I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- )
டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள குழந்தைகளுக்காகவும் குழந்தைகளுக்குள் உள்ள பெரியவர்களுக்காகவும் எழுதுபவர் என்கிறார் அவருடைய மொழிபெயர்ப்பாளர். அது உண்மையும்கூட.
[ads_hr hr_style=”hr-dots”]
வளர்ச்சி
மூன்று வயதில்
என்னிடம் கடந்தகாலம் இல்லை.
ஐந்து வயதில்
எனது கடந்தகாலம் நேற்றினுடையதாக இருந்தது.
ஏழு வயதில்
என்னுடைய கடந்தகாலம் போர்வீர்ர்களின் காலத்தினுடையதாக இருந்தது.
பதினொரு வயதில்
எனது கடந்தகாலம் டைனோசர்களுடையதாக இருந்தது.
பதினான்கு வயதில்
எனது கடந்தகாலம் இருந்தது பாடப்புத்தகங்கள் போல்.
பதினாறு வயதில்
நான் அச்சத்துடன் பார்த்தேன் கடந்தகாலத்தின் முடிவின்மையை.
பதினெட்டு வயதில்
எனக்கு நேரம் என்ன என்றுகூட தெரியவில்லை.
[ads_hr hr_style=”hr-fade”]
தன்னுடைய சாவிற்குள் குதித்த ஒரு நண்பன்
அவன் 9வது தளத்திலிருந்து குதித்தான்,
6வது தளத்தின் முற்றத்தில் தெறித்து,
3வது தளத்தின் கூரை இறக்கத்தினுள் எறியப்பட்டு,
கன்னமும் மூட்டுப்பகுதியும் சிராய்ந்துபோகும்படிக்கு
தரையிலிருக்கும் புதரினுள் விழுந்தான்.
பின்னர் மின்தூக்கியின் வழியே மீண்டும் 9வது தளத்திற்கே சென்று
மூன்று முன்னிடைச்சொற்கள் பிழையாகயிருக்கும்
தன் தற்கொலைக் குறிப்பை மீளவும் படித்துப்பார்த்துவிட்டு
அதை சரிசெய்கிறான்.
பின்பு 16வது தளத்தை நோக்கி ஓடிச்சென்று
மறுபடியும் அங்கிருந்து குதிக்கிறான்.
12வது தளத்தின் மட்டத்தில்
அவனுக்கு இறக்கைகள் முளைக்கின்றன
10வது தளத்திலிருக்கையில்
காற்று அவனை வழிநடத்துகிறது
பிறகு அவனை தூக்கிவிடுகிறது
மெதுவாக, இரவு வானை வட்டமிடும்படிக்கு.
[ads_hr hr_style=”hr-fade”]
இரவு
இரவில்
எங்கிருந்தோ வருகிறது
கொதிக்கும் நீரின் சப்தம்.
நஞ்சின் சிறு துளி
மருந்தாகிறது.
மனிதர்கள்
தன்னையறிமாலே
பிறர்மீது படையெடுக்கிறார்கள்.
இதயம்
போகிறது
சொல்லில்லாமல்
யாரை நோக்கியோ
பின்பு இருட்டைப் பார்த்து
பிறகு மங்கிய ஒளியைப் பார்த்து.
[ads_hr hr_style=”hr-fade”]
மேலும்
வேனிற்காலம் வரும்போது
சில் வண்டுகள் மீண்டும் பாடுகின்றன.
வாணவேடிக்கைகள் உறைகின்றன என் நினைவில்.
தூர தேசங்கள் மங்கலானவை
ஆனால் பிரபஞ்சமோ
சரியாக உன் மூக்கின் முன்னால்.
என்ன ஒரு ஆசிர்வாதம்
“மேலும்” எனும் இணைப்புச்சொல்லினை
மட்டும் விட்டுவிட்டு
மனிதனால் இறக்க முடியும் என்பது.
