சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத் தன் வாழ்நாளின் இறுதிவரை முயன்றுகொண்டே இருந்தார். அவரது விமர்சன முறைமைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாயின. க.நா.சு.வின் விமர்சனத் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவரது ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாட்டையும் மழுங்கடிக்கும் வேலையைச் செய்தனர். க.நா.சு. அளவுக்கு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட படைப்பாளி தமிழில் வேறொருவர் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.
க.நா.சு., (1912-1988) தமிழ்ச்சூழலில் புதிய இலக்கிய முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர். 1934ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதினார். இவர் எழுதத் தொடங்கிய காலத்தில் ‘புனைகதை’ என்னும் நவீன இலக்கிய வடிவம் தமிழில் உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது மரபுக்கும் நவீனத்துக்குமான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. மரபுக்கவிதை, புதுக்கவிதை எனும் வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இதில் க.நா.சு.வும் பங்கெடுத்துக் கொண்டார். க.நா.சு., வசன கவிதைக்குப் ‘புதுக்கவிதை’ எனும் பெயரைச் சூட்டுகிறார். மரபுக்கவிதைமீது பற்று கொண்டவர்கள் புதுக்கவிதை எனும் கட்டற்ற வடிவத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தச் சூழலில்தான் க.நா.சு.வின் இலக்கியப் பிரவேசம் தீவிரமடைகிறது. ஆங்கிலத்தில் எழுதிப் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் சென்னை வந்தவர் க.நா.சுப்ரமண்யம். அவரது விருப்பம் கடைசிவரை நிறைவேறவே இல்லை.
க.நா.சு., வசதியான குடும்பப் பின்புலம் கொண்டவர். தந்தை மத்திய அரசு ஊழியர். இவரும் சில காலம் அரசு ஊழியராகப் பணியாற்றியிருக்கிறார். இலக்கிய தாகம் இவரை அப்பணியிலிருந்து விரட்டியிருக்கிறது. தன் குடும்பச் சொத்துக்களை எல்லாம் வெவ்வேறு இதழ்கள் நடத்தி அழித்திருக்கிறார். நல்ல எழுத்தாளர்கள் பலரை அடையாளம் காட்டியதில் க.நா.சு.வின் பங்கு முக்கியமானது. இந்த இடத்திலிருந்துதான் இவரது இலக்கியச் சர்ச்சை ஆரம்பமாகிறது. தன் ரசனையின் அடிப்படையில் எழுத்தாளர்களையும் நூல்களையும் அறிமுகப்படுத்துகிறார். மரபிலக்கியத்தின் மீதான போதாமைகளைச் சுட்டிக் காட்டுகிறார். வணிக எழுத்தாளர்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். இந்தத் தன்மைகள் எல்லாம் சேர்ந்துதான் க.நா.சு.வுக்கு இலக்கிய எதிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது. தன் வாழ்நாளின் இறுதிவரை மரபிலக்கியத்துக்கு எதிராக நவீன இலக்கியத்தை வெவ்வேறு வகைகளில் முன்னிறுத்திக்கொண்டே இருந்தார். பாரதி கவிதைகளுடன் தங்களது நவீன இலக்கிய ஆர்வத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் இலக்கியவாதிகள்தாம் க.நா.சு.வுக்குப் பெரிய தலைவலியாக இருந்தார்கள். அதேநேரத்தில் நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியத்தின் வேர் தெரிந்திருக்க வேண்டும் என்பதிலும் க.நா.சு. கண்டிப்புடன் இருந்தார். இப்படி இரு தரப்பிலும் பிரச்சினைகளை எழுதிச் சம்பாதித்துக்கொண்டார் க.நா.சு.
க.நா.சு., தனது தொடர்ச்சியான வாசிப்பினூடாகப் புதிய புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். இதுதான் அவர் செய்த பணிகளில் மகத்தானது. மௌனி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி, கு.அழகிரிசாமி, ஆர்.ஷண்முக சுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நகுலன், நீல பத்மநாபன், சா.கந்தசாமி என இவர் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களின் பட்டியல் பெரியது. தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் சக எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் க.நா.சு. அந்தத் தன்மைதான் இவரை இன்றும் நினைவுகூரக் காரணமாகிறது. க.நா.சு.வின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் திட்டமிட்டு அவர்மீது விமர்சனத்தை உருவாக்கினர். ஆனால் உள்ளுக்குள் அவரது பட்டியலில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததையும் பார்க்க முடிகிறது. க.நா.சு.வை எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கென ஒரு நியாயத்தைத் தர்க்கமில்லாமல் உருவாக்கிக் கொண்டனர். ‘திடீர் திடீர் என்று எண்ணம் தோன்றும் சலன புத்தியுள்ளவர் க.நா.சு.’ என்று க.கைலாசபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இவர், க.நா.சு.வை மார்க்சிய இலக்கியத்தின் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டார். ‘மார்க்சியமே தெரியாத நான் எப்படி மார்க்சிய விரோதியாக இருக்க முடியும்’ (‘படிகள்’ பேட்டி) என்பது க.நா.சு.வின் வாதம்.
