சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது
-ஆல்பெர் காம்யு (Albert Camus)
கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் அவர்கள் மவுனம் காத்தால், அவர்களை இழித்தும் பழித்தும், அவர்களது மவுனம் குத்தலாக்கப் பேசப்படுகிறதே தவிர வேறு எதனைப் பற்றியும் எவரும் வாய்திறப்பதில்லை.
காதைக்கிழிக்கும் இந்தக் காட்டுக் கூச்சலின் நடுவே, படைப்பாளிகள் அவர்கள் மதித்துப் போற்றுகின்ற சிந்தனை மற்றும் வெளிப்பாடுகளையும் தனியொரு பாதையாக முன்னெடுத்துச்செல்ல இனிமேலும் இயலுமென நம்பமுடியவில்லை. ஓட்டமாக ஓடும் வரலாற்றிலிருந்தும் விலகி நிற்கும் சாத்தியமென்பது இதுவரையிலும் அதிகமோ, குறைவோ இயன்றேயிருக்கிறது. நிகழ்வுகளோடு உடன்பாடில்லாத எவரானாலும் பொதுவாக மவுனமாகிவிடுகின்றனர்; அல்லது வேறு எதையேனும் பேசுகின்றனர். இன்று, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கிறது: மவுனம் என்பதற்கு `எதிர்ப்பு` என்னும் புதிய பொருள் சூட்டப்பட்டுள்ளது. விலகியிருக்கும் அல்லது முடிவெடுத்த தருணமே அதனை ஒரு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதென்று கருதி, தண்டிக்கப்படுவதோ அல்லது பாராட்டப்படுவதோ நிகழ்வதுடன் கலைஞர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் அதில் ஈடுபட்டவர்களாக மாறிவிடுகின்றனர். மேலும், இதில் ஈடுபடுதல்` (involved) என்பது வெறுமனே `செயல்பட்டவர்` (committed) என்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானதெனத் தெரிகிறது. உண்மையில் இது கலைஞனின் வெறும் தன்னார்வச் செயல்பாடு என்பதல்ல, மாறாக கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டிய இராணுவப் பணி போன்றது. இன்று எல்லாக் கலைஞர்களும் காலத்தின் கப்பலில் ஏறிவிட்டுள்ளனர். அவர்களது கப்பல் அழுகிய மீன்களால் துர்நாற்றமடைந்திருப்பதை உணர்ந்தாலும், உண்மையில் அங்கே தேவைக்கு அதிகமான கொடுங்கோல் மேற்பார்வையாளர்கள் இருப்பதை, எல்லாவற்றிலும் மோசமாக, அவர்கள் நிகழ்போக்குக்குத் தடையாக இருப்பதைத் தெரிந்தாலும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு ஒதுங்கிக்கிடக்கவேண்டியிருக்கிறது. நாம் கடலுக்குள் திசை தடுமாறித் தத்தளிக்கும் கப்பல்களாக அலைகிறோம். கலைஞர்கள், மற்ற எல்லோரையும் போலவே இறந்துவிடாமலிருக்க முடிந்தால், துடுப்புகளை ஏந்தவேண்டும் – அதாவது, உயிரோடு வாழ்வதையும், படைப்பதையும் தொடரவேண்டும்.
வெளியீடு ஒவ்வொன்றும் கருத்தூன்றி, வேண்டுமென்றே செய்த துணிகரச் செயலே. மேலும், அந்தச் செயல் எதையுமே மன்னிக்காத இந்த நூற்றாண்டின் வாய்திறந்த மிகு உணர்ச்சிகளுக்கு நம்மை இரையாக்குகிறது.
