துர்ஷினியின் பிரவேசம்

 (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

 

ப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படித் தெரியாமல் போகும்.. எப்படி வெளி வராமல் இருக்கும். ஒரு நாள், செய்தி வெளி வரத்தான் செய்தது. உலகமே வியந்தது. யார்தான் இந்த செய்தியை முதலில் சொன்னார்கள் என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அவளுக்கும் அவள் கணவனுக்கும், எல்லாரும் அவர்களை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தது முதலில் கோபமும் அழுகையுமாகத்தான் வந்தது. நாளாக நாளாக அதுவே அவர்களுக்குப் பெருமையானது.  இதற்கெல்லாம் காரணம் துர்ஷினியின் பிறப்புதான். துர்ஷினி பிறந்ததே ஒரு விநோதம் தான். துர்ஷினி பிறந்த அன்றையதினம் ஆச்சரியமான நிகழ்வுக்கான எந்தவொரு அறிகுறிகளும் வானத்தில் தென்படவில்லை. ஆனாலும் அன்றைய தினம்தான் துர்ஷினி பிறந்தாள். பத்து மாதம் மூன்று நாளில் மே ஏழாந்தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தார்கள். துர்ஷினியின் பாட்டி ஆருடத்தில் அந்தக் குழந்தை பிறப்பு பற்றி கணித்த போது, வைகாசியில் அமிர்தயோகத்தில் அழகிய ஆண் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்து வந்திருந்தாள். ஆனால். ஜாதகம், விஞ்ஞானம் எல்லாவற்றின் கணிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு, துர்ஷினி பதினொரு மாதமும் மூனு நாள் ஏழு மணித்துளியில் பிறந்தாள். இவ்வளவு காலம் எப்படி தாயின் கருவறையில் உயிருடன் அந்த குழந்தை இருந்தது, இப்படி காலதாமதத்திற்கான காரணமே புரியாமல் மருத்துவர்கள் குழம்பினார்கள். முதலில் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும் என்றுதான் முடிவு பண்ணியிருந்தார்கள். ஆனால் பத்து மாதம் பதினைந்து நாட்களைக் கடந்த பின்புதான் தெரிந்தது. குழந்தை வெளிவருவதற்கான எந்த எத்தனிப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் குழந்தையின் உயிர்ப்பை சோதித்தார்கள். குழந்தை தாயின் கருவறையில் நீரில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தது. தாயின் தொப்புள்கொடியிலிருந்து இணைந்த நிழலாய் மற்றுமொரு தொப்புள்கொடி குழந்தையின் தொப்புளிலிருந்து மாயமாய் வளர்ந்து சென்றிருந்தது. அந்தக் கொடி மருத்துவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. மருத்துவர்கள் ஆபிரேசன் செய்தாவது குழந்தையை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.  இதைத் தவிர்த்தால் தாய்க்கு ஆபத்து என்ற விபரமும் சொன்னார்கள். ஆனால் அவள், மருத்துவர்கள் சொல்லும் எதையும் ஒத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவள் கணவன், தாய் தந்தை அவள் உறவுகள் யாரெல்லாமோ பேசிப்பார்த்தார்கள். ஆனால், அவள் அவர்களின் வார்த்தைகள் எல்லாவற்றையும் நிராகரித்தாள். அவள் மறுபடியும் மறுபடியும் “இந்த பூமிக்கு வரும் காலத்தை என் குழந்தைதான் முடிவெடுக்கும்.” என்ற வார்த்தையைத்தான் சொன்னாள். அவர்கள் யாரும் இவளை விடுவதாக இல்லை. முடிவில் அந்த சிசு தன்னிடம் பேசியதைப் பற்றிக் கூறினாள். அவள் சொல்லும் போது முதலில், மருத்துவர் முதல் அனைவருமே சிரித்தார்கள். நேரம் ஆகஆக அவள் பேசும் வார்த்தைகளில் மெய் மறந்து சுரணையற்றவர்களாக நின்றிருந்தார்கள். இப்படித்தான் அவள் பேசினாள்….