க.நா.சு., தன்மீது வைத்த மோசமான தனிமனிதத் தாக்குதல்களுக்குக்கூட பெரிய எதிர்வினைகளை நிகழ்த்தியதில்லை. குறிப்பாக க.நா.சு.வை விமர்சிப்பதற்காகவே தனி நூலொன்றை (திறனாய்வுப் பிரச்சினைகள்) க.கைலாசபதி எழுதியுள்ளார். ‘ஞானரதம்’ இதழ் வெளியிட்ட ‘க.நா.சு. மணிவிழா சிறப்பிதழ்’ க.கைலாசபதியை மிகுந்த தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கிறது. ‘ஞானரதம்’ இதழில் க.நா.சு. குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளுக்கான விமர்சனமாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. க.நா.சு.வுடன் பழகிய குற்றத்துக்காக டி.கே.சி., சுந்தர ராமசாமி உள்ளிட்ட அவரது நண்பர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ‘தனக்கிருக்கும் (சுமாரான) ஆங்கில இலக்கிய அறிவைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உலக இலக்கியம் பற்றிய பேச்சு அவருக்கு உதவுகிறது’ என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார் கைலாசபதி. ‘சுமாரான’ என்ற சொல் வன்மம் நிறைந்தது. கைலாசபதியின் மீதான மதிப்பையும் அச்சொல் சேர்த்தே வீழ்த்துகிறது. இந்நூல் 1980இல் வெளிவந்திருக்கிறது. நாடோடியான க.நா.சு., மொழிபெயர்ப்பாளர் அ.கி.ஜெயராமனின் வீட்டில் தங்கியிருந்தபோது (1985) ‘நாவல் கலை’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் முன்னுரையில் இந்நூல் எழுதியதற்கான தூண்டுதல்களாக இரு நூல்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, ‘தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்.’ இரண்டு, ‘என் நண்பர் டாக்டர் கே.கைலாசபதியின் தமிழ் நாவலைப் பற்றிய நூல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு. இந்தப் பெருந்தன்மையைக் கடைசிவரை கடைப்பிடித்தார். நண்பர்கள் இந்நூலுக்கு மறுப்பெழுதச் சொல்லியும் அவர் எழுதவில்லை. விமர்சனத்துக்கு விமர்சனம் தேவையில்லை என்பதைத் தம் கொள்கையாகக் கொண்டிருந்தார்.
க.நா.சு.வின் புத்தக அடுக்குகளை ஆராயும் அளவுக்கு உரிமை பெற்றிருந்த பிரமிள், க.நா.சு.வுக்கு ஆங்கிலத்தையும் தமிழையும் தவிர வேறெந்த மொழியும் தெரியாது என்று பகடி செய்திருக்கிறார். க.நா.சு.வுடன் நெருக்கமாகப் பழகிய தஞ்சை பிரகாஷ், க.நா.சு. பிரெஞ்சு மொழியையும் ஜெர்மன் மொழியையும் கற்றார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) என்று எழுதியிருக்கிறார். க.நா.சு.வுக்குப் பல மொழிகள் தெரியும், தெரியாது என்பதல்ல பிரச்சினை. பிரமிள் இந்த விஷயத்தை அணுகியிருக்கும் விதம்தான் க.நா.சு. மீதான அவரது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றன. ‘க.நா.சு.வை நேரில் அறிந்த எல்லாருக்குமே – நா.பா. ஈறாக – க.நா.சு.வின் பன்மொழி ஞான லட்சணம் தெரியும்’ என்று எழுதியிருப்பதை க.நா.சு. மீதான விமர்சனமாக மட்டும் எப்படிக் கருத முடியும்? ‘அவரது மொழிபெயர்ப்புகளில் அவசரமும் அசிரத்தையும் அதிகம்’ என்று க.நா.சு.வின் ‘சுமாரான’ ஆங்கில அறிவையும் பிரமிள் கிண்டல் செய்திருக்கிறார்.
பிரமிள், ‘க.நா.சு. தொடர்ச்சியாக ஒரு பத்தி அளவு மூலத்தைப் படித்துவிட்டு அதன் கருத்தைத் தமது சொற்களில் அப்படியே தருகிற உத்தியைத்தான் பெருமளவுக்குக் கையாண்டிருக்கிறார்’ (க.நா.சு. இலக்கியத்தடம்) என்று எழுதியிருக்கிறார். க.நா.சு.வின் இலக்கிய இடம் குறித்து நகுலன் எழுதிய ஒரு கவிதை க.நா.சு. பற்றி எழுதப்படும் நூல்களில் தவறாமல் இடம்பெறும். அந்தக் கவிதையின் தொனி பிரமிள் எழுதிய கட்டுரையிலும் இடம் பெற்றுள்ளது. பழுத்த மரத்தின் மீதே கல் எறிவார்கள். இது க.நா.சு.வுக்கே முழுதும் பொருந்தும். தன் கைக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துப் படைப்புகளையும் மிகுந்த தீவிரத்தோடு படித்திருக்கிறார் என்று அசோகமித்திரனும் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டிராத அபாரமான வாசகர் என்று அம்சன்குமாரும் க.நா.சு. பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். க.கைலாசபதி போன்று பிரமிளும் க.நா.சு.வைத் திட்டமிட்டே தாக்கி எழுதியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரவர்களுக்கு அவரவர் நியாயம். ‘போகட்டும் விட்டுத் தள்ளுங்கள்’ என்று க.நா.சு. இவற்றையெல்லாம் கடந்து இயங்கியிருக்கிறார்.
பிரமிள் இன்னொரு பிரச்சினையையும் தம் கட்டுரையில் எழுப்பியிருக்கிறார். ‘புதுமைப்பித்தன் பிராமணர் அல்ல என்ற காரணத்துக்காக அவரது எழுத்தை மட்டம் தட்டும் போக்கு இவர்களிடம் இருந்திருக்கிறது’ என்ற குற்றச்சாட்டை க.நா.சு. உள்ளிட்ட அவரது குழுவினரிடம் முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் முப்பது கதைகளை மட்டுமே மிகச்சிறந்த கதைகள் என்று கூறியதுதான் மேற்கண்ட கருத்துக்குக் காரணம். புதுமைப்பித்தனைத் தன் வாழ்நாளின் இறுதிவரைத் தூக்கிச் சுமந்தவர் க.நா.சு. ‘புதுமைப்பித்தனைத் தமிழகம் மறக்காது – மறுக்காது’ என்று எழுதினார் க.நா.சு. மேலும், அவரது ‘சாபவிமோசனம்’ தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் ஓர் அடையாளம். இந்த அடையாளத்தை க.நா.சு.வை விமர்சிப்பதற்குப் பிரமிள் பயன்படுத்திக் கொள்கிறார்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் சாதி எப்போதும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. பிரமிள் அதனையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு பாரதியார், வ.வே.சு.ஐயர் உள்ளிட்டோரிடமிருந்து தொடங்குகிறது’ என்பது ஒரு தரப்பு; காத்திரமான தமிழ்ச் சிறுகதை மரபு புதுமைப்பித்தனிலிருந்தே தொடங்குகிறது என்பது மற்றொரு தரப்பு. இரு தரப்பினரின் பார்வைக்குப் பின்னும் சாதிய அரசியல் மறைமுகமாகச் செயல்படுவதை அவதானிக்கலாம். க.நா.சு.மீதும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பல நேரங்களில் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் புகலிடம் தேடும் இடமாகவும் சாதி இலக்கியத்தில் பயன்பட்டு வருகிறது. க.நா.சு.வுக்கும் தான் சாதியால் விமர்சிக்கப்படுகிறோம் என்ற புரிதல் இருந்திருக்கிறது. ‘கைலாசபதி பண்டிதர். பிராமணர் அல்லாதவர். கம்யூனிஸ்ட். நான் கம்யூனிசத்தை எதிர்ப்பவன். இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்கின்றன என்று சாமிநாதன் சுட்டிக் காட்டினார்’ (பேட்டி) என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முற்போக்கு இலக்கியத்தின்மீது க.நா.சு.வுக்குக் கசப்புணர்வு இருந்தது என்ற குற்றச்சாட்டைக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து முன்வைத்தனர். கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களை ஊக்குவிக்கிற வேலையை ப.ஜீவானந்தம்கூட நிறுத்திக் கொண்டார் என்று தஞ்சை பிரகாஷ் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) எழுதியிருக்கிறார். ‘மார்க்சியத்துடன் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை’ என்று க.நா.சு. கூறிய பிறகும்கூட அவர் மீதான விமர்சனம் தொடர்ந்திருக்கிறது. அதாவது முற்போக்கு இலக்கிய ஆளுமைகள் குறித்தும் ஆக்கங்கள் குறித்தும் விதந்து பேச மறுப்பதே ‘முற்போக்கு இலக்கிய எதிர்ப்பு’ என்ற கருத்தாடலுக்கு க.நா.சு.வை இயல்பாக அழைத்துச் சென்று விடுகிறது.
க.நா.சு. தன் வாழ்நாளின் இறுதிவரை விமர்சனத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்தார் என்று கூற முடியாது. தனக்கு அவ்வப்போது தோன்றும் கருத்துக்களை எழுதி வந்தார். ‘அடிப்படையில் நான் ஒரு விமர்சகன் அல்லன். சூழ்நிலையால் நான் விமர்சகன் ஆனேன்’ என்பதைப் பல இடங்களில் அவரே பதிவு செய்துள்ளார். க.நா.சு. தன்னையொரு படைப்பாளியாக நிலைநிறுத்திக்கொள்ளவே முயன்றார். தமிழ்ச்சூழல் அவருக்கு விமர்சகர் என்ற அடையாளத்தையே அளித்தது. க.நா.சு., ‘விமர்சனக் கலை’ (1959) என்ற நூலை எழுதியபோது, தொ.மு.சி.ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ (1948) என்ற ஒருநூல் மட்டுமே விமர்சனம் குறித்து எழுதப்பட்டிருந்தது. க.நா.சு.விடம் ஒரு நூலை எழுதுவதற்குரிய முன் திட்டமிடல்கள் பெரியதாக இருந்ததில்லை என்பதை அவரது முன்னுரைகளே கூறுகின்றன. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எழுதிக் குவித்திருக்கிறார். ‘விமர்சனக் கலை’கூட பதினைந்து நாட்களில் எழுதியதாகக் கூறியிருக்கிறார். இலக்கிய விமர்சனம் என்பதும் ஓர் இலக்கிய வகையே என்பதில் க.நா.சு. அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இலக்கிய விமர்சனம் எந்தச்சூழலிலும் இலக்கிய ஆசிரியரைக் கட்டுப்படுத்தாது என்பதிலும் தெளிவாக இருந்தார். ‘ஒவ்வொரு நல்ல ஆசிரியனும் எழுதிய சிறுகதையிலும் ஒரு பகுதி அளக்க முடியாதது இருக்கிறது’ என்பது அவர் தம் வாசிப்பினூடாகக் கண்ட உண்மை.
ஒவ்வொரு படைப்பாளிக்குள்ளும் ஓர் இலக்கிய விமர்சகன் செயல்படுகிறான் என்று க.நா.சு. நம்பினார். எதனை விடுவது; எதனை எழுதுவது என்று படைப்பாளர் தீர்மானிப்பதே விமர்சனத்துக்குரிய தன்மைதான் என்பது க.நா.சு.வின் கருத்து. அடுத்து, கோட்பாடுகள் இலக்கிய உத்திகள் சார்ந்தவை; அவை இலக்கியமாகாது என்ற கருத்தையும் க.நா.சு. முன்வைத்தார். மரபு என்ற ஒரே காரணத்துக்காக அதனைத் தூக்கிப் பிடிப்பதைத்தான் க.நா.சு. தீர்க்கமாக எதிர்த்தார். கல்விப்புலம் சார்ந்த திறனாய்வாளர்கள் எல்லாமும் தொல்காப்பியத்தில் இருக்கிறது என்ற இடத்திற்குச் சென்றுவிடுவதைச் சுட்டிக்காட்டினார். புதிய கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு மரபிலக்கியத்தை அணுக வேண்டும் என்ற உந்துதல் க.நா.சு.விடம் தீவிரமாகச் செயல்பட்டது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட மரபிலக்கியங்களை வாசித்தே க.நா.சு.இந்த முடிவுக்கு வந்தார். ‘க.நா.சு. விமர்சித்ததும் கண்டித்ததும் மரபான பார்வையை இயந்திரத்தனமாகப் பிரயோகிப்பதைத்தான். புதியவற்றை உதாசீனம் செய்யும் மரபு வழிபாட்டைத்தான்’ (நவீனத்துவத்தின் விமரிசனக் குரல்) என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார்.
