வலசை தொலைத்த யானை

ன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முகாம் களைகட்டி இருந்துச்சு. தோரணங்களும், அலங்காரங்களும், கொடிகளும் நிரம்பியிருந்தது. ரேஞ்சர் அங்குமிங்கும் பரபரப்பாக நடந்தபடிஉத்தரவு போட்டுக்கிட்டு இருந்தான். அதை கேட்டு மத்தவங்க ஓடியாடி வேலை செஞ்சிட்டு இருந்தாங்க

இருபத்தி அஞ்சு பேர் வரிசையில மொத ஆள நின்னிட்டு இருந்தேன். என் மேலமாவூத்முருகன் தேசிய கொடியோட அமர்ந்திருந்தான். கொடியில நடுவுல இருக்குற நீல நிறம் எப்படி உங்களுக்கு தெரியாதோ, அது மாதிரி தான், நானும். அதுவும் இல்லாம என் பேச்சும் உங்களுக்கு புரிய வாய்ப்பில்ல. அது உங்களுக்கு வெறும் பிளிறலாக தா கேட்கும். உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா நா ஒரு ஆனெ. இல்ல.. இல்ல.. ’கும்கினு சொல்லுறது தா சரியாயிருக்கும். என் பேரு கும்கி ஆசாத். அந்த பேரு ஏன் வைச்சங்கனு எல்லா தெரியல. நா பொறந்து வளர்ந்தது எல்லாடாப்சிலிப் முகாம் தான்.

ஆசாத்என்றான், முருகன்

இருபது வருடமாக அவனை பார்த்திட்டு இருக்கேன். ’காவடியா வந்த முருகன், இன்னிக்கு மாவூத்தாக உயர்த்திருக்கிறான். அவனிடத்திற்கு மணி வந்திருக்கான். கும்கி பயிற்சினுகரோல் இருந்தத நெனச்ச, இப்போ கூட உடம்பு சிலிர்க்குது. பெரிய பெரிய மரங்களால குறுக்கும், நெடுக்குமா அமைக்கப்பட்ட கரோல்ல, நாலு காலும் இரும்பு சங்கிலியோட இருக்கும். கரோல ரெண்ட பிரிச்சு ஒன்னுல கட்டி வைச்சாங்க. இன்னொன்னுல மாவூத் இருந்தான். மாவூத் கையில குச்சியை வைச்சு கட்டளையிடுவான். அதுக்கு அடி பணிந்து செஞ்ச கரும்பு துண்டு கிடைக்கும். அடி பணியலனா அடி விழும். மொத பயிற்சி மண்டியிட வைக்கிறது. வலி ஒரு பக்கம், பசி ஒரு பக்கம் வாட்ட, வேறு வழியில்லாம அவன் சொல்லுறத கேட்டு தா ஆகணும்கிற நெலமை. அடுத்து குச்சியை தும்பிக்கையில எடுக்குறது, குச்சியை பிடிச்சு நடந்து போறது இப்படி ஒவ்வொன்னா சொல்லி தருவாங்க. அவீங்க சொல்படி நடக்க நடக்க, எல்லாம் கிடைச்சது. அப்புறம் அவீங்களும், எனக்கும் ஒரு பிணைப்பும் வந்தது.

