கரும்புத் தோட்டமும் கரியும் 

ரு அடர்ந்த காட்டில் ஒரு யானை அதன் கூட்டத்தோடு வாழ்ந்தது. ஒரு நாள் யானை அதன் கூட்டத்திலிருந்து வழி தவறிவிட்டது. 

தனது கூட்டத்தைத் தேடி காடு முழுக்க சுற்றினாலும் அந்த யானையால் தன் கூட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழுது கொண்டே தன் உறவுகளைத் தேடிக்கொண்டு காட்டின் எல்லைக்கே வந்துவிட்டது. 

அவ்வடர்ந்த வனத்தின் எல்லையில் ஓர் கிராமம் இருந்தது. கிராமத்தினரின் விவசாய நிலங்களும் காட்டை ஒட்டியே இருந்தன.

காட்டின் அருகிலேயே ஓர் விவசாயியின் கரும்புத் தோட்டம்  இருந்தது. விவசாயி ஒரு முதியவர். அவர் தனியாகவே விவசாயம் பார்த்து தன் காட்டில் உழைத்தார். அது களவு போகாமல் இருக்கக் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

கரும்பைப் பார்த்ததும் யானைக்குக் கரும்பின் மேல் ஆசை வந்துவிட்டது. ‘ஆகா, கரும்பு, சுவையான கரும்பு.. சாப்பிட அருமையாக இருக்குமே.. தண்ணீர் தாகமும் தீரும்’ என்றெண்ணியபடி தோட்டத்திற்குள் புகுந்தது.

அந்த தோட்டத்தின் உரிமையாளரான தாத்தா.. பரணில் அமர்ந்து காவல் காத்துக்கொண்டிருந்தவர், யானையைப் பார்த்ததும், அதை விரட்ட,  சத்தம் எழுப்ப கொட்டடித்த படி, பரணிலிருந்து இறங்கி வந்தார்.

அந்த மேளச் சத்தத்திற்கு, யானைக்குப் பயமாக இருந்தாலும், கரும்பு மீதான ஆசையும், பசியும் தாகமும் அவ்விடத்தை விட்டு நகராமல் நிற்கச் செய்தன.

தாத்தா வேகமாக மேளம் அடித்த படி வந்தவர், யானை அசையாமல் நிற்கவும் தயங்கி சில அடிகள் முன்னால் நின்று யானையைப் பயத்துடன் பார்த்தார்.

யானை விசித்திரமான அந்த உயிரினத்தைப் பார்த்து “ஏன் இப்படி சப்தம் எழுப்புகிறீர்கள்? எனக்குப் பயமாக உள்ளது” என்றது.

யானை பேசியதைக் கேட்ட தாத்தாவும் அதனிடம் சகஜமாகப் பேச விரும்பினார்.

“உன்னை விரட்டத் தான் சப்தம் எழுப்புகிறேன்”

“என்னை ஏன் விரட்டுகிறீர்கள்.. எனக்குப் பசிக்கிறது. நான் சாப்பிட வந்தேன்.”

“இது என்னுடைய தோட்டம், நான் வருடம் முழுவதும் கடினமாக உழைத்து இதை உருவாக்கினேன்.. நீ வந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டால் என் வாழ்க்கையே போய் விடும்”

யானைக்கு அவர் சொல்வதைக் கேட்க விசித்திரமாக இருந்தது. காட்டிலெல்லாம் என்னுடையது என எதையும் எந்த ஜீவராசியும் உரிமை கொண்டாடவில்லையே.. இந்த மனிதர் மட்டும் ஏன் இப்படிப் பேசுகிறார் எனப் புரியாவிட்டாலும் தாம் தோட்டத்தில் நுழைந்தால் அவருக்கு ஏதோ கஷ்டம் என்பதை மட்டும் புரிந்து கொண்டது.

அதனால், “பெரியவரே, உமக்குக் கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை.. ஆனால், எனக்குப் பசிக்கிறதே, அதோடு கரும்பைச் சாப்பிட ஆசையாகவும் உள்ளது. என்ன செய்வது?” எனக் கேட்டது.

“உனக்குக் கொடுக்க எனக்கும் ஆசை தான். ஆனால் இலவசமாக யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாதென என் முன்னோர் சொல்லியுள்ளார்கள். அது சோம்பேறித்தனத்தை வளர்க்கும். இன்று உனக்கு இனாமாகக் கொடுத்தால், நாளை உன் கூட்டமே வரும். ஆதலால் நான் இனாமாக எதுவும் கொடுக்க இயலாது.” என்றார்.

“சரி, அப்படியென்றால் நான் கரும்பு சாப்பிட என்ன செய்ய வேண்டும் பெரியவரே?”

“எனக்குக் கரும்புக் கட்டுகளை எடுத்து அடுக்கி வைக்க வேண்டும், சந்தைக்குச் செல்ல. அதற்கு உதவி செய்கிறாயா?”

“சரி” என்றது யானை.

முதியவரும், யானையும் சேர்ந்து கரும்புகளை அறுவடை செய்து, கட்டுக் கட்டாகக் கட்டினர். பின் கரும்புக் கட்டுகளை வண்டியில் யானையே ஏற்றி வைத்து விட்டது.

இப்போது முதியவர் யானைக்கு இரண்டே இரண்டு கரும்புகளைக் கொடுத்தார்.

“முதியவரே உமக்காக நான் அதிகம் உழைத்திருக்கிறேன், இவ்விரண்டு கரும்புகள் எனக்கு போதாது. என் பெரிய வயிற்றுக்கு ஏற்ற படி கொடுங்கள்” எனத் திடமாகக் கேட்டது யானை.

யானையின் உறுதியைப் பார்த்த பெரியவர், யானையின் நியாயத்தைப் புரிந்து கொண்டார். அதனால், அது செய்த வேலைக்கு உகந்த கூலியாக, மூன்று கட்டுக் கரும்புகளைக் கொடுத்தார்.

இப்போது யானையும் மகிழ்ச்சியாக முதியவருக்கு விடை கொடுத்தது. அதே நேரம் காட்டினுள் இருந்து யானைகளின் பிளிறல் சப்தம் கேட்டது. 

மகிழ்ச்சியான அந்த குட்டி யானை, தான் உழைத்துச் சேர்த்த கரும்புக் கட்டுகளைத் தன் கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள எடுத்துச் சென்றது.

யானைக் குட்டியைக் காணாமல் தேடி வருந்திய யானைக் கூட்டம், குட்டி யானையைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளியது. அனைத்து யானைகளும் கரும்பை ருசி பார்த்து குஷியாக மகிழ்ந்தனர்.


-ராஜலட்சுமி

Previous articleஎழுத்துக்களில் கரைந்த நிழல்கள்
Next articleதுர்ஷினியின் பிரவேசம்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
3 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
நித்யா
நித்யா
2 years ago

இலவசங்கள் சோமபேறித்தனத்தை வளர்க்கும்… அருமையான கருத்து👏👏👏

Padma
Padma
2 years ago

Arumai . Kulanthaigalukku nalla karuthai sollum kadhai. Avasiyam en kulanthaiku indriravu ikkathaiye..

Sudha Ravi
Sudha Ravi
2 years ago

அருமையான கருத்தைச் சொல்லும் கதை…இலவசமாக வாங்காமல் எதையும் உழைத்தே பெற வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு அழகாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர் .