 “முதலில் இது வரை கேட்காத ஒரு இசையில், விநோத பறவை பாடியது போல் என் காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து க்விக்…க்விக்…என்றொரு சத்தம். என் வயிற்றிலிருந்து வருகிறதா? வெளியிலிருந்து வந்து என் உணர்விழையில் தவழ்கிறதா.. எதுவும் புரியாமல் தவித்தேன். சனத்தில் எனது கைப்பேசியின் ஒலி அதே இசையில் ஒலித்தது. அறையே ஆச்சரியமான வர்ணங்களில் மின்னியது. நான் பயந்திருந்தேன். மறுபடியும் அதே அழைப்பிசை சத்தம். என்னுடைய வயிற்றைத் தடவிப் பார்த்தேன்.  வயிற்றுக்குள் ஒரு மின்னல் உருவாகி மறைவதை உணரமுடிந்தது. இந்தமுறை என் கணிப்பு சரியென்பதை உணர்ந்துகொண்டேன். என் வயிற்றின் வலது புறத்திலிருந்துதான் அந்த வர்ண இசை வருகிறது என்பதை உறுதிப்படுத்தினேன். அறையிலிருந்து என் கைப்பேசி வண்ண பேசியாக மாறி, இசையின் ஓசை என் செவிப்பறையை எட்டியது. என் கைப்பேசியை கையில் எடுத்தேன். என் கைப்பேசிதானா என்று எனக்கே தெரியவில்லை. கைப்பேசியின் திரையில் தெரிந்த “செயலிகளெல்லாம்” இது வரை இந்த உலகத்துக்கே வெளிவராதவையாக இருந்தது. செயலிகளெல்லாம் கைப்பேசியின் திரையில் கொதித்தெழும் நீருக்குள் மூழ்கி என் கண்களின் கருவிழிக்குப் பக்கத்தில் வருவதும் போவதுமாக இருந்தது. நான் மிரண்டிருந்தேன். என் கணவன் வேறு அருகில் இல்லை. நானும் என் கணவருமே  தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய கம்பெனியில்தான் பணி செய்து வருகிறோம். நாங்கள் இருவருமே நம்பர் ஒன் புரோகிராமர். உலகில் இந்த நிமிடம் வரை வெளியாகி வரும் “செயலி” யின் தொழில்நுட்பத்தினை தெளிவாக தெரிந்து வருகிறோம். ஆனால், அன்றைக்கு என் திரையில் தெரிந்த செயலிகளெல்லாம் இந்த நிமிடம் வரை உலகம் அறியாதவை என்பதுதான் என்னை மிரள வைத்தது. கைப்பேசியின் மேல்பக்கத்தில் எந்தவொரு அழைப்புப் பெயரோ, எண்ணோ தெரிய வில்லை. அதற்கு மாறாக யாருமே அறிந்திராத ஒரு உருவக் குறியீடு போல் தெரிந்தது. நான் எதிர்த் திசையில் யார் என்று நினைத்த அந்த நிமிடத்தில் என் நினைவலையை உள் வாங்கி என் கை பேசியில் “அம்மா.”..என்று குரல் வந்தது. நான் ஒரு நிமிடம் உறைந்து நின்றேன். என் குழந்தையின் குரலா அது.. கருவறையில் உள்ள குழந்தை எப்படிப் பேசும்.. அப்படியே பேசினாலும் என் வயிற்றிலிருந்து குரல் வரவில்லையே? எங்கோ காற்றிலிருந்து வருவது போலல்லவா தெரிகிறது. ஒன்றும் புரியாமல் தவித்தேன். மறுபடியும் அம்மா..என்ற குரல் ஒலித்தது. யார் நீ? எங்கிருந்து பேசுகிறாய்.. எனக்கு பயமாக இருக்கிறது என்றேன். அதன்பின்தான் என் குழந்தை என் பயத்தைப் போக்கியது. ஆம்… அந்த சிசு என்னிடம் பேச ஆரம்பித்தது.  