காட்டுப்பாதையில புகையை கிளப்பியபடி வந்த ஜீப்பில் இருந்து ஒருவன் இறங்கினான். உயரதிகாரி வந்துட்டாருனு முகாமே பரபரப்பானது. எல்லோர்க்குள்ளயும் ஒருவித நடுக்கமும், பயமும் தொற்றியிருந்தது. பெருத்த உடம்போடு கருப்பு கண்ணாடி அணிந்தபடி இறங்கிய அதிகாரிய ரேஞ்சர், சல்யூட் அடிச்சு வரவேற்றான். ஏதோ ஆங்கிலத்தில் பேசியபடி நடந்தனர். நேரா வந்து கம்பத்தில மடிச்சு கட்டியிருந்த கொடியினை ஏத்தினான். கயித்த இழுக்க இழுக்க மேலேறுன கொடி விரிந்து, உள்ளே இருந்த பூக்கள் உதிர்ந்தது. அதிகாரி தலை மீதும் பூக்கள் விழுந்துச்சு. காற்றில் பறந்த கொடியினை அண்ணாந்து பார்த்தபடி, அவன் கைகளை உயர்த்தி சல்யூட் அடிச்சான். எல்லா கும்கிகளும் தும்பிக்கையை தூக்கி ஒரு சேர பிளிறின.

பர்ஸிலேம்பரேஎன்றான், முருகன். அதிகாரி என்னை நெருங்கி வந்தான்.  

பர்ஸிலேம்பரேமுருகன் மீண்டும் சொன்னான். முதல் முறை முருகன் சொன்ன போதே, தும்பிக்கையை தூக்கி பிளிறி இருப்பேன். ஏனோ என்னால அவனோட கட்டளைக்கு அடி பணிந்து செய்ய முடியல. அவன் சொல்லுறத செய்யணும்னு மனசு சொன்னாலும், உடம்பு கேக்க மாட்டிங்குது. ’மஸ்துபிடிக்கும்னு நெனைக்கிறேன்.

பர்ஸிலேம்பரே, பர்ஸிலேம்பரேஎன கத்தியபடி முருகன் குச்சியால் குத்தினான். அப்பவும் முருகனது கட்டளையை ஏத்து செய்ய முடியல. பதட்டத்தோடு ஏதேதோ சொல்லியும் எடுபடல. முருகனுக்கு என்ன பண்ணுறதுனு தெரியல

யூஸ்லேஸ்என முகத்தை சுழித்தபடி அதிகாரி வேகமாக நடந்து சென்றான். ரேஞ்சர் பின்னாலேயே ஓடினான். அதிகாரி கிளம்பிய பின் வந்த ரேஞ்சர் முருகனையும், மணியையும் கண்ட படி திட்டி தீர்த்தான். அவீங்கனால எதுவும் பேச முடியல. எங்கயோ போயிட்டு வந்தவீங்க கிட்ட கெட்ட மது வாடை அடிச்சது. குச்சில அடியோ அடினு அடிச்சாங்க. பயங்கரமா வலிச்சது. கோபத்தில என்ன செய்யுறதுனு தெரியாம அடித்து அடித்து ஓய்ந்தாங்க

நேரம் ஆக ஆக கண்ணுக்கும், காதுக்கும் இடையே துளை போல இருந்த இடத்தில் இருந்து மதநீர் வடிய ஆரம்பிச்சது. அதிலிருந்து கடிய வாடை வீசியது. எரிச்சலும், கோபமும் மிகுந்திருச்சு. அடிக்கடி சிறுநீர் கழிச்சேன். ஆவேசமா பிளிறுனேன். என் பிளிறலில்ல யானைகள் முகாம் அதிர்ந்துச்சு. தும்பிக்கையை தூக்கி பிளிறிட்டுக் கெடந்தேன். இப்ப என்கிட்ட வர முருகனும், மணியும் பயந்தாங்க. இருட்ட இருட்டக் குடிச்சு, குடிச்சு போதையில சரிஞ்சாங்க.

பின்னங்காலில பிணைக்கப்பட்டிருக்கிற இரும்பு சங்கிலியின் நீளம், என் சுதந்திர தூரம். சற்று தூரம் நடந்தேன். தொடர்ந்து நடந்தேன். இந்நேரம் சங்கிலி இழுத்து நிறுத்தியிருக்கணும். எப்படி தொடர்ந்து நடக்கிறேன்னு திரும்பி பார்த்தப்பா, இரும்பு சங்கிலியை மரத்தில பிணைக்காம விட்டுடாங்கனு தெரிஞ்சது. காட்ட சுதந்திரமா சுத்தி பாக்கணும்னு தோணுச்சு. நடக்க, நடக்க இரும்பு சங்கிலியும், அதன் தாரையும் தொடர்ந்து வந்துச்சு.

