இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில்[1] மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு வெளியே பாசி படிந்த செங்கற்சுவர்களே தென்பட்டன. ஜன்னல்களின் வெளிப்புறம் கனத்த இரும்புக் கிராதியோடு கூடிய சட்டங்கள் ஆணியடித்துப் பொருத்தப்பட்டிருந்தன. ஜன்னலின் கண்ணாடியைத் துளைத்து சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாதபடி மாவுத்துகள் அப்பிக்கிடந்தது. பிச்சைக்காரர்களுக்கோ, வேலை இல்லாமல் பசியால் வாடும் எங்களுடைய நண்பர்களுக்கோ ஒற்றை ரொட்டித்துண்டைக் கூட தர முடியாதபடி எங்கள் முதலாளி ஜன்னல்களை இரும்பினால் அடைத்துவைத்திருந்தார். எங்கள் முதலாளி எங்களை ‘ஏமாற்றுப் பேர்வழிகள்’ என்றார். மதிய உணவின் போது நல்ல இறைச்சிக்குப் பதிலாகக் கெட்டுப்போன குடலிறைச்சியை வழங்கினார்.

புகையும் ஒட்டடையும் படிந்த, தாழ்வான, பாரிய மேற்கூரையின் கீழிருந்த கற்பெட்டிக்குள் வாழ்க்கை இறுக்கமாகவும் திணறடிப்பதாகவும் இருந்தது. அழுக்கும் பூஞ்சையும் படர்ந்திருந்த கனத்தச் சுவர்களுக்குள் அது கடினமானதாகவும் துயரம் மிகுந்ததாகவும் இருந்தது. நாங்கள் தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்தோம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், அலுப்புடனும், எவ்வித ஆர்வமும் இல்லாமலும் எங்கள் பணியைத் துவக்குவோம். ஆறு மணிக்கெல்லாம் க்ரிங்கில்களைத் தயாரித்துக் கொண்டிருப்போம். முந்தைய இரவு நாங்கள் தூங்கிய பிறகு எங்கள் தோழர்கள் மாவைப் பிசைந்து தயாராக வைத்திருப்பார்கள்.   

காலையிலிருந்து இரவு பத்து மணி வரை ஒரு மேஜையின் முன்னால் பிசைந்த மாவில் க்ரிங்கில்கள் செய்துகொண்டும், மாவு காய்ந்துபோகாமலிருக்க முன்னும் பின்னும் உருட்டிக் கொண்டும் இருப்போம். இன்னொரு பக்கம் மற்றவர்கள் தண்ணீர் தெளித்து மாவைப் பிசைந்துகொண்டு இருப்பார்கள்.

நாள் முழுவதும் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும். ரொட்டி சுடுபவரின் துடுப்பு[2] வேகமாகவும் விசையுடனும் சூட்டடுப்பில் மோதிக்கொண்டும், நழுவும் வெந்த மாவை சுடுசெங்கற்களின் மீது சுழற்றி எறிந்துகொண்டும் இருக்கும். காலை முதல் இரவு வரை சூட்டடுப்பில் விறகுக்கட்டைகள் திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும். பணியிடத்தின் சுவர்களில் செஞ்சுவாலையாய் பிரதிபலிக்கும் அது, எங்களைப் பார்த்து சத்தமில்லாமல் சிரிப்பதைப் போலிருக்கும்.

அந்த மாபெரும் சூட்டடுப்பு பார்ப்பதற்கு ஒரு விசித்திரமான அரக்கனின் விகாரமான தலையைப் போல இருந்தது. நிலத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டு, செந்தழலாய் எரியும் வாயை அகலத் திறந்துகொண்டு, வெந்தணலாய் எங்கள் மீது மூச்சுவிட்டுக்கொண்டு, முன்னெற்றியில் இருக்கும் இரு காற்றுத் துளைகளின் ஊடாக எங்கள் ஓயாத உழைப்பினை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. அந்த இரு காற்றுத் துளைகளும்தான் அதன் கண்கள் – இரக்கமில்லாத, எந்த உணர்ச்சியும் இல்லாத அரக்கனின் கண்கள். அடிமைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனதைப் போல் எப்போதும் ஒரு இருண்ட பார்வை பார்த்துக்கொண்டிருந்தன. அவர்களிடம் துளியும் மனிதம் வெளிப்பட்டுவிடக்கூடாதென்று எதிர்பார்த்தன. மேதைமையின் ஆழ்ந்த இறுமாப்புடன் அவர்களைக் கடுமையாக வெறுத்தன.

மாவுப்பொடியிலும், முற்றத்துக்குப் போய்வரும்போது கால்களில் ஒட்டிக்கொண்டுவரும் தூசுகளிலும், வெக்கையிலும், புழுக்கத்திலும் நாங்கள் மாவைப் பிசைந்து க்ரிங்கில்களைச் செய்துகொண்டிருந்தோம். எங்கள் வியர்வையால் மாவின் ஈரப்பதம் காயாமல் பார்த்துக்கொண்டோம். அதீத காழ்ப்புடன் நாங்களே எங்கள் உழைப்பை வெறுத்தோம். எங்கள் கைகளால் செய்தவற்றை நாங்கள் ஒருநாளும் சாப்பிடுவதில்லை. க்ரிங்கில்களுக்குப் பதிலாகக் கருப்பு ரொட்டியே[3] மேல் என்று நினைத்தோம்.

நீளமான மேஜையில் ஒன்பது ஒன்பது பேர் எதிரெதிராக அமர்ந்துகொண்டு, முடிவற்ற மணிநேரங்கள், நாங்கள் என்ன செய்கிறோம் என்ற கவனம் இல்லாமலேயே கைகளையும் விரல்களையும் இயந்திரத்தனமாக இயக்கிக் கொண்டிருந்தோம்.

இப்போதெல்லாம் எங்கள் தோழர்களின் முகச்சுருக்கங்களைக் கூடத் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு நன்கு தேறியிருந்தோம். எங்களுக்கு எதையும் சொல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. நாங்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருக்கப் பழகியிருந்தோம். வசைபாடுவதற்காக மட்டுமே வாயைத் திறந்தோம் – ஏனெனில் எப்போதும் யாராவது ஒருவர் இன்னொருவர் மீது – முக்கியமாக பணித் தோழனின் மீது எரிந்துவிழ ஏதாவதொரு காரணம் வைத்திருந்தோம். ஆனால் அரிதாகவே கடிந்தோம் – பாரமாய் அழுத்தும் உழைப்பின் அடியில் நசுங்கி, அனைத்து உணர்ச்சிகளும் வெளியேறி, ஒரு பாறையைப் போல இறுகிக்கிடக்கும், ஏற்கனவே நடைபிணமாகிவிட்ட ஒருவன், எப்படிக் குற்றவாளியாக இருக்கமுடியும்?

எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு சொல்வதற்கு வேறெதுவும் இல்லாதவர்களுக்குத்தான் அமைதி, கொடுமையாகவும், வாதை தருவதுமாக இருக்கும். ஆனால் எதையும் பேசவே ஆரம்பிக்காதவர்களுக்கு, அமைதி மிக இயல்பானது. மிகச் சாதாரணமானது.

