1
இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில்
அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின்
துயர விகாசம்
கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன்
கரைகஞ்சி குடிப்பவனின்
மனவிலக்கம்.
[ads_hr hr_style=”hr-fade”]
2
அங்கம் அறுபட்டு
மரணித்த உறவின்
வாய்க்குள்
நினைவுப் பால் நனைத்த
வீர ராயன் காசுகளாய்
வின்சென்ட்டின் மஞ்சள்
கறுத்த சொற்கள்
கவிதைக்குள்.
[ads_hr hr_style=”hr-fade”]
3
வின்சென்ட்டின்
மஞ்சள் நாற்காலித் தனிமை
புகையிலையும்
புகைக் குழாயும்
இருக்கை மேலே
துண்டிக்கப்பட்ட உறவும்
அறுந்த காதும்
மஞ்சள் நீங்கிய கடையும்
கொரோனா தனிமையும்
அப்பாலே.
[ads_hr hr_style=”hr-fade”]
4
வெண்கலக் காதுக்கிண்ணியில்
உறைந்த எண்ணெயின்
மிருதுப் பச்சை
உலோக மஞ்சளைப்
புணரும் கணத்தின்
ரசவாதம்.
[ads_hr hr_style=”hr-fade”]
5
காலாவதி ஆகிவிட்ட கவிதை போல
உலோகக் கலன்களின் உடலில் இருந்து
மஞ்சள் பொறி தெறிக்கிறது திடீரென்று.
கடையின் கோடியில்
பழப்பு நிறப் பேரேடுகள்
புகையத் தொடங்குகின்றன.
உருகுகின்றன
வெண்கல உருளிகளுடன்
ரசவாத ஏக்கங்களும்.
சைப்ரஸ் மரங்களின்
நெருப்புக் கொழுந்து
கடை முகப்பிற்குத்
துடித்துத்
தாவி
வரும் போது
தீப மஞ்சள் சிவப்பு
‘ஒள் எரி உண்ணும் இவ்வூர்’
என்றது ஒரு குரல்.
– ந.ஜயபாஸ்கரன்
அற்புதமான நடை
ஆஹா என்று மனதுக்குள் ஒவ்வொரு கவிதைக்கும் சொல்லி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது