துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்   

விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.

ஒளி வெள்ளை நிற ஆடை அணிந்து கொள்ள ஆரம்பித்திருந்தது. தாவரங்கள் வெள்ளை ஒளியில் குளிக்கத் தொடங்கின. பூக்கள் பூக்கத் தொடங்கின. பூச்சிகளும் , பறவைகளும் இரை தேடி பறக்கத் தொடங்கின. பறவைகளின் குரல் இயற்கையின் சங்கீதம். அதிகாலையில் இதனைக் கேட்பவர்கள் பாக்யவான்கள்.

உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக் கொள்வதில் கொண்டுள்ள தகவமைப்பு வியக்கத்தக்கது. இலைகளின் நிறத்தில் வெட்டுகிளிகள், காய்ந்த இலை போன்றே தோற்றமுடைய மரவால் பல்லிகள், இலை போன்றே தோற்றமளிக்கும் இலைப் பூச்சிகள், குச்சி போன்று தோற்றமுடைய குச்சிப் பூச்சிகள், ஆர்கிட் மலர்களை அச்சு அசலாகக் கொண்டிருக்கும் மலர் பூச்சிகள், சூழ்நிலைக்கு ஏற்ப வண்ணங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்திகள், பூச்சிகள் அரிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளும் தூங்குமூஞ்சி மரம் என இப்படி ஒவ்வொன்றும் விசித்திரமானவை.   இயற்கையின் விநோதங்கள் ரசிக்கத்தக்கவை. இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதன் மட்டுமே ஆயுத்தத்தால் பிற மனிதர்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்பவனாக இருக்கின்றான். பறவைகள் எல்லைகள் அற்று, சுதந்திரமாக பறக்கத் தொடங்கின. மனிதன் எல்லைகள் வகுத்து சுருங்கிப் போனான். எல்லைகளைப் பாதுகாக்க போர் ஆயுதங்கள் தாங்கி நிற்கின்றான். சுதந்திரம் என்பது மனிதனுக்கு எல்லைகளுக்குட்பட்டதாகவே உள்ளன. யாது ஊரே யாவரும் கேளீர் என்பது எல்லைகள் கடந்து மனிதன் வாழும் போது மட்டுமே சாத்தியம். எல்லைகள் தாண்டியோர் அகதிகளாக வாழும் சூழல் நிலவுகின்றது. அகதிகளின் கதைகளைக் கேட்க தனி மனம் வேண்டும். அக்கதைகளைக் கேட்டுக் கண்ணீர் அருவிகளாய் கொட்டும்.

உயிரினங்கள் பிற இனத்தில் ஒன்றைக் கொன்று பிழைத்து வாழ்கின்றன. உணவு சங்கிலி விநோதமானது. பாம்புகள் தவளையை உண்கின்றன. தவளை பூச்சிகளை உண்கின்றன. பூச்சிகள் தாவரங்களை உண்டு வாழ்கின்றன. ஒவ்வொன்றும் மற்றொன்றை கொன்று வாழ்கின்றன. ஆனால், மனிதன் மட்டுமே மற்றொரு மனிதனை ஏமாற்றி, திருடி, மிரட்டி, கொன்றும் வாழ்கின்றான்.  தன் இனைத்தை தானே அழிப்பதில் முதலிடத்தில் திகழ்கின்றான்.  தக்கன பிழைத்து வாழ்தல் என்பது இதுவா?  மனிதன் சக மனிதனை ஏமாற்றி வாழ்தலே தக்கன பிழைத்து வாழ்தலாக உள்ளது!

அதிகாலை எழுந்து, இயற்கையை ரசிப்பவனுக்கு அயர்ச்சி நீங்கும். அதிகாலையில் எழுந்திருப்பவனே அந்த நாளை முழுமையாகத் தொடங்குகின்றான்.

காமராசர் சாலையில் சிலர் நடக்கத் தொடங்கி இருந்தனர். டீ கடைகள் திறக்க ஆரம்பித்தன. மாடுகள் ’மே’ எனக் குரல் எழுப்பத் தொடங்கின. பங்கஜம் காலனி மெயின் சாலை முடிவடையும் ஆற்றோரம் அமைந்திருந்த மாட்டுக் கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்த பசுக்களுக்கு புல்லை வைத்துக் கொண்டிருந்தாள் முருகனின் தாயார் அம்சவள்ளி.

“டேய் முருகா! அப்பளக் கம்பெனிக்காரர் வீட்டுக்கு இரண்டு லிட்டர் சேர்த்து ஊத்தணும். அவர் வீட்டு வேலைக்காரி நேத்து சாய்ந்தரமே கேட்டா.”

“என்னம்மா! சுந்தராஜன் புள்ளைகளைக் கடத்திட்டாங்கலாமமே? உண்மையா?”

