இந்த ஐடியா கடந்த வருடம் அஞ்சல் வாரத்தில் வந்தது. ஆறாங்கிளாஸ் பசங்களை போஸ்ட் ஆபிசுக்கு கூட்டிப் போயிருந்தேன். இப்படி பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லுவதற்கு முன், நோக்கம் கருதி ஒரு வகுப்பு நடக்கும். அதுவொரு கதை வகுப்பு. என் கற்பித்தலே கதை வடிவிலானது தான். கடிதம் குறித்த கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். கண், காது , மூக்கு , வாய் மொளச்சு கடிதங்கள் பேச ஆரம்பிக்கும் அந்த கதையில். என்னையறியாமல் பேச்சினூடே வண்ணதாசன் வந்திருந்தார். கடிதம் குறித்து கதைக்கும் போது வண்ணதாசன் இல்லாமலா? அவர் தான் கடிதங்களின் வழி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர். அவர் வீட்டில் தபால்பெட்டி, தங்க நிறத்தில் இருப்பதாக ஒரு புனைகதையை ஏற்கனவே வகுப்பில் சொல்லியிருக்கிறேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தேனிக்கு வாக்கப்பட்டு போயிருந்த முத்தக்காவுக்கு கடிதம் எழுதியது ஞாபகம். அதுவரை “போ! எருமமாடு, பன்னி, தின்னி, கழுத என திட்டி விளையாடிக் கொண்டிருந்த வாய் ‘அன்புள்ள அக்காவுக்கு‘ என எழுதிக்கொண்டே முணுமுணுத்தது. அருகே யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. கூச்சம். அக்கா மட்டுமே படிக்கப்போவதால் அன்பைக் கொட்டி வைத்த கடிதமது. அது வீட்டிலிருந்து போகும் போது, எப்படிச் சொல்வதென? யோசித்து, சொல்லாமல் விட்டதையெல்லாம் எழுத முடிந்தது. அந்த வகையில் கூச்சமின்றி அன்பைக் கொட்டி வைக்க கடிதம் தான் சரியான வடிகாலென அந்த வயதில் புரிந்து வைத்திருந்தேன். வகுப்பறையில் ஒரு ஆசிரியர், தனக்கு நேர்ந்ததாக சொல்லும் அனைத்தையும் மாணவர்கள் அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதுவும் நாம் அடிவாங்கிய, வழுக்கி விழுந்த, தப்புசெய்து திருந்திய கதையெல்லாம் சொல்லும்போது ”டேய் சாரும் நம்மள மாரித்தான்டா” என அவன் நம்மோடு அணுக்கமாகிறான். கடிதம், எஸ்.எம்.எஸ்சாகவும், வாட்ஸ்-அப்பாகவும் மாறிபோனதைப் பேசிமுடிக்கையில் தற்காலிகமாக நொந்து கொண்டார்கள்.
அஞ்சலகத்திற்கு போய் ஐம்பது பைசா அட்டையை வாங்கிக் கொடுத்து வராண்டாவில் உக்கார வைத்துவிட்டேன். இவர்கள் எழுதி முடித்தபின் அலுவலரை அழைத்து அஞ்சல் துறை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி. அஞ்சல் அட்டையில் ஆசிரியர்கள், பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு எழுதிப் போடலாம். ஒருவன் “யாருக்கு வேணும்னாலும் எழுதலாமா சார்?” என்றான். “எழுதலாம் டா. அட்ரஸ் தெரிஞ்சா எழுதிப் போடுறா” என்றேன்.
அருகே உள்ள பிள்ளையார் கோயிலுக்கு எழுதிட்டான். அந்த கடிதம் தான் இதற்கெல்லாம் காரணம். அந்த கடிதத்தில் ஒரு வலி இருந்தது. அந்த வயதில் தீர வேண்டிய கவலைகளைச் சிரித்துக் கொண்டே எழுதியிருந்தான். அநாதை என்கிற வார்த்தையெல்லாம் அவன் வயதுக்கு பெரிய வார்த்தை. எழுதியிருந்தான். அப்ப வந்த யோசனைதான். அப்புறம் வகுப்பில் எல்லாரையும் எழுதச்சொல்லிப் பார்க்கனும்னு தோணுச்சு.