சில நேரங்களில் நாங்கள் பாடுவோம். எங்கள் பாடல் எப்படி ஆரம்பிக்கும் தெரியுமா? வேலைக்கு நடுவில் யாராவது ஒருவன், ஓடிக் களைத்த குதிரை போல இரைப்போடு பெருமூச்சு விடுவான். எப்போதும் தன் ஆன்ம வேதனையைக் குறைக்கும், வலியும் ஏக்கமும் நிரம்பிய சோக கீதம் ஒன்றை மெல்லிய குரலில் பாடுவான். நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்போம். ஈயம் பூசியதைப் போன்ற சாம்பல் நிற ஆகாயம் பூமியைப் போர்த்தியிருக்கும் ஈரலிப்பான இலையுதிர்கால இரவில், ஸ்டெப்பி புல்வெளியில் மூட்டப்பட்ட சிறு கணப்பைப் போல, சற்று நேரத்தில் அப்பாடல், நிலவறையை மூடிய மேற்கூரையின் கீழ் மெல்ல மங்கி மறையத் தொடங்கும். அப்போது இன்னொருவன் முந்தைய பாடகனுடன் இணைந்துகொள்வான். இப்போது இரண்டு குரல்கள் எங்களது மூச்சுமுட்டும் பள்ளத்தினுள் தகிக்கும் வெம்மைக்குள் அமைதியாகவும் துயரத்தோடும் நீந்திக்கொண்டிருக்கும். சடுதியில் பல குரல்கள் இணைந்துகொள்ள, அது ஒரு அலை போல வலியதாகவும் உரத்ததாகவும், இருளையும் எங்கள் கற்சிறையின் கனத்தச் சுவர்களையும் இரண்டாகப் பிளந்துவிடுவது போலவும் எழும்.  

நாங்கள் இருபத்தாறு பேரும் பாடுவோம். உரத்த, நீண்ட காலப் பயிற்சி பெற்ற எங்கள் குரல்கள் பணியிடத்தை நிறைக்கும். அந்தப் பணியிடத்துக்குள்ளேயே அவை முடங்கும். அவை அங்கிருக்கும் கற்சுவர்களில் மோதும். முனகும், அழும், வலியை மெல்லக் கிளறிவிடும், ஆறிய காயத்தைக் கீறும், உணர்வுகளைத் தட்டியெழுப்பும். பாடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவன் ஆழ்ந்த பெருமூச்சு விடுவான். இன்னொருவன் சட்டென்று பாட்டை நிறுத்திவிட்டு தோழர்களைப் பாடவிட்டு மறுபடியும் கோரஸில் இணைந்துகொள்வான். வேறொருவன் நினைத்துக்கொண்டாற்போல் ‘ஆஹ்’ என்று அனத்திவிட்டு, கண்ணை மூடிப் பாடுவான். ஒருவேளை அந்தச் சத்தத்தின் பேரலை, பிரகாசமாய் சூரிய ஒளி வீசும் தொலைதூரத்துக்கு அவனை அழைத்துச் செல்லும் சாலையாய்த் தெரிந்திருக்கலாம். அகலமான அச்சாலையில் அவன் நடந்துசெல்வதை அவனே பார்த்திருக்கலாம். 

அப்போதும் சூட்டடுப்பில் தீ கனன்றுகொண்டிருக்கும். ரொட்டி சுடுபவரின் துடுப்பு செங்கற்களில் மோதிக்கொண்டிருக்கும். பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும். நெருப்பின் பிரதிபலிப்பு கற்சுவர்களில் இன்னமும் நெளிந்தாடிக் கொண்டிருக்கும், சத்தமில்லாமல் சிரித்தபடி. நாங்கள் எங்கள் வேதனையை, சூரியனிடமிருந்து விலக்கப்பட்ட மனிதர்களின் ஏக்கத்தை, அடிமைகளின் துயரத்தை,  யாரோ எழுதிய வரிகளால் பாடுவோம். இப்படியாக இருபத்தாறு ஆண்களும் ஒரு பெரிய கல் கட்டடத்தின் அடித்தளத்திலிருந்த ஒரு நிலவறைக்குள், கட்டடத்தின் மூன்று தளங்களும் எங்கள் தோள்களின் மீது எழுப்பப்பட்டிருப்பது போன்றதொரு, வாழக் கடினமான இடத்தில் வாழ்ந்தோம்.

பாடல்களைத் தவிர, மற்றொரு நல்ல விஷயமும் எங்களால் நேசிக்கப்பட்டது. அதைக் கிட்டத்தட்ட சூரியனுக்கு மாற்று என்றும் சொல்லலாம். கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ஒரு எம்பிராய்டரி கடை இருந்தது. அதில் பணிபுரிந்த பல பெண்களுள் பதினாறு வயது தையற்காரி தான்யாவும் ஒருத்தி. தினமும் காலையில் எங்கள் பணியிடத்துக்கு வருவாள். வாசல் கதவின் கண்ணாடியில், உற்சாகம் கொப்பளிக்கும் ரோஸ் நிற முகத்தைப் பதித்து நீல நிறக் கண்களால் பார்ப்பாள். சிநேகம் கலந்த குரலில், “குட்டிச்சிறைக் கைதிகளே… எனக்குக் கொஞ்சம் க்ரிங்கில் தாங்களேன்” எனக் கத்துவாள். அவளது குரலைக் கேட்டதும் நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு திரும்பி, அன்போடு புன்னகைக்கும் அச்சிறு பெண்ணைப் பார்ப்போம். கண்ணாடியில் பதிந்து தட்டையாகக் காட்சியளிக்கும் அவளது மூக்கும், ரோஸ் நிற உதடுகளுக்கிடையில் பளிச்சிடும் சிறிய வெண்ணிறப் பற்களும் எங்களை இளக்கிவிடும். ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கதவைத் திறக்க ஓடுவோம். அங்கே அவள் பெரும் உற்சாகத்தோடும், மலர்ந்த முகத்தோடும், ஏப்ரானைக் கையில் பிடித்தபடி நிற்பாள். தலையை லேசாகச் சாய்த்து எங்களைப் பார்த்துச் சிரிப்பாள்.

நீண்ட, அடர்த்தியான செம்பழுப்பு நிறப் பின்னல், தோள் வழியே இறங்கி அவள் மார்பில் கிடக்கும். தரை மட்டத்திலிருந்து நான்கு படிகள் உயரத்தில் வாசற்கதவு இருந்தது. அழுக்கும் கரியுமாய் இருக்கும் நாங்கள் அண்ணாந்து பார்த்து காலை வணக்கம் சொல்லுவோம். அந்தப் பிரத்தியேக வார்த்தைகள் அவளுக்கு மட்டுமேயானவை. அவளுடனான எங்கள் உரையாடல் யாவும் தழைந்த குரலிலும் மெல்லிய நகைச்சுவையோடும் இருக்கும். அவளுக்கான எல்லாமே பிரத்தியேகமாக இருக்கும். ரொட்டி சுடுபவர் பொன்னிறமான, முறுகலான க்ரிங்கில்களை துடுப்பினால் அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே லாவகமாக தான்யாவின் ஏப்ரானில் போடுவார்.

“எங்கள் முதலாளியிடம் அகப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்” நாங்கள் அவளை எச்சரிப்போம். அவள் குறும்பாய்ச் சிரித்தபடி உற்சாகத்துடன் எங்களை நோக்கிக் கத்துவாள், “போய்வருகிறேன், குட்டிச்சிறைக் கைதிகளே!” சொல்லிவிட்டு சுண்டெலி போல குடுகுடுவென்று அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓடிவிடுவாள்.  

அவ்வளவுதான். ஆனால் அதற்குப் பிறகும் வெகுநேரம் நாங்கள் அவளைப் பற்றி இனிமையாகப் பேசிக்கொண்டிருப்போம், நேற்றைப் போலவும் அதற்கும் முந்தைய தினத்தைப் போலவும். எங்களைப் பற்றிய யாவுமே நேற்று, அதற்கு முந்தைய தினம் என எல்லா நாளுமே ஒன்றுபோலவே இருந்தன. தினசரி யாதொரு மாற்றமும் இல்லாத வாழ்வை ஒருவன் வாழ்வதென்பது வேதனையும் கொடுமையும் தரக்கூடியது. அப்போதும் அது அவன் உயிரை வாங்காத பட்சத்தில், அவன் கூடுதல் காலம் வாழ நேரிடும்போது, அந்த மாறுதல் அற்ற சூழல், கூடுதல் வேதனை தருவதாக இருக்கும்.