உண்மையைச் சொல்வதெனில், இது எளிதல்ல என்பதுடன் கலைஞர்கள், அவர்களின் முன்னால் வசதியும் வாய்ப்புமான வாழ்வினை எந்த அளவுக்கு இழக்கவேண்டியிருக்குமென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாறுதல் கொடுமையானதே. இருப்பினும், வரலாற்றின் திறந்தவெளி அரங்கில் தியாகிகளும் அடித்துத் தின்னும் விலங்குகளும் நிலையாக இருந்தே வந்திருக்கின்றனர். தியாகிகள் நிலையான புகழ் என்ற சிந்தனையால் வலிமைபெற, விலங்குகள் குருதி படிந்த வரலாற்றுத் தீனி மீதான ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளனர். ஆனால், இந்தக் கணம் வரையிலும் கலைஞர்கள் எப்போதுமே ஓர்ப்பாதையிலேயே செல்கின்றனர். அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமலேயே, அவர்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக, அல்லது, உன்னத நேர்வுகளில் சிறந்ததாகத் தியாகிகளை ஊக்குவிக்கவும், விலங்குகளை அவற்றின் தீனி மீதான முயற்சியிலிருந்து திசைதிருப்பவுமாகப் படைத்தனர்; பாடினர். ஆனால், அதற்கு மாறாக, கலைஞர்கள், திறந்தவெளி அரங்கினுள் தாமே மாட்டிக்கொண்டிருப்பதை இப்போது உணர்கிறார்கள். அவர்களது குரல்கள் இயல்பாகவே, தற்போது, முன்பு போலில்லை: அவற்றில் தன்னம்பிக்கை என்பது சிறிதளவுங்கூட இல்லை.
இதுபோன்ற தொடர்ச்சியான ஈடுபாட்டினால் கலைக்கு ஏற்படுகின்ற இழப்பினை – கலைஞர்களின் முன்னாள் வாய்ப்பு வசதி, முக்கியமாக மொசார்ட்டின் பாடல்களில் மூச்சுக்காற்றாக வாழ்கின்ற அந்தப் புனிதமான சுதந்திரம் – தெரிந்துகொள்வது எளிது. நமது கலைப் படைப்புகளின் தொல்லைமிக்க விடாப்பிடியான சூழலோடு, அவற்றின் வடுப்பட்ட புருவங்களையும் திடீர் சரிவுகளையும் இப்போது நம்மால் நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது. அதுபோலவே, படைப்பாளிகளுக்குப் பதில் அதிக ஊடகவியலாளர்களும், செசன்னெசுக்குப் பதில் அதிக தொழில்முறை சாராத ஓவியர்களும் இங்கே ஏன் நிறைந்திருக்கின்றனரென்பதையும் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் அல்லது ஸ்டென்தாலின் ` சார்ட்டர்ஹவுஸ் ஆஃப் பார்மா`வின் இடத்தை குழந்தை இலக்கியங்களும், மர்மக்கொலைகளும் எப்படிக் கைப்பற்றியுள்ளன என்பதையும் நாம் புரிந்துகொள்வதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளமுடிகிறது. இப்படியான நிலையினை, உரத்த மனிதநேயக் குரல்களோடு எப்போதுமே எதிர்க்கமுடிகிறது தான். அதன் மூலமாக நாம் தாஸ்தயெவ்ஸ்கியின் தி பொஸ்ஸெஸ்டு – ஆளுமைப்படுத்தப்பட்ட இடித்துரை – நாவலில் ஸ்டீபன் ட்ரோஃபினோவிச் நம்பிக்கையற்ற நிலையில் எதனை உருவகப்படுத்த முயல்கிறானோ, அப்படியானவர்களாக மாறுவதுடன், அந்த நாவல் மனிதன் உணர்கிற பொது விரக்தி வலைக்குள் நாமும் வீழ்கிறோம். ஆனால் அந்த விரக்தி அல்லது மனச்சோர்வு இயல்நிகழ்வு எதனையும் மாற்றப் போவதில்லை.