குழந்தைகளை அங்கீகரிக்கும் விசயத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர் ஆசிரியர் தான். ஒரு குட் போட்டாலோ, கிளாஸில் கைதட்டச் சொன்னாலோ போதும். அதுகளுக்கு மனசு துள்ளிக் குதிக்கும். அப்படியானவரிடம் தங்கள் ஆசைகளை, லட்சியங்களைச் சொல்லக் கூச்சமிருப்பின் எழுதிக்காட்டுதல் பலருக்கு உவப்பானதாக இருந்தது.
ஆறாம் வகுப்பில் பெரும்பாலும் வேண்டுதல்களாக எழுதி வந்திருந்தார்கள். ஒன்பதாம் வகுப்பில் வேறு அனுபவம். கடிதம் என்றாலே நம்மாள் இப்படி முடிக்க பழக்கப்பட்டிருக்கிறான். “மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” கடவுளை சில இடங்களில் ‘ஐயா‘ என்று பழக்க தோசத்தில் போட்டு வைத்திருக்கிறான். கடவுளாவே இருந்தாலும இது பள்ளிக்கூடமில்லையா? அப்படித்தான்.
சில கடிதங்களை அவர்களது அனுமதியோடு வகுப்பில் பேசியிருக்கிறேன். மனிஷா எழுதிய வெறும் மூணு வரி கடிதத்தில் “எல்லாரும் ஏழையாகவே இருக்கனும்” என்கிற வேண்டுதல் புரியாமல் கேட்டேன். “ஆமா சார்… பணக்காரங்களால தான் பிரச்சினையே வருது அதான்” என்றாள். யோசிக்க வேண்டிய விசயம்தான். மாணவி தனலட்சுமியின் பாடகியாகனும் என்கிற கனவை வாசித்தேன். சுமாராக படிக்கும் அவள், யாரிடமும் வெடிப்பாக பேசக்கூடமாட்டாள். அழகழகாக கோலமிடுவது. எல்லாரும் தீபாவளிக்கு வெடிவெடிக்க ஆசைகொண்டிருந்தால் இவள் மட்டும் தோழிகளுக்கு மெகந்தி வைப்பதில் ஆர்வம் காட்டுவது. களிமண் பொம்மைகள், சாக்பீஸ் சிலைகள் என கலை தொடர்பான தாகம் அந்த கடிதத்தில் அங்கீகாரம் கிடைக்காத ஏக்கமாக நின்று தவித்தது. வெளியூர் நடுநிலைப் பள்ளியிலிருந்து வந்து ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தவள். கடந்த முன்று மாதங்களும் அவளைக் கண்டுபிடிக்க முடியாதவனாய் இருந்திருக்கிறேன். சில நேரங்களில் நம் கண்களை அவர்களே திறக்க வேண்டியதாகிவிடுகிறது. கடிதத்திற்கு பிறகு வகுப்பில் தனித்துவம் அடைந்த ஆளுமையவள். அவ்வப்போது சோம்பலான நேரங்களில் வகுப்பறையை மெலடிகளால் உயிரூட்டிக் கொண்டிருக்கிறாள். பள்ளிக்கூட வகுப்பறைகளில் சினிமா விசயத்தில் தடைகளைக் கவனிக்கிறேன். இங்கு மட்டும் இரும்புத்திரை இருந்து என்ன செய்ய? ஆசிரியர்களும் ஓப்பனிங் சோ பார்த்துவிட்டு அறைகளில் பேசிக் கொண்டுதானிருக்கிறோம். வகுப்பறையில் மட்டும் நடித்து என்ன ஆகப்போகிறது. தமிழக அரசியலை மட்டுமல்ல, பண்பாட்டோடும் சினிமா தொடர்புடையதாய் இருக்கும் போது அபத்தத்தை களையவாவது இடம் தரலாம்; பேசலாம்; பாடலாம். தனலட்சுமி பாடுகிறாள். பாட்டு வரிகளை ராகத்துக்கு தக்கன மாத்தி அவளே எழுதி பழகிக்கொண்டிருக்கிறாள்.