[ads_hr hr_style=”hr-fade”]
வெகு தூரத்திற்கு
ஓ என் இதயமே,
தயவு செய்து என்னை வெகு தூரத்திற்கு கூட்டிச்செல்,
அடிவானை விட தூரமாக,
நட்சத்திரங்களுக்கு அப்பாலான தூராதி தூரத்திற்கு,
எங்கு நான் இறந்தவர்களுடன் புன்னகையைப் பரிமாறிக்கொள்ள முடியுமோ,
எங்கு என்னால் பிறக்க தயாராகயிருக்கும் கருக்களின்
பலவீன இதயத்துடிப்பை கேட்கயியலுமோ
அங்கு கூட்டிச்செல்,
நம் ஆழமற்ற எண்ணங்களால் எட்டமுடிகின்ற தூரத்திற்கு அப்பால் கூட்டிச்செல்,
ஓ என் இதயமே,
தயவு செய்து என்னை கூட்டிச்செல்,
நம்பிக்கையை விட தூரமாக,
விரக்திக்கு அப்பாலான தூராதி தூரத்திற்கு என்னை கூட்டிச்செல்.
II யோஸோனோ அகிகோ (Yosano Akiko, 1878-1942)
ஜப்பானின் பின் செவ்வியல் காலகட்டத்துக் கவிஞர். வெளிப்படையான, உணர்வு வேட்கை மிகுந்த (நம் சிருங்காரக் கவிகளுடன் இணைவைத்தும் இவரை வாசிக்க முடியும்) மற்றும் மெய் தேட்டம் மிக்க தன் கவிதைகளுக்காக பரவலாக அறியப்படுபவர். River of stars எனும் தலைப்பில் அவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
[ads_hr hr_style=”hr-dots”]
நாம் நேற்றுதான் பிரிந்தோமா இல்லை ஓராயிரம் வருடங்கள் கடந்துவிட்டனவா?
இப்போதும்கூட, என் தோளில்
நான் உணர்கிறேன்,
உன் ஆதுரமான கரத்தினை.
[ads_hr hr_style=”hr-fade”]
ஊதா வண்ணத்துப்பூச்சிகள்
இரவில் என் கனவினூடே பறக்கின்றன.
வண்ணத்துப்பூச்சிகளே எனக்குச் சொல்லுங்கள்,
என் கிராமத்தில்
விழுந்து கிடக்கும் விஸ்டீரியா மலர்களை பார்த்தீர்களா?
[ads_hr hr_style=”hr-fade”]
என் பளபளக்கும் கருங்கூந்தல்
அலங்கோலமாகிவிட்டது,
உன் மீதான காதலின்
ஓராயிரம் சிக்கலான எண்ணங்களை நிகர்த்த
ஆயிரம் முடிச்சுகளால்.
[ads_hr hr_style=”hr-fade”]
என் குளியல்த்தொட்டியில்–
மூழ்கிக்கிடக்கிறேன்
நீரூற்றின் மேலே வசீகரமான லில்லிகளைப் போல,
இருபது வேனிற்காலங்களின் இந்த உடல்தான்
எத்தனை அழகு.
[ads_hr hr_style=”hr-fade”]
வசந்தம் குறுகியது
இங்கே சாசுவத வாழ்வு எதற்குத்தான் உண்டு என்கிறேன்
பின்பு அவன் கைகளை
என் இளம் முலைகளை நோக்கி நகர்த்துகிறேன்.
[ads_hr hr_style=”hr-fade”]
மழைத்துளிகள் இடைவிடாது
வெண்தாமரையினுள் விழுந்து கொண்டிருக்கின்றன.
என் காதலர் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கையில்,
அவருடைய சிறிய படகிலிருந்து
நான் குடையை விரிக்கிறேன்.
III. ரியூச்சி தமுரா (Ryuichi Tamura, 1923-1998)
டோக்கியோவின் ஓட்சுகா பகுதியில் பிறந்தவர். கவிஞர், பத்தி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பாழ் நிலம் எனும் இலக்கிய இதழை நடத்தியவர். போருக்கு பிந்தைய ஜப்பான், நகர்மயமாக்கல் மீதான விமர்சனக் கண்ணோட்டம், இலையுதிர் காலம், நம்பிக்கையிழப்பு இவை தமுராவின் கவிமையங்கள். Four Thousand Days and nights, The World with no words என பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
[ads_hr hr_style=”hr-dots”]
அக்டோபர் கவிதை
என் சுபாவம் இக்கட்டிலிருப்பது.
