ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.

பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள்.

அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே  இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற் போலக் காற்றை ஒரு படலமாக அனுப்பிவைத்தால் நன்றாக இருக்கும்.

வீட்டுக்குள் போகலாம் என எழுந்திருந்த போதுதான் அதைப் பார்த்தாள்; அது திண்ணையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் பின்பக்க டேஞ்சர் லைட் வட்டத்தின் பக்கம் உட்கார்ந்திருந்தது. இப்படி வழி தப்பினது போல வீட்டுப் பொருட்களில்  வந்து உட்காரும் எந்தப் பூச்சியும் அசையாமல் தானே இருக்கும். ஊசித் தட்டான் அந்த சைக்கிளின் இன்னொரு உறுப்பு போல அப்படியே தன்னை ஒட்டவைத்திருந்தது.

ஏற்கனவே அதற்கு எடையே கிடையாது.  இப்படி அசையாமல் இருப்பதால் இருக்கிற எடையும் காணாமல் போயிருக்கும் என்று பிரேமா நினைத்தாள். ஒரு கிளியைப் போல இடது கையில் அவள் அதைப் பிடித்து உட்கார்த்தி வைத்துக் கொள்ளலாம்.. ஒரு தேங்காய் நார் கனம் கூட இருக்காது போல.. ஒரு உயிர் என்று இருந்தால் அதற்கு என்று ஒரு எடை இல்லாவிட்டால் எப்படி?

பிரேமா தன் கனத்த அடிவயிற்றைத் தடவிக் கொண்டாள். சினேகாவை உண்டாகியிருந்த சமயத்தை விட, இந்த முறை வயிறு பெரிதாகவும் கனமாகவும் இருக்கிறது. அவளை விடவும் அவள் இப்போது கனம்.

எவ்வளவோ காலத்திற்குப் பிறகு இப்படி ஒரு ஊசித் தட்டானை அவள் பார்ப்பாள் என்றும் அது இப்படி சந்திரனின் சைக்கிளின் மேல் உட்காரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சந்திரன்  காணாமல் போய்விட்ட இந்த ஐந்தாறு வருஷத்திலும் அது யாராலும் உபயோகிக்கப்படாமல் அப்படியே தான் இருக்கிறது. ஒன்றிரண்டு பேர் விலைக்குக் கூடக் கேட்டார்கள். பிரமு ஒத்துக் கொள்ளவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கூட அவர் சந்திரன் சைக்கிளை எடுப்பது கிடையாது. இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்ததிலிருந்து அது இதே போலத் திண்ணையில் சாத்திவைக்கப்பட்டதோடு சரி. சந்திரன் காலில் போட்டிருந்த ஒரு ஜோடி பழைய செருப்பு கூட சைக்கிள் கேரியர் க்ளிப்பில் பூசணம் பூத்துப் போய் இருக்கிறது

சந்திரனும் பிரேமாவும் அப்போது இந்த வீட்டில் இல்லை. செண்பகம் பிள்ளைத் தெரு ரைஸ் மில் பிள்ளை வளவில் இருந்தார்கள். அது சின்னக் குச்சு வீடுதான். அந்த வீட்டு உரக் குழிக்குப் பக்கத்திலிருந்தாலும் அடி பைப், துணி காயப் போடும் கொடி, கக்கூஸ் எல்லாம் நாலே எட்டு வைக்கிற தூரத்திலிருந்தது ரொம்ப சௌகரியம். கல் தளம் பாவின குத்துப் புரையை இப்போது யாரும் உபயோகப்படுத்தாவிட்டாலும் இரண்டு கல் உரல்கள் அங்கேயே கிடந்தன.

தெற்குச் சுவரில்  இருக்கிற கதவைத் திறந்துகொண்டு முடுக்கு வழியாகப் போனால் தெருவில் கொண்டு போய்விட்டுவிடும். சந்திரனும் அவளும் மட்டும் அல்ல, அந்த வளவின் பின்வீட்டுக்காரர்கள் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போனால் அப்படித்தான் வருவார்கள். பேராச்சியக்கா மாப்பிள்ளை அந்த வாசல் வழியாக வந்தால் குடித்திருப்பதாக அர்த்தம். பைப்படியில் இருந்து தண்ணீர் போகிற மடை தடுக்கி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேராச்சியக்கா வேறு யார் முகத்தையும் பார்க்காமல் குனிந்துகொண்டே அவருடைய இடது கையை இறுகப் பிடித்து வீட்டுக்குக் கூட்டிப் போவாள். மறக்காமல் தண்ணீர் ட்ரம்மில் இருந்து டப்பாவில் கோரி ஊற்றிக் காலை அவர் தேய்த்துக் கழுவிக்கொள்கிற போது பேராச்சியக்கா அவர் லம்பிவிடாமல் பிடித்தபடி பக்கத்தில் நிற்பாள்.

அதை எல்லாம் விட, குத்துப் புரைக் கல் தளத்தின் குளிர்ச்சியை உத்தேசித்து சந்திரனும் பிரேமாவும் அங்கேயே பாயை விரித்துப் படுத்திருந்தது உண்டு.