கடிதத்தில் கீழே விருப்பமிருந்தால் பெயர் எழுதலாம்; ஒப்பமிடலாம். இல்லாட்டி விட்றலாம்… இந்த இரண்டாவது ஆப்சன் இருப்பதாலேயே நெறைய நிஜங்களைக் காணமுடிந்தது. கொடுத்த வாக்கை காப்பாற்ற பல கடிதங்ளை கண்டுக்காமல் கிழித்துப் போட்டிருக்கிறேன். எல்லாமே கிழித்துப் போடுவதாகத்தான் பேச்சு. ரெண்டு மூணு மட்டும் கொஞ்ச காலம் கையிலிருக்கும். அவர்களை கொண்டாட உதவும். (அதை தனியாக எழுதுகிறேன்) கிழித்துப் போட்டிருந்தாலும் ரெண்டு கடிதங்கள் முக்கியமானவை. அதிலொன்று ‘மொய்.. மொய்…மொய்..’ என பக்கம் முழுக்க பெரிதும், சிறிதுமாக கோணல் மாணலாக ‘மொய்…மொய்.. ‘ இந்த வார்த்தைகள் மட்டுமே கிறுக்கலாக இருந்தன. ‘என்னத்த, அடிக்கவா போறாரு‘ என்கிற தெனாவெட்டும் இருக்கலாம். கிழித்துப் போட்டேனாலும், நேரம் பாத்து “அப்டியேன்டா செஞ்ச” ன்னு ஒரு நாள் கேட்டுட்டேன். அவன் ஒரு இடியை இறக்கி வைத்தான். அவனுக்கு தலையில் ஏதோ கோளாறு. நோய்த்தன்மையின் விளைவுதான் அந்த கடிதமென பலமாதங்கள் கழித்து அறிந்தேன். மாதத்திற்கு ஒரு முறையேனும் அவனுக்கு அப்படி ஆகிவிடுமாம். காதுக்குள் பூச்சி புகுந்து ரிங்காரமிட்டால் எப்படியிருக்கும் அப்படியொரு இரைச்சல். ரெண்டுகாதையும் பிடித்துக் கொண்டு இரவெல்லாம் உருளுவானாம். அவ்வளவு வலிக்குமாம். அவனோட அப்பாவிடம் பேசியபிறகு முழுதும் அறிந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. இதை பள்ளியில் மறைத்து வைத்தல் எத்தனை பெரிய ஆபத்து. தப்பு செய்தால் ஆசிரியர்கள் தலையில் கொட்டுவது சாதாரண ஒன்றுதான். இவனுக்கு.?!. நல்ல வேளையாக பள்ளியில் இதுவரை ஏதும் நடக்கவில்லை. இந்த மாதிரி, பள்ளியில் பெற்றோர்கள் கவனப்படுத்தாமல் இருந்து விடுவது தான் பேராபத்தாய் வந்து முடியும். அந்த ‘மொய்ங்‘ என இரையும் சப்தத்தைத்தான் ‘மொய் மொய் மொய்‘ என கிறுக்கி இருக்கிறான். பேய் பிசாசுகளிடமிருந்து அவனது பெற்றோரை மீட்க முடியவில்லை. உருளும் இரவிலிருந்து மீண்டு காலையில் வலி ஓய்ந்த, ஆசுவாசப்பித்து நிலையில் கிறுக்கப்பட்ட கடிதத்தை நான் புரியாமல் கிழித்தெறிந்ததைப் போல பலரால் இம்மாதிரிக் குழந்தைகள் கண்டறியப்படாமல் கிழித்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
அவங்கப்பா போனதும் கிரவுண்டில் விளையாடும் நூற்றுக் கணக்கான குழந்தைகளையும் பார்க்கிறேன். லஞ்ச்அவர் முடிந்து பெல்லடிக்கிறது. வகுப்பறையில் ஓடி அடைகிறார்கள். அருகே இருந்ததால் பெல் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து யய்ம்ம்ம்ம்ம் என தீராமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
அதற்கடுத்தடுத்த வகுப்புகளில் நான் தவறாமல் கேட்டு வைத்த கேள்வியால் 550 மாணவர்களில் ஒரு மாணவி தலையில், கட்டியிருந்து அதை கரைக்கும் சிகிச்சையில் இருந்தாள். மற்றொரு மாணவிக்கு காது வழியாக அறுவைச்சிகிச்சைக்கு தயாராக இருந்தாள். ஒரு மாணவனுக்கு அவ்வப்போது கொடிய தலைவலியும், காதில் நீர் ஒழுகுதலும். இந்த மூன்று தலைபாரங்களைக் கண்டறிய வழிநடத்திய கடிதத்தை எவ்வளவு அலட்சியமாய் கிழித்தெறிந்திருக்கிறேன்.
இப்படியான குழந்தைகளை இதற்கு முன் கொட்டியிருக்கிறேனா?
எத்தனை குழந்தைகளை?
எத்தனை ஆசிரியர்கள்?
அய்யோ! எப்படி வலித்திருக்கும்?