எனது மென்மையான தோலுக்கடியில் உணர்ச்சிகளின் மூர்க்கச் சூறாவளி.
அக்டோபரின் அத்துவான கடற்கரைகளிலோ
புதுப்பிணங்கள் கரை ஒதுங்குகின்றன.
அக்டோபர்தான் என் சாம்ராஜ்யம்.
வலுவற்ற எனது கரங்கள் தொலையவிருக்கிற விஷயங்களை ஆளும்.
சிறிய எனது விழிகள் மறையவிருக்கிற விஷயங்களைக் காணும்.
மிருதுவான எனது செவிகளோ மரிக்கப்போகிறவர்களின் மெளனத்தை செவியுறும்.
பயத்திலிருப்பதும் என் சுபாவம்தான்.
யாவற்றையும் கொலைசெய்யும் காலம்
என் அடர் குருதியில் பாய்ந்து கொண்டிருக்க
அக்டோபரின் குளிர் வானில் நடுங்குகிறது ஒரு புதியப் பசி.
அக்டோபர்தான் என் சாம்ராஜ்யம்.
மழை பெய்யும் அனைத்து நகரங்களையும் ஆக்கிரமிக்கும்
என்னுடைய மரித்தவர்களின் படை.
தொலைந்துபோன ஆன்மாக்களை வட்டமிடும்
எனது இறந்தவர்களின் ரோந்து விமானங்கள்.
இறக்கவிருப்பவர்களுக்காக தங்களுடைய பெயரை
கையொப்பமிடுவார்கள் எனது இறந்துபோன கலவரக்காரர்கள்.
[ads_hr hr_style=”hr-fade”]
பதிமூன்று நொடி இடைவெளியுடன் வெளிச்சம்
எனக்கு புது வீடுகளை பிடிக்காது.
இது நான் பிறந்து வளர்ந்தது
ஒரு பழைய வீடு என்பதால் இருக்கலாம்.
அங்கு இறந்தவர்களுடன் உணவைப்
பகிர்ந்துகொள்ள உணவு மேசையுமில்லை
புது உயிர்கள் வளர்வதற்கு இடமுமில்லை.
இருபது வருடங்களுக்கு முன்பாக இது இருக்கலாம்,
நான் ஒரு கவிதையில் எழுதினேன்
“ஒரு பேரிக்காய் மரப் பிளவு”
புது வீட்டின் சிறியப் பரப்பில்
நான் மீண்டும் நட்டுவைத்தேன் பேரிக்காய் மரத்தினை.
காலையில் அதற்கு நீருற்றுவது என் வேலையாக இருந்தது.
நான் மரணத்தை வளர்க்கவிரும்பினேன்
குறைந்தபட்சம் பேரிக்காய் மரத்தினுள்ளாவது
அப்புறம் இரவில் விக்டோரிய மஞ்சள் புத்தகங்களைப் படித்தேன்
என்னுடைய ஒரே பிரமை
“எனக்கு எதிர்காலத்தைக் குறித்த எந்த பிரமையுமில்லை”
இருந்தபோதிலும் அந்தத் தருணங்களில் கூட
தொடுவானத்தில் வெளிச்சமிருந்தது
என் சன்னலுக்கு வெளியே
நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் ஒஷிமா தீவின்
கலங்கரைவிளக்கத்தின் ஒளியிருந்தது
அதுவும் பதிமூன்று நொடி இடைவெளியுடன்.
IV தகுபொகு இசிகாவா (Takuboku Ishikawa, 1886-1912)
[ads_hr hr_style=”hr-dots”]
கிழக்கத்திய குட்டித்தீவின் வெண்மணலில்,
கண்ணீரில் நனைந்தவாறு,
நான் விளையாடுகிறேன் நண்டுகளுடன்.
[ads_hr hr_style=”hr-fade”]
நான் என் வீட்டிலிருந்து புறப்பட்டேன்
கடல் பார்த்தபடி
சில நாட்களுக்கு அழுவதற்காக.
[ads_hr hr_style=”hr-fade”]
என் வளர்ப்பு நாயின் காதுகளை வெட்டினேன்–
கொடுமையே!
இதுதான் களைத்திருக்கையில் நான் செய்யும் காரியமா?
[ads_hr hr_style=”hr-fade”]
நான் மூச்சுவிடுகையில்,
மார்பிலிருந்து வரும் இந்தச் சப்தம்
தனிமையானதாக இருக்கிறது குளிர்கால காற்றை விடவும்.
[ads_hr hr_style=”hr-fade”]
அவ்வளவு நிம்மதி இந்த புத்தாண்டில்
மனம் காலியாகயிருக்கிறது
ஏதோ என் ஒட்டுமொத்த கடந்தகாலமும் மறைந்துவிட்டதைப் போல!
[ads_hr hr_style=”hr-fade”]
நான் மலையொன்றின் உச்சிவரை ஏறினேன்
பிறகு கீழிறங்கி வந்து என் தொப்பியை அசைத்தேன்
ஒரு காரணமுமில்லாமல்.
V ஜன் யமமுரா (Jun Yamamura, 1898-1975)
[ads_hr hr_style=”hr-dots”]
வெள்ளி மலை
மலைக்கு மேல் கூதிர்காலமாக இருந்தது.
இடைகாலத்திய தோற்றத்தில் ஒரு கட்டிடமும் இருந்தது,
களைச்செடிகளுக்கு மேலே
தள்ளாடிக் கொண்டிருந்தது மஞ்சளான மாலைக்காற்று.
இந்த இடத்திற்குப் பக்கத்தில்தான்
முன்பு ஒரு மிருகக்காட்சி சாலை இருந்தது.
புலிகளும் சிங்கங்களும்
கூண்டுகளுக்குள் வசித்துக்கொண்டிருந்தன.
ஒரிரவில், எதிர்பாராத வான்வழித்தாக்குதலில்
புலிகளும் சிங்கங்களும்
சாம்ராஜ்யத்தின் மக்களுடன்
மறைந்து போயின.
ஆனால் பாருங்கள்.
மட்டமான புகழும் வெறுப்பும்
ஒன்றுமில்லாதபடிக்கு எரிக்கப்பட்டுவிட்டனவா என்ன ?
இன்று, இந்த இடத்தைச் சுற்றியுள்ள
கான்கிரிட் இடிபாடுகளிலிருந்து
விலங்குகளின் வாசனை வருகின்றது.
ஏன் நாஜிக்களின் ஹெய்சர்களின் வாசனையும் கூட வருகிறது.
மலைக்கு பின்பக்கத்தில் ஒரு நகரமிருக்கிறது,
அங்கு மனிதர்களும் கார்களும் ஒருவரையொருவர் முட்டித்தள்ளியவாறு,
துறைமுகத்தினுள்ளும் கடலினுள்ளும் விழுகின்றனர்,
அச்சமயத்தில் மட்டும் பருவகாலம்
மெளனமாக
கூதிர்காலத்திலிருந்து குளிர்காலத்திற்கு மாறிக்கொள்கிறது.
VI தனேடா சன்டோகா (Taneda Santoka, 1882-1940)
ஜப்பானின் ஹோன்ஸூ தீவின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்தவர். மரபான ஹைக்கூ கட்டுப்பாட்டை உதறி அதேசமயம் பொலிவையும் மின்னல்வெட்டையும் இழக்காமல், சுதந்திரமான வடிவில் ஹைக்கூகளை எழுதியவர். For all my Walking, Mountain Tasting என தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
[ads_hr hr_style=”hr-dots”]
காத்திருப்பது எதற்காக?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்
குவிந்து கொண்டிருக்கின்றன நிறைய உதிர்ந்த இலைகள்.
[ads_hr hr_style=”hr-fade”]
விடியற்கால வானின் சிவப்பு
அந்தி வானின் சிவப்பு
உண்பதற்கு ஏதுமில்லை.
[ads_hr hr_style=”hr-fade”]
சிட்டுக்குருவிகள் பிதற்றுகின்றன
திரும்பியளிக்க இயலாது
நான் கடனாக வாங்கியதை.
[ads_hr hr_style=”hr-fade”]
சொர்க்கம் என்னை கொல்வதில்லை
என்னை அது கவிதையெழுதச் செய்துவிடுகிறது.