குத்துப்புரையை ஒட்டின குச்சை சாமிக் குச்சு என்பார்கள். அந்த வீட்டில் அச்சு வெல்லம் மாதிரி ஒரு சிறு பீடம் இருக்கிறதால் அந்தப் பெயர். அதில் குடித்தனக்காரர்கள் என ஆணும் பெண்ணுமாக யாரும் இருப்பதில்லை.  கல்லூர் ஆச்சிதான் ஒத்தையில் ரொம்பகாலமாக அதில் இருக்கிறாள்.

பிரேமாவும் சந்திரனும் குத்துப் புரையில் படுக்க ஆரம்பித்த முதல் நாளே கல்லூர் ஆச்சி சொல்லிவிட்டாள். ‘செவ்வா,வெள்ளி, அம்மாசி கனத்த நாளில் எல்லாம் ‘தலைப்பா கட்டினவங்க’ புழங்குதாங்களோ இல்லையோ, நாம புழங்காம ஒழுங்கு மரியாதையா பாய் சமுக்காளத்தை அவங்கவங்க எட்டடிக் குச்சுல விரிச்சுக்கிடணும்’  என்று மேலே வானத்தை அண்ணாந்து பார்த்துக் கையை நாடியில் வலதும் இடதுமாக ஒத்தியபடி சொல்லிவிட்டாள்.

வாடாமல்லிப் பூவுக்கு அப்படி என்ன வாடை உண்டு? சில சமயம் காற்றில் உருண்டை உருண்டையாக வாடாமல்லி புரண்டு வரும். மஞ்சள் சிவந்தி இல்லை, வெள்ளைச் சிவந்திப் பூ, நடு வட்டம் உப்பி, சுற்றிலும் உள்ள அடுக்கடுக்குச் சிற்றிதழ்களாக வாசனை இருட்டுக்குள் உதிரும். பிரேமாவுக்கு அப்போது பயமாக எல்லாம் இருந்ததில்லை. கூடக் கொஞ்சம் சந்திரன் உடம்போடு அப்பிக்கொள்ளத்தான் தோன்றியிருக்கிறது. அப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் சினேகாவைக் கூட பிரேமா உண்டாகியிருக்கலாம்.

சினேகாவுக்குக் கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மி என்பதற்குப் பிரேமா கவலைப்பட்ட அளவு சந்திரன் கவலைப்படவில்லை. தொட்டிலுக்குள் குனிந்துகொண்டு பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான். மடியில் வைத்துக்கொண்டு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுத்துக் கடை வாயை வேட்டி நுனியால் துடைத்துவிட்டான்; சந்திரனுக்கு விசிலில் பாட்டுப் பாடத் தெரியும். ‘நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே’ என்ற முழுப்பாட்டையும் விசிலில் பாடியவனாக சினேகாவைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி புறவாசலில் அவன் நடப்பதைப் பிரேமா அழுதவாக்கில்  பார்த்துக்கொண்டே இருப்பாள். அப்படி நடக்கும் போது ஓட்டிலிருந்து குதித்து புறவாசல் தார்சா வழியாக நடந்து தோட்டத்துச் சுவரில் ஏறும் பூனையைப் பார்த்து அப்படியே அவன் கொஞ்ச நேரம் நிற்பது ஒரு சாம்பல் நிறச் சித்திரம்.

கல்யாணம் ஆன சமயத்தில் பிரேமாவை அந்த இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போவான். இரண்டு பேருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். சந்திரனுக்குப் பிடித்த இடம் அது. தெரு முடிந்து ரயில்வே ஃபீடர் ரோடு ஆரம்பிக்கும் இடத்தை அறுப்புக் களமாகப் பயன் படுத்துவார்கள். தரையோடு தரையாக ஒரு சதுரக் கிணறு. உபயோகமில்லாமல் துருப்பிடித்துப் போனது போல ஒரு ட்ராக்டர் தூசியும் சருகுமாக வைக்கோல் படப்புப் பக்கம் நிற்கும். அதற்குக் கொஞ்சம் தள்ளி   அவ்வளவு பெரிய நாவல் மரத்தடி..

அந்த இடத்துக்கு சினேகாவைத் தூக்கிக் கொண்டு போவான். சமயத்தில் சப்பாணி கோயில் சாமி கொண்டாடி மஞ்சள் வேட்டியும் பெரிய நெற்றிக் குங்குமமும் மீசையுமாக வருவார். தோளில் கிடக்கிற பிள்ளையை ‘தாத்தா பாரு, தாத்தா பாரு’ என்று அவரிடம் காட்டுவான். அவர் சினேகாவின் தொய்வாகக் கிடக்கிற கையை எடுத்து அவருடைய மீசையில் மேலும் கீழுமாக இழுவிக்கொண்டு சிரிப்பார். முதுகைத் தட்டிக்கொடுப்பார்.

