கமுடியும். இருந்தாலும் அப்படிப்பட்ட அல்ட்ரா மாரத்தான் ஓடவே மாட்டேன்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

ஒருவித மனப்பேதலிப்பு. ஓடுவது மிகச் சலிப்பாக மாறிவிட்டது. 100கி.மீ ஓடுவது பயங்கர போரான விஷயம். நீங்கள் மட்டும் தனியாக 11 மணி நேரத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு உங்களை பிய்த்துத் தின்றுவிடும். ஓடுவதற்கான ஊக்கத்தையே என் ஆன்மாவிலிருந்து அது உறிஞ்சியெடுத்துவிட்டது. ஓடுவதற்கே சலிப்பாக இருந்தது பல வாரங்களுக்கு.

அப்புறம் எப்படி மீண்டு வந்தீர்கள்?

வலுக்கட்டாயமாக ஓட முயற்சி செய்து பார்த்தேன். நடக்கவில்லை. அதிலிருந்த சந்தோஷமும் போய்விட்டிருந்தது. எனவே, வேறொரு விளையாட்டை முயற்சி செய்துபார்க்கலாமென்று முடிவெடுத்தேன். ஒரு புதிய தூண்டுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் ட்ரையத்தலான் தொடங்கினேன். அது உதவியாக இருந்தது. சிறிது காலம் கழித்து ஓடுவதற்கான உ்ற்சாகம் திரும்பி வந்தது.

உங்களுக்கு 59 வயது முடிந்துவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் மாரத்தான் ஓட உத்தேசித்திருக்கிறீர்கள்?

என்னால் நடக்கமுடிகிற காலம் வரை ஓடிக்கொண்டிருப்பேன், எனது கல்லறையில் என்ன எழுதிவைக்க வேண்டுமென்று விரும்புகிறேன் தெரியுமா?

சொல்லுங்கள்.

“இந்த ஆள் நடக்கவே இல்லை!”


தமிழில் : ஜி.குப்புசாமி

முதல் பகுதி நேர்காணல்;  WBQ Magazine, 2004-ல் வெளிவந்தது.

இரண்டாவது பகுதி நேர்காணல்; Spiegel Online, 2008-ல் வெளிவந்தது.

[tds_info]

ஜி.குப்புசாமி (பி.1962) மொழிபெயர்ப்பாளர்

அயல் மொழி இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவரும் இவர் முக்கியமான சமகால எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்துவருகிறார்.
‘என் பெயர் சிவப்பு’ மொழிபெயர்ப்புக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருதும், SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருதும் (2012) இவர் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கிறார். [/tds_info]

குறிப்பு :  ஜி.குப்புசாமியின் “ அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்) “ நூலில் இடம்பெற்றுள்ள இந்த நேர்காணல் கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுள்ளது. அனுமதி அளித்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. !

நன்றி தட்டச்சு உதவி: சாருலதா


     

6 COMMENTS

 1. அருமை நேர்காணல் முயசியும் விடாப்பிடியும் நிறையவே இருக்கிறது ஒரு நாள் 4 மணிநேர எழுத்து 4 வருடத்திற்கு ஒரு காத்திரமான புத்தகம் முரகாபியை எல்லா வாசுகனும் தன்னுள் நிறைக்கவேண்டும் அருமையான பதிவு

  • வலுவான உடல், தெளிவான மனம் பயனுள்ள படைப்புகளை எழுத உதவுவது உண்மை..
   நன்றி.

 2. அருமையான, செழுமையான
  நம்பிக்கை ஊட்டும் நேர்காணல்
  பல திறப்புகளின் சாளரங்கள்
  ஜி குப்புசாமி அவர்களால்
  புதிய புதிய எண்ணங்களை
  தரிசனமாக வருஷிக்கிறது
  கனலி

  நன்றி
  நஹ்வி

 3. ஹாருகி மாரத்தான் ஓடும்போது வாசிக்கிறப்ப என்னை உணர்ந்த தருணம்.மிதிவண்டியில் சுற்றுகிற நான் சில நேரங்களில் 40 கி.மீ தூரம் சென்று வீடு திரும்பும்போது அலுப்பு வந்து ஓட்ட வீட்டை நினைத்து சிறிது சிறிது தூரம் நெருங்க உற்சாகம் வந்துடும்.ஹாருகிக்கு ஓடி முடிக்கிறது போல.எழுத்தாளர்கள் உடல் நலனில் அக்கறையை கொள்ள வேண்டும்.முரகாமி அக்கறை கொண்டுள்ளார்.நா.முத்துக்குமாரை இழந்தோமே……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.