முகாமையும், முகாமிற்கு செல்லும் பாதையையும் தாண்டிக் காட்டிக்குள்ள இப்போத் தான் போறேன். காட்டுக்குள்ள போயி பார்க்கணும்னு ஒரு ஆசை ரொம்ப நாளா இருந்துச்சு. அதுக்கு காரணம் காட்டானை கொம்பன். பேருக்கு ஏற்ப மினுங்கும் நீண்ட தந்தம். ஆஜானுகுபாகுவாய் உருவம். அன்னிக்கு அதிகாலையில முகாம் எப்பவும் போல அமைதியா இருந்தது. கும்கிகள கட்டி வைச்சிருந்தாங்க. மாவூத், பாரெஸ்ட்காரங்க எல்லா நல்ல தூக்கத்துல இருந்த நேரம். திடீர்னு காட்டுக்குள்ள இருந்து கொம்பன் முகாம்க்குள்ள வந்திடுச்சு. அதோட சத்தம் காட்டையே மிரள வைச்சது. கும்கிக எல்லா பயந்து நடுங்கிச்சு. மூர்க்கமா வந்த கொம்பன் பாரி கும்கியோட மோதுச்சு. காட்டானை தந்துத்துல பாரிய குத்துச்சு. பாரியும் எதித்து நின்னுச்சு. ஆனா கட்டி வைச்சிருந்ததுநால ஒண்ணும் பண்ண முடியல. பிளிறல் கேட்டு வந்த பாரெஸ்ட்காரங்க பட்டாசு போட்டாங்க. அப்பவும் விடாம கொம்பன் பாரியோட மோதுச்சு. அந்த சண்டையில பாரியோட வலது தந்தம் வேரோட விழுந்துச்சு. பாரெஸ்ட்காரங்க பட்டாசு போட்டு, அதையும், இதையும் பண்ணி எப்படியோ கொம்பன வெரட்டி விட்டாங்க. இரத்தம் சொட்ட சொட்ட பாரி நின்னது. ’இருந்தா கொம்பன் மாதிரி இருக்கணும்என்ற நினைப்பு, இப்போ காட்டுக்குள்ள போக காரணமா இருக்கலாம்.

முதல் முறையாக காட்டுக்குள்ள தனியா நடக்குறேன். பயமாகவும், புதுசாவும் இருந்ததுச்சு. என் மேல இருந்து முருகன் கால்களால் அழுத்தி இடும் கட்டளைகளை செஞ்சு தா எனக்கும் பழக்கம். தன்னிச்சையாக எதுவும் செஞ்சது இல்லை. தெனமும் அதிகாலையில கோழிக்கமுத்தில இருந்து முருகனும், மணியும் என்னை அழைச்சிட்டு கிளம்புவாங்க. கையில் ஒரு குச்சியோட மணி முன்னால நடந்து போக, என் மேல மாவூத் முருகன் அமர்ந்து செல்வான். 8 கிலோ மீட்டர் நடந்து டாப்சிலிப் முகாம்க்கு போவோம். அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏத்திட்டு சவாரி போவோம், வேல முடிந்ததும் மீண்டும் காடுகள் ஊடாக திரும்ப போறது தான் வழக்கம். எப்போவது ஊருக்குள்ள புகுந்த ஆனெகள பிடிக்க போவோம். எதையும் அலைந்து திரிந்து பெற வேண்டியதில்ல. தொடர்ந்து நடப்பது சிரமமாக இருக்கு. எது எங்கியிருக்கிறதுனு தெரியல