[ads_hr hr_style=”hr-fade”]
தபால் வந்தது
பிறகு
பெர்சிம்மன் இலைகள் உதிர்ந்தன வெறுமனே
[ads_hr hr_style=”hr-fade”]
மலையின் மெளனத்திற்கு மேலே
அமைதியான மழை.
[ads_hr hr_style=”hr-fade”]
அனைத்து நாட்களும்
மலைகளில்
எறும்புகளும்கூட நடக்கின்றன.
[ads_hr hr_style=”hr-fade”]
சிவப்பு தபால் பெட்டி
நிற்கிறது
காலைப்பனியில்.
[ads_hr hr_style=”hr-fade”]
வேறு வீடுகளேயில்லை
பிச்சையெடுப்பதற்கு
மலைக்கு மேல் முகில்கள்.
[ads_hr hr_style=”hr-fade”]
கொஞ்சம்கூட மேகங்களே இல்லை
முன்பு எப்போதையும்விட தனிமையில் வானம்.
VII. கட்டோ கைஷூன் (Kato Kaishun, 1885-1946)
[ads_hr hr_style=”hr-dots”]
காற்று
காற்றுக்கு பெரிய வட்டமான தலை உண்டு
காற்று மழித்த தலையுடைய ஒர் உயிரி
மேலும் காற்று ஒரு பூதம்
கை கால்கள் இன்றி
அது மெல்ல நடக்கிறது யானையைப் போல
பிறகு வேகமாக மறைகிறது
அடர்ந்து வளர்ந்த நாணல்களின் இரண்டு அல்லது மூன்று இலைகளுக்குப் பின்னால்
பின்பு தன்னை இழக்கிறது ஆழமற்ற தண்ணீருக்கு மேல்
இறுதியில் அனைத்து வகையான காற்றுகளும் உருமாறுகின்றன புற்களின் மரங்களின் வடிவத்திற்கு.
மிகுந்த ஈடுபாட்டுடன் காற்று விசில் அடிக்கிறது,
துடுக்குத்தனத்துடன்,
யுவதியின் வெண்ணிற கால்களைச் சுற்றி விளையாடுகிறது,
பிறகு காற்று தன் வடிவத்தை
அந்த யுவதியின் உருவத்திற்கு
மாற்றிக்கொள்கிறது.
பாருங்கள்!
அந்தக் காற்று சற்று முன்தான் நீரில் இறங்கியது,
அதற்குள் அது மறுகரைக்கு வந்துவிட்டது
தன் தலையை உயர்த்திபடி.
பிறகு நம்மை நோக்கி தலையை திருப்புகிறது
அது சிரிக்கிறது.
VIII. ஷிங்கிச்சி தகாஹஷி (Shinkichi Takahashi, 1901-1987)
ஜப்பானின் ஷிக்கோக்கு தீவில் பிறந்தவர். ஜப்பானிய டாடாயிச இயக்கத்தின் முன்னோடி. நவீன ஜென் கவிஞர். ஜென் குரு ஷிஷன் அஸிகாகாவின் கீழ் பதினேழு வருடங்கள் ஜென் பயிற்சி மேற்கொண்டவர். இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் Triumph of the sparrow எனும் தலைப்பில் மொழியாக்கம் கண்டு வெளிவந்திருக்கிறது.
[ads_hr hr_style=”hr-dots”]
நிலவு
நிலவு பிரகாசிக்கையில்
பில்லியன் சவங்கள்
அழுகிக்கொண்டிருக்கின்றன
பூமிக்கடியில்.
அவற்றில் இருந்து எழுந்து வந்து,
விரைவில் அவற்றிடமே சென்றுவிடுவேன் நான்– எல்லோருமே அப்படித்தான்
எங்கே மிதந்து கொண்டிருக்கிறது நிலவு?
என் மூளையின் அலைகளுக்கு மேல் மிதந்து கொண்டிருக்கிறது நிலவு.
[ads_hr hr_style=”hr-fade”]
இன்மை
கேட்டால் வெறுமனே சொல்லுங்கள்
“அவன் வெளியே போயிருக்கிறான்
ஐந்து பில்லியன் வருடங்களில் வந்துவிடுவான் என்று!”