நாங்கள் எப்போதுமே பெண்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசினோம். எங்கள் கூச்சநாச்சமற்ற வார்த்தைகளுக்காக எங்களையே நாங்கள் வெறுத்தோம். ஆனால் நாங்கள் பழகிய பெண்கள் அனைவருமே வேறு எந்த மாதிரியான பேச்சுக்கும் தகுதியானவர்களாக இல்லை. ஆனால் தான்யாவின் விஷயத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒருமுறை கூட அவளைப் பற்றித் தவறாகப் பேசியதே இல்லை. எங்கள் சுண்டுவிரல் கூட அவள் மீது பட்டதில்லை. எவ்வித கீழ்த்தரமான நகைச்சுவையையும் அவளிடம் நாங்கள் பகிர்ந்ததில்லை. ஒருவேளை, அவள் அதிக நேரம் எங்களோடு செலவழிக்காமல், வானத்திலிருந்து விழும் நட்சத்திரம் போல பளிச்சென்று தென்பட்டு மறைந்துவிடுவதால் இருக்கலாம் அல்லது சின்னப்பெண்ணாகவும் அழகாகவும் இருப்பதால், அந்தப் பேரழகே மோசமான ஆண்களுக்குள்ளும் ஒரு கண்ணியத்தைத் தூண்டிவிடுவதால் இருக்கலாம்.         

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அடிமை சேவகம் என்னதான் எங்களை முட்டாள் எருதுகளைப் போல மாற்றியிருந்தாலும், நாங்கள் இன்னமும் ஆண்களாக இருக்கும் பட்சத்தில், யாரையாவது அல்லது எதையாவது ஆராதிக்காமல் எங்களால் வாழ இயலவில்லை. தான்யாவை விடவும் மேலானவர் எங்களுள் யாருமில்லை. இந்தக் கட்டிடத்தில் ஏராளமானவர்கள் வசித்தாலும் கூட, தான்யாவைத் தவிர வேறு யாருமே இந்த நிலவறைக்குள் வாழும் எங்களை அங்கீகரிக்கவில்லை.

முடிவாக, சொல்லப்போனால் மிக முக்கியமாக, எங்கள் க்ரிங்கில்களுக்கு நன்றி சொல்வதற்காகவே வாழ்கின்ற ஒருத்தி என்ற அளவில் அவளை நாங்கள் எங்களுடையவளாகவே பார்த்தோம். கடவுளுக்குத் தினமும் நைவேத்தியம் படைப்பது போல அவளுக்குத் தினமும் சுடச்சுட க்ரிங்கில்களைக் கொடுப்பதை எங்கள் கடமையாக நினைத்தோம். அந்தப் புனிதச் சடங்கின் மூலம் ஒவ்வொரு நாளும் அவளுடனான எங்கள் பிணைப்பு வளர்ந்துகொண்டே வந்தது. க்ரிங்கில்கள் கூடவே அவளுக்கு நாங்கள் சில அறிவுரைகளையும் வழங்கினோம். முழு உடை அணியவும், படிக்கட்டுகளில் வேகமாக ஓடாதிருக்கவும், கனமான விறகுக்கட்டைச் சுமந்துசெல்லாதிருக்கவும் அறிவுறுத்தினோம். புன்னகையோடு அவள் கேட்டுக் கொள்வாள். பதிலுக்குச் சிரித்துவிட்டுச் செல்வாள். ஆனால் ஒருபோதும் எங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆனாலும் நாங்கள் வருத்தப்படவில்லை. எங்கள் அறிவுரைகளின் மூலம் நாங்கள் அவள் மீது எவ்வளவு அக்கறையோடு இருக்கிறோம் என்பதையே அவளுக்குக் காட்ட விரும்பினோம்.    

அவள் சில உதவிகளுக்காக அடிக்கடி எங்களை நாடிவருவாள். உதாரணத்துக்கு, கனமான நிலவறைக் கிடங்கின் கதவைத் திறக்கவோ, விறகுக்கட்டையை வெட்டித் துண்டுகளாக்கவோ வேண்டுவாள். மகிழ்ச்சியுடனும், மிகப் பெருமையுடனும் நாங்கள் அவள் கேட்கும், அவள் விரும்பும் எல்லாவற்றையும் செய்து தருவோம். ஆனால் ஒரு தடவை எங்களுள் ஒருவன் தன்னுடைய ஒரே சட்டையை சரிசெய்து தருமாறு அவளைக் கேட்டான். அவள் அலட்சியத்தோடு உதட்டைப் பிதுக்கி, “ஓ.. தாராளமாக… கட்டாயமாக…” என்றாள். நாங்கள் அந்த மடையனைப் பார்த்துச் சிரித்தோம். அதன் பிறகு நாங்கள் அவளிடம் எந்த வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை. நாங்கள் அவளை நேசித்தோம், அவ்வளவுதான்.

சில சமயம் மூச்சு முட்டினாலும், சில சமயம் நசுக்கப்பட்டாலும் ஒருவன் எப்போதும் யார் மீதாவது அன்பு வைக்கவே விரும்புகிறான். அவளது அன்பில் திளைத்திருக்கும்போது, அவளை மதிக்க மாட்டான், ஆனால் தனக்கு நெருக்கமானவர்களின் வாழ்வை அழிக்கவும் துணிவான். ஆனால் எங்களுக்கு அன்பு செலுத்த தான்யாவை விட்டால் வேறு யாருமில்லை என்பதால் அவளையே நேசிக்க வேண்டியிருந்தது.

ஒருவன் எப்போதாவது இப்படி ஆரம்பிப்பான், “எதற்காக இந்தச் சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கிறோம்? அவளிடம் அப்படி என்ன அற்புதம் இருக்கிறது? நாம் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே இடம் கொடுக்கிறோம்.”

கேட்டவன் சட்டென்று அமைதியாகிவிடுவான். எங்களுக்கு அன்பு செலுத்த ஒருத்தி தேவைப்பட்டாள். அந்த ஒருத்தி அவளெனக் கண்டோம். அன்பு செலுத்தினோம்.

நாங்கள் இருபத்தாறு பேரும் நேசித்த ஒன்று, எங்கள் புராதன புனிதச் சின்னமாகவும், எங்கள் எல்லோரிடத்திலும் அசைக்கவொண்ணாத நம்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும். அதை எதிர்ப்பவர்கள் எங்களது எதிரிகள். ஒருவேளை, நாங்கள் நேசித்த அது, எங்கள் இருபத்தாறு பேர்க்கும் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது மட்டும்தான் எங்களிடம் இருந்தது. மேலும், எங்களால் நேசிக்கப்பட்ட அது, எங்கள் சகாக்களுக்கும் புனிதமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். வெறுப்பைக் காட்டிலும் அன்பு எளிதானதல்ல. அதனால்தானோ என்னவோ திமிர் பிடித்த சிலர் அன்பை விடவும் வெறுப்பே மிகவும் மகிழ்வளிப்பதாக நம்புகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏன் எங்களை விட்டு விலகிப்போகவில்லை?

—-

எங்கள் முதலாளிக்குச் சொந்தமாக ஒரு பன் பேக்கரியும் இருந்தது. அதுவும் எங்கள் தளத்திலேயே இருந்தது. எங்கள் பணியிடத்துக்கும் அதற்கும் நடுவில் ஒரு சுவர்தான் இருந்தது. அங்கே நான்கு பேர் வேலை செய்தார்கள். அவர்கள் எப்போதும் எங்களிடமிருந்து விலகியே இருந்தார்கள். அவர்களுடைய வேலை எங்களுடையதை விடவும் சுத்தமாக இருப்பதாகவும், அவர்கள் எங்களை விடவும் நன்றாக இருப்பதாகவும் எண்ணினார்கள். அவர்கள் எங்களைப் பார்க்க ஒருபோதும் வந்ததில்லை. வெளியில் பார்த்துக் கொண்டாலும் எள்ளி நகையாடுவார்கள். நாங்களும் அவர்களைப் போய்ப் பார்த்ததில்லை. பன்களைத் திருடிவிடுவோமென்ற பயத்தால், அங்கு போகக்கூடாது என்று எங்கள் முதலாளி எங்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தார். அவர்கள் மீது எழுந்த காழ்ப்புணர்வு காரணமாக எங்களுக்கு அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை.