நடக்க நடக்க பயமா இருந்துச்சு. சோர்வும் சேர்ந்துகிச்சு. தாகம் எடுத்தது. தும்பிக்கையைத் தூக்கி முகர்ந்து பாத்தேன். கால் மைல் தொலைவில ஓடையில தண்ணீ சலசலத்து ஓடுறது தெரிஞ்சது. அப்பாடானு போயி தண்ணீய குடிச்சேன். தும்பிக்கையில எடுத்து உடம்பு மேல பீச்சியடித்தேன். இதமா இருந்துச்சு

மெல்ல நடக்க ஆரம்பிச்சேன். இரும்பு சங்கிலில கல்லுக உரசி சலசலப்பாச்சு. இந்நேரம் என்ன காணலனு கண்டுபிடித்திருப்பாங்க. கொஞ்ச நேரத்துல திரும்ப வந்திருவேன்னு முருகன் நினைத்திருப்பான். ரேஞ்சர் முருகனையும், மணியையும் கண்டபடி திட்டி தீர்த்திருப்பான். அடி கூட விழுந்திருக்கலாம். செய்தி கசிந்து டிவிக்காரர்களின் காதுக்கு எட்டியிருக்கும். ’தப்பியோடிய கும்கிஎன பிரேக்கிங் செய்தி போட்டிருப்பாங்க. இப்படி தான் கொம்பனுக்கும், பாரிக்கும் நடந்த சண்டை செய்தி ஓடுறத, முருகன் வூட்டு டிவில பாத்திருக்கேன். பாரெஸ்ட்காரங்களும் தீவிரமா தேடிட்டு இருப்பாங்க.

காட்டானை கூட்டம் ஒன்னு தென்பட்டது. எட்டு யானைகளில இரண்டு குட்டிக. தாய் ஆனெ முன்னால போக, மத்தது பின் தொடர்ந்துச்சு. குட்டிகள் நடுவுல வர அவற்ற சுற்றி பெருசுகள் நடந்தன. அவற்ற பார்த்ததும் அக்கூட்டத்தில சேர்ந்திடலாம்னு தீர்மானிச்சேன். வழி காட்டவும், உணவும், தண்ணியும் தேடவும் உதவும்னு தோணுச்சு. ஆசையா போன என்ன கண்டு, அதுக துரத்தியடிச்சது. திரும்பத் திரும்ப சேரப் போன என்ன தொரத்தி விட்டிட்டு, குட்டிகள கூட்டிட்டு போறதுல தா அதுக குறியா இருந்துச்சு.

மனுசங்க கூட பழகுன ஆனைக மேல மனுச வாடை வீசும். அதனால காட்டு ஆனெக அத சேத்திக்காதுனு மாவூத் முருகன் ஒருமுறை சொன்னது நெனவுக்கு வந்தது. ரொம்ப கவலையாக இருந்தது. ’காலகாலமா போன வலசை மரபணுவில் கடந்து வருமாம். அப்புடி வலசைனு தோணுற பாதையில போய் தான் பார்ப்போம்என கிளம்பினேன். போற வழியில ஏதும் பெண் யானை கூட சேர்ந்தா நல்லாயிருக்கும்.

வலசை பாதை காடுகளுல தேயிலைத் தோட்டங்கள் விளைந்திருந்தன. மரங்களுக்குப் பதிலாக கட்டிடங்க முளைச்சிருந்தது. இரண்டு நாளாக அரையும், குறையுமாக உண்டு, அவசர அவசரமாக ஓடி திரிந்து சோர்வு அடைந்திருந்தேன். போதாக்குறைக்கு வெயில் வேறு சுட்டெரித்தது. புழுதி மண்ணை வாரி எடுத்து, உடலில் போட்டும் பலனில்லை. எப்படியோ ஒரு மரத்தடியில் நிழலில் உடலை கிடத்தி கால்களை நீட்டி படுத்தேன். அப்படி ஒரு தூக்கம். மாலை நெருங்கும் போது தான் உறக்கம் கலைந்தது. வெயில் குறைந்திருந்திருந்தது. ஒரு மரத்தில் கன்னத்த நல்லாத் தேய்ச்சிட்டு மெல்ல நடை போட்டேன்.