நமது காலத்தில் நாம் பங்கெடுத்துக்கொள்வது, எவ்வளவோ மேலானதென்பதே என் எண்ணம். நமது வயது நம்மை அவ்வாறு செய்யுமாறு கூச்சலிடுகிறது; அதுவும் போற்றுதலுக்குரிய தலைமை வல்லுநர்கள், மேலங்கியின் சட்டைப் பையில் கேமிலியா ரோஜாக்களைச் செருகிய கலைஞர்கள் மற்றும் சாய்வு நாற்காலி மேதைகளின் காலம் முடிந்துவிட்டதென்பதை அமைதியாக ஒப்புக்கொள்வதன் மூலமாக முற்றிலும் உரத்த குரலில் நச்சரிக்கிறது. இன்று படைப்பதென்பதே அபாயகரமான ஒன்றினைப் படைப்பதெனப் பொருளாகிறது. வெளியீடு ஒவ்வொன்றும் கருத்தூன்றி, வேண்டுமென்றே செய்த துணிகரச் செயலே. மேலும், அந்தச் செயல் எதையுமே மன்னிக்காத இந்த நூற்றாண்டின் வாய்திறந்த மிகு உணர்ச்சிகளுக்கு நம்மை இரையாக்குகிறது. எனவேதான், நடவடிக்கை எடுப்பதா அல்லது கலைக்குத் தீங்கிழைக்காமலிருப்பதா என்பதை முடிவுசெய்வதற்காக அல்ல, தற்போது எழுகின்ற கேள்வி, கலை மற்றும் அது குறிக்கும் எதுவொன்றும் இல்லாமல் வாழமுடியாத ஒவ்வொருவருக்குமான கேள்வி, எண்ணற்ற சித்தாந்தங்களின் (பல் வகை வழிபாட்டு மரபுகள், எத்தகையதொரு தனிமை!) கடுமையான கட்டுப்பாடுகளுக்கிடையில் படைப்புக்கான புதிர்நிறைந்த சுதந்திரம் உயிர்த்திருப்பதென்பது சாத்தியமா என்பதை அறிந்துகொள்வதற்கானதே.
இன்றைய கலைஞர்கள், அவர்களது கலை மற்றும் அதன் மூலமான அவர்களது இருப்பு என்பது தேவையானதாவென ஐயுறுகின்றனர்.
இதைப் பொறுத்தவரையில், அரசின் அதிகார சக்திகளால் கலை மிரட்டப்படுகிறதென எளிமையாகச் சொல்லிவிடுவது போதுமானதல்ல. அது போன்ற நேர்வில் பிரச்சினை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிடும்: கலைஞன் போராட வேண்டும் அல்லது சரணடையவேண்டும். பிரச்சினை அதைவிடவும் அதிக சிக்கலானது; இது, கலைஞர்களுக்குள்ளேயே போரிட்டுக்கொள்ளப்படுகிறதென்பதை நாம் புரிந்துகொள்கிற கணமே, அது வாழ்வா சாவா என்பதைவிடவும் மோசமானதாகிறது. கலை மீதான வெறுப்பு என்பதற்கு மிகவும் அற்புதமான பல எடுத்துக்காட்டுகளைக் கொண்டது நமது சமூகம். தற்போது அந்த வெறுப்பு தழைத்தோங்குகிறது. ஏனெனில் அது கலைஞர்களாலேயே உயிர்ப்போடு வளர்க்கப்படுகிறது. நமக்கும் முந்தைய கலைஞர்களிக்கும் ஐயங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் ஐயுற்றது அவர்களது திறமையைத் தான். இன்றைய கலைஞர்கள் அவர்களது கலை மற்றும் அதன் மூலமான அவர்களது இருப்பு என்பது தேவையானதாவென்றல்லவா ஐயுறுகின்றனர். ரேசின், 1957 இல் நான்டெஸ் சட்டத்தை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதிலாக பெரெனிஸ் நூலை எழுதினோமேயென இப்போது வருந்துவார்.
கலையைப் பற்றிய இப்படியான கலைஞர்களின் மறுமதிப்பீட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன; ஆனாலும் நாம் மிகவும் அதிமுக்கியமானவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளுவோம்.