சின்னதாய் கொப்பளம் வந்த குண்டியில் பீட்டி சாரிடம் பெரம்படி வாங்கி ரணப்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல் ஆற்றிய காயங்கள் ஞாபகத்துக்கு வந்தன.
வினோதினி, கடிதத்தில் பேர் குறிப்பிட்டிருந்தாள். அறிவியல் கண்காட்சி, கட்டுரை, ஓவியம் என பள்ளியில் அடையாளப்பட்ட மாணவி. நானே பல முறை போட்டிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். பயணங்களில் ஜன்னல் வழியே பார்ப்பதையெல்லாம் வியந்தபடி கேள்விகளால் துளைத்துக்கொண்டு வருபவள். குறிப்பாக ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தால் அதை பெரிய விசயமாய் நாள் பூராம் கொண்டாடுவாள். குழந்தைகளென்றாலே அப்படித்தான். வெளியூரில் போய் நண்பர்களோடும், ஆசிரியரோடும் அமர்ந்து உண்பதைக் கொண்டாடுங்கள். வினோவிடம் அது சற்று தூக்கலாக இருக்கும். வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேயிருப்பாள்.
அவளது வீட்டு வறுமை நான் அறிந்ததே. இருந்தும் இந்த கடிதத்தில் வேறொன்று கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
அப்பா குடிகாரர். தெரிந்தது தான். சிலநேரம் கூடிப்போய் குடிவெறியில் தாண்டவமாடுவது நேருமாம். வீட்டை விட்டு அம்மாவும், மகளும் அப்பனுக்குப் பயந்து அத்தை வீட்டுக்கோ, சித்தி வீட்டுக்கோ ஓடி ஒளிந்து கொள்வார்களாம். இது சீசன் போல அவ்வப்போது நடக்கும் போல. நானும் தெருக்களில் குடிவெறியர்களை பார்த்திருக்கிறேன். இது தனி ரக பிராணி.
ஒரு நாள் தெருவில் அடித்துத் துரத்தியிருக்கிறார். பைக்கட்டோடு ஓடியிருக்கிறாள். ‘இங்க நொழையாதீங்கடி பொட்டக் கழுதெகளா!’ –அப்ப அம்மாவும் சேர்ந்து தான் ஓடுகிறார்–
கடிதத்தில் அம்மாவின் கையெலும்பு பல இடங்களில் முறிந்து கிடந்தது. இவளுக்கு விளாரெடுத்து அடித்ததில் கெண்டக்காலில் பெரிய காயம். ‘புண்ணு‘ என அதை எழுதியிருந்தாள்.
அப்பனால் விரட்டப்பட்ட ஒரு நாளைத்தான் கடிதத்தில் கொட்டி வைத்திருந்தாள். யாருக்குத் தெரியும் நான் கடிதமெழுதச் சொன்ன அன்றைய இரவில் கூட அத்தை வீட்டில் உக்கார்ந்து இதை எழுதியிருக்கலாம்.
அப்பனுக்கு கிறுக்கு இறங்கும்வரை வீட்டுக்கு வெளியே தலைமறைவாய் இருக்க வேண்டிய நிலை 13 ‘வயசு‘ப் பெண்ணுக்கு. சில நேரம் தேடிக்கண்டுபிடித்து அங்கேயும் வந்துவிடுவானாம். வீடு மாற்றி, மாற்றி ஒளிந்து வாழும் வாழ்க்கை.
கவனிக்கப்பட வேண்டிய உச்சம் அந்த கடிதத்தின் கடைசி பகுதியிலிருந்தது. அவளது தம்பியைப் பற்றியது.
தகப்பன் தம்பியை மட்டும் ஒண்ணும் செய்றதில்லை. அடிக்கவும், கடிக்கவும், வன்சொற்களுக்கும், கொன்று போடுவதற்கும் இங்கு பொட்டைப் பிள்ளைகள் மட்டும்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வினோ அழுது கொண்டே அத்தை வீட்டில், இருப்பதைத்தின்று கொண்டிருப்பாள்.( ‘தொண்ணச்சோறு தின்னேன்‘ என்று எழுதியிருந்தாள். ) மறு நாள் காலையில் வீட்டுக்கு போனால், அப்பா தண்ணியடித்துவிட்டு வாங்கி வந்த சிக்கன் பக்கடாவை தின்றுவிட்டு சுருட்டிய பேப்பரையும், கேரிகவரையும் வீட்டில் மூலையில் போட்டு வைத்திருப்பான் தம்பி. அவரே ஊட்டி விட்டதும் கூட அவன் மற்றொரு நேரத்தில் சொல்லி அறிந்திருப்பாள் போல.