மலையடிவாரத்தில காடு சேரும் இடத்தில் தாண்ட முடியாத படி, குழிகள வெட்டி இருந்தாங்க. ஆனைக ஊருக்குள்ள வரக்கூடாதுனு அகழி தோண்டி வைச்சிருக்காங்க. தாண்ட எடம் தேடி நடந்தேன். ஓரிடத்தில் அகழிக்குள் கால் வைக்கும் அளவிற்கு மண் மேடு இருந்தது. ஏதோ ஒரு ஆனெ தாண்ட மண்ண சரிச்சு விட்டுருக்கும். அதுக்கு நன்றி சொல்லியபடி, தாண்டிப் போனேன். காடு முடிந்து தோட்டம் வந்ததுச்சு. உள்ளே வாழை போட்டியிருந்தாங்க. ஆசையும், பசியும் சேர்ந்து வேகமாக ஓடினேன். குறுக்கால இருந்த செவுத்த உடைச்சிட்டு உள்ள புகுந்து பசியாற உண்டு முடிச்சேன். தொட்டியில தண்ணீயும் குடிச்சாச்சு.

ஆட்கள் சத்தம் கேட்டது. இரவின் இருளை கிழித்து வந்த டார்ச் லைட் வெளிச்சம் என் மீது பட்டது. கண்ணு கூசியது. பட்டாசுகள் அடுத்தடுத்து பக்கத்துல வந்து விழுந்து வெடிச்சது. ஓட்டம் எடுத்தேன். வாழைத் தோட்டம் தரை மட்டமாச்சு. “நா உடைச்சது என்னம்மோ நாலு வாழைதா, இப்போ மொத்தமும் போச்சேஎன நினைத்தபடி ஓடினேன். பயங்கர சத்ததுடன் பாரெஸ்ட் ஜீப்கள் துரத்தின. ஏதேதோ வழியில் புகுந்து எங்கோ வந்துட்டேன். ஜீப் கொஞ்ச தூரத்துக்கு பிறகு வரல.

பொழுது விடிந்தது. சாலைகளில வாகனங்கள் போயிட்டு வந்திட்டும் இருந்துச்சுமீண்டும் நடக்க நடக்க ஊர் வந்தது. கட்டிடங்களும், வீடுகளுமாக இருந்துச்சு. வீட்டு மொட்டை மாடியில ஜனத்திரள் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தது. பலர் மிரண்டு ஒடினாங்க. எங்க போறதுனு தெரியாமா நாள்புரா சுத்தினேன். வலசைனு எனக்கு தோணுனா எடத்துல எல்லா ஏதேதோ குறுக்க இருந்துச்சு. பாதை மாறி, மாறி எங்கேங்கோ போனேன். ஒரு எடத்துல குறுக்க கம்பி இருந்துச்சு. தெரியமா தும்பிக்கையில தொட, ’ஷாக்அடிச்சது. போற வழியில வீசி எறியப்பட்ட பட்டாசுகளும், கற்களும், தீப்பந்தங்களும் பாதைய மாத்தியது.