தெருவில் யார் எதிரே வந்தாலும் பிள்ளையைக் காட்டக் கூச்சப் படமாட்டான். வீடு வீடாக விளக்குச் சரம் வைத்துக்கொண்டு போகும் பழனியம்மா குடலையோடு வந்தால் சந்திரனைப் பார்த்ததும் நின்றுவிடுவாள். ’பேத்தியா என்ன பண்ணுதா?’ என்று கன்னத்தை நிமிண்டுவாள். சினேகாவுக்குக் காட்டமான அரளிப் பூ வாசனை பிடித்திருந்தது . அந்த வாசனைக்காகத் தலையைத் தூக்கிப் பார்ப்பாள். ஒரு தூக்கமுடியாத கனத்தைத் தூக்கியது போல, மறுபடியும் தலையைச் சந்திரன் தோளில் சாய்த்துக் கொள்வாள்

அன்றைக்குச் சாயுங்காலத்தில் இருந்து விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. சந்திரன் வேலை முடிந்து கடையிலிருந்து வரும்போது கூட சைக்கிளோடு நனைந்துகொண்டுதான் வந்தான். பின் பக்கத் தலையைத் துவட்டிக்கொண்டே ‘ என்ன படுத்திட்டே?’ என்று கேட்டதற்குப். பிரேமா ஒன்றும் சொல்லவில்லை. தீண்டல் வந்த இரண்டாம் நாளுக்கான அசதி. அவள் பக்கத்திலேயே பிள்ளை படுத்திருந்தது. பாய்க்கு மேல் ஒரு பழைய சேலையை விரித்திருந்தாள்.

அப்போதுதான் அந்த நீல நிற ஊசித் தட்டான் பறந்து வந்து தரையில் வைத்திருந்த டேபிள் ஃபேனின் பாதத்தில் உட்கார்ந்தது. மழை பெய்து குளிர்ந்தாற் போல இருப்பதால் ஃபேன் போடவில்லை. சந்திரன் தான் அதைப் பார்த்தான். ‘ அதனுடன் பேசுவது போல, ‘நீ எங்கே இருந்து வந்தே?’ என்றான்.. பிரேமா திரும்பிப் பார்த்தாள். நீலம் என்றால் அப்படி ஒரு நீலம். வாசலில் டேப் அடித்துக்கொண்டு வரும் பக்கீருடைய கழுத்திலிருக்கும் பெரிய பெரிய நீலப் பாசிதான் அவளுக்கு உடனே ஞாபகம் வந்தது. மற்ற நிறத்துக்கு எல்லாம் இல்லாத வழுவழுப்பு கருப்புக்கும் இந்த நீலத்துக்கும் அமைந்துவிடுகிறது.

ஒரு ஈர்க்குச்சித் துண்டை விட மெலிவாக இருந்தது. அதன் உடம்புக்குள் ஒரு நீல விளக்கு எரிவது போல ஒரு பிரகாசம். அந்த அறையில் ஒரே ஒரு பல்பு வெளிச்சம் தான் இருந்தது. பிரேமா சந்திரனிடம் கேட்டாள், ‘லைட்டை அணைச்சா வீடு பூரா ஊதாவா ஆயிரும் லா?’ என்றாள். அவன் அதற்கு உண்டான பதிலைச் சொல்லவில்லை. ‘இது ஊதா இல்ல. நீலம், நீலம். ஸ்கை ப்ளூ’ என்று சொன்னான்.

மிக மெதுவாகக் கையைக் கொண்டு போய் அந்த நீல  ஊசித் தட்டானைப் பிடித்துவிட்டான். பிடியை லேசாக நகர்த்தி இரண்டு சிறகுகளையும் சேர்த்துப் பிடித்துப் பிரேமாவின் முகத்துப் பக்கம் கொண்டுவந்து காட்டினான். அது பெரிதாக ஒன்றும் தப்பிக்க முயலவில்லை. அதன் வாலின் நுனி மட்டும் லேசாக மடங்கியது, கால்களால் இந்த பூமியை உருட்டுவது போல அசைத்தது.

ஒரு குழந்தை தன்னிடம் வரும் விருப்பத்தில் கையைத் தூக்கிப் போடுவதாக அந்தக் கால்களின் உரசலை நினைத்தாள். ‘சினேகாப்பா, என்கிட்டே அது வரணும்னு சொல்லுதுப்பா’ என்றாள். சட்டென்று ஒரு விளையாட்டுத் துவங்கிவிட்ட உற்சாகம் சந்திரன் முகத்தில். ‘ஆமா. உன்கிட்டே வரணும்’ அப்படிச் சொல்லியபடியே ஊசித் தட்டான் இருந்த கையைப் பிரேமா முகத்துக்கு அருகே கொண்டு வந்தான். ‘ உன்னை மோந்து பாக்கணும்’  அவள் முகவாய்க்கும் கழுத்தடிக்கும் பக்கத்தில் நீட்டினான். ‘உங் கிட்டே பால் குடிக்கணுமாம் அதுக்கு’ என்று பிரேமாவின் நெஞ்சில் வைத்தான், ‘உன்னைக் கொஞ்சிக்கிட்டு மடியில படுத்திருக்கணுமாம்’ என்று ஒருச் சாய்ந்து சேலை விலகிப் படுத்திருந்த அவள் அடிவயிற்றுப் பக்கம் கையைக் கொண்டு போனான். பிரேமாவுக்கு உடம்பு குறுகுறுவென்றது. தன்னை அறியாமல் ‘சும்மா இருங்க, சும்மா இருங்க’ என்று சொல்லிக்கொண்டே சிரிக்கத் துவங்கியிருந்தாள். பக்கத்தில் படுத்திருந்த சினேகாவை இழுத்து அணைத்து முத்தம் வைத்தாள்.