பழைமையின் பெருமை பேசிக்கொண்டிருந்தவர்களை விமர்சனம் செய்ததால், ‘க.நா.சு.வுக்கு மரபிலக்கியம் தெரியாது’ என்ற கண்மூடித்தனமான விமர்சனத்தை இவர்மீது வைத்தனர். க.நா.சு. கம்பராமாயணம் முழுவதையும் வாசித்திருக்கிறார். கம்பராமாயணத்திற்கு நல்ல பதிப்பில்லை என்ற ஏக்கம் இவருக்கு இருந்திருக்கிறது. ‘உலகத்துக் காவியங்களிலே பலவற்றிலும் காணப்படாத ஒரு கட்டுக்கோப்பு கம்பனில் காணப்படுகிறது’ (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்) என்ற கருத்தை க.நா.சு. பதிவு செய்திருக்கிறார். மேலும், டி.கே.சி.யின் கம்பராமாயணப் பதிப்பை வாசித்துவிட்டு, ‘கம்பராமாயணப் பாடல்களுக்குச் சமமாகச் சொல்லக்கூடிய அளவில் அவர் வசனப்பகுதிகள் அமைந்து விட்டன’ என்று எழுதியிருக்கிறார். இவர் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் குறிப்பிருக்கிறது.
நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயன்ற இலக்கிய இயக்கம் க.நா.சு. அதற்காகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். வெகுசன இலக்கியத்தின்மீதும் க.நா.சு.வுக்குப் போதாமைகள் இருந்தன. கல்கி, ராஜாஜி உள்ளிட்டோரை விமர்சித்து எழுதினார். ‘தமிழ் மக்களின் ரசனையைப் பாழடித்ததில் ராஜாஜிக்கு முக்கியப் பங்குண்டு’ என்று பேசினார். க.நா.சு.வினால் விமர்சிக்கப்பட்டவர்கள் இவரை எதிர்ப்பதில் ஒரு நியாயமுண்டு. ஆனால் நவீன இலக்கியவாதிகளே க.நா.சு.மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். க.நா.சு. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்; ஆனால் அவரது நவீன இலக்கியப் பங்களிப்பை உட்படுத்தித்தான் அவர்மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
க.நா.சு போட்ட பட்டியல்கள் ஒருசார்புத் தன்மை கொண்டவை என்று விமர்சனம் செய்தனர். ‘க.நா.சு. குறிப்பிட்ட பல இலக்கிய ஆசிரியர்கள் இன்று இலக்கிய அரங்கில் இல்லை’ என்று தமிழவன் எழுதினார். க.நா.சு. இவற்றுக்கெல்லாம் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார். இலக்கிய விமர்சகன் பற்றற்றவனாகவும் நடுநிலையில் நிற்பவனாகவும் இருப்பது சாத்தியமில்லை என்பது க.நா.சு. கருத்து. க.நா.சு. தான் படித்த புத்தகங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதனை அவர் முழுமையான விமர்சனமாகக் கருதவில்லை. கருத்து கூறுவதை இலக்கிய விமர்சனத்தின் ஒரு பகுதியாகவே கருதினார். இந்தப் பணியைச் செய்வதற்கே ஆட்கள் இல்லாத சூழலில்தான் இந்த வேலையை க.நா.சு. செய்திருக்கிறார். அவரது ‘படித்திருக்கிறீர்களா?’, ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ ஆகிய இரு நூல்களும் அவரது ரசனை அடிப்படையில் எழுதப்பட்டவை. வெகுசன ஆக்கங்கள் குறித்து எழுதியிருந்தாலும் அதிலும் தம் விமர்சனத்தை முன்வைத்தே எழுதினார். உதாரணமாக, கல்கியின் மொத்தச் செயல்பாட்டையும் க.நா.சு. மறுக்கவில்லை. அவரது பத்திரிகை எழுத்து தமிழில் உச்சத்தைத் தொட்டது என்று எழுதியிருக்கிறார்.