ஒரு மலையடிவாரத்துல குழியும் மேடாக இருந்துச்சு. திரும்புன பக்கமெல்லா படு பாதாள குழிகள். தூரத்துல செங்கல் சூளை கண்ணில் பட்டது. பனை மர வாசம் சுண்டி இழுத்தது. செங்கல் சூளைக்குள் நுழைந்தேன். பனை மரக்கட்டைக நிறைய கெடந்துச்சு. செங்கல் எரிக்க பயன்படுத்தவாங்கனு நெனைக்கேன். பனை மரக்கட்டையை உடைச்சு உள்ளிருந்த கூழை குடிச்சேன். அதிலிருக்கும் கூழ் ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. கொஞ்சம் போதையும் ஏறுச்சு. அப்படியே அங்கயிங்க நடந்தேன். பலாப்பழ வாசம் ஆளை இழுத்தது. பக்கத்து தோட்டத்துல இருந்து வருது. ஆசையா நானும் எடுத்தேன். அதை கடிச்சதும் தாடை, வாய், நாக்கு எல்லா சிதைந்து போச்சு. வலி தாங்க முடியல. இரத்தம் வடிந்து கிட்டே இருந்துச்சு. அப்ப தான் அதுபன்றிக்காய்னு தெரிஞ்சதுஇரத்தம் சொட்ட சொட்ட சுற்றி அலைந்தேன். முகமெல்லா கண்ணீர் தடங்கள். தீராத வலி

காயம் ஆறினா தான் மேற்கொண்டு தீவணமோ, தண்ணீயோ எடுத்துக்க முடியும். முதல் நாளை எப்படியோ சமாளிச்சுட்டேன். அடுத்த நாளுல இருந்து நம்பிக்கை குறைய ஆரம்பிச்சது. சமாளிக்க முடியாம திணறினேன். ஒரே எடத்துல நிக்காம அலைஞ்சுட்டே கிடந்தேன். தீராத வலி ஒரு பக்கம், குறையாத பசி ஒரு பக்கம்

மூணு நாளுக்கு மேலா உணவு, தண்ணீனு எதுவும் எடுத்துக்க முடியல. உடல் மெலிந்திருந்தது. பாதி உயிர் தொலைந்திருந்தது. நடக்க முடியாம நின்றேன்.

ஊருக்குள் நுழைந்த யானை அட்டகாசம், முகாமில் இருந்து தப்பிய கும்கி 2 பேரை கொன்றதுஎன அதீத சத்தத்துடன் ஒரு தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தி ஓடுவது கேட்டது. எவனோ மைக்கினை பிடித்து பேசிக்கொண்டிருந்தான். அப்போ தான் நினைவுக்கு வந்தது, கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு கூட்டம் தொரத்தி வரப்போ, ஒரு சந்துல வேகமாக ஓடுனேன். எதுதாப்புல ரெண்டு பேரு வந்திட்டாங்க. அவீங்கள அடிக்கணும்னு எல்லா நெனைக்கல. விலக்கி விடுற மாதிரி லேசா தும்பிக்கைள தள்ளிட்டு வந்தேன். பாவம்அவீங்க தான் செத்திருப்பாங்க. ”குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைப்புஎன போய்க்கொண்டிருந்தது.

ஊர்க்காரங்க, பாரெஸ்ட்காரங்க, டிவிக்காரங்கனு என்ன தொரத்திட்டு இருக்குறது தெரிஞ்சது. ”என் வலசையில நா போனது குத்தமா, இதுக்கா இந்த நெலம?”

எனக்கு வெறுப்பா இருக்கு. இனியும் ஓட முடியாது. அதுக்கு சத்தும் இல்ல. மனசும் இல்ல. கொஞ்ச நேரமா முருகன், மணியின் நினைவு கண் முன்னே வந்திட்டு போகுது. ”முகாம்ல சங்கிலியில கட்டி வைச்சிருந்தப்போ இருந்த சுதந்திரம் கூட, காட்டுல இல்ல. முகாம்ல நிக்குற எடத்துக்கே தீவணமும், தண்ணீயும் தேடி வரும். இங்க தேடித்தேடி அலஞ்சாலும் அரை வயிறு கூட நிரம்புறதுயில்ல. வலசையில சுதந்திரமா போக முடியல. காடும், வலசையும் எனக்கானதா இல்லனு இப்ப தா புரியுது

 