சினேகாவும் இப்போது சிரிக்க ஆரம்பித்து இருந்தது. சந்திரனின் கை தொடர்ந்து பக்கத்தில் வருவதும் விலகிப் போவதும் அவன் ஏதோ இடையிடையே சொல்வதும் விளையாட்டுக் காட்டுவது போல் தெரிந்து அது வாய்விட்டும், உரக்கவும் ஒவ்வொரு முறையும் சிரிக்க ஆரம்பித்துவிட்டது. சந்திரன் பிரேமாவை விட்டு விலகி, ‘ என்ன சிரிப்பு? எங்க அம்மைக்கு என்ன சிரிப்பு’ என்று சினேகாவின் வயிற்றில் முகத்தைப் புரட்டிக் கீச்சங் காட்டியபடி அவனும் சிரிக்க ஆரம்பித்திருந்தான்..

பிரேமாவுக்குச் சிரித்துச் சிரித்துக் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. சந்திரனை அப்படியே இழுத்துச் சேர்த்துக் கொண்டாள். ’ஏய்… கிறுக்கு, என்ன பண்ணுதே’ என்று சத்தம் கொடுத்த வாக்கில் முதலில் ஒரு கையை உயர்த்தினபடி அவள் மேல் சாய்ந்தவன் விரல்களின் பிடியைத் தளர்த்தி ஊசித் தட்டானைப் விடுவித்தான். ஒரு அவசரமான நீலக் கோட்டை இழுத்தது போல் அது பறப்பதை தன் மூடிய இமைகளுக்குள் பிரேமா பார்த்தாள்’.

அப்படி எல்லாம் இருந்தவனுக்கு எப்படி அப்படி ஒன்றும் சொல்லாமல் பிரேமாவை, சினேகாவை எல்லாம் விட்டுவிட்டுக் காணாமல் போக முடிந்தது என்று தெரியவில்லை. எல்லோர்க்கும் அது ரொம்பக் கஷ்டமான காலம் தான். சந்திரன் வேலை பார்த்த அவ்வளவு பெரிய ஜவுளிக்கடையில் ஒன்றுக்குப் பாதி கூட வியாபாரம் இல்லை. சந்திரனுக்காவது பாதிச் சம்பளம் கொடுத்தார்கள். பத்து இருபது பேரை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதை எல்லாம் கூட இரண்டு பேரும் சமாளித்தார்கள். சினேகாவுக்குச் சரியான சாப்பாடு கொடுக்கக் கஷ்டப்பட்டது. செண்பகவல்லி டீச்சர் வீட்டிலிருந்து அது சாப்பிடப் போதுமான அளவுக்கு ஒரு சின்னக் கிண்ணத்தில் சுடுசோறு வந்துவிடுவதால் கொஞ்சம் நிம்மதி.

சந்திரன் ஒரு நாள் சாயுங்காலம் நான்கு மணி போல வீட்டுக்கு வந்தான். அது கடையிலிருந்து வரும் நேரமே அல்ல. சைக்கிளை நிறுத்திவிட்டு மூக்கையும் வாயையும் மூடியிருந்த மாஸ்க்கைக் கழற்றிக் கொண்டு வீட்டுக்குள் வந்தவன் அப்படியே சுவரோரம் உட்கார்ந்து வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.  தலையில் தலையில் அடித்துக் கொண்டான். கேட்கக் கேட்க பிரேமாவுக்குப் பதிலே சொல்லவில்லை. ‘என்ன ஆச்சுப்பா, என்ன ஆச்சுப்பா?’ என்று பிரேமா அழ ஆரம்பித்தாள். சினேகா முகம் கோணிக் கிழிந்து சத்தம் போட்டது.  ஆண் பிள்ளை அழுகுரல் என்னமோ பண்ணும் இல்லையா. அதைக்  கேட்டுப் பேச்சியமக்கா வந்துவிட்டாள். கல்லூர் ஆச்சி தோசைக்கு அரைத்துக்கொண்டு இருந்த கையோடு வாசலில் நின்றாள். இடது கையால் சினேகாவைத் தூக்கி ஒக்கலில் வைத்துக் கொண்டு மாவுக் கையைக் கழுவப் போனாள்.