அவர்களுடைய வேலை சுலபமானதாக இருந்தது; அவர்கள் நிறைய சம்பாதித்தார்கள்; நல்ல உணவளிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய பணியிடம் விசாலமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது; அவர்கள் மிகச் சுத்தமாக இருந்தார்கள்; மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்தார்கள் – எல்லாவற்றிலும் எங்களுக்கு எதிர்மாறாக இருந்தார்கள். நாங்களோ வெளிறி அழுக்கடைந்து இருந்தோம்; எங்களுள் மூவருக்கு மேகநோய் இருந்தது; சிலருக்கு சொறி சிரங்கு இருந்தது; ஒருவன் முடக்குவாதம் வந்து நொண்டிக்கொண்டிருந்தான். அவர்கள் விடுமுறை நாட்களிலும் ஓய்வு நாட்களிலும் நல்ல உடுப்பும் சுத்தமான பூட்ஸும் அணிந்துகொண்டு வெளியில் புறப்படுவார்கள். அவர்களுள் இருவரிடம் இசைக்கருவி இருந்தது. நகர வளாகத்துக்குச் சென்று தாராளமாக மதுவருந்துவார்கள். நாங்களோ, கந்தலாடையுடனும் கிழிந்த நார்க் காலணி அல்லது பிய்ந்த செருப்புடனும் இருப்போம். எங்களை போலீஸார் வளாகத்தின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். பிறகு எப்படி எங்களுக்கு பன் பேக்கரியில் வேலை செய்பவர்களைப் பிடிக்கும்?

பன் பேக்கரியில் பணிபுரிந்த ஒருவன் குடிப்பதை அறிந்த முதலாளி அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டு, அவனுக்குப் பதிலாக புதியதாக ஒரு ஆளை வேலைக்கு எடுத்திருப்பதாகவும் அவன் ஒரு ராணுவ வீரனென்றும் அவன் சாட்டின் துணியாலான கையில்லாத மேல்கோட்டும் தங்கச்சங்கிலியோடு கூடிய கைக்கடிகாரமும் அணிந்திருப்பதாகவும் கேள்விப்பட்டோம். அப்படிப்பட்ட பகட்டுக்காரனைப் பார்த்துவிடத் துடித்தோம். எங்கேயாவது கண்ணில் படமாட்டானா என்ற நம்பிக்கையில் ஒருவர் மாற்றி ஒருவர் வெளிமுற்றத்துக்கு ஓடிக்கொண்டிருந்தோம்.

ஆனால் அவனே ஒருநாள் எங்கள் பணியிடத்துக்கு வந்தான். ஒரு எத்து எத்திக் கதவைத் திறந்தான். அதை ஒருக்களித்த நிலையில் வைத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் வாசலில் நின்றபடி, “கடவுள் நம்மைக் காப்பாற்றட்டும். எப்படியப்பா இருக்கிறீர்கள் எல்லாரும்?” என்றான். திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த உறைபனிக் காற்று, பனிமூட்டமாய் அவனது காலடியில் சுழன்றது. மேல் படியில் நின்றபடி அவன் எங்களைப் பார்த்தபோது அவனுடைய பொன்னிற முறுக்குமீசைக்குக் கீழே உறுதியான மஞ்சள் பற்கள் பளிச்சிட்டன. அவனுடைய கையில்லாத மேல்சட்டை உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. கருநீல நிறத்தில், பூத்தையலோடும் சிவப்புக்கல் பொத்தான்களோடும் மின்னியது. கூடவே அந்த கைக்கடிகாரச் சங்கிலியும்.

ராணுவ வீரன் அழகனாக இருந்தான். மிக உயரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தான். சிவந்த கன்னங்களுடனும், சிநேக பாவமும் தெள்ளிய பார்வையும் உடைய பெரிய பிரகாசமான கண்களுடனும் இருந்தான். தலையில் விறைப்பான வெள்ளைத் தொப்பி அணிந்திருந்தான். கறையற்ற தூய்மையான ஏப்ரானுக்குக் கீழே சுத்தமான, நவீனமான பூட்ஸ் எட்டிப் பார்த்தன.

ரொட்டி சுடுபவர் அவனிடம் கதவை மூடுமாறு தண்மையாகச் சொன்னார். அவன் அவசரப்படாமல் பொறுமையாக மூடிவிட்டு, எங்கள் முதலாளியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பொறுக்கி, அயோக்கியன், கொடுமைக்காரன், இன்னும் என்னவெல்லாம் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ, இங்கே எழுத்தில் எழுத முடியாத அத்தனையும் சொன்னோம். ராணுவ வீரன் மீசையை முறுக்கிக்கொண்டும், மென்மையான, ஒளிரும் பார்வையால் எங்களை நோட்டமிட்டுக்கொண்டும் நாங்கள் சொல்வதைச் செவிமடுத்தான்.  

“அப்புறம்… உங்களுக்கு இங்கே நிறைய பெண்கள் இருக்கிறார்கள் போல” அவன் சட்டென்று சொன்னான்.

சிலர் மெதுவாகச் சிரித்தார்கள். சிலர் முகத்தைச் சுழித்தார்கள். ஒரு சில பெண்கள் இந்தப் பக்கம் சுற்றுவதாக ஒருவன் சொன்னான்.     

“அவர்களோடு பழக்கமுண்டா?” அவன் கேட்டுவிட்டுக் கண்ணடித்தான்.

மறுபடியும் நாங்கள் சிரித்தோம். சத்தமில்லாத வெட்கச் சிரிப்பு. அந்த ராணுவ வீரனைப் போலவே தங்கள் துணிச்சலையும் ஆண்மையையும் அவனிடம் காட்டப் பலரும் விரும்பினர். ஆனால் ஒருவராலும் அது முடியாது. கிட்டத்தட்ட அதை ஒப்புக்கொள்வதைப் போன்று ஒருவன் அமைதியாகச் சொன்னான், “ஆனால்.. எங்களுக்கு எப்படி அது சாத்தியம்?”

“ஆமாம், உங்களுக்கு அது கஷ்டம்தான்” ராணுவ வீரன் உறுதியான குரலில் சொல்லிவிட்டு எங்களை உற்றுப் பார்த்தான். “உங்களைப் பொறுத்தவரை… ஏதோ ஒன்று சரியில்லை… உங்களிடம் தோற்றம் இல்லை. அதாவது கட்டுறுதியான உடல் இல்லை. ஒரு பெண் எப்போதுமே ஆணின் தோற்றத்தை விரும்புவாள். அவளுக்கு, உண்மையான, உறுதியான, மொத்தத்தில் திடகாத்திரமான உடல் இருக்கவேண்டும், தினவெடுத்த தசைகள் இருக்கவேண்டும். கை… இப்படி இருக்கவேண்டும்”

முழங்கை வரை சட்டை மடித்துவிடப்பட்டிருந்த வலக்கையை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்துக் காட்டினான். அந்தக் கை வெள்ளை நிறத்தில், மிக உறுதியாகவும் மின்னும் பொன்னிற ரோமங்களோடும் காட்சியளித்தது.

“உங்களுடைய கால்கள், மார்பு – எல்லாமும் திடமாக இருக்கவேண்டும். கூடவே நல்ல நேர்த்தியான உடையணிந்திருக்க வேண்டும். பெண்கள் என்னைப் பார்த்தவுடனேயே விரும்புவார்கள். நான் கூப்பிட மாட்டேன், ஜாடை காட்ட மாட்டேன். ஆனால் கொத்தாக நான்கைந்து பேர் என்மேல் வந்து விழுவார்கள்.”