IX. ரியோகன் (Ryokan, 1758-1821)
[ads_hr hr_style=”hr-dots”]
லட்சியத்துடன் இருப்பது களைப்பூட்டுவதாக இருக்கிறது.
தன்னைத்தானே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன் இந்த உலகத்தை.
எனது சேமிப்பில் பத்து நாளுக்கான அரிசி
கணப்பு அடுப்புக்கருகே ஒரு கட்டுச் சுள்ளி இருக்கிறது.
இனி எதற்கு ஞானத்தையும் மாயையும் பற்றி புலம்ப வேண்டும்?
கூரையில் விழும் இரவு மழையை கவனித்தபடி
கால் இரண்டையும் நீட்டிக்கொண்டு
செளகரியமாக அமர்ந்திருக்கிறேன்.
[ads_hr hr_style=”hr-fade”]
மனம் அற்று, மலர்கள் வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கின்றன.
மனம் அற்று, வண்ணத்துப்பூச்சிகள் மலர்களுக்கு வருகின்றன.
இருந்தபோதிலும், மலர்கள் பூக்கும்போது
வண்ணத்துப்பூச்சிகள் வந்துவிடுகின்றன.
வண்ணத்துப்பூச்சிகள் வரும்போது
மலர்கள் பூத்துவிடுகின்றன.
[ads_hr hr_style=”hr-fade”]
நான் மலைக்கு வந்தேன்
அலைகளின் சப்தத்தை கேளாதிருப்பதற்காக.
இப்போதோ இன்னொரு வழியில் தனிமையில் இருக்கிறேன்-
பைன் காட்டுக்குள் காற்று.
[ads_hr hr_style=”hr-fade”]
ஓராயிரம் சிகரங்கள் பொருந்தியிருக்கின்றன உறைந்த முகில்களுடன்;
பத்தாயிரம் பாதைகளில் மனித நடமாட்டமென்று எதுவுமில்லை.
நாள்தோறும் வெறுமனே சுவர் பார்த்து அமர்ந்திருக்கிறேன்,
சமயங்களில் நான் கேட்கிறேன் சன்னலினூடே சறுக்கிவரும் பனியை.
[ads_hr hr_style=”hr-fade”]
எனது கை ஏந்தியிருக்கிறது முயல்கொம்பினால் உருவாக்கப்பட்ட பிரம்பினை.
எனது உடல் போர்த்தப்பட்டிருக்கிறது வானத்து மலர்களுடைய அங்கியினால்.
எனது பாதங்கள் அணிந்திருக்கின்றன ஆமை முடியினால் ஆன செருப்பினை.
எனது உதடுகள் முணுமுணுக்கின்றன சப்தமேயில்லாத கவிதையை.
[ads_hr hr_style=”hr-fade”]
என் கீறலுற்ற மரக்கிண்ணம்
இந்தப் புதையலை மூங்கில் புதரிலிருந்து கண்டுபிடித்தேன்
கிண்ணத்தை ஊற்றுநீரில் கழுவி பின்பு அதை சரி செய்தேன்
காலைத் தியானத்திற்கு பிறகு, எனது கஞ்சியை அதில் எடுத்துக்கொள்கிறேன்;
இரவில், எனக்கு அது வடித்தசாற்றையோ சோற்றையோ தரும்.
கீறலுற்றது, உடைந்தது, வானிலையால் தாக்கப்பட்டது, நெளிந்தது
இருந்தபோதிலும் அது என்னுடைய மேன்மைமிக்க கையிருப்பு!
[ads_hr hr_style=”hr-fade”]
எனக்குப் பிறகு பரம்பரைச்சொத்தாக எதை விட்டுச்செல்லப் போகிறேன்?
வசந்தத்தில் மலர்கள்.
கோடையில் குயில்.
கூதிர்காலத்தில் மேப்ப இலைகள்.
[ads_hr hr_style=”hr-fade”]
விடைபெறல்–
நான் குதிப்பேன் ஒரு தாமரை இலையின் மீது.
மக்கள் என்னை அழைக்கட்டும் தவளை என்று.