சின்ன வயதிலேயே அம்மா, அப்பா இல்லாது போன சந்திரனை மகேஸ்வரி அக்கா தான் வளர்த்திருக்கிறாள்.  படிக்க வைத்திருக்கிறாள். அவள் மகன் படித்து நல்ல வேலைக்குப் போனதும் மகன் குடும்பத்தோடு மும்பைக்குப் போய்விட்டாள். சந்திரன் கல்யாணத்துக்குக் கூட வரவில்லை, பத்திரிக்கை அனுப்பக் கூட விலாசம் தெரியாமல் போயிற்று.

மகேஸ்வரி அக்காவும் அக்காவீட்டு அத்தானும் சிகிட்சையிலிருக்கும்போது ஒருத்தர் செத்தது ஒருத்தருக்குத் தெரியாமலே இறந்து வீட்டுக்குக் கூடக் கொண்டு வராமல் அப்படியே ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்துப் போய் எரித்துவிட்ட.  தகவலை யாரோ செய்துங்க நல்லூரிலிருந்து கூப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.

 “நீ தானே எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தே. நீ தானே எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தே’’ என்று திரும்பத் திரும்பக் கத்தி சந்திரன் அழுதான். பிரேமாவைக் கட்டிப் பிடித்து மடியில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். வளவில் உள்ள இரண்டு மூன்று பேர் வாசலில் நிற்கிறபோது சந்திரன் இப்படி மடியில் படுத்துக் கிடப்பது பிரேமாவுக்குக் கூச்சமாக இருந்தது. ‘எந்திருச்சுப் போயி ஏதாவது காப்பி கீப்பி  இருந்தா சுட வச்சுக் கொடு’ என்று சத்தம் வந்தது கூட, சந்திரனை விட்டு பிரேமாவை அப்புறப் படுத்தும் நோக்கத்தில் தான் இருக்கும்..

சந்திரன் நான்கைந்து நாள் பேசாமல் கொள்ளாமல் அப்படியே இருந்தான். கடைக்குப் போகவில்லை. அவன் செக்‌ஷனில் சூப்பர்வைஸராக இருக்கும் பிரமநாயகம், கடைக்குச் சந்திரன் வருகிற போது வரட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். இன்னொரு பையனிடம் கொஞ்சம் அரிசி, பலசரக்குச் சாமான் எல்லாம் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று வாங்கிக் கொடுத்துவிட்டிருந்தார்.

வெளியே போனாலும் வீட்டுக்குள்ளே இருந்தாலும் பிரேமாவுக்குப் பதற்றமாகவே இருந்தது. ஒரு நாள் ராத்திரி ஆளைக் காணோமே என்று பார்த்தால், அறுப்புக் களத்து நாவல் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான். கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்த பாம்பே சலூன் பூதத்தான் அண்ணன் பார்த்துக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டுப் போனார்.

அதே மாதிரி இன்னொரு நாள் பிரேமா தூக்கத்திற்கு இடையில் முழிப்பு வந்து’ பார்க்கையில் அவனுடைய சூட் கேஸில் இருந்து பழைய நோட்டுகளும் வந்த இன்லேண்ட் லெட்டர்களும் அவன் வேலை பார்க்கும் ஜவுளிக் கடையின் பளபளப்பான விளம்பரப் படங்களும், வெவ்வேறு அளவில் இருந்த தனித் தனித் தாள்களும் பரப்பிப் போட்டபடி உட்கார்ந்திருந்தான். ஒரு நாள் சரியாக விடியக் கூட இல்லை, கல்லூர் ஆச்சி இருக்கும் சாமிக்குச்சுக்குப் போய் நின்று பூடத்தின் முன்னால் விழுந்து கும்பிட்டு அப்படியே திருநீறை அள்ளிப் பூசிக்கொண்டு வந்தான்..

ஒரு மூன்று நான்கு நாட்கள் கழித்து, எப்போது எங்கே புறப்பட்டுப் போனான் என்றே தெரியவில்லை. காணாமல் போய்விட்டான்.  சந்திரனைக் கண்டே பிடிக்க முடியவில்லை. இருக்கிறானா, இல்லையா என்பதற்குக் கூட ஒரு துப்பும் இல்லை.

பிரேமா எப்படியும் சந்திரன் திரும்பி வருவான் என்றுதான் நினைத்தாள். ரெண்டு மாதங்கள் கூட இராது. சினேகாவுக்குத் திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய், மறு நாளுக்குள் இறந்தும் போயிற்று. பிரமநாயகம் தான் கூடவே இருந்து ஆஸ்பத்திரிச் செலவு மருந்துச் செலவு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். சினேகாவுக்கு இப்படி ஆனதைச் சந்திரன் கேள்விப்பட்டால்  வந்து பார்க்காமல் இருக்க மாட்டான். கண்டிப்பாக வருவான் என்று பிரேமாவுக்குத் தோன்றியது. அதை எப்படிப் பிரமநாயகத்திடம் முகத்தைப் பார்த்துச் சொல்வது என்றும் தெரியவில்லை. பிரேமா அவருடைய முகத்தை விட அவருடைய வலது கையில் இருக்கும் ஆறாவது விரலையே பார்த்திருக்கிறாள்.