அவன் ஒரு மாவு சாக்கில் அமர்ந்துகொண்டு எப்படியெல்லாம் பெண்கள் அவனை விரும்பினார்கள், எப்படியெல்லாம் அவன் அவர்களோடு லீலையில் ஈடுபட்டான் என்றெல்லாம் நெடுநேரம் எங்களோடு பேசிக்கொண்டிருந்தான். கதவை கிரீச்சென சாத்திவிட்டு அவன் போன பிறகு, நாங்கள் வெகுநேரம் அமைதியாக, அவனைப் பற்றியும் அவன் சொன்ன கதைகளைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு தடாலடியாக ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் பேச ஆரம்பித்தோம். அவனை எங்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது என்பது உடனடியாக ஊர்ஜிதமானது.

எவ்வளவு எளிமையானவன்! வந்தான், உட்கார்ந்தான், பேசினான். வேறு யாரும் இவனைப் போல் எங்களைத் தேடி வரவில்லை. இப்படி நட்போடு பேசியதில்லை. நாங்கள் அவனைக் குறித்தும், வெளிமுற்றத்தில் எங்களை நேருக்கு நேர் கண்டால் கூட வாயை இறுக மூடிக்கொண்டோ அல்லது நாங்கள் அங்கிருப்பதையே லட்சியம் செய்யாமலோ எங்களைக் கடந்துபோகும் தையற்கடைப் பெண்களை அவன் வீழ்த்தப்போவதில் கிடைக்கப்போகும் வெற்றி குறித்தும் பேசினோம். வெளியில் இருக்கும்போது நாங்கள் அந்தப் பெண்களை ஏக்கத்துடன் பார்ப்போம். உள்ளே இருக்கும்போது எங்கள் ஜன்னல் வழியே கடந்துபோகையில் பார்ப்போம்.  குளிர்காலத்தில் ரோமத்தாலான மேலங்கியும் அழகான தொப்பியும் அணிந்து செல்வார்கள். கோடைக்காலத்தில் பூத்தொப்பியணிந்து வண்ணமயமான குடைகளுடன் செல்வார்கள். அவர்களைப் பற்றி நாங்கள் பேசுவதையெல்லாம் அவர்கள் கேட்க நேர்ந்தால் ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் கொதித்துப்போவார்கள்.   

“ஹூம்.. அவன் தான்யாவின் மனதை மாற்றிவிடாமல் இருக்கவேண்டும்” ரொட்டி சுடுபவர் சட்டென்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதும் நாங்கள் திடுக்கிட்டு அமைதியானோம். என்ன காரணத்தாலோ நாங்கள் அவளைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டிருந்தோம். அந்த ராணுவ வீரனின் கம்பீரமான, அழகான தோற்றம், தான்யாவை மறக்கடித்திருந்தது. இப்போது ஒரு பெரிய வாக்குவாதம் தொடங்கியது. தான்யா அவ்வளவு கீழ்த்தரமாக இறங்கிவிட மாட்டாள் என்றனர் சிலர். அவளால் அவனை எதிர்த்து நிற்க இயலாது என்றனர் இன்னொரு தரப்பினர். ஒருவேளை, அவன் அவளை அடைய முயற்சி செய்தால், அவனுடைய எலும்புகளை நொறுக்கிவிடுவோம் என்று சூளுரைத்தனர் மூன்றாம் தரப்பினர். தான்யாவையும் ராணுவ வீரனையும் தொடர்ந்து கண்காணிப்பது என்றும் அவனிடத்தில் கவனமாக இருக்குமாறு தான்யாவை எச்சரிப்பதென்றும் எல்லாருமாகச் சேர்ந்து இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். ஒரு வழியாக வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

ஒரு மாதம் கழிந்தது. ராணுவ வீரன் பன்களைத் தயாரித்தான், தையற்கடைப் பெண்களோடு வெளியில் சுற்றினான், அவ்வப்போது எங்கள் பணியிடத்துக்கு வந்துபோனான். ஆனால் அவன் அடைந்த வெற்றிகளைப் பற்றி வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மீசையை முறுக்கி, துய்ப்பின்பத்தோடு நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வான்.

தினமும் காலையில் தான்யா க்ரிங்கில்கள் கேட்டு வந்தாள். அவள் எப்போதும் போல மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் சிநேகமாகவும் காணப்பட்டாள். மெதுவாக ராணுவ வீரனைப் பற்றி அவளிடம் பேச்சுக் கொடுத்தோம். அவள் அவனை ‘முட்டைக்கண் கன்றுக்குட்டி’ என்றாள். இன்னும் என்னென்னவோ வித்தியாசமான பட்டப்பெயர்களைச் சொன்னாள். அது எங்களை ஆசுவாசப்படுத்தியது. மற்ற தையற் பெண்கள் எல்லாம் அவன் பின்னால் போவதைப் பார்த்த எங்களுக்கு எங்கள் தான்யாவை நினைத்துப் பெருமையாக இருந்தது. ராணுவ வீரனை விட்டு விலகி இருந்த தான்யாவை மற்றப் பெண்களுக்கு மேலே உயர வைத்துக் கொண்டாடினோம். மேலும் தான்யாவைப் போலவே நாங்களும் ராணுவ வீரனிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழக ஆரம்பித்தோம். தான்யாவின் மீதான எங்கள் அன்பு முன்னிலும் அதிகமானது. காலையில் அவளைச் சந்திக்கும் தருணங்களின் மகிழ்ச்சியும் உவகையும் இன்னும் கூடுதலானது.  

ஒரு நாள் காலையில் ராணுவ வீரன் குடிபோதையில் வந்திருந்தான். கீழே அமர்ந்து சிரித்தான். ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் விளக்கம் சொன்னான், “இரண்டு பெண்கள் எனக்காகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். லிட்காவும் க்ருஷ்காவும். ஒருத்தியோடு ஒருத்தி என்னமாய் அடித்துக் கொள்கிறாள்கள்.ஹா… ஹா… ஒருத்தியின் தலைமயிர் இன்னொருத்தியின் கையில். முன்பக்கத் தாழ்வாரத்தில் தள்ளி ஒருத்தி மேல் இன்னொருத்தி விழுந்து… ஹா… ஹா… ஒருத்தி முகத்தை இன்னொருத்தி கீறி.. கிழித்து… ஒரே தமாஷ்தான்! இந்தப் பெண்கள் ஏன் நேர்மையாகச் சண்டை போட மறுக்கிறார்கள்?” ஏன் பிராண்டிக் கொள்கிறார்கள்? ம்?”

அவன் ஒரு மரப்பலகையில் உட்கார்ந்தான். ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த அவன் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தான். நாங்கள் அமைதியாக இருந்தோம். என்னவோ அப்போது எங்களுக்கு அவனைப் பிடிக்கவே இல்லை.   

“இப்போது சொல்லுங்கள், பெண்கள் என்னைத் தேடி வருகிறார்கள் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்? ஒரு பெண்ணைப் பார்த்து நான் கண்ணடித்தாலே போதும், அடுத்த நொடியே அவள் என் முன் நிர்வாணமாக நிற்பாள். எல்லாம் சாத்தானின் வேலை”  

மினுமினுக்கும் ரோமங்களுடைய வெண்ணிறக் கைகளால் முழங்காலில் வேகமாக அடித்துக்கொண்டு சிரித்தான். பெண்களுடனான தன் அதிர்ஷ்டத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள இயலாதவன் போல், எங்களைக் கிளர்ந்தெழும் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவனது பருத்துச் சிவந்த முகம், மகிழ்ச்சியுடனும் பரிபூரண திருப்தியுடனும் ஒளிர்ந்தது. அவன் நாவால் தன் உதடுகளை நக்கிக்கொண்டே இருந்தான்.  

ரொட்டி சுடுபவர் ஆத்திரத்துடன் தன் மரத்துடுப்பை அடுப்பில் வேகமாகத் தட்டிவிட்டு  நக்கலாகச் சொன்னார், “ஒரு ஃபிர் மரத்தைச் சாய்க்க அதிக பலம் தேவைப்படாது. ஆனால் உன்னால் ஒரு பைன் மரத்தைச் சாய்க்க முடியுமா என்று பார்”

“என்ன? என்ன சொல்கிறாய்? என்னிடம்தான் சொல்கிறாயா?” என்றான் ராணுவ வீரன்.