தோட்டத்த அழிச்சுட்டேனு என்மேல கோபப்படுறவீங்க கிட்ட, என் காட்ட அழிச்சு தா தோட்டம் போட்டுருக்கீங்கனு எப்படி சொல்லுறது?…. இப்படி வந்த ஆனெகள தா பாரெஸ்ட்காரங்க பிடிச்சு கும்கியாக்கி இருப்பாங்க?… மொதல்ல ஆனெகள வைச்சு காட்ட அழிச்சவங்க, இப்போ ஆனெகள வைச்சே ஆனெகளை அழிக்குறத என்னன்னு சொல்லுறது?…”

ஆமா…. அது எதுக்கு எனக்கு?, நா சொல்லி என்னாயிட போகுது?. பேசமா முகாம்கே போயிடலாமா?… ம்ம்ம்ம்…. அதுதா சரிஎன்று தோன்றியது

முகாமினை நோக்கி நடந்தேன். இரும்பு சங்கிலியும் தொடர்ந்து வந்துச்சு. நடக்க தெம்பு இல்ல. நா போற பாதை சரியானு தெரியாது. நா போயி சேர்வனானும் தெரியாது. போற வழியில விழுந்து செத்தும் போகலாம். ஆனா ஒண்ணு, ஒரு வேள போயிட்டனா, முகாம விட்டு திரும்ப வரமாட்டே. அது நிச்சயம்.


பிரசாந்த். வே

Painting Courtesy : GetDrawings.com

7 COMMENTS

 1. காடுகளை அழிக்க யானைகளை பயன்படுத்தினர். பின் யானைகளை அழிக்க யானைகளையே பயன்படுத்துகின்றனர். இயற்கையை சிதைக்கும் உண்மையின் வலிமிகுந்த வரிகள். வாழ்த்துகள்…

 2. உண்மை தான் தோழரே அதன் இடத்தில் தோட்டம், வீடு கட்டி வைத்துவிட்டு பின் அதையே தோரத்தியடிப்பது மிகவும் கொடுமைதான்…மனித மூளை யானையை விடவும் ஆபத்தானது….

 3. //பின்னங்காலில் பிணைக்கப்பட்ட சங்கிலியின் நீளம் என் சுதந்திரத்தின் தூரம்//
  நினைவில் நின்ற வரிகள்.யானைக்கான கதை மட்டும் இல்லை என்று தோன்றியது. யானை ஒரு படிமமாக தோன்றியது.இலக்கியவாதிகளின் கொந்தளிப்பு என்ற எண்ணம் எனக்குள்.ஆம் இலக்கியவாதி பிற கூட்டங்களில் கூடுகையில் அவன் அந்த கூட்டத்தில் வெறும் காட்சிப்பொருள்.அவனை அதில் செர்த்து கொள்ளவும் மாட்டார்கள். அவனாலும் முடியாது.இடமும் வாழ்வும் அருளப்பட்டது. மாற்றமுடியாது.உண்மை சம்பவத்தை தழுவிய பாரி யானை, அழகு.வலசை அனைவருக்கும் வாய்த்து அல்லவோ..என்னமோ…என்ற எண்ணம்.

  வாழ்த்துக்கள். நிறைவான இரவு.

 4. 1.காட்டு யானையால் கொம்பு பிடுங்கப்பட்டது பாரி அல்ல, அது சுஜய் யானை.
  2.யானை மஸ்த்ஆக இருக்கும் போது வாழை சாப்பிடாது நண்பரே. (வாழை தண்டு சாப்பிட்டால் மஸ்த் இறங்கிவிடும்)

  • 1. இது ஒரு புனைவு கதை. பாரி என்பது கதைக்காக வைக்கப்பட்ட ஒரு பெயர் மட்டுமே. இக்கதையின் களம் டாப்சிலிப். நீங்கள் குறிப்பிடும் சுஜய் கும்கி இருந்ததோ, சாடிவயல்
   2. இது குறித்து விசாரித்து அறிந்து கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.