“அதை ஏண்டா கேட்கிறே, இவன் காசு நிறைய வச்சிருக்கிறத தெரிஞ்ச எவனேதான் செய்திருக்கான்.“

“மனுசன பார்த்தா காசு வச்சிருக்கிற மாதிரி தெரியலை”

“ஆடம்பரம் இல்லாத ஆளு.  கெட்ட நேரம் யாரை விடும். என்னத்த சொல்ல. காசு வைச்சிருக்கிறது தெரிஞ்சு தானே, கடத்தி இருக்கானுங்க.”

“சரி. மாட்டுக்கு தண்ணி காட்டு. சீக்கிரம் பால் பீய்ச்சிட்டு மத்த வேலைய பாரு.”

ஏடிபிசி யூகித்தது போல் வண்டி திருச்சி மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் ஒத்தையடிப் பாதையில் இறங்கி ரெஸ்ட் எடுக்கத் தொடங்கியது.

அதிகாலை நான்கு மணி. சுந்தராஜன் வீட்டில் விளக்குகள் இன்னும் எரிந்துக் கொண்டிருந்ததன. வீட்டின் உள்ளே அழும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சுந்தராஜன் மனைவி ரம்யாவை சுற்றி உறவினர்கள் அமர்ந்திருந்தனர். அவரிடம் வேலை பார்க்கும் விசுவாசிகள் பலரும் அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர்.

சுந்தராஜன் பரபரப்பாக மாடியிலுள்ள தனி அறைக்குச் செல்வதும், கீழே வருவதுமாக இருந்தார். அவரது மாடி அறையில் அவரது கணக்குப்பிள்ளை கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எண்ணி வைத்துக் கொண்டிருந்தார்.

“அய்யா! எல்லாம் வம்பாடு பட்டு சம்பாதிச்சது. எல்லா ரூபாயும் கணக்கில் காட்டியது. மத்த பயலுக மாதிரி பிளாக் மணி வைக்க வில்லை.” எனக் கணக்கு பிள்ளை ராமூ கூறிக் கொண்டே ரூபாய் நோட்டுகளை ஊதா நிற சூட்கேசில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

“என்ன செய்ய ராமூ. எல்லாம் விதிப்படி தான் நடக்கும். யாருக்கும் தூரோகம் நினைக்கவில்லை. யார் குடியை கெடுத்தும் சம்பாதிக்கல.” என சுந்தராஜன் புலம்பினார்.

“அய்யா! போலீஸ் எப்படியும் பிடிச்சுடுவாங்கய்யா. ரூபாய் எல்லாம் கொடுக்க வேண்டாம்.”

“ரூபாய பார்த்தா மகள்களை காவுக் கொடுத்துட வேண்டியது தான். அவனுங்களுக்கு இங்க நடக்கிறது எல்லாம் தெரியும். இப்ப நாம் ரூபாய் எண்ணிக் கொண்டிருப்பது கூட தெரியும். கை மீறி போயிடுச்சு.”

”அய்யோ! எம் மகளே, சுமதி!” என ரம்யாவின் கதறல் கேட்டு, மாடியில் இருந்து கீழே ஓடினார் சுந்தராஜன்.

ரம்யாவை சுற்றி இருந்தவர்கள் பதறினார்கள்.

”அய்யோ ! அம்மா மயக்கம் போட்டுட்டாங்க.”

“அம்மா ! எழுந்திரும்மா. “

“அய்யோ! அம்மாவுக்கு பல்லு கட்டிக்கிச்சு.”

“மூச்சு அடைச்சுக்கப் போகுது. சுற்றி நிற்காதீங்க. கொஞ்சம் காத்து வரட்டும்”

“செம்பில் கொஞ்சம் மிளகாய் போட்டு.. புகைப் போடுங்க. புகையை மூக்கில் காட்டுங்க. பல்லுக்கட்டு போயிடும்.”

“யாரும்மா கிச்சனில்.. பட்ட மிளகாய் கொண்டு வா!”

“அய்யோ! அம்மா பேச்சு மூச்சு இல்லாம இருக்காங்களே!”

“யாராச்சும் டாக்டரை கூப்பிடுங்க”

“காலையில் இருந்து பச்ச தண்ணீக் கூட குடிக்காம.. புலம்பிட்டே இருந்தா. பீபீ ஹை ஆகி மயங்கிட்டாங்க.”

“கொஞ்சம் பட்ட மிளகாய் எடுத்து புகைப்போடுங்க.”

“அந்த விசிறி எடுத்து வீசுங்க.”

“ஏ! மூச்சியில் தண்ணீர் தெளிப்பா. பட்டுன்னு தண்ணி அடிப்பா”

இப்படி குரல்கள். சுந்தராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்னுடைய போனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சனியன் பிடுச்சவன்கள் போன் பண்ணித் தொலைந்தால் பணத்தை கொடுத்து புள்ளைகளைக் கூட்டி வந்துவிடலாம். இவளுக்கு எதுவும் ஆச்சுன்னா என்ன செய்றது என நெஞ்சைப் பிடித்து படியில் உட்கார்ந்தார்.