“ஆமாம் உன்னிடம்தான்…”

“எதைப் பற்றி?”

“ஒன்றுமில்லை… விட்டுத்தொலை.”

“இல்லை… நீ சொல். எதைப் பற்றிச் சொல்கிறாய்? ‘பைன்’ என்று எதைச் சொல்கிறாய்?”

ரொட்டி சுடுபவர் பதில் சொல்லவில்லை. அவர் உடனே தன் அடுப்பு வேலையில் மும்முரமானார். வெந்த க்ரிங்கில்களை வெளியே எடுத்து அடுப்புக்குள் தள்ளினார், ஏற்கனவே சுட்டுத் தயாராக இருந்தவற்றை வெளியில் எடுத்தார், தரையில் அமர்ந்து பொதி கட்டும் பையன்களிடம் வேகமாகச் சுழற்றி எறிந்தார். ராணுவ வீரனோடு நடைபெற்ற உரையாடலை மறந்துபோனது போல் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் ராணுவ வீரனுக்கு சட்டென்று கடுங்கோபம் வந்துவிட்டது. அவன் அடுப்புக்குப் பக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் ரொட்டி சுடுபவரை நெருங்கினான். குறுக்கே போனால், இடைவிடாமல் அங்குமிங்கும் வேகமாக அலைபாயும் மரத்துடுப்பின் கைப்பிடி, இடித்துவிடும் என்று தெரிந்தும் அருகில் போனான்.

“இல்லை… நீ சொல்லியே ஆகவேண்டும். எதைப் பற்றிச் சொன்னாய்? நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய். என்னால் முடியாதா? எந்தப் பெண்ணும் என்னை மறுத்ததில்லை. ஒருத்தி கூட இல்லை. ஆனால்.. நீ என்னை அவமானப்படுத்திப் பேசுகிறாய்…”

அவன் அவமானம் அடைந்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. அவனுடைய சுய மரியாதை என்பதே ஒரு பெண்ணை மயக்கும் திறமைதான் என்பது போலவும், அந்தத் திறமையைத் தவிர வேறு எதுவுமே அவனுக்குள் இல்லை என்பது போலவும் அது ஒன்றுதான் அவனை உயிரோடு வைத்திருப்பது போலவும் தோன்றியது.

தங்களுடைய உடல் அல்லது உள ரீதியான நோயையே தங்களுடைய விலைமதிக்க முடியாத சொத்து போல எண்ணிக்கொண்டு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும் அதைத் தூக்கிக்கொண்டே அலைவார்கள், அதற்காகவே வாழ்வார்கள், அதனாலேயே துன்பமடைவார்கள், அதிலிருந்தே சக்தி பெறுவார்கள். அடிக்கடி அதைக் குறித்து முறையிடுவதன் மூலம் சக மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அதைக் கொண்டு மற்றவர்களின் கழிவிரக்கத்தைச் சம்பாதிப்பார்கள். அது இல்லையென்றால் அவர்களுக்கு வேறு எதுவுமே இல்லை. நோயைக் கண்டறிந்து குணப்படுத்திப் பாருங்கள், அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்களாகிப் போவார்கள். முழு வாழ்வாதாரமும் பறிபோனது போல் வெறுமையாகி விடுவார்கள். சில வேளைகளில் ஒருவன், ஏதாவது ஒரு தீயொழுக்கத்தைப் பற்றிக்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் அளவுக்கு அவனுடைய வாழ்வு மோசமானதாக இருக்கிறது. சிலர் பொழுதுபோகாமல் தீயொழுக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்றும் சொல்லலாம்.  

காயமுற்ற ராணுவ வீரன் எகிறிக்கொண்டு ரொட்டி சுடுபவரின் அருகில் சென்று உறுமினான், “சொல், யாரது?”

சட்டென்று திரும்பிய அவர் பதிலுக்கு உறுமினார், “சொல்லியே ஆகவேண்டுமா?”

“ஆமாம்”

“உனக்கு தான்யாவைத் தெரியுமா?”

“தெரியும்”

“அவள்தான். உன் அதிர்ஷ்டத்தை அவளிடம் சோதித்துப்பார்”

“என்னையா சொல்கிறாய்?”

“உன்னைத்தான்”

“அவளா? எனக்கு அவளெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது”

“பார்க்கலாம்”

“பாருங்கள்.. ஹா…ஹா..”

“அவளை உன்னால்…”

“ஒரு மாதம்”

“நீ ஒரு வாய்ச்சொல் வீரன்!”

“இரண்டே வாரம்! நான் யாரென்று காட்டுகிறேன். யாரவள்? தான்யா! ஒரு விஷயமே இல்லை.”

“சரி, இப்போது போய்த்தொலை.. வழியில் நிற்கிறாய்”

“இரண்டே வாரங்கள்… அவ்வளவுதான். நீ என்ன…”

“போய்த்தொலை என்று சொன்னேன்”

ரொட்டி சுடுபவர் கடும் ஆத்திரத்துடன் கையிலிருந்த துடுப்பை விசிறிச் சுழற்றினார். ராணுவ வீரன் திடுக்கிட்டுத் துள்ளிப் பின்வாங்கினான். அமைதியாய் எங்களைப் பார்த்தான். துர்க்குறி போல “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். வாக்குவாதத்தின்போது நாங்கள் அதில் கவரப்பட்டு அமைதியாக இருந்தோம். ராணுவ வீரன் போன பிறகு பெருங்கூச்சல் எழுந்தது.

யாரோ ஒருவன், ரொட்டி சுடுபவரிடம் கத்தினான், “நீ ஒரு மோசமான விஷயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறாய், பாவெல்!”

“போய் உன் வேலையைப் பார்” ரொட்டி சுடுபவர் பதிலுக்கு ஆத்திரத்துடன் கத்தினார்.

ராணுவ வீரனுக்கு சுருக்கென்று குத்தியிருப்பதும் அதனால் தான்யாவுக்கு ஆபத்து இருப்பதும் எங்களுக்குப் புரிந்தது. அதே சமயம், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளுக்குள் கொழுந்துவிட்டது. தான்யாவால் ராணுவ வீரனுக்கு எதிராக நிற்க முடியுமா? கிட்டத்தட்ட எல்லாருமே உறுதிபடச் சொன்னோம், “தான்யாவால் நிச்சயம் எதிர்த்து நிற்கமுடியும். தினவெடுத்த தசைகள் அவளை வீழ்த்திவிடாது” 

எங்கள் தான்யாவின் மன உறுதியைப் பரிசோதித்துப் பார்க்க நாங்கள் தீவிரமான ஆவல் கொண்டோம். எங்கள் தான்யா பலம் வாய்ந்தவள் என்பதையும் இந்த சோதனையைக் கடந்து வெற்றி வாகை சூடி வெளியில் வருவாள் என்பதையும் நாங்கள் ஒருவருக்கொருவர் நிரூபிக்க பெரும் பிரயத்தனப்பட்டோம்.

எங்களோடு நடைபெற்ற உரையாடலை மறந்துவிடாதபடி ராணுவ வீரனின் உள்ளுணர்வைப் போதிய அளவு தூண்டிவிட்டிருக்கிறோமா அல்லது இன்னும் கூடுதலாகக் குத்திவிடவேண்டுமா என்ற புதிய கவலை இப்போது எங்களுக்கு வந்துவிட்டது. எங்கள் வாழ்க்கை இதற்கு முன்பு நாங்கள் எப்போதும் வாழ்ந்திராத ஒரு பதற்றமான நிலைக்கு மாறியது. நாளெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். நாங்கள் புத்திசாலிகளாகவும், பேச்சுவன்மை உடையவர்களாகவும் வளர்ச்சியடைந்தோம். அதைப் பார்க்கும்போது நாங்கள் தான்யாவைப் பணயம் வைத்து சாத்தானுடன் சூதாடுவது போல இருந்தது.