தீவிரமாகப் படிப்பதிலும் படிப்பதை அடுத்தவர்களுக்குப் பகிர்வதிலும் ஆர்வமுடையவர்கள் தமிழில் மிகக்குறைவு என்பது இவர் கருத்து. அந்த இடத்தைத்தான் க.நா.சு. நிரப்ப முயன்றார். நோபல் பரிசை இலக்காகக் கொண்டு க.நா.சு. ஆங்கிலத்தில் எழுதினார் என்ற தொனியில் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ரவீந்தரநாத் தாகூர் அந்த நம்பிக்கையை இந்திய எழுத்தாளர்களுக்கு அளித்திருக்கிறார். அதில் க.நா.சு., கா.சி.வேங்கடரமணி ஆகியோரும் அடங்குவர். விமர்சனத்தில் க.நா.சு.வின் நீட்சியாகக் கருதப்படும் சுந்தர ராமசாமி ‘க.நா.சு.வை ஒரு இலக்கிய சிபாரிசுக்காரர் என்று சொல்ல வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார். க.நா.சு.வும் சு.ரா.வின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். க.நா.சு. ஒரு படைப்பு குறித்துத் தனக்குத் தோன்றிய கருத்தைத் தயக்கம் இல்லாமல் கூறியிருக்கிறார். தனது அடிப்பொடிகள் என்பதற்காக ஒன்றும் இல்லாத எழுத்தைத் தூக்கிக் கொண்டாடவில்லை. க.நா.சு.வுக்கு நெருக்கமான எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். இவரது படைப்புகளைச் சிலாகித்து க.நா.சு. எதுவும் கூறவில்லை. க.நா.சு. கருத்து கூறும் அளவுக்குத் தான் எழுதவில்லை என்பதைத் தஞ்சை பிரகாஷ் புரிந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் கொண்டாடக்கூடிய கி.ரா.வின் புனைவுகள்மீதும் க.நா.சு.வுக்குப் பெரிய ஈர்ப்பில்லை (இந்திய இலக்கியச் சிற்பிகள்) என்பதைத் தஞ்சை பிரகாஷ் பதிவு செய்திருக்கிறார்.
க.நா.சு. உருவத்தைவிட உள்ளடக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதுவே ஒரு கம்யூனிசப் பார்வைதான் என்று கருதுபவர்களும் உண்டு. பாரதியைக் கடந்து நவீன இலக்கியம் சென்றுவிட்டதைப் பலர் புரிந்துகொள்ளவே இல்லை என்ற ஆதங்கம் க.நா.சு.வுக்கு உண்டு. பாரதி விழாக்கள் நடத்துவதினூடாக இலக்கியச் சேவை செய்துகொண்டிருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்ளும் பழமைவாதிகள்தாம் நவீன இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்தார்கள். க.நா.சு.வைக் கருத்து வழியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் அவரது சாதியினூடாக வீழ்த்த முயன்றார்கள். இதற்கு அவர்கள் கூறும் சாக்குதான், ‘அவர் தேசிய இயக்கங்களில் பங்கெடுக்கவில்லை’, ‘அபிப்பிராயங்களையே விமர்சனங்கள் என்று எழுதி வந்தார்’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள். க.நா.சு. தான் தேர்ந்த விமர்சகன் என்றோ, நவீன இலக்கியத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்தவன் என்றோ கூறிக்கொள்ளவில்லை. ஆனால், நவீன இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் செயல்பட்ட கலைஞன் க.நா.சு. என்பதை மறுக்க முடியாது. அவரது பலவீனங்களுடன்தான் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
க.நா.சு. மீதுள்ள கோபத்தின் காரணமாக அவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சிக்கும் போக்கும் தமிழ்ச்சூழலில் இருந்திருக்கிறது. அவர் எழுதியவை இன்னும் முறையாகக் கண்டெடுத்து அச்சிடப்படவில்லை. அவரது ஆக்கங்கள் பல மறுபதிப்புகளைக் காணவில்லை. சாகித்திய அகாதெமி விருதைத் தவிரப் பெரிய அங்கீகாரங்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை. ஈழம்வரை அவர் பகையை உருவாக்கி வைத்திருந்தார். ‘க.நா.சு.வைப் பற்றிய மதிப்பீட்டில் கைலாசபதி ஆய்வு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, ஒரு வகை அரசியல் மனப்பாங்கையே வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்று எம்.ஏ. நுஃமான் (சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்) குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஏ.நுஃமான், காலம் கடந்து இந்தப் புரிதலை அடைந்திருக்கிறார். க.நா.சு.வின் பங்களிப்பைக் காய்தல், உவத்தல் இன்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் நவீன இலக்கியத்தின் மையமாகச் செயல்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
(தமிழ் இந்து திசை நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் முழுமையான பிரதி)