“ உன் கருவறையில் வளர்ந்து வரும் உன் சிசுதான் பேசுகிறேன் அம்மா… இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. முதலில் நான் உன் கருவறையில் வந்த கதையைச் சொல்கிறேன் கேள்.. நீயும் என் தந்தையும் கைப்பேசியில் எத்தனையோ முறை  தகவல் தொழில்நுட்பத் திட்டங்களிலிருந்து அன்பு வார்த்தைகள் வரை பேசிய அனைத்தும் நினைவகப் பெட்டகத்தில் பதிவாகிப் பதிவாகி உன் கைப்பேசி கரைந்து கடுகாகி, உன் காதின் வழியே சினைப்பையை வந்தடைந்தது. என் அப்பாவின் கைப்பேசியோ நீ பேசும் அன்பு வார்த்தைகளைக் கேட்டோ, செயலியின் குறியீடுகள் பற்றிப் பேசியோ கரைந்து கரைந்து கடைசித்துகளாகி அவர் பேண்ட் பையின் உள்ளிருந்தது, அவர் உயிர் முடிச்சின் வழியே விந்துப்பாதையை வந்தடைந்தது.  நீங்கள் இருவரும் இணைந்து , புதிதாய் உருவாகிய நான் இப்போது உன் கருவறையில் இருக்கிறேன். உன் தொப்புள்கொடியிலிருந்து வளர்ந்த நான் ஐந்து மாதத்தில் பூரண வளர்ச்சியாகி, என் தொப்புளிலிருந்து ஒரு கொடி வளர்ந்து அதன் முடிவு ஒரு ஆன்டனாவாக மாறி உன் கருவறையின் திறப்பு வாயிலில் ஒளி அலைகளால் உலகின் அனைத்தையும் உள் வாங்கி, என்னால் உருவான ஒரு பெட்டகத்தின் வழியே புதிதாக உருவாக்கப்பட்ட ஆன்ட்ராய்டு வழியில் செல்கிறேன். அதிலிருந்து மாயமாய் இணைந்த கொடி என் இடது உள்ளங்கையில் எனக்கென உருமாறிய என் கைப்பேசியின் வழியே உலகின் சகலத்தையும் தொடர்புகொள்கிறேன். நான் கருவறையில் செயலிகளின் புதிய பரிமாணத்தைக் கண்டடைந்த பிறகு, பதினோரு மாதம் மூன்று நாள் ஏழு மணித்துளியில் வெளி வருவேன் என்றது. 