ராணுவ வீரன் தான்யாவை மடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பன் பேக்கரியில் வேலை செய்பவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது முதல் எங்கள் வாழ்க்கை திகிலும் ஆர்வமும் உடையதாயிற்று. எங்களுடைய இந்த எழுச்சியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட எங்கள் முதலாளி, தினமும் சுமார் 200 கிலோ மாவைக் கூடுதலாகப் பிசைய வைத்து எங்களை வேலை வாங்குவதைக் கூட நாங்கள் கவனிக்கவில்லை. தான்யா என்ற பெயர் எங்கள் உதடுகளை விட்டுப் போகவே இல்லை. தினமும் காலையில் அவள் வரவுக்காகப் பொறுமையின்றிக் காத்திருப்போம். அவள் வருவாள். சில சமயம், அவள் பழைய தான்யாவாக இல்லாமல் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றும்.

எங்களுக்குள் நடைபெற்ற உரையாடல் பற்றி நாங்கள் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளை எதுவும் கேட்கவும் இல்லை. அவளிடம் அதே பழைய அன்போடு நடந்துகொண்டோம். ஆனால் அந்த நடத்தைக்குள் தான்யா மீதான பழைய உணர்வுக்குப் பதிலாக புதியதொரு வேற்றுப்பொருள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்துவிட்டது. கூரிய ஆர்வம் என்னும் அந்தப் புதிய பொருள் ஒரு உலோகக் கத்தியைப் போன்று இருந்தது.

“இன்றோடு காலக்கெடு முடிந்துவிட்டது” ஒரு நாள் காலையில் ரொட்டி சுடுபவர்  வேலையை ஆரம்பித்தவுடன் சொன்னார்.

அவர் சொல்லாமலேயே நாங்கள் அதை நன்கு அறிந்திருந்தோம்.  

“அவள் வருகிறாளா என்று பாருங்கள். வரும் நேரம்தான்”

“கண்ணால் பார்த்துக் கண்டுபிடிக்கக் கூடிய விஷயமில்லை அது” யாரோ ஒருவன் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.

மறுபடியும் உரத்த குரலில் ஒரு பெரிய வாக்குவாதம் எழுந்தது. எங்கள் சிறந்தவற்றையெல்லாம் போட்டுவைத்த ஒரு பாத்திரம் எவ்வளவு பரிசுத்தமானது, எவ்வளவு ஒழுக்கமானது என்பது முடிவாக இன்று எங்களுக்குத் தெரிந்துவிடும்.

நாங்கள் ஒரு ஆபத்தான பணய விளையாட்டை விளையாடுகிறோம் என்றும், எங்கள் தான்யாவின் மீதான சோதனையே அவளை எங்களிடமிருந்து பிரித்து அழித்துவிடக்கூடும் என்றும் முதலில் எங்களுக்குத் தோன்றியது. கடந்த இரண்டு வாரமும் ராணுவ வீரன் தான்யாவை விடாமல் பின்தொடர்ந்தான் என்ற தகவல் மட்டும்தான் எங்களுக்குக் கிடைத்திருந்தது. ஆனால் தான்யா அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று யாருமே அவளிடம் கேட்கவில்லை. அவளோ வழக்கம் போல தினமும் எங்களிடம் வந்து க்ரிங்கில்களை வாங்கிப் போனாள்.

அன்றும் அவள் குரலைக் கேட்டோம், “குட்டிச்சிறைக் கைதிகளே! நான் வந்துவிட்டேன்!”

அவளை விரைந்து வரவேற்ற நாங்கள் அவள் வருகையை அசாதாரண மௌனத்தோடு எதிர்கொண்டோம். எங்கள் அனைவரின் கண்களும் அவள் மீதே இருந்தன. அவளிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது எதுவும் தெரியவில்லை. சந்தேகப்படும்படியான அமைதியோடு அவளெதிரில் கூட்டமாய் நின்றிருந்தோம். எங்கள் வரவேற்பைப் பார்த்து அவள் திடுக்கிட்டது நன்றாகவே தெரிந்தது. சட்டென்று அவள் முகம் வெளிறி, நிலை தடுமாறினாள். பதற்றம் நிறைந்த குரலில் “ஏன் எல்லாரும் இன்று என்னவோ போல் வித்தியாசமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ?” ரொட்டி சுடுபவர் சுள்ளென்று பதிலுக்குக் கேட்டார். அவர் கண்கள் அவள் மீது நிலைத்திருந்தன.

“சரி, எனக்கு க்ரிங்கில்களைக் கொடுங்க, சீக்கிரம்” அவள் ஒருபோதும் இப்படி அவசரப்படுத்தியதே இல்லை.

“ஒன்றும் அவசரமில்லை” ரொட்டி சுடுபவர் அசையாமல், அவள் மீதான கண்களை எடுக்காமல் சொன்னார்.

அவள் சரேலெனத் திரும்பி, கதவுக்கு வெளியே மறைந்துபோனாள். 

ரொட்டி சுடுபவர் துடுப்பை எடுத்து, அடுப்பில் இருந்தவற்றைத் திருப்பிப் போட்டுவிட்டு, தணிந்த குரலில் சொன்னார், “அப்படியென்றால் அவன் சொன்னபடி செய்துவிட்டான். அந்த ராணுவ வீரன், அந்தப் பொறுக்கி”

மந்தை ஆடுகளைப் போல ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டு எங்கள் பணி மேஜைக்குத் திரும்பி சுரத்தில்லாமல் வேலையை ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து, ஒருவன் சொன்னான், “ஆனால்.. சரி, ஒருவேளை…”

“இனி அதைப்பற்றிய பேச்சு வேண்டாம்” ரொட்டி சுடுபவர் கத்தினார்.

அவர் புத்திசாலி. எங்கள் அனைவரைக் காட்டிலும் அதிபுத்திசாலி என்பதை நாங்கள் அறிவோம். அவர் கத்தியதிலிருந்தே, அந்த ராணுவ வீரனின் வெற்றி உறுதியாகிவிட்டதைப் புரிந்துகொண்டோம். நாங்கள் மனம் தளர்ந்து, நிலைகுலைந்துபோனோம். 

நண்பகல் பன்னிரண்டு மணிக்கு, உணவு இடைவேளையின் போது, ராணுவ வீரன் உள்ளே வந்தான். எப்போதும் போலவே சுத்தமாகவும், மிடுக்காகவும் இருந்தான். எப்போதும் போலவே எங்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவனைப் பார்க்க எங்களுக்கு அருவருப்பாக இருந்தது.

“நல்லது, கனவான்களே, ஒரு ராணுவ வீரனின் சாகசத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?” நக்கலாகக் கேட்டான். “கதவிடுக்கு வழியாகப் பாருங்கள்… புரிகிறதா?”

நாங்கள் முண்டியடித்துக்கொண்டு மரப்பட்டைகளாலான கதவின் இடுக்குகள் மூலம் வெளிமுற்றத்தைப் பார்த்தோம். எங்களை அதிக நேரம் காத்திருக்க விடாமல் தான்யா சீக்கிரமாகவே வந்துவிட்டாள். அவள் சிந்தனை வேறெங்கோ இருப்பதை முகம் காட்டியது. தண்ணீரும் சேறுமாய் தேங்கிக் கிடக்கும் சிறு குட்டைகளைத் தாண்டித் தாண்டி வந்தாள். வந்தவள், நிலவறைக் கிடங்கின் கதவின் பின் மாயமானாள். சற்று நேரத்தில் சீட்டியடித்துக்கொண்டு, நிதானமாக வந்த ராணுவ வீரன், அதே வழியில் சென்றான். அவன் கைகளை பாக்கெட்டுக்குள் நுழைத்திருந்தான். மீசையை முறுக்கிவிட்டிருந்தான்.