ரம்யா கண்களைத் திறந்தாள். பணிப்பெண் அவளுக்கு டீ கொடுத்தாள். அவள் குடிக்க மறுத்தாள். சுந்தராஜன் அவள் அருகில் சென்று சூடாக டீயைக் குடிக்க சொன்னார். அவர் எப்படியாவது மகள்களை மீட்டு வந்து விடுவதாக மனைவியிடம் கூறினார்.

“என்னங்க! அவுங்க எவ்வளவு கேட்டாலும் கொடுத்திருங்க. எம் புள்ளைங்க.. எனக்கு வேணுங்க. அவுங்க இல்லைன்னா அவ்வளவு தான்.” என்றாள்.  ரம்யாவைக் கட்டிப் பிடித்து கொண்டு சுந்தராஜன் கதறி அழுதார்.

அந்த இடம் மயான அமைதி ஆனது.  அங்கிருந்தவர்கள் அனைவரும் இருவர் அழுவதையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“இதென்ன எழவு வீடா … இப்படி எல்லோரும் அமைதியா நின்னு வேடிக்கைப் பார்க்கிறீங்க.” என மாலதியின் அண்ணன் சண்முகப் பாண்டியன் கத்தினார்.

“ஏம்பா இப்படி கத்துற.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க. பிள்ளைய பறிக் கொடுத்தவன் . அழுறத தவிர வேறு என்ன செய்ய முடியும்” என அங்கிருந்த பெரியவர் அவரை சமாதானப் படுத்தினார்.

மணி ஐந்து ஆனது.

காமராசர் சாலையில் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் போலீஸ் வேன் மெதுவாக வந்து நின்றது. அதிலிருந்து மப்டியில் நான்கைந்து போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். எதிரில் உள்ள பங்கஜம் காலனிக்குள் நுழைந்தார்கள்.   ஒவ்வொருவரும் தனித் தனியே சம்பந்தம் இல்லாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சுந்தராஜன் வீட்டு சந்தின் வழியாக பேப்பர் போட்டு வெளியே வந்த பையனை பிடித்து ஒருவர் வேன் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றார்.

“சார். இன்னும் பாதி வீட்டுக்கு பேப்பர் போடலை. போட்டுட்டு வந்துட்றேன்.”

“உங்க ஓனருக்கு போன் பண்ணி தெப்பக்குளம் ஸ்டேசனில் வந்து பேப்பரை எடுத்துக்க சொல்லு.”

“அம்மா! பால்” என மணி அடித்து பால் ஊற்றிய பால்காரனை ஒரு போலீஸ்காரர் பிடித்து இழுத்துச் சென்றார்.

“ஒழுங்கு மரியாதையா உன் செல் நம்பரை கெடுத்துட்டு போ. சரியா ஒன்பது மணிக்கு ஸ்டேசன் வந்திடணும். இல்லை வீடு தேடி வந்து உதைப்பேன்.”

“சரி” என்றபடி பதட்டத்துடன் பால்காரன் வேகமாக சென்றான்.

ஒரு போலீஸ் காரர் அந்த சந்தின் கடைசி வீட்டை தட்டினார்.

உள்ளே இருந்து வெளியே வந்தவர் பதட்டத்துடன் கைலியை கீழே இறக்கி விட்டு நின்றார். அவருக்கு எதிரில் இருப்பவரின் உயரம், ஹேர் கட் எல்லாம் வைத்து வந்திருப்பது போலீஸ் என்பது அறிந்து பதட்டம் கொண்டார்.

“இங்க அய்யன் வண்டி ரெகுலரா நிக்குமா?”

“சார்! நீங்க?”

“ஏன்? நான் யாருன்னு சொன்னா தான் சொல்லுவீங்களோ?”

“சார்! ஆமாம்.”

”ஒரு திருட்டு கேசு சம்பந்தமா விசாரிக்கணும். அந்த அயர்ன் வண்டிக்காரன் எங்க இருப்பான்?”

”சார். அவன் வீடு குப்பத்தில் இருக்கு.”

“எந்த குப்பம்?”

“சார். ஆத்து ஓரம். குருவிக்காரன் சாலை அடுத்து. பம்பின் ஸ்டேசன் பின்புறம்.”

“உனக்கு அவன் வீடு தெரியுமா?”

அவர் தலையாட்டினார்.

”வா! வந்து அவன் வீட்டை அடையாளம் காட்டு.”

சுந்தராஜன் வீட்டின் வெளியில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல், போனை கையில் வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மணி ஆறு. சுந்தராஜனின் செல் போன் ஒலித்தது.

 

தொடரும்.


-க.சரவணன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.