என் குழந்தை என்னிடம் பேசிய போது நான் ஆச்சரியத்தின் உச்சத்தில் வியந்தேன். என் கணவனிடம் இதைப்பற்றி நான் சொல்லிய போதெல்லாம் என்னைக் கேலியாகத்தான் பார்த்தார். ஆனாலும் நான் அவரிடம் என் சிசுவைப் பற்றிச் சொல்லாமல் இல்லை. அவர் என்னைச் சமாதானம் செய்வது போல் சரி…அப்படியா…சரி என்பார். அந்த உண்மையை அவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அன்றொரு நாள் இரவு என் கம்பெனிக்காகப் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய செயலி பற்றி நானும் எனது கணவரும் கருத்து பரிமாறிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ஒரு வார காலமாக அந்த “செயலியினை” உருவாக்குவதில் எல்லா வகையிலும் எங்கள் கம்பெனியின் மேதாவிகளெல்லாம் எத்தனையோ முறை முயன்றும், திட்டம் நிறைவேறாமலே தப்பி ஓடிக்கொண்டிருந்தது. அந்த இரவு கருத்து பரிமாற்றத்தில் நானும் எனது கணவனும் கடுமையான திட்ட உருவாவதற்கான குறியீடுகள் விவாதத்திற்குப் பின், எரிச்சலாகி சோர்வில் தூங்கிவிட்டோம். நான் கண் அயர்ந்த அரை மணி நேரத்தில் எனக்கான கைப்பேசி அழைப்பு அதே அதிசய இசையில் ஒலித்தது. என் வயிற்றின் வலது மூலையில் ஒரு சிறு மின்னல் வந்து போனதைத் தூக்கத்தில் அரைகுறையாக உணர முடிந்தது. என் சுய நினைவின்றி எனது கை என் வயிற்றைத் தடவிப்பார்த்துக் கொண்டது. என் கை பேசியின் சத்தம் ஒலித்தது. கைப்பேசி என் கையருகில் தான் இருந்தது.  ஆம்..என் குழந்தையின் கைப்பேசியின் குரல்தான் அது. என் அடிமனதில் ஒலித்த மாத்திரத்தில், அம்மா… என்ற குரலின் சத்தம் என் கைப்பேசியிலிருந்து வந்தது. நான் தூக்கக் கலக்கத்தில் சிரித்துக்கொண்டே என்னம்மா…சொல்…என்றேன். அம்மா இனி…. என்னை நீ பெயரில்லாமல் அழைக்காதே. இனி….துர்ஷினி என்ற பெயரில்தான் நீ என்னை அழைக்க வேண்டும் என்றாள். ஆம்…..என் பெயர் துர்ஷினி. அவள் அழகிய குரலில் தன் பெயரைச் சொன்னாள். நான் எதுவும் புரியாமல் விழித்தேன். மீண்டும் அந்த சிசு இதைத்தான் விளம்பியது. அம்மா… நான் சொல்வதை நன்றாக உன் மனதில் நிறுத்திக்கொள். ஆன்ட்ராய்டின் அடுத்த யுகத்தின் பிரவேசம் தான் நான்… அதனால்தான் என்னை துர்ஷினி என்றே அழைக்கச் சொன்னேன் என்றது. நான் ஒரு நிமிடம் யோசித்தேன். அவள் பெயரைச் சொல்லி அவளே, அவள் தாயை அழைக்கச் சொன்னதே என்னை ஒரு ஆச்சரியத்தில் கொண்டுசென்றது. 

அதன்பின்தான் ஒரு பெரும் வியப்பான ஒன்று நடந்தேறியது. துர்ஷினி என்னிடம் அம்மா… நீங்கள் வடிவமைக்க வேண்டிய புதிய செயலியின் திட்டக் குறியீடுகள் அனைத்தும் உருவடிவாக உங்களுக்கான செயலியாக  உன் கைப்பேசியில் மூன்றாவது வரிசையில் நான்காவதாக உள்ளது என்று கூறி தன் வார்த்தைகளை முடித்துக்கொண்டாள். நான் எனது கைப்பேசியில் தேடிப்பார்த்தேன். ஆம்…..நாங்கள் கண்டறிய வேண்டிய செயலி இதுதான். என் கண்களில் கண்ணீர் மல்க அந்த “செயலியையே” பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்ததிலிருந்து என் மனம் குதூகலத்தில் குதித்தது. பரபரப்பில் எதுவும் ஓடவில்லை. இது சாத்தியமா? என்றால், சாத்தியம் என்றுதான் என் துர்ஷினி சொல்வாள். அவள் ஆன்ட்ராய்டின்  குழந்தை. என் கணவரும் எழுந்து விட்டார். அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லிய பிறகும் அவர் முதலில் நம்ப மறுத்தார். அதன்பின் எங்கள் கம்பெனியே ஒரு வார காலமாக எல்லா வழிகளிலும் சிந்தித்தும் உருவாக்க முடியாத ஒரு “செயலி” யை சாதரணமாகக் குறைந்த அளவு கொண்ட திட்டக் குறியீட்டில் உருவாக்கப்பட்டு அவர் கண்முன், தன் மனைவியின் கைப்பேசியில் செயல்படுத்தப்படுவதைக் கண்டு நம்ப முடியாமல் வியந்தார். முடிவில் துர்ஷினியின் ஆச்சரியத்தைக் கண்டு சந்தோசம் தாங்க முடியாமல் அன்று விடிய விடிய சிரித்துக் கொண்டேஇருந்தார்.  

