பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல்
1.
ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது
இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது.
முடிகின்ற போது
நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக
இருக்கிறது.
2.
இந்தச் சாலைகள் முடிவற்றவை
நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே
இப்பட்டாம்பூச்சிகள் பிறந்து வருகின்றன.
இக்கற்கள் ஆயிரமாயிரம் வருடங்கள் கழித்தும் இங்கேயேருக்கின்றன.
சாம்பல் நிறப்பூக்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு குருவி தனக்கான சிறிய நெல்லை சேகரித்து வைக்கிறது.
காலம் எப்போதும் ஒன்றைத் தனிமையில் நிறுத்தி வைத்திருப்பதில்லை.
3.
இந்தப் போர்கள் முடிவற்றவை
நாம் இன்னும் வலிமையானவர்கள் என்பதற்காகவே
ஒவ்வொரு இதயத்தின் மீதும் குறிபார்த்துச் சுடுகிறோம்.
நாம் இன்னும் மூளையுள்ளவர்கள் என்பதற்காகவே
இருண்ட சிறைகளை நிரப்பி அவர்களை பைத்தியங்களாக்கியிருக்கிறோம்.
நிலங்களின் சமனிலைகளை மாற்றியமைத்துவிட்டு
மக்களுக்கென சில புரட்சிக் கதைகளைப் பரவவிட்டிருக்கிறோம்.
காலம் ஒவ்வொரு இடம்பெயர்ந்த மனிதனையும் நினைவில் வைத்திருக்கிறது.
4.
இந்தக் கனவுகள் முடிவற்றவை
நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு
நாம் எப்போதும் பயணிகளாகவே யிருக்கிறோம்.
நாடோடிகளாலேயே இந்த உலகில் பாதைகள் உருவாகியிருக்கின்றன.
எல்லாத் தேசங்களுக்குமான ஒரு நிறத்தையே நாம் தேகமாக்கியிருக்கிறோம்.
வானம் தன் நீலத்தை எங்களுக்காகவே பொதுவாக்கியிருக்கிறது.
காலம் தன்னை சில நாடோடிப்பாடல்களால் புதுப்பித்துக்கொள்கிறது.
5.
இந்த விபத்துக்கள் முடிவற்றவை
இறுதியில் அழுகையைப் போல் நிம்மதியான ஒன்று இருப்பதில்லை
நாம் எப்போதும் மிகக்காலியாகவே இருக்க வைக்கப்பட்டிருக்கிறோம்.
சிலுவையிலிருந்து தன்னர்த்தத்தை பிய்த்துத் தருகிற தது.
காலம் தன் மகா துயரத்தின் தடத்தை மறைத்தே வைத்திருக்கிறது.
6.
இந்தத் தேடல்கள் முடிவற்றவை
ஒரு பொருளிருந்தத் தடம் மறைவதற்குள்
மீண்டும் புதுப்புது பொருள்கள் மலிந்து வருகின்றன.
சிறு கல்லொன்றைப் திருப்பி சரியாக வைப்பதற்குள்
உலகம் தன் அர்த்தத்தை மாற்றிவிடுகிறது.
காலம் முன்னெப்போதையும் விட வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.
-ஜீவன் பென்னி