மிகச் சிறந்த உன்னத நேர்வுக் காட்சியில், சமகால கலைஞர்கள் பொய் கூறியிருக்கவேண்டும் அல்லது போதிய காரணம் ஏதுமில்லாமலேயே பாடியிருக்க வேண்டுமென வரலாற்றுக் கெடுவாய்ப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் விவரிக்கப்படுகிறது. நமது காலத்தின் சிறப்பியல்பாக உண்மையில் விளங்குவது சமகாலக் கூருணர்வுகளுக்கும் வறுமைக்குள்ளாகிய மக்களின் எழுச்சிக்குமிடையே எழுந்துள்ள பதற்றமாகும். அம்மக்களது இருப்பினை நாமறிகிற அதேவேளையில் அவர்களைப் புறக்கணிக்க முயல்கிறோம். அவர்களைப் பற்றிய உணர்வோடு நாமிருக்கிறோமெனில், அதற்கு மேல்தட்டினர், மேல்தட்டுக் கலைஞர்கள் அல்லது பிறர் இப்போது உயர்ந்திருக்கின்றனரென்பதல்ல, காரணம். இல்லை. நாம் அதைத் தெளிவாக்கிக் கொள்வோம். அது எப்படியென்றால், மக்கள் வலிமைபெற்றுள்ளதுடன் நாம், நமது நினைவிலிருந்தும் அவர்களை அகற்றிவிட அவர்கள் அனுமதிப்பதில்லை.
இப்படிப் பொறுப்பினை உதறிவிடுவதற்கான வேறு பல காரணங்களில் சில மேன்மையானவை அல்ல. ஆனால் காரணங்கள் என்னவாக இருந்தபோதிலும், அவை அனைத்தும், படைப்புச் செயல்பாட்டின் அடிப்படைக் கூறாக விளங்குகின்ற ஆக்கபூர்வப் படைப்பாளியின் தன்னம்பிக்கையினைத் தகர்ப்பதன் மூலம் சுதந்திரமான படைப்புச் செயல்பாட்டினை முடக்குவதென்ற ஒரே இலக்கினைக் கொண்டுள்ளன.
“ மனிதன் தனது சொந்தப் பேரறிவுக்குக் கீழ்ப்படிதலே, நம்பிக்கை என்பதன் இறுதி வரையறை” என எமெர்சன் சிறப்பித்துக் கூறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மற்றொரு அமெரிக்க எழுத்தாளர் மேலும் சிறப்பித்துக் குறிப்பிடுவது, “ மனிதன் ஒருவன் அவனுக்கே நம்பிக்கைக்குரியவனாக நீடிக்கும் வரையில், அரசு, சமூகம், மட்டுமல்லால், சூரிய, சந்திர, நட்சத்திரங்களுங்கூட அவனது நன்மைக்காகப் பணிபுரியும்.” இத்தகைய மிக விரிந்த அளவிலான இனிய நன்னோக்கு இப்போது இறந்துவிட்டதாகவே தெரிகிறது. பெரும்பாலான நேர்வுகளிலும் கலைஞர்கள், கலைஞர்களாக இருப்பதற்கு தமக்குத் தாமேயாகவும், கலைஞரென்ற வகையில் ஏதேனும் குறிப்பிட்டுச் சிறுமதிப்பளித்தாலுங்கூட வெட்கம் கொள்கின்றனர். மிக முக்கியமாக, ` கலையென்ன அப்படியொரு வஞ்சக ஆடம்பரமா?` என்பதே அவர்கள் தமக்குள்ளாகவே பதிலளிக்கவேண்டிய கேள்வி
ஆல்பெர் காம்யுவின் படைப்பதே ஆபத்து : கலைஞனின் வலிமையும் பொறுப்பும் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
மொழிபெயர்ப்புரிமை – சான்ட்ரா ஸ்மித்.
தமிழாக்கம் : ச.ஆறுமுகம்.