பெரு விரலிலிருந்து கிளை பிரிந்தது போல் இன்னொரு பெரு விரல் இருக்கும். அவர் பெரும்பாலும் அவருடைய அந்த வலது கையை அசைத்து அசைத்துப் பேசுகிறவராக இருந்தார். அவர் பிரேமாவிடம் சொல்வதை எல்லாம் அந்த ஆறாவது விரலே சொல்கிறது போலவும், அவர் செய்வதை எல்லாம் அந்த ஆறாவது விரலே செய்கிறது போலவும் பிரேமாவுக்கு இருந்தது. ஆஸ்பத்திரியில் சினேகாவைத் தூக்கிப் பெட்ஷீட் மாற்றும் போது அவருடைய அந்த ஆறாவது விரலின் நகத்தில், விரித்திருந்த பழஞ்சேலையின் நூல் சிக்கிக் கொண்ட போது பிரேமா அதை அவசரமாக அகற்றிவிட்டாள். சின்ன வயதில் அவள் ஏறி உட்கார்ந்திருந்த வாதாமடக்கி மரத்தின் கிளை போல அந்த இரண்டு பெருவிரல்களும் பிரிந்து இருந்தன.

பிரேமா அவரிடம் எதுவும் சொல்லாமலே, பிரமு  ‘காலையிலே வரைக்கும் பார்ப்போம்’ என்று மொட்டையாகச் சொன்னார். காலை வரை சந்திரன் வருகிறானா பார்ப்போம். அப்புறம் பிள்ளையைத் “தூக்கிகொண்டு போவோம்” என்பதுதான் அதற்கு அர்த்தம். துணைக்கு இருந்த கல்லூர் ஆச்சியும், ‘நெஞ்சிலேயும் தோளிலயும் அவன் போட்டுக்கிட்டு அலைஞ்ச பிள்ளை. இன்னா கண்ணை மூடிக் கண்ணைத் திறந்தா அவன் புறவாசலில் இந்தப் புள்ளையோட தெக்கேயும் வடக்கேயும் நடக்க மாதிரியே இருக்கு’ என்றாள். அதைக் கேட்ட பிரேமா மீண்டும் வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.

பிரமு அவளையே பார்த்துக்கொண்டு நின்றார். ஆச்சியைப் பார்த்து, ‘சைகையில் ஏதாவது பிரேமா சாப்பிட்டாளா என்று கேட்டார்.  அரைக் கண் போட்டுத் தூங்குவது போல் கிடக்கும் சினேகாவின் மேல் இருந்த போர்வையைக் கழுத்துவரை இழுத்துவிட்டார்.

சினேகாவை குற்றால ரோடு தாண்டி பழைய பேட்டை போகிற பாதையில் கண்டியப்பேரி பக்கம் புதைத்ததாக பேச்சியமக்கா வீட்டுக்காரர் வந்து சொன்னார். ‘ஏழு எட்டுப் பனைமரம் தான் நிண்ணுது. வேற எதுவுமே இல்லை. நல்லா காத்துக் காலம் லா. பனை ஓலை உரசுகிற சத்தம் மட்டும் கேட்டுது. குழியில வைக்கும் போது பிரமு அண்ணாச்சியைப் பிடிக்க முடியலை. குலுங்கிக் குலுங்கி அப்படி ஒரு அழுகை’ என்று சொல்லச் சொல்ல வீட்டு இருட்டுக்குள் உட்கார்ந்திருந்த பிரேமாவுக்கு பனை ஓலை உரசுகிற சத்தம் காதுக்குள் கேட்டது. ரொம்ப நாளைக்கு அது அவ்வப்போது திரும்பத் திரும்பக் கேட்டது.

பிரம நாயகமும் நாற்பது நாற்பத்திரண்டு வயது வரை கல்யாணம் முடிக்காமலே தான் இருந்திருக்கிறார். சந்திரன் வேலை பார்த்த ஜவுளிக் கடை முதலாளி குடும்பத்திற்கு அவர் நெருங்கின சொந்தம் என்றார்கள். பெயர்தான் சூப்பர்வைஸரே தவிர அவரைக் கடையில் உசத்தியாகத் தனி கௌரவத்தில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

பிரம நாயகமும் தன் விருப்பத்தைச் சொன்னார். பிரேமாவுக்குச் சங்கடம் இல்லை என்றால் அவளைத் தாலி கட்டிக் குடித்தனம் நடத்தத் தனக்குச் சம்மதம் என்றும் யோசித்துச் சொல்லட்டும் அவசரம் இல்லை என்றும் அவரோடு ஒன்றாகப் படித்த, இந்த வளவின் நடுவீட்டில் இருக்கிற பாடகலிங்கம் சார்வாளிடம் சொல்லிவிட்டார். அவருடன் அவர் சம்சாரத்தையும் கூட்டிக்கொண்டு இதைச் சொல்லும் போது பேச்சியமக்காவும் இருக்கட்டும் என்று எல்லோருமாக வந்தார்கள்.