மழை தூறிக் கொண்டிருந்தது. தேங்கியிருந்த சேற்றுக் குட்டையிலும் குளத்திலும் மழைத்துளிகள் விழுந்து வட்டவட்டமாய் அலையெழுவதை நாங்கள் பார்த்தோம். நசநசவென்ற ஈரத்தோடும் மந்தமான வானிலையோடும் அன்றைய தினம் மோசமான தினமாக இருந்தது. மேற்கூரைகளில் பனி இன்னும் உறைந்துகிடந்தது. தரையிலோ ஆங்காங்கே பனி உருகி சேறு தெரிந்தது. மேற்கூரையிலிருந்த பனி மீது கரும்பழுப்பு நிறத்தில் அழுக்குப் படிந்திருந்தது. மழை லேசாகப் பெய்துகொண்டிருந்தது. நாங்கள் அந்தக் குளிரில் அசௌகரியத்துடன் காத்திருந்தோம்.

நிலவறைக் கிடங்கை விட்டு முதலில் ராணுவ வீரன்தான் வெளியில் வந்தான். மெதுவாக நடந்து முற்றத்தைக் கடந்து போனான், கைகளை பாக்கெட்டில் நுழைத்திருந்தான். மீசையை முறுக்கிவிட்டிருந்தான், எப்போதும் போலவே.

சற்று நேரத்தில் தான்யா வெளியில் வந்தாள். அவள் கண்கள்… அவள் கண்கள் களிப்பிலும் பேருவுவகையிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவள் உதடுகள் புன்னகைத்துக்கொண்டிருந்தன. அவள் ஏதோ கனவில் மிதப்பது போலத் தள்ளாடியபடி நடந்துவந்தாள்.

எங்களால் அமைதியாக இருக்கமுடியவில்லை. படாரென்று கதவைத் திறந்துகொண்டு அத்தனைப் பேரும் ஒரே நேரத்தில் வெளிமுற்றத்தில் பாய்ந்தோம். சீழ்க்கையொலி எழுப்பினோம், அவளைப் பார்த்து வன்மமும் வக்கிரமுமாய் உரத்த குரலில் கூச்சலிட்டோம்.

எங்களைப் பார்த்துத் திடுக்கிட்ட அவள், சேற்றில் புதைந்த காலோடு, வேர்விட்டது போல் அங்கேயே நின்றுவிட்டாள். நாங்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு, தொடர்ச்சியாகச் சீண்டினோம், அசிங்கமாய் வசைபாடினோம், அவமானப்படுத்தினோம், அவதூறுகளை அள்ளி வீசினோம். வெட்கக்கேடான செயல்களைச் செய்தோம். இவற்றையெல்லாம் நாங்கள் உரக்கவோ, அவசர அவசரமாகவோ செய்யவில்லை. பொறுமையாக நிதானமாகவே செய்தோம். ஏனெனில் அவளுக்கு எங்களிடமிருந்து தப்பியோட வழியில்லை. அவள் எங்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தாள், அவளை நாங்கள் எங்கள் விருப்பம் போல் எப்படி வேண்டுமானாலும் பரிகசிக்கலாம். ஆனால் என்ன காரணமென்று தெரியவில்லை, யாருமே அவளை அடிக்கவில்லை.

எங்களுக்கு மத்தியில் நின்றிருந்த அவள், எங்கள் அவதூறுகளைக் கேட்டு, தலையை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் திருப்பிக் கொண்டிருந்தாள். நாங்களோ, அதுவரையில் இல்லாத அளவுக்கு பெரும் சத்தத்துடனும் பெரும் பலத்துடனும் வார்த்தைகளால் நச்சையும் நரகலையும் அவள்மீது வீசியெறிந்தோம். அவள் முகம் வெளிறிப் போனது. சற்று முன்பு குதூகலமாய் இருந்த அவளுடைய தெளிந்த நீலநிறக் கண்கள் இப்போது பெரிதாய்ப் பிதுங்கி நின்றன. அவளுக்கு மூச்சு வாங்கியது. உதடுகள் துடித்தன.

நாங்கள் அவளைச் சுற்றி நின்று பழிவாங்கிக் கொண்டிருந்தோம். ஏனெனில் அவள் எங்களை வஞ்சித்துவிட்டாள். அவள் எங்களுக்கு உரிமையானவள். அவளுக்கு எங்களுடைய சிறந்தவற்றை எல்லாம் கொடுத்தோம், பிச்சைக்காரனுக்குக் கொடுக்கக்கூடியவை என்றாலும் கூட அவை எங்களுடையவை அல்லவா! நாங்கள் இருபத்தாறு பேர். அவள் ஒருத்தி. அவளுடைய குற்றத்துக்கு நிகரான வலியை எங்களால் கொடுக்கவே முடியவில்லை. அவளை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினோம்! அவளோ, எதுவும் பேசாமல் அனல் தெறிக்கும் விழிகளால் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மொத்த உடலும் நடுங்கிக்கொண்டிருந்தது.  

நாங்கள் சிரித்தோம், சீறினோம், உறுமினோம், ஊளையிட்டோம். எங்கிருந்தோ இன்னும் சிலர் வந்து எங்களோடு சேர்ந்துகொண்டனர். யாரோ ஒருவன் அவளுடைய சட்டைக் கையைப் பிடித்து இழுத்தான்.

சட்டென்று அவள் கண்களில் பொறி பறந்தது. மெதுவாகக் கையைத் தூக்கி கூந்தலை சரிசெய்தாள். எங்கள் முகங்களை நேருக்கு நேராய்ப் பார்த்து சத்தமாக அதே சமயம் பொறுமையாகச் சொன்னாள்,

“ஐயோ, பரிதாபத்துக்குரிய கைதிகளே!”  

சொல்லிவிட்டு எங்களை நோக்கி நடந்தாள், எதிரில் நாங்கள் யாருமே இல்லாதது போலவும், அவள் வழியை யாருமே மறிக்காதது போலவும் நேராக நடந்தாள். எங்கள் வட்டத்தை விட்டு வெளியேறிய அடுத்த நொடி, திரும்பிக்கூடப் பார்க்காமல் இகழ்ச்சியும் இறுமாப்புமாய் சீறினாள், “கழிசடைகளே. பன்றிகளே. முதுகெலும்பில்லாத முட்டாள்களே.”

அவள் அழகாய், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் அங்கிருந்து சென்றாள்.

சூரிய வெளிச்சம் இல்லாமல் மூடிக்கிடந்த சாம்பல் நிற வானத்திலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி நாங்கள் முற்றத்து சேற்றில் சற்றுநேரம் நின்று கொண்டிருந்தோம். பிறகு நாங்களும் சத்தமில்லாமல் கலைந்து எங்களுடைய புழுக்கமான கற்பொந்துக்குள் போனோம். முன்பு போலவே எங்கள் ஜன்னல் வழியாகச் சூரிய ஒளி ஒருநாளும் வரவில்லை. தான்யா அதன் பிறகு வரவே இல்லை.


[1] க்ரிங்கில் – Kringle  – முடிச்சு போட்டது போல் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும் ரொட்டி வகை. வெண்ணெய், மாவு, சர்க்கரை, க்ரீம் போன்றவற்றைக் கொண்டு பல அடுக்குகள் செய்து உள்ளே பழங்கள், பருப்புகள் நிரப்பிச் செய்யப்படும். வெளியில் முறுகலாகவும் உள்ளே மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

[2] துடுப்பு – Baker’s shovel – ரொட்டி சுடுபவர்கள் சூட்டடுப்புக்குள் ரொட்டியைத் தள்ளவும் வெளியில் எடுக்கவும் பயன்படுத்தும் நீளமான கைப்பிடியோடு கூடிய துடுப்பு போன்ற உபகரணம். பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். 

[3] கருப்பு ரொட்டி  – Rye எனப்படும் பழுப்பரிசி மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி. இது அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுவதால் கருப்பு ரொட்டி எனப்படுகிறது.

4,ஏப்ரான் – பாதுகாப்பு கவச ஆடை