விரட்டப்பட்ட நாளுக்கு மறுநாள் காலையில் அவள் கண்கள் சுருட்டி எரியப்பட்ட கேரிகவரை இருக்கிறதா? தேடியிருக்கும். ‘காலைல காலைல பாப்பேன். கிடக்கும்‘ என்று எழுதப்பட்டிருந்தது. தின்பண்டம் வரை ஏக்கத்தை எழுதி இறக்கி வைக்கப்பட்ட வலியை வாசித்துவிட்டு நெஞ்சு கனத்துக் கிடந்தேன்.
கடிதத்தை வாசித்த மறுநாள்
வகுப்பில் அவளது கண்களை கவனித்தேன். அழாதே என அகத்தை துடைத்துவிடத் தோணியது. லேசாக வரவழைக்கப்பட்ட சிரிப்போடு என்னை, என் பாடத்தைக் கடந்தாள். நான் ஆறுதல் சொல்லித் தீர்க்க வழியற்று கையறு நிலையில் கடந்த வகுப்பு அது.
கடிதத்தை முதன்முதலில் வாசித்த போது கிறுக்கலான கையெழுத்தும், பிழைகளும், யூகித்துக்கொள்ளும் படியாக இடங்களும் இருந்தன.
வேறொரு தருணத்தில் புரியும் போது ‘ஓ அதான் அந்த வரிக்கு அர்த்தமா‘ என நினைத்துக் கொள்வேன்.
“தொண்ணச் சோறுன்னா என்ன டீச்சர்?” ஒரு டீச்சரிடம் கேட்டேன். முதலில் உண்டக்கஞ்சி போல புரிந்து வைத்திருந்தேன். இப்பகுதியில் அது, அவமானப்படுத்தும் அர்த்தத்தில் வசையாக புழங்கப்படுகிறது. எச்சில் சோறெனவும் பாராது, பிறர் தின்றுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே இருப்பதும், வெட்கமின்றி கைநீட்டிக் கேட்டுப் பெறுவதைத் ‘தொண்ணச்சோறு‘ என்கிறார்கள். கொடுப்பவர் விருப்பமின்றித் தருவது.
அச்சொல்லின் அர்த்தம் மேலும் கலங்கடித்தது. அப்பனின் குடிவெறிக்கு பயந்து ஓடி ஒளியும் இடத்தில் சோறு தின்ன வேண்டியிருக்கும். மத்த வீடுகளை விட முக்கியமாய் ‘அத்தை வீட்டில் அம்மா சாப்பிடுவதில்லை‘ என்று எழுதியிருந்தாள். பிடிக்காதவர்களின் வீட்டில் நுழைந்து கொண்டு, அவர்களின் புலம்பல்களை கேட்டும் கேட்காமல் சோற்றோடு அவமானத்தையும் பிசைந்து மகள் பசிக்கு ஊட்டியிருப்பாளே அந்த அம்மா. தொண்ணச் சோற்றை அவள் தின்னும் அதே நேரத்தில் தம்பி தின்னும் சிக்கன் பக்கடாவும், மறுநாள் கிடந்த சுருட்டியெறியப்பட்ட காகிதமும் நினைவுக்கு வர, நானும் அவள் வயதுக்கு இறங்கி அழுதேன்.
முதலாமானவனுக்கு ‘மொய்…’ என தலைக்குள் பூச்சி புகுந்து ஆட்டுவதைப் போல பெண்ணுலகின் தலைக்குள் கொடுக்குள்ள பூச்சி போல ஆண் புகுந்து வெறிகொண்டு போடுகிற பேரிரைச்சலின் எதிரொலியாக அந்த பெண்பிள்ளையில் கடிதம் என் கையில் இருந்தது. வழக்கம் போல ஒரு ஆண் ஆசிரியனால் அது கிழித்தெறியப்பட்டது.
– சக.முத்துக்கண்ணன்.
அருமை நன்பா.ஆசிரியரின் கதகதப்பு எப்பேற்பட்ட உழைச்சலையும் மறந்து அறிவை கூர்தீட்டும்.வாழ்க வளமுடன்
Good.vaalha valamudan.
அருமை கண்ணா
Super
நான் இதை மிகவும் விரும்புகிேறேன்
அருமை