‘ நல்ல நிறைஞ்ச தேரோட்டத்து அன்னைக்குச் சொல்லுதோம். இந்தா பார் குழாயில தண்ணியைத் திறந்துவிட்டிருக்கான். தொட்டி நிரம்பி வார வழியெல்லாம்  பெருகிக் கிடக்கு. நனைஞ்சுரக் கூடாதுண்ணு வேட்டியைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டுதான் வந்தேன். அப்படியே  நனைஞ்சாலும் ஒண்ணும் கெட்டுப் போகலை. செத்த நேரத்தில தானாக் காஞ்சுட்டுப் போது. உலகத்தில எல்லாம் அப்படித்தான்’ என்று ஆரம்பித்துச் சொன்னார். ‘நேத்துச் சிரிச்சோம் என்கிறதுக்காக இன்னைக்குச் சிரிச்சுக்கிட்டா இருக்கோம். இன்னைக்கு அழுதுக்கிட்டு இருக்கோம் என்கிறதுக்காக  நாளைக்கும் அழுதுக்கிட்டா இருக்கப் போறோம். இப்பிடியும் சொல்ல முடியாது. அப்படியும் சொல்ல முடியாது’ என்று மேலே விஷயத்தைக் கொஞ்சமாகப் பிரேமாவிடம் புரிய வைத்தார்.

பிரேமா ரொம்ப யோசிக்கவும் இல்லை. ஒத்திப் போடவும் இல்லை. திரும்பத் திரும்ப பிரமுவின் வலது பெருவிரலிலிருந்து கிளை பிரிந்திருக்கிற இன்னொரு பெருவிரல் தான் தெரிந்தது. ஆஸ்பத்திரியில் அந்த ஆறாவது விரலில் சிக்கின பழஞ்சேலையின் நூலை அவள் எடுத்துவிட்டதையே நினைத்துக் கொண்டாள். இன்னும் அந்த நூல் பிரமுவின் நகத்திலிருந்து தொங்கிக் காற்றில் லேசாக அலைவது போல் இருந்தது. அந்த ஒற்றை இழை வளர்ந்து வளர்ந்து இந்த வீடு முழுவதையும் நிரப்பிவிட்டது, ஒரு பறவை முட்டை போல பிரேமா அந்த சீராக வளைத்துச் சுற்றப்பட்ட நூல் அடுக்கு நடுவில் பொதிந்து வைக்கப்பட்டு இருக்கிறாள். ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. ஆனால் மறுநாள் காலையிலேயே சரி என்று அவள் முடிவைச் சொல்லிவிட்டுவிட்டாள்.

நேற்றுத் தான் பாடக லிங்கம் சார் வீட்டு விளக்கு முன்னால் வைத்து மாலை மாற்றிக் கொண்ட மாதிரி இருக்கிறது. ரைஸ்மில்காரர் வளவை விட்டு இந்தத் தெற்குப் புதுத் தெரு வீட்டுக்குப் போன பிள்ளையார் சதுர்த்தி அன்றைக்கு வந்தார்கள், கிட்டத்தட்ட பத்து மாதம் ஆகப் போகிறது. பிரேமா பிள்ளை உண்டாகியே ஏழு மாதம் முடிகிறது,  

இந்த வீடு கொஞ்சம் வசதியானது. இன்னொரு தட்டு உண்டு. முன் பக்கம் ஒடுக்கமாக ஒரு கல் திண்ணை கூட இருக்கிறது. வீட்டுச் சொந்தக்காரர்கள் வீட்டை இடித்துக் கட்டும் போது அங்கே இருந்ததை அகற்றி  இப்படிக் கட்டியிருக்கிறார்கள். இடைஞ்சல் ஒன்றும் இல்லை. வசதியாகத்தான் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீர் பிடித்து வைக்கும் சின்ன சின்டெக்ஸ் ட்ரம்மை அங்கேதான் வைத்திருக்கிறாள். சந்திரன் சைக்கிள் சீட் மேல் ஒரு பழைய கட்டம் போட்ட சாரத்தைப் போட்டு மூடி அங்கே தான் நிறுத்தியிருக்கிறது. பிரேமா பார்த்த ஊசித்தட்டான் கூட அதில் தானே அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அது பறந்து போகாமல் அப்படி அங்கேயே இருப்பது அவளுக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவளுக்குத் தெரியாமல் யாரும் வந்து அப்படி அதை வரைந்துவிட்டுப் போய்விட்டார்களா?