X மருயாமா கெளரு (Maruyama Kaoru, 1899-1974)
[ads_hr hr_style=”hr-dots”]
எனக்குள்ளிருக்கும் மரம்
எனக்குத் தெரியவில்லை எப்போது அது தொடங்கியதென்று
எனக்குள் ஒரு மரம் வேர்விட ஆரம்பித்திருந்தது
என் வளர்ச்சியினூடாக அதுவும் வளர்ந்தது
வளரும் என் உறுப்புகளில் இருந்து கிளைகளை விரித்தது
அதன் இலைகள் செழித்தன துக்கத்தின் வடிவில்.
நான் இனிமேல் வெளியே செல்லமாட்டேன்
இனிமேல் பேசவும்மாட்டேன்
அம்மாவிடம் ஏன் நண்பர்களிடம் கூட பேசமாட்டேன்..
நான் எனக்குள்ளிருக்கும் மரமாக மாறிக்கொண்டிருந்தேன்
இல்லை இல்லை நான் ஏற்கனவே அந்த மரமாக மாறிவிட்டேன்
நான் அமைதியாக நின்றேன் வயல்களுக்கு அப்பால்.
எப்போதெல்லாம் காலைச்சூரியனை வாழ்த்துகிறேனோ
எப்போதெல்லாம் அந்தியினால் பற்றவைக்கப்படும் மேகங்களை காண்கிறேனோ
அப்போதெல்லாம்
என் மெளனம் பளபளக்கும்
என் ஏகாந்தச் சுயம் பாடும்.
[ads_hr hr_style=”hr-fade”]
இருட்டு
சிறுவன் தன் விளக்கை ஏற்றுகிறான்
அணில்கள் மரத்தை நோக்கி பாய்ந்து ஓடுகின்றன
அவன் தன் விளக்கை மரத்தை நோக்கி காட்டுகிறான்
அணில்கள் விரைந்தோடி மர உச்சியில் ஒளிந்து கொள்கின்றன
சிறுவன் தன் விளக்கை மரத்தின் உச்சியைப் பார்த்து காட்டுகிறான்
அணில்கள் வானத்திற்குள் தாவிச்சென்று
நட்சத்திரங்களாகின்றன
தேர்வும் மொழியாக்கமும்: வே.நி.சூர்யா
[tds_info]
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :
வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்து வருகிறார். இவரின் ‘கரப்பானியம்’ எனும் கவிதைத் தொகுப்பு நூலை சால்ட் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
[/tds_info]
வே.நி.சூர்யா விற்கு வாழ்த்துகள்.விரைவில் தொகுப்பாக கொண்டு வாருங்கள். அருமை.💐💐💐💐💐
கவிதைகள் புதிய கோணத்தில் பறவையாகவும் தற்க்கொலையாளனின் குதிக்கும் உயரத்தில் பெரிய நம்பிக்கையைச்சொல்கிறது கவிதைகள் அருமை மொழி மாற்றங்கள் ஆச்சரியமானவை, காத்திருப்பு வீண்போகவில்லை
அற்புதம்
ஒரு முறை படித்து வெளியே வந்த பின்னர் மீண்டும் ஆழ்ந்து படித்தாலென்ன என்று தோன்றுகிறது..
மீண்டும் படிப்பேன்
மொழி பெயர்ப்பாளருக்கு என் வாழ்த்துகள்
சிறப்பான கவிதைகள் வாழ்த்துகள் சார்
வாழ்வின் மீதான பற்றுதலை இறுக்கவும் துறக்கவும் செய்விக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் வாசகரைத் தனக்குள் ஈர்ப்பதில் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. அழகான கவியாக்கம். வாழ்த்துகள் வே.நி.சூர்யா.
பெரியவரான ஷன்டோரா தனிக்காவுக்குள் இருக்கும் அவரது குழந்தைமையை சிறப்பாக காட்டுகிறது அவரது கவிதை மொழி: சிறுசிறு வெளிச்ச ரேகை தெறிப்புகளை படரவிடுகிறது தகுபோகு இசிகாவின் கவிதைகள் : நிகழ் கால புள்ளியில் இருந்து கடந்த கால நினைவுக்குள் நுழையவும், அவற்றை மறந்து வெளி ஏறவும் செய்கின்றன கவிதைகள். சிறப்பு தளத்தை தரிசிக்க செய்த கனலிக்கு நன்றி. வாழ்த்துக்கள்