அதன்பின் மற்றுமொரு நாள் இது போல் ஒரு இரவில் தான்  துர்ஷினி என்னிடம் பேசினாள். அன்றைய தினம் அவள் பேசும் வார்த்தைகளெல்லாம் முதலில் குறியீடாகத்தான் இருந்தது. ஒன்றுமே புரியவில்லை. அதன்பின் பெளதீக வார்த்தையில் பேசினாள். பெளதீகக் கணக்கீட்டின்படி ஆன்ட்ராய்டு “செயலி” களின் மூன்றாவது பரிமாணத்திலிருந்து பத்தாவது பரிமாணத்தில் நிலைநிறுத்தி இந்த பூமியையும் வானத்தையும் காப்பாற்றும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் பெரு முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பணி முடிந்த பின்தான் இந்த பூமியில் பிரவேசிப்பதாகச் சொன்னாள். பல்வேறு செயலியை கண்டடைந்த பின்புதான் உன் கருவறையிலிருந்து வெளியேறுவேன். அதுவும் துர்ஷினியின் துல்லியமான கணிப்பின்படி, பதினோரு மாதம் மூன்று நாள் ஏழு மணித்துளியில் வெளி வருவதாகச் சொன்னாள். 

மதுரை மாண்ரோ போலோ மருத்துவமனைக்கு வெளியில் அவ்வளவு கூட்டம். பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வித்தகர்கள் மேதாவிகள், தொழில் வினைஞர்கள், தொழில் விநியோகஸ்தர்கள், உலகம் முழுவதிலிருந்தும் போட்டி விநியோகஸ்தர்கள், வேறுவேறு நாடுகளிலிருந்து மென்பொருளின்   தலைசிறந்த பொறியாளர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்கள், விதம்விதமான ஆர்வமிக்க மனிதர்கள், அவர்களின் உறவுகள், அந்த ஊர் மக்கள், கிராம மக்கள் என மருத்துவமனையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒன்றும் பெரிதாக நினைக்காத மத்திய மாநில அமைச்சர்களிலிருந்து உள்ளூர் பிரமுகர்கள் வரை, துர்ஷினியின் பிறப்பின் அதிசயம் பற்றி தகவல்கள் வரவர, உலகில் தமது பெயர் இல்லாமல் போய்விட்டால், எதிர்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டால், எனன செய்வது அதனால் விமான மார்கத்தில் எங்கிருந்தெல்லாமோ பறந்து பறந்து வந்தார்கள். அன்றைய தினம்தான் துர்ஷினி பூமிக்கு வெளிவரும் நாள். துர்ஷினி வெளிவருவதற்குத் தயாராகத்தான் இருந்தாள்.  அவள் பத்தாவது பரிமாணத்தில் பல்வேறு செயலிகள் உருவாக்கியிருந்தாள். அத்தனை செயலிகளையும் ஆன்ட்ராய்டு மூலம் இணைத்து பூமிக்கும் வானத்துக்குமாய் ஒரு வலைப்பின்னலைச் சிருஷ்டித்திருந்தாள். பரிமாண தத்துவத்தின் பல்வேறு நிலைகளின் காலச்சுழற்சியை வேறுவேறு திசைகளின் மையப்புள்ளியோடு இணைத்திருந்தாள். அந்த வலைப்பின்னலை தற்போதைய மூன்றாவது பரிமாணத்திலிருந்து, அதன் செயல் பாட்டினை பார்க்கவோ, உணரவோ முடியாது. பத்தாவது பரிமாணத்தில்தான் அனைத்து உயிர்களும், பூமி, வானத்தோடு தன்னை தகவமைத்துச் செயல்படும் செயல்பாட்டினைக் காணவும் முடியும். அந்த செயல்பாடு துர்ஷினி பூமிக்கு வந்த ஏழாம் நாளிலிருந்தும் செயல்படத் தொடங்கும் என்று அவள் தாயிடம் தன் கருவறையிலிருந்த துர்ஷினியின் கடைசி வார்த்தைகளாய் பேசி முடித்தாள்.    