அடுத்த வீட்டில் இருக்கிற அக்கா பெயர் அம்மச்சியார் என்கிறார்கள். அப்படி ஒரு பெயரை அவள் கேள்விப்பட்டது இல்லை. ஏற்கனவே ஒரு இரண்டரை வயதில் அகத்தியர் என்று ஒரு ஆண்குழந்தை இருக்கிறது. வந்ததிலிருந்து இதுவரைக்கும் அவன் இடுப்பில் துணி என்று உடுத்தி இருந்து பார்த்ததே இல்லை. இப்போதும் குழந்தை உண்டாகியிருக்கிறார்கள். வயிறு பெரிதாக இருக்கிறது. அம்மச்சியார் அக்கா’ இவளிடம் இன்னும்  ஏன் உள்பாவாடை, உள் பாடி எல்லாம் போட்டுக்கிட்டு இருக்கே. ஃப்ரீயா இரு. ‘என்னை மாதிரி நைட்டி போட்டுக்கோ. வசதியா இருக்கும்’ என்று சொல்கிறாள். பிரேமாவுக்குக் கூச்சமாக இருந்தது. இதுவரை அவள் அப்படி இருந்தது இல்லை.

பிரமு இவர்கள் பேசுவதை முடுக்கில் வரும் போதே கேட்டுக் கொண்டு வந்தார் போல. வீட்டுக்குள் வந்ததும் சிரித்துக்கொண்டே ‘என்ன ? பக்கத்து வீட்டு அம்மா ஃப்ரீயா இருக்கச் சொல்லுதாங்களா?’ என்று பிரேமாவிடம் கேட்டான். பிரேமா முகத்தை மூடிச் சிரித்தாள். சட்டையைக் கழற்றிவிட்டு பனியனைக் கழற்ற இரண்டு கைகளையும் உயர்த்தியிருந்ததில்  முகம் மறைந்து பிரமு சத்தம் மட்டும் கேட்டது. அவளுக்கு ஊசித் தட்டான் ஞாபகம் வந்துவிட்டது

‘இங்கே கொஞ்சம் வாங்க . உங்க கிட்டே ஒண்ணு காட்டணும்’ என்று வெளியே வாசல் பக்கம் வரச் சொல்லி அவருடைய கையைப் பிடித்தாள். பிரமு என்ன என்று கேட்பதற்கு முன்னால், ‘ சைக்கிள் மேலே ஒரு ஊசித் தட்டான் உட்கார்ந்திருக்கு’ என்றாள்.

‘நான் என்னமோ, எனக்கு தெரியாம, யானை கீனை வாங்கியாந்து வாசலில் கட்டி வச்சிருக்க போல. நாம தான் பார்க்காம நடையேறி  வீட்டுக்குள்ள வந்துட்டமோண்ணுல்லா நினைச்சேன்’ என்று துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு வந்தார்..

நடையில் இறங்கியும் இறங்காமலும் நின்றுகொண்டு சங்கரனின் சைக்கிளின் பின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஊசித் தட்டானைக் காட்டி, ‘நைஸாப் போயி அதைப் பிடிச்சுக் கொடுங்க’ என்றாள்.

‘பிடிச்சு என்ன பண்ணப் போறே, சின்னப் பிள்ளை மாதிரிக் கையில வச்சு விளையாடப் போறயா?’என்று கேட்டுக் கொண்டே கல் திண்ணைப் பக்கம் போனார்.

‘ஆடாம அசையாம அப்படியே இருக்கு. உயிரோடே இருக்கா, செத்துப் போச்சா? – அவர் தன் உடலின் மொத்த அசைவுகளை நிறுத்தி ஒரே இடத்தில் வைத்துவிட்டு வலது கையை மட்டும் நீட்டினார்.

  ‘அதெல்லாம் உயிரோடதான் இருக்கு’  பிரேமா சொல்லிக்கொண்டே பிரமுவின் கையைப் பார்த்தாள். சுட்டு விரலும் பெருவிரலும், பெரு விரலை ஒட்டி அந்த ஆறாவது விரலும் பிடிப்பதற்குத் தோதுவான வாக்கில் மடங்கி முன்னால் பதிபோட்டு நகர்ந்துகொண்டு இருந்தன.

பிரமு தோளில் கிடந்து துண்டு விழுந்துவிடாமல் இடது கையால் லேசாகச் சரி செய்துகொண்ட போது.  இது வரை அது சலனமற்று இருந்த இடத்திலிருந்து அகன்று ஊசித் தட்டான்  பறக்க ஆரம்பித்தது. முதலில் ஒரு நேர் கோடு போலவும் அடுத்து ஒரு புகை நெளிவு போலவும் உயரே பறந்து காணாமல் போவதை பிரேமா பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 ‘அந்த சைக்கிளை யாரும் கேட்டால் சும்மா கொடுத்திருங்களேன். இன்னும் என்னத்துக்கு இங்கேயே வச்சுக்கிட்டு’ என்று பிரமுவைப் பார்த்துச் சொன்னாள்.

அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

1 COMMENT

  1. எப்பொழுதும் இழையோடும் ஒரு மெல்லிய கீற்று போன்ற வலி : சிறிய அழகின் கோடு, ஒரு உறவின் நினைவு.வண்ணதாசனின் வசீகர எழுத்து இனம் புரியாத கனத்தை கொடுக்கிறது. மெல்லிய காற்றை தொடச் செய்து வாடை குளிரை உடலெங்கும் போர்த்திவிடுகிறது ஊசித் தட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.