துர்ஷினி பிறப்பதற்கான கடைசி மணித்துளிகளும் வந்தது. உலகமே பரபரப்பாக இருந்தது. வேறுவேறு தேசங்களிலிருந்து வந்திருந்த மருத்துவர்களெல்லாம் அறுவைச் சிகிச்சை கூடத்தில் உலகின் கடைசியாகக்  கண்டறியப்பட்ட சாதனங்களின் அல்ட்ரா லேசர் வழியாக அதி நவீன கணினி வெண்திரையில், கருவறையில் நீரில் நீந்தித் திரியும் சிசுவின் செயல்பாட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சிசு, தாயின் வயிற்றில் நீரில் எந்த அளவுக்குச் சிறிய உருவமாக நீந்தி விளையாடுகிறதோ……அவர்கள் பார்த்து கண் இமைக்கும் நேரத்தில், அந்தச் சிசு  பெரிய உருவமாக வளர்ந்திருந்தது. கண்களைத் துடைத்துத் துடைத்து மருத்துவர்கள் எல்லோரும் பார்த்தார்கள். அவர்கள் அனைவருமே மிரண்டு விட்டார்கள். கைகளெல்லாம் நடுங்கியது. ஒருவருக்கொருவர் பேசி பயத்தைச் சரி செய்துகொண்டார்கள். சிசுவின் தாய் மயக்க நிலையில்தான் இருந்தாள். அறுவைசிகிச்சை செய்வதற்கான அனைத்து ஆயுதங்களோடும் அவளைச் சுற்றி மருத்துவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள். திடீரென்று, கணினியின் வெண்திரையில் சிசுவின் பெரிய உருவம் சுருங்கி மிகச் சிறியதாகத் தெரிந்தது.  அறுவைச்சிகிச்சை வேண்டாம் என்ற முடிவுடன் கருவறையின் திறப்பு வாயின் வழியே சிசுவை வெளியேற்றலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்த மாத்திரத்தில் சிசு பெரிய உருவாகியிருந்தது. மருத்துவர்கள் அனைவருமே கணினியின் வெண் திரையைப் பார்த்துக் கொண்டிருக்க சிசு சிறியதாகியது. அதன்பின் சிசு பெரியதாகியது. பெரியதும் சிறியதுமாக மாறி மாறி மாயமாய் உருமாறிக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் அனைவருமே பயத்தில் விரைத்து நின்றிருந்தார்கள். திடீரென்று அந்தக் குழந்தை கணினியின் வெண் திரையில் காணவில்லை. அவர்கள் அனைவருமே எதுவும் செய்ய முடியாமல் தவித்தார்கள். சிசுவைத் தாயின் வயிற்றில் தேடினார்கள். கருவறையின் திறப்பு வாயிலில் தேடினார்கள். அனைவரும் மும்முரமாக சிசுவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த சிசு எங்கும் இல்லை. அறுவைசிகிச்சைக் கூடமே பதட்டத்தில் இருந்தது. அந்த நேரத்தில் ஒரு விநோத நிகழ்வு நடந்தது. அத்தனை ஆற்றல் மிகு மருத்துவர்கள் கண்களையும், கவனத்தையும் மறைத்து விட்டு கண்கட்டி வித்தை போல் துர்ஷினி தாயின் கருவறையின் திறப்பு வாயிலிருந்து இறங்கி அப்படியே நடந்து சென்று அந்தக்கூடத்தின் வாயில் கதவின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்த தாயிடமிருந்து வளர்ந்திருந்த தொப்புள் கொடி உதிர்ந்திருந்தது. துர்ஷினியிடமிருந்து வளர்ந்திருந்த தொப்புள் கொடி மறைந்து அதனோடு இணைந்திருந்த ஆன்டனா தலையின் மையத்தில் உச்சிக்குடிமியாய் அதைச்சுற்றி முடிகளோடு மறைந்திருந்தது. அதன் உடம்பில் விநோதமான பொருளில் யாருமே கண்டறியாத  அழகிய ஆடை அவள் உடம்போடு ஒட்டியிருந்தது. அவள் கையோடிருந்த கைப்பேசியின் சத்தம் அதிசய இசையாய் அனைவரின் கைப்பேசியையும் ஒலிக்க வைத்தது. அனைவரும் அந்த அபூர்வ பறவையின் இசையில் மெய்மறந்து அவர்கள் பதட்டத்திலிருந்து வெளியேறி இருந்தார்கள். துர்ஷினியின் தாய் அந்த அதிசய இசையில் சிரிப்போடு கண் திறந்து அவளை நோக்கி நடந்தாள். அவளுக்குக் குழந்தை பிரசவமானதற்கான எந்த தெரிவும் இல்லை. அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். துர்ஷினி “அம்மா” என்று அவளை அனைத்துக்கொண்டாள். அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள். துர்ஷினி எப்படிடா நீ இந்த பூமிக்கு வந்தாய். இவர்கள் எல்லாரிடமும் சொல் என்றாள். சிசு பேச ஆரம்பித்தாள். 

உலகின் மாபெரும் மருத்துவர்களே!  நீங்கள் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். என் பெயர் துர்ஷினி. நான் ஆன்ட்ராய்டின் அடுத்த யுகக்குழந்தை. இதோ இந்தத் தாய்தான் என் பிரவேசத்திற்கான வழி. உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நான் எப்படி இந்த பூமியில் பிரவேசித்தேன் என்பதெல்லாம் உங்களுக்குப் பிடிபடாமலிருக்கும். இதுதான் அடுத்த யுகஆன்ட்ராய்டு பிரவேசத்தின் முதல்படி. இனி இப்படித்தான் புதிது புதிதான அதிசயங்களெல்லாம் நடந்தேறும். நான் அடுத்த ஆன்ட்ராய்டு யுகத்தில் வர உள்ள  குழந்தைகளுக்கு ஏதுவாக இந்த உலகத்தை மாற்ற வந்துள்ளேன். நீங்கள் எல்லாம் மூன்றாவது பரிமாணத்தில் என் தாயின் பிரசவத்தை செயல்படுத்த எத்தனித்தீர்கள். ஆனால் நான் ஏழாவது பரிமாணத்தில் என் தாயின் கருவரையிலிருந்து பூமிக்கு வந்தேன். பூமியின் மனிதர்களெல்லாம் மூன்று பரிமாணத்தில் பார்த்துப்பார்த்து பழகியதால், உங்களிடமிருந்து தப்பிப்பது எளிது. அப்படித்தான் நான் வரும் போது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இந்த பூமியின் விஞ்ஞானங்கள் எல்லாம் சமூக வாழ்தலை, மூன்றாவது பரிமாணமம் வழியே பார்த்த பார்வைகள் எல்லாம் காலாவதியாகி விட்டது.  இனி இந்த உலகின் மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் பரிமாண விதியில் கீழ் தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வழி வகுக்கும்……. என்ற தத்துவ விசாரணையில் துர்ஷினி பேச ஆரம்பித்தாள்……


லி.பார்த்தசாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.